கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !  நாள் # 47

10/05/2020, ஞாயிறு

காலை மணி 11 : 00

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வீசிய ஒரு டர்ட்டிபாம் ட்வீட்டுடன் இன்றையக் காலை புலர்ந்தது !

‘ டாஸ்மாக் பல ஏழைகளின் வாழ்வைக் குலைக்கும், அதை இந்த ஊரடங்கு வேளையில் நீங்கள் திறந்தால், அங்கு பெருகும் கூட்டத்தினால் சமூகத் தொற்று பரவி, பல்லாயிரம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.  குடும்பம் நடத்தவே பணமில்லாதச் சூழலில் அவனை குடிக்கச் சொல்லி மேலும் ஏன் பிச்சைக்காரர்களாக்குகிறீர்கள் ?  தொடர்ந்து நடுவண் அரசை வலியுறுத்தி அரசு நடத்த தேவையான நிதியைப் பெறுங்கள். தடையான  டாஸ்மாக்கை மீண்டும் திறப்பதற்காக  உச்சநீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெறுங்கள்”

இப்படியெல்லாம் எழுதியிருப்பார்ன்னுதான நினைச்சிருப்பீங்க ?  அஸ்கு புஸ்கு.  அவர் அடுத்தும் இங்கு அதிமுக ஆட்சி மலர ஆலோசனை வழங்கியிருந்தார்.  டாஸ்மாக் திறப்பு ஹாட்ரிக் கனவை நனவாக்காது என்று எடப்பாடியை கனிவுடன் எச்சரித்திருந்தார் !

சிஸ்டம் இங்க கர்ரப்டாகியிருக்கு, அதுக்கு காரணம் இப்ப நடந்துக்கிட்டிருக்க ஆட்சிதான், போர் வந்தால் இப்பவே கட்சி தொடங்குவேன், வரலைன்னா 2021 ல நிச்சயம் தொடங்குவேன்னு சொன்ன மனுஷன, புரட்சி வராம இங்க கட்சி ஆரம்பிச்சி ஒண்ணும் புண்ணியமில்ல என்று கடந்த டிசம்பரில் புலம்ப வைத்துவிட்டனர் !

தலைவர் வருவார் நல்லாட்சி தருவாரென நம்பிக் கிடந்த அவருடைய மூத்த ரசிகர்களுக்கெல்லாம்  நெஞ்சடைக்குமளவு இருந்தது அவருடைய நேற்றையச் செய்தி.  அடுத்தமுறையும் அதிமுக ஆட்சிய மலர வைக்கவா தலைவா நீ

பாடுபடற ?  என்பது அவர்களின் ஐயமாக இருக்கக் கூடும் !

ஆனால், தூத்துகுடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொதுமக்களும், அவர்களுடைய போராட்டங்களுமே காரணமென அதிமுக அரசுக்கு நேரடியாக ஆதரவளித்த ஒரே தமிழகப் பிரபலம் அவர்தான் என்பதால் எனக்கு எந்த ஐயப்பாடுமில்லை !

ரஜினிகாந்தைப் போன்ற ஒரு வடிகட்டியக் கோழையைக் காண்பது அரிது.  வலதுசாரி குணத்தை இவ்வளவு தரமிறங்கி விமர்சிக்கலாகுமா எனக் கேட்கலாம்.  நான் சொல்லவருவது அவர் நம்பும் ஆன்மீகச் சம்பந்தமானது !

1996 சட்டமன்றத் தேர்தலின் போது, அவர் ஜெயலலிதாவின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை எதிர்த்துப் பேசியதை பலரும் அன்று சாகசமாகப் பார்த்தனர்.  ஆனால், அன்று சோ, ஜெயாவுடன் ஏதோ பிணக்கில் இருந்தக் காரணத்தினால், மூப்பனாருக்கு ஆதரவாக ரஜினியை இப்படிப் பேச வைத்திருக்கிறார் !

பிறகு,  ரஜினி அதேவாயால் தைரியலட்சுமி எனப் புகழ்ந்ததும், ஜெயலலிதா ஊழல் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்டு பிணையில் வந்தபோது, அவரை வீட்டில் சந்தித்து ஆறுதல் கூறியதெல்லாம் மரியாதை நிமித்தமானவை.  நான் சொல்லவருவது, ஜெயலலிதா இறந்தபின், அவருக்காக நிகழ்ந்த அஞ்சலி நிகழ்ச்சியில், ரஜினி பயந்தபடி பேசியது !

” 1996-ல் ஏதோ ஒரு வேகத்தில் நான் அப்படி பேசியது அம்மையாருடைய மனதை ஆழமாகக் காயப்படுத்திவிட்டது.  அன்று நான் அப்படி பேசியிருந்திருக்கக் கூடாது. அதற்காக அவருடைய ஆன்மாவிடம் நான் மன்னிப்பு கோருகிறேன் ”

ஆங்கார குணம்கொண்ட ஜெயலலிதா இறந்தபின்னும் எங்கே தன்னை மன்னிக்காமல் பழிவாங்கிவிடுவாரோ என அஞ்சி மண்டியிட்ட ஒரு மனிதரை அன்று நான் கண்டேன் !

சோவின் கைபொம்மையாய் இருந்த ரஜினிகாந்த், இன்று கைமாறியிருக்கிறார்.  அவர்களின் இயக்கத்திற்கேற்ப கை தட்டுகிறார்.  அந்தக் கைதட்டு இப்படி நாராசமாய்த்தான் இருக்கும் !

இரவு மணி 08 : 00

மதச்சம்பந்தப்பட்ட ஒரு காமெடி ஒரு ட்ராஜடி சேதிகள்.  முதலில் காமெடி ;

நடுவன் அரசின் ஜல்சக்தி அமைச்சகம் (நீர்வளத்துறை) ஓர் ஆய்வறிக்கையை, இந்திய  மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறது.  அதை வாசித்ததும் ICMR நிர்வாக அதிகாரிகளுக்கு நடுக்கம் வந்திருக்கிறது.  எப்படிப்பட்டதுககிட்ட சிக்கியிருக்கோம் பாத்தீகளா என்று அரற்றிவிட்டு, அந்த ஆய்வறிக்கையை டஸ்ட்பின்னில் போட்டிருக்கிறார்கள் !

அந்த ஆய்வறிக்கையில், ‘கங்கை நீரை கோவிட் 19 தொற்றிய நோயாளிகளுக்கு மருந்தாக உபயோகிக்க அனுமதி தாருங்கள்’ என்றிருந்ததுதான் அதிர்ச்சிக்கு காரணம்.  எந்தவித அறிவியல் அடிப்படையுமில்லாததால் இதை நிராகரித்து விட்டது ICMR.  இப்பேற்பட்ட அறிவாளிகள் சூழ் அமைப்பின் கீழ்தான் நம்முடைய காவிரி நீர் ஆணையம் செயல்படவிருக்கிறது !

அடுத்து அந்த ட்ராஜடி ;

சென்னை தியாகராய நகர் மகாலட்சுமி தெருவிலிருக்கிறது ஜெயின் சைவ பேக்கரி.  இப்ப இப்ப சிக்கன், முட்டையெல்லாம் கூட வெஜ்ஜில் சேர்க்கப்பட்டு விட்டதால் ஜெயின் பேக்கரி, அய்யங்கார் பேக்கரி போன்றவைகள் சைவர்களிடையே சகஜமாக கடைவிரிக்க முடிகிறது.  இந்த ஜெயின் பேக்கரி தன்னுடைய வாட்ஸ்அப் சுவர்படம் ஒன்றை வடிவமைத்திருந்திருக்கிறது.  அதில், எங்கள் பேக்கரியின் அனைத்துவகை உணவுப் பொருட்களும் ஜெயின் ஆட்களால்தான் செய்யப்படுகின்றன.  இஸ்லாமியப் பணியாளர்களால் செய்யப்படுவதில்லை.  எங்கள் நிறுவனத்தில் இஸ்லாமியர்கள் யாரும் பணியாற்றவில்லை !

இங்கே உடனடியாக அதற்கு எழுந்த கடுமையான எதிர்வினைகளால் அந்த பேக்கரியின் ஜெயின் முதலாளி கைது செய்யப்பட்டார்.  ஏன் அப்படி ஒரு விளம்பரத்த செய்தீர்கள் எனக் கேட்டதற்கு,

“சவுகார்பேட்டையில் சில நாட்களாக ஒரு பதிவு வாட்ஸ்அப்களில் தொடர்ந்து பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது.  அதில் ஜெயின் பேக்கரியில் இஸ்லாமியர்கள்தான் கேக், பன், பப்ஸ் போன்றவற்றை தயார் செய்கிறார்கள்.  அவர்கள் மூலம் கொரோனா தொற்று பரவ சாத்தியமுள்ளதால், இந்துக்களும், ஜெயின்களும் அந்தக் கடையில் எதையும் வாங்கித் தின்ன வேண்டாம் ‘

இது எங்களுடைய வணிகத்தை அடியோடு பாதித்ததால் உடனடியாக அப்படி ஓர் அறிவிப்பைச் செய்ய வேண்டியதாயிற்று.  போக, எங்கள் கடையில்தான் உண்மையாகவே எந்த இஸ்லாமியரும் வேலை செய்யலையே, இதுல இன்னா தப்பு ? என்று அருவருப்பாகப் பதிலளித்திருக்கிறார் !

தான் செய்த தப்பு கூட அவனுக்குத் தெரியவில்லை.  ஜெயின்களும், பார்ப்பனர்களும் வெஜிடேரியன் அப்பார்ட்மென்ட் என்கிற கலாச்சாரத்தை சென்னையில் உருவாக்கியபோதே நாம் கதறினோம் அல்லவா ?  அதுல என்ன தப்பு என்று கேட்டவர்களுக்கான எதிர்வினையைத்தான் சவுகார்பேட்டையும், ஜெயின் பேக்கரியும் புரிந்திருக்கின்றன !

CAA, NRC சட்டத்திற்க்கெதிரான போராட்டங்கள் இந்தியா முழுக்க உச்சத்தில் இருந்தபோது, சென்னையில் இந்தச் சட்டத்தை ஆதரித்தும் நூறு பேர்களுடனான சில போராட்டங்கள் நிகழ்ந்தன.  அதில் கலந்துக் கொண்ட பெரும்பாலோர் இந்த ஜெயின்கள்.  வடகிழக்கு டெல்லி எரிந்ததைப் போல் சென்னை ஷாகின்பாக்குகளும் ஒரு நாள் எரியும் என்று நம்மை பகிரங்கமாக எச்சரித்தவர்கள் அவர்கள் !

கசக்கும் உண்மை என்ன தெரியுமா ?  இந்த ஜெயின் பேக்கரியின் அதிக வாடிக்கையாளர்கள் இஸ்லாமியர்கள்தான்.  நம் மண்ணின் மக்கள், யாதும் ஊரே யாவரும் கேளீர் பண்பாடு போற்றுபவர்கள்.  ஆனால், மதவெறியர்கள் இந்த மண்ணுக்கும், பண்பாட்டிற்கும் முற்றிலும் பொருந்தாதவர்கள்.  அவர்களிடம் எச்சரிக்கையாக அணுகுவதே சாலச் சிறந்தது !!!

 

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  6. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  7. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  8. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  9. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  10. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  11. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  12. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  13. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  14. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  15. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்