அருணாச்சல பிரதேச அனுபவங்களை எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். அவ்வனுபவங்கள் கனவை போலவே என்னுள் இருக்கின்றன. ‘தீராத பாதைகள்’ ஏதோ ஒரு புள்ளியில் முடித்துதானே ஆக வேண்டும். எனவே அருணாச்சல அனுபவங்களை பிறகொரு முறை எழுதலாம் என்று நினைக்கிறேன். இமயமலை பலரும் சொல்வதை போன்று அமானுஷ்யங்கள் நிறைந்த ஒரு இடம்தான். நான் இருந்த இடம் இமயத்தின் சரிவு. அருணாச்சல பிரதேசத்தில் ‘ஆலோ’ என்ற இடத்திலிருந்து ‘மிச்சுகன்’ என்னும் சுற்றுலாதலத்திற்கு செல்லும் வழியில் ‘தத்தோ’ என்ற கிராமம். இந்திய – சீன எல்லை. இன்று பாஸ்டன் நகரில் இருந்து கொண்டு தத்தோ வாழ்வை நினைத்து பார்க்கையில் உண்மையாகவே கனவிலிருந்து எழும்பிய உணர்வு வருகிறது. பாஸ்டன் நகருக்கு வந்த நான்கு வருடத்தில் ஒரேயொருமுறை முப்பது வினாடிகள் மின்சாரமின்றி இருந்தேன். வெறும் முப்பது வினாடிகள். தத்தோவில் நான் இருந்த மூன்று மாதத்தில் இரண்டரை மாதங்கள் சுத்தமாக மின்சாரம் இல்லை. இரவில் ஒரு மணி நேரம் ஜென்ரேட்டர் உதவியுடன் மின்சாரம் புழங்குவோம். இதையெல்லாம் தான் விரிவாக எழுத வேண்டுமென்று ஆசைபடுகிறேன். நீங்கள் யாருமே நினைத்து பார்த்திராத சாகச வாழ்வு. மின்சாரம் இல்லை, செல்போன் இயங்காது, நம் மூதாதையர்களின் கதையை சொல்லும் போது ‘அந்த காலத்தில் இப்படியெல்லாம் இருந்தார்கள்’ என்று ஒரு நம்ப முடியாத கதையை சொல்வார்கள் அல்லவா? அதை நேருக்கு நேர் கண்ட அனுபவம். அருணாச்சல வாழ்வை முன்பே கணித்திருந்ததால் நிறைய புத்தகங்களை எடுத்துச் சென்றுவிட்டேன். நான் பணிபுரிந்த பள்ளியிலும் நல்ல நூலகம் இருந்தது எனவே புத்தகங்கள் மட்டுமே என் துணையாக இருந்தது. அந்த சமயம் சாரு நிவேதிதா ‘யோகியின் சுயசரிதை’ மற்றும் ‘இமயத்து ஆசான்கள்’ என்ற இரண்டு புத்தகங்களை பரிந்துரை செய்திருந்தார். பொதுவாக சாமியார்கள் எழுதும் புத்தகங்களை நான் படிப்பதில்லை. நம் தமிழ் இலக்கியவாதிகள் சொல்லாத எதையும் இவர்கள் சொல்லிவிட மாட்டார்கள் என்ற நினைப்புதான். எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளில் வரும் பல கதாப்பாத்திரங்கள் ஜென் துறவியை போன்றே பேசுபவர்கள். ஜெயமோகன் இந்திய தத்துவங்களில் சிலம்பம் விளையாடுபவர். சாரு நிவேதிதா என்னுடைய ஞானதகப்பன். இதில் தனியாக துறவிகளின் புத்தகங்களை படிக்க வேண்டுமா? ஆனால் வேறு வழியில்லாமல் முதலில் இமயத்து ஆசன்கள் படிக்க துவங்கினேன். புதையல் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கை நொடிந்து போகும் தருணங்களில் அதிலிலுள்ள பல்வேறு நிகழ்வுகள் என்னை தேற்றியிருக்கின்றன.

இமயத்து ஆசான்கள் முடித்தவுடன் பல நாட்கள் டால்ஸ்டாய், விக்டர் ஹூகோ என்று கொஞ்ச நாட்கள் கழிந்தது. சலிப்பேறிய ஒரு நாளில் ‘யோகியின் சுயசரிதையை’ கையில் எடுத்தேன். மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா நிலை. பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை அவரே எழுதியிருக்கிறார். நான் சந்தித்த இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் இந்த புத்தகத்தை பரிந்துரைத்திருந்தார்கள். கொஞ்ச பக்கங்கள் திருப்பிய பிறகு தமிழ் சினிமா ஒன்றின் காட்சிகளை ஞாபகப்படுத்தியது. சலித்துவிட்டது. கொஞ்ச நாள் கழித்து மீண்டுமாக படித்தேன். மஹாவத்தார் பாபாவின் பகுதிகள் சுவாரசியமாக இருந்தது. அதன்பிறகு ஓர் ஈர்ப்பு. ஓரிடத்தில் குரு யுக்தேஷ்வர் யோகானந்தருக்கு ஸ்டாபெரி பழங்களை உண்ணக் கொடுக்கிறார். அதை உண்ட யோகானந்தருக்கு அதன் சுவை பிடிக்கவில்லை. அதையறிந்த குரு பிற்காலத்தில் இந்த பழங்களை விரும்பி உண்பாய் அப்போது இதை வேறுமாதிரி உனக்கு தயார் செய்து தருவார்கள் என்கிறார். அதாவது நிகழ்காலத்தில் இருந்து கொண்டு வருங்காலத்தை கணித்துக் கூறுகிறார் குரு யுக்தேஷ்வர். இதையெல்லாம் படிக்கும் போது கொஞ்சம் அதீதமாக திரித்து கூறுகிறார் என்று தோன்றும். அதே சமயம் மஹாவத்தார் பாபா வந்து செல்லும் இடங்களில் யோகானந்தா வாசகர்களிடம் இதெல்லாம் அதீத கற்பனைகள் அல்ல என்பதையும் நேராக சொல்லுகிறார். புத்தகம் படிக்க படிக்க தெளிவும் குழப்பமும் ஒரு சேர நம்மை ஆக்கிரமிக்கும். யோகானந்த இந்து மதத்தை அமெரிக்கர்களுக்கு அறிமுகப்படுத்த கப்பலேறி அமெரிக்கா சென்றார். அங்கு எங்கெங்கு என்னென்ன பேசினார் போன்ற செய்திகள் விரவிக்கிடந்தது. நடுநடுவே அதிசய பதிவுகள். அப்படியே படிப்பதை நிறுத்திவிட்டு மற்ற வேலைகளில் கவனம் செலுத்தினேன். ஆனால் அடிமனதில் அந்த புத்தகத்தை பற்றிய விஷயங்கள் ஓடிக்கொண்டேயிருந்தது. இரண்டு நாளுக்கு பிறகு நான் வசித்த இடத்திலிருந்து கீழே 90 கிலோ மீட்டரில் வசித்த தமிழ் நண்பனிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது (ஆம், நாங்கள் கடிதத்தில்தான் உரையாடிக்கொண்டோம். அஞ்சல் அலுவலகம் வழியாக செல்லும் கடிதமல்ல, அந்த காலத்தில் தூதுவிடுவார்கள் அல்லவா? அதைபோன்ற கடிதங்கள். அவன் இடத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளிடம் தமிழில் கடிதம் எழுதி அனுப்புவேன். சில வாரங்கள் கழித்து அவன் அவ்வாறாக பதில் கடிதம் எழுதுவான்). அக்கடிதத்தில் உடனே கிளம்பி வா நாம் இருவரும் மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்கிறோம் என்று எழுதியிருந்தான். கடிதம் கிடைத்த மறுதினம் கிளம்பி இரண்டு நாளுக்கு பிறகு அவனிடம் சென்று மேலும் விசாரித்தேன். அவனுக்கும் மேஸசூசட்ஸ் மாகாணத்தின் பெயரை உச்சரிப்பதில் பெரும் பிரச்சனையிருந்தது. பாஸ்டன் செல்கிறோம் என்று சொன்னான். நாங்களிருந்த இடத்திலிருந்து இட்டாநகர் சென்ற களைப்பு மிகுந்த பெரும் பயணத்தில் மீண்டுமாக யோகானந்தரின் புத்தகத்தை மீண்டும் திறந்து படிக்க துவங்கினேன். அவர் அமெரிக்கா சென்ற அனுபவத்தை விவரிக்கையில் அவர் கப்பல் பாஸ்டன் நகரத்தில் கரையடைந்தது என்று எழுதியிருந்தார். உடலெல்லாம் சிலிர்க்க புத்தகத்தை மூடிவைத்துவிட்டேன். அதன்பிறகு அதை படிக்கவேயில்லை.

இங்கிலாந்தின் லிங்கன்ஷையர் (Lincolnshire) என்னும் இடத்தில் வி(த)ஹம் (Witham) ஆற்றங்கரையில் அமைந்த ஒரு சிறு கிராமத்தின் பெயர் பாஸ்டன். மிகவும் பழமை வாய்ந்த பாஸ்டன் கிராமம் ‘பாஸ்டன்’ என்ற பெயர் பெற்றதுக்கு ஒரு காரணம் இருக்கிறது. வெகுகாலத்திற்கு முன்னர் அக்கிராமத்தில் ஒரு பெனடிக்டைன் துறவி வாழ்ந்து வந்தார். கிராமத்தில் பெரும்பான்மையானவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். மீன் பிடிக்க செல்லும் முன் மீனவர்கள் துறவியிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு செல்வது வழக்கம். காலபோக்கில் துறவிக்கு அதுவே அடையாளமாகி போனது, அதாவது அவர் பெயரை யாரும் அறிந்திருக்கவில்லை. அவர் எந்த சபை துறவி என்பதை அறியவில்லை. படகுகளை ஆசீர்வதிப்பவர் என்று மட்டுமே அறியப்பட்டார். அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிச் சென்றால் படகுகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. எனவே அவரை Botulph என்றழைத்தார்கள். பழைய ஆங்கிலத்தில் Bot என்றால் படகு (Boat) என்றர்த்தம். Ulph என்பதற்கு பாதுகாவலர் (saver) என்றர்த்தம். காலப்போக்கில் Botulph என்ற பெயர் மருவி Botolph என்ற பெயர் நிலைத்தது. அவரின் பாதுகாவலில் இருந்த கிராமம் என்பதால் அவரது இறப்புக்கு பிறகு – பொட்டால்ஃபின் தோற்றம் பற்றிய எந்த குறிப்புகளும் கிடைக்கவில்லை ஆனால் இறந்தது 680 ஆம் ஆண்டு – அக்கிராமத்தின் பெயர் பொட்டால்ஃப் என்றே அழைக்கப்பட்டது. அதன்பின் பல மாற்றங்களுக்கு பிறகு பாஸ்டன் (Boston) என்று மருவி நிலைத்தது. முன்பே சொன்னது போல இங்கிலாந்தவர்கள் எங்கு குடியேறினாலும் அவ்விடத்திற்கு இங்கிலாந்தில் உள்ள நகரங்களின் பெயர்களை சூட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில் 1630 செப்டம்பர் 7 இல் ஜான் வின்த்ரப் (John Winthrop) தன் குழுவினருடன் பாஸ்டனில் (அமெரிக்கா) முதலில் குடியேறுகிறார். அதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன் திருப்பயணிகள் (Pilgrims) என்றறியப்பட்டவர்கள் குடியேறியதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் எப்படி தங்கள் மத நம்பிக்கைகளை சுதந்திரமாக பின்பற்ற இடம் தேடி ப்ளைமத் வந்தார்களோ வின்த்ரபின் குழுவினரும் அதற்காகவே வந்தார்கள். ஜான் வின்த்ரப் மற்றும் குழுவினர் Puritans என்றறியப்பட்டவர்கள் (Puritans கிறிஸ்துவ மதத்தில் இருக்கும் அசுத்தங்களை அகற்ற வந்தவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள். அதனால் மற்ற கிறிஸ்துவர்களால் ஒடுக்கப்பட்டு இங்கிலாந்திலிருந்து தப்பித்தவர்கள்).

இன்னொரு சுவாரசியாமன செய்தி, ஜான் வின்த்ரப் வருவதற்கு முன் இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர் மீன் பிடித்தல் மற்றும் கடல்சார் தொழில்கள் காரணமாக இந்த பகுதியை ‘ஷாமட்’ என்றழைத்தார்கள். எல்காங்கன் மொழியில் இதற்கு அர்த்தம் ‘படகுகளை நிறுத்துமிடம்’ (படகுகளை கண்டுபிடிக்குமிடம் என்பது நேர் மொழிப்பெயர்ப்பு). ஜான் வின்த்ரப் மேசசூஸட்ஸ் மாகாணத்தின் மூன்றாம் ஆளுநராக இருந்தார். இன்றும் வின்த்ரபின் நினைவிடம் பாஸ்டன் நகரின் மையத்தில் உள்ள Kings Chapel கல்லறையில் இருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் நமக்கு அமெரிக்க நகரம் ஒன்றின் வரலாறு தேவையா என்று தோன்றலாம். இதை எழுதுவதற்கு முன்பு எனக்கும் அப்படித் தோன்றியது. யோசித்துப் பார்க்கையில் வரலாறு என்பது என்ன? காலமும் (Time) இடமும் (Space) கலந்த ஒன்று தானே வரலாறு? காலம் கடந்துவிடுகிறது. அதில் வாழ்ந்த மனிதர்கள் மறைந்துவிடுகிறார்கள். இடம் அப்படியே இருக்கிறது. கடந்து போன காலத்தின் நினைவுகள் தற்போது இருக்கும் இடங்களில் அரூபமாக நிறைந்திருக்கிறது. பாஸ்டன் காமன் (Boston Common) செல்லும் போதெல்லாம் பலரை அங்கு சந்திக்கிறேன். எந்நேரமும் அந்த நிலம் கொண்டாட்டமாகவே இருக்கிறது. ஆனால் வரலாறு தெரிந்த ஒருவருக்கு அந்நிலம் வேறொரு பரிமாணத்தை வழங்குகிறது. இன்று பல்வேறு இடங்களில் பூங்காக்கள் இருக்கிறது. அமெரிக்காவில் முதன்முதலில் பொது பூங்கா என்று உண்டாக்கப்பட்டது பாஸ்டன் காமன் என்னும் இப்பெரும் நிலம் தான். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். பொது பூங்காக்கள் மேலை கலாச்சாரத்தில் மிக முக்கியமான இடமாக தெரிகிறது. இங்கிருக்கும் பெரும் பிரச்சனை தனிமை. குளிர் தனிமையை இன்னும் அடர்த்தியடையச் செய்துவிடுகிறது. இதை எல்லாம் தாண்டி நடக்கும் கொண்டாட்டங்கள் நகரின் பொதுவில் இருக்கும் இம்மாதிரியான பூங்காக்களில் கொண்டாடப்படுகிறது. கொண்டாட்ட நாட்களில் எந்தவித பேதமையும் இல்லாமல் எல்லோரும் இந்த பொதுவிடத்தில் சரிசமமாகிவிடுகிறார்கள். நம் கலாச்சாரங்களில் இது இன்னும் வளர வேண்டும் என்று நினைக்கிறேன். பொதுவிடங்களில் கூடுதல் ஒரு விடுதலை. ஜனநாயகம் ஏடுகளில் மட்டுமல்லாமல் இம்மாதிரியான பொதுவிடங்களில் அடையாளப்படுத்தப்பட வேண்டும். ரசனையின் அடிப்படையில் மக்கள் சிறு சிறு குழுக்களாக கூட வேண்டும். கொரோனா கொண்டு போனவைகளுள் இதுவும் ஒன்றாக இருந்துவிடக் கூடாது என்பதுதான் என் இப்போதைய பிராத்தனை.

பொது பூங்காவாக அமைக்கப்படுவதற்கு முன் பாஸ்டன் காமன் என்ற பெருநிலம் கால்நடைகளை மேய்க்கும் நிலமாக இருந்ததாம். 1690 களில் நடந்த சூனியக்காரிகளுக்கான வேட்டையில் முதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது இந்நிலத்தில்தான்.

‘இரண்டாயிரம் வருட பாரம்பரியம்’, ‘மூத்த குடி’, ‘தமிழன்டா’ என்று பெருமைபட்டுக் கொண்டாலும் இயல்பில் நாம் பெருமை பட வேண்டிய பலவற்றை சரியாக பராமரிக்கிறோமா? ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் இங்கே வரலாறு என்று போற்றி பாதுகாக்கிறார்கள். அதில் பெருமிதம் கொள்கிறார்கள். நான் வசிக்கும் பகுதிக்கு அருகில் ஒரு சிறிய இடத்தில் சிறிய நினைவுக்கல் இருக்கிறது. அதில் வாஷிங்டன் அங்கு வந்து தங்கள் படையினருக்கு மாமிசம் வாங்கிச் சென்ற குறிப்பு இருக்கிறது. வாஷிங்டன் அமெரிக்க தேசத்தின் முதல் ஜனாதிபதி. அவர் செய்த ஒரு எளிய செயல் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் நினைவுகூறப்பட காரணம் வரலாற்றை மதிக்கிறார்கள். வரலாற்றை சிறப்பு மிக்க இடங்களில் யாரும் இதயம் வரைந்து அம்புவிட்டு காதலன் காதலியின் பெயர்களை பொறித்துவைப்பதில்லை.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
 1. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
 2. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
 3. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
 4. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
 5. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
 6. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
 7. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
 8. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
 9. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
 10. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
 11. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
 12. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
 13. பெண்களுடனான உரையாடல்- வளன்
 14. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
 15. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
 16. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
 17. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
 18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
 19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
 20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
 21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
 22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
 23. மூன்று இசை தேவதைகள் - வளன்
 24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்