உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் மாநிலத்தில் இருந்து வேறு ஊர்களுக்குப் பிழைப்பு தேடிப் போகும் தொழிலாளர்களுக்கு என ஒரு தனி கமிஷன் ஆரம்பித்திருப்பதாக ஒரு செய்தி படித்ததும் இந்த ஆள் ஒரு கின்னரன், அடுத்த மோடி மஸ்தான் இவர்தான் எனும் முந்தையை எண்ணம் உறுதிப்பட்டது.
உ.பியின் மக்கள் தொகை இருபதரை கோடி. அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு புலம்பெயரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ இருபத்தாறு லட்சம். அந்த மாநிலத்தில் எந்தளவுக்கு வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் இருந்தால் இப்படி ஜனத்தொகையில் சுமார் பத்து சதவீதம் பேர் புலம்பெயரும் நிலை ஏற்படும் என யோசியுங்கள். கொரோனா நாடடங்கின் போது உ.பி.யின் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். ஒரு பக்கம் அவர்களால் தமது புகுந்த வீடான புலம்பெயர்ந்த மாநிலங்களில் பட்டினியும் பாதுகாப்பின்மையையும் தாங்கி சமாளிக்க முடியவில்லை. அந்த மாநிலங்கள் வேலையில்லாத போது இவர்களை விலங்குகளை விட கீழாக நடத்திட பிறந்த வீடான உ.பியோ தம் வீட்டுக்குள் அவர்களை உடனடியாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. ஒருவழியாக அவர்கள் நடந்தும் வேறு வழிகளிலும் உ.பிக்கு செல்ல தயக்கத்துடன் ஆதித்யநாத் அவர்களை தன் எல்லைக்குள் அனுமதித்தார் (நடுவே காங்கிரஸின் போக்குவரத்து உதவியை ஏற்பதா வேண்டாமா என ஆயிரம் ஊசலாட்டம் வேறு). இந்த கணிசமான மக்கள் கொண்டு வரும் நோய்த்தொற்றையும் அவர்களைப் பராமரிக்கிற பொறுப்பையும் மட்டுமல்ல அவர்களை கோபத்தையும் என்ன செய்ய வேண்டுமென ஆதித்யநாத் யோசித்து தான் இந்த அறிக்கையை விட்டிருக்கிறார்:
புலம்பெயர் தொழிலாளர் கமிஷன் மூலம் இந்த தொழிலாளர்களின் திறனடிப்படையில் பெயர்ப்பட்டியலைத் தயாரிப்போம், அடுத்து இவர்களுக்கு உள்ளூரிலேயே வேலை ஏற்பாடு செய்வோம் என்கிறார். எல்லாம் உதார் தான் – அவர் குறிப்பிடும் அந்த ஜெர்மனிய கம்பெனி சீனாவை விடுத்து உ.பிக்கு வந்து காலணிகளை உற்பத்தி செய்து அனைவருக்கும் வேலை கொடுக்கும் என நான் நம்பவில்லை. காலணிகளை யார் வாங்குவார்கள்?
கொரோனாவின் போது அடுத்த ஆறு மாதங்களில் கட்டாயமாக எந்த கட்டுமானப்பணிகளும் நடக்காது. உற்பத்தித் தொழில்கள் துவங்க ஒரு வருடமாவது எடுக்கும் – மத்திய அரசு துணிந்து நிவாரண உதவியை துரிதமாக அனைத்து தரப்புக்கும் வழங்கினால், பணத்தை புதிதாக அச்சடித்து சந்தையில் புழங்க விட்டால் ஓரளவுக்கு இந்த தளர்ச்சி சரியாகலாம். ஆனால் மோடி அதை செய்யாத பட்சத்தில் இந்திய பொருளாதாரம் பாகுபலி நாசரைப் போலத்தான் திரிய வேண்டும், சில வருடங்களுக்கு. ஆக, இதே 26 லட்சம் பேர் அடுத்த ஒரு வருடத்துக்குள் தாம் எந்த மாநிலத்தில் இருந்து மூட்டை முடிச்சுடன் ஓடி வந்தோமோ, எந்த மாநிலங்கள் தன் மக்களுக்கு இடவசதியோ மின்சார வசதியோ கூட கொடுக்காமல் ஏமாற்றி விட்டது என ஆதித்யநாத் சாடுகிறாரோ அங்கு தான் திரும்ப வாயையும் அதையும் பொத்திக்கொண்டு செல்ல வேண்டும். அப்போது இதே தொழிலாளர்கள் கடுப்பாக மாட்டார்களா? நமது சாமியார் முதல்வர் தம்மைக் கைவிட்டதாய் பல்லைக்கடிக்க மாட்டார்களா? அதற்குத் தான் இந்த புலம்பெயர் தொழிலாளர் பட்டியல் தயாரிப்பு. இனி எந்த மாநிலம் தமது தொழிலாளர்களைக் கோரினாலும் அவர்கள் தமது கமிஷனிடம் அனுமதி பெற வேண்டும், தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம், இன்ஷுரன்ஸ் தர வேண்டும் எனும் இந்த உ.பி முதல்வரின் அறிவிப்பு.
நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா? நான் ஒரு சிறிய தொழிற்சாலை நடத்துகிறேன், அங்கோ அல்லது நான் செய்யும் விவசாயத்துக்கோ எனக்கு உ.பி தொழிலாளர்கள் வேண்டுமென்றால் ஒரு தரகர் மூலமாக வரவழைப்பேன் அல்லது அந்த தொழிலாளர்களே என்னிடம் வேலை கேட்டு வருவார்கள். இந்த விசயத்தில் மாநில அரசு தலையிடும் என்றோ மாவட்ட ஆட்சியாளர் கையெழுத்திட்டு கொடியசைத்து அனுப்பி வைப்பார் என்றோ எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் இது மாநிலத்துக்கு அவசியமான ஒரு பிரச்சனை அல்ல. புலம்பெயர் தொழிலாளர்களை கேரளா போன்ற மாநிலங்களே மிகவும் நம்பியிருக்கின்றன; பிற மாநிலங்களைப் பொறுத்தமட்டில் தொழிலாளர்களே மாநிலங்களிடம் கையேந்தி வருகிறார்கள். நிலைமை இப்படியிருக்க வேலை கொடுக்கும் மாநிலங்கள் இன்ஷுரன்ஸ் கொடுப்பதெல்லாம் பகற்கனவுதான். உ.பி அனுப்ப மாட்டேன் என்றால் பிகாரில் இருந்து அழைத்து வருவார்கள். இது ஆதித்யநாத்துக்கும் தெரியும் – அவர் மோடியிடம் இருந்து தான் கற்ற திரைக்கதை உத்தியை இங்கே பயன்படுத்தி தன் பிம்பத்தை மேம்படுத்துகிறார்.
திரைக்கதையில் இதை save the cat என்பார்கள். ஒரு படத்தில் நாயகன் அலுவலகம் போகும் வழியில் ஒரு கண் தெரியாத பிச்சையெடுக்கும் சிறுமியை கருணையுடன் பார்த்து ஒரு ரூபாய் போட்டுவிட்டு சென்றால் பார்வையாளர்களுக்கு அவன் மீது உயர்ந்த அபிப்ராயம் ஏற்படும். இதற்கும் படத்துக்கும் எந்த சம்மந்தமும் இருக்காது என்றாலும், அவன் அடுத்த காட்சியில் ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கப் போகிறான் என்றாலும் பார்வையாளர்களுக்கு அவன் நல்லவன் என்றே தோன்றும். ஆதித்யநாத்தும் இதையே தான் செய்கிறார் – தொழிலாளிகளில் லட்சக்கணக்கில் புலம்பெயர்வதை ஆதித்யநாத் ஒரு சட்டவடிவிற்குள் கொண்டு வருகிறார். அதற்கென ஒரு அரசாங்க நடைமுறையை உருவாக்குகிறார். அத்தோடு அவர் இந்த தொழிலாளர்களை கைவிட்டு விடுவார். ஆனால் வெறுமனே அல்ல – “பிள்ளைகளே, நீங்கள் எங்கே அலைந்து திரிந்தாலும் உங்களைப் பற்றின தகவல்கள் என் வசம் உண்டு, நீங்கள் அரசாங்கத்தின் பிரதிநிகள்” எனும் ஒரு பிரமையை உண்டுபண்ணுகிறார். “உங்களுக்கு என்ன நடந்தாலும், பெரியண்ணா நான் இருக்கிறேன், உங்களுடைய பெயர், வேலைத்திறன், முகவரி போன்ற தகவல்கள் எங்களிடம் உண்டு, உங்களுடைய முதலாளி குறித்த தகவல்களும் உண்டு, உங்களுடைய லகான் என் கையில், எதுவானாலும் உங்களுக்கு மாநில அரசு பொறுப்பேற்கும்” எனத் தோற்றமளிக்க வைப்பார். இதனால் தொழிலாளர் வாழ்வில் எந்தவொரு நடைமுறை மாற்றமும் வராது என்றாலும், அனைத்து இந்திய பிரஜைகளையும் ஆதார் பதிவெண்ணையும் வங்கிக் கணக்கையும் தொடங்க வைத்து மோடி தன்னை ஒரு படிக்காத எளியோரின் ரட்சகனாக மாற்றியதைப் போன்றே தானும் இப்போது உ.பியில் அன்றாடங்காய்ச்சிகளிடத்து செய்ய நினைக்கிறார் நம் சாமியார். இது எளிய இந்திய மக்களின் தனித்துவமான மனநிலை – ஆதார் எண் கிடைத்த போது என் அம்மா அடைந்த பரவசம் நினைவுள்ளது; ஒவ்வொரு முறை ஏதாவது ஒரு ஆவணத்தை பதிவு செய்ய அவர் செல்லும் போது தான் ஏதோ சாதிப்பதாக, இந்த தேசத்தில் தானொரு மதிப்புமிக்க பிரஜையாகி விட்டதாக நினைக்கிறார். இந்த மனநிலையைத் தான் மோடி மஸ்தான் அறுவடை செய்கிறார். இதையே இப்போது அவரது சீடரான ஆதித்யநாத்தும் முன்னெடுக்கிறார்.
உ.பியின் பொருளாதாரத்தை இவர்கள் சீரழித்ததால் தான் அங்கிருந்து 10% பேர் ஒவ்வொரு மாநிலமாக வேலைகேட்டு அலையும் நிலை ஏற்பட்டது. அதை சரிசெய்கிற முயற்சியை விடுத்து “புனித மாடு” அரசியலை, எல்லா பாஜக மேதைகளையும் போல, ஆதித்யநாத் முன்னெடுத்தார். இப்போது தான் கைவிட்ட அனாதைகளுக்கு வேலைகொடுத்த மாநிலங்களை கொரோனா சமயத்தில் தம் மக்களை கவனிக்கவில்லை எனக் கண்டிக்கிறார். எவ்வளவு சாமர்த்தியம்! தன்னுடைய தவறுகளை அடுத்தவர்கள் தோளில் சுமத்துவது, தன்னை நிர்வாக கோளாறுகளுக்கு அப்பாலான ஒரு புனித “பிக்பாஸாக” முன்வைப்பது, தொடர்ந்து பயனற்ற புதுப்புது திட்டங்களை அறிவித்து மக்களை கனவுவலையில் வீழ்த்துவது, உள்ளூரில் உற்பத்திக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் வெளிநாடுகளில் இருந்து பெரும் உற்பத்தியாளர்கள் தன் மாநிலத்துக்கு வருவதாக கனவுக்கோட்டையை எழுப்புவது, கார்ப்பரேட்டுகள் தன் மண்ணில் கால் வைத்தாலே அது சொர்க்கபுரியாகி விடும் என நம்புவது, தன் வளர்ப்புநாயாக வாலாட்டும் மீடியா மூலம் அதை தம் மக்களை நம்ப வைப்பது என பிரதமராகும் முன்பு குஜராத்தில் மோடி செய்த அத்தனை ஜிகினா வேலைகளையும் ஆதித்யநாத் உ.பியில் இப்போது செய்து பார்க்கிறார். மோடி 2.0 ஆக விரைவில்தில்லியில் சிம்மாசனமேற தனக்கு அத்தனைக் தகுதிகளும் உள்ளதாகக் காட்டுகிறார்.
எனக்கு எழுகிற கேள்வியெல்லாம் ஒன்றுதான்: இந்த சாமியார்களுக்கு எப்படி ஊரை ஏமாற்றுகிற வித்தைகள் இவ்வளவு சுலபமாக வருகிறது? பிறவியிலேயே இவர்கள் அரசியல்வாதிகளா? (மோடியும் ஒரு சாமியார் தானே!)
இந்த முறைசாரா புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனைக்கு எனக்கு மூன்று தீர்வுகள் தோன்றுகின்றன. எந்த பாஜக தலைவரும் ஏற்க விரும்பாத தீர்வுகள்:
1) புலம்பெயர் தொழிலாளர்களுக்கு என ஒவ்வொரு மாநிலத்திலும் (எந்த கட்சியையும் சாராத) ஒரு தொழிற்சங்கம் அமைப்பது. தொழிற்சங்கத்தில் இங்கு வரும் ஒவ்வொரு தொழிலாளியும் பதிவு செய்ய வேண்டும் என சட்டமியற்றுவது. தொழிற்சங்கம் மூலம் மாநில அரசிடம் ஆலோசித்து தொழிலாளிகளுக்கான அடிப்படை ஊதியம், வாழிட உரிமைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் ஆகியவற்றை தீர்மானிப்பது. அடுத்த விசயம் தான் முக்கியம்: எத்தனை தொழிலாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையிலான வாக்குகளை, அவர்கள் அதிகமாக உள்ள தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் அவர்கள் சார்பில் இடும் உரிமையை தொழிற்சங்கத்துக்கே அளித்தல் – வெளிமாநில தொழிலாளிகளுக்கு இங்கு வாக்களிக்க அனுமதிப்பது ஆபத்தானது என்பதால் இந்த தற்காலிக ஏற்பாடு உதவும். அவர்கள் விரும்பினால் சொந்த மாநிலத்துக்கும் சென்று வாக்களிக்கலாம் என சட்டமியற்றுவது. இந்த இரட்டை வாக்களிப்பு முறை அவர்களுக்கு புலம்பெயர்ந்த மாநிலத்தில் ஒரு அதிகாரத்தை, நம்பிக்கையை அளிக்கும். அவர்களை யாரும் குப்பை போல நடத்த முடியாமல் ஆகும். அவர்களை முதலாளிகள் பன்றித்தொழுவத்தில் அடைத்து வைக்கிற நிலை ஏற்படாது.
2) சொந்த மாநிலத்திலேயே அவர்களுக்கு வேலைவசதிகளை செய்து கொடுத்து புலம்பெயர்வை தடுத்தல். அல்லது குறைந்த பட்சம் மைய அரசு இத்தகைய தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களின் வீட்டு வாடகை, குழந்தைகளுக்கான கல்வி செலவு, மருத்துவ செலவுக்காக வருடாவருடம் செலுத்துவது, அதை அவர்கள் மற்றொரு மாநிலத்தில் வேலை செய்தால் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும் எனும் ஷரத்துடன்.
3) புலம்பெயர் தொழிலாளிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ஒரு மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் (ஆறு மாதங்கள்) வாழ்ந்தால் அந்த மாநிலங்களுக்கு நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான இடங்கள் சட்டபூர்வமாகக் கிடைக்கும். நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த தொழிலாளிகள் இரட்டை வாக்குரிமையைப் பெறலாம். இப்படி ஒரு மாற்றம் வந்தால் இந்த தொழிலாளிகளைக் கொண்டு ஒரு மாநில அரசு மத்தியில் கூடுதல் எம்.பி இடங்களைப் பெற்று, கூட்டணி அரசு அமைந்தால் அதிக அதிகாரத்தைப் பெற முடியும். ஒவ்வொரு புலம்பெயர் தொழிலாளியையும் ஆளும் மாநில அரசு இரண்டு கை நீட்டி வரவேற்கும். நெருக்கடியின் போது அவர்கள் திரும்ப செல்லாமல் பார்த்துக்கொள்ளும். இங்கு வேலைக்கு வரும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் பிரச்சனை என்றால் போய் நிற்க ஒரு எம்.பி இருப்பார். வேலையிடத்தில் அவர்களின் உரிமைகள் பறிக்கப்படாமல் அவர் பார்த்துக் கொள்வார். பாராளுமன்றத்தில் அவர் இத்தொழிலாளிகளின் பிரச்சனைகளின் பொருட்டு மட்டும் பேசுவார். ஒரு ஆட்டம் காணும் கூட்டணி அரசு மத்தியில் இருந்தாலும் இந்த ஒரு எம்.பி என்ன சொன்னாலும் அரசு கேட்கும். தொழிலாளிகள் எங்கு போனாலும் ரத்தினக் கம்பளம் விரிப்பார்கள். இப்போது போல அனாதைகளாக அல்ல.
(கூடுதலாக) 4) மெல்ல மெல்ல இத்தகைய தொழிற்சங்க எம்.பிக்களை ஒவ்வொரு தொழிலுக்கும் எல்லா மாநிலங்களிலும் கொண்டு வரலாம். ஒரு மாநிலத்தில் ஊடகக்காரர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கட்டிடத்தொழிலாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு இரட்டை வாக்குரிமை அளிக்கலாம் (அவர்கள் ஒரே தொகுதியில் இரண்டு முறை ஒரே கட்சிக்கோ இரண்டு கட்சிகளுக்கோ வாக்களிக்கலாம், ஆனால் அதில் ஒன்று தொழிற்சங்க எம்பிக்காக இருக்க வேண்டும், அல்லாவிடில் இரண்டு வாக்குகளும் ரத்தாகி விடும்.). அப்போது கொத்தாக தொழிலாளர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டால் அது தேசிய பிரச்சனையாகும். கூடுதல் சம்பளம், வேலை நிரந்தரத்துக்கான கோரிக்கைகளை பாராளுமன்றத்தில் ஒலிக்க விடலாம். ஒரு தொழிலாளிக்காக பிரதமரே இறங்கி வருவார். ஜாதிக்காக, மதத்துக்காக ஓட்டு எனும் நிலையை தொழில் பாதுகாப்புக்காக, உரிமைகளுக்கான ஓட்டு என மாற்றலாம். இந்த தேசம் உழைப்பாளிகளுக்கான தேசமாகும்!