வியட்நாமியர்களின் உணவு விருந்து குறித்து எழுதிய சமயம், ஒரு முக்கியமான உணவைக் குறித்துச் சொல்ல மறந்துவிட்டேன். ஒரு வகையான கடல் பாசியை, உணவாக எடுத்துக் கொண்டார்கள். சாப்பிடுவதற்கு இனிப்பாக இருந்தது. பொதுவாக, இனிப்புகளை நான் விரும்புவதில்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. இனிப்பு உணவுகள் இளஞ்சூடாக இருந்தால் சாப்பிடுவேன். இருட்டுக்கடை அல்வாவை இளஞ்சூட்டில் சாப்பிட்டு பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும். அதே போல என் அம்மா செய்யும் கேசரியும், அசோகா அல்வாவும் தேவாமிர்தமாக இருக்கும். எல்லோரும் திருவையாறு ஆண்டவர் கடை அசோகா அல்வாவை உலகப் புகழ் பெற்றது என சொல்வார்கள். ஆனால், என் அம்மா செய்யும் பக்குவம் உலகில் எங்குமேயில்லை என்று உறுதியாக சொல்வேன். காரணம், எங்கள் வீட்டில் தூய பசும் நெய் கிடைக்கும். மிகவும் சிரத்தை எடுத்து நெய் காய்ச்சுவார்கள். மற்ற எல்லா இடங்களிலும் நெய்யில் கலப்படம் செய்வார்கள். வீட்டில்  காய்ச்சும் போது வீடே மணக்கும். இப்போது பல்லாயிரம் மைல் தூரம் கடந்து வந்தாலும் நெய் காய்ச்சும் மணத்தை உணர முடிகிறது.

கொரோனா பரவுவதற்கு கொஞ்சம் முன்னர் தான் நான் சமையல் பழக ஆரம்பித்தேன். கடந்த ஆறு மாதங்களாக, நானே என் சமையலை பார்த்துக்கொண்டேன். சமைக்க ஆரம்பித்தவுடன் ஒரு விஷயம் புலப்பட்டது: பெண்கள் சமைக்கும் வீட்டில் ஒரு பெண் ஒரு நாளில் பாதிப்பொழுதைச் சமையலுக்கு செலவிடுகிறாள். சமையல் என்றாலே அடுத்து என்ன சமைக்கலாம் என்ற திட்டமிடல் தொடங்கி சமைத்த பாத்திரங்களை கழுவி முடிக்கும் வரை உள்ள அத்தனை நிகழ்வுகளும் அடக்கம். சமையல் என்பதை ஏன் கலை வடிவமாக பார்க்கிறார்கள் என்பதை இந்த ஆறு மாத காலத்தில் புரிந்துகொண்டேன். தொடக்கத்தில் உப்பையும் இதர மசால் பொருட்களையும் கையாளும் போது ஏதோ ஒரு தூண்டலில் எல்லாவற்றையும் கட்டுபாடில்லாமல் பயன்படுத்த தொடங்கினேன். பிறகு அதை எந்தளவு பயன்படுத்த வேண்டும் என்ற பக்குவம் வந்தது. இன்று என் சமையல் பிரமாதமாக இருக்கிறது என்று பலரும் பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்கள். எனக்குமே என் கை பக்குவம் ருசியாக இருப்பதாகதான் தோன்றுகிறது.

அமெரிக்கா வந்த முதல் ஆண்டு என்னுடன் இருக்கும் ஒரேயொரு தமிழ் நண்பனைத் தவிர வேறு யாரிடமும் நேரடியாக தமிழ் பேசியதாக நினைவில் இல்லை. தாய்மொழி பற்றினால் இதைச் சொல்லவில்லை. ஆனால் நம்மவர்களை போன்ற சிடுமூஞ்சிகளை நான் எங்குமே பார்த்ததில்லை. என் முதல் அமெரிக்க பயணம் டெல்லியிலிருந்து நியூயார்க் வரை பதினைந்து மணி நேரம் பிடித்தது. பதினைந்து மணி நேரமும் மௌன விரதம்தான். ஒன்று இப்படி பேசாமல் வதைக்கிறார்கள் இல்லையென்றால் இன்னொரு கொடூரம் நிகழும். கும்பகோணத்தில் ஒருமுறை பேருந்தில் பயணம் செய்த பொழுது ஒரு பெரியவர் நான் என்ன ஜாதி என்று வெளிப்படையாகவே கேட்டார். அதுமட்டுமல்ல நான் அவருக்கு பதிலளிக்காததால் அவராகவே நான் இந்த ஜனங்களாகதான் இருப்பேன் என்று நினைத்துக்கொண்டு லொடலொடவென ஏதோ அபத்தமாக பேசிக்கொண்டு வந்தார்.

நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணித்தவர்கள் என்றால் வெளிநாடு வாழ் தமிழர்களை பற்றி நான் சொல்வது புரியும். பேசிக்கொள்ளும் இருவரும் தமிழ் என்று தெரிந்த பின்னரும் ஆங்கிலத்திலோ அல்லது தமிழ் அல்லாத வேறொரு மொழியிலோ உரையாடல் தொடரும். இதைப் பற்றி ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார் தாய்மொழியில் பேசினால் உடனே தலையில் ஏறி அமர்ந்துகொள்கிறார்களாம். தனது பையிலிருந்து ஒற்றை டாலர் வெளிவராதவாறு எல்லா செலவையும் பேச்சுக் கொடுத்தவரையே கட்ட வைத்துவிடுகிறார்களாம். எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் இப்படி தமிழர்களுக்கு தமிழர் நம்பிக்கை இல்லாமல் அந்நிய நிலத்தில் வாழ்வது நரகத்துக்கு சமம். என் முதல் வருடத்தில் எந்த தமிழரையும் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதனாலே இந்திய உணவுகளின் சுவை முதல் வருடத்தில் மறக்கும் அளவுக்கு அமெரிக்க உணவுகளில் மூழ்கியிருந்தேன்.

என்னுடைய முதல் அமெரிக்க உணவு Subway சான்ட்விச். ஓரடி உருளை பன்னில் துருவிய மாட்டிறைச்சி, பெப்பரோனி, துருவிய பாலாடைக்கட்டி, வெங்காயம், தக்காளி, ஆலிவ் காய்கள் என்று அடுக்கித் தருவார்கள். உங்களுக்கு விருப்பமான இறைச்சியை தேர்வுசெய்து கொள்ளலாம். இதெல்லாம் இப்போது சென்னையிலே வந்துவிட்டது. ஆனால் சென்னையிலும் அமெரிக்காவிலும் ஒரே விலை என்பதுதான் நெருடலாக இருக்கிறது. என் விருப்பமான அமெரிக்க உணவை குறித்துதான் எழுதுகிறேன். இதெல்லாம் ஆரோக்கியமானதா என்ற விவாதத்திற்குள் செல்ல விரும்பவில்லை.

இப்போதெல்லாம் நம்மூர்களில் எப்படி நம்மவர்கள் பிரியாணிக்கு பழகி கொண்டார்களோ அப்படி அமெரிக்காவில் பீட்சாவுக்கு அடிமையாகிவிட்டார்கள். இருவர், மூவரென ஓரிடத்தில் கூடினால் பீட்சா இல்லாமல் அந்த சந்திப்பு நிறைவு பெறாது. குழந்தைகளை கோவிலுக்கு வர வைக்க பிராத்தனையுடன் பீட்சா என்ற முறையை பல கோவில்களில் பின்பற்றுகிறார்கள். அமெரிக்காவுக்கு என்று பிரத்யேக உணவென்று ஒன்றுமில்லை, பல்வேறு நாட்டின் உணவுகளை தங்களது உணவாக மாற்றிக்கொண்டார்கள். அதிலும் இத்தாலியர்களின் உணவு எங்கள் ஊர்காரர்களுக்கு மிகவும் பிடிக்கும். பீட்சா இத்தாலியர்களின் உணவே. சீஸ் பீட்சா ஓர் அடித்தளம். அதன் மேல் மற்ற உணவுகளை சேர்க்கச் சேர்க்க பீட்சாவின் சுவையின் தரமும் கூடிக்கொண்டே போகிறது. ரொம்பவும் விசித்திரமாக இருந்தது எதுவெனில், பீட்சாவின் மேல் ஹாம் மற்றும் அன்னாசிபழம் இருந்ததே. பீட்சாவை பொருத்தவரை என்றென்றைக்கும் நான் உள்ளூர் உணவகங்களில் தயாரிக்கப்படும் பீட்சாவையே பெரிதும் விரும்புவேன். பாஸ்டனில் என் முதல் தேர்வு ரெஜினா பீட்சா. 1926ல் தொடங்கப்பட்டு இன்னும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தரமான பீட்சா அதன் க்ரஸ்ட் என்னும் ரொட்டி மற்றும் சேர்க்கப்படும் சீஸ் பொருத்து அமைகிறது. ரெஜினா பீட்சாவில் நான் பெரிதும் விரும்புவது ஆன்சோவி (Anchovy) தூவப்பட்ட பீட்சா. ஆன்சோவி என்பது ஒரு சிறிய வகை மீன். குடைமிளகாய் சமைக்கப்படாத வெங்காயம், காளான் இவற்றுடன் ஆன்சோவி தூவிய பீட்சா… எழுதும்போதே வாயில் எச்சில் ஊறுகிறது. ரெஜினா பீட்சாவுக்கு அடுத்தபடியாக பாஸ்டனில் நான் விரும்புவது பாப்பா ஜீனோ பீட்சா. இதில் என் தேர்வு கறி உருண்டைகள் சேர்க்கப்பட்ட பீட்சா.

ஏற்கனவே சொன்னதுபோல எனக்கு இனிப்பு உணவுகள் அவ்வளவாக பிடிக்காது. ஆனால், பெரும்பாலும் இங்கே காலை உணவு இனிப்பாகவே இருக்கும். கடும்பசியில் இனிப்பான உணவை எடுத்தால் ஒருமாதிரியாக குமட்டிக்கொண்டு வரும். சீரியல்ஸ் எப்போதாவது எடுத்துக்கொள்வேன். முட்டை இருந்தால் சாப்பிடுவேன். பின் வகுப்புகள் தொடங்கும் முன் ஸ்டாராங்கான காஃபி. அவ்வளவுதான். என் நண்பர்கள் பலருக்கும் இனிப்பு உணவுகள் பிடிக்கும். அதிலும் டோனட் வைத்துவிட்டால் பெரும் கொண்டாட்டம்தான் அவர்களுக்கு. எவ்வளவோ நானும் என் நண்பர்களும் முயன்று பார்த்துவிட்டோம். டோனடை எனக்கு பிடிக்கவில்லை. டோனட் வைக்கும் போதெல்லாம் கட்டாய விரதம் இருக்க ஆரம்பித்துவிட்டேன். இந்தியா வர ஆசைப்படும் என் அமெரிக்க நண்பர்கள் உணவைக் குறித்து மிகவும் வருத்தப்படுவார்கள். அவர்களிடம் டங்கின் டோனட்ஸ் முதற்கொண்டு அத்தனை அமெரிக்க உணவகங்களும் இந்தியாவில் இருக்கிறது என்று சொன்ன பிறகு நிம்மதியடைவார்கள். இன்று உலகம் முழுவதும் கிளை பரப்பியிருக்கும் டங்கின் டோனட்ஸ் ஆரம்பிக்கப்பட்டது பாஸ்டன் அருகில் உள்ள க்வின்ஸி என்னும் இடத்தில். டோனட்ஸ் மீது அப்படியென்ன தீராத மோகமென்று எனக்கு புரியவில்லை. என்னை விருந்துக்கு அழைக்கும் வீடுகளில் குழந்தைகள் அல்லது பதின்பருவத்தினர் இருந்தால் ஒரு டஜன் டோனட்ஸ் வாங்கிச் சென்றுவிடுவேன். அதன்பிறகு என்னை ஏதோ தேவதூதனைப் போல் கவனித்துக்கொள்வார்கள்.

இன்னொரு ஆச்சரியமான விஷயமாக நான் பார்த்தது அமெரிக்கர்களிடம் இருக்கும் உணவு ஒவ்வாமை. வித்தியாசமான ஒவ்வாமைகளால் அவதியுறுகிறார்கள். சிலருக்கு நிலக்கடலை ஒவ்வாமை அல்லது பருப்பு வகைகள் அனைத்துமே ஒவ்வாமை. ஒவ்வாமை என்றால் அதிலும் இரண்டு வகைகள் இருக்கிறது: தீவிர ஒவ்வாமை மற்றும் மிதமான ஒவ்வாமை. தீவிர ஒவ்வாமை உள்ளவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உதாரணமாக நிலக்கடலை இட்ட ஒரு பொருளை அவர்கள் உண்ணாவிட்டாலும் அதன் வாசனை பட்டாலே போதும் மிகத் தீவிரமாக பாதிப்புக்குள்ளாவர். சிலருக்கு உயிரே போய்விடும். இதேபோல சீஸ் பாலாடைக்கட்டி ஒவ்வாமை, பால் பொருள் சார்ந்த ஒவ்வாமை, கடல் உணவுகள் மீதான ஒவ்வாமை. கடவுள் புண்ணியத்தில் எனக்கு உணவு விஷயத்தில் எந்த ஒவ்வாமையும் இல்லை. புழுதியும் தூசியும்தான் என் எதிரி. என் அப்பாவுக்கு ஒரு வித்தியாசமான ஒவ்வாமை இருக்கிறது. சீயக்காய் ஒவ்வாமை. யாரேனும் எங்கள் வீட்டில் சீயக்காய் தெரியாமல் பயன்படுத்திவிட்டால் அன்று முழுவதும் தும்மிக்கொண்டேயிருப்பார்.

சாப்பாட்டுக்கு திரும்பி வருவோம். விலை மலிவாகவும் ருசியாகவும் கிடைக்கும் மற்றொன்று மெக்ஸிகன் உணவு. அமெரிக்கர்களிடம் அவற்றுக்கு பெரும் வரவேற்பு உண்டு. சீனர்களின் உணவையும் விரும்பி உண்பார்கள். கோடை காலம் ஆரம்பித்துவிட்டால் வீடுகளுக்கு வெளியே பார்பிக்யூ செய்து சாப்பிடுவது இங்கே ஒரு வழக்கம். அக்கம்பக்கத்தவர்களை அழைத்து நிதானமாக இறைச்சியை வாட்டி உண்பார்கள். எனக்கு பார்பிக்யூ செய்து சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். பார்பிக்யூ செய்யும் போது சமைக்கப்படும் இறைச்சி ஒவ்வொரு பதத்திற்கும் ஒரு சுவையை கொடுக்கும். அதை நான்கு வகையாக பிரிப்பார்கள்: rare (அரைவேக்காடு) medium rare (அரைவேக்காட்டுக்கும் கொஞ்சம் அதிகம்) medium (சரியான பதம்) well done (முழுவதும் சமைக்கப்பட்டது). ரேர் என்பதை எப்படி தெரிந்துகொள்ளலாம் என்றால் இறைச்சி பரிமாறிய பிறகு இறைச்சியை அறுத்தால் இறைச்சியில் உள்ள இரத்தம் தண்ணீரை போல வர வேண்டும். சிலருக்கு இப்படி இருந்தால்தான் பிடிக்கும். சமைக்கும் போது இதை எப்படி கண்டுபிடிப்பார்கள் தெரியுமா? உங்கள் இடக்கை கட்டைவிரலின் நுனியையும் ஆட்காட்டி விரலின் நுனியையும் சேர்த்து O வடிவில் வைத்து, கட்டை விரலின் உள்ளங்கை சதையை தொட்டுப்பாருங்கள். அதுதான் ரேர் பதம். அதுவே இறைச்சி அரியும்போது ரத்தம் வரமால் ஒருவித ரோஸ் வண்ணத்தில் கறியின் உட்புறமிருந்தால் அது மீடியம் ரேர். கட்டை விரலின் நுனியை நடுவிரல் நுனியோடு சேர்த்து உள்ளங்கை கட்டைவிரல் சதையை தொடும் பதம். அடுத்துதான் எனக்கு விருப்பமான பதம். இறைச்சியை வெட்டும்போது உள்ளே ரோஸ் வண்ணம் இருக்க கூடாது. அப்போதுதான் வெந்திருக்க வேண்டும். அதுதான் பார்பிக்யூ இறைச்சியின் பதம். மீடியம். கட்டைவிரலின் நுனியும் மோதிர விரலும் இணையும்போது கட்டைவிரல் சதை சற்று இறுகியிருக்கும் பதம். அடுத்து எல்லாம் வெந்து இன்னும் கொஞ்சம் விட்டால் கருகிவிடும் பதம். வெல் டன். இப்போது கட்டைவிரலும் சுண்டுவிரலும் இணைந்தால் வரும் இறுக்கமே இதன் அளவு.

பர்கர் சாப்பிடும்போதும் மேல் சொன்ன மீடியம் பதத்தில் சாப்பிட்டால் நன்றாக இருக்கும். பூனே வருவதற்கு முன்பு வரை பர்கர் எப்படி இருக்கும் என்றுகூடத் தெரியாது. பெரும்பாலும் கொத்திய மாட்டிறைச்சியை பர்கராக செய்வார்கள். பன்றியிறைச்சியிலும் செய்வார்கள். பொறித்த கோழி இறைச்சியில் செய்யும் பர்கரும் இருக்கிறது. அதற்கு பெரிய துண்டு கோழி இறைச்சியை எண்ணெயில் இட்டு பொறித்தெடுக்க வேண்டும். கோழி இறைச்சியை கொத்த கூடாது. Chick- fil-A சிக்கன் பர்கருக்கு நான் அடிமை. இந்தக் கடை இந்தியாவில் எங்கேனும் இருக்கிறதா என்று எனக்கு தெரியப்படுத்துங்கள். இந்த உணவகத்தை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. கிறிஸ்துவ ஒழுக்கங்களை தவறாது கடைபிடிக்கும் ஒரு குடும்பமே Chick-fil-A வை நிர்வகிக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை புனித நாள். அன்று கட்டாயமாக ஓய்ந்திருக்க வேண்டும். மற்ற அலுவல்களில் ஈடுபட்டால் அது பாவமாக கருதப்படும். முன்பெல்லாம் ஞாயிற்றுக் கிழமை என்றாலே முழுஅடைப்பு செய்தது போல இருக்கும். எந்தக் கடைகளும் நிறுவனங்களும் திறந்திருக்காது. எனவே எங்கெல்லாம் Chick-fil-A இருக்கிறதோ ஞாயிற்றுக் கிழமை விடுமுறை. பாஸ்டன் கல்லூரி மாணவர்கள் நிறைந்திருக்கும் நகரம். வார முடிவுகளில் இளசுகள் உணவகங்களை நோக்கிப் படையெடுக்கும். அதுவும் Chick-fil-A வை பற்றி சொல்லவே வேண்டாம். எந்நேரமும் கும்பலாகவே இருக்கும். பலரும் Chick-fil-A சிக்கன் பர்கருக்கு அடிமை. மற்ற உணவகங்களைப் போல காக்க வைக்க மாட்டார்கள். அனைத்தும் துரிதமாக நடக்கும். ஆனால் ஒரே பிரச்சனை ஞாயிறு கடை விடுமுறை. பாஸ்டன் நகர மேயர் Chick-fil-A நிர்வாகத்திடம் பேசி ஞாயிற்றுக் கிழமையும் கடையை திறக்க பேசினார்கள். ஆனால் நிர்வாகமோ தங்கள் மதக்கட்டுப்பாடுகளை மீற முடியாது என்று தெளிவாக மறுத்துவிட்டது. கடுப்பான நகர மேயர் பாஸ்டன் நகருக்குள் கடை நடத்த அனுமதி மறுத்துவிட்டார். எனவே பாஸ்டன் நகருக்குள் Chick-fil-A இருக்காது ஆனால் சரியாக பாஸ்டன் நகரம் முடியும் நான்கு எல்லைகளிலும் இந்த உணவகம் இருக்கிறது.

முதல்முறை Chick-fil-A சென்றபோது எனக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது. அது கடையின் விளம்பரம். Eat more Chicken என்ற வாசகங்களை பசுக்கள் தாங்கி நிற்கும். புரிகிறதா? பர்கருக்காக மாடுகள் கொல்லப்பட்டது போதும், அனைவரும் கோழி இறைச்சி உண்ணுங்கள் என்ற அர்த்தத்தில் விளம்பரபடுத்தப்பட்டிருக்கும். இந்தியாவிலிருந்து வந்த எனக்கு உண்மையில் பேரதிர்ச்சியாக இருந்தது. “ஆஹா! இங்கேயும் நம்ம ஆட்கள் வந்துவிட்டார்களா?” என்று நினைத்தேன். என் அதிர்ச்சிக்கான காரணத்தை என் நண்பர்களிடம் விளக்கிச் சொன்னபோது அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இனியும் இந்தக் கட்டுரையை வளர்க்க விரும்பவில்லை. சிக்கன் பர்கர் என் நினைவை நிறைத்துக் கொண்டது. Chick-fil-A சென்று வந்த பின்னரே அடுத்தக் கட்டுரையை தொடங்க வேண்டும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
 2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
 3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
 4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
 5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
 6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
 7. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
 8. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
 9. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
 10. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
 11. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
 12. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
 13. பெண்களுடனான உரையாடல்- வளன்
 14. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
 15. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
 16. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
 17. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
 18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
 19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
 20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
 21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
 22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
 23. மூன்று இசை தேவதைகள் - வளன்
 24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்