தீராத பாதைகள்-9
கல்லூரி காலத்தில் இலக்கியத்தின் பக்கம் ஆர்வம் செல்ல ஆரம்பித்தது. என்னுடைய மூன்று வருட கல்லூரி வாழ்க்கையைப் புத்தகங்கள் செதுக்கியது. இந்தப் பழகத்தால் பலரும் என்னுடன் பேச தயங்குவார்கள் – கண்ணுக்கு புலப்படாத ஒரு எல்லை என்னை மற்றவர்களிடமிருந்து பிரித்துவிட்டது. உன்னிடம் பேச பழக அவ்வளவு ஆசையாக இருக்கும் ஆனால் நீ புத்தகம் படித்துக்கொண்டிருப்பாய் அதனால் பேசாமல் இருந்துவிட்டேன் என்று இன்று பலர் என்னிடம் சொல்கிறார்கள். புத்தகம் படிப்பவர்களை ஒரு ட்ராகுலாவை போல்தான் நம் சமூகம் பார்க்கிறது. யாரை குற்றம் சொல்லி என்ன ஆகப்போகிறது. அப்போதெல்லாம் உயிர்மை பத்திரிக்கையைச் சிரமப்பட்டு வாங்கிப் படிப்பேன். சில நண்பர்களிடமிருந்து பழைய உயிர்மை பத்திரிக்கைகளை வாங்கி வந்து படிப்பேன். சாரு நிவேதிதா, எஸ். ராமகிருஷ்ணன், அம்பை, வாஸந்தி போன்றவர்களின் கட்டுரைகள் கதைகள் சினிமா விமர்சனம் என்று அட்டகாசமாக இருக்கும். புத்தகங்கள் வாங்கும்போது கடையில் உயிர்மை பதிப்பக புத்தகம் இல்லை என்றால் அது மட்டிப் புத்தகக் கடை என்று தீர்மானித்துக்கொள்வேன். இன்று உயிர்மை இணையத்தில் என் கட்டுரைகள் வருவது மனதிற்குச் சந்தோஷமாக இருக்கிறது. அதைவிடச் சந்தோஷம் கட்டுரைகளைப் படிக்கிறார்கள் என்பதுதான். மிக்க மகிழ்ச்சி.
‘இமயத்து ஆசான்கள்’ என்னும் புத்தகத்தில் ஒரு உண்மை சம்பவம் சொல்லப்பட்டிருக்கிறது. துறவிகளுக்கான பயிற்சி ஒன்றில் ஒருவரை இருண்ட குகைக்குள் விட்டு பாறையால் குகையை அடைத்துவிடுவார்கள். சூரிய ஒளி வந்து போக ஒரே ஒரு சிறிய துளை அந்தப் பாறையில் இருக்கும். உள்ளே இருப்பவருக்குத் தண்ணீரும் ஆகாரமும் வருவதற்கு வேறு ஒரு வழி உண்டு. இப்போது உள்ளே இருப்பவருக்குக் காலம் வெளி எல்லாவற்றிலிருந்தும் ஒரு விடுதலை கிடைக்கிறது. எதைப்பற்றிய சிந்தனையும் இல்லாமல் இறைவனை மட்டும் தியானித்திருக்க வேண்டும். இப்படிப் பல மாதங்கள் தியானம் செய்ய வேண்டும். பயிற்சியின் முடிவில் உண்மையாகவே தியானம் செய்தவர் ஞானியாக வெளிவருவார். தியானத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால் பைத்தியம் பிடித்துவிடும். அந்த மாதிரியான ஒரு சூழலில் கடந்த ஜனவரி மாதம் மாட்டிக்கொண்டேன். என்ன பிரச்சனை என்ற விளக்கத்திற்குள் செல்லவில்லை. அமெரிக்க வாழ்வு நல்ல அனுபவங்களால் மட்டுமே நிறைந்திருக்கவில்லை. ஆனால் எப்படி வெளியே வந்தேன் என்பதைச் சொல்லியாக வேண்டும்.
ஜனவரி 2020 தொடங்கியதிலிருந்தே பெரும் மனத்தடைகளால் கொஞ்சம் நிலைகுலைந்துப் போனேன். அதுவும் அந்த நாள் (ஜனவரி 20) நெருங்க நெருங்க பெரும் மனப்பிறழ்வுகள். அதுவும் இங்கே ஜனவரியின் குளிர் கடுமையாக இருக்கும். பனியின் கொடுமை எல்லாரது முகங்களையும் இறுகச் செய்துவிடும். அந்த நேரத்தில் எனக்குப் பைத்தியம் பிடிக்காமல் வைத்திருந்தது புத்தகங்களும் இசையும் நான் பார்த்த திரைப்படங்களும்தான். வேறு யாருமே எனக்கு உதவ முடியாத நிலை. யாரிடம் பேசினாலும் எப்படியாவது மீண்டு வந்துவிடு என்கிறார்கள் ஆனால் யாரிடமும் தெளிவான ஒரு தீர்வு இல்லை. அவர்கள் சொன்னதும் உண்மைதான். நானாகதான் மீண்டு வர வேண்டும். திரைப்படங்கள் பார்க்கலாம் என்றால் எதைப் பார்ப்பது என்ற குழப்பம். பெரிய மனப்போராட்டத்திற்குப் பிறகு யூதர்களின் இனப்படுகொலை சம்மந்தமான படங்களைப் பார்க்க ஆரம்பித்தேன். அப்படி ஒரே நாளில் எந்த வேலையும் செய்யாமல் மூன்று முக்கியமான படங்களைப் பார்த்தேன். The Pianist, Schindler’s list கடைசியாக Life is Beautiful. இதில் Life is Beautiful எனக்கு விருப்பமான படம். கடந்த பத்து வருடங்களில் வெவ்வேறு சூழல்களில் இந்தப் படத்தை இருபதுமுறைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.
The Pianist குறித்து மிக முக்கியமான அறிமுகக் கட்டுரை ஒன்றை சாரு நிவேதிதாவின் ‘ஒளியின் பெருஞ்சலனம்’ தொகுப்பில் படித்திருக்கிறேன். ஆனால் ஒரு படத்தைப் பார்க்க குறிப்பிட்ட ஒரு மனநிலை வாய்க்க வேண்டும். எனக்கு ஜனவரி 20, 2020 அன்றுதான் வாய்த்தது. ரோமன் பொலன்ஸ்கி (Roman Polanski) இயக்கிய திரைப்படம். (போலந்து தேசத்து பெயர்களின் மீது எனக்கு எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு என்னுடன் படித்த ஒரு அமெரிக்கப் போலிஷ் நண்பனின் பெயர் மாற்க் ஒலினிக்). வார்ஸா நகரத்தில் நடந்த இனவாத தாக்குதல்களை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் மனிதர்களின் வன்மத்தை அப்பட்டமாகக் காட்சியாக்கியிருக்கிறார். அந்த வகையில் இது மிக முக்கியமான திரைப்படம்.
ஒரு பியானோ கலைஞன் எப்படி இந்தப் போர்காலச் சூழலை சமாளித்தான் என்பதுதான் கதை. அவன் ஒரு யூதன். யூதர்கள் எல்லாரும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட சூழலில் அந்தக் கலைஞனுக்கு வாழ்க்கை ஒரு வாய்ப்பை வழங்குகிறது. கொலை செய்யப்படுவதற்காகக் குடும்பத்தோடு ரயில் ஏறும் சமயத்தில் இவனை நன்கு அறிந்த ஒரு நாஜி கூட்டத்திலிருந்து விலக்கி வெளியே தள்ளிவிடுகிறான். இது அந்தக் கலைஞனுக்கு வரமா சாபமா என்ற ஒரு கேள்வி நமக்குள் இயல்பாகவே எழுந்துவிடுகிறது. எல்லோரும் சாகும்போது வாழ்க்கை நம்மை வாழச் சொன்னால் ஒரு வகையில் அது வரம் என்றாலும் மனித தன்மையற்ற மனிதர்களுடன் வாழ்வது சாபமல்லவா? படத்தில் ஒரு காட்சியில் தடுப்பு சுவர் ஒன்றில் அடியில் துளையிட்டுச் சிறுவர்கள் உணவுக்காக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் போய்வருவார்கள். ஒரு சிறுவன் அவ்வாறு சென்று திரும்பும்போது ஜெர்மானியர்கள் பார்த்துவிடுவார்கள். அந்தச் சிறுவனால் சட்டெனத் துளையிலிருந்து மீளமுடியாது. ஜெர்மானியர்கள் காலை பிடித்து இழுப்பார்கள் சிறுவன் அலறுவான் அப்போது இந்தப் பக்கம் சிலர் உதவி செய்ய முடிவில் அந்தச் சிறுவன் இறந்து போகிறான். தெருவில் ஆங்காங்கே இறந்த உடல்கள் கிடக்கும். அதன்மீது நாஜி வீரர்களின் வாகனங்கள் சர்வ சாதரணமாகப் போய்வரும். இந்தக் காட்சிகளையெல்லாம் பார்க்க மிகுந்த மனதைரியம் வேண்டும். படத்தின் இறுதியில் பியானோ கலைஞனுக்கு ஒரு நாஜி வீரன் பியானோ வாசிக்க அனுமதி தருகிறான். பல நாளுக்குப் பிறகு பியானோவை தொடும் அவன் வேறொரு மனிதனாக மாறி வாசித்துக்கொண்டிருக்கிறான். அந்த இசையின் காரணமாக நாஜி தளபதி அவன் மீது இரக்கம் கொள்கிறான். படத்தின் இறுதி காட்சியில் போருக்கு பிறகு நாஜிகள் கும்பலாகத் தண்டனைக்குக் காத்திருக்கிறார்கள் அப்போது அங்கு வரும் சில யூதர்களிடம் நாஜி தளபதி பியானோ கலைஞனின் பெயரை சொல்லி அவன் தனக்கு இரக்கம் காட்டுமாறு மன்றாடுகிறான். ஆனால் அதற்கு முன்பாகவே போர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுத் தூக்கிலிடப்பட்டான் என்ற செய்தியோடு படம் முடிகிறது.
இந்தப் படம் ஏற்படுத்திய அதிர்ச்சி குறைவதற்குள்ளாகவே ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் (Schindler’s list) பார்க்க ஆரம்பித்துவிட்டேன். நம்மவர்களின் பெரும்பாலான உலகச் சினிமா விமர்சனங்களில் இந்தப் படம் பல்வேறு விமர்சனங்களைப் பெற்றுவிட்டதால் இது முன்வைக்கும் மிக முக்கியமான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஷின்ட்லரின் பாத்திர படைப்பை ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் அடால்ஃப் ஐஃக்மெனின் (Adolf Eichmann) ஞாபகங்களும் சேர்ந்தே வருகிறது. பூனேவில் தத்துவவியல் படித்தபோது ஹன்னா அர்டென்ட் (Hannah Arendt) பற்றி விரிவாகப் படித்தோம். ஹன்னாவின் முக்கியமான கருத்தியல் சிந்தனை ‘சுயசிந்தனையை’ ஆராய்கிறது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்தது ஐஃக்மெனின் உதாரணத்தைதான். பல லட்சம் யூதர்கள் கொலை செய்யப்பட்டபோது நாஜிகள் தங்கள் தேசத்தைச் சுத்தம் செய்வதாக நினைத்துக்கொண்டார்கள். போருக்கு பிறகு – ஹிட்லரின் தற்கொலைக்குப் பிறகு பல நாஜிகள் குற்றம் சுமத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அந்த விசாரணையில் எல்லோரும் சொன்ன பதில்: நாங்கள் எங்களுக்குத் தரப்பட்ட ஆணையை நிறைவேற்றினோம் என்பதைதான். இங்கேதான் ஹன்னா ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார்: ஏன் நீ சிந்திக்க மறந்துபோனாய்? (Absence of Thinking). ஹிட்லரின் ஆணையாக இருந்தாலும் சகமனிதனை மனிதத்தன்மையின்றி நடத்துவது சுயம் சார்ந்த ஒன்றுதானே? அதைச் சிந்திக்கத் தவறியதால் ஐஃக்மென் போன்ற ஆட்கள் தூக்கிலிடப்பட்டனர். ஷின்ட்லருக்கும் ஐஃக்மெனுக்கும் என்ன சம்மந்தம்? ஷின்ட்லரும் நாஜி காட்சியில் முக்கியமான ஒரு நபர் என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால் கொலையில் ஈடுபடாமல் யூதர்களைக் காக்கும் நபராக ஷின்ட்லர் இருந்ததால் இன்றும் அவர் நினைவுகூறப்படுகிறார். படத்தின் இறுதியில் தன்னிடம் எஞ்சியிருந்த மோதிரம் கார் போன்றவற்றை விற்றிருந்தால் இன்னும் சிலரை காப்பாற்றியிருக்கலாம் என்று கண்ணீர் சிந்துவது மிக உருக்கமாக இருக்கும். இன்றும் யூத இனத்தில் ஷின்ட்லரால் காப்பாற்றப்பட்டவர்கள் தங்களை ஷின்ட்லர் யூதர்கள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். இந்தப் படத்தின் இசையும் அற்புதமாக இருக்கும். ஒரு இடத்தில் எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு இசை வந்தபோது மீண்டும் கூர்மையாகக் கவனித்தேன். அது Gloomy Sunday என்பது புரிந்தது. இந்தப் படத்தை க்ளாசிக் என்று உலகமுழுவதும் கொண்டாடுவதற்கான காரணம் இம்மாதிரியான நுணுக்கங்கள்தான்.
லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தைப் பலருக்கும் அறிமுகம் செய்துவைத்திருக்கிறேன். இந்தப் படத்தைப் பிடிக்கவில்லை என்று ஒருவர்கூடச் சொன்னதில்லை. உலகச் சினிமா பட்டியலில் கண்டிப்பாக இருக்கக் கூடிய படம்தான். தமிழ் உலகில் எந்த அளவிற்கு இது விவாதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் ஒரு பிரபலமான நடிகரின் படத்தில் இந்தப் படத்தின் காட்சிகள் அப்படியே cut and paste செய்யப்பட்டிருக்கும். இந்தக் கட்டுரையை வாசிக்கும் யாராக இருந்தாலும் இந்தப் படத்தை இப்போதுவரை பார்க்கவில்லை என்றால் நீங்கள் மிகப்பெரிய வரலாற்று பிழையைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இந்தப் படத்தைக் குடும்பத்துடன் பாருங்கள் உங்களுக்குள் விவாதித்துக்கொள்ளுங்கள். அந்தளவிற்கு முக்கியமான ஒரு படம். மனிதனை கொல்வதைவிடக் கொடுமையானது அவனது மனிதத்தன்மையைப் பறிப்பது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொல்வதன் வழியாகத் தன் அதிகாரத்தை நிறுவுகிறான். பயம் பதற்றம் வழியாக அவர்களின் தலைக்குள் அதிகாரத்தைக் கட்டமைக்கிறான். இனப்படுகொலையின் போது பல லட்சம் சடலங்களைப் பார்க்கும் எந்த மனிதருக்கும் ஒரு நடுக்கம் இருக்கதானே செய்யும்? ஆனால் Life is Beautiful பார்க்கும்போது வேறுமாதிரியான அனுபவம் கிடைக்கிறது. மனித வாழ்வின் துயரத்தை பேசும் அதே நேரத்தில் தொடக்கம் முதல் முடிவு வரை சிரித்துக்கொண்டே இருக்கிறோம். எப்படி அது முடியும்? இந்தப் படத்தைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். இப்படி எனக்குத் தெரிந்து தமிழில் சில படங்கள் இருக்கின்றன. இந்தப் படத்திலும் நுணுக்கமாகப் பார்க்க பல விஷயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் சொல்ல முடியாது, ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன். படத்தின் நாயகன் ஒரு யூதன் தன்னுடைய பணி நிமித்தம் இன்னொருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறான். ரொம்பச் சகஜமாக ‘நீங்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்?’ எனக் கேட்க முற்படுகிறான். அதற்குள் அவரது இரண்டு பசங்களும் சப்தமிடுகிறார்கள் உடனே இந்த ஆள் நாயகனோடு பேசுவதை நிறுத்திவிட்டுப் பசங்களைக் கண்டிக்கிறார். ‘பெனிட்டோ, அடால்ஃ பேசாமல் இருக்க மாட்டீர்களா!’ என்று அதட்டிவிட்டு நாயகன் பக்கம் திரும்பி ‘நீங்கள் எதையோ கேட்டீர்களே?’ என்கிறார். ‘ஒன்றுமில்லை’ என நழுவிச்செல்கிறான். சாதரணமாகத் தோன்றலாம் ஆனால் முசோலினியின் முழுப்பெயர் பெனிட்டோ முசோலினி என அறிந்தவர்களுக்கும் ஹிட்லரின் முழுப்பெயர் அடால்ஃப் ஹிட்லர் என அறிந்தவர்களுக்கும் அதில் உள்ள தீவிரம் முழுமையாகப் புரியும்.
இந்த மூன்று படங்களும் வாழ்வின் மீதான அற்புதமான தரிசனத்தை எனக்குக் கொடுத்தன. இனப்படுகொலை சம்மந்தமான இந்த மூன்று படங்களையும் இயல்பான மனநிலையில் ஒன்றாகப் பார்ப்பது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல என்றாலும் அந்த நேரத்தில் அது எனக்கு ஒரு ஆசுவாசத்தைக் கொடுத்தன. எம். வி. வெங்கட்ராம் எழுதிய காதுகள் நாவலில் கடைசியாக மகாலிங்கம் என்ற கதாப்பாத்திரம் தன் காதுகளில் எழும் சப்தத்தை மறக்க அதைவிடச் சப்தமாகக் கத்த வேண்டும் என்று கண்டடைவான். இந்தப் படங்களும் அதே தரிசனத்தை எனக்கு வழங்கின. வாழ்கிறோம் என்பதே ஒரு ஆசீர்வாதம்தானே? இதில் இப்படி ஒரு குறை என்று நினைக்கும் போது இனப்படுகொலையில் கொலையுண்ட ஆன்மாக்களை நினைத்துக்கொள்கிறேன். அடுத்த நிமிடம் வாழ்ந்திட மாட்டோமா என்று ஏங்கி செத்தவர்கள் எத்தனைபேர்! பாஸ்டன் ஹே மார்க்கெட் அருகில் இப்படி இறந்தவர்களுக்கு ஒரு நினைவிடம் இருக்கிறது. கண்ணாடியிலான அந்த நினைவிடம் விஷ வாயு கூடாரங்களைபோல் இருக்கும். அந்தக் கண்ணாடிகளில் பல்லாயிரக்கணக்கான எண்கள் நிரம்பியிருக்கும். அதெல்லாம் பெயரறியா ஏதோ ஒரு மனிதனை குறிக்கும் எண்கள். அதனுள் நடந்து வெளியில் வரும்போது மனம் தானாகவே கனத்துவிடும். சொல்ல முடியாத சோகங்கள் வந்த போன பிறகும் சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தால் வாழ்க்கை இன்னும் அழகாக இருப்பதாகதான் தோன்றுகிறது.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
- இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
- கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
- ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
- பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
- "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
- வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
- Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
- இசை நாடகங்களும் படங்களும் – வளன்
- கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
- அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
- கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
- சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
- பெண்களுடனான உரையாடல்- வளன்
- புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
- ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
- Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
- Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
- தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
- இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
- வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
- ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
- மூன்று இசை தேவதைகள் - வளன்
- 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்