கொரோனா வீட்டுச்சிறை நாட்கள் /நான்காம் ஊரடங்கு (இறுதி பாகம்)

நாள் # 55 முதல் நாள் # 68 வரை.

தேதி : 18/05/2020 திங்கள் முதல் 31/05/2020 ஞாயிறு வரை.

வங்காள விரிகுடாவில் உருவான ஓர் அதிபயங்கரத் தீவிரப் புயல்.  அம்பன், ஆம்பன், உம்பன் என்று அதைப் பல பெயர்களில் உச்சரித்தார்கள்.  வம்பன் என்று வைத்திருக்கலாம்.

உருவானதென்னமோ சென்னைக்கு அருகில்தான், ஆனால் சென்னைக்கு சொட்டு மழையைத் தராத இந்த அம்பன், ஒடிசா, மேற்கு வங்கக் கரைகளை கபளீகரம் செய்தது.  அதிக பாதிப்பு தீதி மாநிலத்துக்குத்தான்.  ஒரு லட்சம் கோடி வரை புணரமைக்க நிதி வேண்டுமென ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.  சோழியன் குடுமி மட்டுமல்ல மோடி தாடியும் ச்சும்மா உறுத்தாது.  அடுத்து அங்கு சட்டமன்றத் தேர்தல் அருகிலிருப்பதால் இந்த கோவிட் 19 பரவல் சூழலிலும் பங்களாவுக்கு ஓடோடி வந்தார் பிரதமர்.   ஹெலிகாப்டரில் மம்தாவுடன் வெள்ளச் சேதங்களைக் கண்டார்.  1000 கோடிகளை முதல்கட்ட நிவாரணமாக அறிவித்தார்.  ஏம்பா இது அட்வான்ஸா இல்ல மொத்தமே இவ்ளோதான் கொடுப்பியான்னு அந்த பந்தையும் பவுண்டரிக்கு அடித்தார் தீதி !

ஓட வாய்ப்பில்லாமல் தண்டவாளங்களில் சும்மா நின்றிருந்த ரயில்பெட்டிகளையெல்லாம் ISOLATED WARD ஆக மாற்றி, புரட்சி பண்ணப் போகிறோமென அறிவித்தது ரயில்வே அமைச்சகம்.  தம்பி கலையலங்காரா உடனே ஹாஸ்பிடல் டிசைன பெட்டில செட் பண்ணுப்பா என்றவுடன், ஒரு பெட்டிக்கு ஒரு லட்சம் செலவு செய்து, தொற்றாளர்களைத் தனிமைப் படுத்த உதவும் வார்டாக அதை மாற்றினர் !

அதைக்கண்ட மருத்துவ வல்லுநர்கள், நோயாளிகள் பயன்படுத்த ஏதுவாக ரயில்பெட்டிகள் ஒருபோதும் உதவ முடியாது, தண்டச்செலவு செய்யாதீர்கள் என்று கதறி முடிப்பதற்குள், 5000+ பெட்டிகளை அப்படி மாற்றி, 50 கோடிகளை மண்ணில் கொட்டியழித்தனர் !

சோதனை முயற்சியில், நோயாளிகளை எளிதில் கையாள முடியாமல் போக, மாற்றம் செய்யப்பட்ட அந்தப் பெட்டிகள் தேமேவென வெய்யிலில் காய்ந்துக் கொண்டிருந்தன. மே 25 முதல், மீண்டும் ரயில்வேக்களை இயக்கும் முடிவு எடுக்கப்பட்டவுடன் மீண்டும் அழைக்கப்பட்ட கலையலங்காரர், இம்முறை அந்த வார்டு பெட்டிகளை, பயணப்பெட்டிகளாக மாற்ற மீண்டும் 50+ கோடிகள் செலவு.  ஆக, 100 கோடிகளை தீ வைத்து கொளுத்தியதைப் போன்றதொரு இழப்பு இது.  இந்த யோசனையைச் சொன்னவருக்கோ, அணைத் தண்ணீரை தெர்மோகோலால் மறைத்து, ஆவியாகாமல் தடுக்கமுடியுமெனச் சொன்னவருக்கோ எந்த வேறுபாடுமில்லை.  இப்படி நம் பணத்தை வீணடித்தவர்களுக்கு எந்தத் தண்டனைகளுமில்லை !

சனிக்கிழமை முன்னதிகாலையில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான திரு. ஆர். எஸ். பாரதி அவர்களை, ஏதோ ஒரு பழைய வழக்குக்காக கைது செய்தது தமிழக அரசு.  சனி, ஞாயிறு, திங்கள் ரம்ஜான் லீவு ஆக, மூன்று நாட்களாவது அவரை உள்ளேவைத்து களங்கப்படுத்திவிட வேண்டுமென்பது ஆட்சியாளர்களின் நப்பாசை.  ஆனால், மிக எளிதாக,  கைதான சில மணி நேரங்களிலேயே அவரைப் பிணையில் விடுவித்தது நீதிமன்றம் !

எதற்காக இந்தக் கைது நாடகமென விளக்கினார் ஆர்.எஸ்.பாரதி.  தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வமும், வேலுமணியும் சேர்ந்து, இந்தக் கொரோனா கால அரசுத் தேவைகளில் எப்படி எப்படியெல்லாம் ஊழல் செய்யமுடியுமென யோசித்து பல நூறு கோடிகளைச் சுருட்டிவிட்டனர் என்கிற தரவுகளைத் திரட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவிருக்கிறார் என்கிற தகவலைத் தெரிந்துக் கொண்டுதான், இந்த அவசரக் கைது நடவடிக்கை.  ப்ளீச்சிங் பவுடர் டெண்டர், கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரக் கொள்முதல் இவ்விரண்டிலும் பல மடங்கு விலையை உயர்த்தி வாங்கி, நம் பணத்தைச் சுருட்டியிருக்கிறார்கள் !

ஆட்டோக்களில் ஒரே ஒரு பயணிக்கு அனுமதி, பேருந்துகளில் 50 விழுக்காடு பயணிகளுக்கு மட்டுமே அனுமதி என்றெல்லாம் கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு, நாடு முழுவதும் ஃப்ளைட்களையும், ரயில்களையும் ஹவுஸ்ஃபுல்லாக ஓட்ட விழைந்து, அதற்கான அறிவிப்பையும் செய்தது ஒன்றிய அரசு !

ஃப்ளைட்டில் ஏறும்போது ஒரு மாநிலம் சோதிக்கும்.  அது எப்படி சோதித்து ஏத்திவிடுமோ எனத் தெரியாது.  நீங்கள் இங்கு வந்து இறங்கும்போது நாங்கள் நிச்சயம் சோதிப்போம். சந்தேகமிருந்தால் ஏழு நாட்கள் முதல் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்துவோம் எனத் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் அறிவித்ததினால், பேராசைப்பட்ட விமான நிறுவனங்கள் கனவில் மண் விழுந்தது.  கால்வாசி இருக்கைகளாவது நிரம்பிய விமானங்கள் பறந்தன.  அதுகூட நிரம்பாமலிருந்த விமானங்கள் கடைசி நொடியில் கொத்துக் கொத்தாக கேன்சல் செய்யப்பட்டன.  ரிசர்வ் செய்தவர்கள் விமானநிலையம் வரை சென்று ஏமாந்து போனார்கள் !

கொரானா கால விமானப் பயணம் எவ்வளவு பாதுகாப்பற்றது என உணர்த்தியது ஒரு சம்பவம்.  சென்னையிலிருந்து கோவை சென்ற பயணி ஒருவருக்கு கொரானா தொற்று உறுதியானதால் அந்த விமானத்தில் அவருடன் பயணித்த விமானப் பணியாளர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி சோதிக்க நேர்ந்தது !

ஆச்சா ?  பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்லவாவது ரயில் சேவை அவசியம் என்கிற நிலைக்குத் தள்ளப்பட, ரயில்கள் அனைத்தும் உடனுக்குடன் நிரம்பின. விடிந்தால் தங்கள் ஊரிலிருப்போம் என நம்பிப் பயணித்த பல ரயில்கள், திசை மாறி எங்கெங்கோ சென்றன.  மத்தியப்பிரதேசம் போய்ச் சேரவேண்டிய வண்டி, ஒடிசாவின் மூலை ஒன்றில் போய் நின்றது.  பீகார் போக வேண்டிய ரயில் பெங்களூர் போய்ச் சேர்ந்தது.  இப்படி அலைக்கழிக்கப்பட்ட அந்த அப்பாவி பயணிகளுக்கு போதிய உணவு, தண்ணீர் வசதி ஏதும் செய்துதரப்படவில்லை.  கடுமையான வெய்யில், அனல் காற்றுக்கிடையேயான நெ(கொ)டிய பயணத்தினால் பல துர் மரணங்கள் சம்பவித்தன !

பீகார் ரயிலடி ஒன்றில், பசியாலும், களைப்பாலும் தாய் ஒருத்தி இறந்துவிட, அவளுடையக் கைக்குழந்தை, தாய் இறந்தது தெரியாமல் தட்டி எழுப்பிக் கொண்டேயிருந்தக் காட்சியைக் கண்டபோது கல்மனம் கொண்ட சங்கிகள் கூட கலங்கிப் போனார்கள்.  இவ்வளவு சீர்கெட்ட நிர்வாகமாய் இந்திய ரயில்வே ஆனது இதுதான் முதன்முறை.  மோடி புரிந்த அரிய சாதனைகளுள் இதுவும் ஒன்று என வரலாறு கூறட்டும் !

 

இந்தியாவுக்கு மோடி, அமித்ஷா, நிர்மலா, கொரானா போன்ற இம்சைகள் போறாதென்று ஆஃப்ரிக்க பாலைவனத்திலிருந்து இந்தியா வரைக்கும் வெட்டுக்கிளிகள் வேறு, வந்து குவிந்திருக்கின்றன.  வரும்வழியில் ஈரான், பாகிஸ்தான் வயல்களை மொட்டையடித்துவிட்டு, இங்கு ராஜஸ்தான், குஜராத், ம.பி, உ.பி வரை அவைகள் பரந்து விரிந்து நம் இந்தியப் பயிர்களைத் தின்று தீர்க்கஆரம்பித்துள்ளன !

ஜனவரி மாதத்தின்போதே இதுகுறித்து  இந்தியாவை தாங்கள் எச்சரித்துவிட்டதாக ஐ நா கூறியிருக்கிறது.  ஆக, நம் ஒன்றிய அரசுதான் அதெல்லாம் வராது என்று அலட்சியாக இருந்திருக்க வேண்டும் !

கிட்டத்தட்ட ஒரு கோடி வரை இருக்கும் சென்னை.மக்கள்தொகையின், ஒரு நாள் உணவை, சில மணி நேரங்களில் இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தின்று தீர்த்துவிடுமாம்.  இதைக் கொல்லத் தெளிக்கப்படும் பூச்சி மருந்து இதன் முட்டைகளை அழிக்காதாம்.  இருவாரங்களில் பொறியும் அந்த முட்டையிலிருந்து வெளிப்படும் லார்வாதான் உணவுகளை அழிப்பதில் அசுரனாம்.  அவ்வளவு வேகவேகமாகத் தின்று, உடனடியாக வளர்ந்து, உடனடியாக இனப்பெருக்கம் செய்து, உடனடியாக முட்டையிட்டுவிட்டு, உடனடியாக வேறு விளைநிலம் தேடி அழிக்கச் செல்வது இவைகளின் சுழற்சி செயல் !

இவைகளுக்காகத் தெளிக்கப்படும் விஷம், பயிர்களுக்கு உதவி செய்யும் புழு, பூச்சிகள், சிறு பறவைகள், சிறு விலங்குகளையும் கொன்று விடுகிறதாம்.  இதனால் பயிர்ச்செடிகள் மட்டுமல்லாது மண்ணும் மலடாகிப் போய்விடுகிறது !

கொரோனாவை எவ்வாறு அலட்சியமாக அணுகினார்களோ, அதேபாணியில் இந்த வெட்டுக்கிளி படையெடுப்பையும், அதெல்லாம் இங்க வராது என்று அலட்சியமாக நிராகரிக்கிறது தமிழக அரசு.  இவர்கள் வராது என்றதற்காகவே அதிக பயம் வருகிறது, இவர்களின் எஸ்டிடி அப்படி !

அகமதாபாத் நகரின் அரசு மருத்துவமனை தரத்தை கேள்விபட்ட குஜராத் உயர்நீதிமன்றம் தாமே முன்வந்து எடுத்துக்கொண்ட Suo Motu வழக்கின் மூலம், குஜராத் அரசைக் கடுமையாகச் சாடியது.   “மருத்துவமனைகள் போன்றா நிர்வகிக்கிறீர்கள் ?  இதைக்காட்டிலும் கோதுமை மூட்டைகளை இருப்பு வைக்கும் குடவுன்கள்  தரமாக இருக்கும்.  டஞ்சன்களைப் போல பரிதாபகரமான நிலையில் உள்ளது அரசு மருத்துவமனைகள்.  அதனால்தான் இந்தியாவிலேயே அதிக மரணங்கள் நிகழும் நகரமாக அகமதாபாத் உச்சத்தில் நிற்கிறது ”

 

அடடா இருபது வருடங்கள் மோடி ஆண்ட மண்ணின் பிரதான நகரத்தின்  மருத்துவமனைகளே இந்த லட்சணத்தில் இருக்குமெனில், பிற நகர, பிற கிராம சுகாதார மய்யங்களின் கதி ?  முதலில் அதெல்லாம் உண்டா ?  அதைப் பார்த்துட்டு வந்துட்டு திராவிடத்தால் வீழ்ந்தோம்ன்னு உளறலாமே ஒறவுகளே ?

உலகின் ஒரே இந்து நாடு எது தெரியுமா எனக் கேட்டார் சபரிமலைக்கு மாலை போட்டிருந்த அன்பர் ஒருவர்.  இப்ப இல்ல.  அதிருக்கும் முப்பது வருஷம்.   இந்தியா என்றேன்.  போடா லூசு அது நேப்பாள் என்றார்.  எனக்கோ ஆச்சர்யம்.  ஏன் இந்தியா இல்லை என்றேன்.  இது மதச்சார்பற்ற தேசமாம்.  ஆனா நேப்பாளம் தன்னை இந்து நாடா அறிவிச்சிருக்கு எனப் பெருமை கொண்டார்.  அந்தப் பெருமை சில வருடங்களுக்கு முன்னால் எருமை மேய்க்கப் போய்விட்டது.  ஆமாம்.  நேபாளமும் தன்னை மதசார்பற்ற நாடாக பிரகனப்படுத்திக் கொண்டது !  இப்ப மேட்டர் அதில்லை.

ஹமாரா நேப்பாள் என நெக்குருக பக்தாள்கள் பாசத்தைக் கொட்டிக்கொண்டிருக்க, அவர்களோ மோடி அரசை மிகக் கீழ்த்தரமாக விமர்சிப்பதையே இப்போதெல்லாம் பொழுதுபோக்காக கொண்டிருக்கின்றனர் !

2015 லிருந்து, கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக நேப்பாளுக்குச் சொந்தமான பல சதுரகிலோ மீட்டர் இடங்களை, இந்தியா ஆக்கிரமித்து, தன் வரைபடத்திலும் அதைச் சேர்த்துக் கொண்டிருப்பது அருவருப்பான செயல்.  அவைகளை திரும்ப எங்களிடம் ஒப்படைத்துவிட்டு இந்திய ராணுவம் பின்வாங்காவிட்டால் விபரீத விளைவை இந்தியா சந்திக்கும் என்றளவு போயிருக்கிறது நேப்பாள் அரசின் மிரட்டல் !

இதன்பின் சீனா இருக்கிறதென இந்தியா சொல்லி வாயைக் கூட மூடவில்லை, லடாக்கில் பல கி.மீக்கு சீன ராணுவம் ஊடுருவி வெறுப்பேற்றியது.  இந்தியாவும் உடனடியாக படைகளைக் குவித்து சீனாவுக்கு கடுமையாக பதிலடி கொடுக்கும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், Goback China please Go எனக் கெஞ்சலான வாசகங்களுடன் பதாகை ஏந்தி, இந்திய ராணுவம் கோஷமிட்டதைப் பார்த்து கலங்காத பக்த்ஸ் இல்லை.  பாகிஸ்தான் என்றால் அட்லீஸ்ட் மரங்களின் மீதேனும் துல்லியத் தாக்குதல் நடத்தியதாய் நாடகமாடும் அர்னாப் & கோக்களோடு கூட்டுசேர்ந்து, சீன ராணுவம் மீதும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்துவிட்டதாய் ஏன் இந்திய அரசு சொல்லக்கூடாது ?  உசுப்பி விடுவோம் !

 

கடந்த ஞாயிறு காலை கோவையில் ஒரு சம்பவம்.  அங்குள்ள ஒரு பிரபலக் கோவிலில் யாரோ பன்றிக்கறியை வீசி, புனிதத்தைக் குலைத்துவிட்டதாகவும், சமூகவிரோதிகளை உடனடியாக கைது செய்யுமாறும் பக்தாள்கள் வலைத்தளமெங்கும் ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள் !

குடிஅரசு இதழ்களில் பெரியார் எழுதியத் தலையங்கங்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். 1925 – 26களில் தொடங்கும் அவைகளில், இந்துப் பயங்கரவாதிகள் மதக்கலவரத்தைத் தூண்ட, வேண்டுமென்றே பசுவை வெட்டி கோவில்களில் வீசுவதும், பன்றியை வெட்டி மசூதிகளில் வீசுவதும் வாடிக்கையான ஒன்று.  இத்தகையக் கலவரங்களினால் பெரும்பாலும் சிறுபான்மையினரே பாதிக்கப்படுவதால், அட்டூழியங்களை இந்துத்துவர்களே அதிகம் செய்கிறார்கள் என்று பெரியார் எழுதியிருக்கிறார் !

 

நாம் இதைச் சொன்னால் என்ன சொல்வார்கள் ?  நீங்க ஊதவே வாணாம், உங்களுக்கு நாங்கதானேஇளிச்சவாயர்கள் ?

பீஜேபீயின் பிரதானத் தலைவர்களுள் ஒருவரான வானதியும் இதுகுறித்த புகாரொன்றை கோவை மாநகரக் காவல்துறையை டேக் செய்து ட்வீட் போட்டிருந்தார்.

மேடம், ஒரு மணி நேரத்தில் அப்படி வீசிய சமூகவிரோதியைக் கைது செய்துவிட்டோம்.  அவர் பெயர் ஹரி.  இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்று பதிலளித்திருந்தது கோவை காவல்துறை !

அவ்வளவுதான்.  இன்றுவரை மயான அமைதி நிலவுகிறது.  ஓசி பிரியாணி வேணும்ன்னா சி எம் ஓவ டேக் பண்ணி கேளுங்கடா, அதவிட்டுட்டு எதுக்கு இந்த விபரீதப்புத்தி என்று நெட்டிசன்கள் இந்த அரதப்பழைய டெக்னிக்குக்காக தலையில் அடித்துக் கொண்டனர் !

 

இனி ஐந்தாம் ஊரடங்கின் அலங்கோலங்களை பத்து நாள் கழித்துப் பார்ப்போம் !