தீராத பாதைகள் – 20
ஃப்ரன்ச் ஃபிரைஸ், பட்டணம் பக்கோடா, நேச்சுரல் ஐஸ்க்ரீம்
உணவு வகைகளை குறித்து எழுதும்போது மட்டும் ஏன் இவ்வளவு ஞாபக மறதி வருகிறது என புரியவில்லை. முந்தைய பதிவிலேயே ஃப்ரன்ச் ஃபிரைஸ் பற்றி எழுதியிருக்க வேண்டும். உருளை கிழங்கு வறுவல். சாப்பிட ஆரம்பித்துவிட்டால் நிறுத்த முடியாது. நல்ல ஃபிரைஸ் என்பது வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்க வேண்டும். அமெரிக்காவில் முழு அடைப்புக் காலத்தில் நான் பெரிதும் தவறவிட்டது ஃபிரன்ச் ஃபிரைஸை (உருளைக்கிழங்கு வறுவல்களை) தான். மே மாதம் உணவங்கள் திறந்தபின் ஃப்ரன்ச் ஃபிரைஸ் கெட்சப்புடன் சாப்பிட்டதும்தான் நிம்மதியாக இருந்தது. ஃப்ரன்ச் ஃபிரைஸுக்கும் ஃப்ரான்ஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வுலகுக்கு ஃபிரன்ச் ஃபிரைஸை வழங்கியது பெல்ஜியம். இன்றைய ஐரோப்பா, உருளை கிழங்கிற்கு பெரிதும் கடன்பட்டிருக்கிறது. போர்களிலும் கொள்ளை நோயின் காலத்திலும் பசியை மறக்க பெரிதும் அவர்களுக்கு உதவியது உருளை கிழங்குகள்தான். இன்றும் பல அமெரிக்க வீடுகளில் உருளைக் கிழங்கை அவித்து வெண்ணை தடவி சாப்பிடுவார்கள். உணவு என்பது அமெரிக்கர்களுக்கு பெரும் கொண்டாட்டம். கொரோனா காலத்தில் நான் சந்தித்த பலரிடம் இப்போது எதை மிகவும் தவறவிடுகிறீர்கள் என்று கேட்டதற்கு கிட்டதட்ட அனைவரும் சொன்னது உணவகங்களுக்குச் செல்ல முடியவில்லை என்பதுதான். அமெரிக்க உணவகங்களில் என்னை கவர்ந்தது எதுவெனில் அவர்கள் தருவதை நாம் சாப்பிட வேண்டியதில்லை மாறாக நமக்கு எது வேண்டுமோ அதைக் கேட்டுச் சமைத்து தருவார்கள். எவ்வளவு உப்பு வேண்டும்… எவ்வளவு மிளகு… எந்த பதத்தில் சமைத்திருக்க வேண்டும்… எந்தெந்த காய்கறிகள் உணவில் இருக்க கூடாது… எவ்வளவு சூடாக இருக்க வேண்டும் என நீங்கள் மனதில் நினைப்பதைச் சொல்லி சாப்பிடலாம்.
சமீபத்தில் ஆலிவைரா (Oliveira’s steak house) சென்றிருந்தேன். ஸ்டேக் விருந்து இங்கே பிரபலம். ஆலிவைரா பிரேசிலிய உணவகம். பார்பிக்யூ செய்த பீஃப், போர்க் மற்றும் சிக்கன் குறைந்தது இருபது வகையில் நமது இடத்திற்கே வந்து வெட்டி தருவார்கள். நம் தேவைக்கேற்ப வாங்கி சாப்பிடலாம். ஜின் அண்ட் டானிக்கின் மெல்லிய போதையுடன் பல்வேறு இறைச்சியை உண்டுக் களித்தேன். கோழியின் இதயத்தில் மிளகு கொஞ்சம் மிகுதியாக இட்டு பார்பிக்யூ செய்திருந்தது எனக்கு மிகவும் பிடித்தது. கடைசியாக இலவங்கப்பட்டை தூள் தடவிய அன்னாசிப்பழத்தை பார்பிக்யூ செய்திருந்தார்கள். பொதுவாகவே எனக்கு அன்னாசிப்பழம் மிகவும் பிடிக்கும் அதுவும் பார்பிக்யூ செய்திருந்தால் என்னை மறந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பேன். அதேபோல வியட்நாமியர்கள் வைக்கும் மீன் சூப்பில் அன்னாசி போடுவார்கள். வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும்.
உலகத்தில் இருப்பவர்கள் அமெரிக்கா செல்வதை அந்தஸ்தாக கருதுகிறார்கள் என்றால் அமெரிக்கர்களுக்கு நன்டாகெட் தீவுக்கு (Nantucket Island) செல்வது பெரும் கனவு. நன்டாகெட் தீவில் வீடு வைத்திருப்பது பெரும் அந்தஸ்து. நானும் இன்னும் சென்றதில்லை. நண்பர்கள் சென்றிருக்கிறார்கள். அவ்வளவு புகழ் மிக்க நன்டாகெட் தீவில் உணவங்கள் இல்லை. அதாவது மெக்டோனல்ட், டங்கின் டோனட், ஸ்டார்பக்ஸ், பர்கர் கிங்க் போன்ற எந்த கார்பரேட் உணவகங்களும் கிடையாது. அங்குள்ள அனைத்துக் கடைகளும் உள்ளூர்காரர்களால் நடத்தப்படுகிறது. இதை மிக முக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன். ஒருபுறம் அமெரிக்க மோகத்தால் நம் இயல்பான வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க முயல்கிறோம். ஆனால் மேல்தட்டு வர்கம் என்றுமே தாங்கள் சார்ந்த தொழில்களையே முன்னிலைப் படுத்துகின்றனர்.
நம்மூர் உணவுகளில் எனக்கு பிடித்தது அடை. லால்குடியில் கொஞ்ச நாளுக்கு முன்பாக நான் பெரிதும் விரும்பிய தம்பாச்சியா என்ற உணவகத்தை ஏதோ காரணத்தால் மூடிவிட்டார்கள். இலக்கியம் எனக்கு அறிமுகமான காலத்தில் லால்குடியில் இருக்கும் நண்பர்கள் என்னை தம்பாச்சியா அழைத்துச் சென்று, அடையும் அவியலும் வாங்கிக் கொடுப்பார்கள். அற்புதமாக இருக்கும். அடை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே ஜெயகாந்தனுடன் கஞ்சா புகைத்த அனுபவத்தை ஒருவர் சொல்ல ஆரம்பிப்பார். பின்னர் அவரை யாராவது விமர்சிப்பார்கள். ஒரே ரகளையாக இருக்கும். தம்பாச்சியா உணவகம் அந்தக் காலத்துச் சத்திரம் ஒன்றில் செயல்பட்டு வந்தது. உணவகம் மூடப்பட்டபோது மிகவும் கவலையாக இருந்தது. அதே போல எங்கள் ஊர் பக்கம் பட்டணம் பக்கோடா சூப்பராக இருக்கும். பட்டணம் பக்கோடா சாதாரணமாக சாப்பிட்டால் நன்றாக இருக்காது. டீக்கடைகளில்தான் அது கிடைக்கும். அதே கடையில் மசாலா சுண்டல் போடுவார்கள். வெள்ளை பட்டாணியை வேக வைத்து வெங்காயம் தக்காளி மசால் போட்டு தடதடவென்ற பதத்தில் இருக்கும். இரண்டு பட்டணம் பக்கோடாவை உடைத்துப் போட்டு அதில் இந்த மசாலா சுண்டல் போட்டு கொஞ்சமாக ஊறவிட்டு சாப்பிட வேண்டும். அதன்பிறகு மாலை வரை பசியே தெரியாது. நான் சிறுவனாக இருந்த போது அப்பாவுடன் மீன் பிடிக்கச் செல்வேன். பசிக்கும் போது ஆற்றங்கரையில் உட்கார்ந்து பொட்டலம் கட்டி வந்த பட்டணம் பக்கோடாவையும் சுண்டலையும் பிசைந்து கொடுப்பார்.
வெகுநாட்களுக்கு முன்னர் சமஸ் எழுதிய ‘சாப்பாட்டு புராணம்’ புத்தகம் படித்தேன். இன்றைக்கு இருக்கும் யூடியூப் புரட்சியால் அவரவர் தன்னை உணவுப் பிரியர் என்று அறிவித்துக்கொண்டு உணவுவை ருசிப்பதை பார்க்கிறேன். சாப்பாட்டு புராணம் படித்தபிறகு நானும் அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சாப்பிட திட்டமிட்டிருந்தேன். ஆனால் திருச்சியில் உள்ள உணவு வகைகளை மட்டுமே சாப்பிட்டு பார்க்க முடிந்தது. திருவாணைக்கோவில் தோசை இன்றும் பிரபலம். அந்த தோசையை பற்றி படித்தவுடன் தேடிச் சென்றுவிட்டேன். சமஸ் எழுதியதைப் பற்றி அக்கடையில் இருப்பவர்களிடம் சொன்னபோது கொஞ்சம் சிரித்துக்கொண்டு பணிவுடன் சமஸ் கொஞ்சம் உயர்வு நவிற்சியாக எழுதிவிட்டதாக சொன்னார்கள். ஆனால் எனக்கும் சுவை அபாரமாகவே இருந்தது. தமிழ்நாட்டில் இப்படி தங்களை நிறுவிக்கொண்ட ஸ்தாபனங்களில் சில ஒற்றுமையை கவனித்திருக்கிறேன். எளிமை, கரிசனை, தரம் நிரந்தரமாக இருக்கிறது. திருநெல்வேலி அல்வா கடை மாலையில் ஒரே தள்ளுமுள்ளாக இருக்கும். ஆனால் அந்த கடையில் இருப்பவர்கள் மிகவும் சாந்தமாக தங்கள் பணியைச் செய்வார்கள். ஒருமுறை பதற்றத்தில் நான் மீதி சில்லறை வாங்காமல் சென்ற போது கனிவாக என்னை அழைத்து மீதியை கொடுத்தனர். அதேபோல திருவையாறு ஆண்டவர் அசோகா கடையில் முதலாளி வரவேற்கும் விதமே மனதிற்கு இதமாக இருக்கும். இதை ஏன் பெரிதுபடுத்தி சொல்கிறேன் என்றால், பல கடைகளில் ஏதோ நம்மை அடிமைகளை போலவே நடத்துவார்கள். அவ்வாறான கடைகளுக்குள் நுழைந்தாலே ஒருவிதமான குற்றவுணர்ச்சி நம்மை பிடித்துக்கொள்ளும் அந்தளவுக்கு இருக்கும் கவனிப்பு.
பாஸ்டன் நார்த் எண்டில் இருக்கும் விக்டோரியா காஃபி கடை எனக்கு விருப்பமான இடம். பாரம்பரியமான நிறுவனம். கடைக்குச் செல்ல இரண்டு வாசல்கள் உள்ளன. ஒரு வாசல் புகைப் பிடிப்பவர்களுக்காக ஒதுக்கியது. நல்ல சிகார் இருந்தால் சுகமாக புகைத்துவிட்டு அருமையான காஃபி குடித்துவிட்டு வரலாம். புகை பிடிப்பது பிடிக்கவில்லை என்றால் மிக நன்று. எஸ்ப்ரசோ மணம் சுண்டியிழுக்கும். அதைப் பற்றி ‘காஃபி சூன்யகாரி’ கதையில் எழுதியிருக்கிறேன். அமெரிக்காவில் பல இடங்களில் டிரிமசூ என்ற இனிப்பை சுவைத்திருக்கிறேன். ஆனால் விக்டோரியா கடையில் கிடைப்பது போன்ற டிரிமசூவை சாப்பிட்டதே இல்லை. டிரிமசூ ஒருவகையான கேக். சீஸ் கேக் போல இருக்கும். மேலே காஃபி பொடியை சலித்து தூவியிருப்பார்கள். எனக்கு இனிப்பே பிடிக்காது. காரணம் திகட்ட ஆரம்பித்துவிடும். ஆனால் இந்த டிரிமசூ மட்டும் ஏதோ சொர்கத்திலிருந்து வந்தது போல அற்புதமாக இருக்கும். விக்டோரியா கடையில் கார்ட் பயன்படுத்தி பணம் செலுத்த முடியாது. பணம் தர வேண்டும். அன்று என்ன அவசரத்தில் இருந்தேனோ பணம் எடுத்துச் செல்ல மறந்துவிட்டேன். கனிவாக என்னிடம் கார்ட் இங்கே ஏற்றுக்கொள்ள முடியாது என சொல்லிவிட்டார்கள். என்னிடம் பணம் இல்லை என்றேன். அவர்கள் எதுவுமே சொல்லாமல் எதிரில் இருக்கும் ஏடிஎம்மில் பணம் எடுத்துவர சொன்னார்கள். அந்தத் தெரு கூட்டமாக இருக்கும். ஏடிஎம் எதிரில்தான் என்றாலும் கூட்டத்துடன் கலந்துவிட்டால் யாரும் கண்டுபிடிக்க முடியாது. எனக்கு ஆச்சரியாமாகிவிட்டது. எந்த நம்பிக்கையில் என்னை இப்படி அனுப்புகிறார்கள்? எனது நேர்மையை நிரூபிக்க, அவர்களிடம் யாரையேனும் என்னுடன் அனுப்புங்கள் என்றேன். நான் சொல்வதில் உள்ள நியாயம் புரியாமல் ஏடிஎம் பக்கத்தில்தான் இருக்கிறது என்று இன்னும் கொஞ்சம் விளக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் செயல் எனக்கு வெக்கத்தை வரச் செய்தது. என்னுடைய சொந்த ஊரில் இப்படி ஒரு செயல் நடந்திருந்தால் ஜாமீனாக எதையாவதுதான் விட்டுச்செல்ல சொல்லியிருப்பார்கள். பணம் எடுத்து கொடுத்துவிட்டு ஆச்சரியத்துடனே நடந்தேன். இதே விக்டோரியா கடையில் ஒருமுறை அயர்லாந்தின் பிரதமர் சாமானியரைப் போல காஃபி அருந்திக்கொண்டிருந்தது இன்னமும் சிலர் நினைவில் நிற்கிறது.
அமெரிக்காவில் அதிகமாக ஐஸ்க்ரீம் சாப்பிடுபவர்கள் பாஸ்டன்வாசிகள்தான். மாணவர்கள் நிறைந்த நகரம் என்பதுதான் காரணம். அவர்களுள் ஓர் அந்நியனாக நான் இருக்கிறேன். ஐஸ்க்ரீமே பிடிப்பதில்லை. உடல்நிலை ஒத்துக்கொள்ளாது என்பது பிரதான காரணம் அல்ல. உண்மையில் ஐஸ்க்ரீம் பிடிக்கவில்லை. சமீபத்தில் நண்பனின் பிறந்தநாள் விழாவில் ஓரியோ ஐஸ்க்ரீம் கேக் சாப்பிட்டேன். ஆனால் அவ்வளவு உவப்பாக இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு விதிவிலக்கு இருக்குமல்லவா? இவ்வுலகத்திலே எனக்கு பிடித்தது நேட்சுரல் ஐஸ்க்ரீம்தான். மும்பையில் துவங்கப்பட்ட இந்தக் கடை இன்று இந்தியா முழுவதும் விரிந்திருக்கிறது. சென்னையில் திருவல்லிக்கேணியில் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். சென்றதில்லை. பூனேயில் இருந்தபோது அடிக்கடி சாப்பிடுவேன். நண்பர்கள் ஒன்றுகூடினால் அங்கே கண்டிப்பாக நேட்சுரல் ஐஸ்க்ரீம் இருப்பதாய் பார்த்துக்கொள்வோம். நேட்சுரல் ஐஸ்க்ரீம் பெயருக்கேற்றார் போல செயற்கையான எதுவும் சேர்க்காமல் தயாரிப்பார்கள். உதாரணமாக மாம்பழச் சுவையில் ஐஸ்க்ரீம் செய்கிறார்கள் என்றால் மாம்பழத்தை கூழாக்கி ஐஸ்க்ரீமில் கலந்திருப்பார்கள். ஏதோ அதிசயம் நிகழ்வது போல அந்த ஐஸ்க்ரீம் சாப்பிடும்போது மட்டும் எனக்கு எப்போதும் வரும் சைனஸ் பிரச்சனை வருவதில்லை. இளநீர் சுவையில் தயாரிக்கப்படும் நேட்சுரல் ஐஸ்க்ரீம் எனக்கு உயிர். அமிர்தம் என்பது நேட்சுரல் ஐஸ்க்ரீம் கடையில் கிடைக்கும் இளநீர் ஐஸ்க்ரீம் மாதிரிதான் இருக்கும் என்பது என் அபிமானம்.
இவ்வளவு எழுதிய பிறகும் இன்னொன்றையும் சொல்லத் தோன்றுகிறது: உணமையில் உணவின் மேல் எனக்கு எந்தப் பிணைப்பும் இல்லை. எந்த உணவு கிடைத்தாலும் சாப்பிட்டுக் கொள்வேன். அருணாச்சல பிரதேசத்தில் மூன்று மாதங்கள் இருந்த சமயம் மூங்கில் குருத்துகளையும் காட்டு கீரைகளையும்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என்றாவது காட்டு மாடு கிடைக்கும். அருணாச்சல பிரதேச அனுபவங்களை பற்றி எழுதும் போது இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுகிறேன். பிணைப்பு இல்லை என்றாலும் கிடைக்கும் உணவை கொண்டாடிச் சாப்பிடுவேன். சாப்பிடும் போது சிலரை கவனித்திருக்கிறேன், மண்ணை வாரி சாப்பிடுவது போல முகத்தை வைத்திருப்பார்கள். அது உணவுக்கும் உணவை சமைப்பவர்களுக்கும் செய்யும் பெரும் அவமரியாதை என்றே கருதுகிறேன்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
- இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
- கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
- ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
- பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
- வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
- Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
- இசை நாடகங்களும் படங்களும் – வளன்
- கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
- அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
- கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
- சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
- பெண்களுடனான உரையாடல்- வளன்
- புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
- ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
- மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
- Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
- Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
- தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
- இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
- வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
- ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
- மூன்று இசை தேவதைகள் - வளன்
- 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்