கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்/ நாள் # 16

09/04/2020, வியாழன்

பிற்பகல் மணி 01 : 30

பத்தாவது வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை நடத்த முடியாமல் போன நிலையில், எந்த விபரீத முயற்சிகளையும் மேற்கொள்ளாமல், அதை முற்றிலும் கைவிட்டு, அனைத்து மாணவர்களும் தேர்வானதாக அறிவிக்க வேண்டுமென வைகோ முதல், இதர பல கல்வியாளர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், கல்வி அமைச்சர் செங்கோட்டையன், அதற்கான இறுதி முடிவை முதல்வர் எடுப்பார் என்று அறிவித்திருந்தார் !

திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், பத்தாவது வகுப்பு தேர்வுகள் பற்றி இன்று பேசிக்கொண்டிருந்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன்.  அவருடையக் கூற்றுப்படி, இந்தப் பள்ளிப் பருவ இறுதித்தேர்வு என்பது அதிமுக்கியமானது.  யார் நன்கு படிப்பவர், யார் சுமாராக படிப்பவர், யாரார்க்கு என்ன படிப்பு எதிர்காலத்தில் தேவைப்படும் என்பதை வெளிப்படுத்தும் முக்கியமான தேர்வாக, பத்தாவது வகுப்பு இறுதித் தேர்வு அமையுமென்பதால், அதைக் கைவிட உத்தேசமில்லை !

ஆனால், இப்போதையச் சூழ்நிலையில் அதை நடத்த மாட்டோம்.  உகந்த சூழலில், மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பளித்து உறுதியாக அந்த இறுதித்தேர்வு நடைபெறும் என்றார் !

இயற்கைக்கு முன் இவர்களெல்லாம் தூசு தானே ?  இப்படித்தான் நடுவண் அரசில் ஒருவர், நாட்டில் பிரளயமே வந்தாலும் ஏப்ரல் ஒன்று அன்று NPR பல்லாயிரம் கோடி செலவில் நடைபெறுமென்றார்.   என்ன ஆச்சு ?

கொரோனா பற்றிச் செத்தாலும் பரவாயில்லை, எங்கள் போராட்டங்களைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில் ஒருவர், ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்து, ஸ்டாலினுக்கு முன்பே சவால் விட்டார், அவர் கொக்கரித்த அடுத்த நொடி அல்லாகூ அக்பர் என்கிற கோஷம் வானைப் பிளந்தது.  என்னாச்சு ?

சூழலுக்கேற்ப, மக்களின் மனநிலை அறிந்து, எதிர்ப்புகளை கனிவுடன் அணுகிப் பேசத் தெரிந்தவனுக்கு இத்தகையத் தோல்விகள் வருவதில்லை !

எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கூற்றை நான் முழுக்க எதிர்க்கவில்லை.  நான் பத்தாவது வகுப்பு படிக்கும் போது, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளிலெல்லாம் தவறாமல் இரண்டு பாடங்களில் 35 க்கு கீழே மதிப்பெண்கள் பெற்றேன்.  ஆங்கிலம், கணிதம்.  இத்தனைக்கும் அந்த இரு பாடங்களுக்காகத்தான் சண்முகம் மாஸ்டரின் டியூசனுக்கே போனேன்.  அவர்தான் என் வகுப்பாசிரியரும் கூட.  அரையாண்டு மதிப்பெண்களைத் தாங்கி வந்த ரேங்க் அட்டையைப் பார்த்துக் கொண்டே, என் வயிற்றைக் கொத்தாகப் பிடித்து திருகினார்.

” அதென்ன டியூசன் படிக்கிற சப்ஜெக்ட்ல மட்டும் குறி பார்த்து பெயிலாகுற, என்னை வெறுப்பேத்துறியா ? ”

அடுத்தடுத்த பயிற்சித் தேர்வகளில் தெளிவாகி, பத்தாவது வகுப்பில் 60 விழுக்காடுகளுக்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்வானேன்.  ஆனால் இன்று 90 விழுக்காடு மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் கூட ஹோவெனக் கதறியழுவதைக் கண்டு திடுக்கிட்டிருக்கிறேன்.  95 – 98% எதிர்பார்த்தேன், இப்படி ஆகிப்போச்சே என்று அந்த மாணவர்களின் பெற்றோரும், அவர்களுடன் சேர்ந்து பேசும்போது அடேய் என உரக்கவே கத்தியிருக்கிறேன் !

இப்படிப்பட்ட இன்றைய நிலையில், காலாண்டு, அரையாண்டு, ரிவிஷன் டெஸ்ட் மார்க்குகளையெல்லாம் அளவீடாகக் கொண்டு, மாணவர்களைத் தேர்ச்சி பெற வைத்தால், பெருவெற்றியை இலக்காகக் கொண்டு போராடத் தயாராகவிருக்கும் பல  மாணவர்களுக்கு தேர்வில்லா வெற்றி, ஏமாற்றமாகக் கூடப் போகலாம்.

ஆனாலும் இந்த முக்கியமான முடிவில் எடப்பாடி பழனிச்சாமி உடனே எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கல்வியாளர்களுடன் ஒரு கூட்டாலோசனை நடத்த வேண்டும்.  அதில் எது சிறந்த முடிவோ அதையே தேர்வு செய்ய வேண்டும் !

அந்திமாலை மணி 05 : 55

ஆமாம், காரிருள் சூழ்ந்து ஆறு மணிக்கு முன்னரே சூரியன் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள ஓடோடிப் போய்விட்டது.   அதுவரை வேக்காடாயிருந்த காற்றில் குளிர்வாடை !

இறுக்க மூடியிருந்தச் சாளரங்களைத் திறந்த பொழுதில் முதல் துளி கையைத் தொட்டது.  சட சடவென கோடை மழை.  சில நிமிடங்களுக்குள் சாலையில் வெள்ளப் பெருக்கு.  இயற்கையின் கருணைக்கும், கோபத்துக்கும் முன்னே நம்முடைய அகந்தைகளுக்கும் கணிப்புகளுக்கும் பொருளே இல்லையென நிருபித்தது அந்த அந்திமழை !

ஆனால் கோவிட் 19 வைரஸ் மேலும் பரவ உகந்த பின்னணியை அமைக்கவே அந்த மழை வந்திருப்பதாக மருத்துவர்களும், வானியல் நிபுணர்களும் பதறினர்.  அந்த மழையில் நனைதலோ, தேங்கிய நீரில் கால் வைப்பதோ ஆபத்தான செயல்.  எனவே மழையே, உன் கருணையை கொஞ்சம் காலம் கழித்து காட்டலாமே என அதனிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தனர் !

சென்னை அரைமணி நேரத்தில் கொடைக்கானலாகக் குளிர ஆரம்பித்துவிட்டது !

இரவு மணி 10 : 00

திருமதி. ஒய்.ஜி.எம். மதுவந்தி  வீடியோ ஒன்றைக் காண நேர்ந்தது.  அவருடையத் தரவுகளைக் கேட்டபின்,

கண்களையும், காதுகளையும் பிடுங்கி கூவத்தில் விட்டெறியுமளவு வெறியேறியது.  டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்த தகவல் என்று அந்த அம்மையார் ஐந்து லட்சம் கோடி மக்களுக்கு நிவாரணம், 30 ஆயிரம் கோடியில் 40 விழுக்காடென்பது இருபதாயிரம் கோடி என அவர் உமிழ்ந்த தகவல்களைனைத்துமே கொரோனோ கலந்த வாந்திதான் !

காற்றில் அது கலந்தாலே பல கி மீ சுற்றளவுக்கு சீல் வைத்து மருந்தடிக்க வேண்டும்.  இவர்கள் அடித்துவிட பொதுவாகவே நாஸா, இஸ்ரோ, WHO, ஐ நா, ICMR, இங்க்லிஷ் நாளிதழ்களென உபயோகிப்பது வழக்கம்.  ஏன் ??

ஒரு படத்தில் ரஜினிகாந்த், ” I can talk English, I can walk English ” என்று வாய்க்கு வந்ததை ஆங்கிலத்தில் பேசுவார்.  அருகிலிருக்கும் செந்திலுடைய வாய் தாமே பிளந்துவிடும்.  இந்த ஆதிகால உத்தியைத்தான் பார்ப்பனர்கள் சாமானியர்களுக்கெதிராக வழக்கமாகப் பயன்படுத்துகிறார்கள்.  இந்துவில் வந்தது, சந்துவில் வந்ததென்று சொல்லிவிட்டால் போதும், ” அப்படியா அப்பச் சரியாத்தான்ய்யா இருக்கும் ” என நம்பித் தொலைப்பது !

2 G விஷயத்தில் அந்த உத்திதான் வெற்றிபெற்று,  மூடர்களை அழுத்தமாக ஆள வைத்துக்கொண்டிருக்கிறது.  இவர்களை அந்த மக்களுக்கிடையே உடனுக்குடன் அம்பலப்படுத்தி, சாணியைக் கரைத்து ஊற்றிவிட வேண்டும்.  இல்லையேல் அந்தக் கிருமிகள் பலரை மூடராக்கிக்கொண்டே போகும் !!!

 

தொடரும்