தீராத பாதைகள் 7

சமீபத்தில் பார்த்த Science Fiction படம் என்ன என்று தெரிந்த ஒரு நண்பரிடம் கேட்டேன். அப்படி ஒன்றும் முக்கியமான படம் பார்க்கவில்லை தமிழில் வெளியான ‘டிக் டிக் டிக்’ பார்க்க வேண்டும் என்றார். ‘டிக் டிக் டிக்’ என்று நண்பர் குறிப்பிட்டது நகைச்சுவை என்பதை பிறகு அவர் சொல்லிதான் தெரிந்து கொண்டேன். என்னிடம் பழகும் யாவரும் ஏன் உன்னை நீ அந்நியப்படுத்திக்கொள்கிறாய் எங்களை போல் நீயும் தமிழ் சினிமா பார் என்று அறிவுறுத்துகிறார்கள். சிலசமயம் அந்த ஆலோசனைகளின் பேரில் சில படங்களைப் பார்த்து பெரும் சங்கடங்களுக்கு ஆளாகியிருக்கிறேன் (எனக்கு தமிழ் சினிமா பிடிக்கும் ஆனால் சொல்ல வருவது ஒன்றுமில்லாத படங்களை பெரியளவில் கொண்டாடுவதை). வெகுசமீபமான உதாரணம் எந்திரன் 2.0. இப்படி சிக்கலுக்கு ஆளாக்கும் நபர்களிடம் நான் சொல்லும் படங்களை பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் அதை கண்டுகொண்டதாக கூடத்தெரியவில்லை. இருக்கட்டும். Science Fiction பற்றி பேச முக்கியமான காரணம் Netflixல் இப்போது பார்த்து முடித்த Black Mirror தொடர். உங்களில் நிறையபேர் இந்த தொடரை பார்த்திருக்கலாம். பார்க்காதவர்கள் உங்கள் வாழ்வில் ஒரு அற்புதத்தை இழக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த தொடரை குறித்து ஒரு அறிவார்ந்த தத்துவார்த்த விவாதங்கள் வர வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறேன். எந்திரன் 2.0 போன்ற பிரம்மாண்ட படைப்புகளுக்கு முற்றுப்புள்ளி கொடுத்து வேறொரு பரிமாணத்தை Black Mirror திறந்து வைக்கும் என நம்புகிறேன்.

தமிழில் ஒரு திரைப்படத்தை அல்லது இதுபோன்ற தொடர்களை அறிமுகப்படுத்துவதில் உள்ள சிக்கல் அடுத்த கொஞ்ச நாளில் வெளியில் இருந்து வந்த அந்த படைப்பு ஒரு நகலாக தமிழ் சினிமாவில் எஞ்சிவிடுகிறது. ஆனால் அறிமுகம் என நான் சொல்ல வருவது அந்த படைப்பு நம்மிடம் வைக்கும் பார்வை. தயவுசெய்து தமிழ் சினிமாவை ஹாலிவுட்டுடன் ஒப்பிடுகிறேன் என்று புரிந்துகொள்ள வேண்டாம். தமிழில் நல்ல படங்கள் உருவாகி வருகின்றன ஆனால் பெரும்பாலான படங்கள் முன் வைக்கும் பார்வை மிகச் சலிப்பாக இருக்கிறது. அதனால்தான் இந்த ஒப்பிடுதல் நிகழ்கிறது. தமிழில் ஒரு Science Fiction அல்லது Science Fantasy எடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் அதன் எல்லா கதைகளும் ஒரு டெம்ப்லேட்டில் வந்துவிடுகிறது. நாயகன் ரொம்ப சிரமப்பட்டு ஒரு எந்திர மனிதனை இந்திய ராணுவத்திற்காக உருவாக்குகிறான். தேசவிரோதிகள் அந்த படைப்பை கவர்ந்து அழிவிற்கு பயன்படுத்துகிறார்கள். புராண காலத்திலிருந்து இதைதானே கேட்டுக்கொண்டு வருகிறோம்? இதில் நான்கு பாடல்கள் வைத்துவிட்டால் இது Science Fantasy ஆகிவிடுமா? ரோபோவிற்கு மனித பெண் மீது ஏற்படும் காதல் Fantasy இல்லையா? Fantasy தான் ஆனால் அதில் ஒரு லாஜிக் இல்லையே! அதுபோக Science என்றாலே ரோபோ மட்டும்தானா? இதை விளங்கிகொள்ள முதலில் புனைவுக்கும் அதிபுனைவுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். புனைவை நாம் நம் வாழ்விலிருந்து சற்று விலக்கிப்பார்க்க வேண்டும். அது தரும் உவகை நம் எதார்த்த வாழ்வின் சங்கடங்களை சற்று ஆற்றுப்படுத்தும். அதிபுனைவு இந்த புனைவிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் புனைவின் மேல் இன்னொரு புனைவை வைக்கிறீர்கள்.

இப்படி உங்களை குழப்ப எனக்கு விருப்பமில்லை. அதனால் Black Mirror ல் இருந்து சில கதைகளை சொல்கிறேன். நாம் அன்றாடம் பயன்படுத்தும் டெக்னாலஜி கணினி மொபைல் ஐ பாட் போன்றவைகள் கறுப்புக் கண்ணாடி கொண்டிருப்பதனால்தான் இந்தக் கதையின் பெயர் ப்ளாக் மிரர். இதில் இருக்கும் ஒவ்வொரு கதையும் டெக்னாலஜியுடன் சம்மந்தப்பட்டது. மற்ற தொடர்களைப் போல் ஒரே கதையைச் சொல்லாமல் ஒவ்வொரு எப்பிசோடும் ஒரு கதை. எனவே படுசுவாரசியமாக இருக்கும். மொத்தம் ஐந்து சீசன்கள். மற்ற Science Fiction அல்லது Science Fantasy தொடர்களில் இருந்து இது மாறுபட்டிருக்க காரணம். டெக்னாலஜியின் அடிப்படையின் மனித உறவுகளைப் பேசுகிறது. உதாரணமாக காலப்பயணம் பற்றி ஒரு படம் பேசுகிறதென்றால் அது வெறும் அடித்தளம்தான். ஆனால் அந்தக் கதை வேறொரு தளத்தில் நடைபெறும். கிறிஸ்டோபர் நோலனின் இன்டர்ஸ்டெல்லார் போல (இன்டர்ஸ்டெல்லர் அளவிற்கு சிக்கலாக இருக்காது என்பது இதன் ஆறுதல்!).

Arkangel என்று ஒரு கதை. நம் காலத்தில் குழந்தைகளைப் பாதுகாக்க வீட்டில் ஒரு கண்காணிப்பு கேமிரா வைக்கிறோம் அல்லவா? அதேபோல எதிர்காலத்தில் Guardian Angel என்ற நிறுவனம் குழந்தைகளுக்குள் ஒரு சின்ன சிப் வைத்துவிடுகிறது. இதனால் பெற்றோர்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் அந்த குழந்தைகளை கண்காணிக்க முடியும். அவர்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியும். அவர்கள் அந்த நாளில் என்னவெல்லாம் பார்த்தார்கள் என்பது அதில் பதிவாகிவிடும். எனவே அதையும் திருப்பிப் பார்க்க முடியும். அப்படி ஒரு பெண் தன் மகளுக்கு அந்த சிப் வைத்துவிட்டு தொடர்ந்து ஐ பார்ட் வழியாக அந்த சிறுமியை கண்காணிக்கிறாள். அவள் பயப்படும் விஷயங்களை கட்டுப்படுத்துகிறாள். ஒரு நாய் அவளை பார்த்து குரைத்தால் அந்த நாயை ப்ளர் செய்துவிட முடியும்மீண்டும் அவள் அந்த நாயை எதிர்கொள்ளு. ம் போது அங்கு ப்ளர் செய்யப்பட்ட ஏதோதான் இருக்கும் சிறுமியால் நாயைப் பார்க்க முடியாது. இப்படி ப்ரைவசி இல்லாமல் போகும் சிறுமி மனபிறழ்வுக்கு ஆளாகிறாள். எனவே தாய் அதை உபயோகிப்பதை நிறுத்திவிடுகிறாள். இப்போது சிறுமி வளர்ந்து பெரியவளாகிறாள். ஒருநாள் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பதறிய தாய் ஐ பார்ட் எடுத்து பெண் எங்கே என தேடுகிறாள். அவள் கண்கள் காண்பதை ஐ பார்டில் பார்க்க முடியும் என்பதால் இயக்கிப் பார்த்தால் அந்த பெண் தன் காதலனுடன் உல்லாசமாக இருக்கிறாள். இங்கிருந்து கதை டெக்னாலஜியை விடுத்து மனித சுதந்திரத்தை பேசும் ஒரு கதையாக மாறிவிடுகிறது. இப்படி எல்லாக் கதைகளும் ஒரு அதிர்ச்சியை நமக்குத் தந்துவிடுகின்றன. இதில் அந்தப் புனைவு நம் சொந்த வாழ்விலிருந்து எங்கே அந்நியப்படுகிறது சொல்லுங்கள்? நம் மொபைல் போனில் இப்படி எத்தனை செயலிகள் இருக்கின்றன? இப்படி எதார்த்த வாழ்வில் கொஞ்சம் புனைவைக் கலக்கும் போது அது மிகச்சிறந்த கலைப்படைப்பாக உருமாறுகிறது.

முதல் சீசனில் முதல் எப்பிசோடே ஒரு பேரதிர்ச்சியை நமக்கு முன் தூக்கிப் போடுகிறது. National Anthem என்ற அந்த கதையில் இங்கிலாந்து இளவரசியை ஒருவன் கடத்திவிடுகிறான். அவளை விடுவிக்க அவன் வைக்கும் நிபந்தனை அன்று மாலை நான்கு மணிக்குள் இங்கிலாந்தின் பிரதமர் ஊடங்கங்களுக்கு முன்பாக ஒரு பன்றியுடன் புணர்ச்சியில் ஈடுபட வேண்டும். காசு கேட்டால் கொடுக்கத் தயாராக இருக்கும் பிரதமரை ஏன் இப்படி செய்யச் சொல்ல வேண்டும்? இதனால் பிரதமருக்கு ஏற்படும் நெருக்கடி என்ன? நாற்பத்தைந்து நிமிடங்கள்தான் ஆனால் நம்மை இந்தப்பக்கம் அந்தப்பக்கம் நகரவிடாது இந்த கதை. கதையின் முடிவு அதி அற்புதமானது. அதைச் சொல்லி கெடுக்க விரும்பவில்லை.

இப்படி ஒரு கதைகூட மொக்கை போடாமல் விறுவிறுப்பாக செல்கிறது. இன்று நம்மில் பலருக்கும் (என்னையும் சேர்த்துதான்,) சமூக ஊடகங்களில் வரும் லைக் மீது ஒரு போதை இருக்கிறதல்லவா? அதை அடிப்படையாகக் கொண்டு ஒரு அட்டகாசமான் கதை இதில் இருக்கிறது. அப்படி வரும் லைக் வைத்து நாம் தரம் பிரிக்கப்பட்டால் என்ன ஆகும் என்பதுதான் கதையின் ஒற்றை வரி. அதேபோல இதில் ஒரு பேய்ப்படம் இருக்கிறது. நம்மூரில் இருக்கும் பேய்கள் எல்லாமே வஞ்சிக்கப்பட்டு மரணித்த ஆன்மாக்களாகவே இருக்கின்றன. பழி வாங்க மட்டும் அழகான பெண்ணின் உடலில் புகுந்து கொண்டு… சரி விடுங்கள். ஆனால் டெக்னாலஜி வைத்து இப்படி ஒரு பேய்ப்படம் அலறவிடுகிறார்கள். எனக்கு மிகவும் பிடித்தது White Christmas மற்றும் Black Museum என்ற கதைகள்.

இந்த ஒவ்வொரு கதைகளும் நம்பகத்தன்மையுடன் இயல்பாக ஒவ்வொரு நன்னெறியை – Morality – எடுத்துவைக்கின்றன. மற்ற படங்களில் இதே Morality துருத்திக்கொண்டு இருக்கும். இல்லை என்றால் பட இயக்குனர்கள் நான் உனக்கு பெரிய வாழ்வின் தத்துவத்தை போதிக்கிறேன் என்று பார்வையாளர்களை கால் இடுக்கில் விட்டு இறுக்கி துருப்பிடித்த பிளேடால் கழுத்தை அறுப்பார்கள். Black Mirrorல் இந்த எந்த பிரச்சனையும் இல்லை. Morality என்றால் Cause and Effect பற்றியதுதான். இப்படி செய்தால் இப்படி ஆகும் அவ்வளவுதான் என்ற சுலபமான தத்துவத்தை மட்டும் எடுத்துக்கொண்டிருகிறார்கள். எனவே Black Mirror தமிழ் சமூகத்தில் விவாதிக்கப்பட்டால், பிரம்மாண்டம் என்பது சில நூறு கோடிகளை செலவு செய்து குப்பைகளை படம் என்று எடுப்பதில்லை என்பது புரியும். Black Mirror உதாரணம் Science Fictionக்கு மட்டும் அல்ல மற்ற அனைத்திற்கும் பொருந்தும்.

 

அடுத்த வாரம் இது போன்ற அற்புதமான கதைகளின் பிறப்பிடமாக இருக்கும் இன்னொரு தொடரை அறிமுகப்படுத்துகிறேன்.

பின்குறிப்பு:-

எந்திரன் படத்தை மட்டும் ஒப்பீட்டிற்கு எடுத்துக்கொண்டதற்கு தனிப்பட்ட எந்த காரணமும் இல்லை. நமக்கெல்லாம் எல்லா நேரத்திலும் ஒரு படத்தை திருப்பிப் திருப்பி பார்க்கும் பழக்கமிருக்கும் அல்லவா? அதில் என் நைஜீரிய நண்பன் அடிக்கடி பார்க்கும் படம் எந்திரன். படம் வந்த நாளிலிருந்து இப்போதுவரை முப்பதுமுறைக்கு மேல் பார்த்துவிட்டான். ஆனால் அவனுக்கும் இந்தியாவின் பெரிய பட்ஜெட் படமான எந்திரன் 2.0 பிடிக்கவில்லை.

எந்திரன் 2.0 பறவைகள் அழிவு பற்றி பேசினார்கள் அல்லவா? (இந்த படத்திற்கு பிறகு பலரும் சலீம் அலி குறித்தெல்லாம் விவாதித்தார்கள்!) அதேபோல Black Mirrorல் தேனீகள் குறித்து ஒரு படம் இருக்கிறது. அதை பார்த்ததும் 2.0 ஞாபகம் வந்துவிட்டது.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
 2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
 3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
 4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
 5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
 6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
 7. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
 8. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
 9. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
 10. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
 11. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
 12. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
 13. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
 14. பெண்களுடனான உரையாடல்- வளன்
 15. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
 16. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
 17. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
 18. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
 19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
 20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
 21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
 22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
 23. மூன்று இசை தேவதைகள் - வளன்
 24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்