லிமரிக் (Limerick) என்பது குறுகிய அடிகளைக் கொண்ட ஒரு ஆங்கிலக் கவிதை வகை. எழுபதுகளின் இறுதியில் எழுத்தாளர் சுஜாதா இதைத் தமிழில் அறிமுகப்படுத்தினார்.
ஆங்கிலத்தில் இக்கவிதை வகையை உருவாக்கியவர் எட்வர்ட் லியர் என்பார்கள். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அயர்லாந்தில் வாழ்ந்தவர்.
ஆங்கில லிமரிக்குக்கு ஓர் உதாரணத்தை இங்கு பார்க்கலாம்.
God’s plan made a hopeful beginning.
But man spoiled his chances by sinning.
We trust that the story
Will end in God’s glory,
But at present the other side’s winning.
(இதன் பொருள்: மனிதனைப் படைத்த கடவுளின் திட்டம் ஆரம்பத்தில் நம்பிக்கை தருவதாகத்தான் இருந்தது. ஆனால் மனிதன் பாவம் செய்து அந்தத் திட்டத்தைப் பாழாக்கிவிட்டான். இனிமேல் இக்கதை கடவுளின் புகழில்தான் முடியும் என நம்புகிறோம், ஆனால் இப்போதைக்கு அதன் எதிர்த்தரப்புதான் வென்று கொண்டிருக்கிறது.)
இதன் அமைப்பைப் பார்க்கும்போது, ஐந்தடிகள் கொண்டதாக உள்ளது, முதல் ஈரடிகளும் ஐந்தாம் அடியும் ஒரே எதுகையைக் கொண்டுள்ளன, மூன்றாம் நான்காம் அடிகள் வேறொரு எதுகையைக் கொண்டுள்ளன என்பது தெரிகிறது. (ஆங்கிலக் கவிதைகளில் இறுதிச்சீர்களில்தான் எதுகை வரும். story – glory, beginning – sinning – winning என்பது போல.)
தமிழில் இதைப் பின்பற்றி முயற்சிசெய்து பார்த்தார்கள். ஆனால் ஏனோ பெருவெற்றி பெறவில்லை. நிலையானதொரு கவிதை வகையாகவும் இது அமையவில்லை.
தமிழில் லிமரிக்கைக் குறும்பா என்று இலங்கையிற் கையாளுகிறார்கள். மெய்யாகவே, குறும்புப் பார்வைகள் இக்கவிதைகளில் அதிகமாக இருப்ப தால் குறும்பா எனக் கூறுவதில் தடையில்லைதான்!
தமிழில் ஐங்குறுநூறு, குறுந்தொகைப் பாக்கள் பழங்காலத்திலேயே மிகச் சிறிய அடிகளைக் கொண்டவையாக இருந்தன. ஆனால் லிமரிக்குகளில் பெரும்பாலும் காணப்படும் ஒரு நையாண்டித் தொனியும் நகைச்சுவையும் அவற்றில் இல்லை.
ஈழத்திலும் லிமரிக் என்னும் குறும்பா நல்ல வரவேற்பைச் சில பத்தாண்டு கள் முன்புவரை பெற்றிருந்தது. சில்லையூர் செல்வராசன், மஹாகவி போன்றவர்கள் இதில் முன்னோடிகளாக இருந்தனர். இவ்வகைக் கவிதைகளின் தொகுப்புகளைக் கொண்டு நூல்களே வெளியிட்டுள்ளனர். ஆங்கிலக்கவிதை அமைப்பை 1-2-5, 3-4 என்பதை அப்படியே கையாண்டனர்.
மற்றொரு பிரபலமான ஆங்கில லிமரிக்கைப் பார்ப்போம்.
There was a young woman named Bright,
Whose speed was much faster than light.
She set out one day,
In a relative way,
And returned on the previous night.
(பிரைட் என்றொரு இளம்பெண் இருந்தாள்
லைட்டை (ஒளியை) விட வேகம் மிக்கவள்
ஒரு நாள் புறப்பட்டாள் சார்பியல் முறையில்
புறப்பட்டதற்கு முன்னாள் இரவே
தன் இடத்திற்குத் திரும்பிவிட்டாள்.)
உலகிலுள்ள எல்லா அலைகளிலும் ஒளியின் வேகமே மிக அதிகம், அதைவிட அதிக வேகமுடையது எதுவும் இல்லை என்பதை அறிந்திருந்தால்தான் இக்கவிதையின் சுவை புலப்படும்.
லிமரிக்கை அறிமுகப்படுத்தும்போது சுஜாதா கொடுத்த தமிழ் உதாரணம் சிரிப்பை வருவிக்கக்கூடியது.
வள்ளுவரும் மாணவராய் ஆனார்
திருக்குறளில் தேர்வெழுதப் போனார்
முடிவு வெளியாச்சு
தேர்வு ஃபெயிலாச்சு
பாவம் அவர் படிக்கவில்லை கோனார்.
(கோனார் என்பதன் பொருள் ஒருவேளை அண்மைக்கால இளைஞர்களுக் குத் தெரியாமல் இருக்கலாம். It means simply an exam guide or notes.)
ஆங்கில லிமரிக்குகள் பெரும்பாலும் நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டன. மற்றொரு உதாரணத்தைப் பாருங்கள்:
There was an Old Man with a beard,
Who said, ‘It is just as I feared –
Two Owls and a Hen,
Four Larks and a Wren,
Have all built their nests in my beard!
தன் தாடியில் இத்தனை உயிர்கள் கூடுகட்டினவே என்று அதிசயமாகச் சொல்கிறானா, வருத்தப்பட்டுச் சொல்கிறானா இக்கிழவன் என்று புரியவில்லை. இருந்தாலும் லிமரிக் இலக்கணப்படி நல்ல கவிதைதான்!
மீண்டும் ஒரு தமிழ் உதாரணத்தைப் பார்ப்போம். இவை இலங்கைக் கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டவைதான்.
தஞ்சையில் ஒரு விற்பனைப்பெண் ஆத்தாள்
தன் சரக்கை அற்புதமாய்க் காத்தாள்
உண்டு செரிக்காத வயிறு
ஊதிப் பெருத்ததால் கயிறு
தொண்டையிலே மாட்டி உயிர்நீத்தாள்
கடைசியாக மற்றொரு ஆங்கில உதாரணத்தைப் பார்க்கலாம்.
I’d rather have Fingers than Toes,
I’d rather have Ears than a Nose.
And as for my Hair,
I’m glad it’s all there,
I’ll be awfully sad, when it goes.
மற்றொரு இலங்கைக் கவிதை உதாரணத்தைப் பார்க்கலாம்.
கட்டிவந்தாள் கண்பறிக்கும் சாரி
காண்பவர்க்குக் காதல்வரும் ஊறி
கிட்டவந்து பார்க்கையிலே
கிழடுதட்டிப் போயிருந்தாள்
கீழும் மேலும் பல்விழுந்த மேரி
எப்படி, சுவாரசியமாக இருக்கிறதா? இம்மாதிரிக் கவிதைகளின் இயல்பே ஒரு நகைச்சுவை உணர்வை நமக்குள் ஊட்டுவதுதான். ஆனால் எல்லாமே வெறும் நகைச்சுவைக்காக எழுதப்படுபவை என்று கருதிவிடக்கூடாது. சில வற்றில் கூர்மையான சமூக அங்கதமும் வெளிப்படும். உதாரணமாக,
முத்தெடுக்க மூழ்குகிறான் சீலன்
முன்னாலே வந்துநின்றான் காலன்
சத்தமின்றி வந்தவனின்
கைத்தலத்தில் பத்துமுத்தை
பொத்திவைத்துப் போனான் அச்சீலன்.
இது எல்லாவற்றுக்கும் லஞ்சம் தருகின்ற இக்கால நடைமுறையை எள்ளி நகையாடுவதாக உள்ளது. காலனுக்கும் (எமனுக்கும்) கூட லஞ்சம் தந்து காரியத்தை ஆற்றிக் கொள்ளலாம் என்று இது சொல்கிறது.
இம்மாதிரி இக்கால நடைமுறைகளை நையாண்டியாகவும், கேலியாகவும் சித்திரிக்க இந்தக் கவிதை வடிவம் சரளமாகப் பயன்படுகிறது. இதனை நம் வாசகர்களும் கையாண்டு நல்ல கவிதைகளை உருவாக்கலாம்.