தேதி 30/03/2020 திங்கட்கிழமை

காலை மணி 09 : 00

செல்போன் ஒலித்ததால் இவ்வளவு சீக்கிரத்தில் எழ நேர்ந்தது.  பருப்பு மண்டியில் அனைத்துக் கடைகளும் திறந்திருப்பதாக என் பக்கத்து அலுவலகக்காரர் அழைத்திருந்தார்.  அவர்கள் கிட்டத்தட்ட ஏழு முழு நாட்கள் தங்களின் கடைகளை மூடியிருந்தனர்.  ஆமாம் அவர்களே முன்வந்து திங்கள், செவ்வாய், புதன் என மூன்று தினங்கள் மூடுவதென அறிவித்திருந்தனர்.  அதற்கேற்ப அதன் பின்னரே,  தமிழக அரசு மார்ச் 31 வரை 144 தடை என்றது, மத்திய அரசோ ஏப்ரல் 14 வரை அதை  நீட்டித்தது !

அத்தியாவசிய உணவுப் பொருட்களை விற்பவர்கள் குறித்த நேரத்திற்கு கட்டளைகளுக்குப் பணிந்து கடைகளைத் திறக்கலாம் என மேலிடத்திலிருந்து ஏதும் வாய்மொழி உத்தரவு வந்ததோ என்னமோ ?  சரி நானும் வந்திடறேன்ய்யா என்று பரபரவெனக் கிளம்பினேன் !

காலை மணி 10 : 20

புருஷலட்சணம் பணம் பண்ணுவது.  முறுகலான நெய் தோசை, தேங்காய் சட்னி, சாம்பார், புதினா சட்னி, சுடச்சுட காஃபி என்று பழைய வசந்தம் இன்று மீண்டது !

காலை மணி 10 : 45

நடக்க ஆரம்பித்தேன்.  ஆமாம், அதில் மட்டும் உறுதியாய் இருந்தேன்.  வீட்டிலிருந்து அலுவலகம் ஆறு கிலோமீட்டர்.   ஏற்கனவே முறையான உடற்பயிற்சிகள் இல்லாமல், உள்ளுறுப்புகள் ஒவ்வொன்றாய் ஸ்ட்ரைக் பண்ணி, செலவுகளைக் கூட்டிக் கொண்டிருந்ததால் எடுக்கப்பட்ட முடிவல்ல இது !

வட இந்தியாவில் நிர்க்கதியாய் கைவிடப்பட்ட மக்கள், எப்படி அத்தனை நூறு கிலோ மீட்டர்களை கடக்க முடிகிறது என்பதை அறியவும், மறந்து போயிருந்த நீண்ட நடையைக் காலிலெடுத்தேன் !

வீட்டிலிருந்து மெயின் ரோடு வரைக்கும் உடன் வந்த ஒருசிலரும் கடைகளைக் கண்டதும் ஒதுங்கிவிட,  ஆளரவமற்ற அந்தச் சாலையில், முகமூடியை மூக்குவரைக்குமணிந்து தனியாக நடக்க கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது.  இத்தனைக்கும் பங்குனி வெயில் சுள்ளென்று நிர்மலா சீத்தாராமனைப் போல் எரித்துக் கொண்டிருந்தது !

சாலையில் நடப்பவர்கள்தான் குறைவே தவிர, பைக்கில் செல்பவர்கள் ஏகப்பட்டோர் இருந்தனர் !

காலை மணி 11 : 00

புதுச் செருப்பு, இதெல்லாம் உனக்கு தேவையாடா என்று கடிக்க ஆரம்பித்தவுடன் எனக்குள் பதட்டம் கூடியது.  அந்தப் படபடப்பு வியர்வையை கூட்டியது.  ஆஹா, அப்பவே சொன்னாளே ஆர்வக்கோளாறா நடக்கிற காலமெல்லாம் போயே போச்சுன்னு, அப்படியே திரும்பப் போய் வண்டிய எடுத்துக்கலாமா ?

நோ.  வண்டிய புடுங்கி வச்சிக்கிறாங்களாம், போக உனக்கு உன் ஃப்ளாஷ்பேக் ஒண்ணு சொல்றேன், முன் வச்ச கால பின் வைக்காதே என்று உள் மனம் நினைவுகளில் புதைந்திருந்த தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தது !

காலை மணி 11 : 30

உனக்கு வயசு எட்டு.  அப்ப உன் வீட்லருந்து நீ படிச்ச ஸ்கூல் எத்தனை கிலோ மீட்டர் இருந்திருக்கும் ?

தெர்லையே, என்ன ஒரு நாலு கிலோ மீட்டர் ?

மூணு அல்லது மூன்றரை இருக்கலாம்.  ஆக, போக வர ஆறு முதல் ஏழு கிலோ மீட்டர்.  புத்தகங்களைத் தூக்கிக்கிட்டு நண்பர்களோடு பேசிக்கிட்டு இத நீ எட்டு வயசுலருந்து 13 வயசு வரைக்கும் செஞ்ச.  நினைவில்ல ?

ரியல்லி ?

ஆமா, ஒன்பதாவது போனப்ப உங்கப்பா உனக்கு ஒரு பழைய சைக்கிள் வாங்கிக் கொடுத்துட்டாரு.  அப்ப விட்ட நீ நடையை !

வாவ்வ்வ்வ்

அதனால ஏப்ரல் 14 வரைக்குமே நீ வண்டியைத் தொடாத, குழந்தைப் பருவத்துக்கு மீண்டும் போய்டு !

நாளைக்கு எழுந்திருச்சா கண்டிப்பா முயற்சி செய்யறேன்.

வீராஸ் கடையைச் சுற்றி ஒரு சிறுகடை கூட இல்லை.  இங்கிருக்கும் ஆயிரக்கணக்கான கடைகளைத் தாண்டி, சாலையில் பரப்பி வைக்கப்படும் கடைகள் தனியே ஆயிரமிருக்கும்.  அவ்வளவு பேருக்கும் முற்றிலும் வருமானம் கட்.  வீராஸ் மாபெரும் துணி உலகம் என்றாலும் அந்தக் கடை கிட்டத்தட்ட பதினோரு நாட்களாக முழு அடைப்பிலிருக்கிறது !

இந்தக் கடையிலிருந்து மொத்த விலைக்கு துணிகளை வாங்கி அதைப் புற நகர்களில் வார, மாதத் தவணைகளுக்கு கொஞ்சம் லாபம் வைத்து விற்கும் சில பெண்மணிகளை மூடிய, அந்தந்தக் கடை வாசல்களில் அமர்ந்திருப்பதை பார்த்தேன்.  அவர்களை அடிக்கடி பார்க்கவியலும் என்பதால் அடையாளம் காண்பதெளிது !

திடீரென்று ஒரு பெண், ஏ அவ சந்து பின்னாடி போறாடி, அப்பன்னா செட்டியார் குடவுன திறந்துட்டாருன்னு அர்த்தம், நாமளும் அப்படியே நைஸா சந்துக்கா போய்டுவோம் வா என்று கிசுகிசுத்தபடி எழுந்தார் !

நண்பகல் 12 மணி

அலுவலகத்தைக் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டேன்.  நடக்க நடக்க சோர்வு ஏறாமல் வேகம் கூடியது.  இந்த வெய்யிலுக்கு உடல் இப்படி ஒத்துழைப்பது வரம்தான்.  இந்த வரம் கடுமையான உழைப்பாளிகளுக்கு இன்னும் ஏராளமாக அல்லவா கிட்டியிருக்கும் ?  அதனால்தான் அவர்களால் சில நாட்களுக்குள் 300 முதல் 800 கிலோ மீட்டர் வரை நடந்து இலக்கை அடைய முடிந்திருக்கிறது.  என்ன பின்னடைவு என்றால் ;

அவர்களுக்கு வழியெங்கும் உணவு, தண்ணீர் கிட்டியிருக்குமா ?

ஓய்வெடுக்க பாதுகாப்பான இருப்பிடங்கள்

இருந்திருக்குமா ?

வழியில் யாராரெல்லாம் தடுத்து அவர்களை மடை மாற்றி விட்டார்களோ ?

எவனெல்லாம் எரியும் வீட்டில் பிடுங்குவதைப் போல அவர்களிடமும் பணம், உடமைகளை

களவாடினானோ ?

எவருக்கேனும் உடல் நலம் குன்றி மருத்துவ உதவிகள் கிட்டியிருந்திருக்குமா ?

இத்தகைய கேள்விகள் மனத்தை அரிந்துக் கொண்டிருந்த வேளையில் அந்தப் பயங்கரம் நிகழ்ந்தது !

என் பின்புறம் இரண்டு வண்டிகள் அழுத்தமான ப்ரேக்குகளையும் மீறி கட்டுப்படுத்த முடியாமல் டமாரென்று மோதிக் கொண்ட ஒலி.   சாலையில் என்னைப் போலவே நடந்துக் கொண்டிருந்த பலரும், கடைகளிலேயே ஆங்காங்கு நின்றிருந்த மக்களும் பதட்டத்துடன் என்ன விபத்து எனத் திரும்பினால் ;

மூன்று டீனேஜ் பையன்கள், ஒரு பைக்கில் அப்படி சத்தம் வரும் ஒரு ஹார்னை ஒலிக்க விட்டபடி 100+ கி மீ வேகத்தில் எங்களை இடியெனக் கடந்தனர்.   நாங்களெல்லோரும் ஒரு கணம் பதைபதைத்து திரும்பிப் பார்த்தோமல்லவா ….. அதில் அவர்களுக்கு சொல்லொண்ணா மகிழ்ச்சி, கிளுகிளுப்பு, கெத்து !

ஓத்தா ஒங்கள அந்த கரோனா வந்து ஓக்கணும்டா என்று நடைபாதை வாசி ஒருவர் உரக்கச் சாபமிட்டார் !

வீதியிலிருக்கும் சிசிடிவி கேமரா உதவியுடன் இந்த இளைஞர்களை எளிதாக கைது செய்ய காவல்துறையால் முடியும்.  வண்டியை பறிமுதல் செய்து அவர்களை சில வாரங்கள் தனிமைச் சிறையில் வைக்கலாம்.  ஒரு லட்ச ரூபாய் வரை தண்டம் வசூலிக்கலாம்.  நான் வண்டி எண்ணை நோட் பண்ண நினைத்து ஏமாந்தேன், காரணம் அவர்கள் கடந்த வேகம்.  சாலை இப்படி காலியாகக் கிடப்பது அவர்களுக்கு அல்வா தின்பது போல ?  இந்த வயதில் இப்படித்தான் ஆடுவான்கள் என மன்னித்தும்கடக்கலாம்!

நண்பகல் 12 : 30

எங்களின் பருப்பு மண்டி ஜே ஜேவென களை கட்டியிருந்தது.  சுமை ஏற்றும் தொழிலாளர்களில் பாதி பேர் ஊருக்குச் சென்று விட்டதால், இருந்தவர்களுக்கு டபுள் கூலி.  பரவாயில்லை.  மொத்தக் கடைகளிலிலுருந்து சரக்கு போவதால், இன்னும் ஒரு வாரத்துக்கு சென்னையில் மளிகைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு வராது.  ஆனால் போன வாரத்துக்கு இந்த வாரம், விலை எக்குத்தப்பாக எகிறியிருக்கும்.  முன் யோசனையற்ற அரசுகள் ஆளும் நாட்டின் சாபம் இது !

மாலை நான்கு மணி

வரும்போது வேறு பாதையில் வந்தேன்.  மினர்வா ( இப்ப பாட்சா ) தியேட்டர் அருகே மிகப் பெரும் நடைபாதை வாசிகளின் குடில்கள் இருக்கும்.  மிக மிக நெருக்கமாக, இறுக்கமாக முன்பு குடிசையாக இருந்தது,  இப்போது மரப்பலகைகளால் அறையப்பட்ட  செல்லுலார் வீடுகளாக இருக்கிறது.  அனைத்து வீடுகளுக்கும் மின் வசதி, ரேஷன் கார்டு உண்டு.  அந்த வீட்டின் வாசல்கள் முழுக்க மஞ்சள், வேம்பு, கல் உப்பு கலந்த நீர் தெளிக்கப்பட்டு, அது பசும்மஞ்சளாய் காய்ந்து போய் மங்களகரமாய்

காட்சியளித்தது !  அவர்களுடனே வாழும் நாய்களும், பூனைகளும் குதூகலமாய் இருப்பது போலப் பட்டன !

ஏனெனில், மாஸ்க் உடன் நான் புதிய ஆள், தெருவில் தனியாக நடக்கும் போது ஏதேனும் நாய்கள் வித்தியாசமா இருக்கானே என்று குரைக்குமோவென  அஞ்சினேன்.  அவைகள் இப்படி நிறைய பேரைப் பார்த்து பழகியிருந்தன போலும்.  ஆனால், பொதுவாக பெருந்திரளான பலருடன் வாழ்ந்த அவைகள், தினமும் பலதரப்பட்ட மக்களைக் கடந்திருக்கும்கள் அல்லவா ?

ஒருத்தன் எட்டி விட்டிருப்பான் !

ஒருத்தன் ஏ ச்சீ அந்தாண்ட போ என்றிருப்பான் !

ஒருத்தன் கல்லெடுத்து குறி தவறி வீசியிருப்பான் !

ஒருத்தன் தலையை நீவி விட்டிருப்பான்

ஒருத்தன் பார்லே ஜி பாக்கெட் பிரித்துப்  போட்டிருப்பான் !

அந்தக் கடைசி ஆளைக் காணாமல் அது தேடுவது போல் பட்டது.  அதன் கண்களில் ஏக்கம் வழிந்தோடியது.

நாளை நடந்து வந்தால் நாலு பிஸ்கட் பாக்கெட்களை பையில் போட்டுக்கொள்ள வேண்டும் !

இரவு மணி எட்டு

ஏகப்பட்ட முந்திரி, திராட்சையுடனான பருப்பு பாயாசத்துடன் இன்றைய இரவு உணவு முடிந்ததற்கு நான் உலா போய்விட்டு வந்ததுதான் காரணமாக இருந்திருக்கும்.  நானென்ன செய்வது ?  உள்ளேயே இருக்கணும்ன்னா ஆசைப்படறோம் ?

இரவு மணி ஒன்பது

தினமும் மனத்தை அறுத்துப் போடும் ஏதோ ஒரு சேதியோடே நாள் முடிந்துத் தொலைக்கிறது.  இன்று உத்திரப்பிரதேசத்தில் வெளியூர் வாசிகளை ஊருக்குள் அனுமதிக்க, அவர்களை சாலையில் அமரவைத்து, அவர்கள் மேல் கிருமி நாசினையைத் தெளிக்கும் படமும், சேதியும் கண்ணீரை உகுக்கச் செய்தது.

பலரும் இதற்கெதிராக வெகுண்டிருந்தனர்.  மாயாவதியும், அகிலேஷ்சும் கூட்டாக அரசின் இச்செயலை வன்மையாகக் கண்டித்திருந்தனர்.  குளோரின் கலந்த தண்ணீரை தெளிச்சோம் அது ஒரு தப்பா என்று அதிகாரிகள் அதற்கு விளக்கம் வேறு அளித்திருக்கிறார்கள் !!!

 

தொடரும்…..

தேதி 30/03/2020, திங்கட்கிழமை

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  32. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  33. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  34. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  35. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  36. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  37. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  38. திடீர் தீபாவளி இரவில்......
  39. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  40. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்