தீராத பாதைகள்-14

அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் சிலர் செத்தாலும் பரவாயில்லை எங்களை வெளியில் விடுங்கள் என்று போராடியதைப் பார்த்திருப்பீர்கள். அதெல்லாம் சுத்த பைத்தியக்காரத் தனம் என்று நினைத்திருந்தேன். ஆனால் என் வியட்நாம் நண்பர்கள் விருந்து ஒன்றுக்கு அழைத்துச் சென்றதும் நானும் அந்தப் பைத்தியக்காரக் கூட்டத்தில் சேரலாம் என்று முடிவு செய்துவிட்டேன். நவம்பர் மாத இறுதியிலிருந்தே எங்கள் ஊரடங்கு ஆரம்பித்துவிடும். குளிர். அதுவும் நான் வசிக்கும் பாஸ்டனில் குளிர் மற்ற இடங்களைவிட அதிகம் என்பதால் குளிர்காலம் ஆரம்பித்தவுடன் ஊரடங்குதான். மார்ச் இறுதியில் வரும் வசந்தம்தான் எங்கள் விடிவுகாலம். ஆஹா வசந்தமும் கோடையும் அவ்வளவு நிம்மதியை தரும்! இதில் இந்தக் கொரோனா செய்த கூத்து மே மாதம் வரை எங்களை அடங்கியிருக்கச் செய்துவிட்டது. கொஞ்சம் ஊரடங்கு தளர்த்தியவுடன் நகரம் பெரும் கொண்டாட்டத்திற்குத் தயாரானது போல ஆகிவிட்டது. நான் இப்போது இருக்கும் இடத்தில் வியட்நாமியர்கள் அதிகம் என்பதால் என்னுடைய வியட்நாம் நண்பர்கள் என்னையும் அவர்களுடைய விருந்துக்கு அழைத்துச் சென்றார்கள்.

மரியோ வர்கோஸ் யோசா தனது நோபல் பரிசு ஏற்புரையில் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறார். நாட்டின் மீதான அன்பு – நாட்டுப் பற்று – நட்பு, காதல், பாசம் போன்ற அன்பு சார்ந்த உறவுகளைப் போல் இயல்பாக இருக்க வேண்டும் அதைக் கட்டாயப்படுத்தக் கூடாது என்கிறார். நானும் இயல்பிலே அப்படிதான். இயல்பு என்பதைவிட நான் வளர்க்கப்பட்டது அப்படி. பள்ளிப் பருவத்தில் மட்டும் எட்டுப் பள்ளிகளில் படித்தேன். அதனாலே எனக்கு நெருங்கிய பள்ளிப் பருவ நண்பர்கள் இல்லை. கல்லூரியில் படிப்பு மட்டும்தான். படிப்பென்றால் இலக்கிய வாசிப்பு. அதுவும் என்னை அந்நியப்படுத்திவிட்டது. வீட்டிலும் ரொம்ப நாள் இருந்ததில்லை. இன்னமும் எங்கள் வீட்டை சுற்றி இருப்பவர்களுக்கு என் தம்பி மட்டும்தான் என் வீட்டுக்கு ஒரே மகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் கலாச்சார ரீதியாக என் அடையாளம் என்ன என்று எனக்கே தெரியாது. தமிழில் சிந்திக்கிறேன் என்பதுதான் முக்கியம். மற்றபடி தமிழ்ப் பெருமை பேசிக்கொண்டிருக்க முடிவதில்லை. பூனேயில் இருந்த சமயம் மலையாளி நண்பர்கள் அதிகம் அவர்களுடன் பழகி அவர்களைப் போலவே கொண்டாட்டமாக இருந்தேன். கொண்டாட்டமாக இருந்தேனே தவிர அவர்களின் ஒரு சில சுரணையற்ற செயல்களுக்குத் துணைப் போனதில்லை. ஜார்கண்ட் ஆதிவாசி நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுடனும் ஒரே கொண்டாட்டம்தான். என்றாவது அவர்கள் ஹடியா தயாரித்தால் எனக்கும் தந்துவிட்டுதான் பருகுவார்கள். இப்படியாக யாருடன் இருக்கிறேனோ அவர்களுடன் இணக்கமாகிவிடுவேன். சென்ற வாரம் என் வியட்நாம் நண்பர்கள் விருந்துக்கு அழைத்தவுடன் சென்றுவிட்டேன்.

கொரோனாவுடன் நான் ஆரம்பித்தேன். கொரோனா – மெக்ஸிக்கன் பியர். இந்த பியரின் துவர்பை போக்க ஒரு துண்டு எலுமிச்சையைப் பாட்டிலில் போட வேண்டும். அருந்திக்கொண்டிருக்கும்போதே கலிஃபோர்னியாவிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு ஒயின் பாட்டிலை திறந்தார்கள். அதையும் எனக்கே முதலில் கொடுத்து அருந்தினார்கள். அவர்களின் உரையாடல்கள் எப்போதுமே வியட்நாம் மொழியில் இருந்ததால் அதனுள் நுழைய முடியவில்லை. அவ்வப்போது என்னை நோக்கி எழுப்பப்படும் வினாக்களுக்கு ஆங்கிலத்தில் பதிலளித்து அமைதியானேன். இரண்டாவது பாட்டில் ஒயினைத் திறந்தபோது, சாப்பாடு பரிமாற ஆரம்பித்தார்கள். நாம்தான் ரொம்பச் சாங்கியமான ஒரு உணவுமுறையை வைத்திருக்கிறோம். தவறொன்றும் இல்லை. மற்றவர்கள் பொதுவாக அவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அன்று இறால்களை அப்படியே உப்பிட்டு அவித்து வைத்திருந்தார்கள். அப்படியே என்றால் எதுவும் செய்யாமல் முழுவதுமாக. நம்மவர்கள் அதைச் சுத்தம் செய்து கழுவி மாசாலிட்டு எவ்வளவு வேலை. அதனுடன் சோளம் அவித்து வைத்திருந்தார்கள். இப்போது இரண்டாவது பாட்டில் ஒயின் தீர்ந்திருந்தது.

அதற்குப் பிறகு ஹனிகன் பியரில் அவித்த ஆய்ஸ்டர் (oyster) – சிப்பி. அதையும் ஆர்வமாகச் சாப்பிட்டார்கள். மூன்றாவது பாட்டிலை அவர்கள் திறந்தார்கள். இப்போது இந்தியா குறித்து என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மற்ற அமெரிக்க நண்பர்கள் என்றால் உங்கள் ஊரில் குரங்கு இருக்குமா, யானை இருக்குமா என்று ஆரம்பிப்பார்கள். இன்னும் இந்தியா என்றால் ஏதோ வனவாசிகள் மட்டும் வாழும் தேசம் என்ற நினைப்பு. வியட்நாமியர்கள் தாகூரை தெரியுமா என்று கேட்டார்கள். வாசித்திருக்கிறேன் ஆனால் அவருக்கும் எங்கள் மாநிலத்திற்கும் ரொம்பத் தூரம். இந்தியாவின் புவியியலை விளக்கிக்கொண்டிருந்தேன். மூன்றாவது பாட்டில் பாதியில் அங்கிருந்த ஒருவர் வியட்நாம் மொழியில் ஏதோ சுதியுடன் சொல்ல ஆரம்பித்தார். பொதுவாகவே வியட்நாமியர்களின் மொழி அழகாக இருக்கும். அவர்களின் இசை ஒரே சுதியில் இருப்பதாகத் தோன்றும் ஆனால் பேச்சுப் படுஅட்டகாசமாக இருக்கும். இந்த மனிதர் சொல்ல ஆரம்பித்தவுடன் அங்கிருந்த யாவரும் அவருடன் சேர்ந்துகொண்டு சொல்ல எனக்கு என்ன சொல்கிறார்கள் என்று புரியவில்லை. பின் அந்த மனிதர் அது தாகூரின் கீதாஞ்சலியில் ஒரு பாடல் என்றார். அற்புதம் என்று பாராட்டினேன். என் நண்பன் அரைகுறை ஆங்கிலத்தில் அதை மொழிப்பெயர்த்தான். உண்மையில் என் கண்கள் சற்றுக் கலங்கியிருந்தது. நான் விரும்பியதை கொண்டாட அந்த மூன்றாம் பாட்டில் ஒயினும் தீர்ந்தது.

அந்த மெல்லிய போதையில் பாரதியின் பாடல்கள் என் தலைக்குள் ஓடிக்கொண்டிருந்தது. பாரதிக்குப் பக்கத்தில் கூடத் தாகூரின் பாடல்கள் நெருங்க முடியாது. ஒரு முழுப்பாடல் கூட வேண்டாம், ஒவ்வொரு பாட்டிலும் ஒரு தருணம். அது போதும். உதாரணமாக ‘வானை அளப்போம் கடல் மீனை அளப்போம்’ இந்த ஒற்றை வரி ஏற்படுத்தும் பிரமாண்டத்தைத் தாகூரால் தந்துவிட முடியுமா தெரியவில்லை. இன்னொரு உதாரணம். ‘மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே வானையும் கடலையும் நோக்கி இருந்தேன்’ எவ்வளவு கம்பீரம்! வ.ரா எழுதிய பாரதியைப் பற்றிய புத்தகத்தைப் படித்துவிட்டு பாண்டிச்சேரி சென்றேன். பாரதி எந்த இடத்தில் எந்தப் பாடலை எழுதினார் போன்ற குறிப்புகள் அதில் இருக்கின்றன. பலவற்றைக் கண்டுபிடிக்க முடியாமல் காலம் உருமாற்றிவிட்டது. அதேபோல் பாரதி நோக்கியிருந்த மேடை எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்த மேடையில் பாரதி இப்படித்தான் வானையும் கடலையும் நோக்கியிருந்திருப்பான் என்று நின்றபோது மனம் கனத்துக் கண்கள் பனித்துவிட்டன. தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்த சமயம் தானும் நோபல் பரிசுக்கு தகுதியானவன் என்று பாரதி பேசியிருக்கிறார். எப்படி இருக்கிறது பாருங்கள்! இங்கே கவிதையையும் அதற்கான விமர்சனத்தையும் அதனைப் பரிசுக்கு பரிந்துரைப்பதையும் கவிஞர்தான் செய்ய வேண்டியிருக்கிறது. பாரதியைப் பற்றிப் பேசும் எல்லா நேரத்திலும் உணர்ச்சி வயப்படாமல் இருக்க முடியவில்லை. என் நண்பர்களுக்குப் பாரதியைப் பற்றி அன்று ஒரு சிறு உரையை அங்கு நிகழ்த்தியிருக்கலாம் ஆனால் அதற்கான நேரம் அதுவல்ல என்று கட்டுப்படுத்திக்கொண்டேன்.

அடுத்து தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டார்கள். என்ன என்று எனக்குப் புரியவில்லை ஆனால் என்னைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள் என்று மட்டும் தெரிந்தது. என் நண்பன் சற்று தயங்கி என்னிடம் நீ மாட்டுக்கறி சாப்பிடுவாயா என்று கேட்டான். இதென்ன கேள்வி என்கிற ரீதியில் விசாரித்தேன். இந்தியர்கள் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள் என்று நினைத்தோம் என்று கூறினார்கள். ஒருமுறை மும்பை சென்றிருந்தபோது அங்கிருந்த ஒரு கேரள உணவகத்தில் இங்கு மாட்டுக்கறி பறிமாறப்படுவதில்லை என்று எழுதி வைத்திருந்தார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்திருந்த சமயம் அது. சின்னச் சந்தேகம் வந்தாலும் இந்த மாதிரியான உணவகங்களை அடித்து நொறுக்கிவிடுவதால் பாதுகாப்பிற்காக இந்த மாதிரி எழுதி வைக்கிறோம் என்றார்கள். சர்வாதிகாரம் சாதிப்பது இதைத்தான். இந்தியர்கள் என்றாலே மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். ஒருமாதிரியாக அவர்களுக்கு இதைப் புரிய வைத்ததால் சுடச்சுட மாட்டுக்கறி இட்ட சூப் வழங்கினார்கள். இதற்கிடையில் ரெட் ஒயினையும் குளிர்ந்த ஷெம்பெயினையும் கலந்து ஒரு பானத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். இப்போது அங்கிருந்த நண்பர்களின் முகங்கள் சிவந்திருந்தது. வியட்நாமியர்கள் அதிகம் குடித்தால் அவர்களின் முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது. அந்த வகையில் இந்தியனாக இருப்பதில் எனக்கு அதிர்ஷ்டம்தான். அங்கிருந்த யுவதி ஒருத்தி செவிலியராக இருக்கிறாள் இந்த முகம் சிவப்பதைப் பற்றிக் கேட்டபோது ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். கவனிக்கத் தவறிவிட்டேன்.

மிகவும் இயல்பாக அந்த விருந்து சென்றுகொண்டிருந்தது. மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்த விருந்து பத்து மணியாகியும் முடியவில்லை. இந்தமுறை நான் ரொம்பவும் இணக்கமாக இருந்ததால், தைரியமாக எனக்கு முட்டையைக் கொடுத்தார்கள். முட்டை கொஞ்சம் பெரிதாக இருந்ததால் வாத்துமுட்டை என்று ஊகித்துக்கொண்டேன். முழுதாக வேகவைக்கப்பட்ட இன்னும் ஓடு உரிக்காத முட்டை. ஓட்டை உடைக்க முற்பட்டபோது என் நண்பன் தடுத்து நாங்கள் சாப்பிடுவதைப் போல் சாப்பிடு என்று அறிவுறுத்தினான். முட்டையைச் செங்குத்தாகப் பிடித்து மேல் ஓட்டை தட்டி எடுத்தான். நானும் அவ்வாறே செய்தேன். எனக்கு அப்போது ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. கெட்டுப்போன முட்டை எனக்கு வந்திருந்தது. ஒரு துர்நாற்றம். என் நண்பனிடம் இதைச் சொல்ல முற்பட்டபோது அவனுடைய முட்டையும் அப்படியே இருந்தது. எந்தவித அசூயையும் இன்றி அவனோ சிறிய கரண்டியின் உதவியால் அந்த முட்டையைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். மிளகும் உப்பும் சேர்த்துக்கொண்டு அங்கிருந்த யாவரும் ஆர்வமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். நான் கொஞ்சம் மன தைரியத்துடன் எனக்கு வழங்கப்பட்ட முட்டையில் கரண்டியை செலுத்தி வழித்து எடுத்தபோது சரியாக வளராத வாத்துக்குஞ்சு ஒன்று கரண்டியுடன் வந்தது. அதற்கு மேல் என்னால் முடியவில்லை. என் நண்பனிடம் கொடுத்துவிட்டேன். ரசித்துத் தின்று முடித்தான். இன்னொருவர் நான் சாப்பிடாததைக் கவனித்துத் தான் இதுபோல இருபது முட்டைகளைச் சாப்பிடுவேன் என்று கூறினார். எத்தனைவிதமான கலாச்சாரங்கள்! எல்லாவற்றையும் புரிந்துகொள்ள இந்தப் பிறப்பு போதாது என்று தோன்றியது.

வியட்நாமியர்களின் கடல் உணவு எனக்குப் பிடிக்கும். மேலே சொன்னது போன்று வேறு சில உணவுகளும் இருக்கிறது அதைத் தவிர்த்து மற்றனைத்தும் நன்றாக இருக்கும். அவர்களின் ஸ்பிரிங் ரோல் குறித்துச் சொல்ல வேண்டும். நமது சமோசாவை உருட்டி பொறித்தெடுத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். நமது சமோசா என்றால் தமிழ் நாட்டில் கிடைக்கும் சமோசா – சின்னதாக முறுகலாக முக்கோண வடிவில் இருக்கும் அல்லவா? அதைச் சொல்கிறேன். சமோசாவை பொறுத்தவரை வட இந்திய சமோசாதான் என்றென்றைக்குமான என் தேர்வு – கூம்பு வடிவில் இருக்கும் அளவும் பெரிதாக இருக்கும். அந்த விருந்தின் இறுதியில் போதையில் தள்ளாடிக்கொண்டிருந்த ஒருவரிடம் கொஞ்சம் தைரியமாகக் கேட்டேன், இப்படிக் குடிப்பதால் உங்கள் மனைவி உங்களை என்றாவது கோபித்துக்கொள்வார்களா என்றேன். இதை என் மனைவியிடமே கேளுங்கள் என்று அவர் மனைவியிடம் வியட்நாமியில் ஏதோ சொல்ல, அவர் மனைவி என்னுடன் பேச ஆரம்பித்தார். முப்பது வருடமாக இவர் குடிக்கிறார். பார்ட்டிக்குப் போகும்போது என்னையும் அழைத்துச் செல்வார். நான் குடிக்க மாட்டேன் அதனால் பார்ட்டியின் முடிவில் அவரைக் காரில் அழைத்து வருவது நான்தான். எங்களுக்குள் வேறு விஷயங்களுக்காகச் சண்டை வந்திருக்கிறது குடியை மையமாக வைத்து எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை என்றாள். அங்கிருந்த எல்லா ஆண்களுக்கும் அப்படிதான். குடித்தல் என்பது பெரும் கொண்டாட்டம். இந்தியாவில் எப்படிக் குடிக்கிறார்கள் என்று கேட்டபோது அன்றைய விருந்தில் பரிமாறப்பட்ட உணவுகள் அட்டகாசமாக இருந்தது என்று புகழ்ந்தவாறு அவர்களிடமிருந்து நழுவிவிட்டேன்.

பல்வேறு உணவுகளைத் தேடிக் கண்டுபிடித்துச் சாப்பிட எனக்குப் பிடிக்கும். பாஸ்டன் வந்தபின் என் விருப்பத்திற்குரிய கடல் உணவாக லாப்ஸ்டர் (lobster) மாறிப்போனது. என்னதான் ஜீவகாருண்யம் பேசினாலும் இந்த லாப்ஸ்டர் விஷயத்தில் ஜீவகாருண்யம் கடைபிடிக்க என்னால் இயலாது. காரணம் லாப்ஸ்டரை உயிருடன் உப்புத்தண்ணீரில் வேகவைத்து உண்ண வேண்டும். தூத்துக்குடியில் லாப்ஸ்டர் கிடைக்கும் ஆனால் விலை நம்மவர்களுக்குக் கட்டுப்படி ஆகுமா தெரியாது. ஒரு தூத்துக்குடிகாரர்தான் லாப்ஸ்டரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் சொன்ன இன்னொரு ரகசியத்தையும் சொல்லிவிடுகிறேன்: லாப்ஸ்டருடன் கொஞ்சம் வொயிட் ரம் அருந்தினால் அற்புதமாக இருக்கும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
  2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
  3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
  4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
  5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
  6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
  7. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
  8. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
  9. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
  10. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
  11. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
  12. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
  13. பெண்களுடனான உரையாடல்- வளன்
  14. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
  15. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
  16. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
  17. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
  18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
  19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
  20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
  21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
  22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
  23. மூன்று இசை தேவதைகள் - வளன்
  24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்