இந்திய நாட்டின் வடக்குப் பகுதிகளை முழுவதுமாக இருளைப் பரப்பிய காவி நிறம் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கை நோக்கி பயணப்படகிறது. இரண்டாவது முறையாக மோடி அரசு, பதவியேற்றப்பின் பாசிச வெறி இன்னும் அதிகரித்திருக்கிறது. ஆங்காங்கே முஸ்லீம்கள் தாக்கப்படுகின்றன. ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதாகீ ஜே போன்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இந்திய மக்களின் சிந்தனைகளில் காவி நிறம் எங்கோ, எவ்வழியிலோ வந்து சேர்ந்திருக்கிறது.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் 38வது லீக் போட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்திய அணி இந்தப் போட்டிக்கு வழக்கமாக அணியும் நீல நிற ஜெர்ஸிக்குப் பதிலாக, நீலம் கலந்த காவி நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடியது.
நீலநிறத்தில் பெரும்பாலான பகுதிகள் காவிநிறம் இருந்தது. ஆட்டம் தொடங்கிய உடனே சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் காவிநிற உடையைப் பற்றி விமர்சிக்கத் தொடங்கின. ‘ஒருவேளை, இந்தியா இப்போட்டியில் தோற்றால் அதற்கு இந்த உடைதான் காரணம்’ என்றும் பலர் கிண்டல், கேலி செய்தனர். விளைவு, இறுதியில் உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக இங்கிலாந்து அணியிடம் நேற்று(30.06.20198) இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
இங்கிலாந்து அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜாசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் 160 ரன்கள் இருக்கும் இருக்கும்போது, 66 (57) ரன்களில் ஜாசன் ராய் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஜோ ரூட்டுடன் ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோவ் சதம் விளாசினார்.
111 (109) ரன்கள் எடுத்திருந்த போது பேர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த இங்கிலாந்து கேப்டன் மார்கன் 1 (9) ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். அவரைத் தொடர்ந்து ரூட் 44 (54) ரன்களில் அவுட் ஆக, அடுத்த வந்த பட்லர் 8 பந்துகளில் 20 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதற்கிடையே களமிறங்கி இறுதி ஓவர்வரை விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 79 (54) குவித்து அவுட் ஆகினார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்துள்ளது.
(உலகக்கோப்பை தொடரில் (ஜேஸிங்) இரண்டாவதாக பேட்டிங் செய்து 300 ரன்களுக்கு மேல் பெற்று இந்தியா வெற்றிபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)
337 என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 9 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா, விராட் கோலி சிறப்பாக விளையாடினர். விராட் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடி 109 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த ரிஷப் பண்ட் 32 மற்றும் ஹர்திக் பாண்ட்யா 41 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த தோனியும், கேதர் ஜாதவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பு 306 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இந்திய அணியின் தோல்வி குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய அணி உலகக் கோப்பையில் தோற்றதற்கு புதிய ஆரஞ்சு நிற ஜெர்ஸியே காரணம் எனப் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.