கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 48
11/05/2020, திங்கள்
மதியம் மணி 02 : 00
உங்களுடைய மண்டலங்களெல்லாம் பச்சை, ஆரஞ்ச், சிகப்பு நிறங்களில் இருக்கலாம். ஆனால் நான் வசிக்கும் ராயபுரம் மண்டலம் கருஞ்சிவப்பு நிறமாகச் சிறப்புத் தகுதி பெறுகிறது. காரணம் என்ன தெரியுமா ? எங்கள் மண்டல மக்களுக்குத்தான் அதிக சோதனைகள் நடைபெறுகின்றன. அதாவது நான் இருக்கும் ராயபுர மண்டலங்களில்தான் பிரபல அரசு மருத்துவமனைகள் உள்ளன. அவைகள் யாவும் இன்று நிரம்பி வழிகின்றன. ஏனோ தொற்று எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் உயர்கிறது. மே 1 அன்று 2000 தொற்றாளர்களாக இருந்தது, பத்து நாட்களுக்குள் நான்கு மடங்கு உயர்ந்து இன்று எட்டாயிரமாகி விட்டது !
இந்த அதிவேக பரவலுக்கிடையேதான், இன்று மேலும் 34 வகை வணிக நிறுவனங்களை திறந்துக் கொள்ளலாம் என அறிவித்து, இன்று அத்தனையையும் திறந்தும் விட்டார்கள். வாழ்வாதாரத்தை முற்றிலும் பறிகொடுத்த அவர்களுக்கு, இது சற்று ஆசுவாசத்தைக் கொடுக்குமென்றாலும், அரசின் செய்கை விநோதமாக இருக்குல்ல ?
நோய் கட்டுக்குள் இருந்தபோதெல்லாம் உள்ளேயே இரு என மிரட்டி, வெளியில் திரிந்தவர்கள் மீது வழக்குகளாய்ப் போட்டுவிட்டு, இன்று பல்லாயிரக்கணக்கில் தொற்று எண்ணிக்கை பெருகிய நிலையில், ஊரடங்கு அமலில் இருக்கும் போது இந்த தளர்வுகள் குழப்பியடிக்கிறது !
முதல் கோணல் முடிவு வரை கோணலாகும் என்பதற்கேற்ப, தமிழக அரசு கடந்த ஏழாம் தேதியன்றே மதுக்கடைகளைத் திறந்துவிட்டது பெரிய சலசலப்பை உருவாக்கிவிட்டது. ஹலோ ஜி, டாஸ்மாக்கையே திறக்கும்போது ஆலயங்களைத் திறந்தா என்னவாம் என்று ஆரம்பித்த கேள்விகளின் எண்ணிக்கை, உயர்ந்துக் கொண்டே போனதால், ஒரு தப்பை மறைக்க மேலும் மேலும் அனைத்துக்கும் அனுமதி வழங்கி சரி செய்ய தமிழகம் முயல்வதாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது !
ஆச்சா ? இருந்தாலும் மேலும் பல வணிகங்களை செயல்பட விடாமல் தமிழக அரசு முடக்கியே வைத்திருக்கிறது. சலூன் கடைகள், அழகு நிலையங்கள், சினிமா, மால், ஏசி வசதி கொண்ட பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் உட்பட இன்னும் பல. ஏசி பயன்பாடுள்ள, பொதுமக்கள் அதிகம் குவிய வாய்ப்புள்ள கடைகள் அனுமதிக்கப்பட்ட பட்டியலில் இருந்தாலும், ஏசி போடக்கூடாதென்பது பிரதானக் கட்டளை !
இந்த அழகில்தான் திடுக்கென்று நாளை முதல் பெரிய நகரங்களுக்கிடையே ரயில்கள் ஓடும், முன்பதிவுக்கு இப்போதே முந்துங்கள் என்று ரயில்வே அமைச்சகம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது !
அந்திமாலை மணி 06 : 00
இவர்கள் ராஜ்தானி ரயில்களைத்தான் இப்போது இயக்கப் போகிறார்களாம். அது முழுக்க முழுக்க குளிர்சாதன வசதி கொண்ட ரயில். பயணிகளுக்கான கட்டணமும் பல மடங்கு கூடுதலானது. கேட்டால் புலம்பெயர் தொழிலாளர்களின் அவல நிலைக்காக எடுக்கப்பட்ட திடீர் முடிவு என்கிறார்கள். இப்படியெல்லாம் சிந்திக்க உண்மையிலேயே குரூர மனம் வேண்டும். கேட்டால் அனைத்து ஜன்னல்களும் காற்றோட்ட வசதியுடன் திறந்திருக்கும் என்கிறார்கள். அவர்கள் இயற்றியச் சட்டங்களையே, தங்களிஷ்டத்துக்கு வளைத்துக் கொள்ளும் மூடர்களின் கைகளில் நாடு சிக்கினால், என்ன பாடுபடும் என்பதற்கு இந்த நிகழ்வுகள்தான் சான்று !
இங்கதான் ஒரு ட்விஸ்ட். முதல்வர்களுடனான ஒரு காணொளி சந்திப்பை நிகழ்த்தினார் பிரதமர். அதில் நம்ம முதல்வர் எடப்பாடி பிரதமரிடம், தயைகூர்ந்து மே 31 வரை, தமிழகத்துக்குள் ரயில், விமான பொது போக்குவரத்துச் சேவைகள் எதுவும் வேண்டாம் என்றிருக்கிறார். அவர் சொல்லி எதுவும் நடக்கப்போவதில்லை என்பது வேறு. இந்தளவாவது துணிந்து தன் கருத்தை முன் வைத்தாரே என்று பாராட்டலாம். மின்சாரக் கட்டணம், பகிர்மானம் போன்ற மாநில உரிமைகளையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள முயலும் நடுவண் அரசின் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டுமென்றும் கடிதம் எழுதியிருக்கிறார். இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் GST பங்கை முதல்ல கொடுங்க சாமி என்று உரக்கக் குரல் கொடுத்திருக்கிறார் புதுவை முதல்வர் நாராயணசாமி. ஆக, இரண்டு தமிழ் சாமிகளும் லைட்டா சாமியாடியிருப்பது தமிழர் நலனுக்கு பலன் சேர்க்கட்டும்
இரவு மணி 09 : 00
இதைத்தான் முதலில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால், தொடர்ந்து நாம் மனமுடையும் சோகச் செய்திகளையே கேட்டுக்கொண்டிருந்தால் புத்தி பேதலித்துவிடும் !
விழுப்புரம் மாவட்டம் சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. பத்தாவது வகுப்பு படிக்கும் மாணவி. இவருடைத் தந்தையின் பெயர் ஜெயபால். ஜெயபாலின் உறவினர்கள் முருகன், கலியபெருமாள். இந்த இருவருக்கும் ஜெயபாலுடன் முன்பகை இருந்துள்ளது.
மதுவுக்கு அடிமையான இந்த இருவரும், ஏழாம் தேதி கிட்டிய அரசு மதுவால் போதை தலைக்கேறி, வீட்டிலேயே ஓர் ஓரத்தில் பெட்டிக்கடை வைத்திருந்த ஜெயபாலிடம் பீடி கேட்டு தகராறு செய்திருக்கிறார்கள். வாக்குவாதம் முற்றி அடிதடியெனப் போனதால் ஜெயபால் அருகிலிருந்த காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம், இந்த இருவரும் ஆளுங்கட்சி அதிமுகவின் ஆட்கள். கலியபெருமாள் ஒன்றியச் செயலாளர். முருகன் கவுன்சிலரின் கணவர்.
தானளித்த புகார் நிலைமையை அறிந்துக் கொள்வதற்காக ஜெயபால் பத்தாம் தேதியன்று கடையை ஜெயஸ்ரீயைப் பார்க்கச் சொல்லிவிட்டு காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கிறார். ஜெயஸ்ரீயின் தாயார் ஆடு மேய்க்கச் சென்றிருக்கிறார் !
ஜெயபால் மீது இருந்த முன்பகை, இப்போது தீராப்பகையாகி வெறியேறி என்ன செய்கிறோமெனத் தெரியாமல், கடையிலிருந்த அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய், கை கால்களை கட்டிப் போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு ஓடிப்போய்விட்டார்கள் !
வீட்டில் புகைவருவதைப் பார்த்த ஜெயஸ்ரீயின் பெற்றோரும், பொது மக்களும் இணைந்து மீட்டு, அவரை அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையொன்றில் சேர்த்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 90 விழுக்காடு தீக்காயத்துடன் துடித்துக் கொண்டிருந்த அந்தப் பிஞ்சிடம், மரண வாக்குமூலத்தைப் பெற, விழுப்புரம் நீதிபதி உடனடியாக அந்த மருத்துவமனையை அடைந்தார். அங்குதான் வாயெல்லாம் பொசுங்கி, பேசவே இயலாத நிலையிலும் தன்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிய பாவிகளைப் பற்றிச் சொன்னார் ஜெயஸ்ரீ. வேதனையில் அந்தக் குழந்தை தண்ணீர் கொடுங்க அண்ணா என்று இறைஞ்சியது சங்கி மனத்தையும் கரைக்கவல்லது. அத்தோடு அந்தக் குழந்தையின் மூச்சும் அடங்கியது !
கரிக்கட்டையாய் அந்த வெந்த வதனத்துடன் ஜெயஸ்ரீ கொடுத்த வாக்குமூலம் அனைத்து போன்களுக்கும், வலைத்தளங்களிலும் பரவி, கடுங்கோபத்தை கிளறிவிட்டது !
உடனடியாக அவர்களிருவரும் கைது செய்யப்பட்டார்கள். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்கள் !
இந்த சோகச் சம்பவத்தில், ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஆறுதலளிக்கவல்ல சில வரிகள் சற்றே மனதை ஆசுவாசப்படுத்தியது !
பொள்ளாச்சி பாலியல் கொடூரங்களைச் செய்தவர்கள் ஆளுங்கட்சி பிரமுகர்கள் என்பதாலேயே இப்போது பலவீனப்பட்டிருக்கிறது. அதுபோல, இந்தச் சம்பவத்தையும் அதிகார வர்க்கத்தினர் அலட்சியமாக கையாளக்கூடாது. விரைவில் ஆட்சிமாற்றம் ஏற்படவிருக்கும் சூழலில், இத்தகைய வழக்குகள் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, ஆளுங்கட்சிக்கு சாதகமாக வழக்கை நீர்க்கச் செய்ய முயன்றவர்கள் கண்டறியப்பட்டு, கடும் தண்டனைக்கு ஆளாக நேரிடும். இது ஒரு பத்தியாகவே அவருடைய அறிக்கையில் இடம்பெற்றிருந்தது !!!
தொடரும்