இவ்வுலகில் என்றென்றைக்கும் என்னை ஆச்சரியம் கொள்ளவைப்பதில் இசை முக்கியமான ஒன்று. இசைக்கருவிகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என் தீராத ஆசை. ஏனைய பிற ஆசைகளைப் போலவே அதுவும் நிறைவேறாமல் இருக்கிறது. அதற்குக் காரணமும் நானே. இசைக் கற்றுக்கொள்ள வேண்டிய ஆதார சுருதி – பிரபஞ்ச இயக்கத்தில் இருக்கும் லயம் – என்னிடம் இல்லை என்றே நினைக்கிறேன். அல்லது ஆர்வம் இருக்கும் அளவு முயற்சி இல்லை என்றும் சொல்லலாம். ஆனால் இசை என் வாழ்வில் இல்லாமல் போயிருந்தால் வேறு மாதிரியான வாழ்க்கை அமைந்திருக்கும். ஷேக்ஸ்பியரின் Twelfth Night நாடகம் இப்படியாக ஆரம்பிக்கும்: If music be the food of love, play on; Give me excess of it… இந்த வரிகளை ஒருமுறை படித்துவிட்டு அதை முயன்று பார்த்திருக்கிறேன். ஒருநாள் முழுவதும் உணவு இல்லாமல் வெறும் இசையை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தேன். அந்தளவுக்கு இசை எனக்குப் பிடிக்கும்.

பொதுவாகக் கலையின் அளவீடு எது என்று பார்க்கும்போது அதில் உள்ள நுட்பங்களைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. ஓர் ஓவியமோ சிற்பமோ முதலில் பார்க்கும்போது சாதாரணமாகத் தெரியும் அதன் நுணுக்கங்களைக் கூர்ந்து நோக்கினால் வேறொன்றாக மாறும். ஒரு நாவலை அல்லது சிறுகதையை ஒருமுறை படித்தபின் தோன்றும் இன்பத்திற்கும் சில வருடங்கள் கழித்து மீள்வாசிப்பில் கிடைக்கும் இன்பத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும். இப்படியாக ஒவ்வொரு கலைச் சார்ந்த படைப்புகள் தொடர்ந்து நம்முடன் உரையாடிக் கொண்டே இருக்கின்றன. இசையும் அதற்கு விதிவிலக்கல்ல. மற்ற கலை வடிவங்களைவிட இசை இன்னும் சிறப்பானது ஏனென்றால் மற்ற படைப்புகளுக்கு நாம் செலுத்தும் முக்கியத்துவம் இசைக்குச் செலுத்தாவிட்டாலும் அதுவாக நம் செவியை வந்தடைந்துவிடும். இசை இன்னும் நன்றாகத் தெரிந்தவர்களுக்கு இது இன்னும் வசதி. என் நண்பர்கள் பலரும் ஒரு பாடலை கேட்டுவிட்டு அப்படியே கீ போர்டில் வாசிக்க ஆரம்பித்துவிடுவார்கள். எனக்கு அது வாய்க்கவேயில்லை. கல்லூரி காலத்தில் நானும் என் நண்பன் பிரஷாந்தும் இசைக் கேட்பதை ஒரு இயக்கமாகச் செய்து வந்தோம். இன்றும் அவ்வப்போது அது தொடர்கிறது. எங்களுக்குக் குருவாக இருந்தவர் (இருப்பவர்) சாரு நிவேதிதா. பின்னர் ஷாஜியின் இசைக் கட்டுரைகளைத் தொடர்ந்து விவாதித்து அதில் வரும் இசையைக் கேட்போம். இங்குள்ள இசையைத் தாண்டி உலக அளவில் இயங்கும் இசையைக் கவனிக்க அந்த நாட்கள் பயனுள்ளதாக இருந்தன.

ஒரு சில இசை நம் நெஞ்சில் ஆழமாகத் தைத்துக்கொள்கிறது. இன்னும் எத்தனை முறை பிறந்தாலும் அந்த இசை நம்முடனே பயணித்துக் கொண்டிருக்கும். அப்படியான ஒரு இசை யோஹனாஸ் ப்ரம்ஸின் தாலாட்டு Johannes Brahms – Lullaby. இந்த இடத்தில் படிப்பதை நிறுத்திவிட்டு இணையத்தில் தேடி அந்தத் தாலாட்டைக் கேட்டுவிட்டு வாருங்கள். 1868ல் இயற்றப்பட்டது. இந்த இசையைக் கேட்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த அளவு உலகப்புகழ் பெற்ற இசை அது. யோஹனாஸின் வாழ்வை பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொண்டால் இந்த இசை இன்னும் கொஞ்சம் உங்களுக்கு அர்த்தப்படலாம். ஜெர்மன் தேசத்தில் பன்னிரண்டு வயதிலிருந்து இசை வாசிக்கத் துவங்கியவர் யோஹனாஸ். மற்ற இசையமைப்பாளர்கள் பேராலயங்களிலும் அரசவைகளிலும் வாசித்துத் தங்கள் இசை பயணத்தைத் துவங்கினார்கள் ஆனால் யோஹனாஸ் வாசிக்க ஆரம்பித்தது பிராத்தல் கூடங்களில். பின்னர் எப்படியோ தன் இசையின் மூலம் வாழ்வை நகர்த்த ஆரம்பித்தார். அவரது குழுவில் இருந்த Bertha Porubsky என்ற பெண்ணுடன் காதல் மலர்கிறது. அவர்கள் அடிக்கடிச் சந்தித்து நீண்ட தூரம் நடப்பார்களாம். அப்படி அவர்கள் நடக்கும்போது பெர்த்தா யோஹனாஸின் கரங்களைப் பற்றிக்கொண்டு பாடிக்கொண்டே வருவாளாம். அந்தப் பாடலை அடிக்கடிப் பாடச் சொல்லி மனம் உருகிபோவாராம் யோஹனாஸ். எல்லாக் காதல் கதைகளிலும் நடப்பதுபோல் ஒருநாள் யோஹனாஸும் பெர்த்தாவும் பிரிந்துவிடுகிறார்கள். யோஹனாஸ் இசைக் கலைஞன் அல்லவா? அந்தப் பிரிவின் துயரில் பல்வேறு இசைக் கோர்ப்புகளை இயற்றுகிறார். யோஹனாஸின் இசை அவரை ஐரோப்பாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளராக மாற்றுகிறது. பின்னர் ஒரு பத்து வருடம் சென்று மீண்டும் பெர்த்தாவை சந்திக்கிறார். அவளுக்குத் திருமணமாகியிருந்தது. இரண்டாவது குழந்தையை எதிர்ப்பார்த்திருந்தாள். அப்போது யோஹனாஸ் அந்தக் குழந்தைக்காக இசைத்ததுதான் அந்த உலகப்புகழ் அடைந்த தாலாட்டு. இவர்கள் காதலித்தபோது பெர்த்தா பாடிய பாடலை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தத் தாலாட்டு. பல்வேறு சமயங்களில் இந்த lullaby யை கேட்டிருக்கிறேன். இந்தக் கதையைத் தெரிந்துகொண்டு கேட்கும்போது வேறுமாதிரியான அனுபவத்தைத் தந்தது.

சாரு நிவேதிதாவின் ‘ராசலீலா’ படித்த நாளிலிருந்து எமினம் (Eminem) அறிமுகமாகியிருந்தார். எமினமின் Rap இசையை கேட்பது சொல்லவியலாத அனுபவம். ரிஹானாவும் எமினமும் சேர்ந்து பாடிய பாடல்கள் நான் அடிக்கடி விரும்பிக் கேட்பேன். Monster மற்றும் Love the way you lie கேட்டுப்பாருங்கள். கல்லூரி காலத்தில் அதிகமாக கேட்டது எமினமையே. 2018 ஆம் ஆண்டு எமினமின் Venom என்ற பாடல் வெளியானது. இந்தப் பாடலில் ஓர் உலகப் புகழை எய்துகிறார்.ஒரு வினாடிக்கு 9.6 அசைகள் (syllables) பாடுகிறார். பாடுகிறார் என்பது சரியான பதம் அல்ல rap செய்கிறார். இதுதான் rap இசையின் தனித்துவமாக பார்க்கிறேன். சொற்கள் சுதந்திரமாக வெளிவருகிறது. அதற்கு அந்த பாடகர் ஒரு கருவி அவ்வளவுதான். கிட்டதட்ட நம் கிராமங்களில் இருக்கும் சாமியாடி போல கட்டுபாடின்றி அதே சமயம் ஒரு லயத்தில் வார்த்தைகளை அடுக்கிச் செல்லுதல். Venom பலராலும் விரும்பிக் கேட்க்கப்பட்டது. அதன்பிறகு இந்த வருடம் 2020 இல் Godzilla என்ற பாடலை Music to Be Murdered By என்ற தொகுப்பில் ஜூஸ் வோர்ல்ட் (Juice WRLD) உடன் பாடி வெளிவருகிறது. இந்த பாடல் வெளி வரும் முன்பே ஜூஸ் வோர்ல்ட் இறந்துவிடுகிறார். காரணம் போதை வஸ்துகள். இந்த ‘காட்ஸிலா’ பாடலில் தன் முந்தைய சாதனையை எமினம் முறியடிக்கிறார். முன்பு வினாடிக்கு 9.6 அசைகள் என்பது இப்போது 11.3 அசைகள். வினாடிக்கு தோராயமாக 7.6 வார்த்தைகள். அரை நிமிடத்திற்கு 229 வார்த்தைகள். இதற்கு எவ்வளவு நேரம் மூச்சை அடக்க வேண்டும் என்று நினைத்துப் பாருங்கள்! மலாவி தேசத்தினரின் நடனங்களுள் மஸாய் (Maasai) என்றொரு பழங்குடி நடனமிருக்கிறது. இது பழங்குடியின போர் வீரர்களின் நடனம். இணையத்தில் தேடினால் உடனடியாகப் பார்த்துவிடலாம். இந்நடனத்தில் சிறப்பாக அசாதாரணமாக குதிப்பதை சொல்கிறார்கள். ஆனால் அவ்வாறு குதிக்க அவர்கள் எப்படி மூச்சை பயன்படுத்துகிறார்கள் என்பதை நடனத்தை நன்றாக கவனித்தால் தெரியும். நடனம் தொடங்கும் போது அனைவரும் ஒருவிதமான ஒலியெழுப்பிக் கொண்டு அணி வகுத்து வருகிறார்கள். அதை கேட்கவே அமானுஷ்யமாக இருக்கிறது. உடலை சற்று முன் சாய்த்து அந்த குறிப்பிட்ட ஒலியெழுப்பும் போது நுரையீரலில் காற்று சேமிக்கப்படுகிறது. நடனத்தின் அசைவுகள் கூடும் போது தாவித் தாவி குதிக்கிறார்கள். எமினம் மூச்சை அடக்கி பாடுவதை கேட்டபோது மலாவியின் மஸாய் நடனம் ஞாபகத்துக்கு வந்தது.

பழங்குடியினர் யாவருக்கும் இம்மாதிரியான நடனங்கள் இருக்கிறது. அவர்கள் வாழ்வியல் முறை சார்ந்து அவை வளர்த்தெடுக்கப்படுவதால் அவர்களின் தேக நலனில் இவ்வகை நடனங்களும் இசையும் பெரும் பங்காற்றுகிறது. எனக்கு நடனம் வரவே வராது ஆனால் என்னையும் ஒரு பழங்குடியின நடனம் ஆட வைத்துவிட்டது. கோவையில் ஒரு வருடம் இருந்த சமயம் உதகை நண்பர்களால் படுகா இசை அறிமுகமாகியிருந்தது, படுகர்களின் மொழி வசீகரமான மொழி. இங்கிருக்கும் இணைப்பில் இருக்கும் பாடல் உங்களுக்கு அறிமுகமான ஒன்றாகக்கூட இருக்கலாம். மறக்காமல் கேளுங்கள்

நடனமும் ஆடுவதற்கு மிக எளிமையாக இருக்கும். அதன்பிறகு டிசம்பர் மாத குளிரில் சில லிட்டர் ஹடியா பருகிய பிறகு ஜார்கண்ட் மாநில நண்பர்களுடன் அவர்களின் பழங்குடி நடனத்தை இரவு முழுவதும் ஆடிக்கொண்டிருந்தேன். பவ்லோ கொய்லோ இம்மாதிரியான பழங்குடி நடனங்களை மையப்படுத்தி The Witch of Portobello என்ற நாவல் எழுதியிருக்கிறார். வாசிக்க எளிமையாக இருக்கும். சுவாரசியமான கதை.

இசையை பற்றி பேச ஆரம்பித்து நடனத்திற்கு தாவிவிட்டேன். மீண்டும் கொரோனா எங்கள் பகுதியில் வேகமாக பரவி வருகிறது. இதில் எனக்கு இருக்கும் ஆதாயம் நேரம் மிகுதியாக இருக்கிறது. புத்தக வாசிப்பு, தியானம், இசை கேட்பது மூன்றுமே பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொள்கிறது. நண்பன் Estas Tonne அறிமுகப்படுத்தி வைத்தான். நண்பனுக்கு Estas Tonneவை அறிமுகப்படுத்தியது என்னுடைய ஆசான். ஒரு கிட்டாரை வைத்து மட்டும் இவ்வளவு அற்புதமான இசையை உருவாக்கிவிட முடியுமா என்று வியக்க வைக்கிறார். இவரின் இசையை தனிமையில் அமர்ந்து கேட்பது தியானம் செய்த உணர்வைக் கொடுக்கிறது.

Trio Mandili இசைக் குழுவை சமீபத்தில் தோழிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். கேட்கிறேன் என்று மட்டும் சொன்னார்கள். தொடர்ந்து ஒரு வாரமாக இந்த குழு என் தலையில் ஏறி அமர்ந்துகொண்டு இறங்க மறுக்கிறது. ஜார்ஜியா தேசத்தில் மூன்று அழகிய பெண்கள் – பெண்களுக்கு பதிலாக தேவதைகள் என்று சொல்லலாம் ஆனால் தேவதைகள் இவ்வுலகத்தை சார்ந்தவர்கள் இல்லை என்பதால் பெண்கள் என்றே பயன்படுத்துவோம் – ஒரு கிராமப் புறத்தில் நடந்து செல்லும் போது பொழுதுபோக்கிற்காக பாடல் பாடியிருக்கிறார்கள். அதிலொரு தோழி அதை செல்ஃபி வீடியோவாக இணையத்தில் பதிய மில்லியன் கணக்கில் பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள். 2014 ல் தனியாக Trio Mandili என்ற பெயரில் குழு ஆரம்பித்து பாடல்கள் பாடி வருகிறார்கள். ஐரோப்பாவில் இந்த குழு பிரபலமாக இருக்கிறது. மூன்றே மூன்று பெண்கள் ஒருத்தி கையில் மாண்டலின் கருவி, மூவரின் மயக்கும் குரல் இவ்வளவு தான். பாடும் மொழி புரியவில்லை என்றாலும் துள்ளலும் உற்சாகமுமாய் இருக்கிறது. இவர்கள் பாடலில் ஒருவிதமான நாட்டுப்புற தன்மை இருப்பது தெரிகிறது. பாடலும் இவர்களின் அழகும் ஆளை மயக்குகிறது என்றால் இன்னொரு புறம் ஜார்கியாவில் இவர்கள் நடந்து செல்லும் இடங்கள் அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது. இவர்களின் ஒவ்வொரு வீடியோ பார்க்கும் போதும் ஜார்ஜியாவில் இவர்களுடன் இவர்கள் பாடல்களை ரசித்த வண்ணம் வெகு தூரம் நடக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

கவிஞர் மனுஷ்ய புத்ரனுக்கு வருடத்தின் முதல் பனிப் பொழிவை வீடியோ எடுத்து அனுப்பியிருந்தேன். அடுத்த கொஞ்ச நேரத்தில் அற்புதமான ஒரு கவிதையை அனுப்பியிருந்தார். மகிழ்ச்சியாக இருந்தது. அவரின் கவிதையில் வரும் துயரம் பலரையும் ஏதோ செய்துவிடுகிறது. இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் எனக்காகவும் மனுஷ் ஒரு பெரிய உபகாரம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். கீழே Trio Mandiliயின் சில பாடல் இணைப்புகளை தருகிறேன். இவற்றை குறித்து மனுஷ் கவிதை எழுத வேண்டும். இப்பேரழகிகள் மனுஷ்ய புத்ரன் கவிதைகள் வழி தமிழ் உலகில் அறியப்படுவார்களாக.

https://www.youtube.com/watch?v=HRCrCCzfArA

https://www.youtube.com/watch?v=l99hDlGRbFU&feature=emb_logo

https://www.youtube.com/watch?v=nfMbd3cIKzc&feature=emb_logo

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
 2. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
 3. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
 4. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
 5. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
 6. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
 7. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
 8. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
 9. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
 10. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
 11. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
 12. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
 13. பெண்களுடனான உரையாடல்- வளன்
 14. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
 15. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
 16. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
 17. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
 18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
 19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
 20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
 21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
 22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
 23. மூன்று இசை தேவதைகள் - வளன்
 24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்