மனக் கொந்தளிப்பு அல்லது அதீத சலிப்பு ஏற்படும் சமயங்களில் திகில் படங்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு இருக்கிறது. தமிழில் வெளியான ஒரு பேய் படம் பார்க்க ஆரம்பித்தேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழ் படங்களே பார்ப்பதில்லை. பத்து மாதங்களுக்கு முன்பு ஒரு தமிழ் படம் பார்த்தேன். அதற்கு முன் எப்போது பார்த்தேன் என்பதே தெரியவில்லை. ஐந்து ஆறு ஆண்டுகளுக்கு முன் அப்படியல்ல, தமிழில் வெளியாகும் அத்தனை படங்களையும் பார்த்துவிடுவேன். பேய் படங்கள் என்றால் எவ்வளவு மொக்கையான படம் என்றாலும் பார்த்துவிடுவேன். ஒரு கட்டத்தில் படங்கள் எதுவும் பார்க்க இல்லை என்றானபின் பழைய பேய் படங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படி தமிழ் பேய் படங்கள் பார்த்துப் பார்த்து பேய் படங்களின் மீதான மரியாதையே இல்லாமல் போய்விட்டது.

பயம் என்ற உணர்ச்சிக்கு தன்னை விருப்ப பூர்வமாக கையளிக்கவே இவ்வகை திகில் படங்களை பார்க்கிறோம் ஆனால் தமிழில் பேய் படங்களுக்கு செலுத்தப்படும் வியூகம் தெரிந்த பின் ஏதோ குடும்ப கதை பேசும் சீரியல் பார்ப்பது போன்ற எண்ணம்தான் வருகிறது. இதைப்பற்றி நண்பர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். கொஞ்சம் தத்துவத்திற்குள் சென்று வருவோம். மார்டீன் ஹைடகர் (Martin Heidegger) என்னும் அறிஞர் ‘வாழ்தல்’ என்னும் செயல்பாட்டை அனுபவங்களின் தொகுப்பாக பார்க்கிறார். ஹைடகரை பொருத்த வரை உலகம் என்பது வாழும் இடமல்ல ஆனால் நாம் மற்றவைகளுடன் ஒரு உறவில் இருப்பது. உதாரணமாக ஆணி என்றொரு பொருள் எப்படி அறிந்துகொள்ளப்படுகிறது? சுத்தியல் – ஆணி – சுவர் – படத்தை மாட்டிவைக்கிறோம். Familiarity with the world என்று சொல்லப்படுகிறது. ஒரு பொருளை நாம் அறிந்திருக்கிறோம் என்று சொன்னால் அது நம்முடன் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பில் (relational) இருக்கிறது. ஹைடகரைவிட எனக்கு அவரது மாணவர் கியோக் கேடமரை (Georg Gadamer) மிகவும் பிடிக்கும். நாம் பார்க்கும் அனைத்துக்கும் பின்னால் ஒரு திரையிருக்கிறது (Horizon). அத்திரைக்கு முன் இருப்பதை மட்டுமே நாம் பார்க்க முடியும் என்கிறார். நம் பார்வை கோணம் 180 டிகிரியில் ஒரு அழகிய இயற்கை காட்சி தெரிகிறது என்றால் வானம் – அதற்கு முன் இருக்கும் மரங்கள் – செடிகள் இப்படி மட்டும்தான் நமக்கு காட்சியாக தெரிகிறது. ஒருவேளை பார்வைக்கு தெரியாத திரை இல்லை என்று கொள்வோம். ஆதனால் வானம் தெரியாது வானத்தின் முன் இருக்கும் மரங்களும் செடிகளும் தெரியாது. நாம் திரும்பும் திசையெங்கும் இந்த 180 டிகிரி மாறிக்கொண்டிருக்கிறது.

இதையே நாம் இயல்பில் காண முடியாத விஷயங்களுக்கு பயன்படுத்தினால் என்னவாகும்? தமிழ் சூழலில் வளர்ந்த நாம் மேற்கத்திய கலாச்சாரத்தை சீரழிவின் கலாச்சாரமாகத்தான் பார்க்க முடியும். மார்டன் உடை உடுத்தும் ஒரு யுவதியை ஆணாதிக்க சமூகத்திலிருந்து வந்த ஒரு இளைஞனால் சாதாரணமாக பார்க்க முடியாது. இதை மாற்ற முடியுமா என்றால் கேடமர் Fusion of Horizon மூலமாக சாத்தியம் என்கிறார். இருவர் வேறு வேறு கலாச்சர பின்புலம் கொண்டவரை உரையாட வைக்கும் போது அங்கு Fusion of Horizon நிகழ்கிறது. இருவருக்கும் பொதுவான ஒரு விஷயத்தை பேச ஆரம்பித்து தனக்கு தெரிந்ததை பிறருக்கு பகிர்வதன் வழியாக ஒருவர் இதுவரை கண்ட 180 டிகிரியை இன்னொருவருக்கு கடத்துகிறார். இவரும் தான் கண்ட 180 டிகிரியை மற்றவருக்கு கடத்துகிறார். 180+180= 360 டிகிரி ஒரு முழுமையான வட்டம். நிறைவை குறிக்கிறது. மேற்கத்திய கலாச்சாரம் சீரழிக்கிறது என்று கத்தாமல் மேற்கத்திய கலாச்சார பின்புலம் கொண்டவருடன் உரையாடுவதன் வழி அதன் நல்லியல்புகளை நாமும் நமது நல்லியல்புகளை அவர்களும் உள்வாங்கிக் கொள்ள முடியும் என்கிறார் கேடமர்.

பேய் கதை பேச வந்து இவ்வளவு பெரிய தத்துவ சரடுக்குள் சிக்கிக்கொண்டோம். நம் பேய் கதைகள் ஒரே கதையைத்தான் திருப்பி திருப்பி சொல்கின்றன. இது என்னை போன்ற ரசிகர்களுக்கு பெரும் சலிப்பை மட்டுமே தருகின்றன.  ‘பழி வாங்க புறப்படும் ஆவி’ இதுமட்டும்தான் நம் தமிழ் சினிமாவின் பேய் கதைகள். அந்த காலத்தில் ஆவி வெள்ளை சேலை கட்டியிருந்தது இப்போது க்ராஃபிக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் சவுண்ட் எபெக்டில் மிரட்டுகிறது அவ்வளவுதான். பின் நவீன யுகமாகிய நம் காலத்தில் பேய்கள் காமெடி செய்கின்றன. இப்போதெல்லாம் பேய் படங்களிலும் காமம் கலந்துவிட்டதாக தெரிகிறது (இது சம்பந்தமாக நண்பர்கள் பரிந்துரைத்த படங்களை உண்மையாகவே இன்னும் பார்க்கவில்லை). அனாலும் பேய் என்பது பழி வாங்கவே வருகிறது. ஏன் பேய் கதைகளில் இவ்வளவு வறட்சி? நமது பேய்கள் ஏன் பழி வாங்க மட்டுமே வர வேண்டும்? பேய்களை ஒரே கோணத்தில் மட்டுமே பார்க்க பழகிவிட்டோம். இதிலிருந்து எப்போது வெளிவரப்போகிறோம்? மேற்சொன்ன தத்தவங்கள் இங்கே புழக்கத்தில் இல்லை. பேய் படம் எடுக்க கற்பனை மிகவும் முக்கியம். கற்பனைகளை வளர்த்தெடுக்க உரையாடல்கள் அவசியமாகிறது. நம் இயக்குனர்கள் கதை அமைப்பதில் எந்தவித சிரமமும் படுவதில்லை அல்லது மேம்போக்காக இருக்கிறார்கள் என்பதை இம்மாதிரியான படங்களில் வரும் மற்ற மதத்தினரின் செயல்பாடுகளை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். இதில் நான் பெரிதும் விரும்பும் மலையாளிகளும் கோட்டை விட்டுவிடுகிறார்கள் (எஸ்ரா (2016) எனக்கு பிடிக்கவில்லை).

ஒரு திகில் படம் எடுக்க கனவு மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். கனவுத் தன்மை இல்லாமல் பேய் படங்கள் சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. பேய் என்பதை நாம் எதிர்கொண்டிருக்கிறோமா? மதங்கள் போதிக்கிறது, சிறு வயது முதல் பேய் கதைகள் கேட்டிருப்போம், பேசியிருப்போம் அதில் கொஞ்சம் கற்பனையை (கனவுத் தன்மை) செலுத்தினாலே பேய் கதையோ திகில் கதையோ தயாராகிவிடும். இத்தொடரில் நான் முன்பொரு முறை எழுதியிருந்த Black Mirror எத்தனை பேர் பார்த்தீர்கள்? அதில் வரும் அதீத கற்பனை கதைகள் யாவரையும் கட்டிப்போட்டுவிடும். Black Museum என்ற கதையை பார்த்தால் நான் சொல்ல வருவது புரியும். Playtest என்றொரு கதை இருக்கிறது. பேய் படம் என்றால் எப்படியிருக்க வேண்டும் என்பதை இதை பார்த்து கற்றுக்கொள்ளலாம். Hated in the Nation என்ற கதையை பார்த்தவர்களுக்கு எந்திரன் 2.0 எப்படி பிடிக்கும்? நம் தமிழ் திகில் படங்களில் இருக்கும் இன்னொரு பெரிய குறை, படத்தின் பயம் தரும் கதாப்பாத்திரங்களுக்கு பின்னிருக்கும் ஒரு அழுவாச்சி ஃப்ளாஷ்பேக். நான் படத்தை பார்க்கும் முன்பாக இந்த பின்கதையை தீர்மானித்துவிட்டு உட்காருவேன். பிறகு எப்படி பயம் வரும்?

பேய் படங்களில் இப்போதெல்லாம் ஹாலிவுட்டும் நம் டெம்பலேட்டுக்குள் விழ ஆரம்பித்துவிட்டதாக தோன்றுகிறது. நான் பார்த்ததில் சிறந்த பேய் படம் என்று நான் கருதுவது The Exorcism of Emily Rose (2005). பேய் பிடித்தல் என்பது இன்றளவும் உலகளவில் கொஞ்சம் பேருக்குத்தான் உண்மையில் நிகழ்கிறது. நூற்றுக்கு தொண்ணூறு அல்லது தொண்ணுற்றைந்து சதவீதம் மனநலன் சார்ந்த பிரச்சனைகள் பேய் பிடித்தலுடன் இணைத்துவிடப்படுகிறது. கத்தோலிக்க கிறிஸ்துவ சமயம் இந்த மாதிரியான அமானுஷ்யங்களை கவனமுடன் அணுகுகிறது. எமிலி ரோஸ் என்னும் சிறுமிக்கு பேய் பிடித்து பேய் ஓட்டும் சடங்கில் இறந்துவிடுகிறாள். பேய் ஓட்டிய ஃபாதர் கைது செய்யப்படுகிறார். எமிலியின் மரணத்திற்கு பின் இருக்கும் மர்மங்கள் நீதி மன்ற விசாரணையின் மூலமாக வெளிவருகிறது. ஒரே கதையை ஆன்மீக ரீதியாகவும் மனநல ரீதியாகவும் இருவேறு தரப்பு விவாதிப்பதுதான் ‘எமிலி ரோஸ்’ படத்தின் மொத்த கதை. நிமிடத்திற்கு நிமிடம் படுபயங்கரமாக இருக்கும்.

திகில் படங்கள் என்று பார்க்க போனால் கொரிய படமான I Saw the Devil படத்தை விருப்பமான படமாக சொல்வேன். பயத்தில் உறைய வைத்த சைக்கோ திரில்லர் படம். அனுராக் காஷ்யப் இயக்கிய ‘ராமன் – ராகவ்’ இன்னொரு அதி பயங்கரமான சைக்கோ திரில்லர். இதையெல்லாம் பார்த்துவிட்டு தமிழில் காவிய நடையில் தனக்குள் சமூதாயத்திற்கான பாடங்களை சுமந்து வரும் ‘பிசாசுகளையும்’ ‘சைக்கோக்களையும்’ பார்க்க முடியவில்லை.

ஹாலிவுட்டில் நான் ரசித்த பல திகில் திரைப்படங்கள் ஸ்டீஃபன் கிங் எழுதியதாக இருந்ததை கவனித்தேன். இன்றும் the best Hollywood Horror movies என்று கூகுளில் தேடினால் The Shinning என்னும் படம் முதல் இடத்தில் இருப்பதை கவனித்திருக்கலாம். ஸ்டான்லி குப்ரிக் இப்படத்தை இயக்கினார். படமாக வருவதற்கு முன்பாக நாவலாக ஸ்டீபன் கிங் எழுதினார். பயம் ஓர் ஆதியுணர்வு. எதுவேண்டுமானாலும் அதை தட்டியெழுப்பும். ‘த ஷைனிங்’ பார்த்தவர்களுக்கு பிடிக்காமல்கூட போயிருக்கும். காரணம் மிகப் பெரிய மிரட்டலான சம்பவங்கள் அப்படத்தில் இல்லை. கோலராடோ மாகாணத்தில் ஸ்டான்லி என்றொரு ஹோட்டல் இருக்கிறது. வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே அது திறந்திருக்கும் மீதி ஆறு மாதங்கள் பனி காரணமாக மூடிப்பட்டிருக்கும். அந்த ஹோட்டலை பராமரிக்க ஒரு எழுத்தாளரின் குடும்பம் அங்கு வருகிறது. இதற்கு மேல் கதையை நான் நேரடியாக சொல்லப்போவதில்லை. பனி பார்க்க எவ்வளவு அழகாக இருக்கும்? ஆனால் பனி பொழிவுள்ள எந்த தேசத்தவருக்கும் ஸ்நோ சிக்னஸ் என்றொரு உளவியல் பிரச்சனையிருக்கிறது. வெண்பனியை மட்டுமே அனுபவித்தவர்களுக்கு இதன் தீவிரம் தெரியும். தனிமை பிடித்துக்கொண்டு ஆளை கொல்லும். இதுதான் ஷைனிங் படத்தில் பயத்தை தருகிறது. எப்படி ஸ்டீஃபன் கிங் இப்படி பயங்கரமான ஒரு கதையை எழுதியிருக்க முடியும்?

ஸ்டீபன் கிங் பிறந்து வளர்ந்தது மெயின் என்னும் வடகிழக்கு மாகாணம். மெயின் வடகிழக்கின் எல்லை. அதற்கு பிறகு கனடா நாடு. மெயின் கோடை காலத்தில் சொர்கமாக இருக்கும். ஆனால் பனிக் காலத்தில் வெகு சிலரே அங்கு வாழ்வார்கள். இதை அனுபவ பூர்வமாக எழுதுகிறேன். நான் மெயின் மாகாணத்தில் பனிக் காலம் தோறும் சென்று வருவேன். திரும்பும் திசையெங்கும் பனியை தவிர வேறொதுவும் இருக்காது. ஆறுகள் உறைந்து ஏதோ அதிய உலகில் நீங்கள் இருப்பதாக உணர வைத்துவிடும். இந்த மாதிரியான பின்புலத்திலிருந்து வந்ததால்தான் ஸ்டீஃபன் கிங் திகில் கதைகளை சர்வ சாதாரணமாக எழுதுகிறார். ஸ்டீஃபனின் நாவல் ஒன்றை மையமாக கொண்டு 1408 என்றொரு படம் பார்த்திருப்பீர்கள். பார்க்கவில்லை என்றால் பார்த்துவிடுங்கள். தனியாக பார்க்க வேண்டாம் அவ்வளவு திகிலாக இருக்கும். சமீபத்தில் வெளியான ‘பெட் சிமெற்றி’ ஸ்டீபனின் கதைதான். இதில் வரும் அமானுஷ்யங்கள் நிறைந்த செல்ல பிராணிகளுக்கான கல்லறை நிலம் மெயின் மாகாணத்தில் உண்மையாக இருப்பதாக கேள்விப்பட்டேன். ஸ்டீஃபன் கிங் ஆச்சரியமான ஒரு மனிதர். ஒருமுறை அவரது நூலுக்கு விருது ஒன்று வழங்கப்படுகிறது. அந்த சமயம் அந்நூலை எடுத்துப் பார்க்கிறார். தான் அந்த நூலை எழுதியதே அவருக்கு நினைவில் இல்லை. பின்னர்தான் தான் அந்த நூலை எழுதிய போது முழுக்க முழுக்க போதையில் இருந்தது தெரிகிறது.

தமிழில் நல்ல பேய் கதைகள் வர நல்ல உரையாடல் வேண்டுமென்று நினைக்கிறேன். அரைகுறை அறிவுடன் ஒரு திகில் கதையை சொல்லும் போது பயம் இல்லாமல் வெற்றுக் கதையாக அது எஞ்சிவிடுகிறது. மற்றபடி தமிழகத்தில் வெறும் வஞ்சிக்கப்பட்டு பழி வாங்க துடிக்கும் ஆவிகள் மட்டுமே இருக்குமானால் அடுத்தமுறை இந்தியா வரும் போது நல்ல ஒரு காஃபி குடித்துக் கொண்டே அதன் கண்ணீர் கதைகளை என்னிடம் சொல்லட்டும்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
 2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
 3. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
 4. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
 5. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
 6. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
 7. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
 8. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
 9. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
 10. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
 11. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
 12. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
 13. பெண்களுடனான உரையாடல்- வளன்
 14. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
 15. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
 16. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
 17. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
 18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
 19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
 20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
 21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
 22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
 23. மூன்று இசை தேவதைகள் - வளன்
 24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்