தீராத பாதைகள்
இலையுதிர் காலம் ஆரம்பித்துவிட்டது. நான்கு வருடங்களுக்கு முன் பாஸ்டன் வந்தபோது சின்னக் குழந்தையை போல ஒவ்வொன்றையும் ரசித்தேன். வெயிலையும் மழையையும் மட்டுமே அறிந்திருந்த நான், பாஸ்டனின் இலையுதிர் கால அழகில் மயங்கிப் போனேன். ஒவ்வொரு பருவ நிலைக்கு ஏற்றார் போல பாஸ்டன் நகரம் தன்னை அலங்கரித்துக் கொண்டேயிருக்கும். இலையுதிர் கால அழகை நினைக்கும் போதெல்லாம் வின்சென்ட் வான்காவின் ஓவியங்கள்தான் நினைவுக்கு வரும். அவ்வளவு வண்ணமயமாக இருக்கும்! பலருக்கும் இலையுதிர்காலம் என்பது வரவிருக்கும் குளிர்காலத்தின் சமிக்ஞை. இக்காலத்திற்கு பிறகு பகல் நேரம் குறைந்தும் இரவு நேரம் நீண்டும் இருக்கும்.
வருடத்தின் இந்நேரத்தில்தான் ஆப்பிள், பரங்கிப்பழம் போன்ற பயிர்கள் அறுவடையாகும். நியூ இங்கிலாந்து என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஆப்பிள் பெருமளவில் விளைகிறது. ஆப்பிள் விளைவதற்கான சரியான தட்பவெப்பம் இப்பகுதிகளில் நிலவுவதால் செப்டம்பர் மாத இறுதிலிருந்து அக்டோபர் மற்றும் முன் நவம்பர் மாதம் வரையிலும் பலரும் ஆப்பிள் பறிப்பதை பொழுதுபோக்காக செய்கிறார்கள். தனியார் ஆப்பிள் தோட்டங்களில் முதல் தரமான ஆப்பிள்கள் அறுவடையான பின்பு மீதமிருக்கும் ஆப்பிள்களை மக்களை பறித்துச் செல்ல அனுமதிக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது விவசாயம் இங்கே லாபகரமான தொழிலாகவே தெரிகிறது. முதல் ரக பழங்களை விற்ற பிறகு மீதமிருக்கும் பழங்களை மக்களை வைத்தே பறிக்கச் செய்து மக்களுக்கே விற்கிறார்கள். மேலும் ஆப்பிள் தோட்டத்திற்குள் நுழையவும் பழங்களை பறிக்கவும் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும். இதனால் பண்ணை வைத்திருப்பவர்களுக்கு இரண்டு மடங்கு லாபம் வருகிறது. இதுபோக பழம் பறிக்க வரும் மக்கள் வாங்கிச் செல்ல பண்ணையில் கடைகளும் வைத்திருக்கிறார்கள். தோட்டத்திலிருந்து பறிக்கப்படும் பழங்களிலிருந்து சைடர் தயாரித்து விற்பனை செய்வார்கள். ஆப்பிள் சைடர் கலந்து தயாரிக்கப்படும் டோனட்டுகள் பயங்கரமாக விற்பனையாகும். எனக்கு சைடர் வெறுமனே அருந்தினால் பிடிக்காது. நீங்கள் மது அருந்துபவராக இருந்தால் இப்படி முயற்சித்துப் பாருங்கள்: இலவங்கப்பட்டை இடித்து போட்ட சைடரை மெல்லிய தணலில் வெதுவெதுப்பாக்க வேண்டும். நான் இரண்டு கிராம்பு தட்டிப்போட்டுக் கொள்வேன். அந்த மிதமான சூட்டில் இருக்கும் பானத்தை விஸ்கியில் கலந்து அருந்தினால் சொர்கமாக இருக்கும். ஆப்பிள் சைடர் வினிகர் உடல் எடையை குறைக்க பயன்படுத்தப்படுகிறது. பேலியோ உணவில் ஆப்பிள் சைடர் வினிகர் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் சைடரிலிருந்து பியர் தயாரிக்கப்படுகிறது. சமீபத்தில் பியர்களை கொண்டுத் தயாரிக்கபடும் காக்டெயில் அருந்தினேன். அதன் பெயரே வசீகரமாக இருந்தது – ஸ்னேக் பைட்- பாம்பு கடி. Angry Orchard சைடர் பியரின் மேல் அடர்ந்த கின்னஸ் பியரை மெதுவாக ஊற்ற வேண்டும். பார்க்கவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்! சைடர் பியரின் மெல்லிய புளிப்பும் இனிப்பும் கின்னஸ் பியரின் ஆழந்த துவர்ப்பும் கலந்து நாக்கில் பாம்பு கடித்தது போன்று விறுவிறுவென இருக்கும்.
ஆப்பிளுடன் சோளமும் பரங்கியும் இந்தக் காலத்தில் அறுவடையாகிறது. பரங்கிப் பழங்களை மசித்து இலவங்கம் சேர்த்து செய்யப்படும் Pie என்கிற இனிப்புப் பதார்த்தம் ருசியாக இருக்கும். சமைப்பதைவிட அலங்காரத்திற்காகவே பெரும்பாலும் இப்பழங்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன. இலையுதிர்காலத்துடன் வரும் அக்டோபர் ஆரம்பித்தவுடன் அனைத்து வீடுகளும் கோரமான பேய் பொம்மைகளாலும் அலங்கரிக்கப்பட்ட பரங்கி பழங்களாலும் அணிசெய்யப்படுகிறது. இவ்வாறாக மக்கள் ஹேலோவீனை கொண்டாட தயாராகிறார்கள். கிறிஸ்துமஸுக்கு அடுத்தப்படியாக பெருமளவில் செல்வம் ஈட்டித்தரும் விழாவாக ஹேலோவீன் இருக்கிறது.
ஏன் ஹேலோவீன் கொண்டாடுகிறார்கள்? தன்னை உலக நாடுகளின் மீட்பராக காட்டிக்கொள்ளும் அமெரிக்காவில் ஏன் இப்படியான ஒரு திருவிழாவை கொண்டாட வேண்டும்? இது போன்றதொரு விழா வேறெங்கும் இருக்கிறதா? கிறிஸ்துவ மதத்தில் இறந்தோரை நினைவுகூறும் நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் இரண்டாம் நாள் கொண்டாடப்படுகிறது. தென்னமெரிக்க நாடுகளில் இது மதம் சார்ந்த விழாவாக மட்டும் இல்லாமல் கலாச்சார விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘கோக்கோ’ (Coco) என்ற அனிமேஷன் திரைப்படத்தை பார்க்க தவறவிடாதீர்கள். ஏற்கனவே இப்படத்தை ம்யூசிக்கல் குறித்த கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். தமிழ்நாட்டில் கிறிஸ்துவர்கள் இந்நாளை ‘கல்லறை திருவிழா’ என்று அழைப்பார்கள். கலாச்சார ரீதியில் நமக்கும் தென்னமெரிக்கர்களுக்கும் பெரிய வேறுபாடு இருக்கவில்லை என்று தோன்றுகிறது. தென்னமெரிக்கர்களின் Day of the deadல் இறந்தவர்கள் விரும்பிய உணவு பொருள்களை படைத்தும் அவர்களின் நினைவாக கல்லறைகளை அலங்கரித்தும் கொண்டாடுகிறார்கள். நாமும் இதை கடைபிடித்து வருகிறோம். நான் சிறுவனாக இருந்த போது எங்கள் முன்னோர்களின் கல்லறைக்கு சென்று சாம்பிராணி இட்டு வணங்கி வருவோம். அவர்களின் விருப்ப உணவு வகைகளை செய்து வரும் யாவருக்கும் பரிமாறுவோம். இறந்தவர்கள் பெரிதும் விரும்பிய பொருள்களை வாங்கி தானமாகவும் தருவோம். உதாரணமாக என் தாத்தாவுக்கு மூக்குப்பொடி போடும் பழக்கமிருந்தது. அதுவும் கடைகளில் கிடைக்கும் பாக்கெட் மூக்குபொடியல்ல, திருச்சியில் கிடைக்கும் பட்டணம் பொடி என்ற ஒன்று. பாரம்பரியமாக இடித்து பொட்டலம் கட்டித் தருவார்கள். அதற்காகவே ஒரு பெட்டி வைத்திருப்பார். உருளை வடிவில் பாதி கட்டை விரல் அளவில் இருக்கும். ஆள்காட்டி விரல் மட்டுமே உள்ளே நுழையும். ஒற்றை விரலால் பொடியை எடுத்து மூக்கில் வைத்து உறிஞ்சுவார். இப்போதெல்லாம் யாரும் பொடி போடுகிறார்களா?
ஆகவே கல்லறை திருவிழாவில் அப்பா பட்டணம் பொடி வாங்கி தானமாகத் தருவார். அதே போல தாத்தாவுக்கு சுருட்டு புகைக்கும் பழக்கம் இருந்தது. தாத்தாவுடன் சேர்ந்து தாத்தாவின் அக்கா ஒருவரும் சுருட்டு புகைப்பார். அதிலும் தாத்தாவுக்கு பாலக்கரை சுருட்டு மிகவும் பிடிக்கும். பாலக்கரை சுருட்டு உலகப்புகழ் பெற்றது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதை ஒன்றில் குற்றவாளி ஒருவன் பாலக்கரை சுருட்டு பிடிப்பவனாக இருப்பான். அவன் புகைத்து விட்டுச் சென்ற சுருட்டின் மீதி அவனை பிடிக்கும் ஆதாரமாக இருக்கும். அமெரிக்காவில் சிகார் புகைப்பது ஒரு பெரும் கொண்டாட்டம். சிகார் என்பது கொஞ்சம் பெரிய சுருட்டு. புகையிலைகளை கத்தையாக சுருட்டி வைத்திருப்பார்கள். க்யூபாவிலிருந்து (கூபா என்பதே சரியான உச்சரிப்பு) வரும் சிகார் தரமானதாக இருக்கும். ஆனால் அமெரிக்காவில் க்யூபாவின் சிகார் புகைப்பது சட்டவிரோதமானது. தொமினிக்கன் குடியரசிலிருந்து வரும் சிகார் நன்றாக இருக்கும். ஆனால் விலை கொஞ்சம் அதிகம். அயர்லாந்திலிருந்து வரும் சிகார் இன்னம் கொஞ்சம் பிரபலம். ஏனெனில் புகையிலைகளை விஸ்கியில் ஊறவிட்டு பின்னர் உலர்த்தி சிகார் தயாரிக்கிறார்கள். போர்பன் மற்றும் சிகார் எப்போதும் இணைந்தே இருக்க கூடியவை. எதையோ சொல்ல வந்து போர்பன் மற்றும் சிகாரில் வந்து நிற்கிறேன். இறந்தவர்களை நினைவுகூர்வதில் நம்மவர்களும் தென்னமெரிக்கர்களும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் மட்டுமல்லாது நம் கலாச்சாரங்கள் அனைத்திலும் முன்னோர்களை நினைவுகூர்வது இப்படியாகவே இருந்து வந்திருக்கிறது. நடுகல் நட்டு நாம் முன்னோர்களை வணங்கினோம். இன்றும் கிராமங்களில் தெய்வங்களாக நாம் வழிபடும் முன்னோர்களுக்கு ஆடு வெட்டுவதும் சாராயம் படைப்பதும் நிகழ்கிறது.
சரி இதற்கும் Halloweenக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா? இருக்கிறது. ஹலோவீன் என்பது நான் மேற்சொன்ன நீத்தார் நினைவு நாளுக்கு முன்னதாக வரும் ஒரு கிறிஸ்துவ திருவிழாவை குறிக்கும். எல்லா வருடங்களும் ஹேலோவீன் அக்டோபர் இறுதியில் கொண்டாடப்படுகிறது. நவம்பர் ஒன்றாம் நாள் கிறிஸ்துவர்களுக்கு அனைத்து புனிதர்களின் திருவிழா. கிறிஸ்துவர்களின் நம்பிக்கையில் புனிதர் பட்டம் பெற்றவர்கள் சொர்கத்தில் கடவுளுடன் இருக்கிறார்கள். அவர்கள் கடவுளிடம் பூமியில் இருக்கும் நமக்காக பரிந்துப்பேசுகிறார்கள். ஓவியங்களில் புனிதர்களை குறிக்க அவர்களின் தலைக்கு பின்புறம் ஓர் ஒளிவட்டம் வரையப்படும் பார்த்திருக்கிறீர்களா? அவ்வொளி வட்டம் இருப்பவர்கள் புனிதர்கள் – Holy என்று பொருள். அதிலிருந்து வந்ததுதான் ஹேலோ – hallow. கிறிஸ்துவ சம்பிரதாயத்தில் ஒரு நாள் என்பது முந்தைய நாள் மாலையே தொடங்கிவிடும். எனவேதான் கிறிஸ்துவ கொண்டாட்டங்களில் evening celebrations முக்கியமானது. இந்த புனிதர் அனைவர் திருநாளிலும் முதல் நாளான அக்டோபர் இறுதி மாலையில் தொடங்கிவிடுகிறது. அதையே ஹேலோவீன் – அதாவது புனிதர் அனைவர் திருநாளின் மாலை நேரமாக கொண்டாடப்படுகிறது.
இது கிறிஸ்துவ திருவிழாவாகப் பார்க்கப்பட்டாலும் செலடிக் யுகத்தில் Samhain என்னும் தெய்வத்துக்கு நன்றி சொல்லும் விழாவாக இருந்து வந்திருக்கிறது. வடஐரோப்பிய கண்டத்தில் பரவி வாழ்ந்த செலடிக் இனத்தவர்கள் மற்றவர்களால் காட்டுமிராண்டிகள் என ஒதுக்கப்பட்டார்கள். ஓம்னியா இசை குழு பற்றிய எழுதிய சமயம் செலடிக் காலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே வாழ்ந்த இம்மக்களின் வழக்கங்கள் மற்றவர்களின் வழக்கங்களிலிருந்து மாறுபட்டிருந்தது. அதுவே அவர்கள் ஒதுக்கப்பட முக்கிய காரணமாக இருந்தது. கிறிஸ்துவம் அதிகாரத்துவம் பெற்று வந்த சமயம் ஐரோப்பிய கிறிஸ்துவ சிந்தனை முறைகளுக்கு மாற்றாக இருந்தவர்களை முற்றிலுமாக ஒழிக்க முற்பட்டது. ஐரோப்பிய கிறிஸ்துவம் என்று குறிபிடப்பட்டிருப்பதை கவனியுங்கள். ஏனெனில் முன்பு கிழக்கத்திய கிறிஸ்துவமும் மேற்குலக கிறிஸ்துவமும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டிருந்தது. அப்போதுதான் சூன்யகாரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு பல சிறிய மதத்தினர் கொலை செய்யப்பட்டார்கள். அப்படி தவறுதலாக கொல்லப்பட்ட ஆர்க் நகரத்தின் ஜோன் பிற்காலத்தில் கிறிஸ்துவ மதத்தால் புனிதையாக வணங்கப்பட்டாள். அமெரிக்காவிலும் சூனியக்காரிகள் என்றறியப்பட்ட பலர் கொல்லப்பட்டார்கள். முதல் கொலை அரங்கேறியது பாஸ்டன் நகரில்தான். உலகின் மிகப் பழமையான பூங்காவாக இருக்கும் இன்றைய பாஸ்டன் காமன் அந்நாள்களில் ஆடு மாடு மேய்க்கும் நிலமாக இருந்தது. அங்கிருந்த மரத்தில் சூனியக்காரிகள் என்று அறியப்பட்டவர்களை மக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டு கொலை செய்தார்கள். அதன்பின் மேஸசூஸட்ஸ் – சேலம் நகரில் பலர் எரித்தும் தூக்கிலிடப்பட்டும் கொல்லப்படுகிறார்கள். என் கணிப்புப்படி ஹேலோவீன் புனிதமான திருவிழாவிலிருந்து அகோரங்களின் திருவிழாவாக மாறியதற்கு இஃது ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஹேலோவீனில் அலங்காரமாக வைக்கப்படும் கோரமான உருவங்கள் மனிதனின் இறப்புக்கு பிறகு நடக்கும் உடலியல் மாற்றங்களை குறிக்கிறது. எவ்வளவு அழகானவர்களாக இருந்தாலும் இறந்து மண்ணில் புதைக்கப்பட்ட பிறகு அவலட்சணமாக மாறிவிடுகிறார்கள். உலக வாழ்வை வெறுத்து சன்னியாசம் ஏற்ற பல்வேறு சமய துறவிகள் மண்டையோடு வைத்திருந்ததும் இதனால்தான். ஏற்கனவே சொன்னது போல வணிகத் திருவிழாவாக எஞ்சியிருக்கும் ஹேலோவீன் இறப்புக்கு பிறகு மனிதர்களுக்கு என்ன நடக்கும் என்பதை அமைதியாக கூறுகிறது. மனித வாழ்வு உண்மையில் நிலையற்றது. நம்பிக்கைகள் மட்டுமே இவ்வாழ்வை பாதுகாத்து வருகிறது. ஹேலோவீனோ புனிதர்கள் அனைவரது திருநாளோ அல்லது நீத்தார் நினைவு நாளோ இயல்புகளை கடந்து இருக்கும் ஏதோ ஒன்றை நமக்கு சொல்கிறது.
குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அவர்கள் விதவிதமான உடைகள் அணிந்து பக்கத்து வீட்டுகாரர்களிடம் சென்று பயமுறுத்தி மிட்டாய் வாங்கி வருவது இங்குள்ள மரபு. என்னுடைய ஹேலோவீன் பாம்புக்கும் சிலந்திக்கும் பயப்படும் நண்பர்களை பயமுறுத்துவதுதான். என் நண்பர்கள் பலரும் பலவிதமான பயங்கள் இருக்கின்றன. பெரிய பெரிய பொம்மைகளுக்கு பயப்படுகிறார்கள். இது யாவற்றுக்கும் அறிவியல் உலகம் ஒரு பெயர் வைத்திருக்கிறது. அப்பெயர்களில் எனக்கு பெரிய ஆர்வமில்லை. நம் இயக்குனர்களில் ஒருவருக்கு இதில் ஆர்வம் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உனக்கு எதைக் கண்டால் பயம் என்று கேட்கிறீர்களா? சப்தங்கள்தான் என் பயம். சின்ன வயதிலிருந்தே அந்த பயம் இருக்கிறது. பஸ்ஸில் பயணம் செய்யும் போது ட்ரைவர் ஒலிப்பானை இயக்கினால் ஆத்திரமாக வரும். ஆனால் அப்படியே பழகிவிட்டதால் பயம் கொஞ்சம் விலகியிருந்தது. அமெரிக்கா சென்று வந்த பிறகு சப்தங்களின் மீதான பயம் அதிகரித்திருக்கிறது. இங்கே அமைதியாகவே இருந்துவிட்டு இந்தியாவில் அரை மணி நேரம்கூட வெளியே இருக்க முடியவில்லை. தலையை சுற்றி வாந்தி வருவது போன்றிருக்கிறது. எங்கள் வீட்டு நாய் குறைக்கும் போது உடலே நடுங்கிப்போகிறது. நண்பர்களும் உறவினர்களும் ‘சீன் போடாத!’ என்கிறார்கள் என்னையும் மாற்றிக் கொள்ள முடியவில்லை மற்றவர்களுக்கும் என்னை புரியவைக்க முடியவில்லை.
ஹேலோவீனுக்கு பிறகு அமெரிக்கா அடுத்த முக்கியமான ஒரு திருவிழாவுக்கு தன்னை தயாரித்துக் கொள்ள துவங்கிவிடும். அடுத்த வாரம் அந்தத் திருவிழா குறித்து எழுதுகிறேன்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
- இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
- கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
- ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
- "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
- வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
- Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
- இசை நாடகங்களும் படங்களும் – வளன்
- கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
- அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
- கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
- சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
- பெண்களுடனான உரையாடல்- வளன்
- புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
- ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
- மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
- Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
- Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
- தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
- இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
- வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
- ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
- மூன்று இசை தேவதைகள் - வளன்
- 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்