தீராத பாதைகள்-8

மோசே பாலைநிலத்தின் வழியாக இஸ்ரேல் மக்களை கடவுள் வாக்களித்த கானான் தேசத்திற்கு வழிநடத்திக்கொண்டு சென்றார். ஆனால் வழியில் அவர் செய்த சிறிய பிழைகளுக்காக கடவுள் அவரைத் தண்டித்தார். என்ன தண்டனை தெரியுமா? கிட்டதட்ட நாற்பது ஆண்டுகள் எந்த தேசத்திற்கு அந்த மக்களை மோசே வழிநடத்திச் சென்றாரோ, அந்த தேசத்தில் நுழையாமல் இறக்க வேண்டும். அதனால் கடவுள் மோசேவை ஒரு மலை மீது ஏறி நிற்கச்சொல்லி தூரத்தில் இருந்த கானான் தேசத்தை காண்பிக்கிறார். அந்த தேசத்தை பார்த்துக்கொண்டே மோசே இறந்துபோகிறார். எப்படி இருந்திருக்கும் மோசேவின் மனநிலை? எனக்கும் அப்படிதான் இருக்கிறது. என்னுடைய கானான் தேசம் நியூயார்க் நகரம். முதல்முறை அமெரிக்க வந்திறங்கி பாஸ்டன் நகருக்கு வந்தபோது நியூயார்க் நகரம் அற்புதமாக கண்ணில் பட்டது. சீக்கிரம் வருகிறேன் பொறுமையாக இரு என்று காதலியிடம் சொல்வதுபோல சொல்லிவைத்தேன். அதன்பிறகு இரண்டுமுறை போர்ட் அத்தாரிட்டி ஸ்டேஷனில் இறங்கி வேறு ஒரு நகருக்கு சென்றிருக்கிறேன் ஆனால் நியூயார்க் நகருக்குள் சென்றதில்லை. இன்னொருமுறை வாஷிங்டன் டீசியிலிருந்து இரவில் பாஸ்டனுக்கு வந்த ஒரு விமான பயணத்தில் நியூயார்க் மின்னொளியில் தகதகத்துக்கொண்டிருந்தது. இந்த வைரஸ் பிரச்சனை ஆரம்பிக்கும் முன் நியூயார்க் சென்றுவிடவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன் ஆனால் நண்பர் ஒருவரின் குறுக்கீட்டால் கடைசி நேரத்தில் பயணம் ரத்தானது. இன்று நியூயார்க் நகரம் எரிந்துக்கொண்டிருக்கிறது. சீக்கிரம் எல்லாம் சரியாக வேண்டும்.

நியூயார்க் சென்றால் எல்லோரும் செல்வதுபோல லிபர்ட்டி சிலைக்கு செல்ல வேண்டும் என்பது என் விருப்பமல்ல. எனக்கு டைம் ஸ்கொயர் செல்ல வேண்டும். அடுத்ததாக ப்ராட் வே ம்யூஸிக்கல் பார்க்க வேண்டும். ரேடியோ சிட்டி. பிறகு மெட்ரோ பாலிடன் ம்யூசியம். எனக்கு விருப்பமான ஜாக்ஸன் பொலாக்கின் ஓவியங்கள் அங்குதான் இருக்கின்றன. தியானம் செய்வதுபோல பொலாக்கின் ஓவியங்களுக்கு முன் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும். வேறெதுவும் வேண்டாம்.

ஒருமுறை என்னுடைய நியூயார்க் நண்பனுடன் உணவருந்திக்கொண்டிருந்த போது, Rod Serling பற்றிய பேச்சு வந்தது. செர்லிங்கை நியூயார்க்கின் சொத்து என்று கூறினான். அதுவரைக்கும் ராட் செர்லிங் குறித்து எதையும் நான் கேள்விப்பட்டதில்லை. அதை அறிந்துகொண்ட நண்பன் மிகவும் கண்டிப்பாக நீ Twilight Zone பார்த்தாக வேண்டும் என்று கூறினான். அந்த உரையாடல் முடியும் முன் மீண்டுமாக மறக்காமல் பார்த்துவிடு என்று பேராவலுடன் கூறினான். அந்த சமயம் Twilight Zone ரீமேக் ஆகிக்கொண்டிருந்தது. அதனால் Twilight Zone – Original என்று அழுத்தம் திருத்தமாக கூறினான். நெட்பிளிக்ஸில் தேடியபோது கிடைத்தது.

மொத்தம் ஐந்து சீசன். சீசனுக்கு ஏறக்குறைய முப்பது எப்பிசோட். ஒவ்வொரு எப்பிசோடும் அதிகபட்சமாக முப்பது நிமிடங்கள். அதேபோல எல்லாம் தனித்தனி சிறுகதைகள். 1959 முதல் 1964 வரை இந்தத் தொடர் அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. கறுப்பு வெள்ளை தொடர்தான், ஆனால் படுசுவாரசியமாக இருக்கும். அமெரிக்காவுக்கு நீங்கள் ஒருவேளை வந்தால், ஏதோ ஒரு அமெரிக்கருடன் நீங்கள் பேச நேரிட்டால் ட்ரம்ப் குறித்தோ ஹிலரி கிளின்டன் குறித்தோ எடுத்தவுடன் பேசிவிட முடியாது. முதலில் அந்த நாளைய பருவ நிலைக்குறித்து பேச ஆரம்பிக்க வேண்டும். பிறகு உங்களுக்கு பிடித்தமான ஏதோ ஒன்றைக் குறித்து ஆரம்பிக்க வேண்டும். பொதுவாக அமெரிக்கர்களுக்கு விளையாட்டு, டீவி ஷோ, உணவு இப்படி ஏதாவது ஒன்று பிடிக்கும். மிக நெருக்கமானவர்களாக இருந்தால் ஒழிய அரசியலும் மதமும் குறித்து பேசலாம் ஆனால் அதுவும் பல நேரங்களில் அடிதடியில் முடியும். அப்படி நீங்கள் வரும் சமயத்தில் உங்களுக்கு பேச எதுவும் கிடைக்கவில்லை என்றால் Twilight Zone குறித்து பேசலாம். அந்தளவிற்கு இந்த தொடர் அவர்கள் வாழ்வில் கலந்திருக்கிறது. Twilight Zone என்று சொன்னாலே போதும் அதன் டைட்டில் ம்யூசிக்கை வாயால் இசைப்பார்கள்.

 

டைட்டில் போடும் போது செர்லிங் தனது அமானுஷ்ய குரலில் Twilight Zoneஐ அறிமுகம் செய்வார்: “மனிதன் அறியாத ஐந்தாம் பரிமாணம் ஒன்றுண்டு. காலவெளியை கடந்த அது ஒரு முடிவிலி. அது நிழலுக்கும் ஒளிக்கும் இடையே, அறிவியலுக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையே, மனிதனின் பயத்திற்கும் அறிவுக்கும் இடையே இருக்கிறது. இது கற்பனைகளின் பரிமாணம். இந்த இடத்தைதான் நாம் Twilight Zone என்று அழைக்கிறோம்.” இதுதான் ஒவ்வொரு எப்பிசோடின் கதையும். ஏற்கனவே சொல்லியதுபோல வெறும் முப்பது நிமிடங்கள்தான். கற்பனைகளின் விளையாட்டு வியப்புக்குரிய வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

தேர்ந்த ஒரு பார்வை இல்லை என்றால் இப்படிப்பட்ட படங்களை எடுக்கமுடியாது. கண்டிப்பாக செர்லிங் ஒரு பெரும் வாசகனாக இருந்திருக்க வேண்டும். இந்த ஒவ்வொரு கதைகளையும் பார்க்கும் போது Ray Bradburyயின் ஞாபகம் வந்துகொண்டே இருந்தது. இந்த அனைத்துக் கதைகளையும் சினிமா துறையில் இயங்கும் அனைவரும் பார்க்க வேண்டும். குறும்படத்தில் இயங்ககூடிய அனைவரும் கதை கிடைக்கவில்லை என்று சொல்கிறார்கள். அல்லது ஏற்கனவே எடுத்துப் புளித்துபோன கதைகளை எடுக்கிறார்கள். அவர்களின் கற்பனைகளை பார்க்கும் போது மிகவும் சலிப்பாக இருக்கிறது. 1959ல் எடுக்கப்பட்ட கதைகளை இன்றும் சலிப்பதில்லையே அது எப்படி? தூரத்திலிருந்து தமிழ் சினிமா சார்ந்த இயங்குதலை பார்க்கும்போது ஏதோ ஒரு பெரிய சக்கரத்தில் மாட்டிக்கொண்டதோ என நினைக்க தோன்றுகிறது. ஒரு பேய்படம் வெற்றிப்பெற்றால் பத்துப் பதினைந்து பேய்படங்கள் வருகின்றன. ஒரு காமெடி ஜெய்த்துவிட்டால் அடுத்த ஒரு படைப்பு தன்னை நிறுவும் வரை காமெடி படங்கள்தான். இதில் இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கிறேன் என்று எழுத்தாளர்களை வசனம் எழுத வைத்துக்கொள்ளும் அவலம் நடந்தேறுகிறது. இன்னொரு அவலத்தைத் சொல்லியாக வேண்டும்: நாட்டில் ஏற்பட்ட திடீர் யூட்யூப் புரட்சியால் இன்று அனைவருமே ஒரு சேனலுடன் இருக்கிறார்கள். அதிலும் இதே நிலைதான். ப்ராங்க் ஷோ ஒன்று அதிக பார்வை பெற்றுவிட்டால், அனைவருமே ஒரு கேமிராவுடன் ப்ராங்க் ஷோ என்று கிளம்பிவிடுகிறார்கள். இதில் அந்த ஷோவின் ஹோஸ்ட் அடிவாங்கினால் இன்னும் அதிக கிளர்ச்சியாக இருப்பதால் Prank என்பது மாறி பல ஷோக்கள் Provoking ஆக இருக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும். கற்பனைகளை எப்படி பயன்படுத்தலாம் என்பதை Twilight Zone பார்த்து கற்றுக்கொள்ளலாம்.

உதாரணமாக இதிலிருந்து சில கதைகளை சொல்கிறேன். ஒருவன் அதிகமாக புத்தகம் வாசிக்கிறான். புத்தக புழுவாக இருப்பதால் வழக்கம்போல மனைவி இவனை மதிப்பதில்லை. படித்துப்படித்து கண் கெட்டுபோய்விடுகிறது. சோடாபுட்டி கண்ணாடி ஒன்றை போட்டுக்கொண்டு மீண்டும் அதிகமாக வாசிக்கிறான். அலுவலகத்திலும் அவன் புத்தகம் வாசிக்க தடை போடுகிறார்கள். அப்படி ஒருநாள் மதிய சாப்பாட்டிற்கு பின் யாருக்கும் தெரியாமல் அலுவலகத்தின் சீக்ரெட் லாக்கருக்குள் அமர்ந்து வாசித்துகொண்டிருக்கிறான். அந்த சமயம் அந்த நகரத்தில் ஒரு அணுகுண்டு விழுந்து அந்த ஊரே அழிந்துவிடுகிறது. இவன் லாக்கரில் இருந்ததால் தப்பித்துக்கொள்கிறான். வெளியே வந்து பார்க்கும்போது அந்த ஊரே இல்லாமல் இருக்கிறது. இவன் வீடும் முற்றிலுமாக அழிந்துவிடுகிறது நகரத்தில் இவன் மட்டும் தனியாக சுற்றி வருகிறான். தனிமை கொஞ்சம் கொஞ்சமாக அவனை பீடிக்கத் துவங்குகிறது. தற்கொலைக்கு தன்னை தயார்செய்யும்போது அந்த நகரத்தின் நூலகம் அவன் கண்ணுக்கு தெரிகிறது. வேகமாக ஓடி அங்கு சிதறிக்கிடந்த புத்தகங்களை ஒன்று திரட்டுகிறான். ஒவ்வொரு மாதம் இவ்வளவு படிக்க வேண்டும் என்று பிரித்து வைக்கிறான். சாப்பாடு இல்லை தண்ணீர் இல்லை ஆனால் புத்தகம் இருக்கிறது என்பது அவனுக்கும் பெரிய ஆறுதலாக இருக்கிறது. அப்போதுதான் அந்த துர்சம்பவம் அரங்கேறுகிறது. இடுபாடுகளுக்கு இடையே அவன் நடக்கும்போது இடறி கீழே விழுகிறான். அவனது சோடாபுட்டி கண்ணாடி கீழே விழுந்து நொறுங்கிவிடுகிறது. அதோடு படமும் முடிகிறது.

எல்லா கதைகளிலும் கடைசியில் இப்படியான ஒரு திருப்பம் இருக்கும். எல்லாம் அதீத கற்பனைகள். இன்னொரு கதை. மார்கெட் இழந்த ஒரு நடிகை தனது படங்களை தொடர்ந்து பார்த்துக்கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவளது அழகு சிதைந்துபோய்விடுகிறது, அந்த உண்மையை அவள் தனது சக நடிகனை பார்க்கும்போது புரிந்துகொள்கிறாள். இந்த நிஜ வாழ்வை விடுத்து ஒருநாள் தான் பார்த்துக்கொண்டிருந்த படச்சுருளுக்குள்ளாக சென்றுவிடுகிறாள். தான் சென்றுவிட்டதை தெரியப்படுத்த  தன் கணவனுக்கு ஓடிக்கொண்டிருக்கும் அந்த படத்தின் வழியாக ஒரு ஷாலை வீசி எறிகிறாள் அது திரையை தாண்டி அவனுக்கு கிடைக்கிறது. மீண்டும் சொல்கிறேன், தேர்ந்த perception இல்லாமல் இம்மாதிரியான கதைகளை படமாக எடுக்க முடியாது. எல்லா கதைகளும் மிகவும் சுலபமாக கட்டமைக்கப்பட்டது, ஆனால் வாசிப்பு இல்லாமல் ஒருபோதும் இப்படி பட்ட படங்கள் சாத்தியமே இல்லை.

வாழ்க்கை எல்லாருக்கும் பல சமயங்களில் கசப்பான விஷயங்களைதான் தருகிறது. அதிலிருந்து விடுபட நாமும் ஒரு Twilight Zoneல் தஞ்சமடைய வேண்டியிருக்கிறது. நமது ஊடகங்கள் கட்டமைக்கும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சினிமாவை மையப்படுத்தியதாக இருக்கிறது. அரசியலும் பெரும் மனச்சோர்வை தருவதாகதான் இருக்கிறது. அந்த வகையில் Twilight Zone வாழ்வின் மீதான சலிப்பை நீக்கி உற்சாகத்தை வழங்குகிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் Twilight Zone அதற்கு பிறகு வந்த எத்தனையோ படங்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கிறது. முன்பு குறிப்பிட்டிருந்த Black Mirror தொடரிலும் இதன் நுணுக்கங்களை பார்க்க முடியும். இனம் மொழி தேசம் இவற்றை கடந்து Twilight Zone அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. அங்கே உங்களுக்கான சாகசங்கள் காத்திருக்கின்றன. இன்னும் எத்தனையோ அற்புதங்களை Twilight Zone தன்னகத்தே கொண்டிருக்கிறது.

மாதிரியான கதைகள் கொண்ட எந்த படங்களும் பார்த்துவிடுவேன். ஆனால் இப்போது Money Heist பார்க்காதவர்களை நம் சமூகம் ஒதுக்கி வைத்துவிடும் என்ற பதற்றத்தால் முதல் சீசன் பார்த்து முடித்தேன். கூடவே சேர்ந்து The Inmates என்ற தொடரும் பார்த்தேன். இரண்டு தொடர்களும் அற்புதமாக இருக்கிறது. அதுவும் The Inmate குறித்து பேச நிறைய இருக்கிறது. மெக்ஸிக்கன் சிறைச்சாலை ஒன்றில் நடக்கும் நிகழ்வுகள்தான் கதை. அந்த தொடரின் இசையும் உடலெங்கும் பச்சைக் குத்தி திரியும் கைதிகளும் மாற்று பாலினத்தவர்களும் இன்னும் குடி புகை எல்லாம் அமெரிக்காவில் (ஐரோப்பாவிலும்) ghetto என்று சில நகரங்களை ஒதுக்கி வைத்திருப்பார்கள் – ஒதுக்கப்பட்ட இடம் – அவைகளை ஞாபகப்படுத்தின. ஹாலிவுட் சினிமா அழகான நகரங்களை மட்டுமே காட்டுகிறது. என்றாவது இம்மாதிரியான ghetto உள் சென்று வந்தால் அமெரிக்கா பற்றிய புரிதல்கள் மாறிவிடும். The Inmate தொடரில் வரும் சிறைச்சாலை இம்மாதிரியான ஒரு ghettoதான். நான் இப்போது வசிக்கும் இடம் ஒரு ghetto – முழுவதையும் ghetto என்று சொல்லிவிட முடியாது ஆனால் பாதி இடம் அப்படிதான் இருக்கும். எப்போதாவது Dudly Stationல் பேருந்து மாற நேர்ந்தால் அங்கிருப்பவர்களின் வாழ்வியலை கவனிப்பேன். கஞ்சா நெடி, கெட்ட வார்த்தைகள், அடிதடி, போலீஸ் அடக்குமுறை. நான் பார்த்து வளர்ந்த வாழ்வியலுக்கு நேரெதிரான வாழ்க்கை முறை. அதன் காரணமாகவே அந்த வாழ்வியல் மீது ஒரு ஈர்ப்பு. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அங்கு என்னால் இருக்கவே முடியாது. அது வேறு ஒரு உலகம். இந்த நோய்மையின் காலத்தில் அவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என யோசித்துப்பார்க்கிறேன்.

The Inmate பார்த்தபோது இதெல்லாம் மனதில் வந்து போனது.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
 2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
 3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
 4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
 5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
 6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
 7. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
 8. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
 9. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
 10. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
 11. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
 12. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
 13. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
 14. பெண்களுடனான உரையாடல்- வளன்
 15. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
 16. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
 17. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
 18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
 19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
 20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
 21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
 22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
 23. மூன்று இசை தேவதைகள் - வளன்
 24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்