ராஜராஜரின் புதல்வி அங்கம்மா தேவி. தனது தந்தையைப் போலவே ஆழச்சிந்திக்கும் திறன் பெற்றவளென்று தேசம் முழுவதும் பேசப்பட்டாள். அனைத்திற்கும் மேலாக தனது தந்தையை மிகவும் நேசித்தாள். தந்தையின் எண்ணங்களையும். உள்நாட்டு விவகாரங்களையும் குறிப்பெடுத்து. தந்தையைப் போலவே பவனி வந்தாள். கோட்டைச் சுவற்றினைக்கூட துள்ளிக்குதித்து தாண்டும் வலிமை பெற்றவலானாள். வாள் சண்டையிலும். வில் எறிவதிலும் வீராதி வீரனுக்கு இணையாக போட்டியிட்டாள். சில நேரங்களில் இந்த நந்தவனமே இவள் பயிற்ச்சிக்கு பொருத்தமான இடமாகவும் இருந்தது. பல போர் வீரர்களைச் சுற்றி ஒரு பெண்புலியாக உருவெடுத்தாள். இந்த வனத்தில் உள்ள மரங்கள். இவளின் அம்புகளால் பல நேரங்களில் துளைக்கப்பட்டும். துண்டாடப்பட்டும் இருக்கின்றன. இந்த நாயகி அச்சமற்றவள் தான். அதேவேளையில் நாணமும், நளினமும் கூடிய நங்கையாகவும் விளங்கினாள்.

ஆழிக்கோட்டை பயிற்சி களத்திற்கு அடுத்ததாக. இவளுக்கு மிகவும் பிடித்தமான இடம் இந்த வனம் அமைந்துள்ள நிலாமுற்றம் தான். மகிழ்ச்சியான தருணங்களிலும். சோகமான வேளையிலும் இந்த வனத்தைச் சுற்றிலும் பனிப்போர்த்தியது போல உள்ள பசுமையான புல் தரையில். அழகிய வெண்புறாவாக இவள் தினம் வந்து துள்ளித் திரியும் பூந்தோட்ட வனம் இது. வானில் தோன்றும் சந்திரன் கூட வரம்கேட்டு ஓய்வெடுக்க காத்திருக்கும் ஒப்பற்ற கோட்டை இது‌ என்றால் மிகையாகாது தான்.

தேசத்தின் பல சிற்றரசர்கள் தங்களது இளவரசிகளை தஞ்சைக்கு அனுப்பி. அங்கம்மா தேவியாருடன் சிநேகிதம் வைத்துகொள்ள ஆர்வம் காட்டினர் . ராஜராஜருடன் உள்ள நட்பினை விரிவுபடுத்திக்கொள்ளவும். தங்களது உறவுகளை நிலைநிறுத்தி கொள்ளவும் பல தேச அழகு மங்கையர்கள் படையெடுத்து வந்து சங்கமிக்கும் கலங்கரை விளக்க நந்தவனமானது இந்த நிலாமுற்ற அந்தபுரம்.

அதன்படி கொடும்பாளூர் வேளாளரின் மகள் கயல்விழி தேவியார் மற்றும் நுளம்பப்பாடி. தனிகைப்பாடி. தொண்டை மண்டலம் என. பல தேசத்து இளவரசிகள் இங்கு வந்து ராஜராஜனின் இளைய புதல்வி அங்கம்மா தேவிக்கு தோழிகளாக சங்கமித்ததால்.! பெண்வண்டுகள் ரீங்காரமிடும் சரணாலயமாகத் திகழ்ந்தது இந்த மந்தாரை மலர்கள் கொஞ்சும் அந்தப்புர வனம்.

நிலவரை. பொற்கழஞ்சு காப்பறை. பொற்கொல்லர் நாணய அறை. இரும்படிப் போர்க்கருவி களவறை. வானளவு உயர்ந்த வட்ட வடிவறை. ஆழி கொண்ட கோட்டை என அரண்மனையைச் சுற்றி வந்த ஆதித்தனுக்கு எந்தப் பகுதியில் நுழைந்தாலும் எல்லாமே புதுமையான பிம்பத்தை உண்டு பண்ணியது.

ஒன்று மட்டும் உறுதியாக தோன்றியது பாளைய தளபதிக்கு.

தஞ்சையின் அரண்மனையில் நுழைந்த புதியவர்கள் எவரொருவரும் வழி தெரியாவிட்டால். விழி பிதுங்கி போய் இங்கேயே அமரசாந்தியாகி விடுவார்கள் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு.

நுழைவாயிலுக்கு உள்ளே பெரிய மதிலுக்கு உள்பக்கமாக வந்து. வலப்பக்கம் திரும்பிய போது அங்குள்ள குதிரை லாயத்தில் டங் டங் என சத்தம் கேட்டபோது.

லயத்திற்குள் உள்ளே உள்ள அறையில் யாரோ இருப்பதற்கான அறிகுறி தென்பட்டது.

வேளக்காரப் படையினரின் குதிரைகளை வைத்திருக்கும் லாயத்திற்கு அருகில் அரண்மனையின் பெரிய மதில் சுவற்றுக்கு வெளியே. புது வெள்ளாற்றின் தண்ணீர் அழகிய நீர்வீழ்ச்சியைப் போல காவிரியின் கரையை நோக்கி ஆர்ப்பரித்து ஓடியது ..!

தண்ணீரின் இரைச்சலைக் கேட்டுக்கொண்டே இரும்படி சத்தம் வந்த அறையை நோக்கி நடந்து சென்றான் பாளைய தளபதி.

கடந்த இரு தினங்களாக அரசசபை மற்றும் அந்தப்புர மாளிகை என்று. அரண்மனையின் அனைத்து இடத்தையும் சுற்றி வந்த ஆதித்தன். தனது மாமன் மகள் மந்தாரை மலர் மேனியாளை. தனியாக கண்டு விட காலம் கூடிட வேண்டும் என்று இதயம் கேட்க. அவளை காண விழிகளிரண்டும் அங்குமிங்குமாக அலைமோதியது.

சத்தம் வரும் இந்த திசையில் சென்றால் அங்கம்மாதேவியை கண்டுவிடலாம் என்ற ஒரு ஆவலோடு பாதங்களின் நடை வேகத்தைக் கூட்டினான் ஆதித்தன்.

அரண்மனையின் பெரிய மதில் சுவற்றை அண்ணாந்து பார்த்தான். சுவற்றில் ஒவ்வொரு மூலையிலும். பெரிய பரண் அமைத்து, அந்த பரண் மேல் அரணாக.! வேல்.ஈட்டி. கம்புகளுடன் உற்சாகத்தோடு காவல் காத்துக் கொண்டிருந்தனர் பயிற்சிபெற்ற முனையதரையர் படையினர்.

குதிரை லாயத்திற்கு அடுத்ததாக ஒரு பிரம்மாண்ட மாளிகையாக நிலா முற்றம். தஞ்சை அரண்மனையின் இந்த அந்தப்புரம். பல அறைகளையும்‌ அமானுயங்களையும் கொண்டது என ஊர்மக்கள் பேச்சுவழக்கில் கூறுவதுண்டு .

நிலாமுற்றத்தின் உள்ளே வனம் போல் மாற்றி அமைக்கப்பட்டு பூங்கா ஒன்று உருவாக்கப்பட்டு. அந்த பூங்காவிற்கு நடுவே வடதேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பளிங்கு கற்களால் ஆன படித்துறைகள் கட்டப்பட்ட. அழகிய ஒரு குளமும். அந்த குளத்தை சுற்றிலும் தாமரையும். மந்தாரையும். மல்லிகையும். இன்னும் கொன்றை மரங்களும் பூத்துக் குலுங்கும் கனவு தேசமாக. இளவரசிகளின் சொர்க்க பூமியாக மங்கையர்களோடு மலர்களும் மணம் வீசின.

மணம் வீசிய மலர்களுக்கு இணையாக மங்கைகளும் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தனர் நிலாமுற்ற அந்தபுரத்தில். இளம் பெண்களின் குரல்கள் இனிமையான சிரிப்பொலிகளால் சேர்ந்துகொள்ள நக்கல். நையாண்டிகளோடு. குளத்து நீரில் இறங்கி ஆரவாரமாக விளையாடிக் கொண்டிருந்தனர் நளினம் கொண்ட நங்கைகள்.

அந்தபுரத்திற்கு வெளியே. குதிரை லாயத்திற்க்கு அருகே வந்த ஆதித்தன். எதிரே வானுயர பெரிய கதவு ஒன்று உள்பக்கமாக இருந்ததும். உள்ளிருந்து பெண்கள் சிரித்து மகிழும் சப்தங்கள். கதவு வழியே சிதறு தேங்காய் போல அங்கும் இங்குமாக கேட்டது.

சத்தம் வந்த திசையை அடைந்துவிட்ட ஆதித்தன். அங்கே குதிரைகளுக்கு லாடம் செய்வதற்காக. அதன் குளம்பினை அளவு எடுத்துக் கொண்டிருந்த குதிரை லாயத்தின் கண்காணிப்பாளனைக் கண்டு.

குதிரை வீரரே.
கதவுக்கு பின்னால் மோகினி கூட்டம் ஏதாவது குடி இருக்கிறதா? என கேட்க.

குரல் வந்த திசையை நோக்கி தலையை நிமிர்ந்து பார்த்தவர். சரசரவென தனது தலையில் கட்டியிருந்த தலைப்பாகையை அவிழ்த்து விட்டு. பாளைய தேசத்து இளவரசருக்கு அநேக நமஸ்காரங்கள். தங்களைக் கண்டது என் பாக்கியம். தளபதி அவர்களே. பின் பக்கம் இளவரசிகளின் அந்தபுர வனம் உள்ளது. அந்தபுரத்தில் நமது இளவரசியும் அவரது தோழிகளும் மகிழ்ச்சியாக பொழுதினைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் போலும் என்று கூற.

வீரரே .நந்தவனத்தின் உள்ளே செல்ல எனக்கு அனுமதி உண்டோ.? என அவரிடம் கேட்டான் ஆதித்தன்.

தளபதி அவர்களே. இந்தப் பகுதி உள்ளே வர எவருக்கும் அனுமதி இல்லை. இது கண்டராதித்தரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு பகுதி. இங்கு வரவேண்டும் எனும் பட்சத்தில் அரசியார் அவர்களிடமோ. கண்டராதித்தரிடமோ அனுமதி வாங்கிய பிறகுதான் உள்ளே அனுமதிப்பார்கள். இந்த லாயம் வரைக்கும் யார் வேண்டுமானாலும் வரலாம். இதற்கு மேல் நம் முன்னால் உள்ள அந்த பெரிய தாழ்ப்பாளிட்ட கதவைத் தாண்டி வானதி முற்றத்து வனத்திற்க்குள் செல்ல அனுமதி அவசியம் தேவைப்படும் திரு. பாளையத்து தளபதி அவர்களே என்று கணீர் குரலில் பதில் கூறினான் அவன்.

இவர்கள் உரையாடல் நடந்து கொண்டிருந்த போதே. இவர்களுக்கு பின்னால் டக். டக். டக். என்று கம்பீர நடையோடு ஒரு குதிரை இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.

லாயத்தின் காப்பாளன் குதிரையை அண்ணாந்து பார்த்து… கண்டராதித்தரா? என்று தனது உதட்டுக்கும் நாவிற்கும் சண்டை வராமல் முனுமுனுக்க.

கோட்டை சபையில் மன்னருக்கு அருகிலே அமர்ந்திருந்த. போர்முனையில் விழுப்புண் கொண்ட பரகேசரி என்று அழைக்கப்பட்ட உத்தமசோழரின் புதல்வர் கண்டராதித்தர் வெள்ளை புரவி மேல் அமர்ந்து இவர்களை நோக்கி வந்தடைந்திருந்தார்.

தஞ்சையின் தளபதி கண்டராதித்தருக்கு பணிவான வணக்கங்கள். என்று கூறி கண்டராதித்தர் அருகே ஓடினான் குதிரை லாயத்தின் காப்பாளன்.

காப்பாளனிடம் இருந்து பார்வையை விளக்கிய கண்டராதித்தர். ஆதித்தனை பார்த்து இரு புருவத்தையும் உயர்த்தி ஒரு சிறிய புன்னகையுடன் .
வந்தியத்தேவரின் புதல்வரே.! என்ன இவ்வளவு தூரம்.? புரவிப்பயணம் செல்ல ஆவலோ எனக் கேட்க.

புரவிப்பயணம் மட்டுமல்ல உத்தமரின் புதல்வரே. நீங்கள் உம் என்று கூறினால். ஏழு புரவிகளை இணைத்து. நாழிகை நேரத்தில் மேரு மலையை அடைந்து. ராஜேந்திரர் படையுடன் கடாரத்தை எட்டிடுவேன் எனக் கூற.

ஆதித்தனின் இந்தக் கூற்றைக் கேட்ட கண்டராதித்தர்.
பாளைய தளபதிக்கு பைந்தமிழ் பாசுரம் நுனிநாக்கில் சரளமாக வந்து விழுகிறதே !.

சாந்தமாககாட்சியளித்தாலும் சத்திரியரின் வழித்தோன்றலாச்சே. வீரப்பேச்சு பேச உங்களுக்கு பழகித்தர வேண்டுமா என்ன?
கடாரம் போகும் உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள் ஆதித்தரே என்று கூறி.
ஏது இந்த பக்கம். காரியம் ஏதும் உண்டா எனக் கேட்க.

அதுவெல்லாம் ஒன்றும் இல்லை தஞ்சையின் தளபதியே.
பொழுது போகவில்லை. காலையிலிருந்து அரண்மனையை அங்குலம் அங்குலமாக சுற்றிப் பார்த்துக் கொண்டு வருகிறேன்.

உள்ளத்தில் அசதியும் ஏற்படவில்லை. எண்ணத்தில் சலிப்பும் ஏற்படவில்லை. அடுத்து என்ன! என்று ஆர்வம் தான் பீறிட்டு வருகிறது. அப்படி அழியாப் புகழ் கொண்ட சோழ தேசத்தின் தலைநகரம் தஞ்சை அரண்மனையை சுற்றி பார்த்துக்கொண்டு வருகிறேன். வந்த இடத்தில் இவர்தான் இருந்தார். அதுதான் அவரிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தேன் என்று ஆதித்தன் கூற.

கண்டராதித்தரும் ஆதித்தனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிறு புன்னகை உதிர்த்து அரண்மனைக்குள் போகலாம் வருகிறீர்களா என்று ஆதித்தனிடம் கேட்டார்.

அதனாலென்ன தளபதியுடன் வருவதற்கு தயக்கம் ஏதும் இல்லையே எனக்கு. என்று கூறி கண்டராதித்தர் அருகில் போனான் ஆதித்தன்.

பெரிய தாழிட்ட கதவின் பின்னால் உள்ள நந்தவனத்தில் இருந்து நங்கையரின் சிரிப்பொலிகள் சற்று மாறி கூக்குரலாக கேட்டது இவர்களுக்கு.

அய்யோ.! ஓடி வாங்க.! இளவரசியை காப்பாத்துங்க. யாராச்சும் வாங்களேன் என்று இளம் பெண்கள் சிலர் கூப்பாடு போட. குதிரையிலிருந்து கீழே குதித்த கண்டராதித்தர் தாழிட்ட அந்த பெரிய கதவை நோக்கி ஓட ஆரம்பித்தார்.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஆதித்தனும் அவர் பின்னாலேயே ஓடினான் இடுப்பில் செருகியிருந்த வாளை பிடித்துக்கொண்டு.
வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த குதிரை காப்பாளனும் இவர்கள் பின்னேயே ஓட ஆரம்பித்தான் .

பெரிய வானுயர கதவினை அடைந்த கண்டராதித்தர். தனது இடுப்பில் செருகியிருந்த சாவிக்கொத்தை எடுத்து சரியாக அந்த தாழ்ப்பாளுக்கு பொருந்தக்கூடிய சாவியை எடுத்து கதவினைத் திறக்க. அருகில் சென்ற ஆதித்தனும் தன் பங்குக்கு கண்டராதித்தருக்கு உதவியாக இவனும் ஒரு பக்க கதவை தள்ளி எதிரே உள்ள நந்தவனத்தை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள். ஐயோ! அங்க பாருங்க.அது ஓடுகிறது.
இளவரசி! இளவரசி.! எங்கே இருக்கீங்க? என்கிற குரல்கள் நந்தவனம் முழுக்க எதிரொலித்துக் கொண்டிருந்தது.

கதவைத் திறந்து வேகமாக உள்ளே சென்ற ஆதித்தன் குளத்திற்கு அருகில் இருந்த பெரிய கொன்றை மரத்திற்கு அருகே இளவரசி மயங்கி கிடப்பதை பார்த்தவுடன் நெஞ்சு படபடத்து. மயங்கிய இளவரசியை நோக்கி ஓட ஆரம்பித்தான். பின்னாலேயே கண்டராதித்தரும் குதிரை லாய காப்பாளனும் ஓடினர்.

மதில் சுவருக்கு அருகே இருந்த கொன்றை மரத்தை அடைந்த இளவரசன் இளவரசி அருகே செல்ல. அடுத்ததாக உள்ள நாவல் மரத்தின் பின்னால் ஒரு உருவம் மறைந்து நிற்பது போல தெரிந்தது.

இளவரசியை விட்டுவிட்டு. இடுப்பிலிருந்து வாளை உருவி கெட்டியாக பிடித்துக் கொண்டு மெது மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து அந்த நாவல் மரத்தை நோக்கி நகர்ந்தான். அதற்குள் அந்த உருவம் மரத்தின் மேல் சரசரவென ஏறி கிளையைப் பிடித்து. கோட்டை மதில் சுவரை அடைந்திருந்தது. இவன் மரத்தின் பின்னால் செல்லவும் அந்த உருவம் மதில்மேல் தாவவும் சரியாக இருந்தது. கையிலிருந்த வாளை மறுபடியும் இடுப்பில் உள்ள உரையில் வைத்துவிட்டு சரசரவென்று ஓங்கி உயர்ந்த நாவல் மரத்தின் மீது ஏற ஆரம்பித்தான் ஆதித்தன்.
இவன் ஏறுவதை பார்த்து அந்த உருவம் சற்றும் தயங்காமல் மதில் சுவருக்கு வெளிப்பக்கமாக பட்டென்று குதித்தது.

வெகு வேகமாக மரத்தின் பாதி வரை ஏறிய ஆதித்தன் லாவகமாக மரத்தின் கிளையில் இருந்து கோட்டை மதில் சுவற்றின் மேலே தாவிக் குதித்தான்.

சுவற்றுக்கு வெளியே ஓடிக்கொண்டிருந்த புதுவாற்றின் நீரோட்டத்தில் அந்த உருவத்தை பார்த்து. இடுப்பிலிருந்த வாளை மறுபடியும் உருவி ஏய்.ஓடாதே அங்கேயே நில். ஓடினால் வாளெறிந்து உன் உடலை தண்டாக்கி விடுவேன் என்று கூற. நாழிகை நேரத்தில் அந்த உருவத்தைப் நோக்கி வேகமாக வாளை எறிந்தான்.

தண்ணீரில் இருந்த அந்த உருவத்தின் முதுகு மீது சரியாக வாளின் முனை பட்டதும் கீச். கீச். என்று கத்தியது அந்த குரங்கு.

ஆற்றில் அடித்து வரப்பட்ட மரக்கட்டைகளை பிடித்து நீரோட்டத்தின் போக்கிலேயே தாவிக்கொண்டு போனது ஆதித்தனின் வாளால் அடிவாங்கிய அந்த குரங்கு.

முதுகில் ஏற்பட்ட காயத்தால் வெகு கோபமடைந்த அந்த குரங்கு வாயை அகலமாக விரித்து பற்களைக் காட்டி பயத்தை காட்டியது.

கையிலிருந்த வாளும் ஆற்றில் விழுந்து விட்டது. அந்த வானர குரங்கும் தப்பித்துவிட்டதே என்று நினைத்துக் கொண்டு.திரும்பி கோட்டை மதில் சுவர் வரை படர்ந்திருந்த நாவல் மரக் கிளையை பிடித்து மெதுவாக மரத்திற்கு சென்று அங்கிருந்து நிதானமாக கீழே இறங்கினான் ஆதித்தன்.

கண்டராதித்தர் கொன்றை மரத்தின் கீழே மயங்கி இருந்த இளவரசி அங்கம்மாதேவியாரின் தலையை தன் மடியிலே வைத்து. முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி கொண்டிருக்க. அதற்குள் மற்ற தோழிகளும் அங்கே வந்துவிட்டனர்.

முகத்தில் பட்ட நீர்த்துளிகளால் மயக்கம் தெளிந்து எழுந்த ராஜராஜசோழரின் புதல்வி அங்கம்மா தேவியார் அருகிலே கண்டராதித்தர் அமர்ந்திருப்பதும். எதிரே புதிதாக ஒருவர் நின்று கொண்டிருப்பதையும் பார்த்து தனது தோழியர்களைத் தேட ஆரம்பித்தாள்.

பின்னாலே தோழிகள் நின்றிருக்க. அவர்களுக்குப் பின்னால் சரசரவென்று சருகுகள் அதிரும்படியாக நடந்து வந்த ஆதித்தனை அனைவரும் திரும்பிப் பார்க்க.
ஆதித்தனை பார்த்த கண்டராதித்தர் தளபதி என்ன நடந்தது? யார் அங்கே ஓடியது? என்று பதைபதைக்க கேட்டார்.

கண்டராதித்தரே. பயப்பட வேண்டாம். எதிரிகள் யாருமில்லை. மந்திகுரங்கு ஒன்று செய்த சேட்டைகளைப் பார்த்து பயந்து தான் இளவரசி மயங்கியுள்ளார் போலும் என்று சிரித்துக்கொண்டே இவர்கள் அருகில் வர.
சற்று நிம்மதி பெருமூச்சு விட்டார் கண்டராதித்தர்.

ஒரு குரங்கைப் பார்த்தா மயங்கம் கொண்டாய் இளவரசி.! என்று கண்டராதித்தர் கேட்க.
தலைகுனிந்து ஆமோதித்தாள் அங்கம்மா தேவியார்.

அதற்குள் இளவரசி அருகில் வந்துவிட்ட ஆதித்தனை பார்த்தவுடன் நாணத்துடன் எழுந்து தன் தோழிகளை நோக்கி ஓடினாள்.
சோழ தேசத்தையே கட்டிக்காக்கும் ராஜராஜன் மகளுக்கு வானரம் என்றால் பயமோ என்று இளவரசியை பார்த்து ஏளனமாக கேட்க.

நுளம்பம்பாடி இளவரசியோ பூதேவியோ.
ஒரு குரங்கைப் பார்த்து எங்கள் இளவரசிக்கு பயமில்லை தான். ஆனால் அந்த வானரர்களின் தலைவனைப் பார்த்து தான் இப்போது பயம் கொண்டு எங்கள் பின்னே நிற்கின்றார் என்று கூற. அருகில் இருந்த பெண்கள் சத்தமாக சிரிக்க தொடங்கிவிட்டனர்.

கண்டராதித்தரும் சற்று பலமாக சிரித்துவிட்டு சோழ தேசத்தின் இளவரசிகள் ஒரு சிறு குரங்கை பார்த்தா பயந்து கொண்டு இப்படி கத்தினீர்கள்.!

வீரம் விளைந்து. ஒரு படையையே வழி நடத்தும் அளவுக்கு திறமையுள்ள அங்கம்மா.! ஒரு குரங்கைப் பார்த்து பயம்கொண்டால் என்றால் இந்த தேசமே நம்பாது.!

ஆண்களுக்கு இணையாக பல தேசத்து மகளிர் போர்க்களத்தில் போரிட்ட பூமி இது. இந்த தேசத்தில் உங்களைப் போன்ற பெண்கள் பயமில்லாது ஒரு விவேகத்தோடு இருக்க வேண்டாமா.? பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைக்கும் கையில் வேல் கொடுத்து போருக்கு அனுப்பிய புண்ணிய பூமி இது. என்று கூறிவிட்டு அந்திவேளை சாயத்தொடங்கிவிட்து. மாலைப் பொழுதும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரும் அரண்மனைக்கு செல்லுங்கள் என்று கூறிவிட்டு. ஆதித்தனை பார்த்து பாளய தளபதியே.! வாருங்கள் செல்வோம் என்று கூறிவிட்டு விருவிருவென்று வெளியே போய்விட்டார்.

கண்டராதித்தர் இங்கே இருந்தவரை. தைரியமாக இருந்த ஆதித்தனுக்கு.! தற்போது தான் மட்டும் இந்த மங்கையர்கள் கூட்டத்தில் தனியாக அகப்பட்டு கொண்டுள்ளதை நினைத்தபோது.!

அந்த கணத்தில் அவனது உலகத்தின் மேற்கூரையில் வானமும் இல்லாமலும்.!
காற்றும் இல்லாமல்.! உடல் முழுவதும் தீ பரவியது போலவும்.! அதன் மேல் நீர் ஊற்றுவது போலவும்.! தன் கால்கள் நிலத்தில் இருந்து மிதப்பது போலவும்.! சூரியனும், சந்திரனும் மாறி மாறி ஒளியை வீசுவது போலவும்.! வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எல்லாம் வரிசையாக கீழே இறங்கி.! அந்த பெண்களுக்குப் பின்னால் சாமரம் வீசிக் கொண்டு இருப்பது போலவும்.! இவர்கள் மீது மழை சரசரவென செய்வது போலவும்.! அந்த மழைக்கு நடுவே பெரிய மின்னல் ஒன்று கீற்றாக வெட்டிச் போலவும்.! மின்னலுக்குப் பிறகு டம். டம். என்று பெரிய இடி சத்தம் கேட்டது போலவும். இன்னும் மரமும், செடியும், கொடியும், மலர்களும் என என்னென்னவோ ரீங்காரமிட்டு சென்றது ஆதித்தனின் மூளைக்குள்.

நிஜ உலகத்திற்கு வந்த ஆதித்தனின் அசடுவழிந்த முகத்தைப் பார்த்து எதிரே இருந்த பெண்கள் கலகலவென சிரித்து.

என்ன தளபதியாரே.நீங்கள் மட்டும்தான் வந்தீர்கள் என்று இளவரசி கூறினார்.!

உங்கள் பரம்பரையையே அழைத்து வந்துள்ளீர்கள் போல என்று கேட்க. மறுபடியும் அனைத்து பெண்களும் சிரித்தனர்.

ஏய். சும்மா இருங்கடி. என்று அவர்களை அதட்டுவது போல. பொய் கோபத்தோடு மிரட்டிய அங்கம்மாதேவி.
ஆதித்தரை பார்த்தவுடன் தலைகவிழ்ந்து தனது விழிகளை மூடி. மனதைத் திறந்து. எண்ணப் புரவிகளை விரட்டினாள் .
மெலிந்த. உயரமாக.வெளிர்பொன்னிற கூந்தலுடன்.சாம்பல் நிற கண்களுடன். பரந்த நெற்றியும். சிறிய மூக்கு என ஆதித்தனை வசீகரச் செய்யும் பட்டாடை அணிந்து பேரழகியாக நின்றிருந்தாள். தலைவனைக் கண்ட தலைவி போல வாஞ்சையோடு வலது காலால் தரையில் கோலம் போட ஆரம்பித்தாள்.

ஆதித்தனும் அங்கம்மாதேவியும் நேர் கொண்டு வளர்ந்த மூங்கில் மரத்தின் நிழல் போல ஒரே நேர்கோட்டில் நிற்க. இருவரது விழிகளும் காற்றை பிளந்துகொண்டு பார்வைகளால் பரஸ்பர சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருந்தது.

இளவரசியின் முதுகில் கை வைத்த கொடும்பாளூர் இளவரசி.
இளவரசி… இளவரசி… உங்கள் அத்தையின் மைந்தன் இங்கு தான் இருக்கப் போகிறார். பிறகு ஆசை தீர பார்த்துக் கொள்ளலாம். இப்போது அரண்மனைக்குச் செல்லலாம் வாருங்கள் என்று கூற..
கனவுலகில் இருந்து நிஜ உலகிற்கு வந்தது போல ஒரு பிரம்மையை அடைந்தாள் சோழ தேசத்தின் பேரழகி.

எதிரிலிருந்த ஆதித்தன் இன்னமும் விலகாத கூச்சத்தோடு. வருகிறேன்… இளவரசி…. என்று சொல்லிவிட்டு வாயிற்படியை நோக்கி திரும்ப.

வருகிறேன் என்று சொல்லிவிட்டு போகிறீர்களே? என்று பெண்ணொருத்தி கேட்க. ஏய். உனக்கு ரொம்பதான் ஏளனம். அவரு இங்க தான இருக்க போறாரு. இனிமே வருவதும் போவதும் வழக்கமாக ஆகப்போவது தானே என்று கூற.
மறுபடியும் பொய்க் கோபத்தோடு. ஏய்.. சும்மா இருங்கடி.  வாங்க போகலாம் என்று கூறிக்கொண்டே ஆதித்தனைப் பார்த்து வைத்த கண் வாங்காமல் மெது மெதுவாக அடி மேல் அடி எடுத்து வைத்து நடந்தாள் மந்தாரை மலர் மேனியாள்.

வானுயர வளர்ந்த வாயிற் கதவு வரை ஒரு பக்கம் ஆதித்தனும்.  மறுபக்கம் இளவரசியும் அவள் தோழிகளும்  நவமணிகளாக. பவளம். மரகதம். மாணிக்கம். முத்து. வைரம் என ஒன்றாக இணைந்தது போல மங்கையர் கூட்டத்தோடு வானரரின் தளபதியும் தேவியாரும் வந்து கொண்டிருந்தனர்.

காலையிலிருந்து ஒவ்வொரு இடமாக சுற்றி வந்து கொண்டிருந்த ஆதித்தனுக்கு தனது கனவு தேவதையை நேரடியாக பார்த்ததும் புதுக்கவிதைகள் பல பிறந்து. எண்ணம் முழுவதும் காதல் ரசனைகள் கரைபுரண்டு ஓடியது.

பற்றிக்கொள்ள முடியாதபடி.
பாவையர்கள் கூடியிருக்க.
பாளையத்து தளபதி நான்.
பஞ்சு போல நடந்து வரேன்.
நெஞ்சு உள்ள பூங்கொடியே.
நியாயம்தானா உனக்கு இது.?
ஆசை கொண்டு அருமை மாமன்
அன்னமாக பறந்து வர.
மணம் வீசும் மந்தாரையே.
யாழ் இசைத்து வரவேற்பாயோ.!!

என தனது வாய்க்குள் முணுமுணுத்து கவிதைகளை கூறிக் கொண்டு நடந்து வந்துகொண்டிருந்த ஆதித்தனைப் பார்த்து. அருகில் இருந்த தோழியர்கள். என்ன.. தளபதியாரே.!

கவிதை எல்லாம் பலமாக இருக்கின்றது. கணநேரத்தில் தோன்றியதா? அல்லது பாளையத்தில் இருந்து கிளம்பும்போதே எழுதிக்கொண்டு வந்தீரா? என கேட்க. கூடியிருந்த மங்கையர்கள் கலகலவென சிரித்து மகிழ்ந்தனர்.

தன் மனதுக்குள் கூறிய கவிதைகள் இவர்களுக்கும் கேட்கிறதோ.! என்னே விந்தை.! என்று முகத்தை கொஞ்சம் சுருக்கி அவர்களைப் பார்த்து மறுபடியும் தலையை குனிந்து கொண்டு வாயிலை அடைந்தனர் இவர்கள்.

அங்கே தயாராக இருந்த கண்டராதித்தர் ஆதித்தனை பார்த்து வாருங்கள் தளபதியே.. என்று கூற.. அங்கம்மா தேவியாரை மறுபடியும் நிமிர்ந்து பார்த்த ஆதித்தனின் உள்ளத்தில் சரசரவென்று ஒருவித படபடப்பு தோன்றி மறைந்தது.

போய் வருகிறேன் என்று தனது மனதுக்குள் சொல்லிக்கொண்டு தேவியரே பார்த்தவுடன். புரிந்தது போல் மெதுவாக குனிந்து கொண்டே தலையாட்டினார் தேவியார்.

ஒரு கைப்பிடியுங்கள் கண்டராதித்தரே என்று கூற. வாருங்கள் என்று தனது இடது கையை பிடித்து குதிரையின் மேல் நோக்கி இழுத்தார் கண்டராதித்தர்.

ஒரு புரவிமேல் அமர்ந்து கொண்ட இரு தளபதிகளும் மாளிகையை நோக்கி செல்ல. வானதி முற்றம் வழியாக இளவரசிகளும் அரண்மனையை நோக்கி செல்லத் தொடங்கினர்..