கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! நாள் # 32

25/04/2020, சனிக்கிழமை

காலை மணி 08 : 00

சில நாட்களாக சோம்பல் அதிகம் மிகுந்து சரியான வேளையில் எழுந்திருக்க முடிவதில்லை.  விடியும் வரை விழித்திருப்பது, விடிந்த பின் தூங்கச் செல்வது, மதிய உணவுக்காக முன்மாலை எழுந்துக் கொள்வதென கொரோனா, வாழ்நாள் பொழுதுகளை கொல்லாமல் கொன்றுக் கொண்டிருந்தது !

இந்தச் சேதி நம் முதல்வர் எடப்பாடி அய்யாவின் மனத்தைக் குடைந்திருக்க வேண்டும்.  “ஏற்கனவே வேலை வெட்டி இல்லாம நாலு பொழுதுக்கும் நல்லா தொண்டை வரைக்கும் தின்றானுவ, எல்லாப் பொருளும் வீட்டுக்கு பக்கத்துலயே வேற கெடைச்சிடறதால எதுக்கும் ஒடம்பு வளையாம கெடக்கிறானுவ, வைக்கலாமா பீலாஜி இவன்களுக்கு ஆப்பு ?” என்று திடுமென வெள்ளிக்கிழமை அன்று,  “நாளை முதல் நாலு நாளைக்கு உங்களுக்கு முழு ஊரடங்கு” என்று ஒரு குண்டைப் போட்டார் !

அப்ப இப்ப என்ன நடந்துக்கிட்டிருக்கு என்று என்னையே நான் கிள்ளிப் பார்த்து ஆவ்வெனக் கத்தினேன்.  அதாவது இப்ப நடந்துக்கிட்டிருப்பதும் ஊரடங்குதான், ஆனா நாளைலருந்து ஊரடங்குக்கே ஊரடங்காமாம் என்று செய்தி சேனல்களில் மேலதிக விளக்கங்களைத் தந்துக் கொண்டிருந்தனர் !

இப்பத்தான் மூணே நாள்ல கொரோனா போய்டும், அரசு அலுவலகங்கள் செயல்படும், கட்டிட வேலைகளுக்கு அனுமதி அது இதுன்னு சொல்லிட்டு, ஏன் இப்ப திடீர்ன்னு என்ன ஆச்சு ?  மூச்.  யாரும் எதையும் கேட்க முடியாது.  பேசினால் பேரிடர் காலத்திலும் எதிர்ப்பரசியலா என்று அமைச்சர்கள் கண்ணைக் கசக்குகிறார்கள் !

ஆனால் இதை அறிவிப்பதில் துளி லாஜிக் கூட அவர்களிடத்தில் இல்லை.  அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்ட பின் சாவகாசமாக மாலை நான்கு மணிக்கு மேல் அறிவிக்கிறார்கள்.  அந்த அறிவிப்பை புரிந்துக் கொள்ள நமக்கு மேலும் ஒரு மணி நேரம் ஆகின்றது.  பிறகு அது விதவிதமாக வாட்ஸ்அப், ஹலோ ஆப்களில் கை கால்கள் முளைத்து, புதுப் புது அவதாரங்கள் எடுக்கின்றன.  பொழுதடையும் போது, நாளை ஒரு நாள் மட்டுமே கடைகள் இயங்குமாம்,  அதன்பின் நாலு நாளோ, நாலு வாரமோ, நாலு மாதமோ எதுவுமே உறுதியில்லை என்கிற அளவுக்கு பயமுறுத்தல்கள் பரவுகின்றன !

இது போன்ற மொபைல் ஆப்  குழுமங்களிலிருந்து வெளியேறிவிட்டேன் என்பதால் எனக்கு அலட்சியம் அதிகம்.  பொழைக்கத் தெரியாத புள்ள என்று சின்ன வயசிலிருந்தே நற்பெயர் வேறயா ?  இன்று அதிகாலையில் அதிரடியாக உலுக்கி, குலுக்கி எழுப்பப்பட்டேன் !

”என்னாச்சு ?”

”என்னாச்சா ?  பால் கூட வர்லைங்க.  இன்னிக்கு விட்டா அப்புறம் எதுவுமே கிடைக்காதாம்.  போங்க போய் இந்த லிஸ்ட்ல இருக்கறதையெல்லாம் வாங்கிட்டு வந்துருங்க.  பாருங்க, வேல்மணி அண்ணாச்சி கடைல இல்லைன்னா தங்கபுஷ்பம் அக்கா கடைக்கு போங்க, நீங்க பாட்டுக்கு வெறும் பைய ஆட்டிட்டு வந்துராதீங்க.  அப்புறம் அம்மா உணவகத்துக்குத்தான் நீங்க சாப்பிட போகணும் !”

காலை மணி 09 : 00

வீதியில் இறங்கிய நான் பிரமித்துப் போய்விட்டேன்.  ஊரே திருவிழாக் கோலத்தில் இருந்தது.  இடைவிடாத அந்த ஹார்ன் சத்தங்கள்.  இதைக் கேட்டே ஒரு மாதத்திற்கும் மேலாகியிருந்தது.  என்னால் யாரையும் உரசாமல் நடக்கக் கூட இயலவில்லை !

வேல்மணி அண்ணாச்சி கடை வாசலின் அகலம் மொத்தமே நான்கடி.  நீளம் எட்டடி இருக்கும்.   மொத்தமே 32 சதுர அடி கொண்ட அந்த மளிகைக் கடையில், இருபது பேர் நெருக்கமாக நின்றுக் கொண்டிருந்தார்கள்.  தனிமனித இடைவெளி, முகத்தில் கவசம் என்கிற எல்லாப் பழக்கங்களையும் தூர எறிந்துவிட்டு, பொருட்களை வாங்கிக் குவிப்பதில் வெறி பிடித்தாற் போலிருந்தனர்.  அண்ணாச்சியும் அதில்லை, இதில்லை, இருங்கம்மா எனக்கு என்ன நாலு கையா இருக்கு,  உளுந்து 180 ரூபாய்ங்க, 150 ஆ ?  அது போன வாரம், நான் சொல்றது இந்த வாரம்.  எப்படியும் லிஸ்ட்டில் இருக்கும் எந்தச் சாமானும் இருக்கப் போவதில்லை.  மெல்ல நழுவி தங்கபுஷ்பம் அக்கா கடைக்குப் போனேன்.  அது கொஞ்சம் பெரிய கடை.  காய்கறிகளுமுண்டு.  தூர பார்த்தபோதே முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டம் காய்கறிக் கூடைகளைச் சுற்றி மொய்த்துக் கொண்டிருந்தது கண்ணில் பட்டது.  அவர்களை மீறி கடை வாசலுக்கு நெருங்கவே முடியாதென புரிந்து விட்டது.  ஆனது ஆச்சு.  பக்கத்துலதான் ராயபுரம் மார்க்கெட்.  வண்டில போய்ட்டா என்ன என்று ஒரு சிந்தனை உதிக்க, வீட்டுக்கு திரும்ப வந்தேன் !

என்னாது, ராயபுர மார்க்கெட்டுக்கா ?  போங்க.  போய்ப் பாருங்க என்று வாசலிலேயே கீழ் வீட்டு நண்பர், சந்திரமுகி செந்திலை மிரட்டும் சரவணனைப் போல அச்சுறுத்தினார்.  பிறகுதான் நண்பர்கள் இங்கு பகிர்ந்த அந்த நெரிசல் புகைப்படங்களை எல்லாம் பார்த்து தலையிலடித்துக் கொண்டேன்.  தான்தோன்றித்தனமாய் தங்கள் அதிகாரங்களை அப்பாவி மக்கள் மீது செலுத்தி, அவர்களைத் தவிக்கவிட்டு ரசிக்கும் குரூர புத்தி கொண்ட அம்மையார் அமைத்த ஆட்சியின் எச்சங்கள் அல்லவா ?  இன்னும் கூட மக்கள் அல்லலுறுவார்கள் !

மாலை மணி 07 : 00

இப்போதுவரை நான் எதற்குமே உதவாத தண்டக் கருமாந்திரம் என்கிற அர்ச்சனைகள் முடிந்தபாடில்லை.  டீ கேட்டால் கூட கருணையின்றி அது நிராகரிக்கப்பட்டது.  சுகாதாரத்துறை அமைச்சரைப் போல முகத்தை வைத்துக் கொண்டபின், பரிந்து சுடு நீரில் மூழ்கடிக்கப்பட்ட டிப் டீ கிடைத்தது.  பாலில்லா ஊரில் டிப் டீ தான் தேவாமிர்தம் !

யாரோ எதையோ நிறுவச் செய்த சட்டத்தால், தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கவும், அளவுக்கு மீறி வாங்கிக் குவிக்கும் பண்பையும் வெறுக்க எண்ணிய என் செயலுக்கு பரிசு கையாலாகாத தண்டம்.  அப்போதுதான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் உதிர்த்த முத்துக்கள் எல்லாம் வெளிவந்தன.  அடடடா ஜிக்களே நாம தனி மரமல்ல, தோப்பு !

70 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கொரோனா வைரஸ் இறந்து விடுகின்றன என்பதை அமெரிக்க அறிவியாளர்கள் ஆய்வில் தெரிந்திருக்கிறது.  அதேபோல சானிடைசர்கள் மூலமாகவும் அந்த வைரஸைப் பரவவிடாமல் கட்டுக்குள் வைக்க முடிகிறது என்பதும் அனைவருக்கும் தெரியும்.  ட்ரம்ப்க்கு கொஞ்சம் மூளை அதிகம்.  அப்ப நாம ஏன் கிருமிநாசினியை ரோட்ல தெளிக்கிறதுக்கு பதிலா உடலுக்குள்ள ஏத்தி கொரோனாவைக் கொன்னு போட முடியாது ?  என்றிருக்கிறார்.   அடடா செல்லூர் ராஜூ இவருக்கு குருவா, அல்லது செல்லூர் ராஜூவுக்கே இவர்தான் குருவா எனத் திகைப்பு ஏற்பட்டது !

நம்ம எடப்பாடிஜி மட்டும் என்ன தொக்கா ?

1.) 70 வயதுக்கு மேலிருப்பவர்களை மட்டுமே கொரோனா தாக்கும், எனவே மாஸ்க் அணிவதோ, சட்டசபைக் கூட்டத்தொடரை நிறுத்தவோ எந்த அவசியமுமில்லை !

2.) மூன்று நாட்களில் கொரோனா தொற்றில்லாத மாநிலமாக தமிழகம் மாறும் !

3.) பணக்காரர்களுக்கு மட்டுமே வரும் பணக்கார நோய் கொரோனா !

இவைகளை மட்டுமல்ல, இன்னும் நிறைய அருளி நமக்கு பெருமை சேர்த்திருக்கிறார் முதல்வர்.  இங்கிவரை நாம் பெறவே என்ன கருமத்தை செய்துத் தொலைத்தோம் ???

 

தொடரும்

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தடுமாறும் நீதி-ராஜா ராஜேந்திரன்
  2. ’ஒருவனை ஏமாத்தணும்னா அவனது ஆசையத் தூண்டனும்’: 20 இலட்சம் கோடி சதுரங்க விளையாட்டு - ராஜா ராஜேந்திரன்
  3. காசிருந்தா வா...-ராஜா ராஜேந்திரன்
  4. மத்திய மாநில அரசுகளின் உருட்டும் புரட்டும்-ராஜா ராஜேந்திரன்
  5. ஆட்டுவித்தால் ஆடும் ரஜினி -ராஜா ராஜேந்திரன்
  6. ’’ எங்கப்பா எங்க போனார்..? தண்ணீர்..தண்ணீர்...''-ராஜா ராஜேந்திரன்
  7. ' குடி’ காத்த குமரன்கள்-ராஜா ராஜேந்திரன்
  8. திக்கற்றவர்கள் தலையில் ஓடிய ரயில் -ராஜா ராஜேந்திரன்
  9. விஷக்காற்றும் சாராய வெள்ளமும் -ராஜா ராஜேந்திரன்
  10. ஒரு கொரோனோ கனா கண்டேன் தோழி -ராஜா ராஜேந்திரன்
  11. யாருடைய பணம் அது? -ராஜா ராஜேந்திரன்
  12. கரையுடைத்த மது… அணை கடந்த மதுப்பிரியர்கள்- ராஜா ராஜேந்திரன்
  13. எரிகிற வீட்டில் பிடுங்குகிற அரசு- ராஜா ராஜேந்திரன்
  14. தனித்திரு, விழித்திரு, அரசாங்கத்திடம் எதையும் கேட்காமலிரு-ராஜா ராஜேந்திரன்
  15. பொன்னை வைக்கும் இடத்தில் பூவைத் துவி-ராஜா ராஜேந்திரன்
  16. இர்ஃபான் கான் - ரிஷிகபூர்: இரு உதிர்ந்த நட்சத்திரங்கள்- ராஜா ராஜேந்திரன்
  17. புரட்சித் தலைவியின் வழி வந்த ட்ரம்ப்-ராஜா ராஜேந்திரன்
  18. குப்புறக் கவிழ்ந்த குஜராத் மாடல் -ராஜா ராஜேந்திரன்
  19. பிளாஸ்மா புனிதர்களான ’சிங்கிள் சோர்ஸ்’ மனிதர்கள் - ராஜா ராஜேந்திரன்
  20. மதுரைக்கு வந்த சோதனை -ராஜா ராஜேந்திரன்
  21. அடிவாங்கினாரா அர்னாப்? -ராஜா ராஜேந்திரன்
  22. ஸ்டாலினை கேலி செய்தவர்கள் எங்கே? - ராஜா ராஜேந்திரன்
  23. இஸ்லாமிய வெறுப்புப்பிரச்சாரத்திற்கு கிடைத்த அடி- ராஜா ராஜேந்திரன்
  24. இதயமும் இல்லை, நன்றியும் இல்லை -ராஜா ராஜேந்திரன்
  25. இரண்டு இசை அரசர்கள் -ராஜா ராஜேந்திரன்
  26. செவிலியரின் நெஞ்சையுருக்கும் நேசம்- ராஜா ராஜேந்திரன்
  27. உயிருக்கு என்ன விலை?-ராஜா ராஜேந்திரன்
  28. ஊரடங்கு நீட்டிப்பு:தொடரும் பசியும் பிரிவும்-ராஜா ராஜேந்திரன் 
  29. மருத்துவரின் உடலும் மரித்த மானுட நேயமும்- ராஜா ராஜேந்திரன்
  30. கொடுக்கும் கைகளைத் தடுப்பதா? - ராஜா ராஜேந்திரன்
  31. யார் அந்த ‘ முகமூடி’ கொள்ளையர்? - ராஜா ராஜேந்திரன்
  32. என்னவாகும் இரண்டாம் ஊரடங்கில் ? - ராஜா ராஜேந்திரன்
  33. '' இங்லீஷ் பேப்பரில் வந்திருக்கு..’’ - ராஜா ராஜேந்திரன்
  34. ரேஷன் கடையில் சில காட்சிகள்- ராஜா ராஜேந்திரன்
  35. ட்ரம்ப் இந்தியாவை மிரட்டினாரா கொஞ்சினாரா? - -ராஜா ராஜேந்திரன்
  36. டெல்லி கரோனா..-ராஜா ராஜேந்திரன்
  37. திடீர் தீபாவளி இரவில்......
  38. ஆயிரம் ரூபாயைத்தேடி..ராஜா ராஜேந்திரன்
  39. விளக்கு ஏற்ற வா… - ராஜா ராஜேந்திரன் / நாள் # 10
  40. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்/ நாள் # 9
  41. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன்நாள் # 8
  42. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !-ராஜா ராஜேந்திரன் / நாள் # 7
  43. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் !- ராஜா ராஜேந்திரன்-நாள் # 6
  44. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் - ராஜா ராஜேந்திரன்/நாள் # 5
  45. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் ! -ராஜா ராஜேந்திரன்-நாள் # 3
  46. கொரோனா சிறை நாட்கள் Day 2 : ராஜா ராஜேந்திரன்
  47. கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் : நாள் # 1  - ராஜா ராஜேந்திரன்