கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 44

07/05/2020,  வியாழன்

காலை மணி 08 : 00

பரபரப்பான சோகச் செய்தி ஒன்றால் இன்றும் விரைவாக எழ நேர்ந்தது.  விசாகப்பட்டினம் ஆந்திர மாநிலத்தின் பிரபலமான துறைமுக நகரம் பழம்பெருமை கொண்ட இந்நகரத்தின் புறநகர் கோபாலப்பட்டினம்.  அதில்தான் தென்கொரியாவின் உலகப் புகழ்பெற்ற நிறுவனமான L. G யின், பாலிமர் இழைகள் சம்பந்தமான தயாரிப்புக்குரிய ஆலை ஒன்று உள்ளது.  இந்தத் தொழிலுக்கு தேவைப்படும் மிக ஆபத்தான வேதிப் பொருட்களுள் ஒன்று ஸ்டைரின்.  இது திரவ நிலையில், கொள்கலன்களில் சேமித்து வைக்கப்படுகிறது. 16 டிகிரி செண்டிகிரேட்க்கு மிகாத வெப்பநிலையில்தான் இந்தத் திரவம் பாதுகாப்பாக இருக்கும்.  வெப்பத்தைச் சரியாகக் கணிக்காமல் உயர்ந்துவிட்டால், சூடேறி அந்தத் திரவம் விஷவாயுவாக மாறி, அழுத்தம் அதிகரித்து கொள்கலன்கள் வெடித்துவிடும் !

இந்த ஒன்றரை மாத ஊரடங்கினால் இந்த ஆலையும் செயல்படாமல் முடங்கி இருந்திருக்கிறது.  தேக்கி வைக்கப்பட்டிருந்த ஸ்டைரின் பற்றிய ஆபத்து விதிகளை யார் காற்றில் பறக்க விட்டனரோ தெரியவில்லை !

வியாழன் அதிகாலையில் அந்த ஸ்டைரின் விஷவாயுவாக மாறி கொள்கலன்கள் வெடித்து பெரு மேகமாய் கோபாலப்பட்டினத்தை சூழ்ந்திருக்கிறது.   பெரும்பாலோர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்திருக்கிறார்கள்.  சுவாசித்த பலருக்கும் தொடர் இருமல், தலைசுற்றல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டிருக்கிறது.  அவ்வளவாக உணராமல் கொஞ்சம் தூரத்திலிருந்தவர்கள் அதிகாலையில் நடைபயிற்சிக்காக, வேலைகள் நிமித்தம் சாலைக்கு வந்தவர்கள் அப்படி அப்படியே தொப்பென்று சாலையில் மயங்கி விழ ஆரம்பித்திருக்கிறார்கள் !

அதன்பின்னரே காற்றில் விஷவாயு பரவியிருப்பதை உணர்ந்திருக்கிறார்கள்.  குழந்தைகள்தான் உடனடி தாக்குதல்களுக்குள்ளானார்கள்.  மயங்கி துவண்ட குழந்தையை அள்ளிப் போட்டுக் கொண்டு கதறியபடியே உற்றார்கள் மருத்துவமனைகளுக்கு ஓடோடி வந்ததைப் பார்க்கும் போது நமக்கும் பதறியது.  சிகிச்சைப் பலனின்றி 13 பேர் இறந்திருக்கிறார்கள்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சுவாசக் கோளாறு, வாந்தி, மயக்கத்துக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் !

பிரதமர், குடியரசுத்தலைவர், தமிழக முதல்வர் உட்பட அனைவரும் தங்களின் கவலையையும், ஆறுதலையும் ஆந்திர முதல்வரிடம் பகிர்ந்திருக்கிறார்கள்.  ஆந்திர மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் அலட்சியத்தால் இந்தக் கோரம் நிகழ்ந்திருக்கலாமென பலருடையக் கூற்று !

மணலி, மீஞ்சூர், அத்திப்பட்டு, கும்மிடிப்பூண்டி போன்ற சென்னைப் புறநகர்களிலும் இதுபோன்ற ஆபத்தான வேதிப்பொருட்களை கையாளும் / உற்பத்தி செய்யும் ஏகப்பட்ட ஆலைகள் உள்ளன.  நம்முடைய மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் செயல்கள் மீது எனக்கு எந்தச் சந்தேகமுமில்லை.  ஆனால், இதுபோன்ற ஆபத்தான ரசாயண தொழிற்சாலைகள், கசியும் வாயுக்கள் பற்றிய எச்சரிக்கையை சுற்றுப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கும் அடிக்கடி அரசு எடுத்துச் சொல்ல வேண்டும்.  முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் பற்றிய மாதிரி சோதனைகளைச் செய்து காட்ட வேண்டும்.  அனைத்து குடும்பங்களுக்கும் பிராண வாயு கொள்கலனை விலையில்லாமல் வழங்கி, அவசர காலத்தில் அதை எப்படி இயக்குவது என்றும், ஏன் என்றும் விளக்க வேண்டும்.  விபத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான்.  எடப்பாடி அரசு இன்றே அதற்கான முன்னெடுப்புகளைச் செய்யத் துவங்க வேண்டும் !

மாலை மணி 04 : 00

ஆனால் தமிழக ஊடகங்களுக்கு இந்த விபத்துச் செய்தியை தொடர்ந்து காட்டுவதை விட, தமிழகத்தில் சில மாவட்டங்களை விட்டுவிட்டு, இதர மாவட்டங்களில், நாற்பத்தைந்து நாட்களுக்குப் பின் திறக்கப்பட்ட டாஸ்மாக் வணிகச் சிறப்புக்களை காட்டுவதற்குத்தான் முன்னுரிமை தந்தன.  சில கிலோமீட்டர் நீளத்துக்கு இருந்த குடிமகன்களின் நேர்த்தியான வரிசை, பந்தல், அமர வசதி, கட்டை கட்டிய ஒழுங்கு, டோக்கன், ஆதார் அட்டை, அடடா அடடா எடப்பாடியார் அரசுதான் என்னே நிர்வாகத் திறன் கொண்டது பாரீர் என பறைசாற்றிக் கொண்டிருந்தன பல தமிழ் செய்தி ஊடகங்கள்.

ஒருசிலர் மட்டும் இந்த நிர்வாகத்திறனை கோயம்பேடு வணிகச் சந்தைகளில்.காட்டியிருந்தால் கொரோனா தொற்றெண்ணிக்கை பெருகியே இருந்திருக்காதே சார் எனக் குறைபட்டனர் !

முன்னதாக காலையிலேயே கருப்புச் சட்டை, கருப்புப் பட்டை, கண்டனப் பதாகைகள் சகிதம் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வைகோ, திருமாவளவன், கே எஸ் அழகிரி, ஜவாஹிருல்லாஹ், உட்பட இன்னும் பல தலைவர்கள,  அரசின் டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க, தம் வீட்டுவாசல்களில் நின்று, கோஷமிட்டு போராடினர் !

வலைத்தளங்களில் மட்டுமல்ல செல்லூர் ராஜூ உட்பட பலரும் திமுகவின் இந்தக் கண்டன முன்னெடுப்பை கிண்டல் செய்தனர்.  அதாவது திமுகவினர் சாராய உற்பத்தியும் செய்கின்றனர், டாஸ்மாக் திறப்பையும் எதிர்க்கின்றனராம் !

இது சரிதானே என நம்பும் சாமானிய மனங்கள் மட்டும் சற்று உன்னிப்பாக வாசிக்கவும்.

திமுகவினரால் நடத்தப்படும் இந்த ஆலைகள், டாஸ்மாக் இவ்வளவு நாள் மூடப்பட்டிருந்ததால், வணிகம் ஏதுமின்றி கடும் நட்டத்தைத்தானே சந்தித்திருக்கும் ?  இன்னும் இந்த நிலை நீடித்திருந்தால், அவர்கள் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, ஆலையை அக்கு அக்காகப் பிரித்து காயலான் கடையில் பேரிச்சம்பழத்துக்கு ஈடாகப் போட்டுவிட்டு பிச்சையெடுக்கப் போவார்களா – இல்லையா ? அதைத்தானே தன் கட்சிக்காரர்களாகவே இருந்தாலும் திமுக செய்ய விரும்பியது ?  டாஸ்மாக்கை திறந்து அவர்களை வாழ வைப்பது யார் ?  திமுகவா ??  ஏன் இவ்வளவு மடத்தனமாக சிந்திக்குமளவு நமது மூளை வெளுக்கப்பட்டிருக்கிறது ?

மத்தியிலும், மாநிலத்திலும் கடந்த ஆறிலிருந்து ஒன்பது வருடங்களாக யாருடைய ஆட்சி இருக்கிறது ?  திமுகவின் சாராய ஆலை முதலாளிகள், டாஸ்மாக் செய்யும் கொள்முதலால் கோடி கோடியாகச் சம்பாதித்து திமுக கட்சிக்குத்தானே நிதியாக வழங்குவார்கள் ?  அந்த நிதியைக் கொண்டு திமுக உங்களைத்தானே வீழ்த்தும் ?  ஏன் பின் கடையைத் திறக்கிறீர்கள் ?  தமிழகத்தில் மது உற்பத்தி ஆலைகள் ஒன்று கூட இனி இயங்கக் கூடாது என சட்டம் போடுங்கள். அல்லது மது வணிகத்தை நடத்தியே ஆக வேண்டுமெனில், அண்டை மாநிலங்கள், அண்டை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து டாஸ்மாக்கில் விற்பனை செய்யுங்கள்.  அனைத்து அதிகாரங்களுமே உங்கள் கைகளில்தானய்யா உள்ளது ?  ஏன் அதைச் சட்டபூர்வமாகச் செய்யத் தயங்குகிறீர்கள் ?  செய்தால் நீதிமன்றங்களில் உங்கள் சாயம் வெளுக்கும்.  நம்பும் மூடர்கள் இளிக்கத் துவங்குவார்கள்.  ஆனால் மறந்து மீண்டும் இதையே கையிலேந்துவார்கள் !

தொற்றெண்ணிக்கை எப்போதுமில்லாத அளவுக்கு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறதே – ஊரடங்கு இருக்கும் இந்த வேளையில் டாஸ்மாக் கடைகளை திறக்கத்தான் வேண்டுமா எனக் கேட்டால், திமுக சாராய ஆலைகளை நடத்துகிறதாம்.  இன்னும் எத்தனை காலம்தான் பின்னோக்கியே சிந்திக்கப் போகிறோம் ??

 

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  10. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  11. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  12. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  13. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  14. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  15. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்