தீராத பாதைகள்-12
எப்போது என்று சரியாக ஞாபகம் இல்லை, ஒரு விடுமுறையின் தொடக்கத்தில் நான் பக்கத்திலிருந்த ஓர் உணவு விடுதியில் இருந்தேன். பக்கத்தில் மதுவருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் மெல்ல என்னிடம் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தால். நம்மவர்களைவிட இந்த conspiracy விஷயங்களில் அமெரிக்கர்கள்தான் மேலே இருப்பதாகத் தோன்றும். அந்தப் பெண்ணும் ஏலியன்கள் பற்றிப் பேச ஆரம்பித்து ராணுவத்தில் பயன்பாட்டிற்கு வரப்போகும் அதிநவீன ரோபோக்கள் வரை எதைஎதையோ பேசிக்கொண்டிருந்தாள். விஸ்கியின் நெடி கொஞ்சம் அதிகமாகவே அவளிடமிருந்து வந்தது. இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். நிறப்பிரிவினை வாதம் குறித்து அவள் என்னிடம் பேசாமல் இருந்திருந்தாள் அவளது நிறத்தை குறித்து உங்களிடம் பேசியிருக்க மாட்டேன். அவள் ஆப்ரிக்க அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவள். எனது நிறமும் சற்று அவளுடன் ஒத்துப் போனதால் நிறப்பிரிவினை வாதம் குறித்த பேச்சு வந்தது. உடனே அந்தக் கவனிப்பாளர் எங்களிடம் வந்து இதைப்பற்றிப் பேச வேண்டாம் என்று தாழ்மையாகக் கேட்டுக்கொண்டார். உடனே அந்தப் பெண் உச்சஸ்தாயில் அந்தக் கவனிப்பாளரை ஏச ஆரம்பித்துவிட்டாள். இதை எல்லாவற்றையும் எனக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த ஒரு பேரழகி கவனித்துக்கொண்டிருந்தாள்.
பார்ப்பதற்கு Money Heist சீரியலில் வரும் நைரோபி போல இருந்தாள் (இப்படிச் சொல்வதுகூடப் பொருத்தமாக இருக்காது, நைரோபி கொஞ்சம் வயதான தோற்றத்திலிருப்பாள். இவள் நைரோபியைவிடப் பேரழகி). பிரச்சனையைச் சமாளிக்க என்னிடம் வந்து பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள். என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவளும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள் (பெயர் சரியாக நினைவில் இல்லை). இந்தியாவைக் குறித்துப் பேச ஆரம்பித்தோம். பின்னர் எங்கெங்கெல்லாமோ அந்த உரையாடல் அழைத்துச் சென்றது. மது கொடுத்த தைரியமா என்று தெரியவில்லை, அவளது நீண்ட மூக்கின் அழகை வருணித்துவிட்டு உன்னைப் பார்த்தால் ஒரு யூதப்பெண் போல இருக்கிறது என்றேன். பொதுவாக மதம் இனம் குறித்தெல்லாம் பொதுவெளியில் பேசக்கூடாது. அப்படிப் பேசுவதை விரும்பமாட்டார்கள். ஆனால் அன்று எங்கள் பேச்சு பல தளங்களில் நிகழ்ந்ததால் மதம் குறித்தும் உரையாட ஆரம்பித்தோம். அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. தான் ஒரு யூதப்பெண்தான் என்று கூறினாள். அதன்பிறகான உரையாடலில் யூதர்களின் புனித நூலான தோராவில் எனக்கிருந்த சந்தேகங்களைக் கேட்டேன். அவளும் பொறுமையாக எனக்குப் பதிலளித்தாள். எனது சந்தேகங்கள், பேசும் செய்திகளை வைத்து இன்னும் உனக்குள் எத்தனை ஆச்சரியங்கள் இருக்கிறது என்று வியந்து கேட்டாள். கொஞ்சம் சிரித்தவாறு இலக்கியங்கள்தான் என்னைச் செதுக்கியது என்றேன். தனக்கும் இலக்கியம் பிடிக்கும் என்று சொல்லி மீண்டும் ஆர்வமானாள். ரகளையான இசை, மது, பேரழகியுடன் இலக்கிய உரையாடல் அந்த மாலை அவ்வளவு ரம்மியமாக இருந்தது.
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் குறித்துப் பேச ஆரம்பித்தேன். உனக்கு ஷேக்ஸ்பியரில் பிடித்த நாடகம் எதுவென்று கேட்டாள். ‘ஹேம்லட்’ என்றேன். அதில் ஏதாவது ஒரு வசனத்தைப் பேசிக்காட்ட முடியுமா என்றாள். ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் சிவாஜி தனக்கே உரிய நடிப்பில் பேசிய To be or not to be வசனம் ஞாபகத்துக்கு வந்தது. சற்றுப் பொறுத்து அந்த வசனத்தைப் பேசாமல் பொலோனியஸ்க்கும் ஹேம்லெட்டுக்குமான ஒரு உரையாடலை பேசிக்காட்டினேன். என்ன வாசித்துக்கொண்டிருக்கிறாய் என்று கேட்கும் பொலோனியஸிடம் ஹேம்லெட் Words… words… words… என்று கூறுவார். அதைப் பேசிக்காட்டியதும் அந்த உணவகமே அதிரும்படி ஆச்சரியத்தில் கத்தி மகிழ்ந்தாள். எனக்கோ ஒன்றும் புரியவில்லை சற்று நிதானித்துக் காரணம் கேட்டபோது என்னை மாயாவி என்றெல்லாம் சொல்லிவிட்டு தன் சட்டையைச் சுருட்டிவிட்டு கையைக் காண்பித்தாள். அதில் நான் சொன்ன அந்த வாசகம் பச்சைக் குத்தப்பட்டிருந்தது. பின் அவளது நண்பர்கள் வந்தார்கள் மேலும் பல விஷயங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் அவள் என்னைத் தன்னுடன் நடனமாட அழைத்தாள். என் வாழ்வில் எவ்வளவு முயன்றும் எனக்குக் கிடைக்காத இரண்டில் நடனமும் ஒன்று. இன்னொன்று இசைக்கருவிகள் வாசிப்பது. வெட்கத்துடன் எனக்கு நடனமாட தெரியாது என்றேன். நீட்ஷேவை வாசிக்கும் நீ நடனமாடத் தெரியாது என்று எப்படிச் சொல்லலாம் என்று கேட்டு மீண்டும் மீண்டும் அழைத்தாள். இயலவில்லை. இப்படியாக அந்த மாலை ஒரு முடிவுக்கு வந்தது. அந்தச் சண்டையிட்டுக்கொண்டிருந்த பெண் என்ன ஆனால் என்பதைக் கவனிக்கத் தவறிப்போனேன். என்னையும் நிறப்பிரிவினைவாதி என்று சபித்துவிட்டு சென்றிருக்கலாம்.
1960களில் அமெரிக்காவில் நடந்த Sexual Revolution மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு. புரட்சி ஏற்படுவது ஒருவிதத்தில் நன்மை பயக்கும் என்றாலும் அது வேறு பல சிக்கல்களையும் கொண்டு சேர்த்துவிடும். Sexual Reveolutionக்கு பிறகு பாலின பாகுபாடு பேசுவதற்கு மிகச் சிக்கலான ஒன்றாக மாறிப்போனது. அதன் தாக்கம் இன்றளவும் இங்கே இருக்கிறது. சராசரி இந்திய குடும்பத்திலிருந்து வந்த என்னைப் போன்றோர்களுக்கு இது கவர்ச்சியாக இருந்தாலும் இங்கே உள்ள பலருக்கு இது மிகப்பெரும் தலைவலி. இங்கே உள்ள பெண்கள் மேலே நான் சொன்னதுபோலச் சுதந்திரமாக இருக்கிறார்கள். நம் பெண்களின் சுதந்திரத்தோடு ஒப்பிட்டால் இவர்கள் இருக்கும் தூரம் மிக மிக அதிகம். ஆனால் நம் சமூகத்திலோ ஆணாதிக்கம் நானறிந்த வரை இன்றும் இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் வைரஸ் ஒழிய வேண்டும் என்று மிகவும் கவலைப்பட்டது பெண்கள்தான் அந்தளவுக்கு வீட்டு வேலைகளால் நொந்து போனார்கள். என்னிடம் பேசிய பல பெண்களும் சமீபத்தில் சொன்னது ஏன் பொழுது விடிகிறது என்று இருக்கும் என்கிறார்கள். அந்தளவுக்கு வீட்டு வேலை. காலையில் தொடங்கினால் இரவு வரை வேலை. கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று எங்காவது ஓடிவிடலாம்போல் இருக்கிறது என்கிறார்கள். நம் நாட்டில் பெண் விடுதலை பேசியாக வேண்டும். அவ்வளவு அவசியம் இங்கிருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் பெண் சுதந்திரம் பெண்ணாதிக்கமாகத் தலைதூக்கியுள்ளது. இதுகுறித்துப் பலரும் பேசத்தயங்குவார்கள். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஆதிக்கம் எங்கு இருப்பினும் பிரச்சனைதான்.
இருபாலருக்குமான சுதந்திரத்தை யார் வரையறுப்பது என்பது மிக முக்கியமான விவாதம். ஆனால் இந்தப் பாலின சுதந்திரத்தை குறித்து அடிப்படையான விஷயங்களை முதலில் பேச ஆரம்பித்ததது ஃபிரான்சை சார்ந்த சிமோன் தே போவ்வா (Simone de Beauvoir). மனித பாலினம் என்பது கட்டமைக்கப்படுவது. உடல் ரீதியான பாகுபாடுகளைக் கடந்து நம் சமூகம் ஒரு பெண்ணையோ ஆணையோ வளர்த்தெடுக்கிறது என்ற வாதத்தை முன்வைத்தார் (difference between Nature and Nurture). அதாவது ஒரு பெண் குழந்தைக்கு அவளுக்குத் தகுந்தார் போன்ற உடை விளையாட்டுப் பொருட்கள் மூலமாகவே அவளது பெண்மை கட்டமைக்கப்படுகிறது. அதேபோல ஒரு ஆணுக்கும். இதுதான் மாபெரும் ஒரு பிரச்சனையாக உருமாறுகிறது. தனக்கு வழங்கப்பட்டுள்ள அதாவது இயற்கையாக உள்ள இயல்பை மறுக்க ஆரம்பித்தார்கள். நான் மிகவும் சிக்கலான ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். இதர பாலினத்தவருக்கு ஏற்படும் இயற்கையான மாற்றத்தை கூறவில்லை. தன் சுய பாலினத்தை மறுத்து இன்னொன்றாகத் தன்னைக் கருதிக்கொள்வது. முதல்நாள் இரவு தூங்க போகும் வரை இயல்பான ஆணாக இருக்கும் ஒரு நபர் அடுத்த நாள் எழுந்ததும் தன்னை ஒரு பெண் என்று நிறுவிக்கொள்கிறார். மரபியல் வகையான மாற்றங்களை நான் குறிப்பிடவில்லை. ஒரு ஆண் ஆணாக இருப்பதினாலோ ஒரு பெண் பெண்ணாக இருப்பதினாலோ யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது? ஆனால் இங்கே பல ஆண்கள் (நான் பார்த்த வரை) ஆணாகப் பிறந்ததால் குற்றவுணர்ச்சியுடன் இருக்கிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் நம் நாட்டில் இருப்பதற்கு நேரெதிரான நிலை.
எந்த நேரமும் மனைவி தன்னைவிட்டு இன்னொருவருடனோ இன்னொருவளோடோ போய்விடுவாள் என்ற பதற்றத்துடன் பலர் இருக்கிறார்கள். இந்த ஆண்களின் குற்றவுணர்ச்சியைக் குறைத்து சரியான வாழ்க்கை முறைக்கு அழைத்துச் செல்ல சில ஆண் குழுக்கள் செயல்படுகின்றன. பெண்களுக்கு வேறுமாதிரியான பிரச்சனைகள் இருக்கின்றன. ஆனால் சுதந்திரமாக இருக்கிறார்கள். மது அருந்திக்கொண்டு இலக்கியம் பேசிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை நினைக்கும்போது நம் பெண்களின் ஞாபகம் வரும். யாரிடம் பேசினாலும் ஒரு பெண்ணாகப் பிறந்ததால் பெரும் அவஸ்தைப்படுகிறேன் என்ற வசனத்தைச் சொல்லாத ஒரு இந்தியப் பெண்ணையும் நான் பார்த்ததில்லை. சுதந்திரம் பற்றிப் பேசினாலே அடிதடிதான். புதிதாகக் கல்யாணமான ஒரு பெண்ணை ஏதோ ஒரு குற்றத்திற்காக முகத்தில் குத்தி தன் ஆண்மையை நிரூபிப்பவர்களிடம் என்ன பேசிவிட முடியும்? பெண் சுதந்திரம் எல்லாம் நம் இந்தியாவில் மேல்தட்டு வர்கத்திற்கு மட்டுமே உரியது.
கி.ரா ஓர் அற்புதமான கதை எழுதியிருக்கிறார். அந்த ஊரில் பலரது மனங்களைக் கொள்ளையடித்த ஒரு பேரழகி திருமணத்திற்குப் பின் அந்த அழகிய இயல்பை இழந்து வேறொருத்தியாக எஞ்சி நிற்கிறாள் (கதையின் பெயர் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்). அப்படியாகதான் இருக்கிறது பல இந்திய பெண்களின் வாழ்வு. Ready or Not என்றொரு திரைப்படம் பார்த்தேன். காதலனை மணமுடித்து அவனின் குடும்பத்தில் நுழையும் அன்று குடும்பமாக ஒரு விளையாட்டு விளையாடுகிறார்கள். அந்த விளையாட்டு வினையாகி புதுப்பெண்ணின் இயல்பே மாறிப்போகிறது. தொடக்கத்தில் வெண்ணிறடையில் வரும் பெண் படத்தின் இறுதியில் ரத்தக் களரியாக வெளியே வருகிறாள். நம் பெண்கள் பலரது திருமண வாழ்வும் இப்படிதான். தேவதைகளாக இருந்தவர்களைத் திருமணம் இயல்பை கெடுத்து ராட்சஷிகளாக மாற்றிவிடுகிறது.
சிமோன் தே போவ்வா சொன்ன ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். அது புனிதப்படுத்துதல் வழியாக ஒரு குறிப்பிட்ட பாலினத்தவரை அடிமையாக்குவது (புனிதப்படுத்துதல் என்பது தமிழர்களாகிய நமக்குக் கைவந்த கலை. இது எப்படி ஒரு அதிகார மையத்தைக் கட்டமைக்கிறது என்பதை இன்னொரு கட்டுரையில் சொல்கிறேன்). நம் நாட்டில் பெண்களை எப்படியெல்லாம் கௌரவிக்கிரார்கள் என்று கவனியுங்கள். தாய்நாடு, தாய்மொழி, இன்னும் பல. ஆனால் பெண்களுக்கு எதிராக எப்போது குற்றச் செயல்கள் நடக்கின்றன. பெண்ணை ஒரு உடமையாகப் பார்க்கும் போக்குதான் இருக்கிறது. இதை மறுத்துப் பாலினங்களுக்கு இடையே ஓர் உரையாடல் நடைபெற வேண்டும். அவரவர் பாலினத்திலிருந்து நமக்கென நாம் கட்டமைத்த ஒரு உலகம் இருக்கிறது. அதை உரையாடல் வழி மற்ற பாலினத்தவரோடு நாம் பகிர்ந்துகொள்ள முடியும். அப்போதுதான் அங்கே சுதந்திரம் இருக்கும். எனக்கு என் அம்மாச்சியின் ஞாபகம் வருகிறது. தாத்தாவுக்கும் அம்மாச்சிக்கும் காதல் திருமணம். அம்மாச்சி சைவம் மட்டும் சாப்பிடும் குடும்பத்தைச் சார்ந்தவர். தாத்தா அதற்கு நேரெதிரானவர். இன்னமும் அம்மாச்சி அதே சைவ சாப்பாடுதான். எப்படி இது சாத்தியமானது? உரையாடல். தானென்ற ஆணவம் அழிந்தால்தான் இன்னொருவர் சொல்ல கூடியதை கேட்கும் மனம் வாய்க்கும். இன்னொருவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும். இன்னொரு சம்பவமும் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பெண்ணுக்கு பெற்றோர்கள் பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறார்கள். இவள் தெய்வ நம்பிக்கை உள்ள ஒரு பெண். கல்யாணத்துக்கு முன்பு வரை அந்த மணமகன் வீட்டார் இந்த பெண்ணிடம் பக்திச்சுவை சொட்டச்சொட்டப் பேசிவிட்டு கல்யாணம் ஆன அடுத்த நாள் இவள் கொண்டு வந்த பூஜை பொருட்களுக்கு புகுந்த வீட்டில் தடை. அதிர்ந்து போனாள் இவள். தான் மட்டும் அறையில் ஒரு மூலையில் வைத்துக்கொள்ளலாம் என்றால் எப்போதும் இவளது பக்தியை கேலி செய்துக்கொண்டிருக்கிறார்களாம். தினமும் ஆன்மீகத்திற்கு எதிராக இவளுக்கு மட்டும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மாறி மாறி பிரசங்கம் வைக்கிறார்களாம். ஏன் வீட்டிற்கு வந்த ஒரு பெண்ணின் இறை நம்பிக்கைகளை எள்ளி நகையாட வேண்டும்? அவளுக்கான உலகத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் ஏன் தன் நம்பிக்கைகளை அவள்மீது சுமத்த வேண்டும்? இது ஏதோ ஒருத்தியின் கதையல்ல, நம் சமூகத்தில் முக்கால்வாசி பெண்களிடம் இப்படி ஏதோ ஒரு சொல்ல முடியாத துயரம் இருக்கிறது. இதெல்லாம் எதிர்த்து எத்தனை நாள் போராட முடியும்? அதனால் எல்லாவற்றிர்கும் பழகி கொள்கிறார்கள் நம் பெண்கள். இருக்கவே இருக்கிறது பெண்கள் தினம், அன்னையர் தினம் அதை கொண்டாடிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுவது போன்ற மாயையை உருவாக்கிவிட்டார்கள். வீட்டில் இருக்கும் ஒரு சராசரி இந்திய பெண் தன் ஒரு நாளில் முக்கால்வாசி நேரத்தை அடுத்து என்ன சமைக்கலாம் என்பதிலே செலவிடுகிறாள். அதையாவது கண்டுகொள்கிறோமா? ஒரு பாராட்டுக் கிடையாது. ஆனால் இங்கே நான் பார்க்கிறேன், மனைவியரை பாராட்டுகிறார்கள். மற்றவர்களிடம் உயர்வாகப் பேசுகிறார்கள். நாம் போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.
இன்னொரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சியாட்டெல் சென்றிருந்தேன். அங்கே ஒரு பெண்ணை ஏனைய தமிழர்கள் யாவரும் ஓரம் கட்டி வைத்திருந்தார்கள். காரணம் அவள் ஒரு பிராமணப் பெண். யாரிடமும் பேசாமல் பார்க்க கொஞ்சம் கர்வம் பிடித்த பெண்ணாகதான் தெரிந்தாள். ஆனால் போன அடுத்த நாளிலிருந்து என்னிடம் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தால். அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். எப்படி என்று கேட்டார்கள். ஒரே ஒரு காரணம்தான் என்னிடம் நிறைய இருக்கிறது. அந்தப் பெண்ணிடம் சைவ சமையல் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். வேப்பிலைகட்டி செய்யத் தெரியுமா என்று கேட்டு ஆச்சரியப்படுத்திக்கொண்டிருந்தேன். கடைசியில் அந்தப் பெண் எனக்குப் பிடித்த வத்தல் குழம்பும் சுட்ட அப்பளமும் செய்து கொடுத்தாள். இதைதான் உரையாடல் என்கிறேன்.
பைரனின் இங்கிலாந்து குறித்த ஒரு கவிதையில் “England! With all thy fault I love thee still”(“உன் எல்லா தவறுகளுடன் உன்னை இன்னும் அன்பு செய்கிறேன்”) என்ற வரிதான் நினைவில் உதிக்கிறது. பெண் என்பவள் சக உயிரி. அவளது உணர்வுகளையும் நாம் மதிக்க வேண்டும். இது இயல்பாக நடக்க வேண்டிய ஒன்றாக கருதுகிறேன். சமீபத்தில் ஒரு மதப்போதகர் ஆணுக்கு பெண் அடங்கிப்போவது ஆண்டவன் கட்டளை என்று உளறி வைத்திருக்கிறார். அதெல்லாம் சுத்த மடத்தனம். விவிலியத்தின் அடிப்படையில் பார்த்தாலும் யாரும் யாரையும் அடக்கி ஆளக்கூடாது என்பதற்காக ஏவாளை ஆதமின் விலா எலும்பிலிருந்து உருவாக்கியதாக வருகிறது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
- இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
- கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
- ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
- பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
- "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
- வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
- Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
- இசை நாடகங்களும் படங்களும் – வளன்
- கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
- அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
- கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
- சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
- புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
- ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
- மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
- Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
- Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
- தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
- இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
- வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
- ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
- மூன்று இசை தேவதைகள் - வளன்
- 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்