தீராத பாதைகள் – 1
இன்று புனித பேட்ரிக் நாள். மூன்று வருடங்களுக்கு முன் பாஸ்டன் வந்தபோது இந்த நாளை மறக்க முடியாது. மெட்ரோ ரயிலில் இருந்த முக்கால்வாசிபேர் குடித்துவிட்டு சத்தமாக சில பாடல்களை பாடிக்கொண்டு வந்தார்கள். ஒரு முதியவர் என்னிடம் வந்து “புனித பேட்ரிக்கின் திருநாளில் நாம் அனைவருமே அயர்லாந்து நாட்டவர்கள்!” என்று விஸ்கி நெடியுடன் கூறிச்சென்றார். புனித பேட்ரிக் அயர்லாந்து தேசத்திற்கு கிறிஸ்துவ சமயத்தை போதித்த துறவி. உலகம் முழுவதும் இருக்கும் அயர்லாந்து நாட்டவர்கள் இந்த நாளை சிறப்பாக கொண்டாடுவார்கள். மதத்திருவிழா என்பதை தாண்டி இசையும் குடியும் சேர்ந்து இந்த நாள் அற்புதமாக இருக்கும். ஆனால் இன்று கொரோனா வைரஸ் காரணமாக இங்கு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
எனது இன்றைய கொண்டாட்டம் ஐரிஷ் இசையை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்வதும் ஏற்கனவே வாங்கி அடுக்கப்பட்டிருக்கும் கின்னஸ் பியரும்தான். அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் செல்பவர்கள் கின்னஸ் பியர் கம்பெனியை பார்வையிடாமல் வரமாட்டார்கள். கின்னஸ் பியரின் சுவை தனித்துவமானது. அடர் ப்ரௌன் நிறத்தில் கூழ்போல இருக்கும். நுரை ததும்ப கின்னஸ் உள்ளே போகும்போது அதன் துவர்ப்பு சுவை உடலெங்கும் பரவும். நம்மூரில் இந்த கின்னஸ் கிடைக்கிறதா? கிட்டதட்ட இந்த கின்னஸ் பியருக்கு நிகராகதான் அயர்லாந்தின் இசையும். இப்போது நான் அறிமுக படுத்தபோகும் பாடல்களை இணையத்தில் இலவசமாக நீங்கள் கேட்டு ரசிக்கலாம். அயர்லாந்தின் இசையின் தனித்துவமாக நான் பார்ப்பது அதன் கிராமிய அல்லது நாட்டுப்புறத் தன்மையைதான். Whisky in a Jar, The Irish Rover, Weila Waile போன்ற பாடல்கள் கேட்டாலே மனம் குதியாட்டம் போடத்துவங்கிவிடும். இதன் பகடி செய்யும் தன்மையும் குறிப்பிடத் தகுந்தது.
இப்படி கொண்டாட்டமான பாடல்கள் ஒருபுறமிருக்க துயரத்தை பாடும் பாடல்கள் மிகவும் பிரபலம். நான் கலந்து கொண்ட ஒரு ஐரிஷ் விருந்தில் ஆட்டம் பாட்டம் எல்லாம் முடிந்த பிறகு சில துயர பாடல்கள் விரும்பி கேட்கப்பட்டன. சிலர் அதை கேட்டு குமுறி குமுறி அழுதார்கள். அழுவது ஒரு விடுதலைதானே. அது அங்கிருந்த பலருக்கு தேவையாக இருந்தது. இந்த துயர கீதங்கள் அயர்லாந்தில் நடந்த உள்நாட்டுப் போரை குறித்து, போரில் இறந்த வீரர்களை குறித்து, காதல் இப்படி பலவற்றை பாடுகிறது. அதில் எனக்கு பிடித்த இரண்டு பாடல்கள் இருக்கின்றன. Down by the Glenside என்ற பாடல் ஏற்படுத்தும் மனச்சித்திரமே வலி மிகுந்ததாக இருக்கும். அதுவும் இதனை Holohan Sisters இசையில் மயக்கும் குரலில் கேட்கும்போது தெய்வீகமாக இருக்கும்.
https://www.youtube.com/watch?v=ah40_xMBTlA
இன்னொரு பாடல் Grace. கில்மெயின்ஹாம் ஜெயிலில் ஜோசப் ப்ளங்கெட் புரட்சி செய்ததற்காக அடைக்கப்படுகிறான். அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனைக்கு முன் அவனது கடைசி ஆசையாக காதலி க்ரேஸை சந்திக்கிறான். அவர்களுக்கு எட்டு மணி நேரம் கொடுக்கப்படுகிறது. அப்போது அங்கிருந்த சிற்றாலயத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார்கள். திருமணத்தின் போது நடந்ததை அவர்கள் காதலை சொல்வதுதான் க்ரேஸ் என்ற அந்த பாடல். இது உண்மையாக அங்கு நடந்த சம்பவம். கொடுக்கப்பட்ட எட்டு மணி நேரம் முடிந்ததும் ஜோசப் கொல்லப்படுகிறான். அதன்பின் க்ரேஸ் ஜோசபை நினைத்தவாறு வேறு திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்தாள். கில்மெயின்ஹாம் ஜெயில் இன்று நம்மூர் தாஜ்மஹால் போல உலகெங்கும் வாழும் காதலர்கள் வந்து பார்வையிடுகிறார்கள்.
ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்
இந்த நிமிடங்கள் இன்னும் கொஞ்சம் நீளட்டும்.
விடியும்போது என்னை அவர்கள் கொண்டு சென்றுவிடுவார்கள்
நான் கொல்லப்படுவேன்
என் அத்தனை அன்புடன் இந்த திருமண மோதிரத்தை உனக்கு அணிவிக்கிறேன்
நம் காதலை பகிர்ந்துகொள்ள நமக்கு நேரமில்லை நாம் பிரியதான் வேண்டும்
இந்த வரிகளை பாடலாக கேட்கும்போது எப்படி கண்ணீர் சிந்தாமல் இருக்க முடியும்? கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்பில் Jim McCann குரலில் க்ரேஸ் கதை மற்றும் பாடலை கேட்கலாம் https://www.youtube.com/watch?v=SMf6IyJI0e4
அடுத்தமுறை 1990களில் பல இளம் உள்ளங்களை கொள்ளையடித்த மூன்று இசை தேவதைகளை பற்றி பார்க்கலாம்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
- இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
- கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
- ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
- பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
- "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
- வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
- Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
- இசை நாடகங்களும் படங்களும் – வளன்
- கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
- அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
- கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
- சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
- பெண்களுடனான உரையாடல்- வளன்
- புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
- ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
- மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
- Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
- Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
- தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
- இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
- வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
- ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
- மூன்று இசை தேவதைகள் - வளன்