கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- நாள் # 23

16/04/2020,  வியாழன்,

காலை மணி 11 : 45

ராகுல் காந்தியின் ஆன்லைன் பேட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.   ஆன்லைன் பேட்டி என்பதால், ஒளித்தரமும், ராகுலின் தற்போதைய சிகையழகும், அவரை அப்படியே ராஜிவ் காந்தியைப் போலவே காட்டியது.  நம் மண்ணில் வைத்தல்லவா அந்த மனிதரைக் கொன்றோம் ?  அது கொஞ்சம் மனதில் கசப்பை உண்டாக்கியது !

ராஜிவ் கொலையில் அதிகம் மகிழ்ந்தவர்கள் தமிழ் தேசியர்களோ, புலிகளோ அல்லவாம்.  RSS ஆட்கள்தானாம்.  ஒரு சங்கி என்னிடம் கொடுத்த வாக்குமூலம் கீழே ;

” ராஜிவ் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், எங்களால் காலூன்றி இருக்கவே முடியாது.  ராஜிவுக்கு எதிராக வி. பி. சிங் உருவானார்.  அவருக்கு ஆதரவளிப்பதன் மூலம், சிறுகச் சிறுக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பதுதான் எங்கள் கனவு !

ஆனால், அந்த மனுஷர் தன் ஆட்சி கவிழ்ந்து போய்விடுமென கொஞ்சம் கூட மிரளவில்லை.  சமூகநீதி விஷயத்தில் காங்கிரஸ்காரனை விட, திராவிடக் கட்சிகளை விட, கம்யூனிஸ்ட்களை விட நூறடி அதிகம் பாய்ந்துக் காட்டினார்.  எங்கள் தயவில் இருந்துக் கொண்டே மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தப் போவதாகச் சொன்னார்.  RSS கொதித்துப் போனது அங்குதான்.  அது மட்டும் இந்தியா முழுக்க முழுமூச்சாக அன்று நிறைவேறியிருந்திருந்தால், RSS இத்தனை நாள் இங்கு பலமாக இருந்ததற்கான அர்த்தமே இல்லாமல் போயிருந்திருக்கும் !

அதனால்தான் வி.பி. சிங்கை அடக்க, அத்வானியைக் கொண்டு அயோத்தி நோக்கி ரத யாத்திரை என்கிற ஆயுதத்தை கையிலெடுத்தோம்.  எடப்பாடியாகவோ, ஓ பி எஸ்சாகவோ வி.பி. சிங் இருந்திருந்தால், அது வெறும் யாத்திரைதானே என விட்டுக் கொடுத்து ஆட்சியைத் தக்க வைத்திருந்திருப்பார்.  ஆனால் அந்த மனுஷன் என்னமோ மெஜாரிட்டி பலத்தோட ஆட்சி நடத்தறதா நினைச்சிக்கிட்டு அத்வானியைக் கைது செய்ய உத்தரவிட்டார் !

வாஜ்பாய் உடனடியா ஆதரவை வாபஸ் வாங்கினார்.  வி.பி.சிங் ஆட்டம் அன்னியோட ஒழிஞ்சது.  அதுக்கப்புறம் ராஜிவும் வரமாட்டார், வி.பி.சிங் வேலைக்காக மாட்டார்ன்னு நினச்சோம்.  ஆனா, ராஜிவ் ஆட்சியில இருந்ததை விட ஆட்சியில இல்லாம இருந்த இரண்டு வருஷத்துல பக்குவமாகிட்டார்.

எதிர்பாராவிதமா ராஜிவ் இங்க கொல்லப்பட்ட போது இரண்டு விஷயங்கள் நடந்தன.

அங்க காங்கிரஸ்க்கு நேரு குடும்பமில்லாத ஒரு தலைமை அமைஞ்சது.  இங்க திமுகவுல கலைஞர் மட்டும்தான் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில ஜெயிச்சார்.  ஜெயலலிதா அமோக வெற்றியோட ஆட்சியமைச்சார்.  அந்தம்மா எப்படி கரசேவைக்கு பகிரங்கமா ஆதரவளிச்சாங்களோ, அதேபோல  நரசிம்மராவ் பீரியட்லதான் பாபர் மசூதிய சுக்கு நூறாக்கினோம்.  எல்லாம் எங்களுக்குச் சாதகமா அமைஞ்சது.  ராஜிவ் மட்டும் உயிரோட இருந்திருந்தா அதெல்லாம் சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை !

நரசிம்மராவ் ஆட்சி முடிஞ்ச பின்னாலயும் உடனடியாகவெல்லாம் எங்களால உட்கார முடியலை.  காங்கிரசும், கம்யூனிஸ்ட்களும் ஒண்ணுச் சேந்துக்கிட்டு யார் யாரையோ மேல ஒக்கார வச்சாங்க. அந்தக் குழப்பத்தாலயும்,  இந்திய அளவில பெரிய தலைவர்கள் இல்லாததாலயும் 1998 ல முதன்முதலா ஆட்சியமைச்சோம் ”

ராகுல் ராஜிவாக கண்ணில் பட்டதால் சங்கி சொன்ன கதை வந்துவிட்டது.

” வெறுமனே மக்களை முடக்கி வைத்துவிட்டால் கொரோனா ஒழிந்துவிடாது.  கையிலிருக்கும் மருத்துவ வசதியைக் கொண்டு அதிக மக்களை  சோதனைக்குட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம்தான், இங்கு கொரோனாவை முற்றிலும் அடக்க முடியும் ” என்று யதார்த்ததை அழகாகப் பேசினார் ராகுல் !

பிற்பகல் மணி 03 :00

அதே ஆன்லைனில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிப் பேசியிருந்தார் ஸ்டாலின்.  கூட்டத்தின் தீர்மானங்களாக அனைத்து ரேஷன் அட்டைக்கும் 5000 ரூபாய் நிதியுதவி, குடும்ப அட்டை இல்லாதவர்களையும் பகுத்தறிந்து அந்தத் தொகையை வழங்க வேண்டும் மற்றும் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏற்பட்டால், அவர்களின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் !

இதில் இந்த ஒரு கோடி நிதியுதவி கோரிக்கையை மட்டும் பெரும்பாலோர் கேலி செய்த அவலம் அரங்கேறியது.  இதில் கேலி செய்ய என்ன இருக்கு ?  உலகின் பல நாடுகளும் இழப்பீடாக இதற்கும் அதிகமான தொகையைத்தானே வழங்குகின்றன ?  அதுவும் இது பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் நோய்ன்னு நம்ம முதல்வர் சொல்கிறார்.  பணக்காரனுக்கு ஒரு லட்ச ரூபாயை எப்படி இழப்பீடாக கொடுப்பது ?  எதிர்கட்சி சொல்லிவிடும் தொகையை அப்படியே கொடுத்துவிட்டுதான் அரசு மறுவேலை பார்க்கப் போவதைப் போல் ஏன் இவர்களுக்கு இந்தப் பதட்டம் ?

இரவு மணி 08 : 00 

” தன்னார்வலர்கள் யார் அனுமதிக்காகவும் காத்திருக்கத் தேவையில்லை.  அதிகாரிகளிடம் சொல்லிவிட்டு மாலை மூன்று மணி வரை, எளியோர்களுக்கு உணவு, உதவிகளை வழங்கலாம் ” என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.  திமுகவின் இன்னொரு சட்டப்போராட்ட வெற்றி !!!

தொடரும்