புத்தகங்களைத் திருடுகிறவன்

மனிதர்கள் தனிமையில் சில நாட்கள் வீட்டில் இருக்க இவ்வளவு பதட்டம் அடையும் காலத்தில் தன் கால்களை இழந்து  பனிப்பிரதேசத்தில் தனியாக மாட்டிக்கொண்ட ஒரு மனிதனின் கதையை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா? சாவுக்கும் வாழ்வுக்கும் இடையிலான அந்தப்போரட்டம் நடக்குத் தரக்கூடிய படிப்பினைகள் ஏராளம்.

மனித பேராசையே முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர். அதனாலும் மனிதன் திருந்திவிடுவதாயில்லை  ஆனாலும் அந்தத் துயரங்களை நினைவுபடுத்திகாட்டும் இலக்கியங்களை நாம் வாசிப்பதன் மூலம் ஓரளவு உணர முடியும்  அப்படியான ஒன்று தான் உண்மை மனிதன் என்கிற புதினம்.1938 ன் ஆரம்பத்தில் உலகப்போரின் தீவிரம் தொடங்கிய போது இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் உலகப் போரின் பார்வையாளர்கள் மட்டுமே அல்லது வெகு குறைவான பங்கேற்பும் பாதிப்பும் மட்டுமே அடைந்தவர்கள் அதனால் பரவலாக போரின் அவலத்தை உணராதவர்கள் நாம் அந்த பாதிப்பை நான் ’மரப்பாலம்’ புதினத்தில் பேசியிருக்கிறேன்.

இப்போது நாம் ஜெர்மனுக்கு எதிரான விமான சண்டையில் தன் இரு கால்களை இழந்து பொய் கால்களுடன் மீண்டும் வானில் எதிரிகளோடு சமர் புரிந்து எதிரிகளை வீழ்த்திய வரலாற்று நாயகனான உண்மை மனிதன் அலேக்ஸேய் மெரோஸோவ் பற்றி பார்ப்போம்.

இரண்டாம் உலகப் போரின் 1943-45 காலகட்டம் ஜெர்மன் விமானங்களை துரத்திச் செல்லும் ருஷ்ய விமானி அலெக்ஸேய் மெரோஸ்யேவ்  தன்னை ஆசை காட்டி எதிரி வானில் அழைத்துச் செல்கிறான் என்கிற தந்திரம் உணராமல் சண்டையில் தனது குண்டுகளையெல்லாம் தீர்த்துவிடுகிறான். பிறகு அவனிடம் தேவையை மீறி பறந்ததால் வானிலேயே எரிபொருளும் தீர்ந்துப்போகிறது. இந்த நிலையில் எதிரியின் குண்டால் சிதைக்கப்பட்டவிமானம்  பனி காட்டில் சிதைந்து விழுகிறது.

பனிப்பிரதேசத்தில் தூக்கி எறியப்பட்ட நம் கதாநாயகன் எப்படித் தப்பி உயிர் பிழைத்தான் என்பதையும், அவன் தன்  கணுக்கால்களுக்கு கீழாக இரண்டு கால்களையும் இழந்த பின்னும் அதை எப்படி எதிர்கொண்டான் என்பதுமே  இப்புதினம்

உண்மை மனிதனின் கதை :நாவலாசிரியரைப்பற்றிய ஒரு சிறு அறிமுகம்

பரீஸ் பொலேவோய் புகழ்பெற்ற நூலாசிரியர், பத்திரிகையாளர். சோவியத் யூனியனில் மாபெரும் தேசபக்தப் போர் தொடங்கியது முதல் பொலெவோய் ‘பிராவ்தா’ செய்தித் தாளின் போர்முனை நிருபராகப் பணியாற்றினார். அப்போதுதான் உண்மை மனிதனின் கதையின் கதைமாந்தரான செஞ்சேனையின் வீரமிக்க விமானி அலெக்சேய் மெரேஸ்யெவைச் சந்திக்கிறார். போர்முனையில் மிகச்சிறந்த விமானி எனப் பெயர் வாங்கியிருப்பதைக் கேள்விப்பட்டு, பரீஸ் அவரை பேட்டி காண விரும்பினார்.

அலெக்சேய் மெரேஸ்யெவிற்கும் மாஸ்கோவிலிருந்து வந்துள்ள ‘பிராவ்தா’ செய்தியாளரிடம் நாட்டில் நடந்துவரும் நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை. எனவே இரவு தன்கூடவே தங்குமாறு கூறி அழைத்துச் செல்கிறான். அதன்பின்னர் அலெக்சேய் மெரேஸ்யெவ் தன் கதையை பரீஸிடம் கூற, அவர் கேட்டுப் பதிவு செய்து, நமக்கு அளித்துள்ள கதைதான் உண்மை மனிதனின் கதை. (நன்றி : தீக்கதிர்)

குண்டு தாக்குதலுக்கு உள்ளான விமானத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட அலெக்ஸேய் கால் காயத்துடன் 18 கிமீ தவழ்ந்தே ஒரு கிராமத்தை நெருங்கி  விடுகிறான். பனிக்காலம் என்பதால் பனியில் நகர்வது அவனுக்கு சுலபமாக இல்லை. அதை விட அவனது பாத எலும்புகள் உடைந்து கூழாகிவிட்டன. வழியில் ஜெர்மன்காரர்கள் வரலாம். அதுவோ காடு கரடி,ஓநாய், நரி நிறைந்த காடு அவற்றுக்கு அவன் சுவையான தீனியாகும் வாய்ப்பு அதிகம் .

இந்த நிலையில் தவழ்ந்து போகும் வழியில் கடும் உறை பனியில் சிக்கிக் கொள்கிறான்  உறைந்து போகுமளவு கடும் குளிர் அப்போது அவனுக்கு நினைவு வருகிறது. அவனிடம் அரை கிலோவுக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சியிருக்கிறது.  அதுவோ இறுகி கெட்டிதட்டிப் போயிருக்கிறது  அந்த டப்பாவை உடைத்து இரண்டொரு துண்டுகள் விழுங்கி  ஒரு நாளைக்கு ஒரு துண்டு சாப்பிடுவது என தனக்குத் தானே திட்டம் வைத்துக்கொண்டு நகர்கிறான். இடையில் ஒரு கரடி அவனை  தின்று தீர்க்கும் ஆசையோடு வருகிறது. காயமடைந்து பலவீனமான அவனை புரட்டிப்பார்க்கிறது  கரடி அவனது கடினமான விமானியின் உடையை கிழிக்க முயல அப்போது தான் அவனுக்குதன்னிடமுள்ள ரிவால்வரை நினைவுக்கு வருகிறது. தந்திரமாக விமானி ரிவால்வரை எடுத்து கரடியை சுட்டு வீழ்த்துகிறான். ஆனால் பசியும், குளிரும் அவனை கொன்றுவிடும் போல இருக்கிறது.

அலெக்ஸேய் மெரோஸ்யேவ் தன் உயிரை தற்காத்துக்கொள்ள அந்த கடினமான சூழலில் படும் பாடுகள் நமக்கு  man & wild bear grylls அவர்களின் உணவு பழக்கங்களை நினைவுபடுத்துகிறது. காட்டில் கிடைக்கும் பெர்ரி பழங்கள், செடார்மர கொட்டைகள், ஒரு இடத்தில் புற்றில் கை விட்டு அந்த எறும்புகளை கூட தின்கிறான். உயிர் பிழைக்க வேண்டும் பாசிஸ்டுகள் ஓழித்து கட்டப்பட்டுவிட்டார்கள் என்கிற குரல் தனக்கு கேட்க வேண்ட்ம் அதற்காக அவன் உயிர் பிழைத்திருக்க விரும்புகிறான். மீண்டும் படையணிக்க திரும்பி எதிரிகளோடு சமர் புரிய அவனுனுள்ளம் ஏங்குகிறது. இந்த காட்டை கடந்து உயிரோடு கடந்துவிட அவன் படும் பாடுகள் தீரமான ஒரு மனிதனின் உள்ள ஆற்றல் என இந்த படைப்பு நம்மை கலங்கடித்துவிடும்.

எத்தனை நாள் இப்படி தவழ்ந்தான் என்கிற கணக்கை தவற விட்டதொரு நாளில் அவனுக்கு ருஷ்ய வார்த்தைகள் கேட்கிறது .

அவர்கள் ஜெர்மன்காரர்களாக இருந்தால் தொலைந்தோம. ஆனால் ருஷ்ய மொழி கேட்கிறதே எதிரி ஏமாற்ற இப்படி செய்வார்கள் என நினைக்க,  உண்மையாகவே அங்கு ஜெர்மன் ராணுவத்தால் தீக்கிரையாக்கப்பட்டு தப்பி காட்டு நிலவரையில் பதுங்கியுள்ள இரண்டு ருஷ்ய கிராமத்து சிறுவர்கள் வருகிறார்கள். அவர்கள் முதலில் எதோ பனி கரடி என நினைத்து பயப்படுகிறார்கள் பிறகு அவன் மனிதன் என கண்டு அவனை நெருங்கி

“நீ யார்” என கேட்க

“நான் ருஷ்ய விமானி” என சொல்கிறான்

எப்படி நம்புவது எனக் கேட்க அவன் தனது பேப்பர்களை எடுத்து காட்டுகிறான்.

அதன் பிறகு அவனுக்கு தன் உணர்வு அற்ற நிலை ஏற்பட ,கிரம பெரியவரை அந்த சிறுவர்கள்  மிஹாய்லா என்ற கிழவரை அழைத்து வருகிறார்கள். போரின் கொடுமையால் அந்த கிராமத்து ஆண்களில் மிஞ்சியுள்ள  ஒற்றை கிழவர் அவர் மட்டுமே மரக்கிளைகளால் ஆன ஸ்லெட்ஜில் வைத்து பனிப்பாதை வழியே தங்களிடத்துக்கு அவனை இழுத்துப்போகிறார்கள்.

நம் விமானி தப்பி வந்திருக்கிறான் என்றறிந்து அவனுக்கு உதவி செய்ய பதுங்கிடங்களில் இருக்கும் கிராம பெண்கள் முன் வர கிழவனும் அவனது மருமளும் அவனைக் கழுவி, சுத்தமாக்கி, நல்ல உடை தந்து, அந்த ஊரில் ஜெர்மன் கொள்ளையிலிருந்து தப்பி மிஞ்சியிருக்கும் ஒரே சேவலான கொரில்லாவை ( அந்த கொரில்லாவுக்கும்  ஒரு கதையுண்டு)  அடித்து சூப்  வைத்து அவனுக்கு தருகிறார்கள். கிழவர் விமான படையணியை தேடிப்போய் தகவல் தர அவன் போரில் கொல்லப்பட்டு விட்டான் என நம்பியவர்கள் அவனை அழைத்துப்போக விமானத்தில் வந்து இறங்குகிறார்கள். அங்கிருந்து மிகச்சிறந்த மருத்துவத்தை தரும் பெரிய நகரமான மாஸ்கோவுக்கு விமானியை அழைத்து போகிறார்கள். இங்கு தான் புதினத்தின் இரண்டாம் பகுதி தொடங்குகிறது.

இந்த பகுதிகளை வாசிக்கும் போது நீங்கள் அழுதுவிடுவீர்கள்..

அந்த 42 வது வார்டு கர்னல் வார்டு என்ற பெயருள்ளது.

நோயாளிகள் அத்தனை பேருமே போரில் காயமுற்று உயிருக்கு போராடியபடி இருப்பவர்கள் அவர்களில் அலெக்ஸேயின் உடல் மிக மோசமாக இருக்கிறது. அடிக்கடி அவனுக்கு நினைவு தப்புகிறது. மருத்துவர் பல விதமான சிகிச்சைகளை தருகிறார் ஆனால் நாளுக்குகு நாள் தேய்ந்துக்கொண்டே போகிறான்.

நாடே பாசிஸ்டுகளின் அபாயகரமான பிடியில் இருக்கும் போது அந்த மருத்துவமனை மட்டும் போதுமான பாதுகாப்புடன், புதிய மருத்துவ வழி முறைகளுடன்  ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. நோயாளிகளுக்கு தரும் உணவு, உடை, ஒவ்வொன்றிலும் நேர்த்தி, தூய்மை . கண்டிப்பான தலைமை மருத்துவர் வஸீலிய் வஸீலியெவிச் தனது கை குட்டையால் கதவின் தாழ்பாளை துடைத்துப் பார்த்து, சின்ன மாசு மரு இருந்துவிட்டாலும் அதற்க்கு பொறுப்பானவர் கதி அவ்வளவுதான். தலைமை மருத்துவர் உறங்குவதே இல்லையாம்  அவ்வளவு கடுமையான அக்கறையுள்ளவர் அவர் மீது அந்த ஊழியர்களுக்கும், நாட்பட்ட நோயாளிகளுக்கும் அன்போ அன்பு, அங்கு தேவதை போலொரு செவிலி அவள் பெயர் க்ளாவ்தியா மிகாய்லவ்னா.  அட தேவதை கதைகள் படித்து பழகியவரா நீங்கள். அவள் இந்த உலகத்தின் தாதி ஒரு வேளை நாம் கூட அப்படியான ஒருவளை சந்திக்க கூடும். நோயாளிகளுக்கு வரும் கடிதங்களை தர செவிலி கையாள்கிற முறை அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களை நடனமாட தூண்டுகிற அவளது ஆர்வம் என மிக உள்ளத்தை நெகிழ்த்துகிற படைப்பு.

சிறந்த அரவணைப்பான நேர்த்தியான மருத்துவம் அளித்தும் அவனுடல் நாளுக்கு நாள் தேய்கிறது. அவன் கால்களை வெட்டியெடுக்காமல் எப்படியாவது காப்பாற்றிவிட மருத்துவர் திட்டமிட அவனது கால்களோ சிகிச்சையை தாண்டி சதை அழுகலுக்குள்ளாகிறது. விமானி தன் கால்களை இழக்க கூடாது என்று நினைக்கிறான்.

அவனது நிலைமை மோசமாக மருத்துவர் உன் உயிரை காப்பாற்ற இரண்டு கால்களை அகற்றுவதை தவிர எனக்கு வேறு வழியல்லையென சொல்ல அவன் தன் கால்களை இழக்க மனமற்று துயரத்தில் முணுமுணுக்கிறான்.

காலத்தின் கத்தியிலிருந்து யார் தப்ப முடியும் ?

அறுவை கூடத்துக்கு தூக்கி செல்கிறார்கள். முழு மயக்கத்துக்கு அவனுடல் தாங்காது என்று பகுதி மயக்கம் தந்து அவனது அழுகிய கால்களை வெட்டும் போது அவன் முணுக்கென்று ஒரு சின்ன ஒசை கூட எழுப்பாதது மருத்துவர்களை ஆச்சரியப்படுத்துகிறது. அப்போது தலைமை மருத்துவர் சொல்லுவார்  “அடேங்கப்பா நீ உண்மையாகவே 18 கிலோ மீட்டர் பனியில் ஊர்ந்து வந்து சேர்ந்ந்தவன் என்று இப்போது நம்புகிறேன்”

ஒவ்வொரு நோயாளியின் சிறு பெட்டகத்தின் மேலும் ஒரு பூஞ்சாடியிருக்கும் அதில் ஒரு துளிர் மிக்க பசிய வில்லோ கிளைகளை நட்டு வைப்பாள். இவ்வளவு தனி சிறப்பு உள்ள மருத்துவமனையில்  நம் விமானி மரேஸ்யேவ் நாளுக்கு நாள் தேய்ந்து ஒடுங்கிக்கொண்டே போகிறான். அவனது உடல் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போகிறது. திரும்பவும் விமானியாக சண்டை விமானங்களில் பறக்க முடியாதே என்பதே பெரிய ஏக்கமாக இருக்கிறது .

அடிப்படையில் அவன் தன் குழந்தை காலம் முதலே விமானங்களில் பறப்பதை பற்றி கனவு கண்டவன், அதனாலே அவன் விமான ஓட்ட பயின்றவன். பிறகு விமான ஓட்டிகளுக்கு பயிற்சி தரும் கல்லூரியின் ஆசிரியராக  இருந்தவன். போர் தொடங்கிவிட்டதால் அவன் போருக்கு சண்டை விமானியாகப் போக வேண்டியிருந்தது. எது எப்படியோ அவன் பறப்பதை விரும்பினான். ஆனால் இனி சண்டை விமானங்களில் பறக்க கால்களின் தேவை அவனுக்கு தெரியும் தானே. அந்த துயரமே அவனை ஒடுக்கிக்கொண்டிருந்தது.

அந்த 42வது வார்டில் டாங்கி தாக்குதலில் உடல் முழுதும் எரிந்த ஒரு டாங்கி படை வீரன் . மிக மோசமாக போர்காயமடைந்த படை துறை கமிசார். அவரை மயக்க மருந்துகள் உயிர் காற்று வழியாக காப்பாற்றி வருகிறார்கள்,  கமிசார் விழித்திருக்கும் நேரம் முழுதும் மற்ற நோயாளிகளை ஊக்கப்படுத்தி படுக்கையிலிருந்து கிளப்பிவிட முயல்கிறவர்.

கால்களை இழந்த விமானி நாளுக்கு நாள் தேய்ந்து போவதை விரும்பாத அவர் அவனை ஊக்கப்படுத்த ஒரு தந்திரம் செய்வார். முதல் உலகப் போரில் ஒரு கால் இழந்த விமானி தன் முயற்சியால் கட்டை கால்களுடன் எதிரிகளை வேட்டையாட சண்டை விமானத்தில் பறந்த சாகச கட்டுரையை அவனுக்கு வாசிக்க தருகிறார். அவன் வாசித்துவிட்டு

“ஆனால் அவனுக்கு ஒரு பாதம் மட்டும் தானேயில்லை…என்று மரேஸ்யேவ்  முணுமுணுக்க

கமிசார் “நீ சோவியத் குடிமகனாயிற்றே”  என்று ஊக்கப்படுத்துகிறார்.

ஆமாம் நான் சோவியத் குடிமகன். என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு  தனக்கான பயிற்சி முறை மற்றும் போலி கட்டை கால்கள் பற்றி அவன் கனவு காண தொடங்குகிறான். தனக்கான உடற்பயிற்சிகளை அவனே உருவாக்குகிறான். அதை பின்பற்றவும் செய்கிறான். அவனை ஊக்கப்படுத்திய கமிசார் மிக ஆபத்தான உடல் நிலைமைக்கு போகிறார்.

42ம் வார்டில் உள்ளவர்களை ஊக்கப்படுத்த வீரம் விளைந்தது. நாவல் வாசிக்கப்படுகிறது.

மருத்து தாதியிடம் கூடுதலாக உணவுகளை கேட்டு சாப்பிட்டு தனது உடலை வலுவாக்கிக்கொள்ள மரேஸ்யேவ் முயல்கிறான்.

கால் இல்லாத தன்னை பற்றி தன் காதலி என்ன நினைப்பாளோ என்று சில நேரங்களில் குழம்புகிறான். அவனது கவலையை தெரிந்த மருத்துவ தாதி  அவள் உன்னை ஏற்றுக்கொள்வாள். அப்படி உன்னை ஏற்காதவளை நீ விட்டு விடு உனக்கு அருமையான பெண் கிடைப்பாள் என்னு அவனுக்கு ஆறுதல் சொல்ல, ஒரு நாள் அவன் காதலியிடமிருந்து அவனுக்கு கடிதம் வருகிறது. அதை தாதி கொண்டு வந்து தந்து ஒரு நடனம் ஆடினால் அவன் எதிர்பார்த்திருந்த கடிதம் தருவதாக சொல்ல அவனும் தன் வெட்டுபட்ட கால்களால் படுக்கையில் துள்ளி குதிக்கிறான். அவனது காதலி ஓல்காவிடமிருந்து கடிதம் வந்திருக்கும் அவனது கால்கள் போனதை அவள் பத்திரிக்கை செய்தியில் படித்து தெரிந்துக்கொண்டிருப்பாள் . ஆனால் அது எதுவுமே தெரியாதது போல கடிதம் இருக்கும்.

அவர்கள் இன்பமாக காதலித்து வந்த அந்த போருக்கு முன்பான நாளில் முதல் முதலாக அந்த வார்த்தையை கேட்டார்கள . அப்போதிலிருந்து அவர்கள் வாழ்கை மிக கடினமானதாக மாறியது.

ஓல்காவும், நம் விமானியும் இன்னும் தங்கள் காதலை தெரிவித்துக்கொள்ளவில்லை, அவர்கள் ஆற்றோரமாக கைகளை பிணைத்துக்கொண்டு நடக்கிறார்கள். பிறகு மறு கரைக்கு போக படகுக்காக காத்திருக்கிறார்கள். மறு கரையிலிருந்து வரும் படகிலிருந்து மக்கள் அவசரமாக இறங்க பட கோட்டி உரக்க சொன்னான்.

’’யுத்தம் ஆரம்பித்து விட்டதாம் ரேடியோவில் செய்தி கேட்டேன் ”

“யாருடன்“

“யாருடன் அந்த பாழாய் போன ஜெர்மானியர்களுடன் தான். சோவியத் ருஷ்யாவுக்கான படை திரட்டல் நடக்கிறது எல்லோரும் படை திரட்டும் நிலையத்துக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்.” அன்றே அலேக்ஸேய் மெரோஸ்யேவ் படையில் சேர்ந்து அன்று இரவே 12.30 மணி ரயில் பயணித்து விமான படை படைபிரிவுக்கு போய் சேர்ந்தவனே காதலி நினைவில் வாடும் நம் கால்களை இழந்த விமானி. இப்போது அவளிடமிருந்தும் கடிதம் வந்து அவனை குதுகலப்படுத்தியிருந்தது.

இந்த சூழலில் அந்த மருத்துமனைக்கு வந்து செர்ந்த ஒரு துக்க செய்தியால் எல்லோருக்குமே கவலைகொள்கிறார்கள். காரணம் அதில் தலைமை மருத்துவர் பாதிக்கபட்டிருந்தார்

ஆனால் அன்றும் கூட அவர் ஒரு நிமிடமும் பிசகாமல் வார்டுக்கு வந்துவிட்டார் . அதே வேகம் அதே பொறுப்புண்ர்ச்சி என்ன அன்று அவர் அவ்வளவு கடுகடுவென இருக்கவில்லை அவ்வளவுதான்.  போர் முனையில் அவரது மகன் கொல்லபட்ட செய்தியே அது.  ஆனாலும் அவர் கடமையை மீறவில்லை . அழுத அவரது கண்கள் சிவந்திருந்த்தை தவிர வேறொன்றுமில்லை. அவரது மகனும் கூட மருத்துவ ஆய்வறிஞன் இதே மருத்துவமனையில் அவருக்கு உதவியாக இருந்தான் போர் சூழல் என்பதால் அவனும் படைக்கு போக வேண்டியதாகிவிட்டது. பாவம் யாரோ ஒரு ஜர்மன் பாசிஸ்ட் குண்டு அவனை தீர்த்துகட்டியிருந்தது.

அந்த வார்டில் எல்லோரையும் ஊக்கபடுத்தி எழுந்து ஓட வைக்கும் கமிசார் இறந்து போகிற காட்சி மிக துயரமானது. மருத்துவமனையே துக்கம் கொண்டு அழுகிறது செவிலி கைநடுங்க காய்சல் மாணியை தவறவிட்டு துடித்தழுகிறாள்.

மருத்துவமனைக்கு வெளியே கமிசாரை அடக்கம் செய்யும் ராணுவ சடங்குகள் நடக்க,   புதிதாக வந்த காயமுற்ற விமானப்படை வீரர்

“யார் அடக்கம் செய்யபடுகிறார்?”  என்று கேட்க,

ஒரு குரல் மஉண்மை மனிதர்” என்று சொல்ல அந்த வார்த்தை நம் கால்களை இழந்த விமானியின் காதுகளில் விழுந்து அவன் உள்ளத்தில் தங்கிவிடுகிறது.

போர்கால கொடுமையை விவரிக்கும் புதினங்களில் மிகச்சிறப்பான நாவல் இது.  நான்கு பாகங்களை கொண்டது.

உண்மை மனிதனின் கதை.  ஆமாம்,  அவன் உண்மை மனிதன் தான். அவனது 42 வார்டில் இருந்த எல்லோரும் நலமடைந்து போகிறார்கள்.

தலைமை மருத்துவர் உத்தரவின் பேரில் பொய்கால்கள் தயாரிக்கும் நிபுணர் நம் விமானிக்கு ஒரு சோடி நேர்த்தியான பொய் கால்களை தயாரித்து தருகிறார். நம் கால்களை இழந்த விமானி ஊக்கத்துடன் பொய் கால்களை பொருத்திக்கொண்டு நடை பழகுகிறான். பொய்கால்கள் உண்மையான ஒரு உறுப்பு போல அவனுள் பொருந்திக்கொள்கிறது. அதைவிட தனது காதலி தன் கால்கள் பறி போனதை எப்படி எடுத்துக்கொள்வாள் .கால்களற்ற தன்னை அவள் விரும்பாமல் போனாள் அவளை கட்டாயப்படுத்த தனக்கு எந்த உரிமையும் இல்லை என்பது போன்ற நேர்மையான துயரம் அவனை உலுக்கியெடுக்கிறது. ஆனால் அவள் மீதான ஏக்கம் அவனில் அதிகமாகிறது.

அவன் இப்போது பொய்கால்கள் உதவியுடன் நடக்க மட்டுமல்ல ,ஓடவும் செய்கிறான் ..தலைமை மருத்துவரே அவனது ஊக்கமுள்ள முயற்சி கண்டு ஆச்சரியப்படுகிறார். புதிய நோயாளிகளுக்கு அனுக்கு இரண்டு கால்கள் இல்லை என்பதே தெரியாமல் இவன் ஏன் இப்படி ஓயாமல் நடந்துக்கொண்டிருக்கிறான் என்று கிண்டலடித்து சிரிக்கிறார்கள். அவன் கனவெல்லாம் மீண்டும் சண்டை விமானத்தில் பறக்க வேண்டுமென்பது .

இப்போது அவனை மருத்துமனையிலிருந்து விடுவித்து  ஆரோக்கிய நிலையத்துக்கு உடலையும் மனதையும் தயார்படுத்திக்கொள்ள அனுப்புகிறார்கள். நம் விமானி அங்கே போக மருத்துவமனையின் மோட்டார் வாகனத்தை மறுத்து தன்னந்தனியனாக மாஸ்கோ நகரை ஒரு சுற்று சுற்றிவிட்டு நகரிலிருந்து ஆரோக்கிய நிலையத்துக்கு மின்சார ரயிலில் கிளம்புகிறான்.

அவன் ஆரோக்கிய நிலையத்தை சென்று சேர்ந்த போது அங்கே ஏற்கனவே உடல்நலமடைந்து விமான படைக்கு திரும்பும் ஒரு குழுவினரை மற்றவர்கள் வழியனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படியாக ஒரு தோழன் நலம் பெற்று செல்லும் தன் தோழனுக்கு கிண்டலான வாழ்த்து சொல்லுகிறான் .

“ஏய்..போத்யா! போர்களத் தபால் நிலைய எண்ணை சீக்கிரம் எழுதியனுப்பு. ஸீனா (ஆரோக்கிய நிலையத்தில் உள்ள ஒரு பெண்) உன்னுடைய இதயத்தைப் பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்புவாள்” போருக்கு கிளம்பும் அவர்களை அவன் ஏக்கத்துடன் பார்க்கிறான்.

ஆரோக்கிய நிலையத்தில் நம் விமானியை வரவேற்ற பெண் முன்பே வந்த தகவலின்படி கால்களற்ற ஒருவனை எதிர்பார்க்க, பொய்கால்களில் மிடுக்காக நடந்து வரும் நம் விமானியை பார்த்து குழப்பமடைகிறாள்.

“எனக்கு வந்த தகவல்படி அந்த அந்த மெரேஸ்யெவ் அலெக்ஸேய் நீங்கள் அல்ல, அவருக்கு இரண்டு கால்களும் கிடையாது. என்னிடம் விளையாடாதீர்கள்.”  என்று அவள் சொல்ல அவளிடம் தன் காகிதங்களையும்தன் பொய்கால்களையும் காட்டுகிறான். அவளால் நம்ப முடியவில்லை.

ஆரோக்கிய நிலையத்தில் வேண்டியளவு சக்தியூட்டும் சுவையான உணவு ,பயிற்சி என 28 நாட்களுக்கு அவனுக்கு அனுமதியிருந்தது. ஒரு குதிரையை போல அவன் ஓடிக்கொண்டிருப்பதை அங்கிருப்பவர்கள்  பார்த்து எதற்காக இப்படி ஓடுகிறான் என்று முணுமுணுக்கிறார்கள்.

அவன் விமானி, அவன் இரண்டு கால்களை இழந்தவன் என்கிற உண்மை தெரிய அவர்களால் நம்ப முடியவில்ல. அவன் அங்குள்ள ஆரோக்கிய நிலைய பொருப்பாளி ஸீனாவிடம் தனக்கு நடனம் கற்றுக்கொடுக்க சொல்கிறான். அவளும் ஒத்துக்கொள்ள ஒரே ஒரு நிபந்தனை விதிக்கிறாள் ‘’நான் மற்ற ஆண்களுடன் நடனமாடுவதை நீங்கள் பொறாமையாக கருதக்கூடாது’’ என்பது மட்டுமே அது.

நடனத்தையும்முழு வேகத்தோடு கற்றுக்கொள்கிறான்.  அவனது பொய்கால்கள் அவனது சொந்த கால்கள் போலாகிவிட்டது என்றாலும் அவனுக்கு பொறுக்க முடியாத ரத்தம் கட்டிக்கொள்ளும் தசைகளின் வலியை தாங்க மாட்டாமல் மற்றவர்களுக்கு தெரியாதபடி அழுகிறான்.

தன் காதலி கால்களற்ற தன்னை எப்படி புரிந்துக்கொள்வாளோ என்கிற ஏக்கம் அவனை துன்புறுத்துகிறது. அப்போது அவனது காதலியிடமிருந்து அவனுக்கு கடிதம் வருகிறது.

’முத்தங்கள் அன்பே உனதன்பு ஓல்கா!

இப்போது நான் காப்பகழ்களை நோண்டிக்கொண்டிருக்கிறேன்.. நீ எப்படியிருந்தாலும் உன்னை என்னுள்ளத்திலே ஏந்திக்கொளவேன். உன் நினைவுகளிலே நான் என் கடமைகளை செய்கிறேன் அன்பே.  உன்னை எதற்காகவும் நான் வெறுக்க மாட்டேன். நீயே என் கண்ணாளன் புரிந்துக்கொள் என் அன்பே தியாகத்துக்கு அஞ்சுவது காதல் ஆகுமா ?அம்மாதிரி காதல் காதலே கிடையாது’’ என்கிற அவளது வரிகளை படித்து அவன் விம்முகிறான். அவன் உள்ளம் குதுகலிக்கிறது. பகைவரால் முற்றுகைக்குள்ளான ஸ்டானின் கிராடிலிருந்து அந்த கடிதம் வந்துள்ளது என்பதை புரிந்துக்கொள்கிறான். அந்த காலகட்டத்தில் அந்த நகரம் பகைவரால் சூழப்பட்டிருந்தது. போரின் துயரத்தால் அவளுக்கும் அதிக உள்ளம் பக்குவபட்டிருப்பதாக நினைக்கிறான். சண்டை விமானத்தில் பறந்து எதிரிகளை அடித்து விரட்ட அவனுள்ளம் துடிக்கிறது. அழுகிறான்.

(இட்லருக்கு ஸ்டாலின் கிராடில் நடந்த போரில் தரபட்ட அடியே உலகப்போரில் மிகப்பெரிய மரண அடியாக விழுந்த்து அங்கே தான் அவனது முதுகெலும்பு முறிக்கப்பட்டது.)

உடல் நலமடைந்தவர்களை சண்டை விமானங்களுக்கு அனுப்ப ஆரோக்கிய நிலையத்துக்கு தேர்வு குழுவினர் வருகிறார்கள். நம்ப மெரோஸ்யேவ் துள்ளிக்கொண்டு போகிறான். அங்கே பரிசோதனைகள் நடக்கிறது. உடல்வலு, பார்வை கைகளின் உறுதி நுறையீரல் கொள்ளவு, என எல்லாவற்றிலும் தேறிவிட்டான் ..இவ்வளவு வலுவும் திறனும் உள்ள உன்னை எதற்க்கு இங்கு வைத்திருக்கிறார்கள் என்று கேட்கும் அதிகாரி அவனது கடந்த கால வரலாற்று குறிப்பை படித்துவிட்டு முகம் சுளிக்கிறார். கால்கள் வெட்டியெடுக்கப்பட்ட வேறொரு ஆளோட குறிப்பை தான் தவறாக படித்துவிட்டதா அவனை பார்க்கிறார். சந்தேகத்தில் ’’ கால்சட்டையை தூக்கு” என்று உத்தரவிட “ அவருக்கு புரிந்து “ ஏனப்பா இவ்வளவு நேரத்தை வீண்பண்ணுற…ம் கால்கள் இல்லாமல் சண்டை விமானத்தை ஓட்ட முடியுமா?” என்று கத்துகிறார்.

அந்த நேரம் அவனுக்கு நடனம் கற்று தந்த ஸீனா அவனுக்கு ஆதரவாக பேசுகிறாள் . ‘’ இன்று இரவு விடைபெற்று போகும் படைவீரர்களுக்கான விருந்தில் நான நடனமாடுகிறேன், என் கால்களின் நளினத்தைப் பாருங்கள் ’’என்று சொல்லிவிட்டு போகிறான். அது போலவே  ஸீனாவும் அவனும் நடனமாட தேர்வு செய்யும் அதிகாரி பார்த்து வியந்து “உங்களை நேரே படைப்பிரிவுக்கு அனுப்ப எனக்கு உரியையில்லை ஆனால் தக்கப் பயிற்சி அளித்தால் விமானம் ஓட்டுவீர்கள் என்று எழுதிவைக்கிறேன் “ என்கிறார்.

படையணிக்கு போகும் விமானிகளுடன் மெரோஸ்யேவும் புறப்படுகிறான். ஆனால் விமான படை தளத்தில் அவனை விமான பறப்புக்கு அனுப்ப முடியாது என அதிகாரிகள் மறுதலிக்க ஏமாற்றத்துடன் தன் நண்பனின் காதலி வீட்டுக்கு ஒரு வார காலம் தங்கியிருக்க போகிறான். அங்கும் மன அமைதி பெறாமல் பணியாளர் நியமன அதிகாரியை போய் பார்க்கிறான். அவர் அனது வரலாறை படித்துவிட்டு “ உனக்கோ இரண்டு கால்கள் இல்லை இரண்டு விரல்கள் இல்லாவிட்டாலும் விமான பறப்புக்கு அனுப்ப கூடாது என விதிகள் உள்ளது” என்ற பதிலே வருகிறது.

“ சரி என்னை பயிற்சி பள்ளிக்காவது அனுப்புங்கள்’’ என்று கத்துகிறான்.

அவர் அவனது ஆர்வம் கண்டு உள்ளம் நெகிழ்ந்து  “படை அணியமைப்பு தேர்வு குழுவிடம் அனுப்புகிறேன் அப்புறம் உங்கள்பாடு” என அதற்கான உத்தரவு காகிதம் தருகிறார்.

இப்படியாக நம் விமானி சுற்றி சுற்றி வர எல்லோரும் வியக்ககிறார்கள், பரிதாபப்படுகிறார்கள், ஆனால் அவனை போர் விமானம் ஓட்ட அனுமதிக்க மறுக்கிறார்கள்  துவண்டு துயறுற்று அழுகிறான்.

பிறகு கடைசியாக தலைமை ராணுவ மருத்துவர் அவனது தீவிரமான உள்ளத்தை கண்டு விமான பயிற்சிரெஜிமென்டுக்கு  சோதனைக்காக அனுப்பலாம்  என்று பணி நியமன துறைக்கு கடிதம் எழுதி அவனை அங்கே அனுப்புகிறார். அங்கும் ஏமாற்றமே .

ஆனால் அந்த அதிகாரி  இதே லெப்டினட் பதவி, இதே சம்பளம், இதே வசதியுடன் விமான படை டெப்போவுக்கு அனுப்ப ஒத்துக்கொள்ள  நம் உண்மை மனிதன் முகத்திலே ஆத்திரமும் கோபமும் வெடிக்கிறது.

“வயிற்றுபாட்டையும், சம்பளத்தையும், வசதிகளுக்காக அலைகிற வனல்ல விமானி புரிகிறதா உங்களுக்கு”  என்று கத்துகிறான்.

அந்த அதிகாரி அவனது உள்ளத்தின் வலுவை புரிந்துக்கொண்டு உச்ச அதிகாரமுள்ள அதிகாரியை காண உத்தரவு கடிதம் தருகிறார். அவர் தான் கடைசி அதற்கு மேல் யாருமில்லை. அவரை காண நம்பிக்கையுடன் போகிறான்.

அவரோ அவசரமாக ஸ்டாலின் கிராட் போக விமானத்துக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்க, இவனது குறிப்புகளை பார்த்துவிட்டு இவன் படும் பாடுகளை கேள்விபட்டு இந்த ஆளை விமான படைபிரிவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கவும் என்று எழுதி தந்துவிட்டுப்போகிறார். அப்படியும் போராட்டம் ஓயவில்லை….

கடைசியிலும் கடைசியாக  அவனை புரிந்துக்கொண்ட படையதிகாரி அவனது கருங்காலி கைதடியை பிடுங்கி தூர வீசிய அதிகாரி ;இந்த பகட்டெல்லாம் வேண்டாம், சண்டை விமானிக்கு இதெல்லாம் எதற்கு ?விமான படைபிரிவுக்கு ஓடு’ என இறுதி வார்தைகளை கேட்டு தடியை தூர எரிந்து சல்யூட் செய்தபடி படைபிரிவுக்கு ஓடோடி போகிறான்.

ஒன்பதாம் எண் பயிற்சி விமானம் அவனுக்கு ஒதுக்கப்படுகிறது, தன் பொய் கால்களுடன் விமான அறையிலும் குதித்து விட்டான். பயிற்சி ஆசிரியருடன் விமானம் சீறிக்கொண்டு விண்ணில் பாய்ந்தது. இன்னமும் கூட பயிற்சி ஆசிரியருக்கு தெரியாது அவனுக்கு இரு கால்களும் இல்லை யென்று. அவருக்கு தெரியாது விமானத்தை தேர்ந்த விமானி போல அவன் ஓட்டியது அவருககு ஆச்சரியமாக இருக்க பத்து நிமிடம் மட்டுமே அனுமதிக்க வேண்டிய பறப்பை அவர் அரை மணி நேரம் நீட்டித்தார் .விமானம் உயர பறக்க -12 டிகிரி குளிர் பயிற்சி ஆசிரியர் காலை உறையவைக்க  பறம்பு முடிந்து அவன் மிக நேர்த்தியாக விமானத்தை தரையிறக்குகிறான் .

“ ஏய் என்னப்பா சாதாரண காலணி அணிந்திருக்கிறாய் உன் கால்கள் பனியால் மறுத்து போகுமே’’  என்று கேட்க,

“ எனக்கு தான் கால்கள் இல்லையே”  என்று சாதாரணமாக சொல்ல,

அவருக்கு உலக மகா வியப்பு “ அட நீ எப்பேர்பட்ட ஆள் அடடா அதான் நீ விமானம் ஓட்டும் போது அழுதாயா …அட நீ எப்பேர்பட்டவனென்று உனக்கே தெரியாது” அவர் வியப்பில் கத்துகிறார்.

அப்படியும் அவன் ஐந்து மாதங்களுக்கு பயில வேண்டியிருந்து. பிறகு குளிர்காலம் அவர்கள் பயிலகத்தை வெண்பனியால் மூடி போர்த்திவிட்டது.

இதை எழுதும் போது எனக்கே குளிர்கிறது.

இந்த கால கட்டத்தில் ருஷ்யா புது புது சக்திமிக்க விமானங்களை உருவாக்கியிருந்தது. இல், மிக் ,லா5, யாக், என அலெக்ஸேய் எல்லாவற்றையும் ஓட்டப் பயில்கிறான்  மற்றவர்கள் புகழும்படி செயல்பட்டாலும் நிஜக் கால்கள் போல இல்லை , இந்த போலி கால்கள் என்கிற உண்மை உறைக்க பயிற்சிக்காக விண்ணில் பறக்கும் போது அச்சத்தை உண்டாக்குகிறது. ஆனாலும் அவன் மற்றவர்களை காட்டிலும் சிறப்பான தகுதிகளுடனே இருக்கிறான். பயிற்சி முடிந்து  படைபிரிவுக்கு அனுப்புகிறார்கள். அவனுக்கு விமானமும் ஒதுக்கப்படுகிறது. பறப்புக்காக காத்திருக்கிறான்.

இந்த நிலையில். இப்போது அவனுக்கு கடிதம் வருகிறது அன்னையும், காதலி ஓல்காவும் எழுதிய கடிதம்  ஆசையும் ஏக்கமும் ததும்ப பிரிக்கிறான் ..அந்த நேரம் அவசர கால சங்கொலி உருமறைப்பு செய்யப்பட்ட தன் புதிய லா5 விமானத்துக்கு ஓடுகிறான்.

ருஷ்யாவின் கூர்ஸ்க் பிரதேசத்தில் வான் சண்டையில் லா5 என்கிற புது சண்டைவிமானத்தில் பறந்து ஜெர்மனியின் யூ-87 ரக பயங்கர போர்விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்துகிறான் . அவர்கள் அணி 2 விமானங்களை பறிகொடுத்து  பாசிஸ்டுகளின் 9 விமானங்களை வீழ்த்திவிட்டு தரையிறங்குகிறான் அவனை சக விமானிகள் பாராட்டுகிறார்கள். …படிக்க முடியாத கடிதங்களை எடுத்து படிக்க தொடங்க மீண்டும் அவசர சங்கொலி ஓடு..ஓடு விமானத்துக்கு. ஓடுகிறான்.

ஜெருமனியின் மிக செப்பமான அதிரடி அணி தாக்க வருகிறது .மிக பயங்கரமான போக்கே-வுல்ப்-1990 விமானத்தை கொண்டது. விண்ணில் அவற்றை சந்தித்த வான் சண்டையின் போது சக்தி வாய்ந்த போக்கோ விமானத்தையும் நேருக்கு நேரான மோதலில் ஒன்றை சுட்டு வீழ்த்துகிறான். மீண்டும் மற்றொன்று மொத்தம் இரண்டு. இந்த போராட்டத்தில் எரிபொருள் தீர்ந்து போனதை கவனிக்கிறான். பாராசூட்ட் உதவியுடன் தப்ப வாய்ப்பிருக்கிறது ஆனாலும் மிக நேர்த்தியாக 6 கிமீ வானிலிருந்து  பெட்ரோல் தீர்ந்து போன விமானத்தை  சேதமின்றி தரையில் இறக்குகிறான். அவனும் தப்பி விமானத்தையும் காப்பாற்றுகிறான். அதற்கு பரிசாக ஸ்குவாட்ரன் தலைமை பொறுப்பை அடைகிறான்.

ஆனால் அவன் கணக்கில் 3 பகைவிமானங்கள் வீழ்த்தியதாக கணக்கு எழுதப்படுகிறது. அவன் கவனமின்றியே மூன்றாவது ஒன்றையும் சுட்டிருக்கிறான். அவனது படைபிரிவு அவனைல் கொண்டாடுகிறது.

மிக சாகசமான புதினம் என்பதை விட ஒரு மனிதனின் விடா முயற்சி உளதிட்பம் இவற்றை பேசும் போர்கால வரலாற்றின் உலகின் முக்கியமான  வரலாற்று ஆவணம் என்பேன். அதே நேரம் கலை நுட்பத்திலும் எழுத்தாளர் பரீஸ் பொலொவோய் மிக நேர்த்தியாக இந்த நாவலை பின்னியிருப்பார். ருஷ்ய இலக்கியத்தின் பால் நான் ஆழ்ந்து போக காரணமான மிகச்சிறந்தபடைப்புகளில் இதுவும் ஒன்று

உண்மையான மனிதர்களின் தன்னலம் கருதாத செய்கைகள் தான் இந்த உலகம் அப்படியான மனிதர்கள். கறுப்பாய்,சிவப்பாய்,மஞ்சளாய், வெள்ளையாய் இருக்கிறார்கள். என்பதைவிட மனிதர்களாய் இருந்தார்கள் என்பதுவே. இது போன்ற வீரர்களால் தான் இட்லர் என்கிற கேடான கொடியவன் வீழ்த்தப்பட்ட்டான்

அப்பட்டமான போர் வரலாற்று புதினம் . வர்ணனைகள் மட்டுமே புனைவு என்னை மேம்படுத்திய பல படைப்புகளில் ஒன்று . வாசித்துப்பாருங்கள்

 

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சகோதரிகள் : கரன் கார்க்கி
  2. சிங்கிஸ் ஐத்மாத்வ் : ஜமீலாவின் ‘’கிச்சினே பாலே ’’ -கரன் கார்க்கி
  3. அலெக்சாந்தர் புஷ்கினின் ’கேப்டன் மகள்’- கரன் கார்க்கி
  4. ‘’தாக்குங்கள்.. பெத்யூன் நம்முடன் இருக்கிறார்’’: ஒரு மருத்துவப் போராளியின் கதை- கரன் கார்க்கி
  5. ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து  நாட்கள்’ - கரன் கார்க்கி
  6. சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன்: இரண்டு பாப்ளர் மரங்கள் - கரன் கார்க்கி
  7. லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.
  8. நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல, வாசிப்பது எனக்கு மண்ணில் நடப்பதுபோல - கரன்கார்க்கி
  9. லெனினுக்கு மரணமில்லை - கரன்கார்க்கி
  10. 1. புத்தகங்களைத் திருடுகிறவன்