கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- நாள் # 41

04/05/2020,  திங்கள்

காலை மணி 11 : 30

நீட்டிக்கப்பட்ட மூன்றாம் ஊரடங்கின் முதல் நாள்.  ஆனால், ஊரடங்குக்கேயுரிய துளி மரியாதையைக் கூட மக்கள் இதற்குத் தரவில்லை.  இந்தியா முழுக்கவே ஒரே கதைதான்.  அடங்கிக் கிடந்த எரிமலைக் குழம்பு பீறிட்டு வெளி வருவதைப் போல , ஆக்ரோஷத்துடன் வெளிப்பட்டனர் !

அடடா, அதிலும் அண்டை மாநிலங்களில் திறக்கப்பட்ட மதுக்கடைகளில் திரண்ட கூட்டமிருக்கிறதே ?  கண்ணில் நீர் வழிய வைத்த காட்சி.  அவர்களைக் கண்டு பரிதாபப்படுவதா, பெருமை படுவதா ?  தனிமனித இடைவெளி பாடத்தை ஒன்றரை மாதங்களாக எடுத்து, அது திரண்டு வரும் நேரத்தில், அரசின் செயல்பாட்டால் அந்தப் பானையை தொப்பென்று போட்டுடைத்ததைப்  போலானது !

சில கிலோமீட்டர்களுக்கு மிக நெருக்கமாக ஒருவருக்கொருவர் நன்கு உரசியபடி நின்ற கூட்டத்தின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேலிருக்கும்.  இதை ஆந்திரா, டெல்லியில் கண்டேன்.  அதாவது அதை மட்டும்தான் காட்டினார்கள்.  எனவே கர்நாடகாவைத் தவிர ஏனைய மாநிலங்களில் இந்த துர்கதிதான் நிகழ்ந்திருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.  கர்நாடகாவில் மட்டும் நமக்கு காண்பிக்கப்பட்ட வீடியோக்களில் அந்த வரிசை கொஞ்சம் ஒழுக்கமாக விதிகளைக் கடைபிடிப்பது போலப் பட்டது.  இதுவரைக்கும் மட்டுமே 100 கோடிகளுக்கு மேல் மது விற்றுத் தீர்ந்திருப்பதாகச் சொன்னார்கள்.  இந்த வேகத்தைப் பார்த்தால் இலக்கு 1000 கோடிகளை எட்டும் !

ஆக, இவ்வளவு தட்டுப்பாடான மோசமான ஒரு சூழலில் மதுக்கடைகளைத் திறந்து, மக்களின் கைகளில் எஞ்சியிருக்கும் சொற்பக் காசையும் சுரண்டும் அரசை நோவதா ?  நூறு ரூபாய் மதுவை, ஆயிரம் ரூபாய் வரை கள்ளச்சந்தையில் குடித்து வாங்கித் தவித்த, கடைகள் திறப்புக்காக ஏங்கிக்கிடந்த  மதுப்பிரியர்களுக்காகப் பரிதாபப்படுவதா ?  ஒரு நாள் வசூலிலேயே பல நூறு கோடிகள் வரி வருவாயைக் கண்டுவிட்ட அரசுகள், கொஞ்சம் ஆசுவாசமடைந்து தங்களின் நிதிச்சிக்கல்களை தீர்த்துக் கொள்ளும் என பெருமூச்சு விடுவதா ?

நடுவண் அரசு மட்டும் நிதி நிர்வாகத்தை சரியாகச் செயல்படுத்தியிருந்தால், உரிய நேரத்தில் நிவாரண நிதிகளை, வரி பங்குகளை, மாநிலங்களுக்குப் பகிர்ந்தளித்திருந்தால், எந்த மாநில அரசுகளும், கண்டிப்பாக இத்தகைய மோசமானச் சூழலில், இப்படி மக்கள் ஒட்டிப் பழக அனுமதித்திருந்திருக்கவே மாட்டார்கள்.  அதிலும், நாடு முழுக்க மே 17 வரை ஊரடங்கு என அறிவித்துவிட்டு, அதன் முதல் நாளிலேவா இப்படி கூட அனுமதித்திருப்பார்கள் ?

நாடு மெல்ல மோடியின் பிடியிலிருந்து நழுவ எத்தனிக்கின்றன.  நீ இதுவரை பிடுங்கினேன்னு சொல்லிட்டு சும்மாவே விட்ட தேவையில்லாத ஆணிகள் அப்படியே இருக்கட்டும், விலகிக்கோ நாங்க எங்க நிர்வாகத்தைப் பாத்துக்கறோம் என பாஜபா ஆளாத ஒவ்வொரு மாநில முதல்வர்களும் துணிந்து களமிறங்கி விட்டதாகவே படுகிறது !

செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்கிற கொடையாளியின் பழமொழி நமக்குத் தெரியும்.  வாளாவிருந்து இருப்பதையும் கெடுப்பார் நரேந்திர மோடி என்கிற புதுமொழி இந்தியாவுக்கு அறிமுகமான நாளாக இதைக் காணலாம் !

மதியம் மணி 02 : 30

பார்த்தார் நம்ம முதல்வர் எடப்பாடி.  நம்ம பயகதேன் ஹொசூர் எல்லையிலும், தடா எல்லையிலும் ஒட்டி உரசி நின்னு, நாம ரேஷன்ல கொடுத்த பணத்தை அங்க போய் கொட்டிக் கொடுத்துட்டு இருக்கான்.  நாமத் திறந்தா வீட்ல இருக்கிற பொருள அடகு வச்சாவது நம்ம கல்லாவ நிரப்பி விசுவாசத்தை காட்டுவான், அதனால ஏழாம் தேதி திறங்கய்யா டாஸ்மாக்கை என உத்தரவிட்டுள்ளார் !

கர்நாடகாவில் மதுவை வரிசையில் நின்று வாங்கிய நண்பர் ஒருவர் அவர் வாங்கிய மதுவின் தரத்தைப் பற்றியும், மது விற்ற கடையின் சுத்தம் பற்றியும், வரிகளுடனான ஒரிஜினல் பில்களைப் பற்றியும், ஏகப் பெருமையுடன் பதிவிட்டிருந்தார்.  சித்த ராமைய்யா ஆண்டாலும், குமாரசாமி ஆண்டாலும், எடியூரப்பாவே ஆண்டாலும் இந்த ஒழுக்கத்தை மட்டும் எவராலும் குலைக்க முடியாது என அகந்தை தொனிக்கப் பேசினார் !

” மதுவே குடியைக் கெடுப்பதுதான், ஆனால் தமிழகத்தில் விற்கப்படும் மது ஆலகால விஷம்.  குடலையும், ஈரலையும் வெகு வேகத்தில் அழுக வைத்துவிடும்.  எந்தக் குடி அடிமையும் கட்டுப்பாடில்லாமல், உடல் உழைப்பில்லாமல் தொடர்ந்து டாஸ்மாக் மதுவை அருந்தினால், இரண்டே வருடங்களில் அவன் அனைத்து உறுப்புகளும் செயலிழந்து செத்துப் போவான் ” என்று ஆணித்தரமாகச் சொன்னார்.  என்னால் மறுக்கவியலவில்லை.  எங்களுக்குள்ளேயே அப்படி போன சாட்சி இருந்ததே ?

போக, நம்ம டாஸ்மாக் கடைகளும், பார்களும் இருக்கும் அழுக்கானச் சூழல்.  MRP விலைக்கு விற்காமல், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு விலை வைத்து விற்கும் ஊழியர்கள், ஒருபோதும் அதற்கு பில் தராத அதன் நிர்வாக அமைப்பு, பெரும் வெட்கக் கேடானது !

” ஆமா இவரு சாமியே கும்பிட மாட்டாராம், ஆனா கோயில்ல அவன ஏன் விடல, அவன் ஏன் இது செய்யல, அவன் ஏன் கேனத்தனமா இந்தச் சடங்கை செஞ்சு ஏமாத்துறான்னு கேள்வியா மட்டும் கேக்கத் தெரியும்.  சாமி பிடிக்கலைன்னு ஒதுங்கிட்டாப்பல, இதையும் கண்டுக்காம ஒதுங்கிப் போக வேண்டியதுதானே ? ”  என்று நூற்றாண்டு காலமாய், பகுத்தறிவாளர்களைப் பார்த்து, தீவிர ஆன்மீகவாதிகள் கேட்கும் கேள்விகள்.

அரதப்பழசாகிப் போய்விட்ட இந்தக் கேள்விகளையே இன்றும் கேட்கும் பகுத்தறிவிலிகள் உண்டு.  ஆனால், பகுத்தறிவாளர்கள் அத்தகைய கேள்விகளை உதாசீனப்படுத்திவிட்டு தொடர்ந்து ஆன்மீக வணிகங்களில் இருக்கும் குளறுபடிகளை தோலுரித்துக் கொண்டுதானிருக்கிறார்கள் !

அதுபோலவே, மதுவுக்கும் எனக்கும் தீவிர கொடுக்கல் வாங்கல் ஏதுமில்லாத போதும், இங்கு மதுப்பிரியர்களை புழு போல நடத்துவதைக் கண்டு மனம் கொதிக்கத்தான் செய்கிறது.  அவர்களுக்கு வராத ரோஷம் எனக்கு அதிகமாக வருகிறது.  குடிக்கு மட்டும் அடிமையாகாமல் தன்மானத்தையும் விட்டுக்கொடுத்து, அதிக விலை கொடுத்து வாங்கியும் இழிவாக நடத்தப்படும் அவர்கள்தான், இந்த இக்கட்டான நிதிச்சிக்கல்களைப் போக்க வரும் சீலர்கள் !

நமக்காக உயிரையும், தன் குடும்பத்தையும் பொருட்டாக மதிக்காமல் செலவழிக்கும் அவர்களுக்கு, குறைந்தபட்சம் தரமான மதுவையும், சுகாதாரத்தையும், நியாயமான விலைக்கான உத்திரவாதங்கள் கிட்டும் வரை அரசை நோக்கி எழுதிக் கொண்டே இருக்கப் போகிறேன்.  என்னாலான கைம்மாறு !

இரவு மணி 08 : 00

எது நிகழக்கூடாதென அஞ்சினோமோ அதுவே ஊரடங்குக்கே ஊரடங்கை திடுக்கெனப் போட்டதால் நிகழ்ந்திருக்கிறது.  கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தினமும் சதமாக அடிக்கிறதே என சில நாட்களுக்கு முன்தான் குறிப்பிட்டிருந்தேன், ஆனால் அதுவோ அதன்பின், இரட்டைச்சதம், முச்சதம் என பிரையன் லாரா ரெக்கார்டை முறியடிக்கும் உத்வேகத்தில் போய், கடைசியில் இன்று மட்டுமே 500+ தொற்றாளர்களாக உயர்ந்து, அனைத்துச் சாதனைகளையும் நொறுக்கிப் போட்டிருக்கிறது.  அதிலும் சென்னையில் மட்டுமே 300+ தொற்றாளர்கள்.  அதில் பலர் கோயம்பேடு உட்பட பல பெருங்காய்கறிச் சந்தைகளுக்குச் சென்றதினால் பாதிப்புக்குள்ளானவர்கள்.  மூன்றே நாளில் கொரோனா போய்விடும் எனச் சவடால் விட்ட வாய்தான் அதன்பின் ஊரடங்குக்கே ஊரடங்கையும் விட்டது.  அப்படிச் செய்ததினால் மக்கள் நோயை வாங்கி வந்துள்ளார்கள்.

மறக்க மாட்டாங்க எடப்பாடி சார்.

என்னாது, ஏற்கனவே செம்பரம்பாக்கத்தை திறந்து விட்டதிலேயே பாத்துட்டீங்களா ?  அதுசரி.

தொடரும்

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  13. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  14. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  15. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்