தேதி : 28/03/2020 சனிக்கிழமை,

காலை மணி 10 : 20

தாமதமாக புலர்ந்த விடியலால் எந்தப் பயனுமில்லாததைப் போல், உபயோகமில்லாத ஆண்களையும் வீடு மதிப்பதில்லை !

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் கூட தாங்காதது சோகம்.  எதையாவது பேசி வசை வாங்காமல் அமைதியாக வேலைகளை முடித்து விட்டு டிவி முன்னமர்ந்தேன் !

காலை மணி 11

காலைச் சிற்றுண்டியுடன் செய்திகளைப் பார்த்தபோது, கண்களை கசியச் செய்தது அந்தக் காட்சி !

டெல்லியிலிருந்தும், இன்னும் இந்தியாவின் பல நகரங்களிலிருந்தும் சாமானிய மக்கள், அன்றாடக் கூலிவேலை செய்து சம்பாதிக்கும் அவர்கள், இனியும் அங்கு வாழ எந்த வழியுமின்றி, நிர்க்கதியாக தங்களின் சொந்த கிராமங்களை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தார்கள் !

இந்திய அரசின் மாபெரும் தோல்வியாக இந்த அவலத்தைக் காணலாம்.  நம்மூரிலும் இது செவ்வாய், புதனன்று நிகழ்ந்தது.  ஆனாலும் நம்மூரில் இத்தனை பயங்கரங்கள் நிகழவில்லை.  நாமும் ரயில்கள், ஃப்ளைட்கள், பாதிக்கும் மேற்பட்ட பேருந்துகளை நிறுத்தியிருந்தாலும், ஓரளவாவது நம்மிடையே மேம்பட்ட போக்குவரத்து வசதிகள் இருந்தன.  ஆனால் அதையே நம்மால் சகிக்க முடியவில்லை.  ஆபத்தான அந்தப் பயணத்தை மேற்கொள்ள வைத்ததற்காக மாநில அரசையும், பொறுப்பில்லாமல் மேற்கொண்ட மக்களையும் கண்டபடி விமர்சித்தோம் !

ஆனால் நான் பார்த்துக் கொண்டிருந்த சேதியில், நடந்துக் கொண்டிருந்த மக்களில் பலர், கடந்த மூன்று நாட்களாக சரியாக உண்ணவில்லை என்றும், தங்க அனுமதியில்லை, கிளம்பிப் போ என்று ஓனர்கள் சொல்லிவிட்டதாகவும், இனி நயாபைசா தர இயலாது, எந்த வேலைவாய்ப்பும் கிடையாது என்றுவிட்டதாகவும், கையிலிருந்த பணத்தைக் கொண்டு இன்னும் ஓரிரு நாட்கள் கூட இங்கே கழிக்க முடியாதென்பதால் முதலில் பேருந்து நிலையம் சென்றதாகவும், அங்கு போதிய பேருந்துகள் இல்லாததாலும், முறையான பதில்களும் கிட்டாததால், அவர்கள் நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள் !

கணவன், மனைவி, தோளில் கைக்குழந்தை, இடுப்பில் கொஞ்சம் தட்டுமுட்டுச் சாமான்களுடனான மூட்டை,  என்று நடந்த குட்டிக் குடும்பங்கள்,  கொஞ்சம் பெரிய குடும்பங்களில் குழந்தைகளே பெற்றோர்களுடன் நடந்து வந்துக் கொண்டிருந்தார்கள்.  ஒரு சில மனிதர்கள் அவர்களுக்கு உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்களை வழியில் கொடுத்து, அந்த மக்களின் மனது முழுதும் நொறுங்கிப் போகாமல் பார்த்துக் கொண்டார்கள் !

மதியம் மணி 01 : 00

இன்று வீட்டை விட்டு வெளியே போக எந்த ஐடியாவுமில்லை.  டிவியை ஏன் பார்த்தோம் என்கிறளவுக்கு மனம் கனத்துப் போய்விட்டது !

மருத்துவர்கள், தொற்று நோய் நிபுணர்கள் என்று ஒவ்வொருவரும் பல ஊடகங்கள் வழியே, கொரோனாவின் சமூகப் பரவல் மூலம் பலரையும் எளிதில் மிக அதிகமாய்த் தொற்றி, சர்வ நாசம் ஏற்படும் எனக் கடுமையாக எச்சரித்துக் கொண்டிருக்கையில், ஊரடங்கு உத்தரவை துச்சமென மதித்து இவர்கள் ஏன் நகரங்களை விட்டுச் செல்கிறார்கள் ?

அதுவும் நெருக்கமாக, பெருங்கூட்டமாக, வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் என்கிற எந்தப் பாகுபாடுமில்லாமல் ?

ஒரே காரணம் பசி.

உயிரை விட வயிறுதானே அய்யா பிரதானம் ?  பசிக்கு முன் உயிராவது – மயிராவது ?  இவர்களைப் பற்றி கிஞ்சித்தும் எண்ணாத அரசுகள் போடும் ஊரடங்குச் சட்டங்களால் விளையப் போவது என்ன ?

பசி மரணங்கள் மட்டுமே !

இனி வரப்போகும் தினங்களில் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, அதைப் பெறுவதில் நடக்கப்போகும் கலவரங்கள், சூறையாடல்கள் என ஆயிரம் வருடத்திற்கு முந்தைய இந்தியாவை பார்க்கவிருக்கிறோம்.  ராணுவம் வந்திறங்கும்.  கொரோனாவை விட அது பல உயிர்களை பலி போடும்.  இப்படியெல்லாம் இழிபடுவதற்கு தம் ஊருக்குப் போய் கிடைப்பதை வைத்தாவது வாழும் வரை வாழ்ந்துவிட்டுப் போவோம் என தெரிந்தே கொரோனா தொற்றுடன் விளையாடத் துணிந்து விட்டார்கள் !

மாலை  மணி 4:00

தரைத்தளத்தில் கசகசவென கொஞ்சம் பேச்சுக் குரல் கேட்டதால் கதவைத் திறந்து பால்கனியில் எட்டிப் பார்த்தேன்.

தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினியைத் தெளிக்கப் போவதாகச் சொன்னார்கள்.

இதையெல்லாம் அரசாங்கம் நம் நாட்டிற்கு வாரம் ஒருமுறை கண்டிப்பாகச் செய்ய வேண்டிய பணியாகும்.  கொசு, ஈக்களுக்கெதிரான இந்த நடவடிக்கைகளால், நாட்டில் பாதி நோய்கள் கட்டுப்படுத்தப்படலாம் !

மாலை மணி  6: 15

நம்ம மாநிலத்தில் இந்த மருந்தடிக்கும் விஷயத்தில் நேற்று நடந்த கூத்து ஒன்றை டைம்ஸ் ஆப் இந்தியா டிவி கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்ததை எதேச்சையாக பார்த்தேன் !

மீன்வளத்துறை அமைச்சர் திரு.ஜெயகுமார், மாநகராட்சி ஊழியர்களிடமிருந்து மருந்து தெளிப்பான்களை வாங்கி மருந்தடிப்பது போல் சுய விளம்பரத்துக்கு அலைவதாக அது துப்பியிருந்தது.  அதுகூடப் பரவாயில்லை, அவர் தனியாக வராமல் பெருங்கூட்டத்தோடு அங்கு வந்தது சமூகப் பரவல் பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லாத அலட்சியச் செயல் என்றும் கழுவி ஊத்தியது !

கொரோனோவை வைத்து ஆக்கப்பூர்வமான வேலையை அரசு சார்பாக பார்க்க வாய்ப்புள்ளவர்கள், இப்படி எரியும் வீட்டில் பிடுங்கி விஜயபாஸ்கர்த்தனமாய் விளம்பரம் தேடிக்கொள்வது உச்ச அவலம் !

முன்னிரவு மணி 7:15

‘’அப்பா, இன்னிக்கு என் வீட்ல வந்து சாப்பிடு ‘’ என மகன் அழைத்தான் !

‘’உன் வீட்டுக்குள்ள நான் எப்படிரா வர முடியும், வந்தா அப்பா கஷ்டப்பட்டுக் கட்டிக் கொடுத்ததெல்லாம் உடைஞ்சிடும்’’ என்று அவனிடம் பொறுமையாக விளக்கினேன்.

புரிந்துக் கொண்டான்.  இருந்தாலும்,  இரு நான் உணவு கொண்டு வருகிறேன் அதைத்தான் சாப்பிட வேண்டுமென்றான்.

சின்ன பொம்மைத் தட்டில் சோளத்தட்டைப் பொம்மை ஒன்றை எடுத்து வந்து, ‘’இந்தா  பட்டர் கார்ன் சாப்பிடு’’ என்றான்.

நானும் சாப்பிடுவது போல் பாவ்லா செய்ததில் அவனுக்கு ஏகத் திருப்தி, ‘’மகிழ்ச்சி.  அடுத்து என்ன சாப்பிடுற ?’’

‘’சிக்கன் டிக்கா பிட்ஸா’’

‘ஏய், அதெல்லாம் கிடைக்காது, கடை லீவுன்னு டிவில சொல்றாங்களே, அறிவில்ல ?’’

‘’அடேய் சாப்பிட வான்னு கூப்ட்டு இப்படி ஏன்டா மானத்த வாங்குறீங்க ?  என்ன இருக்கோ அதக் கொடுத்து தொலைங்கடா.’’

‘’வாட்டர் மெலன் ஜூஸ்’’

‘’கொடு.’’

பாதி அறுத்த தர்ப்பூசணி பொம்மை ஒரு தட்டில் வந்தது !

இரவு மணி ஒன்பது

கவுதமி தன் முகவரியை மாற்றாமல் வைத்திருந்ததால், கமல்ஹாசன் வீட்டுக்குப் போய், இந்த வீடு தனிமைப் படுத்தப்பட்டுள்ளது என்று தவறுதலாக சென்னை மாநகராட்சி நோட்டிஸ் ஒட்டியது வைரலாகப் பரவிக் கொண்டிருந்தது !

கமல் நாகரீகமானவர்.  இந்த மனிதத் தவறைச் சகித்துக் கொள்வார்.  அந்த தைரியத்தில், இவர்கள் நாளை, விஜயலட்சுமி ஃபாரின் போய் வந்தாரென அண்ணன் வீட்டில் போய் நோட்டிஸ் ஒட்டப்போகிறார்கள், அன்று தமிழகம் ஊழிக்கால பூகம்பத்தை தம்பிகளால் காணும் !

 

தொடரும்…..