கிரிக்கெட் மைதானத்தில் பந்தின் கட்டுக்கடங்காத வேகத்தால் பேட்ஸ்மேன்கள் தடுமாறுவதை நாம் பார்த்திருக்கிறோம். உலகில் பல வேகப்பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்களை பதம்பார்த்து வந்தாலும் யாக்கர் பந்துகளுக்கென்றே பேர்போன மலிங்காவின் பந்துகளை விரட்டி அடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல;

தொடர்ந்து 15 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு விளையாடி வரும் மலிங்காவுக்கு வயது 35. இவர் இலங்கை அணிக்காக 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக் கோப்பைத் தொடர்களில் இரு முறை ஹாட் டிரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் இவரே ஆவார்.

கிரிக்கெட் தரவரிசை பட்டியியல் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருந்த இலங்கை அணி கடந்த உலகக் கோப்பை தொடரில் மோசமாக விளையாடி லீக் சுற்றுகளிலே வெளியேறியது. பல முக்கிய பேட்ஸ்மேன்களின் ஓய்வு, சரியான தலைமை இல்லாமை என பல காரணங்களால் பல முக்கிய போட்டிகளில் சோபிக்கமுடியாமல் திணறியது இலங்கை அணி.

இந்நிலையில்தான் அணியின் மூத்த வீரராக இருந்த மலிங்காவும் தன் பங்குக்கு இலங்கையின் வெற்றிக்காக போராடி  வந்தார். தற்போது அவரும் தன்னுடைய ஓய்வு குறித்து அறிவித்துள்ளார்.

வங்கதேச அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன. இந்த மூன்று போட்டிகளும் இலங்கையின் பிரேமதாசா ஸ்டேடியத்தில் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், “வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் தாம் ஓய்வுபெற உள்ளதாக லசித் மலிங்கா தன்னிடம் தெரிவித்தார்” என்று இலங்கை அணியின் கேப்டன் திமுத் கருணாரத்னே கூறியுள்ளார்.

வரும் 26ஆம் தேதி அன்று நடைபெறும், வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தான், லசித் மலிங்கா விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்கும் என்ற தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மலிங்காவின் சாதனைகள்:

30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளும்
225 ஒருநாள் போட்டிகளில் விக்கெட்டுகளும்
73 டி20 போட்டிகளில் 97 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் 3 முறையும், ஒருநாள் போட்டிகளில் 8 முறையும், டி20, ஐபிஎல் போட்டிகளில் ஒரு முறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடிய மலிங்கா மும்பை அணிக்காக அதிகமுறை விளையாடி உள்ளார். இதுவரை 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.