கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்

நாள் # 12 05/04/2020  ஞாயிற்றுக்கிழமை

காலை மணி 11 : 00

எல்லா நாளுமே ஞாயிறாக இருப்பதால், அதற்குரிய சிறு மரியாதையும், தொடர்ந்து மூன்றாவது வாரமாக இல்லாமல் போனதை, அது பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்.  இன்னும் எத்தனை நாள்டா ஆடுவீங்க அதையும் பாத்துருவோம் என்று அது காத்திருக்கிறது !

இன்றைய நாள் முழுக்கவே இரவு ஒன்பது மணிக்கு ஆர்வக்கோளாறுகள் என்ன செய்யவிருக்கின்றன என்கிற அச்சமும், ஆற்றாமையும் ஒருசேர எரிச்சலைக் கிளப்பியவண்ணமிருந்தன !

நண்பகல் மணி 12 : 30

ட்விட்டரில் வெளிப்படையாக யாரும் இன்றிரவு அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு தீபமேற்றப் போகிறோம் என்று சொல்லவில்லை, மாறாக தான் ஏற்றப்போவதில்லை நீங்க என்ன செய்யப் போறீங்க என்கிற பதிவுகள்தான் அதிகம் கண்ணில் பட்டன !

இரவு மணி 09 : 00

மெல்ல வெளிச்சம் உமிழும் ஒரு எல் இ டி பல்ப்போடு டிவி பார்த்துக்கொண்டிருந்தோம்.  வெளியே பேச்சுக்குரல் கொஞ்சம் அதிகரித்தது.  எழுந்து, வீட்டிலிருக்கும் அனைத்து மின் விளக்குகளையும் ஒவ்வொன்றாக போட ஆரம்பித்தேன்.  குளியலறை தொடங்கி அடுப்பறை, படிப்பறை, வாஷிங் மெஷின் அறை, இன்வெர்ட்டர் அறை, மொட்டை மாடி, படிக்கட்டுகள், சான்ட்லியர், பால்கனி, அடப்பாவிகளா, ஒரு குடும்பத்துக்கு இத்தனை லைட்களா எனத் திடுக்கிட்டுப் போனேன்.

எப்படி இருந்த வாழ்க்கை, அதெப்படி விக்கிரமன், கே.எஸ். ரவிக்குமார் படங்களைப் போல், ஒரே பாட்டில் இல்லையென்றாலும், சில வருடங்களில் என்னமாய் மாறி விடுகிறது ?

 

குடித்தன வாசல் வாடகையில் இருந்தபோது, வீட்டில் விளக்கு இரவு பத்து மணிக்கு மேல் எரியக்கூடாது.  பொதுக் குளியலறை உட்பட.   அவசரமாக போயே ஆகவேண்டுமெனில் மோடி அய்யா சொன்னது போல விளக்கேந்திப் போக வேண்டும்.

விவரமே தெரியாத வயதென்பதால் அப்போது கேட்டதில்லை.  ஆனால் மின்சாரத்தைச் செலவழிப்பதில் என்னிடம் இருக்கும் பொறுப்பற்றதன்மையைச் சுட்டிக்காட்ட, அம்மா இந்தச் சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்வார்கள் !

 

‘இதென்ன போங்கு ?  நம்ம வீட்ல லைட் எரிஞ்சா நாம பில் கட்டிக்கப் போறோம் ?’

‘தம்பி, அப்பல்லாம் சப் மீட்டர் இல்ல பாத்துக்க.  ஒரே மீட்டர்.  ஹவுஸ் ஓனர்தான் பில் கட்டணும்.  அதனால ஒரு ட்யூப், ஒரு பல்ப்பு மட்டும்தான் அலவ்ட்.  ஒன்பது மணிக்குள்ள ட்யூப் ஆஃப் ஆகிடணும்.  பத்து மணிக்கு பல்ப்.’

‘அப்ப ஃபேனு ?’

‘ஃபேனா ?  அப்ப ஏது ஃபேனு ?  பனவோல விசிறிதான்.’

இப்படியாக குடித்தனவாசல் கொடுமை தாங்காமல், கலைஞர் இந்தியாவிலேயே முதன்முறையாக எளிய மக்களுக்காக கட்டிக்கொடுத்த,  குடிசை மாற்று வாரிய அடுக்ககங்களுக்கு குடிவந்தோம்.  அங்கு மின் வசதியே இல்லை !

அதாவது மின் தடங்கள் அமைத்து மின் வசதி வர சில மாதங்கள் ஆனது.  அதுவரை சிம்னி விளக்குகளுடன் இரவுகள் கழிந்தது.  அந்தச் சிம்னி விளக்குகள் சுவற்றில் ஒளிபரப்பும் நம்முடைய பிரம்மாண்ட கரிய நிழல்கள், நிறைய கற்பனை உலகுக்குள் என்னை பிரவேசிக்கச் செய்தன.  புதிய நீண்ட தென்னங்குச்சி ஒன்றை உருவி, அந்த விளைக்கை பாதி நான் மறைத்தால் போதும், ராஜேந்திரச் சோழனாகி, கடாரம் கொள்ளக் கிளம்பிவிடுவேன் !

விதவிதமாக பல டிசைன்களில் வரும் கண்ணாடிச் சிம்னிகள் பார்க்க அவ்வளவு கொள்ளை அழகு.  அதனருகே புத்தகங்களை வைத்துப் படிக்கிறேன் பேர்வழியென பலமுறை என் தலைமுடியைப் பொசுக்கிக் கொண்டிருக்கிறேன் !

இன்று ?

நேற்று BBC முரளிதரன் அவர்கள் பகிர்ந்த ஒரு கட்டுரையை வாசிக்க நேர்ந்தது.  1972 களிலேயே தமிழகம், முழு மின்வசதியைப் பெற்ற மாநிலமாகி விட்டதாம்.  முக்கியமாக உழவுக்கு வயலில் நீர் பாய்ச்ச, பம்ப்செட் வைத்திருந்த அனைத்து விவசாயிகளுக்கும் கலைஞரின் திமுக அரசு, மின் இணைப்பு கொடுத்துவிட்டது.  RTI போட்டு இதர இந்தியாவின் இன்றைய மின் இணைப்பு நிலையை விசாரித்துப் பாருங்கள்.  ரத்தக் கண்ணீர் வரும் !

ம்ம்ம்ம், நாலு லைட்ட எக்ஸ்ட்ராவா போட்டதுக்கே நினைவு எங்கெங்கோ போய்டுச்சில்ல ?  சார்ரி.

‘’ஏங்க வேணாங்க.  உங்களுக்குப் பிடிக்கலைங்கிறதுக்காக, வெட்டி வேல செய்யாதீங்க.  நீங்க வெளில லைட் போட்டிருக்கிறதப் பாத்து எவனாவது கல்ல விடப் போறான் ?  ஊரோட ஒத்து வாழணுங்க !  உள்ளவாவது எரிஞ்சி தொலையட்டும், வெளிய ஆஃப் பண்ணுங்க !’’

மனைவியின் இத்தகைய புலம்பல் சரியாகத்தான் இருந்தது.  என் வீட்டைத்தவிர அக்கம்பக்கத்திலிருந்த அனைத்து வீடுகளும் இருளில் இருந்தன.  நாலு கிருத்துவ, ஏழு இஸ்லாமியர் வீடுகள் உட்பட !

இரவு மணி 09 : 10

டார்ச் லைட் சகிதம் பால்கனி, வாசல்களிலிருந்து பல மக்கள் கைகளை ஆட்ட ஆரம்பித்தார்கள்.  அகல் தீபமேந்தி பலப் பல வி ஐ பிகள், உடனுக்குடன் தங்களின் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றினார்கள்.  இதைவிடப் பயங்கரமாய் வான வேடிக்களைகளும், சரவொலியும் அந்த நிசப்த இரவை நாராசமாக்கியது !

இரவு மணி 09 : 15

திடீர்ப் புகையும், காற்று மாசும், மூச்சுத்திணறல் உள்ளவர்களுக்கு உடனடியாக சிரமத்தை தரும்.  இருமலும், ஆஸ்த்துமாவும் கொரோனாவின் சிஷயப் புள்ளைகள்.  பக்தாள்கள் தங்கள் கட்சியின் 40 வது பிறந்தநாளைக் கொண்டாட முன்பே வாங்கிக் குவித்திருந்த பட்டாசுகளை இதுதான் சாக்கென்று நாட்டுப்பற்றில் கலந்து, காற்றை வன்கலவி செய்தார்கள் !

இரவு மணி 10 : 00

தீவிர பெரியாரியர்கள் பலரே, தாங்கள் தோற்றுப் போனதாக எண்ணி அரற்றிக் கொண்டிருந்தார்கள்.  எனக்கு இதில் எந்த வியப்பும் பெரிதாகத் தோன்றவில்லை.  இன்றைய நாளில், இத்தனை மணியில், இத்தனை நிமிடங்களுக்கு விளக்கேற்றச் சொல்லி எனக்கே பத்து குறுஞ்செய்திகள் வங்கி, மகனின் பள்ளி, எங்களின் ஊர் சங்கம், வணிகச் சங்கம், ஷேர் மார்க்கெட் நிறுவனம், க்ரெடிட் கார்ட் நிறுவனங்களிலிருந்து  வந்திருந்தது !

மக்கள் கோயில்களுக்குப் போய் பத்து நாட்களாகி இருந்தன.  இந்த வாய்ப்பை அவர்கள் ஆன்மீக ரீதியாக பயன்படுத்திக் கொண்டார்கள்.  பக்தாள்கள் அதைத் தங்களின் வெற்றியாகவோ, பெரியாரியர்கள் அதைத் தங்களின் தோல்வியாகவோ கருதத் தேவையேயில்லை !

செய்யச் சொன்னாய்ங்க, செஞ்சாய்ங்க நானும் செஞ்சேன், செய்யலைன்னா என்னமாது சொல்லிடுவாங்களோன்னுதான் செஞ்சேம்பா கேஸ்கள்தான் நிறைய.  இதில் என்ன வெற்றி / தோல்வி ?

இந்த நேரத்தில் அரசியல் செய்யக்கூடாதென இந்த அபத்த மூட நம்பிக்கையை, எதிர்க்கட்சிகள் கூட சமூக வலைத்தளங்களைத் தாண்டி, வேறெங்கும் எழுத / பேசவில்லை.  மாறாக எழுதிப் பேசியதெல்லாம் பழமையில் ஊறிக்கிடந்த அக்மார்க் சங்கிகள்.  பார்ப்பனீய ஊடகங்களும், அடிமை கார்ப்பரேட்களும் அதை ஏந்தி மக்களிடையே கொண்டு போனார்கள்.  பின்விளைவு இந்த வினை.   இதை நுட்பமாக நோக்கி தளராமல், சலிக்காமல், ஓயாமல் உழைக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இன்னும் அதிகரித்துவிட்டது !

ஆமாம், அதைத்தான் இன்றைய கணநேர ஒளிமய காரிரவு நமக்கு உணர்த்தியது !!!

 

தொடரும்