கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- நாள் # 43

06/05/2020,  புதன்

முன்னதிகாலை மணி 03 : 00

சில அறிகுறிகள் பற்றி என் ஆரோக்கிய சேது செயலியில் பதித்து விட்டு, தூங்கப் போய்விட்டேன்.  கிர்ர்ர்ர் கிர்ர்ர்ரென்று அழைப்பு மணி ஒலிக்கிடையே டமார் டமார் எனக் கதவையும் தட்டும் ஓசை !

கதவைத் திறந்தால் முழுக் கவச உடைகளுடன் ஏழெட்டுப் பேர் இதோ இவர்தான் என்றபடி என்னை அமுக்கிப் பிடித்தார்கள் !

வெப்பாமானியால் நெற்றியில் சுட்டுப் பார்த்ததில் அது சிவப்பு கலரில் ஞை ஞை என அலற ஆரம்பித்தது.  யாரோ ஒருவர் சார் கன்ஃபர்ம்ட்.  முழுக்க சீல் பண்ணிடறோம் என்று என்னைப் பார்த்துக் கொண்டே மொபைலில் பேசினார் !

எனக்கும் பாதுகாப்பு உடைகள் பூட்டப்பட்டு, முகத்தை ப்ளாஸ்டிக் கவர் கொண்டு இறுக்கினார்கள்.  இரண்டு பக்கமும் இருவர் ஆளுக்கொரு கையைப் பிடித்துக்கொண்டு கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு போயினர் !

வீதியில் எட்டிப் பார்த்த அனைவரின் முகத்திலும் பீதி தெரிந்தது.  அதுபாட்டுக்கு எங்கெங்கயோ கைய தேச்சிக்கிட்டே போகுமே எங்கல்லாம் அந்த சனியன் ஒட்டியிருக்கோ ?  எங்கிருந்து புடிச்சிட்டு வந்ததோ என்பது போல பல முணுமுணுப்புகள் கேட்டன !

ஆம்புலன்ஸில் ஏற்றும் முன் கிருமி நாசினி கொண்டு என்னை அபிஷேகம் செய்தார்கள்.  முடிந்தபின், ஏறு என ஒரு காவலர் குரல் கொடுத்தார்.  அந்தப் பாதுகாப்பு உடை கால்களை மடக்க விடாததால், ஏற கொஞ்சம் சிரமப்பட்டேன்.  அவர் லத்தியால் நெம்பித் தள்ளியபோதுதான் திடுக்கிட்டு விழித்தேன் !

இருள்சூழலில் தூக்கத்தைக் குலைத்து எழுப்பிவிட்டது அந்த விபரீதக்கனவு.  ச்சை கனவே இவ்வளவு பயங்கரமா இருக்கே, நிஜமாகவே தொற்று ஏற்பட்டவரையும், அவர் குடும்பத்தையும், இந்த மக்கள் எப்படியெல்லாம் அணுகுவார்கள் என்கிற கற்பனையால் அச்சம் மேலும் கிளர்ந்தது !

சுயநலம், தன் குடும்பநலம் மட்டுமே பிரதானமெனப் குறுகிப் போய்விட்ட இன்றைய மனித மனம், அதற்காக எந்த இழிவையும் மண்ணின் அசல் கலாச்சாரத்தை மறந்து செய்யத் துணிகிறது.  இது சமூக உணர்வு, சமூக இணக்கம், சமூக சேவை, சமூகப் பண்பு பற்றி சரிவரப் போதிக்காத நம் கல்விமுறையின் குறைபாடோ எனச் சந்தேகிக்க வைக்கிறது !

இன்று வந்த கனவிற்கு காரணங்களில்லாமலில்லை.  வீட்டுக்கெதிரே ஒரு சிறுவனுக்கு தொற்று எனச் சந்தேகிக்கப்பட்டு அவன் குடும்பத்துடன் சிகிச்சைக்காக ஸ்டான்லி அனுப்பப்பட்டான்.  அங்கு அவனுக்கு கொரோனா நெகட்டிவ்.  ஆனால் டைஃபாய்டு உறுதியாகியுள்ளது.  இப்போது மருத்துவமனைக்கு பெருகி வரும் கூட்டத்தால், அவனை தனிமைப்படுத்த அமிஞ்சிகரை வைஷ்ணவா கல்லூரிக்கு அனுப்பியிருக்கிறார்கள்.  அங்கும் இடப்பற்றாக்குறை ஏற்படவே அவனை வீட்டுக்கு அனுப்ப எத்தனிக்கும் போது, அவனுடைய குடும்பத்தினரே

” இப்ப நாங்க போனா எங்க ஏரியாக்காரங்க எங்களைத் தீண்டத்தகாத ஆளுக போல நடத்துவாங்க ” என அஞ்சியதாக ஒரு சேதி வந்தது.  அது முழுப்பொய் என்று சொல்லிவிட முடியாது.  கொரோனாவால் இறந்தவர் உடலைக் கூட நிந்தனை செய்த மண் !

மருத்துவர்களும் சம்மதித்திருக்கிறார்கள்.  ஆனால் நோயாளிகள் பெருகினால் ?  போர்க்களத்திற்குச் சென்று வெற்றியுடன் திரும்பியவர்களாய் அவர்களுக்கு ஆரத்தி சகிதம் மக்கள் வரவேற்பளித்தால் இத்தகைய வார்த்தைகள் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளிப்பட்டிருக்குமா ?  நம்முடன் மட்டுமல்ல இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு இப்புவியில் வாழவிருக்கும் கோவிட் 19 வைரஸ்க்கு, இந்தளவு முக்கியத்துவமும், ஆர்ப்பாட்டங்களுக்கும் தேவை என்ன என்றே புரியவில்லை !

அடுத்து, இந்தச் சந்தேகத்தை வைத்து என் தெருவை அடைத்தார்கள் அல்லவா ?  நான் ஏதோ முக்கியப் பணிகளுக்காக அந்த வழியே செல்ல முற்படும் போதெல்லாம் தடுக்கப்பட்டு, விசாரணைக்குள்ளானேன்.

“சார், உங்க நலனுக்காகவும், அடுத்த மக்களின் நலனுக்காகவும்தான் இந்தத் தடுப்புகளைப் போட்டு அதுக்கு நாலு போலிச காவலுக்கும் போட்டிருக்கோம்.  நீங்க வெளிய போய் தொற்று வாங்கிட்டு வந்தாலோ, உங்களால வெளி ஆட்களுக்குத் தொற்று பரவினாலோ, அடுத்த விநாடி எங்களுக்கு வேலை போய்டும்.  எப்படின்னு கேளுங்க.  கண்டைன்மெண்ட் ஏரியான்னா யாரும் எந்தத் தேவைக்குமே வெளிய போக முடியாது.  ஆனா இப்ப உங்களுக்கு எல்லாத் தேவையையும் எங்களால கொடுக்க முடியலைங்கிறதால அனுப்பறோம்.  அதுக்காக ச்சும்மா சும்மா போய்க்கிட்டும், வந்துக்கிட்டும் இருக்கக் கூடாது”

“சார், நான் பேங்க் வேலைக்காகப் போனேன், முடிஞ்சிடுச்சி வந்துட்டேன், இனி வெளிய எங்கேயும் போற வேலை இல்ல சார்”

சரி சரி போங்க.

ஆச்சா ?  அடுத்து என்னிடமிருந்த அந்த ஆரோக்கிய சேது செயலியைப் பற்றி வந்த சில முரணான தகவல்கள்.  இந்தச் செயலி தகவல்களை கசிய விடுகிறது, தவறாக தரவுகளால் குழப்பப்பட்டு நம்மை நோயாளியாக அடையாளப்படுத்துகிறது என்று ராகுல் காந்தியும், பிரபல இணைய ஹேக்கருமான எலியட்டும் எச்சரித்திருந்ததை வாசிக்க நேர்ந்தது !

கடைசியாக, தமிழகத்தின் ஹாட்ஸ்பாட்டாக மாறிப்போன கோயம்பேடு, மாதாவரம் ஆவின் பால்பண்ணை என்கிற தொடர் செய்திகள் முழுவதுமாய் உலுக்கிப் போட்டது.  கோயம்பேட்டில் பணிபுரிந்துவிட்டு தங்கள் ஊர்களுக்குச் சென்ற அனைவருக்குமே கொரோனா தொற்று என கிலியூட்டி விட்டனர்.  அதிலும் அரியலூரைச் சார்ந்த தொழிலாளர்களை அரசு நடத்தியவிதம் அப்படியே மனத்தில் ஆழமாகத் தைத்தது !

கோயம்பேடு காற்கறிச் சந்தையை ஒட்டுமொத்தமாக மூடிவிட்டு, தற்காலிகமாக அந்தச் சந்தையை திருமழிசைக்கு மாற்றலாமென அரசு ஆலோசிக்க, மூடப்பட்டச் சந்தையால் நகரில் காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்ததோடில்லாமல், தட்டுப்பாடும் ஏற்பட்டது !

இவைகளெல்லாம்தான் மூளையில் ஒன்றுசேர்ந்து குழப்பி, என்னையும் திகிலாழ்த்திப் பார்த்திருக்கிறது.  சாளரத் திரையை விலக்கினேன்.  இருண்மை அகன்று வெளிச்சம் பரவ ஆரம்பித்திருந்தது !!!

தொடரும்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  11. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  12. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  13. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  14. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  15. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  16. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  17. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  18. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  19. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  20. தமிழகத்திலே கொரோனோவுக்கு கொண்டாட்டம்- ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்