தீராத பாதைகள்

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான செய்தி ஒன்றில் குரல்கொடுத்து, தேவையில்லாத மனவுளைச்சல்ளுக்கு ஆளாகி வேதனையுற்றேன். நண்பன் ஒருவனுக்கு பதில் எழுதி இரண்டு நாள் தூக்கமின்றி தவித்தேன். அவனை கண்டும் காணாதது போல சென்றிருக்கலாம். ஆனால் எனக்கிருக்கும் சிந்திக்க தெரிந்த நண்பர்களில் ஒருவன் அவன் என்பதால் பதிலளிக்க வேண்டியதாகிவிட்டது. சிந்தனையாளர்கள் எதையாவது உளறும்போதுதான் மனது வலிக்கிறது. அதுவும் அந்நிய நிலத்தில் இருந்துகொண்டு என் சொந்த நாட்டை பார்க்கும் பொழுதெல்லாம் ரத்தக்கண்ணீர் வருகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டட்க்ஹன் நிமித்தம் நடந்தேறிய சம்பவங்கள் அனைத்தும் இந்தியாவின் ஆன்மாவை நிலைகுலையச்  செய்தது. ராமர் கோவில் கட்டலாம் என்று வந்த தீர்ப்பே  அபத்தமானது! வேறுவழியின்றி, அதை பொருத்துக் கொண்டோம். அவசர அவசரமாக ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்ட கொரோனா பேரிடர் காலத்தில் இது தேவைதானா?

அதிகாரம் எதையும் செய்யும் துணிச்சலை அவர்களுக்கு கொடுத்துள்ளது. நிகழ்த்தினார்கள். அதன் தொடர்ச்சியாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் ஆதாரம் இல்லாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.  பாபர் மசூதி மீதான சமீபத்திய தீர்ப்பாகட்டும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் ஒருத்தியின் மரணத்தையொட்டி நடைபெறும் அரசியல் களேபரங்களை பார்க்கும்போது நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருப்பதாகவே தோன்றுகிறது. வல்லரசு கனவுகள் போன்ற போலியான பிம்பத்தை நமக்கு ஏற்படுத்திவிட்டு ஒட்டு மொத்த தேசத்தையும் நாசமாக்கி கொண்டிருக்கிறார்கள். பிரச்சனைகளின் துவக்கத்தை ஆராயாமல் நாம் எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும் அவை வெற்றுக் கூச்சலாக  மட்டுமே இருக்கும்.

சுதந்திரத்தை பற்றிய நம்முடைய புரிதல் அடிப்படையிலே தவறாக இருக்கிறது. இதற்கும் இப்போது நடக்கும் அரசியலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்றால் உள்ளது. நாம் விரும்பியதையெல்லாம் செய்வது சுதந்திரம் அல்ல. சுதந்திரம் என்பது சரியானதைச் செய்வது. சரியான ஒன்றை செய்யும் போது பொறுப்புணர்ச்சியும் சுதந்திரத்துடன் சேர்ந்துக் கொள்ளும். இதை ஏன் எழுதுகிறேன் என்றால் சமீபத்திய அரசியல் செயல்பாடுகளைப் பார்க்கும் போது ஏதோ முதலாம் உலக நாடுகளின் முன்மாதிரியை நம் அரசியல்வாதிகள் பின்பற்றுவதாகத் தோன்றுகிறது. பலருக்கும் இது வசீகரமாக இருக்கலாம். ஆனால் நான் மேற்சொன்ன அடிப்படையான விஷயத்தை பின்பற்றாமல் இப்படியான அபத்தங்களில் ஈடுபடுவது நம்மை இன்னும் ஐம்பது ஆண்டுகள் பின்னுக்கு இழுத்துச்செல்லும்.

ஆனந்த் பட்டவர்த்தனின் ஆவணப்படங்களை நான் தத்துவவியல் படிக்கும்போது பார்த்தேன். அவருடைய மிக முக்கியமான மூன்று படங்கள்: ‘ஜெய்பீம் காம்ரேட்’, ‘ராம் கீ நாம்’, ‘ஃபாதர் சன் அண்ட் ஹோலி வார்’.

பூனேவில் நான் படித்துக் கொண்டிருந்த சமயம் மாமன்னர் சிவாஜியின் பிறந்த நாளை உணர்ச்சிப்பொங்க கொண்டாடியதைக் கவனித்தேன். முதலில் பார்க்கும் யாவருக்கும் கலாச்சாரத் திருவிழாவாக இது தோன்றும். தவறொன்றுமில்லை. ஆனால் மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடும்போது எதிர்க்க வேண்டியதாகிறது. சிவாஜி ஜெயந்தி சமயம் பூனேவின் பேருந்துகளில் பயணம் செய்தால் நான் உங்களுக்குச் சொல்ல வருவது புரியும். காவி ரிப்பனை தலையில் கட்டிக்கொண்டு பேருந்தில் கும்பலாக ஏறுபவர்கள் சத்தமாக சிவாஜி துதிபாடுவார்கள். காது கிழியும் அளவிற்கு சத்தமாக கத்துவார்கள். பேருந்தின் நடத்துனர் எதுவும் நடக்காதது போல அமைதி காப்பார். இப்போது நான் மேலே சொன்ன சுதந்திரம் பற்றிய கருத்துகளை இங்கே பொருத்திப் பாருங்கள். கொண்டாட்டம் என்ற வரைமுறையை மீறி பொது மக்களுக்கு இடையூறு செய்கிறோம் என்பதை உணராததால் வரும் நிலைதான் இந்த துதிபாடல். கொடுமை என்னவென்றால் இப்படி செய்வது public nuisance என்பது இங்கே யாருக்குமே தெரிவதில்லை. மீண்டும் நான் அமெரிக்காவை உதாரணம் காட்டுவதை பொறுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நான் இங்கே சுதந்திரத்தை மக்கள் சரியான முறையில் கடைபிடிப்பதை பார்க்கிறேன். அதனால் ஏற்படும் வளர்ச்சியை பார்க்கிறேன்.

ஆனால், நம்மவர்கள் வெறும் பொருளாதார வளர்ச்சியின் மாதிரியை மட்டும் எடுத்துக்கொள்கிறார்கள். அமெரிக்காவில் ஓட்டுனர்கள் பேருந்தை இயக்க ஆரம்பிக்கும் முன் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து மிகவும் பணிவாக நம்முடைய செல்போன்களை குறைவான ஒலியில் வைத்துக்கொள்ள பணிக்கிறார்கள். குறைவான ஒலி எது என்பதை எப்படி யூகிப்பது? நமக்கு அடுத்திருப்பவருக்கு நம் செல்போனின் ஒலி கேட்குமானால் ஒலியை குறைத்து வைக்க வேண்டும். நம் செல்போனின் ஒலி ஓட்டுனருக்கு கேட்டால் மிக அதிகமான சத்தத்தில்  ஒலிக்கிறது என்று பொருள். இதெல்லாம் பள்ளிகளில் கற்றுத்தரப்பட வேண்டும். இவை அறிவுசார் விஷயங்கள் அல்ல. இது இல்லாமல் போகும் போது வரலாறு மறைக்கப்பட்டு உணர்வுகளின் மீது போலியான பிம்பங்கள் கட்டியமைக்கப்படுகின்றன. இதையே ஆனந்தின் ஆவணப்படமான ‘ஃபாதர் சன் அண்ட் ஹோலி வார்’ அலசுகிறது. நாம் வணங்குவதற்கு ஏதேனும் புனித பிம்பங்கள் வேண்டுமானதாக இருக்கிறது. எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒன்றை புனிதப்படுத்துவதால் நம்மை விட்டு அது விலகியிருக்க துவங்குகிறது. அவ்வாறு விலகியிருப்பதால் பெரும்பாலும் அவை  சீரழிக்கப்படுகிறது. ஆனந்தின் இப்படத்தில் கணவனை இழந்த ஒரு பெண் உடன்கட்டை ஏறும் போது அவளது உறவினர்கள் அவளை தெய்வத்திற்கு இணையாக போற்றுவது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. தெரிந்தோ தெரியாமலோ நாம் அதே தவறை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இதை  உணர்ந்திருந்தால் உத்திர பிரதேசத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை நடந்திருக்காது. நம்மில் பலரும் வடமாநிலங்களில்தான் அவ்வாறான வன்முறைகள் நடைபெறுகிறது என்று சமாதானம் செய்துகொள்வோம். உண்மையில் ஒவ்வொரு நாளும் எல்லா இடத்திலும் பெண்களின் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதே நிதர்சனம். பாலியல் கொடுமைக்கு ஆளாகி இறப்பு நேராமல் இருக்கலாம் ஆனால் அதற்கு இணையான எவ்வளவோ கொடுமைகள் நடந்தேறுகின்றன. சமீபத்தில் என்னிடம் பேசிய ஒரு பெண் கூறியது அதிர்ச்சியாக இருந்தது. அக்குடும்பத்தை நான் நன்கறிவேன். அவளது தந்தை ஊர் போற்றும் உத்தமர். ஆனால் தன் மகளை கெட்ட வார்த்தையில்தான் திட்டுவாராம். நமக்குள் மாற்றம் நிகழாமல் சமுதாயம் மாற வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். ‘ஃபாதர் சன் அண்ட் ஹோலி வார்’ இதன் சாரத்தைதான் அழுத்தமாக சொல்கிறது.

ஆனந்த பட்டவர்த்தனின் எல்லா படங்களை பார்க்க முடியாவிட்டாலும் ‘ராம் கீ நாம்’ படத்தை மட்டுமாவது பார்த்துவிடுங்கள். ஹிந்தி தெரியாவிட்டாலும் பரவாயில்லை, எல்லா வசனங்களும் ஆங்கிலத்தில் subtitle ஆக வரும். ஏன் இது அவ்வளவு முக்கிய ஆவணப்படமா? இன்று பாபர் மசூதி தொடர்பாக மாபெரும் இருட்டடிப்புச் செய்யும் அதிகார வர்கம் எப்படியெல்லாம் அதற்கான திட்டம் தீட்டினார்கள், அவர்கள் செய்த களப்பணி என்ன போன்ற அத்தனையையும் ஆராய்கிறது. பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன் அத்வானி அவர்கள் செய்த ரதயாத்திரை பல்லாயிரம் இந்துக்களின் உணர்வெழச் செய்தது என்று கருதுகிறோம். ஆனால் உண்மையில் அவர்கள் யாவருக்கும் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே இருந்தது. இவை யாவையும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தியா என்னும் நாட்டின் ஆன்மா அதன் பல்வேறு வகையான கலாச்சாரத்தில்தான் வாழ்கிறது. இதற்கு புறம்பான ஓர் அரசியலை நிலை நிறுத்துவதைத்தான் இப்போதைய ஆளும் வர்கம் தொடர்ந்து செய்து வருகிறது. எங்களிடம் இவர்கள் நெருங்க முடியாது. இது பெரியார் மண். இது பகுத்தறிவு பூமி என்றெல்லாம் நாம் பெருமை பேசிக்கொண்டிருக்க முடியாது. கொஞ்சம் கண்களை திறந்து வைத்து கவனித்தால் நான் சொல்ல வருவதன் உண்மை புரியும்.  1532ல் வெளியான நிக்கலோ மக்கிவெளியின் ‘த பிரின்ஸ்’ என்ற புத்தகத்தில் மக்களை அமைதியில் வைத்திருக்கக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாக ஆளும் வர்கத்திற்கு சொல்லிக் கொடுக்கிறது. இதை உணர்ந்திருந்தால்தான் நாம் இவர்களை சரியாக எதிர்கொள்ள முடியும்.

‘ராம் கீ நாம்’ படத்தில் பல்வேறு காட்சிகள் நம்மை உறைய வைத்துவிடும். பாபர் மசூதி இடிக்கப்படுவது படமாகியிருக்கிறது. மசூதி இடிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பல்வேறு இந்து சந்நியாசிகள் அயோத்தியாவுக்கு வருகிறார்கள். அந்நகரமே பரபரப்படைகிறது. அங்கு வரும் ஒரு சந்நியாசியிடம் ராமரின் ஜென்ம பூமி குறித்தும் மசூதி குறித்தும் ஆவணப்பட குழு கருத்து கேட்கிறது. அவர் அவை இரண்டும் ஒன்றாக இருப்பதில் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார். உங்களுக்கு எதுவும் இதனால் பிரச்சனையிருக்கிறதா என்று திரும்பித் திரும்பி கேட்கப்படுகிறது. அவரும் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்கிறார். கடைசியில் தனக்கு இருக்கும் ஒரே பிரச்சனை தன் மூக்கு கண்ணாடி உடைந்துவிட்டது என்பதுதான் என்று சொல்லி அது இல்லாமல் தன்னால் எதையும் தெளிவாக பார்க்க முடியவில்லை என்கிறார். நான் பார்த்து வளர்ந்த இந்தியா இந்த சந்நியாசியை போல கள்ளமற்றதாகதான் இருந்தது. இன்றும் அப்படிதான் இருக்கிறது. ஆனால் முக்கியமான ஏதோ ஒன்றை இழந்துவிட்டு அமைதியின்றி தவிக்கிறது. இழந்த ஒன்றை மீட்க ஆனந்த் பட்டவர்த்தன் போன்றவர்கள் ஆவணப்படுத்தியதை மீள்பார்வை செய்வது மிகவும் தேவையானதாக இருக்கிறது. நரகம் என்றால் எவ்வித எதிர்நோக்குகள் (Hope) இன்றி வாழ்வது. நம்மையும் இவர்கள் அந்நிலைக்கு உந்தித் தள்ளுவதாக தோன்றுகிறது. இது நாம் விழிக்க வேண்டிய நேரம்.

நாம் அனைவருக்கும் களத்தில் இறங்கி போராடுவதன் தேவை தெரியும் இருப்பினும் ஆனந்தின் ஆவணப்படங்களை பார்ப்பதும் அவசியமான ஒன்றாகப்படுகிறது. இம்மாபெரும் வரலாற்று இருட்டடிப்பை பற்றி மனுஷ்ய புத்திரன் எழுதிய கவிதையை தமிழ் தெரிந்த அனைவரும் வாசிக்க வேண்டும். முடிந்தால் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். இதோ அக்கவிதை:

மாயமாய் மறைந்த மசூதி

………………………………………………………………

பாபர் மசூதி என்பது

ஒரு வழிபாட்டுத்தலம் என்று

நினைத்துக்கொண்டிருந்தீர்கள்

 

இல்லை அது

யாருடைய கையிலோ இருந்த

மதுக்கிண்ணம்

தற்செயலாக கைதவறி கீழேவிழுந்து

உடைந்து விட்டது

 

பாபர் மசூதி என்பது

உறுதியான ஒரு பழங்கால கட்டிடம்

என்று சொல்லபட்டது

இல்லை அது யாரோ

கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்

அது யார் கையிலோ மோதி

சிதறி விட்டது

 

இருபத்தெட்டு ஆண்டுகள்

நீண்ட விசாரணைக்குப்பின்

இந்த உண்மைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன

 

வழங்கும் நீதிகளில்

ஒரு தொடர்ச்சி இருக்கிறது

ஒரு கட்டுக்கதையின்

ஒவ்வொரு அத்தியாயமும்

எந்தக்குழப்பமும் இல்லாமல்

தெளிவாக எழுதப்படுகிறது

 

எதுவும் திட்டமிடப்படவில்லை

எல்லாமே தற்செயலாக நடக்கின்றன

குழந்தைகள் கட்டிய மணல்வீடு

ஒரு காற்றில் கலைவதுபோல

பாபர் மசூதி கலைந்து விட்டது

 

அந்த ஸ்தூபியின் மீது ஏறி நிற்பவர்கள் யார்?

அது ஒரு க்ராஃபிக்ஸ் காட்சியாக இருக்கக்கூடும்

கேமிராக்கள் முன்

’இதற்காக பெருமைப்படுகிறோம்’ என

முழங்கியவர்கள் யார்?

அது ஒரு திரைப்படக் காட்சியே தவிர

உண்மையல்ல

 

திட்டமிடப்பபடாமல்தான்

ரத ஊர்வலங்கள் நாடு முழுக்கச் சென்றன

திட்டமிடப்படாமல்தான்

ஒன்றரை இலட்சம் பேர்

மசூதியின் முன் திரண்டார்கள்

திட்டமிடப்படாமல்தான்

சக்திவாய்ந்த கடப்பாறைகள்

காற்றில் எங்கோ தானாக வந்து சேர்ந்தன

திட்டமிடப்படாமல்தான்

தலைவர்கள் வெறியூட்டும் உரைகளை நிகழ்த்தினார்கள்

திட்டமிடப்படாமல்தான்

அங்கு ஐநூறு ஆண்டுகள் இருந்த ஒரு மசூதி

காற்றில் மாயமாய் மறைந்துவிட்டது

திட்டமிடப்படாமல்தான்

நாடெங்கும் கலவரங்கள் வெடித்தன

திட்டமிடப்படாமல்த்தான்

சூலாயுதங்களில் ரத்தம் பெருகியது

திட்டமிடப்படாமல்தான்

குண்டுகள் வெடித்தன

திட்டமிடபடப்படாமல்தான்

ஒரு காவிநிற பேரசு

அந்த இடிபாடுகளின்மீது எழுந்தது

 

நீங்கள் திட்டமிடாமல் ஒரு கொலை செய்யலாம்

நீங்கள் திட்டமிடாமல் ஒரு வீட்டை உடைக்கலாம்

நீங்கள் திட்டமிடாமல்  ஒரு நகரத்தை எரிக்கலாம்

நீங்கள் திட்டமிடாமல் ஒரு மதத்தினரை அகதிகளாக்கலாம்

நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள்

நீங்கள் இந்த தேசத்தை ஆள்வீர்கள்

 

கூட்டு மனசாட்சியின் பெயரால்

நிரபராதிகளை தூக்கிலிடலாம்

கூட்டு மனசாட்சியின் பெயரால்

குற்றவாளிகளை நிரபராதிகளாக்கலாம்

கூட்டு மனசாட்சியின் பெயரால்

ஆலயங்களைத் தகர்க்கலாம்

கூட்டு மனசாட்சியின் பெயரால்

அதன் மேல் வேறு ஆலயங்களைக் கட்டலாம்

 

புனித யுத்தத்தில்

படைகளை வழி நடத்தியவர்களே

அவர்களை தடுத்தார்கள் என

தீர்ப்புகள் எழுதப்படுகின்றன

 

மேல் முறையீட்டில்

இன்னும் சில தீர்ப்புகள் வர இருக்கின்றன

அங்கு மசூதி என்று எதுவும் இருக்கவில்லை எனவும்

அவை இடிக்கப்படுகிற காட்சிகள் அனைத்தும்

மாயாவிகள் உருவாக்கிய

மாயத்தோற்றங்கள் எனவும்

அங்கு பறந்தவை எல்லாம்

காவிக்கொடிகள் அல்ல

சமாதானத்தின் வெள்ளைக்கொடிகள் எனவும்

 

இன்னொரு முறை உரத்து முழங்குங்கள்

ஒரு நாடு

ஒரே மதம்

ஒரே நீதி

– மனுஷ்ய புத்திரன்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
  2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
  3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
  4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
  5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
  6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
  7. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
  8. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
  9. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
  10. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
  11. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
  12. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
  13. பெண்களுடனான உரையாடல்- வளன்
  14. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
  15. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
  16. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
  17. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
  18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
  19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
  20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
  21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
  22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
  23. மூன்று இசை தேவதைகள் - வளன்
  24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்