தீராத பாதைகள்-4

இப்போது நான் சொல்லப் போகும் செய்தி மிக முக்கியமானது. ஆனால் இதை எழுதும் போது மார்ச் மாதம் இருபத்தி இரண்டாம் தேதி இந்தியாவில் அரங்கேறிய ‘அந்த இருபது நிமிடக் கூத்து’ ஞாபகத்துக்கு வந்து கொண்டேயிருக்கிறது. ஏதோ பல வருடங்கள் தனிமைப்பட்டு கிடந்தவர்கள் போல அன்று அவர்கள் செய்த கோமாளித்தனங்களை பார்க்கும் போது அவமானமாக இருந்தது. பொதுவாகவே இந்தியர்களிடம் கொண்டாட்டங்கள் குறைவு என்பது என் கருத்து, குறிப்பாக தமிழர்களிடம். ஆனால் அன்று நடந்த கூத்தைப் பார்த்தபோது எவ்வளவு கீழ்மையில் இருக்கிறோம் என்பது புரிந்தது. கொண்டாட வேண்டிய தருணங்களை நாம் இருட்டடிப்புச் செய்துவிட்டு இப்படி கைத்தட்டுவதை – அதுவும் இந்த மாதிரியான கொள்ளைநோய் பரவும் சமயத்தில் – விழாவாக கொண்டாடுவதை எங்கே சென்று நொந்துகொள்வது தெரியவில்லை . எனவே இப்போது நான் சொல்லபோகும் கொண்டாட்டங்களை இந்த கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு முயற்சி செய்து பாருங்கள்.உனக்கு இந்த பில்டப் தேவையா என நீங்கள் கேட்பது தெரிகிறது. ஒருவர் கைத்தட்ட சொன்னதை விழாவாக கொண்டாடும் என் சகோகதர சகோதரிகள் நான் சொல்லப்போகும் திருவிழாவை பெருவிழாவாக கொண்டாடமாட்டார்களா என்ன?

ஒரு கோடை காலம் பாஸ்டன் துறைமுகத்திலிருந்து திமிங்கலங்களை பார்க்க சிறிய கப்பல் ஒன்றில் சென்றேன். அட்லாண்டிக் மகாசமுத்திரத்தில் கப்பல் முன்னேறிச் செல்ல ஒரு புள்ளியாக மறைய ஆரம்பித்தது பாஸ்டன் நகரம். கொஞ்ச நேரத்தில் வெறும் தண்ணீரை தவிர வேறெதுவும் எங்களை சூழ்ந்து இல்லை. திமிங்கலங்களைக் காணப்போகிறோம் என்ற ஆர்வத்தில் என் கைபேசியில் இருந்த திமிங்கலங்களின் பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். பறவைகள் மற்ற விலங்குகளை போல் திமிங்கலங்களும் சப்தமிடும். பல்வேறு திமிங்கலங்களின் குரல்களை பதிவு செய்து அதை திமிங்கலங்களின் பாடல்கள் (Whale Songs) என்று வெளியிட்டிருக்கிறார்கள். அந்த இசை ஒருவிதமான மர்ம உணர்வுகளை ஏற்படுத்தும். வெளியில் யாரோ ஏதோ சலசலப்புச் செய்ய திமிங்கலங்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டோம் என்று தெரிந்தது. பிரமாண்டமாக ஒரு திமிங்கலம் தண்ணீரைப் பீச்சியடித்து மேலெழுந்து மீண்டும் தண்ணீருக்குள் சென்றது. இப்படியாகப் பத்து பதினைந்து திமிங்கலங்கள் எங்கள் கப்பலை சூழ்ந்துகொண்டு நீந்திக்கொண்டிருந்தன. அந்த காட்சி அவ்வளவு அற்புதமாக இருந்தது. பல வருடங்களுக்குமுன் தமிழில் வெளியான மோபி டிக் நாவல் ஞாபகத்துக்கு வந்தது. அது முழுநாவலின் மொழிபெயர்ப்பு அல்ல சுருக்கப்பட்ட பதிப்புதான். எந்த பதிப்பகம் என்று சரியாக நினைவில் இல்லை.

ஹெர்மென் மெல்வில் நான் இப்போது இருக்கும் மாகணத்தை சேர்ந்தவர்தான். பாஸ்டனுக்கு அருகில் இருக்கும் நியூ பெட்ஃபர்ட் பகுதியிலிருந்துதான் மோபி டிக் நாவல் ஆரம்பிக்கிறது. இந்த நாவல் எனக்கு பிடிக்க முதன்மையான காரணம் நாவலில் பெண் கதாபத்திரங்களே இல்லை. காதல் போன்ற எந்த மனத்தடையும் இல்லாமல் முழுமையாக ஒரு சாகசத்திற்கு இஸ்மாயில் தன்னை ஒப்புக்கொடுக்கிறான். அதனால்தான் இப்படி ஒரு அற்புதமான காவியம் பிறந்ததோ என்னவோ! ஆஹாப் தனக்கு கிடைத்த புதிய பயணிகளை கொண்டு திமிங்கல வேட்டைக்குச் செல்கிறான். ஆனால் உண்மையில் தான் பலமுறை வேட்டையாடி தோற்றுப்போன மோபி டிக் என்ற வெள்ளை திமிங்கலத்தினை வேட்டையாட என்பது ஆஹாபிற்கு மட்டுமே தெரியும். இந்த நாவல் வெளிவந்தது 1851ல் அப்போதிலிருந்து இந்த நாவல் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்போது தொடக்கத்தில் சொன்ன அந்த அதிமுக்கியமான செய்தியை சொல்கிறேன். கொண்டாட்டம் என்றால் எப்படி தெரியுமா?

நியூ பெட்ஃபர்ட் பகுதியில் வேலிங் ம்யூசியம் ஒன்று உள்ளது. திமிங்கலங்களை வேட்டையாட பயன்படுத்திய பல்வேறு உபகரணங்கள் அங்கு காட்சிபடுத்தப்பட்டிருக்கின்றன. அங்கு வருடா வருடம் ஜனவரியில் முதல் வார இறுதியில் மோபி டிக் மாரத்தான் நடக்கிறது. ஹெர்மென் மெல்வில்லை கௌரவிக்கும் ஓட்டப்பந்தயம் அல்ல, மாறாக அவர் எழுதிய மோபி டிக் தொடர்ச்சியாக வாசிக்கப்படும். பல வாரங்களுக்கு முன்பே வாசகர்கள் தங்கள் பெயர்களை பதிந்துகொண்டு வாசிக்க தயாராகிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிறிய சிறிய பகுதியாக நாவலை பிரித்துக்கொண்டு வாசிக்கிறார்கள். இது ஏதோ ஹெர்மென் மெல்வில்லின் வாசகர் வட்ட நிகழ்வல்ல, அந்த நகரமே இதை விழாவாகக் கொண்டாடுகிறது. எந்தளவிற்கு என்றால் நாவலின் முதல் அத்தியாயத்தை மெல்வில்லின் சந்ததியினரில் ஒருவரோ அந்த நகரின் செலிபிரட்டி ஒருவரோ வாசித்து துவக்கி வைக்கிறார். பின் அடுத்தடுத்த அத்தியாயங்கள் பலரால் வாசிக்கப்படுகிறது. ஆறாவது அத்தியாயம் என்று நினைக்கிறேன், அந்த நகரைப் பற்றிய வருணனைகள் நிறைந்திருப்பதால் பாரம்பரியமாக அந்த அத்யாயத்தை நகரின் மேயர் வாசிப்பார். நாவலில் ஒரு இடத்தில் சிற்றாலயம் ஒன்றில் ஒரு போதகர் யோனாவின் கதையை சொல்கிறார். அந்த இடத்திற்கு வாசிப்பு செல்லும்போது வாசகர்கள் கதையின் வரும் அதே சிற்றாலயத்திற்கு திரளாக சென்று அங்கே கதையை தொடர்கிறார்கள். இப்படியாக இருபத்தைந்து மணி நேரம் அந்த நாவல் தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. இன்னொரு முக்கியமான செய்தி, இங்கு வரும் யாவரும் நாவலை வாசிக்கிறார்கள். வரும்போதே தங்களது பிரதிகளை கையோடு வாங்கி வருகிறார்கள். வாசிக்கப்படும்போது கூடவே சேர்ந்து வாசிக்கிறார்கள். ஒரு எழுத்தாளனுக்கு இதைதவிர வேறென்ன சந்தோஷம் இருந்துவிடபோகிறது!

எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்தில் ஒரு மேடையில் மோபி டிக் பற்றி சொல்லியது ஞாபகத்திற்கு வருகிறது. ஆஹாப் மோபி டிக்கிடம் தன் கால் ஒன்றை பறிகொடுத்துவிடுகிறான். அவனுக்கு அந்த திமிங்கலத்தை வேட்டையாட முடியாது என்று தெரிந்த பிறகும் அதையே துரத்திச் சென்று கடைசியில் இறந்தும் போகிறான். நானும் என்னை ஆஹாபாக நினைத்துக்கொள்கிறேன். என்னுடைய மோபி டிக் தமிழகத்தில் இதுபோல ஒரு பெரும் கொண்டாட்டத்தை பார்க்க வேண்டும் என்பதுதான். புத்தக திருவிழா மற்றும் ஆங்காங்கே செயல்படும் வாசகர் வட்ட திருவிழாக்களைச் சொல்லவில்லை. மோபி டிக் மாரத்தான் போல ஊரே ஒன்று திரண்டு ஒரு விழா. இங்கே பவா செல்லதுரை, உயிர்மை டீவியில் சீதா பாரதி ஆகியோர் கதை சொல்கிறார்கள் ஆனால் நான் குறிப்பிடுவது வாசிப்பு. இரவு பகலாக வாசிக்க வேண்டும். வாசகர்கள் என்ற தற்கொலைப்படையினர் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவரும் வாசிக்க வேண்டும். சமீபகாலங்களில் விஜய் தன் திரைப்பட இசை வெளியீட்டு விழாக்களில் குட்டிக்கதை சொல்கிறார் அல்லவா?

அதேபோல் எழுத்தாளர் ஒருவரின் நாவலை இப்படியான ஒரு விழாவில் கலந்து கொண்டு அவர் வாசிக்க வேண்டும். நாவல் இல்லை என்றாலும் கவிதையிலிருந்து இது ஆரம்பிக்கட்டும். இப்படி பாரதியை கொண்டாடலாம். ஆனால் என் பரிந்துரை மனுஷ்ய புத்திரன். மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் நம் ஆழ்மனதின் உரையாடல்கள். ஒருமுறை ஒரு நண்பர் மனுஷின் ஒரு கவிதையை பகிர்ந்து “என் கனவுகளை மனுஷ் பின்தொடர்கிறார்” என்று குறிப்பிட்டிருந்தார். அது உண்மைதான். அப்படியாக ஒரு கவிதை புனையும்போது அந்த கவிஞன் தன்னைத்தானே சுயபலி செய்து கொள்கிறான். எனவே இப்படியான கவிஞர்களை கொண்டாடலாம். அல்லது கதைகள் அல்லது நாவல்கள் வாசிக்கலாம். நாவல் வாசிப்பென்றால் எனது தேர்வு சாரு நிவேதிதாவின் ‘ராசலீலா’ மற்றும் அராத்துவின் ‘பொண்டாட்டி’. கிடைக்காது என்று தெரியும் என்றாலும் கொஞ்சம் சுவாரசியமான திமிங்கலங்களை துரத்தலாம் என்றுதான் இந்தத் தேர்வு.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
  2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
  3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
  4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
  5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
  6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
  7. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
  8. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
  9. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
  10. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
  11. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
  12. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
  13. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
  14. பெண்களுடனான உரையாடல்- வளன்
  15. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
  16. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
  17. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
  18. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
  19. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
  20. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
  21. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
  22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
  23. மூன்று இசை தேவதைகள் - வளன்
  24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்