வணக்கம் டாக்டர், என் பெயர் விக்னேஷ். ஒரு அயல்நாட்டு கம்பெனியில் விற்பனைபிரிவில் வேலை செய்து வருகிறேன். என் மனைவி ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். எங்களுக்குத் திருமணம் முடிந்து 12 வருடங்கள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்பதில் எங்களுக்குப் பல சந்தேகங்கள் இருக்கின்றன. “நாம் நமது குழந்தைகளை நன்றாக வளர்க்கிறோமா?” என்ற சந்தேகம் திரும்பத் திரும்ப தோன்றுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஏன் குழந்தை வளர்ப்பு என்பது இத்தனைச் சிக்கலானதாக இருக்கிறது? நமது பெற்றோர்களெல்லாம் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் மிகவும் சுலபமாகதானே நம்மை வளர்த்தார்கள்? ஏன் நாம் மட்டும் இதனை இத்தனை கடினமானதாக மாற்றி வைத்திருக்கிறோம்? குழந்தைகளுக்குத் தேவையான விஷயங்களை எப்படி சொல்லி கொடுப்பது? நன்றி.

விக்னேஷ், கோயமுத்தூர்

பதில்: மாறி வரும் பொருளாதார தேவைகள் அதன் நெருக்கடிகள், நகர்ப்புறமாதல் போன்றவற்றின் விளைவாக குடும்பங்களின் வடிவங்கள் இப்போது மாறியிருக்கின்றன. Extended family என்பது மறைந்துபோய் குடும்பத்தின் அளவு சுருங்கியிருக்கிறது. அதனால் குழந்தை வளர்ப்பதின் முழு பொறுப்பும் இப்போது பெற்றோர்களிடம் மட்டுமே வந்திருக்கிறது. முந்தைய காலங்களைபோல குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் (Grand parents) கண்காணிப்பும், மேற்பார்வையும் குறைந்து போயிருக்கின்றன. குழந்தை வளர்ப்பு என்றால் என்னவென்றே தெரியாதே ஒரு தலைமுறையிடம் குழந்தை வளர்ப்பிற்கான அத்தனை பொறுப்பும் வந்து சேர்ந்திருக்கிறது அதனால்தான் parenting என்பது இப்போது அத்தனைச் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது.

பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய நிர்பந்தம் இப்போது உள்ளது. அதனால் குழந்தைகளுடன் பெற்றோர்கள் இருக்கும் நேரம் குறைந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நாம் குழந்தைகளுடன் இருக்கும் நேரத்திலாவது முழுவதுமாக அவர்களுடன் இருக்க வேண்டும். அவர்களுடன் ஆக்கப்பூர்வமாகப் பேசுவது அவர்களின் அன்றைய நாளினைத் தெரிந்துகொள்வது அவர்களின் சிக்கல்களை, பிரச்சினைகளை, சந்தோசங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அதனைப் பொறுமையுடன் கேட்பது என அவர்களுடன் இருக்கும் நேரத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை பெற்றோர்கள்தான் அவர்களது Role models, அவர்கள் நீங்கள் சொல்லிக்கொடுப்பதைவிட, உங்களைக் கவனிப்பதன்மூலம் அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுக்கு முன்பு உங்கள் நடவடிக்கைகளைப் பொறுப்பானதாகவும், கண்ணியமானதாகவும், நேர்மையானதாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் மரியாதை காட்டுவது, பாகுபாடில்லாமல் நடந்துகொள்வது, மனிதர்களின் மீது கருணையுடன் இருப்பது, பொய் சொல்லாமல் இருப்பது போன்றவற்றில் தெளிவாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அதையெல்லாம் அவர்கள் நம்மிடம் இருந்து மிக சுலபமாகக் கற்றுக்கொள்வார்கள்.

முடிந்தவரை 18 வயதுக்கு முன்புவரை எந்தவித டிஜிட்டல் சாதனங்களைத் தருவதை தவிர்க்கலாம். அதையும் மீறி அவர்கள் பயன்படுத்தினால் அதை அவர்கள் வெளிப்படைத்தன்மையுடனும் நம்முடன் பகிர்ந்துகொள்ளும் வகையில் உபயோகப்படுத்த வேண்டும். நமக்குத் தெரியாமல் நம்மிடம் மறைத்து அவர்கள் பயன்படுத்தும்போதுதான் அதன் சிக்கல்களை அதன் ஆபத்துகளை அவர்களை உணரசெய்து அவர்கள் பயன்பாட்டை நெறிமுறைபடுத்த வேண்டும்.

 

முந்தைய தொடர்: https://bit.ly/2Qvd5kK