கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !  நாள்  51&  52

நாள் # 51

14/05/2020, வியாழன்

பகல் மணி 11 : 00

ஒரு லட்சம் நிவாரணக் கோரிக்கை மற்றும் மீட்பு கோரிக்கை மனுக்களை ஏந்தி, தலைமைச் செயலாளரைப் பார்க்கச் சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை, அவர் பாராமுகம் காட்டி அவமதிப்புச் செய்தாரென்றும், உங்ககிட்ட இதுதான் பிரச்சின்னை, புரிஞ்சிக்காம பேசுவீங்க, என்ன பத்திரிக்கைகாரங்ககிட்டப் போய் சொல்லப் போறீங்களா, சொல்லிக்கோங்க, நாங்களே வேலைக்கு ஆள் இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கோம், இப்பப் போய் இவ்ளோவ் மனுவைத் தூக்கிக்கிட்டு வந்துட்டீங்க ? என்று கடுமையாகப் பேசியதாகவும், தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்களைச் சந்தித்து விட்டு வந்த டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்பிக்கள் குழு ஊடகத்தினரிடம், முறையிட்டனர் !

கொரோனா தொற்று வெகு வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் பேரபாயச் சூழலில், தமிழகஅரசு நிர்வாகத்துக்கு உண்மையிலேயே கடுமையான பணி இருக்கத்தான் செய்யும்.  மறுக்க முடியாது.  ஆனால், ஓர் அரசுக்குச் சமமாக, ஒன்றிணைவோம் வா என்கிற அபாரமான நெட்வொர்க்கை கட்டமைத்து, அதன் மூலம் பல லட்சம் பேருக்கு உணவு, மளிகைப் பொருட்கள், உதவித் தொகை, மருந்து உட்பட ஏகப்பட்ட உதவிகளை நேரங்காலம் பார்க்காமல் செய்துக் கொண்டிருக்கும் திமுகவுக்கு, அரசு மட்டுமே உதவ முடிந்த கோரிக்கைகளைக் கூட ஸ்டாலின் நினைத்தால் சாதித்து விடுவாரென நம்பி, இக்கட்டில் உள்ளவர்கள் அனுப்பி வைக்கிறார்கள்.

சான்றுக்கு இதைப் பாருங்கள் !

மாலத்தீவிலிருந்து போர் கப்பல் மூலம் சில ஆயிரம் இந்தியர்களை மீட்டு அவர்கள் கொச்சி வந்து சேர்ந்தார்கள் என வாசித்தோம் அல்லவா ?  அது இந்தியர்கள் அல்ல.  மலையாளிகள்.  ஆமாம், கேரள அரசின் கோரிக்கையால், இந்திய ராணுவம், கேரள மாநிலத்தவரை மட்டும் மீட்டு, கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வந்தது !

மாலத்தீவில் சிக்கி தாயகம் வரத் தவிக்கும் தமிழர்கள், எடப்பாடியும் நம்மை மீட்க கப்பலை அனுப்பி வைப்பாரெனக் காத்திருக்க நீண்ட நாட்களாக எந்தப் பதிலுமில்லை.  இப்ப இந்தக் கோரிக்கை ஒன்றிணைவோம் வா இணையதளத்தில் பதிவு செய்யப்படுகிறது.  சம்பாத்தியம் ஏதுமின்றி, கவனிப்பார் யாருமின்றி தன் குடும்பத்துடனாவது கஷ்டத்துடன் வாழ்வோம் எனக் காத்திருந்தால் மீட்க ஆளில்லை எனும் போது பலருக்கும் கோரிக்கை போகத்தானே செய்யும் ?

இதுபோன்ற கோரிக்கை மனுக்களின் அவசர நடவடிக்கை கருதி, எப்ப ஸ்டெப் எடுப்பீங்கன்னு ஓர் எம் பி கேட்டால், தலைமைச் செயலாளருக்கு கோபம் பீறிட்டுக் கொண்டு வருகிறது.  இவ்வளவு மெனக்கிடும் அவர்களை எதிர்க்கட்சி ஆட்களாகப் பார்க்காது, சக மனிதர்களாக மதித்து, ஓர் ஆறுதலுக்காக சீக்கிரம் நடவடிக்கை எடுக்கிறேன் எனச் சொல்லியிருந்தால் அவர்களின் மனம் எவ்வளவு குதூகலமடைந்திருக்கும் ?

கையாலாகாதவர்களுக்கு மட்டுமே திமுக எம்பிக்களின் இந்தச் செயல் சீண்டலையும், கோபத்தையும் தரும்.  தமிழக அரசு அந்த நிலையில்தான் இருக்கிறதென்பதற்கு பல சம்பவங்கள் சான்றாக இருப்பதால், சண்முகம் அவர்கள் செய்த இந்த அவமரியாதையில் வியப்பேதுமில்லை !

மாலை மணி 04 : 30

முதல் நாள் அந்த மெஹா பேக்கேஜில் பணக்காரர்களுக்கு மட்டுமே வழங்கிய சலுகைகளால், நிறைய முணுமுணுப்புகள் எழ, இரண்டாம் நாள் நிர்மலா அம்மையார், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தரப்போகும்  அரிய சலுகைகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

ஐந்து கிலோ அரிசி அல்லது கோதுமை, ஒரு கிலோ கொண்டைக் கடலை அவர்களுக்கு வழங்கப்படும்.  100 நாட்கள் வேலைத் திட்டத்தில் அவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்டு வேலைகள் வழங்கப்படும்.  அடடே !

கடந்த ஒன்றரை மாதங்களாக பல நூறு கிலோ மீட்டர் தூரங்களை, சுட்டெரிக்கும் வெய்யிலுக்கிடையே, வறுத்தெடுக்கும் அனல்காற்றுக்கிடையே பசியோடும், கைக்குழந்தைகளோடும் நடந்துக் கொண்டிருப்பவர்களை பற்றி ஒரு வரி பேசவில்லை.

அவர்களை நடக்க விடாதீர்கள்.  இலவசமாக பேருந்து, ரயில்களை ஏற்பாடு செய்து அனுப்பி வையுங்கள்.  உணவு கொடுங்கள், நீர் கொடுங்கள், செலவுக்கு பணம் கொடுங்கள், தங்கிச் செல்ல தற்காலிக கூடாரங்களைக் கொடுங்கள்…. மூச்.  ஒரே ஓர் அறிவுரையோ, வேண்டுதலோ, அவர்களுக்கான செயல்திட்டங்களோ, எதுவுமே இல்லை !

இத்தனைக்கும் சோனியா காந்தி ஒரு மாதங்களுக்கு முன்னரே அவர்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை முன்னின்று செய்யுங்கள்.  பயணக் கட்டணங்களை கூட எங்கள் கட்சியிடமிருந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றுவிட்டார் !

இன்று அம்பாலாவிலிருந்து சத்தர்ப்பூர்(831 கி.மீ) நோக்கி நடந்துக் கொண்டிருந்த ஒரு குடும்பம், கதறி அழுதபடி, எங்களை அனைவரும் கைவிட்டு விட்டனர்.  ரயில் கட்டணத்திற்கு பணமில்லை.  லாரிகளில் செல்ல ஒரு தலைக்கு 4000 வரை கேட்கிறார்கள்.  சம்பளம் இரண்டு மாதங்களாக இல்லை.  வாடகை இல்லாவிட்டால் இருக்காதே எனத் துரத்துகிறார்கள்.  சாப்பாடு இல்லை.  நடக்க ஆரம்பித்துவிட்டோம்.  ஒவ்வொரு சோதனைச் சாவடிகளிலும் லத்தியால் அடித்த பின்பே விடுகிறார்கள் !

இந்தக் கோராமையான நாட்களில் தொடர்ந்து ஐம்பது நாட்களுக்கும் மேலாக இது போன்ற கண்ணீர்க்கதைகளை கேட்டு கேட்டு கண்ணீர் வற்றிப் போய்விட்டது.  ஆழ்ந்த பெருமூச்சு மட்டும் வெளிப்படுகிறது.  இந்தப் பிரச்சினை திடீரென இப்போது அனைத்து தமிழக நகரங்களிலும் வெடித்திருக்கிறது.  கூடங்குளம், திருப்பூர், பல்லாவரம் அனைத்து இடங்களிலும் இனி இங்கு ஏதுமில்லை, எங்களை உயிரோடாவது விடுங்கள் என்கிற கூக்குரல் காதைக் கிழிக்கிறது.  அள்ளிக் கொடுத்த நம்மூரிலேயே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்தக் கதியெனில், வடக்கை கேட்கவா வேண்டும் ?

அறவே திறனற்ற நடுவண் அரசால் நாடு 1880 களில் கண்ட தாதுப் பஞ்ச நிலையை அடைந்திருக்கிறது.  அன்று எப்படி வலுவுள்ளவனுக்கு மட்டும் யாவும் கிட்டியதோ, அதேபோல் இன்றும் வலியவனுக்கு எல்லாம் கிட்ட, வறியவனுக்கு ஏதும் கிட்டாமல், அவன் வெய்யிலில் நடந்து கால்கள் செயலற்று சுருண்டு விழுந்துச் சாகிறான், பசி தாகத்தால் மடிகிறான், தண்டவாளத்தில் அவன் தலை மேல் ரயில் போகிறது, சாலையோரங்களில் அவனைத் தேடி லாரி ஏறுகிறது !

இவர்களின் இந்த நிலையைக் கருத்தில் கொள்ளாமல், இவர்களாக ஊர் வந்து சேர்ந்தால் ஒரு கிலோ கடலை கொடுப்பார்களாம் ?

இரவு மணி 08 : 00

இந்த ட்வீட் நான் எதிர்பார்த்த ஒன்று.

திவால் நிலை bad debts கம்பெனிகளுக்கும் கடன் கொடுக்க பல்லாயிரம் கோடிகளை ஒதுக்கியிருப்பதாக நிதி அமைச்சர் நேற்று கூறியதும் எது நிகழுமென நம்பினேனோ அது நிகழ்ந்தே விட்டது.  மல்லைய்யா மகிழ்ச்சியாக லண்டனிலிருந்து ட்விட்டியிருக்கிறார் !

” நான்தான் நயா பைசா பாக்கி இல்லாம அனைத்துக் கடன் தொகையையும் தர்றேன்னு சொல்றேன்ல்ல, ஏன் இந்தியா அதை ஏற்க மறுக்கிறது ?  20 லட்சம் கோடிகளை நீங்க அச்சடிச்சி கூட விடுவீங்க, உங்க பலம் தனி.  ஆனா, இந்திய மக்கள்கிட்ட வாங்கின பணம் எனக்கு மட்டும் என்னத்துக்கு ?  இந்தக் கஷ்டமான நேரத்துல என் பங்களிப்பா நான் வாங்கின கடனைக் கொடுத்திடறேனே ?  ப்ளீஸ் வாங்கிக்கங்க “

குடுமி வச்ச பெருச்சாளி ஏன் பெர்மூடாஸ்ல போறர்துன்னு தெரியுதுல்ல ?  பாஜபா அரசாங்கம்ன்னாலே திருட்டுக் கார்ப்பரேட்களுக்கு உற்சாகமோ உற்சாகம்தான் போங்கோ !!!

நாள் # 52

15/05/2020, வெள்ளி

கடும்பகல் மணி 11 : 55

இந்தியப் பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி பேக்கேஜ் என்பது, அவர் எப்போதோ வாயால் சுட்ட வடைகளுள் ஒன்றான தொலேரா நகரம் போன்றதுதான் என இன்று காலையிலேயே தொலேரா ஸ்மார்ட் சிட்டி எனும் ஹேஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டிங்கானது, அது இந்தியளவில் முதலிடமும் பிடித்தது !

2007 -ம் ஆண்டு மோடி குஜராத் முதல்வராக இருந்த போது, அகமதாபாத் நகரத்திலிருந்து 80 கிமீ தொலைவில், ஒரு பிரம்மாண்ட சொர்க்கபுரி நகரத்தை நிர்மாணிக்கவிருக்கிறேன்.  அது டெல்லியை விட இரு மடங்கு பெரியதாகவும், ஷாங்காய் நகரை விட ஆறு மடங்கு பெரியதாகவும் இருக்கும்.  அதை விட முக்கியம் அது நவீனமயமாக இருக்கும்.  உங்களால் அதன் அழகை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது என்றிருக்கிறார் !

சதுரங்க வேட்டை படத்தில், ‘ ஒருத்தனை ஏமாத்தணும்ன்னா அவனுக்கு ஆசைய முதல்ல தூண்டணும் ‘ என்பார் ஹீரோ.  மோடி சாமானியர்களுக்கு அது போல பல ஆசைகளைத் தூண்டிய வண்ணமே இருப்பவர்.  பின்னாளில் சமூக ஊடகங்கள் பலமானபோது, யு ட்யூபில், இந்த தொலேரா நகரம் எப்படி அமையவிருக்கிறது என்று ஒரு கற்பனைக் காட்சியை பல கோடி செலவு செய்து உருவாக்கி உலவ விட்டிருக்கிறார்கள் மோடி & கோ.

நீங்களும் அதை யு ட்யுபில், Dholera SIR Future Smart City என டைப் செய்து தேடிப் பாருங்கள்.  மிகச் சரியாக அவை 2011 – 2012 களிலேயே உலவவிடப் பட்டுள்ளன.  அதைப்பார்த்த அன்றை குஜராத்தி சமூகம், கூடிய விரைவில் நாம் அனைவரும் சொர்க்கத்தில் வாழவிருக்கிறோம் என பிரமித்துப் போயிருக்கும் !

அவர் அறிவித்து 13 வருடங்களுக்குப் பின்னும் அந்த நகரம் உருவாகவில்லை, ஆனால் சென்னையில் டைட்டல் பார்க் அமைந்த பின்பு, அந்த பழைய மகாபலிபுரச் சாலை சிங்கப்பூர் நகருக்கு நிகராக மருவியதை எவரால் மறுக்க முடியும் ?  வெறும் கையில் முழம் போட்டால் போதுமா ?  கலைஞர் போல் சமூகநலச் சிற்பி நாட்டை ஆண்டால் மட்டுமே அதெல்லாம் சாத்தியமாகும். கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டே 2013 – 2014 களில், குஜராத் மாடலென்று மதர் போர்ட் கிராபிக்ஸ்களுக்கு கூட மயங்கினோமில்லையா ?  விழிப்புணர்வு மிக்க நாமே ஏமாந்த போது குஜராத்திகளை கேட்பானேன் ?

இந்த இருபது லட்சம் கோடிகள் என்கிற வார்த்தை மோடியைப் பொறுத்தவரை பழைய, ஆமாம் மிகப் பழைய வார்த்தை.  உங்களுக்கு நினைவிருக்குமென நம்புகிறேன்.  2015-ல் சென்னை மாநகரில் அதிபயங்கர வெள்ளப் பேரழிவு வந்ததில்லையா ?  அதற்குச் சில நாட்களுக்கு முன்பு, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஓர் உலக முதலீட்டாளர் மாநாடு நிகழ்ந்தது. அதில், முதலீட்டாளர்கள் ஐந்து லட்சம் கோடிகள் முதலீட்டை தமிழகத்தில் செய்யவிருப்பதாகக் கூறி, அதற்கான வரைவு  ஒப்பந்தங்களையும் போட்டுள்ளதாக  ஊடகங்களுக்கு அம்மையார் தெரிவித்தார்!

அடேய், கோணி ஊசி வித்துட்டுருந்தவனுக்கு கோட் போட்டு தூக்கிட்டுப் போய்ட்டீங்களாடா, அவனா இன்வெஸ்டர் ? என்று அப்போதே சமூக வலைத்தளங்களில் அம்மையார் ஏற்பாடு செய்த ட்ராமாவை நெட்டிசன்கள் நக்கலடித்தார்கள்.  உண்மையில் சில ஆயிரம் கோடி முதலீடுகளைக் கூட அம்மையார் கவரவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.  ஆனால் அம்மையாருக்கு அந்த டகால்ட்டி ஐடியாவைக் கொடுத்தவர் யார் தெரியுமா ?  யெஸ்.  சாட்சாத் மோடிஜிதான் !

2011-ல் இதேபோல ஓர் உலக முதலீட்டாளர் மாநாடு குஜராத்திலும், அப்போதைய முதல்வர் மோடி தலைமயில் நிகழ்ந்தது.  அதற்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் நர்மதை ஆற்றுப்படுகையில் பிரம்மாண்ட வாயுப் பள்ளத்தாக்கு ( Gas Valley ) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  அதைக்கொண்டு சில நூறு வருடங்களுக்கு இந்தியாவுக்கு எரிவாயுவை சப்ளை செய்ய முடியும் என்றிருந்தார் மோடி.  இனி இந்தியா எரிபொருட்களை இறக்குமதி செய்ய தேவையிருக்காது.  குஜராத்திற்குச் சொந்தமான குஜராத் கேஸ் மூலமாகவே வாங்கிக் கொள்ளலாம்.  அடுத்து நாம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவிருக்கிறோம்.  அதை ஆய்வு செய்ய குஜராத் கேஸ்க்கு முதல் தவணையாக 1000 கோடிகள் ஒதுக்கப்படும்.  இப்படி அவர் பேசியதைச் சுட்டிக்காட்டி ஈர்த்ததால், அவர் நிகழ்த்திய அந்த மாநாட்டில், முதல் நாளன்றே இருபது லட்சம் கோடி முதலீடுகள் வந்திருப்பதாக உலகுக்குச் சொன்னார்.  இதெல்லாம் இன்றே நமக்கு பிரமிப்பாக இருக்கும் போது, அந்தக் காலகட்டத்தில் எப்படி இருந்திருக்கும் ?  இத்தனைக்கும் அப்போது நாட்டை மன்மோகன்,  ப.சிதம்பரம் போன்ற பொருளாதார விற்பன்னர்கள் நிர்வகித்துக் கொண்டிருந்த பொழுதுகள் !

பல கோடிகள் இறைக்கப்பட்டு, இந்தியாவின் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் விகாஸ் குஜராத் என்று இது விளம்பரப்படுத்தப்பட்டது.  வாசித்த எவருமே மோடியை வளர்ச்சியின் நாயகனாகத்தானே நம்பியிருப்பார்கள் (விகாஸ் புருஷ்) ?

இன்றைய தொலேரா சிட்டி போலவே அந்தக் குஜராத் கேஸ் கம்பெனியும் கண்டுபிடிக்கப்பட்ட வாயுவே ஒரு மாயை என்று உணர்ந்தபோது மூழ்கி  விட்டிருந்தது.  மக்கள் பணமும் காற்றோடு போனது.  20 லட்சம் என்றல்ல 20 ஆயிரம் கோடி கூட முதலீடுகள் வரவில்லை.  ஆனால் அதெல்லாம் தேடிப் போனவர்களுக்கு மட்டுமே கிட்டியச் சேதிகள்.  அப்படிப் போகாதவர்களுக்கு அவைகளை மறக்கடிக்க புதுப் புது மிட்டாய்களாக கொடுக்கப்பட்டன !

ஆச்சா ?  இந்த மிட்டாய கவனிங்க.  காங்கிரஸ் ஊழல்வாதிகள் இத்தனை ஆண்டுகளாய் நாட்டைச் சுரண்டி, ஊழலில் கொள்ளையடித்த பணங்களெல்லாம் சுவிஸ் வங்கிகளில் உள்ளன.  அவைகளின் இந்திய மதிப்பு ஐம்பது லட்சம் கோடிகள்.  எங்கள் ஆட்சி அமைந்த நூறாவது நாள், ஆமாம் நூறே நாட்களுக்குள் அத்தனை பணமும் இந்திய வங்கிகளுக்கு வந்துவிடும்.  ஐம்பது லட்சம் கோடிகள்ன்னா உங்களுக்கு அர்த்தம் புரியல இல்ல ?  இந்தியாவிலிருக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் தலா பதினைந்து லட்சங்களை இதைக் கொண்டு தர முடியும், தருவேன் !

பதினைந்து லட்சம் என்றவுடன் பல கோடி மக்களின் திறந்த வாய், டிமானிடைசேசன் என்கிற வாக்கரசி போட்டவுடன்தான் மூடியது.  அந்த அச்சே தின் 100 நாள் இன்னும் வரவில்லை.  ஆனால் அவர்களின் இரண்டாவது ஆட்சி வந்தே ஒரு வருஷம் ஆச்சு !

டிமானிடைசேசன் பண்ணிவிட்டு, கஷ்டங்களை ஐம்பது நாள் மட்டும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுங்கள், இந்தியா பத்து ஐரோப்பா இருபது அமெரிக்கா ஆகலைன்னா, என்னை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுங்கள் என்றார்.  போச்சு.  மக்கள் அடுத்த கனவுக்குள் மூழ்கினார்கள்.  மக்கள் மட்டுமா ?

இன்று பட்டுக்கோட்டை பிரபாகர் மோடியை நம்புவது போல அன்று ஜெயமோகன் நம்பினார்.  பணமதிப்பிழப்பு நடவடிக்கையை குறைகூறிய அனைவரையும் அற்பர்கள் என வசைபாடினார்.  ஆறு மாதங்கள் கழித்து பாலாற்றில் நீச்சலடித்துக் கொண்டே இந்திய நிலையை விவாதிப்போம் பொறுங்கள் என்றார்.  பின்னர் ஏமாந்துவிட்டேன் என அந்தப் பதிவுக்கும் வருந்தினார்.    திருந்தினார் எனத் தவறாகப் படித்துவிடப் போகிறீர்கள் !

ஆக, பிரதமர் அரை மணி நேரம் ஆற்றி சுட்ட வடையை, தினமும் மாலை நான்கு மணிக்கு வந்து, விற்றுக் கொண்டிருந்தார் நடுவண் அரசின் நிதியமைச்சர்.  ஆத்மர் நிர்பர் என்று பர் பர்ரென ஆரம்பித்ததுமே கொர் கொர்ரென குறட்டைச் சத்தம் அனிச்சையாக வந்து விடுகிறது !

செய்தது, செய்யப் போவது என்று எதையுமே செய்யாமல், இப்ப மக்களுக்கு என்ன அவசரத் தேவை என்பதையே அறியாமல், அவர்களுடையப் பேச்சு முற்றிலும் அசுவாரசியமானது.  இன்னும் கொஞ்ச நாள் பொறுங்கள்.  இந்த மெஹா பேக்கேஜ் திட்டம் கூட, ஊசிப் போன வடைதான் எனப் புரியவரும் !

இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே, நம் நாட்டிலே ???

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  3. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  4. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  5. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  6. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  7. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  8. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  9. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  10. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  11. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  12. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  13. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  14. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  15. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்