01/04/2020 புதன்

காலை மணி 09 : 00

விரக்தி, கோபம், வெறுப்பு, ஏமாற்றம், தோல்வி, எரிச்சல் என்று ஒட்டுமொத்தக் கலவைகளுடனான மனம் பெரும் ஆபத்து கொண்டது.  இந்த மன நிலையோடு, தொடர்ந்து செய்தி சேனல்களை பொழுது போக்காக வீடுகளில் பார்ப்பது, கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமம்.  மாதத்தின் முதல் நாளான இன்று மட்டுமாவது செய்தி சேனல்கள், சமூக வலைத்தளத் தகவல்களை தவிர்த்தாலென்ன என முயன்று பார்க்கப் போகிறேன் !

காலை மணி 11 : 00

உன்னை விட்டா யாரும் எனக்கில்ல பாரு பாரு என்று சமந்தா, சிவகார்த்திகேயனிடம் கொஞ்சலாக வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருந்த போது, எனக்கு சில நினைவுகள் மூளையின் அடியாழத்திலிருந்து கிளர்ந்தன !

கருப்பு – வெள்ளை தொலைக்காட்சி காலத்தின் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியொன்றில், சந்திரபாபு ஒரு புகைப்படத்தை வைத்துக் கொண்டு கோவா மாம்பழமே, மல்கோவா மாம்பழமே என்று பாடிக் கொண்டிருந்தார் !

முதலில் அந்தப் புகைப்படத்திலிருப்பவரை யாரென்று காட்ட மாட்டார்கள்.  அது சச்சுவாகவோ, மனோரமாவாகவோ இருக்கலாம் என என்னுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்த அக்காக்கள் நினைத்திருக்கலாம்.  ஆனால் அந்தப் புகைப்படத்தில் சாவித்திரியைக் காட்டியதும், ஒரு தமக்கைக்கு கடும் கோபம் கிளம்பியது !

அடி செருப்பால நாரிப்பாட, உன் மூஞ்சிக்கு சாவித்திரி கேக்குதோ என்று குரல் கொடுத்தார்.

கொல்லென்ற சிரிப்பால் அந்த அறை நிரம்பியது என்று ராஜேந்திரகுமார் இருந்திருந்தால் எழுதியிருப்பார் !

பிற்பகல் மதியம் மணி 02 : 30

அனைத்து ருசிகளும் சலித்துப் போய்விட்டதால் மனைவியின் கைப்பக்குவத்தைப் புகழ என்னிடம் இப்போதைக்கு எந்த வார்த்தைகளும் வாய்வசமில்லை.  தவறி குறைசொல்வதும் பேராபத்தில் முடியலாம்.  நாம பாட்டுப் பக்கமே போய்விடலாமென முரசிடம் தஞ்சமானேன் !

இளம்மாலை மணி 04 : 00

அந்த வசவு வாங்கிய சந்திரபாபுவுக்கு என்ன குறைச்சல் ?  சாவித்திரி என்ன ஸ்பெஷல் என ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மையிலேயே இருவரும் சரிசமமான திறமைகள் கொண்டவர்கள்.  சாவித்திரி அழகு, நடிப்பில் எப்படி தலைசிறந்தவரோ, அதேப்போல, நடனம், நகைச்சுவை மற்றும் பாடுவதில் சந்திரபாபு தனித்துவம் மிக்கவர் !

ஆனால் அக்கால தமக்கைகள் தாழ்வு மனப்பான்மை மிக்கவர்களாக வலம் வந்ததால், அவர்களைப் பொறுத்தவரை தகுதியுடைவரெனில், அவர் சிவப்பாகவும், சிறப்பாகச் சண்டை செய்பவர்களாகவும் இருந்த எம் ஜி ஆர், எஸ் எஸ் ஆர், சிவாஜிகளுக்கு மட்டுமே உரித்தானது என நம்பினர்.  எனவே ஹீரோயின்களுடன் கனவில் கூட ஆடிப்பாடும் தகுதி ஹீரோ அல்லது வில்லன்களுக்கு மட்டுமே உண்டு காமெடியன்களுக்கு கிடையாது என்பதில் திடமாக இருந்தனர் !

சரி அது ஏன் இப்ப என் நினைவுக்கு வந்தது ?

 

அந்திமாலை மணி 06 : 00

சந்தானம் ஹீரோவாக நடித்த ஹாரர்காமெடி படமொன்று ஓடிக்கொண்டிருந்தது.  அதில் சந்தானம் தன் உடலை கனகச்சிதமாக வைத்திருந்ததை வியப்புடன் சொன்னேன்.

சந்தானம் எப்பவுமே ஒல்லிதானே ?

வடிவேலுவ ஆரம்பக் கால படத்துல பாத்திருக்கியா ?  சிங்காரவேலன், தேவர்மகன், அரண்மனைக் கிளி ?  அதுதான் அவர் உடல் வாகு.  ஆனா பின்னால அவரோட தொப்பைய அவரால கண்ட்ரோல் பண்ண முடியாதளவு உப்பிட்டாரு.  ஆனா சந்தானம் உள்ள வர்றப்ப கொஞ்சம் பூசினாப்பலத்தான் இருந்தாரு.  இப்ப ஹீரோவா நடிக்கிறதால என்னமா சிக்குன்னு ஆகிட்டாரு, வெல், சூப்பர்.

ம்க்கும், காமெடியே பண்ணிக்கிட்டு போயிருக்கலாம்.

இல்ல.  சந்தானம் சரியான முடிவத்தான் எடுத்திருக்கார்.  இன்னும் எவ்ளோவ் நாளைக்குத்தான் ஹீரோவுக்கு நண்பனா, இல்ல மாமனா வந்து காமெடி பண்றது ?  மினிமம் கேரண்டில ஜெயிச்சா போதும்.

இத்தகைய சம்பாஷனைகளை நம்மால் நாகேஷ், தங்கவேலு, சுருளி காலத்தில் செய்திருக்க முடியுமா ?  ஏன் கவுண்டமணி காலத்தில் கூட காமெடியன்கள் உடலை சிக்கென்று வைத்துக்கொண்டு ஹீரோயிசம் காட்டியிருந்தால் ஏற்கத் தயங்கியிருப்போம்.  அதன் நீட்சிதான், இவன்களுக்கெல்லாம் இது தேவையா என்கிற கேள்வி.

ஆனால், வடிவேலு, விவேக் போன்றோர் லேசாக அதை உடைக்க, சிவகார்த்திகேயனும், சந்தானமும் அந்த விதியை தூள் தூளாக நொறுக்கிப் போட்டிருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் நகைச்சுவையை மட்டுமே பிரதான ஆயுதமாக எடுத்துக் கொண்டு விஜய் டிவி வழியே நம்மிடையே வந்தவர்.   படிப்படியாக தன் திறமையை டிவியில் வளர்த்துக் கொண்ட அவர், சந்தானத்தின் இடத்தைக் கைப்பற்றவே சினிமாவுக்குள் நுழைந்தார்.  ஆனாலும், நம்மை நம்பி அவர் ஹீரோ களத்தில் குதிக்க, நாம் அவரை ட்ரெண்ட் செட்டர் ரேஞ்சுக்கு உயர்த்தி வைத்துள்ளோம் !

அவருடன் பாடிக்கொண்டிருந்த சமந்தாவிடம் போவோம்.  சமந்தாவும் அறிமுகமான போது இருந்த கொழுக் மொழுக் உடம்பை அறவே குறைத்து, ஸ்லிம்மாக இருக்கிறார்.  அதையெல்லாம் விட முக்கியமானது அவர் திருமணமானவர்.  So What ?

ஆமாம்.  அந்த மனப் பக்குவத்தை நாம் என்றோ அடைந்துவிட்டோமென்றாலும், இந்த சமந்தா, நயன்தாரா, காஜல் அகர்வால், திரிஷா விஷயத்தில், உண்மையிலேயே தமிழகம் நல்ல முதிர்ச்சியைக் கொண்டுள்ளது பேராச்சர்யம் !

ஏன்னா காதல் கிசுகிசு, திருமணம், குழந்தை குட்டி என்றாலே பெண்களை முற்றிலுமாய் ஓரம்கட்டிவிடும் மோசமான இடமாக தமிழகச் சினிமாத்துறை இருந்தது.  ஓரிரு விதிவிலக்குகளை சொல்லி ஒன்றுமாகப் போவதில்லை !

முன்னிரவு மணி 07 : 55

சுடச்சுட காஃபியை அருந்தியபடி, வெறுமையான வீதியை பால்கனியில் இருந்து நோக்கிக் கொண்டே, கடந்த பத்திருபது ஆண்டுகளாக இணையம், சமூக வலைத்தளங்களில் மெல்லப் பரவிக்கொண்டிருக்கும் பெரியாரியத்தால் இது சாத்தியப்பட்டிருக்குமோ எனச் சிந்தித்தேன் !

இந்த ஒரு வரிக்காகவே சங்கிகளும், தமிழ் தேசிய தம்பிளும் கெக்கே பெக்கேவென உருண்டு புரண்டு சிரிக்க முயலலாம், அதனாலென்ன ?  உண்மையை உரக்கச் சொல்வதில் மட்டும் தயக்கமே கொள்ளக்கூடாது !

பெரியார் மண்ணில் சாதி,  பெண்ணடிமைத்தனம், ஆணவக்கொலைகள், தீண்டாமையெல்லாம் இன்னும் இருக்கிறதே என்று அவர்கள் மட்டுமல்ல, நடுநிலையாளர் போர்வையிலிருக்கும் மென்சங்கிகளும் நம்மிடம்  எப்போதும் வினவுவதுண்டு.  ஆனால் பெரியாரின் புரட்சிக்கருத்துகள், இன்றைய செய்தித் தொடர்பு சாதனங்களின் வழியே எளிதாக தமிழர்களிடையே மெல்ல மெல்ல ஊடுருவுவதால்தான் சமூகத்தில் இத்தகைய பக்குவங்கள், மாற்றங்கள் ஏற்படுவதாக நான் நம்புகிறேன்.  ஆக, அவர்கள் வினவும் அந்த அசிங்கங்கள் முற்றிலுமாக இந்த மண்ணை விட்டு அகலாவிட்டாலும் அருகிப் போகும் !

 

உடன்கட்டை ஏறுதல் கொடுமையை சட்டம் மூலம் ஒழித்து நூற்றாண்டுகள் ஆன பின்னரும், திடுமென ஒரு நாள் அது ராஜஸ்தானில் கொண்டாடப்பட்டது என்பதற்காக சட்டம் போட்ட நாமோ, நம் முன்னோர்களோ தோற்றுப் போனோம் என்றா அர்த்தம் ??

இரவு மணி 10 : 00

நயன்தாரா விக்ரமுடன் ஆடிக்கொண்டே, அடுத்த பாடலில் ஜெய்யுடன் பாடிக்கொண்டிருந்தார்.  எடுத்தவுடன் சரத்குமார், ரஜினிகாந்த் போன்ற தாத்தாக்களுடன் நடித்த ஒரு நடிகை, நடிக்க வந்து பதினைந்து வருடங்கள் கழித்து இளம் நடிகருடன் ஹீரோயினாக நடிப்பதெல்லாம் மிக்க மகிழ்ச்சியைத் தந்தது.  நயனைச் சுற்றி இருக்கும் அவருடைய காதல் சர்ச்சைகள் கொஞ்சம் கூட அவருடைய திறமையை அசைக்க முடியவில்லை என்பது அதிசயம்.  அதைவிட அவர் யோகி பாபுவுடன் கூட நாயகியாக நடிக்கிறார், அதைக்கண்டு நமக்கும் எந்த அதிர்ச்சியும் ஏற்படவில்லை !

ஆணாதிக்கத்தாலும், வல்லாதிக்கச் சாதி ஆட்களாலும், ஹீரோ டாமினேஷன் போன்ற அல்பக் கருத்தாக்கங்கள் நிரம்பிய சினிமா உலகம் இப்படி பண்படுவதே மக்களால் விளைவதுதான்.  மக்கள் இப்படி பக்குவப்பட, பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், போன்றோரின் கருத்துக்களே பெரிதும் உதவுகின்றன.  சலிக்காமல் இவைகளை நாம் மக்களிடம் என்றென்றும் விதைத்துக் கொண்டே இருப்போம், மலர்ச்சி தாமே உருவாகும் !

 

தொடரும்……

தேதி : 01/04/2020 புதன் கிழமை.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  32. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  33. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  34. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  35. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  36. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  37. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  38. திடீர் தீபாவளி இரவில்......
  39. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  40. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்