தேதி : 29/03/2020, ஞாயிற்றுக்கிழமை

காலை 08 : 05 மணி.

அடித்துப் போட்டாற்போல் தூங்கும் தினமான ஞாயிறு,  போன வாரம் முதல் சற்றுத் தடுமாறத் துவங்கியது !

ஏனோ அந்த போனவாரம் அவ்வளவு உற்சாகமாகவும், அவலட்சணமாகவும் ஒருசேர இருந்தது !

போனவாரம் 14 மணி நேர முழு ஊரடங்கு, மாலை ஐந்து மணிக்கு சேவகர்களுக்கு பாராட்டு என்றவுடன் அந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட, சனி இரவே கறிக் கடைக்கு போனால், ஊப்ப்ப் ….. அதுதான் உலகின் கடைசி இரவு என்பது போலொரு கூட்டம்.  கால் கிலோ மீட்டருக்கு வரிசை.  எதற்கு அந்த ஊரடங்கு என்கிற பிரக்ஞை கூட இல்லாமல் மக்கள் அனைவரும் எந்த பாதுகாப்பு உபகரணங்களுமின்றி ஒட்டி நெரிசலாக கசங்கிக் கொண்டிருந்தனர்.

ச்சை என வெறுத்து வீட்டுக்கு வந்தபின்னர், என்ன ஞாயிறு கறி இல்லையா என்கிற அதிர்ச்சியில் மொத்தக் குடும்பமும் உறைய, அவர்களை ஏமாற்ற விரும்பாமல் நள்ளிரவு மீண்டும் போனேன்.  தேவலை.  பாதிக்கூட்டம்

குறைந்திருந்தது !

நாளைக்கு கறி சாப்பிடலைன்னா செத்தாடா பூடுவீங்க என்பது போல என்னைப் பார்வையால் கேட்டபடியே பாய் கறி வெட்டி என் தூக்குவாளிக்குள் போட்டது போல் ஒரு பிரமை.  எட்டுமணியிலிருந்து ஓயாமல் கறி வெட்டி வெட்டி, கைகள் களைத்துப் போனதால் இருக்கலாம், பாவம் !

பிறகு அன்று மாலை,  நாமெல்லாம் சொல் மீறாமல், கைகளை மட்டும் தட்ட, வடக்கில் மக்கள் அதை கொரோனா சம்ஹார தினமாகக் கொண்டாடி, தட்டுடைத்து மோடியின் மானத்தை வாங்கினார்கள் !

அட எதற்கு இந்த நினைவுகூறலெனில், அப்போதே அந்த ஒரு நாள் ட்ரையல் என்றும், மிக நீண்ட அடைப்பாய் அது மாறப் போகிறதென்றும் சொன்னார்கள்.  சொன்ன வாயில் நிலவேம்புச் சாறை நான்கு லிட்டர் ஊற்றிவிட வேண்டும்.  இரண்டே நாளில்,  நீண்ட காலத்திற்கு முடக்கப்பட்டு விட்டோம் !  போக இன்று கறி எடுக்கச் சொல்லி தூக்கு வாளியை தயார் செய்து வைத்துவிட்டார்கள் !

காலை  09 : 30 மணி

கறிகடையில் ஆளரவமில்லை.  வாய்ப்பே இல்லையே என எட்டிப் பார்த்தேன்.  பாய் கடையில் என்றுமே நிரந்தர விலை என்ற ஒன்றே அமலில் கிடையாது.  அதுபாட்டுக்கு விலைகள் மாறியவண்ணமிருக்கும்.  பெரும்பாலும் ஏறியே இருக்கும், அரிதாக என்றேனும் பத்திருபது ரூபாய் குறைவாக !

நம்ம பாய், இளம் செம்மறியாட்டு கறிக்கு பிரபலமானவர்.  மொத்த வண்ணாரப்பேட்டை, ராயபுரத்துக்கு அவர் மட்டன் தான் ஃபேமஸ்.  மட்டன் இன்றைய விலை கிலோ 1000 எனப் போட்டிருந்தது, ஆனால் ஸ்டாக் இல்லை, Shop Closed என்றும் எழுதப்பட்டிருந்தது !

வராது சார்.  இன்னும் பதினாலு நாளைக்கு மட்டனை மறந்துடுங்க.  சிக்கன், மீன் கிடைக்கிற வரைக்கும் சாப்பிடுங்க, அப்புறம் சாம்பாரும், பருப்பும்தான்.  நாங்க உங்ககிட்ட  வந்துடுவோம் !

என்கிட்டயா ?  அடப்போங்க பாய் நீங்க வேற ?  எங்க பருப்பு லோடெல்லாம் ஒரு வாரமாவே ஏறல.  இருந்த ஸ்டாக்குகளும் வேக வேகமா சில்லறை கடைகளுக்குப் போயாச்சு.  அது அதிகபட்சம் இன்னும் ஒரு வாரம் தாங்கும்.  அதுவும் சம்பளம் போட்டுட்டா தாங்காது.  ஆக, இனிமே லாரி ஏத்த அனுமதிச்சி அதுக்கு மிலிட்டரி செக்யூரிட்டி கொடுத்தாத்தான் உணவுப்பொருட்கள் வந்தடையும்.  பருப்பு, அரிசி, கோதுமை, எண்ணெய், ரவை, மைதான்னு அம்புட்டு அத்தியாவசியத் தேவைகளுக்கும் தட்டுப்பாடு வர இருக்கு.  சில்லறைக் கடைகள்ல கிலோ 100 ரூபா வித்த பருப்பு இப்பவே 200 ரூபாய்க்கு போயிருக்கும், அடுத்து நாம 300 ரூ கொடுக்க கைல காசோட போய் நிப்போம், அவன்கிட்ட சரக்கு இருக்காது, ரொம்பவே இக்கட்டான கட்டத்தின் உச்சிக்கு வந்துட்டோம் பாய்.  விழுந்து சிதறத்தான் போறோம், யாரும் தப்ப முடியாது !

நண்பகல் மணி 12 : 30

‘’இதென்ன அநியாயமா இருக்கு, மட்டன் நேத்து நைட்லயே முடிஞ்சு போச்சாம், நான் விடிகாலைல போனாலும் எனக்கு கிடைச்சிருக்காது, அதுக்குப் போய் சாமர்த்தியம் இல்ல, நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்னுல்லாம் குதிக்க ஆரம்பிச்சிட்ட ?  ரெண்டு நாளாவே உன் பேச்சு சரியில்ல, மரியாதை குறைஞ்சிக்கிட்டே போகுது ?’’

‘’அய்யோ கொஞ்சம் வாயைக் கட்டுப்படுத்தியிருக்கலாமோ ?  செக் பண்ணிப் பார்ப்போம்.’’

‘’காஃபி வேணும்.’’

‘’பால் பத்தாது.  இன்னிக்கு ஒரு பாக்கெட்டுதான் வந்தது, நைட்டு வரைக்கும் தாங்காது !’’

‘’நெனச்சேன்.’’

‘’நனைச்சாலும் தர முடியாது.  சுகர் எவ்வளவு இருக்குன்னு ப்ளட் டெஸ்ட் செக் பண்ணி, எடுத்துக் காட்டுங்க !’’

‘’ஓ, காஃபிக்கு எதிர்வினையா ?  சரி, நன்னாரி போட்டுத் தா.’’

‘’நன்னாரி எசன்ஸ் இருக்கு ஆனா எலுமிச்சை இல்ல.’’

‘’ஓஹோ சுனா பானா பொண்டாட்டி போல எங்ககிட்டயே டயலாக்கா ?  பாக்கலாம் எவ்ளோவ் நாள் ஓடும்ன்னு ?’’ கோபமாக போய் உள்ளறைக் கதவை அறைந்து சாத்திவிட்டு செல்ஃபோனைக் கையிலெடுத்தேன்.

பிற்பகல் மதியம் 02 : 00 மணி

பிரதமர் கொரோனா நிவாரண நிதியைக் கோரியிருந்தார்.  அவர் கேட்ட அடுத்த நொடியே ஆளுக்கு 100 கோடி, 200 கோடி என  நிதிகள் குவிந்தவண்ணமிருந்தன.  நன்கொடை அளித்த பல கம்பெனிகள், நாட்டு வங்கிகளுக்கு ஐம்பதாயிரம் முதல் ஒன்றரை லட்சம் கோடிகள் வரை கடன்களை வாங்கியிருந்த கார்ப்பரேட் கம்பெனிகள்.

கடை தேங்காயைத் திருடி வழிப்பிள்ளையாருக்கு உடைச்சிட்டு வரம் கேட்டானாம் ஒருத்தன்.  அந்தக் கதையால்ல இருக்கு எனச் சிரித்துக் கொண்டேன்.  பல பாலிவுட் நடிகர்கள் 25 கோடி, 50 கோடி என அள்ளிவிட்டிருந்ததைப் பார்க்கும் போது இது ஒரு நவீனப் பொறி என்பதை உணர முடிந்தது !  எவரேனும் RTI போட்டு, இன்னார் இந்த நிதிக்கு இவ்வளவு கொடுத்தார் என விளம்பரம் வந்ததே, உண்மையாகவே வரவு வந்ததா என விசாரித்தால், பல அறிவிப்புகள் பொய் என்பது நன்கு புலப்படும்.

2004 ல் இங்கு சுனாமி நிதி வழங்கிய பலரும் அறிவித்த  தொகையை முதலில்  வழங்கவில்லை.  பலருடைய காசோலைகள் பணமில்லாமல் திரும்பிவிட்டன என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் !

போக, இவர் புதிதாக P M Care Fund என்று ஓர் அக்கவுண்ட் ஆரம்பித்து பணம் கேட்கிறார் என்றும் Phonepe அதற்கு ரசீது தராது என்றும், PAN நம்பர் தரப்படாததால், நமக்கு வரி விலக்கு கிடைப்பதில் சிக்கல் வருமென்றும் பல தகவல்கள் உலா வந்தன.  முதலில் நாம் கொடுக்கும் நிலையில் இல்லை, எனவே who cares எனக் கடக்க நினைத்தாலும், மக்கள் இந்த டுபாக்கூர்களுக்கு நன்கொடைகளை வழங்காமல், உண்மையிலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்யும் நல்ல தொண்டு நிறுவனங்களுக்கு உதவலாம், அட்லீஸ்ட் நம் மாநில அரசுக்காவது கொடுக்கலாம் !

மதியம் 03 : 00 மணி

வட இந்தியாவில், உணவுக்காகவும், தங்குமிடத்திற்காகவும் நடைபெற்ற இடப்பெயர்ச்சி, உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்து, நாட்டின் முதண்மை அமைச்சரே மன்னிப்பு கோருமளவுக்கு நிலைமை போயிருந்தது !

ஆனால் இந்த மன்னிப்பின் எதிர்வினை எப்படி தெரியுமா இருக்கும் ?

குத்தே கமினே போசடிக்கே நாலு நாள் தின்னலைன்னா செத்தாடா போய்டுவீங்க ? கெடைக்கிற இடத்துல படுத்து நீங்க கொஞ்சநாள் பொத்திட்டு அங்கங்கயே இருந்து சமாளிச்சிருந்தா நம்ம பிரதமர் இப்படில்லாம் கண்ணீர் விட்டு மன்னிப்பு கேக்க வேண்டி வந்திருக்குமா ?  சாலா உங்களையெல்லாம் மார் மார்ன்னு கும்மி வச்சாத்தான் அடங்கப் போறீங்க ? என்று அந்த அப்பாவிகளின் பக்கம் சங்கிகள் திரும்பக்கூடும்.  அவர்களைப் பொறுத்தவரை ‘அவர்கள்’ வாயிருந்தும் உரிமை கோர முடியா மென் மிருகங்கள் !

மாலை மணி 04 : 30

விஜய் டிவியில் சைக்கோ.  பகீரென்றது.  அருகில் மகன்.  குழந்தைகளுக்கு மட்டுமல்ல மென்னுள்ளங்களுக்கே தகுதியற்ற படம்.  ஆனால் அவசியமான பாடம் அதிலுண்டு.  அதற்காக அடல்ட்ஸ் ஒன்லி படத்தை எப்படி இப்படி பொதுவில் போடுவது ?  திக் திக்கென்று பார்க்க ஆரம்பித்தேன்.  நல்லவேளை ஏகப்பட்ட ரத்தக்காட்சிகள் கட், பல வசனங்கள் ம்யூட்.  வெறும் வாயை மென்றுக் கொண்டிருந்த மிஷ்கின் ஹேட்டர்களுக்கு அவலை அள்ளிக் கொட்டியதைப் போலிருந்தது !

முன்னிரவு மணி 08 : 00

‘’மெதுவட, கிட சுடுவேன்னு பாத்தேன்’’

‘’ஏன் பாத்தீங்க, கேக்க வேண்டியதுதானே ?’’

‘’கேட்டு வாங்கித் தின்னற நிலைமைக்கு வந்துட்டேன் போல ?’’

‘’அதுல என்ன அவ்ளோவ் ஈகோ ?’’

‘’சரி, அதான் இப்ப கேட்டுட்டேன்ல்ல ?’’

‘’டின்னர் டைம்ல எண்ணெய் பலகாரம் சுட முடியாது.  இனி பத்து நாளைக்குமே சுட முடியாது, எண்ணெய் ஸ்டாக் ரெண்டு கிலோதான் இருக்கு, பத்தாம கித்தாம போச்சுன்னா ?  Fatty Lever Grade 1 க்கு மெதுவடை ஒண்ணுதான் குறைச்சல் ?’’

‘காஃபி கேட்டா சுகரு, வடை கேட்டா கொழுப்பு ?  ஏன் இந்த வாழ்க்கைய வீட்டுச்சிறைன்னு சொல்றேன்னு இப்ப புரிதா ? ‘ என்று கண்ணாடி முன் நின்று என் பிம்பத்திடம் நானே கேட்டேன் !

இரவு மணி 09 : 00

இன்றை நாளின் முடிவு சோகமான ஒரு சேதியோடு வந்தது.  ஜெர்மனி நாட்டின் ஏதோ ஒரு மாகாணத்தின் நிதியமைச்சர் தற்கொலை செய்துக் கொண்டார்.  நிதிநிலை, Shut Down களால், மாபெரும் இழப்பை தாங்க மாட்டாமல் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என வாசித்தேன்.  அத்தோடு நிப்பாட்டியிருக்கலாம்.  நம் மக்கள் எங்க நிதியமைச்சருக்கு அவ்ளோவ் ரோஷ மானமில்லையே என்று சுடச்சுட பதிவிட்டுக் கொண்டிருந்தார்கள் !

இங்கிலாந்து பிரதமருக்கு தொற்று பாசிட்டிவ்ன்னா எங்க பிரதமருக்கு ஏன் அப்படில்லாம் வர்ல என ஏங்குவது ;

செத்துப்போனவர நல்ல நிதியமைச்சர், இனமான அமைச்சர் என்பது, அப்படியே நிம்மி போட்டோவ உத்து பாக்க வேண்டியது ;

தம்பிகளா பாரதீய ஜனதா இந்தியாவை ஆளும்வரை, யாரு போனாலும், யாரு வந்தாலும் இங்க எதுவுமே திருந்தாது, நாடு வளராது !!!

29/03/2020

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  22. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  23. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  24. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  25. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  26. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  27. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  28. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  29. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  30. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  31. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  32. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  33. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  34. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  35. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  36. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  37. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  38. திடீர் தீபாவளி இரவில்......
  39. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  40. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்