“நவீனத் தமிழிலக்கிய வரலாற்றாராய்ச்சிக்குப் பரிதிமாற்கலைஞரின் வாழ்க்கைச் சரிதத்தையும் அவருடைய நூல்களையும் நுணுகிக் கற்றல் இன்றியமையாதது” என்பார் கலாநிதி க.கைலாசபதி. அவர் ஒரு மார்க்சியர்; அப்படித்தான் அவர் சொல்வார் எனச் சிலர் முணுமுணுக்கலாம். ஆனால், திராவிட இயக்கத்தின் போர்வாளாகத் திகழ்ந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், இதற்கும் ஒருபடி மேலே செல்கிறாரே!

“இந்த நூற்றாண்டில் இருவர் பார்ப்பனர்

செந்தமிழ்ப் பற்றுடையார்கள்

முந்து பாவலன் பாரதி மற்றவன் 

முத்தமிழ் வல்லவன் பரிதிமாற் கலைஞன்

நாடகத் தமிழ் இலக்கணம் மறைந்ததே 

நாடகத் தமிழ் இலக்கியம் மறைந்ததே

ஈடு செய்வேனோ என்று துடித்தான்

இயன்ற மட்டும் சிற்சில கொடுத்தான்

சூரிய நாராயண சாத்திரி என்ற 

தூய்மையற்ற தன் ஆரியப் பெயரை

ஏர்பெறு தமிழால் பரிதிமாற் கலைஞன் 

என்று மாற்றிய நற்றமிழ் அறிஞன்

வாழிய பரிதிமாற் கலைஞன் எனும்பெயர்

வாழிய அன்னோன் வாரிய பெரும்புகழ்

ஊழி பெயரினும் தன்சீர் பெயரா 

உயர்தனிச் செந்தமிழ் அன்னை வாழியவே” (தேனருவி)

இங்குப் பாரதிதாசன் என்ன சொல்கிறார்? செந்தமிழ்ப் பற்றுடையான் என்கிறார். முத்தமிழ் வல்லவன் என்கிறார்.நாடகத்தமிழுக்காகத் துடித்தான் என்கிறார். தூய்மையற்ற ஆரியப் பெயரை ஏர்பெறு தமிழால் மாற்றினான் என்கிறார். வெறும் ஒரு புனைபெயர் சூடியதற்கா இத்தனை புகழ்மொழிகள்? இயன்றமட்டும் சிற்சில கொடுத்ததற்கா ‘வாழிய பரிதிமாற் கலைஞன் எனும் பெயர்’ என்றும், ‘வாழிய அன்னோன் வாரிய பெரும்புகழ்’ என்றும் பாரதிதாசன் போற்றினார்?  அப்படியில்லை. பின்னால் விளைந்த தனித்தமிழ் இயக்கத்திற்கு, 1897இல் ஒரு முன் உந்துதல் தந்த தனித்தமிழ்ப் பெயர் மாற்றத்திற்கு வித்திட்டவர் என்பதாலேயே அப்படிப் பாடினார். பாவேந்தரை விடுங்கள். அவர் கவிஞர். எதையாவது அவர் உணர்ச்சிகரமாகப் பாடிவைப்பார், பாரதிபோலே! தமிழ்ப் பேரறிஞர் சி.வை.தாமோதரம்பிள்ளை (1832 – 1901), பரிதியாரைத் ‘திராவிட சாஸ்திரி’ என்கிறாரே! சி.வை.தா.வையும் விட்டுவிடுங்கள். மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், கால்டுவெல் மற்றும் மறைமலையடிகளுடன் பரிதிமாற்கலைஞரையும்கூடத் தம் வழிகாட்டியாகத் தெரியாமல் குறிப்பிட்டுவிட்டாரா? இது விளையாட்டோ, வீண் வேடிக்கையோ இல்லை. ஏதோ புனைபெயர் (மறைபெயர்!) வைத்துக்கொள்வதற்காக மட்டும் திடீரென ஏற்பட்ட ஓர் உணர்வன்று.அவர் உள்ளமெங்கும் பொங்கி நின்ற தமிழுணர்வே வெளிவழிந்து, பரிதிமாற் கலைஞர் என்ற தனித்தமிழ்ப் புனைபெயராகவும் வெளிப்பட்டது. சான்று வேண்டுமா? “அவர் (வடமொழியாளர்) தமிழில் முகத்திற்குத் தக்க சொல்லில்லை என்றார். யாம் ‘முகம்’ தமிழ்ச் சொல்லே என்பாரோடிணங்கி, அதை வலியுறுத்திச் சொல்லுமுகத்தான், வடமொழியில் முகத்தின் சொற்களைத் தவிர்த்து, ‘வாய்’க்குத் தக்க சொல்லின்மை காட்டி, அது பேச்சு வழக்கற்ற பாஷை என்று குறித்தனம்” (தமிழ் மொழியின் வரலாறு) என்கிறார். ‘ஆரியம்போல் உலக வழக்கொழிந்து’ என ‘மனோன்மணியம்’ பெ.சுந்தரம்பிள்ளை பாடியதற்கும், இதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது? மேலும், இதே கருத்தை இன்னும் துலக்கமாக, நாடகத் தமிழ் குறித்து எழுதும்போதும் பகிர்ந்துள்ளார். “இனிச் சிலர் ‘நாடகம்’ என்ற சொல் வடசொல்லாதல் கண்டு, ஆரியரொடு கலந்த பின்னரே தமிழர்களிடத்தில் நாடகத்தமிழ் ஏற்பட்டிருத்தல் வேண்டுமென்கின்றனர். இக்கூற்று வடமொழியில் ‘வாய்’ என்பதற்குத் தக்க சொல் இல்லாமையால் வடமொழியாளர்க்கு வாயில்லையென்பது போலும். அஃதன்றியும் ‘கூத்து’ என்ற சொல்லே ஆதியில் தமிழர்கள் வழங்கியது; கூத்தென்பது பொது; நாடகமென்பது சிறப்பு. கூத்துப் பலவற்றுள், நாடகமென்பது கதை தழுவி வரும் கூத்து, எனவே நாடகமென்ற சொல்வழக்கின் முன்னரே நாடகத் தொழில் வழக்கும், நாடக நூல் வழக்குந் தமிழர் மாட்டுண்டென்பது பெற்றாம்” எனத் தனித்தமிழ்ப் பற்றுடன் பரிதியார் எழுதியுள்ளார்.

ஆங்காங்கு வந்தவரும் போனவரும் தமிழைப் பற்றித் தத்தமக்குத் தோன்றியவற்றை வாய்க்கு வந்தபடியெல்லாம் ஆங்கிலத்தில் உளறிக்கொட்டிவைத்த ஒருகாலத்தில், தமிழ் மொழியின் வரலாற்றைச் சான்றுகளின் அடிப்படையில் சம காலத்தின் நவீன நோக்கைக் கைக்கொண்டு நுட்பமாகப் பரிதியார் விளக்கினார். தன்மையில் மகாரமே சிறப்புறுவதாகக் கூறித் “தாயைக் குறிக்கும் ‘அம்மா’ என்ற சொல்லின் கண்ணும் மகாரம் உபகாரப்படுதலை உற்று நோக்கின், தாய் குழந்தைக்குத் தன்னவளாயினள். இதைக் கவனிக்குமிடத்துத் தந்தை சிறிது தன்னினின்றும் விலகினவனாக மதிக்கப்படுதற்கு அறிகுறியாகப் பகார சப்தத்தினால் ‘அப்பா’ என்றழைக்கப்படுகின்றனன்” (தமிழ் மொழியின் வரலாறு) எனப் பெண்நிலை நோக்கிலிருந்தும் பரிதியார் எழுதியுள்ளார். ஆங்கிலக் கல்விவழிப் பட்டம் பெற்றுக் கல்லூரித் தமிழாசிரியர் பணியேற்ற முதல்வராகவும், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவ முனைந்தவராகவும், பன்னிரண்டு வயது வரையில் குழந்தைகள் தமிழிலேயே கல்வி கற்பதை வலியுறுத்தியவராகவும், ஆங்கில மொழியில் மட்டுமே கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருந்த கிறித்தவக் கல்லூரி இதழில் (Christian College Magazine) தமிழிலும் கட்டுரைகள் வெளியாவதற்கு முதற்காரணமானவராகவும் பரிதியார் அறியப்படுகிறார். 02.11.1903இல் இறந்துபோன பரிதியாருக்காகக் கிறித்தவக் கல்லூரி இதழில் வெளியிடப்பட்ட இரங்கல் குறிப்பில் (College Notes), “He graduated from the college in 1893 taking his degree in philosophy and Tamil, and was at once employed as Assistant Tamil pandit. He was the first graduate to take the post of a Tamil Pandit in the college – we believe in any college; and the result of his work was to raise the prestige of the profession and to create a new ideal of its work. Mr. Suryanarayana Sastri brought a mind trained in scientific method and a knowledge of Western grammatical and philological studies hitherto unknown to his class” (Obituary notice by the Editor) எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, தமிழாசிரியப் பணியின் பெருமிதமான ஓர் அடையாளமாகப் பரிதிமாற்கலைஞர் பார்க்கப்பட்டதாகக் கூறலாம். இதற்கேற்ற அறிவொழுங்குடனும் ஆய்வறத்துடனும் பரிதியார் தமிழ்ப்பணி செய்தார்.

    இலக்கணம், புதினம், உரைநடை, நாடகம், செய்யுள் நாடகம், ஆய்வு நூல், பதிப்பு, தனிப்பாசுரம், மொழிபெயர்ப்பு, கலைச்சொல்லாக்கம், நடிப்பு (தம்முடைய நாடகங்கள் மேடையேற்றப்பட்டபோது, நாயகனாக மட்டுமின்றி நாயகியாகவும் பரிதியார் தோன்றி நடித்துள்ளார்), பேராசிரியப் பணி, சொற்பொழிவு, தமிழ்ப் பாடங்களுக்கு உரைசெய்தல் எனத் துறைதோறும் தொண்டாற்றியுள்ளார். திறனாய்வையும் விட்டுவைக்கவில்லை.   ‘மே’ 1898இல், ‘அ.மாதவையா’வின் ‘பத்மாவதி சரித்திரம்’ பற்றிக் ’கிறித்தவக் கல்லூரி இதழில்’, ‘Padmavathi Charithriam – A New Tamil Novel’ என்றெழுதியுள்ளார். விமர்சனத்தைத் தனியொரு துறையாகப் பார்க்கும் விரிந்த நோக்கு இவருக்குண்டு. இன்றைய நவீனத் தமிழிலக்கியத்திலும் படைப்பாளிகளே படைப்பிலக்கியம் குறித்து விமர்சிக்கவியலும் என்ற குரல் ஓங்கி ஒலிப்பதைக் கேட்கிறோம். ஆனால், பரிதியார் மிக நுட்பமானவர். “ஆராய்ச்சித்திறம் வேறு. நூலியற்றுந்திறம் வேறு. ஆகவே, ஆராய்வோனிடத்தில் அம் மகாகவிகளைப்போல நூலியற்றுந்திறம் இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை” (தமிழ் வியாசங்கள்) என்றார். பண்டிதத்திலும் நவீனத்திலும் ஒருசேரப் புழங்க முயற்சி செய்தவர் என்பதால், அவரது மொழியில் எப்போதும் ஒரு விமர்சனக் கண்ணோட்டம் செயல்பட்டபடியேயிருந்தது. “தனித்தமிழ் நூலாகிய ‘திருக்குற’ளிற்குப் பரிமேலழகரும், வடநூலார் மதம் பற்றியே உரை வகுத்தேகினர்” எனத் தமது ‘தனித்தமிழ்’ நோக்கைச் சிறிதும் விட்டுத்தராமல் பரிதியார் கருத்துரைத்துள்ளார். வடமொழியை மட்டுமில்லை; அதைத் தூக்கிப் பிடித்த பிராமணர்களின் சூழ்ச்சியையும் இனங்கண்டு பரிதியார் அதை விமர்சித்ததற்கும் சான்று காட்டுகிறேன். சென்னைப் பல்கலைக்கழகப் பட்ட வகுப்பு மாணவர்கள் படித்து வந்த ஆங்கிலம், கிரேக்கம், லத்தீன், சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு முதலிய மொழிகளில் தமிழ் உள்ளிட்ட உள்நாட்டு மொழிகளை நீக்கிவிடலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படியே தமிழ்மொழி நீக்கப்பட்டுவிட்டால், வேறு வழியின்றிப் பெரும்பாலானோர் மேல் வடமொழி திணிக்கப்படும் ஒரு சூழல் அப்போது உருவாகியது. அதைக் கடுமையாக எதிர்த்துப் போராடித் தமிழைப் பரிதியார் பாதுகாத்து நின்றார். அதற்கு அவர் முன்வைத்த எதிர்வாதம் என்ன தெரியுமா? “பிராமணராயினாருக்கு விசேஷமான அனுகூலமும் ஏனையோருக்கு விசேஷப் பிரதிகூலமும் விளையும்” என்றார். இத்தகைய கூர்மை கூடிய ஒரு தீவிரமே, வரலாற்றில் தனித்தமிழ்ப் போராளியாகப் பரிதியாரை நிலைநிறுத்துகிறது.

    சென்னைப் பல்கலைக்கழகப் பட்ட வகுப்புப் பாடத் திட்டத்திலிருந்து தமிழை நீக்கும் முயற்சியை எதிர்த்துப் போராடி முறியடித்தபின், “தமிழ்ப் பெருந்தெய்வத்தை வாழ்த்தி இறைவற்குத் தெள்ளேணம் கொட்டுவேமாக” என்று எக்காளமிட்ட பரிதிமாற்கலைஞர் (1870 – 1903) மறைந்து, இன்று நூற்றுப் பதினேழாண்டாகிறது. இத்தனை காலமாகப் பெரும் பெரும் புலமையாளர்களாலும்கூடக் கண்டுபிடிக்கப்பட முடியாத ‘பரிதிமாற்கலைஞரின் மொழிக்கொள்கை’ பற்றிய பேருண்மைகள், வரலாற்றில் இப்போது முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்படுகின்றன. ‘சூரியநாராயண சாஸ்திரி என்ன செய்தார்?’ எனப் பெருவினா கிளப்புகிறார்கள். “சாஸ்திரியார் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று தனித்தமிழ்ப் படுத்திக் கொண்டிருப்பினும், இப்பெயரை ஒரு குறிப்பிட்ட நூலுக்கான புனைபெயராக இன்னும் சொல்லப்போனால் அந்நூலைத் தாம் எழுதியது என்பதைப் பிறர் அறியக்கூடாது என்பதற்கான மறைபெயராகத்தான் பயன்படுத்திக்கொண்டார்” என்கிறார் ஜெ.சுடர்விழி. இத்தகைய ஒரு முடிவை வந்தடைவதற்குப் பரிதியாரின் கையைக் கொண்டே அவர் கண் குத்துவதுபோலப் பின்சொற்களைச் சான்று காட்டுகிறார். “இப்பாசுரங்களில் சில புதுக் கருத்துக்கள் காட்டியிருக்கின்றமை பற்றி அஞ்சுவேம்.எமது மெய்ப்பெயரின் வெளியிடாது பரிதிமாற்கலைஞன் என்னும் புனைவு பெயரின் வெளியிடுவேமாயினேம். அன்றியும் நன்னூலொன்று செய்தானது புகழின்மையான் இகழப்பட்டொழிதலும் புன்னூலொன்று செய்தானது உயர்ச்சியால் சாலவும் புகழப்பட்டிலங்கவும் நாடொறுங் காண்டலின் இந்நூலைப் பற்றிய தமிழ் மக்களின் உண்மை மதிப்பு இனைத்து என்றுணர வேண்டியும் அவ்வாறு செய்ய விரும்பினேம்” எனத் ‘தனிப்பாசுரத்தொகை’ நூலின் முன்னுரையில் பரிதிமாற்கலைஞர் எழுதியுள்ளதைக் கண்டுபிடிக்கிறார். இம்மேற்கோள் வாக்கியத்தின் முற்பகுதியைக் கவனமாக அல்லது கூர்ந்தாராயாமல் தவிர்த்துவிடுகிறார். இந்த ஒரே ஓர் ஆவணம் போதாதா? மறைபெயராகப் புனைபெயரைப் பயன்படுத்திக்கொண்டவர் (புனைபெயர் சூடிய எல்லாருக்கும் இதுவே கதி!) என்ற குற்றச்சாட்டுடன், கிடுகிடுவென அறிவு ஏணியின் உச்சியேறி நின்று, “சூரியநாராயண சாஸ்திரியார் தனித்தமிழ்ப் பற்றின் காரணமாகத் தம் பெயரை மாற்றிக்கொள்ளவில்லை என்பதுடன், தனித்தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும் என்கிற நிலைப்பாட்டையும் அவர் எழுத்துகளில் காண முடிவதில்லை” எனத் தீர்ப்பளித்துவிடுகிறார். இச்சான்றாதாரத்தின் காட்டப்படாத அந்த முன்பகுதியையும் காண்போம். “ஆங்கில நூற் பயிற்சியுடைய தமிழ் மக்கள் தமிழ் மொழியைப் பெரிதும் கவனித்தலின்றிக் கைசோர விடுகின்றனரெனப் பலருங் கூறும் வசைமொழி எம் செவிப்படலும் மனம் பொறேம், புதுமை வழியால் ஏதேனும் செய்ய வேண்டுமென்று புகுந்தேம். அங்ஙனம் புக்குழி, யாம் அவ்வக் காலங்களிற் சிற்சில விடயங்களைப் பற்றிக் கொண்ட கருத்துக்களைச் செய்யுளுருவமாய்ச் செய்து வெளியிடலாமென்று உன்னினேம். அவ்வாறே அவ்வக்காலத்துச் செய்த பாசுரங்களை ஞானபோதினி யென்னுமொரு மாதாந்தத் தமிழ்ப் பத்திரிகையின் வாயிலாய்ச் சிறிது சிறிதாக வெளிப்படுத்தினேம். இது கண்ட சில தமிழபிமானிகளும் எமது நண்பரும் அவை அனைத்தையும் ஓராற்றாற் றொகுத்துத் தனியே ஒரு நூலாக வெளியிட வேண்டுமென்று வேண்டினர். அன்னார் வேண்டுகோட்கிணங்கி வெளியிடப் புகுந்த யாம், இப்பாசுரங்களில் சில புதுக்கருத்துக்கள் காட்டியிருக்கின்றமை பற்றி அஞ்சுவேம்” என்கிறார் பரிதியார்.

    தனிப்பாசுரத்தொகையைப் புனைபெயரான பரிதிமாற்கலைஞர் என்ற தம் தனித்தமிழ்ப் பெயரில் வெளியிடுவதற்குத் தம் தனிப்பாசுரங்கள் பற்றிய தமிழ் மக்களின் உண்மை மதிப்பறிவதைக் காரணமாகச் சூரியநாராயணர் குறிப்பிட்டாலும், இத்தகைய ‘சானட்’ வடிவத் தனிப்பாசுரங்களை அவர் ஏன் எழுதினார் எனக் கேள்வியைச் சிறிது மாற்றிக் கேட்போமாயின், ‘ஆங்கில நூற் பயிற்சியுடைய தமிழர் தமிழ் மொழியைப் பெரிதும் கவனித்தலின்றிக் கைசோரவிடுகின்றனரெனப் பலரும் கூறும் வசைமொழி கேட்டு மனம் பொறாமலேயே, புதுமை வழியால் ஏதேனும் செய்யவேண்டும் என நினைத்துத் (மேல் நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களுக்கிணையாக உயர்தனித்தமிழிலும் புதுப்பாடல் எழுதும் தனிப்பற்றால்) தனிப்பாசுரத்தொகை செய்யப் புகுந்தேம்’ எனப் பரிதியார் பதிலளிப்பதைக் காண்போம். தமிழ்மொழியைக் கவனிப்பாரில்லை என்ற வசையைத் தாங்கிக்கொள்ளவே முடியாது துடிதுடிக்கும் பரிதியாரின் உணர்வுக்கும் அவர் காண நினைக்கும் புதுவழிக்கும் எது காரணம்?  (இப்புதுவழியாகப் பின்னாளில் விளைந்ததே தனித்தமிழ் இயக்கம்) ‘உயர் தனிச் செம்மொழி’ என்று அவர் கருதிய அத்தணியாத் தனித்தமிழ்ப் பற்றே காரணமாகும். தமிழை ‘உயர்தனிச் செம்மொழி’யாகக் கொண்டாடும் ஒருவர், எப்படித் தனித்தமிழ்ப் பற்றில்லாத வெறும் ஒரு புனைபெயராக மட்டும் தம் வடமொழி இயற்பெயரைத் தமிழ்ப் படுத்தி ‘மறைபெயர்’ ஏற்பார் என்பது, உண்மையாகவே எனக்கு விளங்கவில்லை. இவர் கவனமாகத் தவிர்த்த இம்முதற்பகுதியில் பரிதியாரின் தமிழ்ப் பற்றும், இவர் தெளிவுறக் காட்டிய இரண்டாம் பகுதியில் தனித்தமிழில் அவர் புனைந்து கொண்ட பெயருக்கான பயன்பாட்டு விளக்கமும் கூறப்பட்டுள்ளன. இவ்விளக்கத்தின் இறுதி வரிகள், மிகவும் முக்கியமானவை. “இந்நூலைப் பற்றிய தமிழ் மக்களின் உண்மை மதிப்பு இனைத்து என்று உணர வேண்டியும் அவ்வாறு செய்ய விரும்பினேம்” என்கிறார். இங்கு ‘உணர வேண்டியும்’ என்பதில் வரும் உம்முக்கு என்ன பொருள்? ‘இதையும் உணர வேண்டி’ என்பதுதான் இதற்குப் பொருளேயன்றி, ‘இதை மட்டுமே உணர வேண்டி’ என்பது பொருளன்று. அப்படி இருப்பின், ‘இந்நூலைப் பற்றிய தமிழ் மக்களின் உண்மை மதிப்பு இனைத்து என்று உணர வேண்டி அவ்வாறு செய்ய விரும்பினேம்’ என எழுதியிருப்பார். அவ்வாறு எழுதாமல், ‘என்று உணர வேண்டியும்’ என்றே எழுதியிருப்பதால், இதுவன்றிப் புதுக்கருத்துக்களை வெளியிடும் அச்சத்தினாலும் புனைபெயர் சூடியதாகக் கூறும் முதற்பொருளும் அழுத்தம் பெறுகிறதே. (அப்புதுக்கருத்தில் ஒன்றாகத் தனித்தமிழ்ப் பற்றும் இருக்கலாமே!) பெரும் புலமையாளரான பரிதியாரின் சொற்களுக்கு இப்படிப் பொருள் காணாமல், தனிப்பாசுரத் தொகை ஏன் எழுதப்பட்டது என்ற வினாவையே பொருட்படுத்தாமல், புனைபெயருக்குக் கூறப்படும் வெறும் பயன்பாட்டு விளக்கத்தை மட்டுமே கருத்திற்கொண்டால், யார்தான் என்ன செய்ய முடியும்? தனித்தமிழில் எழுதுவதும் பேசுவதும் பரிதியாருக்கு வெறும் ஒரு மொழி விளையாட்டு என்பதாகத்தான் மேலோட்டமாகப் பொருள் புலப்படும்.

    ஆனால், அது பரிதியாருக்கு வெறும் ஒரு மொழி விளையாட்டில்லை. உயிர்த்தீயாகும். இதை இந்நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரை வாசகங்களால் அறியலாம். “இதுகாறும் புலவர் வீடுகளிற் பனையோலைச் சுவடிகளிற் பதுங்கிக் கிடந்த தமிழ் நூல்கள், பல விதத்தாலும் வெளிப்பட்டியலுவதைக் கண்ணுறுமெவரும் தமிழ் மொழி எக்காலத்தினும் அழிவடையாது நிவந்து நிற்கும் என்று கருதுததற்கு ஐயப்பாடில்லை. இவ்வாறாகவுஞ் சிலர் ஆங்கிலமொழி தற்காலத்து மேன்மேலுந் தழைத்தோங்கிப் படர்ந்து நந்தமிழ்மொழி யிருந்த இடமுந் தெரியாதவாறு மறைந்துவிடுமோ என ஐயுறுவாராயினார். அன்னார் நம் தமிழ் மாது ஆங்கில நூல் நலன்களையும் பொலிவுகளையும் மேற்கொண்டு காலத்துக்கு ஏற்ற கோலம் புனைந்து இந்நாட்டின்கண் இனிய நடம் புரிந்து ஏக்கழுத்தத்தோடும் உலவி விளையாடுகின்றாள் என்பதனை உணர்வாராக” என, ‘என்றுமுள தென்தமிழுக்கு’ப் பெரும் பல்லாண்டு பாடுகிறார் பரிதிமாற்கலைஞர். இவ்வாறு சங்க நூற்கடலில் திளைத்துப் பிரகிருதித் தத்துவ உணர்ச்சியிலே விருப்பமுற்றுத் தம்மையூக்குதற்கு ஆங்கில நூற் துணையும் கொண்டு செய்யப்பட்டதே தனிப்பாசுரத் தொகையாகும். இதுவே தம் நூற் பிறப்பிற்குப் பரிதியார் கூறும் காரணமாகும். தனித்தமிழ் (சங்க இலக்கியம்), தெய்வம் சாராத பிரகிருதியாகிய இயற்கைத் தத்துவ உணர்ச்சி (உலகாயுதம்), ஆங்கில நூற்துணை (சமகால உணர்வு) என்ற மூன்றையும் பற்றிக் கூறுபவர் வடமொழியின் பேச்சையேகூட எடுக்காததிலிருந்து அவரது தனித்தமிழ்ப்பற்று எவ்வளவு தன்னெழுச்சியானது என்பதைத் தெளிந்துணரலாம்.

    ‘புனைபெயர்’ பற்றிய கருத்து, முதன்முதலில் யாரால் இவ்வாறு முன்வைக்கப்பட்டது என்பதையும் ஆராயவேண்டும். இது துல்லியமாகத் தெரியவில்லை. ‘மறைமலையடிகள்’ பெயரில் அஞ்சல் தலை வெளியிட்டதைப்போல், ‘பரிதிமாற்கலைஞர்’ என்ற தனித்தமிழ்ப் பெயரில் வெளியிடாது, ‘வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்’ என்ற இயற்பெயரிலேயே அஞ்சல் தலையை மத்திய அரசாங்கம் வெளியிட்டிருப்பதால், வடமொழிப் பற்றாளராகப் பரிதிமாற்கலைஞர் மாறிவிடமாட்டார்! இப்படித்தான் நீங்கள் என் பெயரை வெளியிட வேண்டும் என எரிக்கப்பட்ட அவரா இவர்களிடம் எழுந்து வந்து கேட்டார்? சாகித்திய அகாதெமியின் வெளியீடாக, ‘இந்திய இலக்கியச் சிற்பிகள் : பரிதிமாற்கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார்)’ என்ற நூற்தலைப்பில், பரிதிமாற்கலைஞரின் மகன்வழிப் பேரனான வி.சு.கோவிந்தன் எழுதியுள்ள வி.கோ.சூ.வின் ‘வாழ்க்கை வரலாற்று நூலில்’, (முதற்பதிப்பு:2007), மேலே நான் சுட்டியுள்ளபடி, ‘பரிதிமாற்கலைஞர்’ என்ற தனித்தமிழ்ப் பெயரே முதன்மையாகத் தரப்பட்டு, அடைப்புக்குறிக்குள்தான் ‘வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்’ என்ற இயற்பெயர் தரப்பட்டுள்ளது. எனவே, வி.கோ.சூரியநாராயணரின் சந்ததியினர், அவரைப் பரிதிமாற்கலைஞர் என்ற அழியாப்புகழ் பெற்றுவிட்ட அந்தத் தனித்தமிழ்ப் பெயராலேயே நினைவுகூர விரும்புவது வெளிப்படையாகும். ஆனால், இதே நூலில்தான், பரிதிமாற்கலைஞரின் தனித்தமிழ்ப் பெயர்க்குப் புதியதொரு விசித்திரமான காரணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற அதே பழங்கதைதான்!

    ‘பரிதிமாற்கலைஞன் பெயர்க்காரணம்’ எனத் தலைப்பிட்டுத் தம்முடைய நூலில் வி.சு.கோவிந்தன் மூன்று பத்தி எழுதியுள்ளார். இதில், இரண்டாம் பத்தியில் காணப்படும் பரிதிமாற்கலைஞரின் கருத்து, வி.சு.கோவிந்தன் மேற்கோள் காட்டிய அம்முறைப்படியே, இடைத்தொடக்கமும் முடிவுமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வந்த கட்டுரையிலும் பதிவாகியுள்ளது. முதலில் இதை வி.சு.கோவிந்தனே முன்வைத்தார் என்பதை விடவும், பரிதியாரோடு தொடர்பிலிருந்த மூத்த தலைமுறையினரிடமிருந்தே இக்கருத்தை அவர் பெற்றிருக்கவும் கூடும். மேலும், இதன் பின்வரிகளில், “சாஸ்திரியார் வடமொழியின் மீதிருந்த காழ்ப்பினால் தமது பெயரை மாற்றிக்கொண்டார் என்று சிலர் கருதுவர்” என்றும் வி.சு.கோவிந்தன் எழுதியுள்ளார். இந்தச் சிலர் யாராம்? மறைமலையடிகள், திரு.வி.க., பாரதிதாசன், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரன் முதலியோரே அந்தச் சிலர் என்று நான் கருதுகிறேன். என்ன சொல்ல வருகிறேன் என்றால், சூரிய நாராயண சாஸ்திரி என்ற வடமொழிப்பெயரைத் தனித்தமிழில் பரிதிமாற்கலைஞன் என்றிவர் மாற்றிக்கொண்ட அதிர்ச்சியைப் பரிதியாரின் சமகாலத்திலும் அதன் பின்னும் வந்த பார்ப்பனர்கள் பலரால் சிறிதும் தாங்கிக்கொள்ளவியலவில்லை. அவரின் வழித்தடத்தில் தப்பித் தவறித் தமிழ் உணர்வேறிய ஓரிரு பார்ப்பனர்கூட அவ்வாறு தம் பெயரைத் தமிழ்ப்படுத்திக்கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே, இந்தத் தனித்தமிழ்ப் பெயர் மாற்றத்திற்குப் பரிதியாரின் முன்னுரையைப் பயன்படுத்திக்கொண்டு இவ்வெதிர்வாதம் திறமாக முன்வைக்கப்பட்டது என்றும் நாம் யூகிக்கலாம். பரிதியாரைப் பின்பற்றி அதன்பின் ஒரே ஒரு பார்ப்பனர்கூடத் தனித்தமிழ்வழியில் நடக்க முன்வராததிலிருந்தே, இந்த எனது யூகத்தின் வலிமையைத் தெளிந்துகொள்ளலாம். (இங்குத் தென்கலை வைணவப் பார்ப்பனர் பலர் இயற்பெயராகவே தனித்தமிழ்ப் பெயர்களைச் சூடிக்கொள்வது தனிக்கதை. அதற்குப் பன்னிரு ஆழ்வார்களும் உடையவரும் (இராமானுஜர்) மணவாள மாமுனிகள் போன்ற பெரியோருமே காரணம்). இவ்வகையில், தம் தனித்தமிழ் ஒவ்வாமையைத் தணித்துக்கொள்வதற்காகப் பார்ப்பனர் சிலர் படுபாடுபட்டுக் கண்டுபிடித்ததே ஊதியூதிப் பெரிதாக்கப்படும் இந்தப் புனைபெயர் விவகாரம். “மொழி ஆராய்ச்சியை விஞ்ஞான முறையில் செய்ய விரும்பி, அதனை ஓரளவு செய்யவும் செய்த சாஸ்திரியாருக்கு, மொழிகள் யாவும் கருத்து வாயில்களே. ஆதலால் அவற்றிடையே ஏற்றதாழ்வு காண வேண்டா என்பது நன்கு தெரியும்” எனச் சமரசங்காணும் ந.சுப்பிரமணியன் (பரிதிமாற்கலைஞரும் நாடகத்தமிழும்) போல்வாரைப்  பின்பற்றிப் பரிதியாரின் தமிழ்ச் சார்பைப் பிராமண மனநிலையில் நின்று சமரசப்படுத்தி விடுவதற்குப் பாடுபடுகிறார் வி.சு.கோவிந்தன்.

  ‘மொழி வேறுபாடு பாராதவர்’ எனச் சமரசப்படுத்தித் தம் பாராட்டாக வி.சு.கோவிந்தன் சொல்வதை அப்படியே கடன்வாங்கிக்கொண்டு, ஆனால், அதைத் தம் பார்வையில் கடும் விமர்சனமாக மாற்றிப் பலர் இப்போது களமாடிக் கொண்டிருக்கின்றனர்.  இதன் முதல் பத்தியில் இன்னொரு சுவையான குறிப்பும் காணப்படுகிறது. “இப்பாசுரங்களில் பரிதிமாற் கலைஞன், கருர் என்று புனைபெயரையும் ஊரையும் சேர்த்துக் குறித்தார் சாஸ்திரியார். சென்னையில் அக்காலத்தில் இவர் வாழ்ந்த பகுதி ‘Black Town’ என வழங்கப்பட்டது. எனவே, ஊர்ப் பெயரைக் ‘கரூர்’ என்று குறிப்பிட்டார்” என்பார் வி.சு.கோவிந்தன். இந்த முதற்பதிப்பைப் படித்தவர்கள், (அன்றைய திருச்சி மாவட்டம்) கரூருக்கே சென்று பரிதிமாற்கலைஞரைத் தேட முனைந்ததாகவும் ஒரு குறிப்புண்டு. (பரிதிமாற்கலைஞர் நூற்றாண்டு (1970) மலர்). ‘கறுப்பர் நகரம்’ என வெள்ளையர் நோக்கிலிருந்து மொழி பெயர்க்கப்படும் ‘Black Town’ஐ, ‘கரூர்’ எனப் பரிதிமாற்கலைஞர் ஒரு மண் மணத்துடன் மொழிபெயர்த்துள்ளார்.”புனைபெயரில் வெளியிட்ட இந்தப் பாசுரங்கள் தொகுக்கப்பட்டு, ‘தனிப்பாசுரத்தொகை’ என்னும் நூலாக 1901இல் வெளிவந்தது” என்கிறார் ஜெ.சுடர்விழி.  ஆனால், உண்மையில் இது இரண்டாம்பதிப்பே. (‘தனிப்பாசுரத் தொகை’யின் முதற்பதிப்பு 1899-லேயே தனிநூலாக வெளியாகிவிட்டதாகவும், பரிதிமாற்கலைஞர் என்னும் வி.கோ. சூரியநாராயணரின் புனைபெயரிலே அப்போது அது வெளிவந்ததாகவும் வி.சி.கோவிந்தன் குறித்துள்ளார். (06.12.1899இல் வெளிவந்ததாகக் கூறப்படும் முதற்பதிப்பை நான் இன்னும் பார்க்கவில்லை. இதை யாரும் கண்ணால் கண்டுள்ளார்களா, இத்தனிப்பாசுரங்கள் வெளி வந்த ‘ஞானபோதினி’ இதழ்களையாவது யாரேனும் முழுதாகப் பார்வையிட்டுள்ளார்களா என்பதும் தெரியவில்லை. இப்படி மூலச் சான்றாதாரங்களைப் பார்வையிடாமலேதான், குத்துமதிப்பாய்க் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறோம். இணையம்வழி இன்று யாரும் இரண்டாம் பதிப்பை எளிதாகப் பார்க்கலாம்). ஜி.யூ.போப், சி.வை.தா. (இரண்டாம் பதிப்புக்குச் சி.வை.தா. சாற்றுக்கவி தந்துள்ளார்)உள்ளிட்டோரின் அறிந்தேற்பாலும், இவை வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி எழுதியவை என்பதை ஜி.யூ.போப் உலகறிய 1900இல் வெளிப்படுத்திவிட்டதாலும், அதன்பின் ஓராண்டிலேயே முதற்பதிப்பு விரைவாக விற்றுத் தீர்ந்து மறுபதிப்பு (1901) வெளியிட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். இந்த இரண்டாம் பதிப்பில்,இதற்கும் தம் முதற்பதிப்புக்குமுள்ள வேறுபாட்டை, “ஆங்கிலநாட்டிற் கோதீர்த்த புரிச் சர்வகலாசாலையில் தமிழ்ப்புலமை நடாத்தும் கனம் பொருந்திய ஜி.யூ.போப்பையர் அவர்கள், இதனைப் பற்றி வியந்து பேசி, இந்நூற்பாசுரங்களனைத்தையும் ஓராற்றான் ஆங்கில பாஷையில் மொழிபெயர்த்து அனுப்பினார்கள். அவர்தங் கருணைத் திறத்திற்கு யாஞ் செய்யக் கடவ கைம்மாறென்னே! இஃதுணர்ந்த நண்பர் யாவரும் இந்நூலை அவ்வாங்கில மொழிபெயர்ப்புடனுஞ் சேர்த்து அச்சிடுதல் வேண்டுமென்றனர். அவ்வாறே அச்சிடப்புகுந்த யாம், இதன்கண்ணுள்ள பாசுரங்களனைத்தையும் ஒழுங்குபடுத்தி முறைப் பட வைத்தனம். அங்ஙனம் வைப்புழிப் பின்னர்த் தோன்றிய கருத்துக்களுக்கேற்பச் சிற்சில விடங்களில் மாற்றியும் மொழிபெயர்ப்பாசிரியர் கூற்றுக்கிணங்கச் சிலவற்றையியைத்து மிருக்கின்றோம். இவையே முதற்பதிப்பிற்கும் இரண்டாம் பதிப்பிற்குமுள்ள வேறுபாடு” என்கிறார் பரிதிமாற்கலைஞர்.

       இங்கே மொழிபெயர்ப்பாசிரியர் ஜி.யூ.போப்பின் கருத்துக்கிணங்கிப் பரிதிமாற்கலைஞர் இயைத்த அச்சிலவற்றுள் ஒன்றாகவே, ‘வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி’ என்ற அவரின் இயற்பெயரைச் சேர்த்துத் தனிப்பாசுரத்தொகையின் இரண்டாம்பதிப்பினைப் பரிதியார் வெளியிட்டதையும் கருதவேண்டும். இதற்குப் பின்னணிக் காரணம் ஒன்றும் இருக்கிறது. 1899இல், ‘பரிதிமாற்கலைஞர்’ என்ற தமிழ்ப் புனைபெயரில் வெளியிடப்பட்ட தனிப்பாசுரத் தொகையைப் படித்து மகிழ்ந்த டாக்டர் ஜி.யூ.போப், 1900இல் வெளிவந்த தம் ‘திருவாசகம்’ ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு எழுதிய ஆங்கில முன்னுரையில், நவீன அறிகுறிகள் காட்டும் சிறந்த இரு நூல்களாக, மனோன்மணியத்தையும் தனிப்பாசுரத்தொகையையும் புகழ்ந்துள்ளார். இவற்றில், ‘தனிப்பாசுரத்தொகை – முதற்பகுதி’ என்ற ‘ஆக்கியோன் பெயர் குறிப்பிடாத நூல்’ (1899), ஒரு புதிய மரபின் முன்னோடி என்று எழுதியுள்ளதுடன், அதன் அடிக்குறிப்பில், பிற்கிடைத்த தகவலின்படி, ‘ஆக்கியோன் பெயர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரியார்’ என்றும் இணைத்துள்ளார். இவ்வாறு தாம் புனைந்துகொண்ட தனித்தமிழ்ப் பெயரை ஜி.யூ.போப் உலகறியப் புலப்படுத்திவிட்டதாலும் அவரின் ஆங்கிலப்பெயர்ப்பைத் தம் நூலில் சேர்த்திருப்பதாலும், வேறுவழியின்றித் தம் இரண்டாம்பதிப்பை ‘வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி’ என்ற  இயற்பெயரிலேயே பரிதியார் வெளியிட வேண்டியதாயிற்று. “இந்தத் தனிப்பாசுரங்களை மு.சி.பூரணலிங்கம்பிள்ளை ஆசிரியராக இருந்து நடத்திவந்த    ‘ஞானபோதினி’ மாத இதழில் 1897 முதல் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்” என்பார், இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 1900 ஏப்ரல் மாதம் முதல் தாம் இறக்கும் 1903 நவம்பர் மாதம் வரை, ‘ஞானபோதினி’ மாத இதழுக்குக் கூட்டாசிரியராக, அதாவது நிர்வாகப் பத்திராதிபராகப் பரிதிமாற்கலைஞர் பொறுப்பேற்றிருந்தார். இவ்வகையில் ஓர் இதழாசிரியராகவும் பரிதியார் தமிழ்ப் பணியாற்றியுள்ளார் எனலாம்.

    இவருக்குப் பின்வந்த தனித்தமிழியக்கத்தின் முதன்மையான கொள்கை யாது? மனிதர் பெயர், ஊர்ப் பெயர், தெருப் பெயர், கடைப் பெயர், மாநிலப் பெயர் என எல்லாப் பெயரும் தனித்தமிழ்ப் பெயராய் இருக்கவேண்டும் என்பதுதானே? தமிழ்நாட்டில் தமிழ்த் தெருவில் தமிழ்ப் பெயர்தான் இல்லை என்றுதானே பாரதிதாசனும் வருந்திப் பாடினார்? இத்தனித் தமிழ்ப் பெயர் மாற்றத்திற்கு ஓர் உந்துதலாகப் பரிதியார் இருந்தார் என்பதே என் வாதம். ‘சூரிய நாராயண சாஸ்திரி’ என்ற இயற்பெயரைச் சொல்லுக்குச் சொல் தமிழில் பெயர்த்து, ‘பரிதி மாற் கலைஞர்’ எனத் தனித்தமிழ்ப் பெயர் மாற்றத்தைப் பரிதியார் சாதித்த பின்பே, அதே நோக்கிலும் போக்கிலும், ‘சுவாமி வேதாசலம்’ என்ற தம் இயற்பெயரை ‘மறை மலை அடிகள்’ என்பதாகத் தமிழ்மலை மறைமலையாரும் மாற்றிக்கொள்கிறார். இந்த இருவரைத் தவிர, இத்தகைய ஒரு ‘சொல்லுக்குச் சொல்’ பெயர் மாற்றத்திற்குச் சான்று காட்ட, அன்றைய காலத்தில் வேறு ஒருவரும் இல்லை. அதற்குப் பிறகு இன்று வரை நடந்துள்ள இலட்சக்கணக்கான தனித்தமிழ்ப் பெயர் மாற்றங்களுக்கு முதல் உந்துதல் தந்தது பரிதிமாற்கலைஞரின் பெயர் மாற்றம் என்பதால்தான், வரலாற்றில் பரிதியார் தனிச்சிறப்புக்குரியவராகிறார். தனித்தமிழில் பெயரை மாற்றிக்கொள்வதே தனித்தமிழ் இயக்கத்தின் முதற்படி என்ற எளிய உண்மையை ஏற்றுக்கொள்ளும்போதே, பரிதியாரின்  ‘அணில்’ பங்களிப்பைக் காணமுடியும். இந்த உணர்வுந்தலின் விழிப்பாகவே, பின்வந்த பெரும் அறிவியக்கமான மறைமலையடிகளின் வரலாற்றுப் புகழ் பூத்த பெயர் மாற்றம் நிகழ்ந்து, அது ஒரு மாபெரும் அலையையே ஏற்படுத்தியது. இத்தனித்தமிழியக்கத்தின் தனிப்பெரும் தமிழ்மலையாகத் தந்தையாக மறைமலையடிகள் ஓங்கி நின்றார்.

    இங்குக் கவனிக்க வேண்டிய வேறொன்றும் உண்டு. அதுவும் இந்தப் பேசுபொருளுக்குள் வருவதுதான். ‘சொ.விருத்தாசலம்’ எழுத்தாளனானபோது ‘புதுமைப்பித்தன்’ என அவன் பெயர் சூட்டிக்கொண்டதற்கும், பரிதியாரும் மறைமலையாரும் தத்தம் பெயர்களைத் தமிழ்ப்படுத்திக் கொண்டதற்குமிடையில் ஒரு முக்கிய வேறுபாடுண்டு. புதுமைப்பித்தன் என்பது, அவரின் நவீன மனநிலையின் உணர்வாகத் தோன்றிய பெயராகும். (இதன் எதிர் நிலையில், பழந்தமிழ்ப் பெருமிதத்தின் நிகழ்காலத் தனித்தமிழ்த் தொடர்ச்சியாகப் புனைபெயரை இன மானத்தின் அடையாளமாகச் சூடிக்கொண்டவர் பெருஞ்சித்திரன்). பெற்றோர் சூட்டிய பெயரை வெறும் தமிழ்ப் பெயராக மாற்றுவதன்று இது. (‘மணிக்கொடி’ இதழில் வ.ராமசாமி, ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, ந.சிதம்பர சுப்பிரமணியன், எம்.வி.வெங்கட்ராம், ஆர்.சண்முகசுந்தரம், லா.ச.ராமாமிர்தம், பெ.கோ. சுந்தரராஜன், சி.சு.செல்லப்பா, பி.எம்.கண்ணன், கி.ராமச்சந்திரன், க.நா.சுப்பிரமணியன் எனப் பிறர் பலரும் தம்முடைய இயற்பெயர்களிலேயேதான் எழுதினார்கள். மௌனிக்குப் புனைபெயர் சூட்டியவர் பி.எஸ்.ராமையாதான்!). எனவே, புதுமைப்பித்தனின் அப்பெயர் மாற்றம், (அவருக்கு முந்தைய ‘கல்கி’ முதலியோரின் புனைபெயருக்குப் பின்னிருக்கும் பழைமையுணர்வைக் கணக்கிற்கொண்டால்), அவருக்குப் பின்வந்த அனைத்து நவீனப் புனைகதை எழுத்தாளர்களின் புனைபெயர் மாற்றத்திற்கும் வித்திட்டதாகும். இப்படிப்பட்ட சிறந்த நவீனத்துவரான ‘புதுமைப்பித்தன்’, கவிதைகள் எழுதும்போது மட்டும், ‘வேலூர் கந்தசாமிக் கவிராயர்’ எனப் புனைபெயர் சூடிக்கொண்டார். இறக்கும்வரை இந்த இரண்டு பெயர்களிலுமே அவர் இயங்கினார்.

     இன்னொரு எடுத்துக்காட்டையும் பார்ப்போம். ‘சி.மணி’ என்ற பெயரில் இயங்கியவரை, அவரின் கவிதைகளைக் க.நா.சு. கண்டுகொள்ளவில்லை.ஆனால்,அவரே ‘வே.மாலி’ என்ற ஒரு புதிய புனைபெயரில் எழுதிய கவிதைகளைத் தனிப்பேச்சுகளில் பெரிதாகக் க.நா.சு. பாராட்டியதாகச் செய்தியுண்டு. (என்னே! பரிதியாரின் தீர்க்க தரிசனம்!). பின் ‘சி.மணி’யின் எல்லாக் கவிதைகளும் தொகுக்கப்பட்டு, ‘வரும் போகும்’ என்ற தலைப்பில் தனிநூலாகி வெளிவந்தபின், ‘வே.மாலி’ என்ற அந்த இரண்டாம் புனைபெயர் பயன்படுத்தப்படவே இல்லை. ‘சி.மணி’ என்ற முதல் புனைபெயரிலேயேதான் அத்தொகுப்பும் வெளிவந்தது. ‘வே.மாலி’தான் ‘சி.மணி’ என்பது தெரிந்துவிட்டபின், ஏன் ‘வே.மாலி’யின் பெயரைப் பயன் படுத்தவேண்டும் என்பதே அதற்குக் காரணம். அதற்காகச் ‘சி.மணி’, ‘வே.மாலி’ என்ற தம் புனைபெயரை நிராகரித்துவிட்டதாகக் கூறிவிடமுடியாது. இயற்பெயரைவிடுத்துப் பிறிது ஒரு பெயர் சூடிக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமும், அதன் பின்னிருந்த உணர்வுமே முக்கியம். எனவே, ஒரே நேரத்தில் இரு பெயர்களில் எழுதுவது, பின் ஒரு பெயரையே பயன்படுத்துவது, பழைய பெயரையே மீண்டும் சூடுவது,இரண்டுக்கும் மேற்பட்ட பெயரில் எழுதுவது, குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒரு பெயரைப் புனைந்துவிட்டுப் பின் வேறொரு நோக்கில் புதுப்பெயர் சூடிக்கொள்வது அல்லது இயற்பெயரையே பயன்படுத்துவது என்ற இவையெல்லாம் அந்தந்தப் படைப்பாளிகளின் தேர்வும் சுதந்திரமுமாகும். ஒரே நேரத்தில் இரு பெயரிலும் இயங்கியதால், எப்படிப் ‘புதுமைப்பித்தன்’ பெயருக்குப் பின்னாலிருந்த ஒரு ‘நவீன ஓர்மை’ மழுங்கிவிட்டதாகக் கூறிவிட முடியாதோ, அப்படித்தான் ‘வே.மாலி’ ‘சி.மணி’யானாலும்,அப்பெயரினுள்ளும் ‘வே.மாலி’ என்பதும்  தொனிக்கத்தானே செய்யும்? எனவேதான், ‘பரிதிமாற்கலைஞர்’ என்ற பெயருடன் முதலில் (1899) வெளிவந்த அதே தனிப்பாசுரத் தொகை, ‘வீ.கோ.சூரியநாராயண சாஸ்திரி’ என்ற அவர் இயற்பெயரில் (1901) இரண்டாம்பதிப்பாக வெளிவந்தாலும்கூடப் ‘பரிதிமாற்கலைஞர்’ என்ற தனித்தமிழ்ப் புனை பெயர், அதன் காலத்திற்கு முந்திய புதுமையால் வரலாற்றில் நின்று நிலைத்துவிட்டது.       ‘பரிதிமாற்கலைஞர்’ பற்றிய என் கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்தளிக்கிறேன்.

 1. அதிக ஊதியத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பை மறுத்துத் தமிழ்ப் பேராசிரியராகக் குறைந்த ஊதியத்திற்குப்பணியாற்றும் வாய்ப்பை விருப்பத்துடன் சூரிய நாராயண சாஸ்திரி ஏற்றுக்கொண்டதற்குக் காரணம், அவரது ஆழ்ந்த தமிழ்ப் பற்றாகும். இந்தத் தனித்தமிழ்ப்பற்றே அவரைத் தனிப்பாசுரத்தொகையை எழுத வைத்தது. இதுவே அவரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழில் ஒரு புனைபெயர் ஏற்கவும் தூண்டியது. 1897இல் இப்பெயரை வி.கோ.சூ. சூடியதற்குப் பத்தொன்பது ஆண்டுக்குப் பின்தான் சுவாமி வேதாசலம் மறைமலையடிகளானார். “தனித்தமிழ் மீது கொண்ட பற்றுக் காரணமாகத் தம்முடைய வடமொழிப் பெயர்களைத் தமிழில் மாற்றிக்கொண்ட முன்னவர்களாக மறைமலையடிகளும் பரிதிமாற்கலைஞரும்அறியப்படுகின்றனர்” எனக் காலவழுவாகக் கட்டுரையாளர் எழுதுகிறார். 1897இல் பெயரை மாற்றிக்கொண்ட பரிதிமாற்கலைஞரைப் பின்னாலும், அத்தூண்டுதலை ஆழ்ந்து உள்வாங்கியவராய் 1916இல் தம் பெயரை மாற்றிக் கொண்ட மறைமலையடிகளை முன்னாலும் வைத்துக் கட்டுரையாளர் சுட்டுவது அறமா?

 1. பேராளுமைகளை மதிப்பிடும்போது அவர்களுடைய ஒட்டுமொத்தப் பணிகளையும் கணக்கிலெடுத்தே மதிப்பிடவேண்டும். சமஸ்கிருதத்திற்குக் காவடி தூக்கிய அக்காலப் பிராமணர் பலருக்குமிடையில் நின்று, உயர்தனிச் செம்மொழியாகத் தமிழை நிறுவிய முன்னோடி ஒருவரைப் பற்றித் துல்லியமாக மதிப்பிடும் இன்றைய தேவைக்காகக் கடந்த கால வரலாற்றை விருப்பம்போல் நாம் வளைத்துக்கொண்டிருக்கக்கூடாது. ஒருவர் தம் பெயரைத் தனித்தமிழில் மாற்றிக்கொள்ளலாம் என்ற ஒரு புதிய மரபிற்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர் என்பதே, வரலாற்றில் அவரது தனிப்பெருமையாகும். இம்முன்நடந்த உந்துதலிலிருந்து தொடங்கியே, அதற்குமுன் தமிழுலகில் வேறு எப்போதுமில்லாத ஒரு மாபெரும் தமிழ்மலையாக அடிகளார் ஓங்கி நின்றார் என்பதுதான், தனித்தமிழியக்க வரலாற்றின் உண்மையான பெருமிதம். (பரிதியார் விதை; மறைமலையார் மாமலை) “பிற மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழ்ச் சொற்களை மட்டுமே கையாளவேண்டும் என்று 1916இல் ஏற்பட்ட உந்துதலால், ‘சுவாமி வேதாசலம்’ என்ற வடமொழிப் பெயர் மறை மலையடிகள் என்று மாறியது. அத்துடன் அவர் நடத்தி வந்த ‘ஞானசாகரம்’ என்ற இதழும் ‘அறிவுக்கடல்’ எனப் பெயர் மாறியது” என்று மறை.தி.தாயுமானவன் குறிப்பிட்டுள்ளார். அப்படியானால், 1897ஆம் ஆண்டே ‘பரிதிமாற்கலைஞர்’ எனத் தமது பெயரைச் சூரிய நாராயண சாஸ்திரி மாற்றிக்கொண்டிருப்பதை நன்றாக அறிந்திருந்தும், 1916வரை தம் பெயரை மாற்றிக்கொள்ளாமல், 19 ஆண்டுகள் ‘சுவாமி வேதாசலம்’ என்ற பெயரிலேயே அடிகளார் செயல்பட்டதற்குத் தனித்தமிழ்க் கொள்கையில் அவருக்குப் போதிய விழிப்பு இல்லாதிருந்ததே காரணம் என்று வாதிட முடியுமா? அது எவ்வளவு அபத்தமான ஒரு வாதமோ, அதேதான் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞராக மாற்றிக்கொண்டமைக்குப் புனைபெயர் சூடுவதன்றித் தமிழ்ப் பற்றுக் காரணமில்லை என மறுப்பதுமாகும்.

 1. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகப் புனைபெயரில் தாம் எழுதுவதாகத் தனிப்பாசுரத் தொகைக்குப் பரிதிமாற்கலைஞர் எழுதியுள்ள முன்னுரைக் குறிப்பைக் கொண்டு, தமிழ்ப் பெயர் சூடிக்கொள்ளும் எண்ணமே அவருக்கு இல்லை என்று யாரும் கூறிவிட முடியாது. புனைபெயர் சூடிக்கொள்ளும் ஒருவர், ஏன் மீண்டும் ஒரு வடமொழிப் பெயரையே சூடிக் கொள்ளக்கூடாது? புனைபெயர் சூடுவது மட்டுமே அவருக்கு நோக்கம் என்றால், ‘சூரிய நாராயண சாஸ்திரி’ என்பதைப் பரிதிமாற்கலைஞர் என்று அப்படியே தமிழில் மாற்றிக் கொள்ளும் தேவை, அங்கு ஏன் எழுகிறது? ஆழ்ந்த தமிழ்ப் பற்றின் விளைவாகவே, தம் புனைபெயரைத் தனித்தமிழ்ப்பெயராகச் சூரியநாராயண சாஸ்திரியார் சூடிக்கொண்டார் என்பதுதான் விடை. இங்கு வெறும் தர்க்க ஆராய்ச்சி மட்டும் போதாது. உணர்வுநிலையில் பரிதியார் யாராயிருந்தார் என்பதைக் காண்பதும் முக்கியம். வடமொழியை விடவும் உயர் தனித்தமிழுக்குப் பரிதிமாற்கலைஞர் சார்பாக இருந்தார் என்ற பச்சை உண்மையைப் புனைபெயர் விளக்கம்வழித்தகர்த்துவிடமுடியாது.

 1. “என் பிணத்தோடு புறநானூற்றையும் சேர்த்துவைத்துப் புதைத்துவிடுங்கள்” எனக் கூறிய தமிழறிஞர் சற்குணருக்குப் பலகாலம் முன்பே, இப்படிப் பரிதிமாற்கலைஞரும் கூறியுள்ளதைப் பின்வரும் வ.சு.சண்முகம் பிள்ளையின் கூற்றால் அறிகிறோம். “His love of Tamil was so great that when he saw the end was inevitable, he said that his philosophy books (he was studying for M.A.) should be sold and his Tamil books should be burnt with him! He had such burning love for Tamil. His popularity was so great that the college and the school were closed in honour of him on the day of his death and the funeral procession consisted of a thick stream of students and admirers thronging the Lingu Chetty Street as far as eye could see” எனத் தமிழ் மணந்து வெந்த சாம்பலுக்குச் சாட்சியாகிறார் வ.சு.சண்முகம் பிள்ளை. புறநானூற்றைத் தம்மோடு வைத்துச் சற்குணர் புதைக்கச் சொன்னார்; தம்மோடு தாம் பயன்படுத்திய தமிழ் நூல்கள் அனைத்தையுமே, ‘செங்கண் மால்தான் கொண்டுபோனான்’ என, உடன்கொண்டுபோகப் பரிதிமாற்கலைஞன் விரும்பி விட்டான்! சாகும்போது மட்டுமில்லை; செத்தபின்னும் இறப்பின்றித் தமிழோடிருப்பான் பரிதி! இவன் 1903இல் இறந்தபோது, ‘உடற்பேணாது, அயராது தமிழுக்காகத் தொண்டு செய்தே செத்தான்’ என, அன்று ‘ஆங்கில ஹிண்டு’ (04.11.1903) செய்தி வெளியிட்டது. ஓராசிரியரின் சாவுக்குச் சென்னைக் கிறித்தவக் கல்லூரி வரலாற்றில் அப்போதுதான் முதல்முறையாகப் பள்ளியும் கல்லூரியும் மூடப்பட்டன என்ற செவிப் புகழ்மொழியும் உண்டு. ஆனால், இன்று வரலாறு மீண்டும் முழுச்சுற்றுக்குத் திரும்பிவந்துவிட்டது. (மில்லரும் பரிதியாரும் சிரித்துக்கொண்டிருக்கக்கூடும்!). ஆறுமுக நாவலருக்குப் பரிதியார், ‘வசனநடை கைவந்த வல்லாளர்’ எனப் பட்டம் தந்தார். நூல் முழுவதிலும் வடமொழிச் சொற்களை விரவித் ‘தமிழ் மொழியின் வரலாறு’ எழுதப்பட்டுள்ளதாகப் பரிதியாருக்குப் புதுவசை இன்று சேர்ந்துள்ளது. செத்தமொழியாகச் சமஸ்கிருதத்தைக் கண்ட பரிதியார், தமிழில் வடசொற்களை விரவியவராக இன்று விமர்சிக்கப்படுகிறார். பரிதியார், வடமொழிக்கா வரலாறு எழுதினார்? தமிழ் மொழியின் வரலாறு கூறும் முதல் வசன நூலே இதுதானே! ‘தேசாபிமானமும் பாஷாபிமானமும் மதாபிமானமும்’ எனப் பலரும் எழுதிய காலத்தில், பரிதியாரின் எழுத்துகளில் மட்டும் வடசொற்கள் எப்படி விரவாதிருக்க முடியும்?

 1. வடமொழியாளரைப் பரிதிமாற்கலைஞர் எவ்வாறு மதிப்பிட்டார்? “தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழிபெயர்த்துத்தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாம் அறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழுக்கு அவை வந்தன போலவும் காட்டினர்” என்றும், “தமிழரிடத்தில்லாதிருந்த அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நால்வகைச் சாதிமுறையை மெல்ல மெல்ல நாட்டிவிட்டனர்” என்றும் எதிர்த்துரைத்தார். (தமிழ் மொழியின் வரலாறு). புராணம் பற்றிய அவரின் பார்வை என்ன? “கடவுளைப் பற்றித் தமக்குத் தோன்றியவாறு லீலை செய்ததாகச் சிறுபிள்ளைத்தனமாக எழுதப் பட்டிருக்கும் ஒருநூலாம்” (தமிழ் வியாசங்கள்) என்றார். மணிப்பிரவாள மொழிநடையைப் பரிதியார் எவ்வாறு பார்த்தார்? “தமிழும் சமஸ்கிருதமும் கலந்த பாஷை கேள்விக்கின்பம் பயக்கும் என்ற போலி எண்ணமே இத்தகைய ஆபாச பாஷையொன்று வகுக்குமாறு தூண்டிற்று” (தமிழ் மொழியின் வரலாறு) என்றார். வடமொழியாளரின் சூழ்ச்சி, புராண மூடத்தனம், மணிப்பிரவாள ஆபாசம் என்னும் இவை தனித்தமிழியக்கக் கருத்துகளாகப் பிற்காலத்தில் ஒலிக்கவில்லையா? இன்றுவரை திராவிட இயக்கங்களின் கருத்தும் இதுதானே? இவற்றை இன்று யார் வேண்டுமானாலும் எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் அன்று, அதாவது நூற்றுப் பதினேழாண்டுக்கு முன் (117) சொல்வது, எத்துணைக் கடினம்! பரிதிமாற்கலைஞரை ஓர் உந்துதலாக நான் சொல்வது, இப்பொருளில்தான். அவருக்கு உரிமையில்லாத எப்பெருமையையும் அவரின் தலையில் சூட்டுவதற்கில்லை; அதைப் போலவே அவருக்கு உரிமையுடையவற்றைப் பறிப்பதற்குமில்லை.

 1. ‘உயர்மொழி, தனிமொழி, செம்மொழி’ என்ற மும்மைப் பொருளில், ‘உயர்தனிச் செம்மொழி’ (Classical language) என்ற புதிய சொல்லாட்சியைப் பரிதியார் முன்வைத்தார். பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவதில் தனிப்பேரார்வம் காட்டினார். Parliament  என்பதற்குப் ‘பாராளுமன்றம்’ என்றார். Illusion என்பதைப் ‘பொய்த்தோற்றம்’ என்றவர், நுட்பமாக Hallucination என்பதை ‘வெளித்தோற்றம்’ என்றார்.  Tragedy என்பதைத் தீயிறுதி என்றார். Brush என்பதற்குப் புறநானூற்றின் 257ஆம் பாடலில் வரும் ‘குச்சிற்புல்’லைப் பரிந்துரைத்தார். ‘அங்க ஜீவ சாஸ்திர’த்தை, ‘உடல் நூல்’ என்றார். Aesthetic (இயற்கை வனப்பு), Biology (உயிர் நூல்), Biologist (உயிர் நூலோர்), Monotony (ஏக ரீதி), Ethics (ஒழுக்க நூல்), Political economy (செல்வ நூல்), Fixed idea (நிலைத்த எண்ணம்), Anthropology (மனித நூல்), Ostrich (தீக்கோழி), Fine arts   (நற்கலை), Instinct (இயற்கை அறிவு), Order of nature (இயற்கை ஒழுங்கு), Level crossing (நடுக்கபாடம்), Snacks (சிற்றுணா), Football (உதைபந்தாட்டம்), Tennis (சல்லடைப் பந்தாட்டம்), Cricket (மரச்சட்டப் பந்தாட்டம்) எனப் பல்துறைச் சொற்களையும் மொழிபெயர்த்தார். மாக்ஸ்முல்லரை ‘மோட்ச மூல பட்டாச்சாரியார்’ என ஒலிபெயர்ப்புச் செய்தார். மகாராணி விக்டோரியாவை ‘விஜயை’ என்றார். ஷேக்ஸ்பியரை ‘ஜகப்ரியர்’ என்றவர் முதலில் எழுதினார். அதுவே பின்னர் ‘செகப்ரியர்’ என்றாயிற்று. டென்னிசனைத் ‘தேனிசையன்’ என்றார். இப்படியேதான், சூரியநாராயண சாஸ்திரியையும் ‘பரிதிமாற் கலைஞர்’ என்றார். இந்த அடிப்படையையும், 1890களிலேயே கலைச்சொல்லாக்கத்தில் ஈடுபட்ட பரிதியாரின் தனித்தமிழ்ப் பற்றுள்ளத்தையும், அவரே சொன்னதுபோல் பன்னூற் பயிற்சியுடனான சரித்திரக் கண்ணோடு நோக்காமல் போனால், இப்படிப் புனைபெயரும் மறைபெயருமாகப் பேசிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! (ஆதாரம் : பரிதிமாற்கலைஞர் நூற்றாண்டுவிழா(1970)மலர்).பரிதிமாற்கலைஞரின் பல நூறு கலைச் சொல்லாக்கங்களில் (தமிழில் நிலவும் அனைத்துவகைக் கலைச் சொல்லாக்கங்களுக்கும் அவரிடம் உரிய ‘மாதிரிகள்’ உண்டு!) மிகக்குறிப்பிடத்தக்க சிலவற்றையே இங்குச் சுட்டிக்காட்டியுள்ளேன். Self preservation என்பதைத் தனித்தமிழில் ’தற்காப்பு’ என்று முதலில் பரிதிமாற்கலைஞரே வழங்கினார். Survival of the fittest என்பதைத் ‘தகுதியுள்ளதே எஞ்சும், வலிமையுள்ளதே வாழும்’ என்றே இன்றும் எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால், ‘தகுந்தவை தங்கி நிற்றல்’ எனச் சிக்கலுக்குரிய ‘தகுதி’ மற்றும் ‘வலிமை’யைத் தவிர்த்து விட்டுப் பரிதியார் டார்வினை இன்னும்கூட ஆழப்படுத்தித் தனித்தமிழ்ப்படுத்தியுள்ள புலமைத்திறத்தைக் கவனியுங்கள். இப்படி நுண்மையாகக் கலைச் சொல்லாக்கத்தில் ஈடுபட்டு முனைப்பாக உழைத்ததோடு, எங்கும் எப்போதும் தமிழுக்காகத் தனிக்குரல் தருபவராயுமிருந்தார்.ஒருமுறை தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த வ.சு.செங்கல்வராயப் பிள்ளைக்குப் பரிசு தராமல், தமிழில் இரண்டாம் மதிப்பெண்ணும் ஆங்கிலத்தில் முதல் மதிப்பெண்ணும் எடுத்த ஆர்.வி.கிருஷ்ணய்யருக்குப் பரிசைத் தரக் கல்லூரி நிர்வாகம் முயன்றபோது, டாக்டர் மில்லர் அவர்களிடமே சென்று வாதாடித் தமிழுக்குரிய முதல் பரிசைத் தமிழில் முதல் மதிப்பெண் எடுத்த தம் மாணவரான வ.சு.செங்கல்வராயப் பிள்ளைக்கே வாங்கித் தந்தார். இந்நிகழ்வின் மூலம் பரிதியார் சாதி பாராதவர் என்பதுடன், எவ்வளவு பெரிய ஒரு தனித்தமிழ்ப் பற்றாளர் என்பதையும் உணர்ந்தறியலாம். ‘தமிழ் அவருக்குத் தாய்ப் பால்; ஒருபோதும் அது  அவருக்குப் புட்டிப் பாலில்லை!’

 1. சென்னைக் கிறித்தவக் கல்லூரியில், 1898 முதல் 1903 வரை, ஐந்தாண்டுக் காலம், பரிதியாரும் அடிகளாரும் சேர்ந்து அருந்தமிழ்ப் பணியாற்றியுள்ளனர். 1898இல் சுமார் 60பேர் கலந்துகொண்ட உதவித் தமிழ்ப் பேராசிரியர் பணிக்கான ஒரு நேர்காணலில், “குற்றியலுகரத்திற்கு உதாரணம் தருக” எனப் பரிதிமாற்கலைஞரால் வினவப்பட்டபோது, “அது எனக்குத் தெரியாது” எனத் திறமையாக முற்றியலுகரத்தையும் உட்படுத்தி விடை அளித்து, (அது – முற்றியலுகரம்; எனக்கு – குற்றியலுகரம்), “நாளைக்கே நீர் வேலையில் சேரலாம்” எனப் பரிதியாரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அடிகளார். தம் சாதிக்காரரைத் தேர்ந்தெடுக்காமல், மாபெரும் புலமையாளரான அடிகளாரைக் ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ எனக்கண்டுகொண்ட பரிதியாரின் நேர்மைக்குத் தூண்டுதல் எது? அவரின் தனித்தமிழ்ப் பற்றுத்தானே! இந்த இரு பெரும் ஆளுமைகளுள் பின்னவரை “மொழிக் கலப்பிலிருந்து தமிழை மீட்டவர்” என்று அடையாளப்படுத்துவதும், முன்னவரைத் “தனித் தமிழ் காரணமாகத் தம் பெயரை மாற்றிக்கொண்டவராக இருப்பின், ஒரே நேரத்தில் இரு பெயரில் இயங்கியிருக்க மாட்டார்” எனத் தனித்தமிழிலிருந்து விலக்கி வெளிநிறுத்தி விடுவதும் அறமில்லை. இங்கு ‘அறமில்லை’ என்று நான் விமர்சிப்பது, இடப்பக்கத்தில் மறைமலையடிகளாரையும் வலப்பக்கத்தில் பரிதிமாற்கலைஞரையும் பற்றிக் கட்டுரை வெளியிட்டுத் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்த முனையும் ‘இந்து தமிழ் திசை’ நாள் இதழைத்தான். (நவீனத் தமிழிலக்கியப் புலத்தில் தீவிரமாகச் செயல்படும் யாரேனும் இரு ஆளுமைகளைப் பற்றிப் பக்கத்துப் பக்கத்தில் ஒப்பிட்டு மதிப்பிடுவதுபோல் இப்படியான கட்டுரைகளை வெளியிட்டுவிட முடியுமா?)

 1. 1903இல் பரிதிமாற்கலைஞர் இறப்பதற்கு முன் வெளிவந்த ‘தமிழ் மொழியின் வரலாறு’ நூல் முழுவதிலும் வடமொழிச் சொற்கள் விரவியிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. (1899இல் வெளிவந்த ‘ஞானபோதினி’, செந்தமிழ் நடையைக் கைக்கொண்டிருந்ததால்,  ‘இந்த இதழ் நீடியாது’ எனப் பலரும் பேசியதாகக் குறிப்புண்டு!) இதே காலத்தில் (ஏன்? 1916 வரை) வெளியான ‘சுவாமி வேதாசலம்’ எழுத்துகளில் வடமொழிச் சொற்கள் விரவவே இல்லையா? அதையும் கட்டுரையாளர் எடுத்துக்காட்டியிருக்கலாமே! மேலும், பரிதிமாற் கலைஞரின் நூற்பட்டியலில் இயற்பெயரும் புனைபெயருமாக இரண்டு பெயர்கள் இடம் பெற்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 1916இல் ‘சுவாமி வேதாசலம்’, தனித்தமிழ் இயக்கவாதியாகிறார். மறைமலையடிகளாகத் தனித்தமிழ்ப்பெயருக்கு அவர் மாறியபின், அதாவது ஐந்தாண்டுகள் கடந்து, ஜுன் 1921இல் (பரிதிமாற்கலைஞர் அதாவது வி.கோ.சூ. எழுதிய ‘மதிவாணன் என்னும் புதுவது புனைந்த செந்தமிழ்க் கதை’யின் வழித்தடத்தில்), மறைமலையடிகள் (சுவாமி வேதாசலம்) எழுதிய ‘கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் இப்புதுக்கதை’ வெளிவருகிறது.(இதிலும் பரிதியாரே அடிகளாருக்கு முன்னோடியாகிறார். இதுபோல் காளிதாசரின் குமாரசம்பவத்தைப் பரிதியாரும் சாகுந்தலத்தை அடிகளாரும் மொழிபெயர்த்துள்ளதும் கருதத்தக்கவை!) “கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் இப்புதுக் கதை, பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் (சுத்த சமரச சன்மார்க்க நிலையம்) மறைமலையடிகள் என்னும் ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம் அவர்களால் (இயற்றப்பட்டுப்) பல்லாவரம் பொதுநிலைக் கழகத்தின்கண் உள்ள டி.எம். அச்சுக்கூடத்தில் வெளியிடப் பட்டது” என்ற குறிப்புடன் வெளிவருகிறது. இதில், ‘மறைமலையடிகள் என்னும் சுவாமி வேதாசலம் அவர்களால்’ இப்புதுக்கதை இயற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், சுவாமி வேதாசலம் என்ற இயற்பெயரே தொடர்கிறதா? எனக் கேள்வி எழுகிறதல்லவா? இதை அடிகளாரும் உணர்ந்தமையாலேயே, நவம்பர் 1923இல், ‘தமிழர் நாகரிகம் அல்லது வேளாளர் யாவர்?’ என்ற தலைப்புடன் வெளிவரும் நூலில், இது பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளது. “இது பல்லாவரம் பொதுநிலைக் கழக குருவும் ஞானசாகர ஆசிரியருமான ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகளால் இயற்றப்பட்டுப் பல்லாவரம் பொதுநிலைக் கழகத்து டி.எம். அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பட்டது” எனக் குறிப்புக் காணப்படுகிறது. (இந்நூல்களின் முகப்புகளை எளிதாக யாரும் இணையத்தில் காணலாம்). 1921இல்கூட, ‘மறைமலையடிகள் என்னும் ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம்’ எனத் தனித்தமிழ்ப் பெயர் மாற்றத்திற்குப் பிறகும் இரு பெயர்களுடன்தான் நூல் வெளிவருகிறது என்பது மட்டுமில்லை. தனித்தமிழ்ப்பெயரை விடவும் இயற்பெயரே அழுத்தமுறுவதையும் காண்கிறோம்.இது 1923இல் வெளிவரும் ‘தமிழர் நாகரிகம் அல்லது வேளாளர் யாவர்?’ என்ற மேற்சுட்டிய நூலில், ‘ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள்’ எனத் தனித்தமிழ்ப்பெயருக்குச் சிறப்புச் சேர்ப்பதாகத் திருந்தினாலும், இயற்பெயரையும் விட்டுவிடாத நிலையே இங்கும் தொடர்கிறது. மேலும், ‘பொதுநிலைக் கழகம்’ என்பதுடன், ‘சுத்த சமரச சன்மார்க்க நிலையம்’ (1921) என்ற பழைய பெயரும் சேர்ந்தே வருகிறது. இது 1923இல் வரும் மேற்சுட்டிய நூலில் கைவிடப்பட்டாலும், இதில் வேறு ஒரு மிகப்புதிய மாற்றமுள்ளது.  ‘பொதுநிலைக் கழக ஆசிரியர்’, ‘பொதுநிலைக் கழக குரு’ ஆகிவிட்டார். ‘ஆசிரியர்’ ஏன் ‘குரு’ ஆனார்? சிலர் ‘குரு’வும் தமிழ்ச் சொல்லே என்றும்கூட வாதிடலாம்! அதற்குள் செல்லத் தேவையில்லை. ‘கழக குரு’ என்பதில் ‘க்’ வராததால் அது வடசொல்லாகவே இங்குக் கருதப்பட்டிருப்பதை அறிகிறோம். ‘ஆசிரியர்’ என்ற தனித்தமிழ்ச்சொல்லை, ‘குரு’ என ஏன் மாற்றுகிறார்? விடயம் மிக எளிமையானது. ‘பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர்’, இப்போது ‘பல்லாவரம் பொதுநிலைக் கழக குருவும் ஞானசாகர ஆசிரியருமான ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம் என்னும் மறைமலை அடிகள்’ என்றாகிவிட்டார். 1916ஆம் ஆண்டிலேயே ‘அறிவுக்கடல்’ எனப் பெயர் மாறிவிட்ட ‘ஞானசாகரம்’, 1923இல் மீண்டும் ஞானசாகரமாகிவிட்டதே! ‘குரு’  சமயச் சொல்லாவதும், ‘ஆசிரியர்’ வெறும் இதழாசிரியராவதும் கூரிய அவதானிப்புக்குரியவை. ஆனால், ‘ஸ்ரீலஸ்ரீ’ ஏன் வருகிறார்? வேகமாகப் பரிதியாரை விமர்சிக்கலாம்; அடிகளாரைப் பற்றிய இவற்றை என்ன செய்யலாம்? 1935இல் மூன்றாம் பதிப்பாக வெளிவரும் ‘அறிவுக்கொத்து’ நூலில், (முதல் பதிப்பு : 1921; இரண்டாம் பதிப்பு : 1931), மேற்சுட்டிய ‘பொதுநிலைக் கழக ‘குரு’, மீண்டும் பொதுநிலைக் கழக ஆசிரியராகிவிடுகிறார். ‘ஸ்ரீலஸ்ரீ’யும் ‘மறைத்திருவாளர்’ என்பதாகத் திருந்திவிடுகிறார். ஆனால், இதில் INSTRUCTIVE ESSAYS என ஆங்கிலத்தில் பெரிய எழுத்தில் தலைப்பிடும் ஒரு சேர்க்கையைக் காண்கிறோம். ‘சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகளால் இயற்றப்பட்டு’ (1935ஆம் ஆண்டிலும் இரு பெயர்களைப் பயன்படுத்துகிறார்!) என்ற வாசகம், ‘BY SWAMI VEDACHALAM’ என்று ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. பல்லாவரம் Pallavaram என்றும், முன்னர் ‘டி.எம்.அச்சுக்கூடம்’ என்று இருந்தது இந்நூலில் ‘திருமுருகன் அச்சுக்கூடம்’ எனத் திருந்தியுள்ளதுடன், ‘T.M. Press’ என ஆங்கிலத்திலும் அது புதிதாகக் குறிக்கப்பட்டுள்ளது. தம் குறிப்புரையின்கீழ், ‘இங்ஙனம் வேதாசலம்’ எனத் தம் இயற்பெயரையே குறிப்பிடுகிறார். இடப்பக்கக் கீழ்மூலையில், ‘பல்லாவரம், சமரச சன்மார்க்க நிலையம்’ என்றே தம் முகவரியையும் குறித்துள்ளார். தம் முன்னுரையில் மாதம்- நாள்களைத் தனித்தமிழிலேயே மறைமலையார் குறித்தாலும், ஆங்கில மாதப் பெயர்களைத் தமிழில் ஜூன், நவம்பர், மே எனக் குறிக்காமல் ஆங்கிலத்திலேயே தம் நூலின் முகப்புப் பக்கங்களில் June 1921, November 1923, May 1935 என்பதுபோலே குறித்துள்ளார். இப்படிப்பட்ட சில பல தடுமாற்றங்களைப் படிப்படியாகத் தாண்டியே 1935இல்கூடத் தனித்தமிழ்க் கொள்கை நங்கூரமிட வேண்டியுள்ளது. இதற்கு முப்பத்திரண்டாண்டு முன் மறைந்த பரிதிமாற்கலைஞர் பற்றிய விமர்சனங்களிலும்கூட இவை கருதப்படவேண்டும். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வதும் தெளிந்துகொள்வதும் என்ன? இயற்பெயரும் புனைபெயருமாகப் பரிதிமாற்கலைஞரின் பெயர் மட்டுமா இடம் பெற்றிருக்கிறது? மறைமலையடிகளின் பெயரும் அவ்வாறுதானே குறிக்கப்பட்டுள்ளது! எனக்கும்தான் புரியவில்லை. (காலம் போகிற போக்கைப் பார்த்தால், அச்சமாகவும் இருக்கிறது!)
 2. பரிதிமாற்கலைஞரின் மொழிக்கொள்கை யாது? “ஆங்கிலச் சொற்களைத் திசைச் சொற்களென மேற்கொள்வதில் யாது தடையோ? இவ்வாறு செய்தலே அறிவுடையோர் செயலாம்” என்பதா? இதையே அவர் மொழிக்கொள்கையாகக் காட்டுவது, கானலையே நீர் என்பதாகும். பழந்தமிழில் எழுதுவதாகச் சொல்லி, ”அவன் இங்கே தங்கியிருந்து மறுநாட் போனான்” என்ற ஓர் எளிய வாக்கியத்தையே, “அன்னோன் ஈண்டே இறுத் திருக்குபு பிற்றை ஞான்றை யேகினன்” என்பதாக்கித் திருகிவலிந்து எழுதுபவர்களைக் கண்டித்தவர் அவர். இத்தகையவர் ஆங்கிலச்சொற்களைத் திசைச்சொற்களாகக் காண ஏன் முனைகிறார்? ஆங்கிலத்தைத் தமிழில் கலக்க அவர் விரும்பியதா காரணம்? Oxford University-யைக் ‘கோதீர்த்தபுரி சர்வகலாசாலை’ எனத் தமிழ்ப்படுத்துமளவிற்குத் தனித் தமிழ்ப் பற்றேறிய அவர், ஏன் இப்படிக் கூறினார்? “மொழியின் இயக்கத்திற்குத் தக்கவாறு இலக்கணம் இயங்காவிட்டால் அது மொழிக்குக் கேடுவிளைவிக்கும்”(தமிழ் வியாசங்கள்) என்ற அவரின் தெளிவே, அதற்குக் காரணம். மேலும், “தமிழ் நூலினிடையே ஆங்கில மேற்கோள்களை அதிகமாகக் காட்டும் விருப்பின்றி விடுத்தனம்” என, (‘தமிழ்மொழியின் வரலாறு’) ஆங்கில மேற்கோள்களைக்கூடத் தவிர்ப்பதையும் கவனிக்க வேண்டுகிறேன். “மொழிபெயர்ப்பு வகையால் ஆங்கிலக் கருத்துக்கள் தமிழின்கண் எவ்வளவு புகினும் நலமே.இம்மொழிபெயர்ப்புவகை ஒன்று போதாது. இன்னும் வேறுவகைகளும் வேண்டும். தமிழ்ப் பகுதிகளினின்று இன்று புதுச்சொற்கள் படைத்துக் கருத்தை வெளிப்படுத்தலாம். உள்ள சொற்களைத் திரித்தும் சில புதுக்கருத்திற்கு இடஞ்செய்யலாம். சிலர் ஆங்கிலக் கருத்துக்களுக்கு ஏற்ற சொற்கள் தமிழ் மொழியில் காண்டல் அரிதாயின், வடசொற்களின் மூலமாக அவற்றைத் தமிழில் வெளியிடுகின்றனர். இவ்வளவு தூரஞ் சுற்றுவானேன்? தலை சுற்றித்தான் மூக்கைத் தொடல் வேண்டுமோ? நேரே மூக்கைத் தொடக்கூடாதோ? ஆங்கிலச்சொற்களையும் ‘திசைச்சொற்’களாக மேற்கொண்டாலென்னை? மேற்கும் ஒரு திசையன்றோ?…. (தமிழ்ச்சொற்கள் ஆங்கில பாஷையில் புகுதலும் ஆங்கிலச்சொற்கள் தமிழ்ப் பாஷையிற் புகுதலும் இயற்கையே. இதைத் தடுக்கமுடியாது.தடுக்கப்புகுதலும் தக்கதன்றாம்.) ஆங்கிலமொழி திசைச்சொற்குரிய நிலங்களினும் வடசொற்குரிய நிலங்களினும் பயிலப்படுவதேயன்றிச் செந்தமிழ்க்குரிய நிலத்தினும் பயிலப்பட்டு வருதலால், (ஆங்கிலச்சொற்களைத் திசைச்சொற்களென மேற்கொள்வதில் யாது தடையோ? இவ்வாறு செய்தலே அறிவுடையோர் செயலாம்.) பழையன கழிதலும் புதியன புகுதலுமாகிய இவ்விரண்டும் பாஷையியக்கத்திற்குரிய இரண்டு கால்களென மதிக்கப் படுகின்றன. இவ்வுண்மையை உய்த்துணர்ந்து தமிழ்ப் பாஷையின்கட் செய்யவேண்டிய சீர்திருத்தங்களையுடனே மேற்கொள்ளுதல் தமிழ்மக்கள் கடனாம்” எனப் புதியன புகுதல் தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்களைத் தமிழறிஞர்களிடமிருந்து தமிழ் மக்களிடம் கொண்டுசெல்கிறார் பரிதிமாற்கலைஞர். இங்கவர் கள யதார்த்த நிலையைக் கவனப்படுத்துவதன்றித் தீர்ப்பேதும் எழுதிவிடவில்லை. இது ஒரு நீள்கட்டுரை. இதில் அடைப்புக்குறிக்குள் வரும் பகுதிகளை மட்டும் தனித்துப் பிரித்துத் தம் நோக்கிற்கு ஏற்பக் காட்டுகிறார் ஜெ.சுடர்விழி. இப்பகுதியைத் தம் நூலில் (2007) வி.சு.கோவிந்தன் தவிர்த்துள்ளார். இதை மட்டும் மேற்கோளாகக் காட்டும் ஜெ.சு., இதன் முற்பகுதியைக் காட்டுவதில்லை. அதாவது, வி.சு.கோ. காட்டும் பகுதியை ஜெ.சு. தவிர்க்கிறார், ஜெ.சு. காட்டும் பகுதியை வி.சு.கோ. தவிர்க்கிறார்! பரிதியார் வடமொழியை ஆதரிக்காததைக் காட்ட ஜெ.சு. விரும்பவில்லை.அதைக் காட்டினாலும், தமிழில் ஆங்கிலம் கலப்பதைப் பற்றிய பரிதியார் கருத்தை வெளிக்காட்ட வி.சு.கோ. துணிவதில்லை. இது யாருடைய சிக்கல்? தம்தம் நோக்கையே பரிதியாரிடம் ஏற்றும் பக்கச்சார்பின் சிக்கலல்லவா இது!

 1. ஆங்கிலக் கருத்துகளை வடசொற்கள் மூலமாக விளக்கும்வீண் வேலையைப் பரிதியார் ஆதரிக்கவில்லை. Struggle for existence என்பதைப் ‘பிராணதாரணப் பிரயத்தனம்’ எனத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதற்குப் பதிலாக, நேரே மூக்கையே தொடக் கூடாதோ எனக் கேட்கிறார். இங்குத் தந்தை பெரியாரைப் போலவே, வடமொழியா ஆங்கிலமா என்று வருகையில், ‘வடமொழி வேண்டாம்; ஆங்கிலமே வரட்டும்’ என்ற கருத்தியல் நிலைப்பாட்டையே பரிதியாரும் எடுக்கின்றார். அதற்காகவே அவர், “தமிழ்ச் சொற்கள் ஆங்கில பாஷையில் புகுதலும் ஆங்கிலச் சொற்கள் தமிழ்ப் பாஷையில் புகுதலும் இயற்கையே. இதைத் தடுக்க முடியாது. தடுக்கப் புகுதலும் தக்கதன்றாம்” என்கிறார். ஆங்கிலம் தமிழில் புகுவதைத் தடுக்க முற்பட்டால், அதற்குப் பதில் வடமொழி புகுந்துவிடும் என்ற காலனியக் காலச் சூழலைச் சுட்டுவதாலேயே, என்றென்றும் அது அப்படியேதான் தொடர வேண்டுமெனச்சாஸ்திரியார் சூழ்ச்சி செய்வதாகக் கருதிவிடக் கூடாது. ஆங்கிலேயர்கள் ஆள்வோராகவும் தமிழர்கள் ஆளப்படுவோராகவும் உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டப் பரிதியார் தவறுவதில்லை. காலனிய இந்தியாவின் பரிதாப நிலைமை அது. அதைப் புரிந்துகொள்ளாமல், இன்றைய சுதந்திர நாட்டின் சூழலிலிருந்து தமிழில் ஆங்கிலம் புகுவதைச் சாஸ்திரியார் வரவேற்கிறார் என்று சிண்டுமுடியக்கூடாது. எப்படிச் சென்னைப் பல்கலைக்கழகப் பட்ட வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் நீக்கிக் கொள்ளப்பட்டால், அது சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகிவிடும் எனக் கூறி எதிர்த்தாரோ, அப்படித்தான் இங்கும் ஆங்கிலத்தைத் தடுப்பது வடமொழிக்குப் பலனளித்துவிடக்கூடாது என்பதாலேயே ஆங்கிலத்தை வரவேற்கிறார். மும்மொழிக்கொள்கை முன்மொழியப் பட்டபோது இருமொழிக் கொள்கையைப் பேரறிஞர் அண்ணா எதற்காக வலியுறுத்தினார்? இந்தியை விரட்டுவதற்கு ஆங்கிலமே வழி என்று அண்ணா கண்டுகொண்டதுபோல்தான், இங்குப் பரிதிமாற்கலைஞரும் கண்டுகொள்கிறார். அதற்காகத் தொல்காப்பியர் காட்டிய ஒருவழியில் பரிதியார் காணும் ‘அமைதி’தான் ஆங்கிலத்தைத் திசைச்சொல்லாக ஏன் கருதக்கூடாது என்ற அவரின் கேள்வியாகும். ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுங்கள், அது தவறில்லை எனப் பரிதியார் எங்கே சொன்னார்? இன்று வரை தமிழில் தொடரும் ‘ஆங்கில மயமாதலை’விடச்  ‘சமஸ்கிருதமயமாதல்’ அபாயகரமானது என்ற விழிப்பினாலேயே பரிதியார் ‘திராவிட சாஸ்திரி’யாகிறார். ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்ற தமிழ்முழக்கம் முளைவிடும்முன்பே,பின்வரப்போவதை முன்யூகித்துக்கொண்டு,’ஆகவே மேற்கும் புகுகிறது’ என்ற யதார்த்தத்தை (வடக்கு மட்டுமா திசை?), “மேற்கும் ஒரு திசையன்றோ?” எனப் புதிய காலத்தின் அறைகூவலாகப் பரிதியார் எதிர்கொண்டார். வட மொழியை எதிர்ப்பதில் பரிதியார் யாருக்கும் பின்தங்கியவரல்லர். ‘வடமொழி எதிர்ப்பு’ என்ற இந்த மையப் புள்ளியில்தான் பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் முதலிய பலரும் ஒருங்கிணைகின்றனர். இப்பேரறிஞர்கள் ஒவ்வொருவருக்கும் சிலபல விடயங்களில் பலசில தனிப்பட்ட கருத்துகள் இருக்கலாம்; இருந்தன.  ஆனால், தனித்தமிழ் உணர்ச்சியில் இவர்களில் யார் ஒருவரும் இன்னொருவருக்குச் சளைத்தவரல்லர். “வடமொழியும் ஆங்கிலமும் நன்கு கற்றிருந்தும் அவருடைய உள்ளம் தமிழ் இலக்கிய வளர்ச்சியையே முதன்மையாகக் கொண்டது” என்பார் மு.வரதராசன். (தமிழ் இலக்கிய வரலாறு). அதனாலேயே பரிதியார், தமிழ்ப் பாஷையில் மேற்கொள்ளவேண்டிய சீர்திருத்தங்களைத் தமிழ் மக்கள் உடனே மேற்கொள்ளவேண்டுமென அறிவுறுத்தினார்.  உடனே தமிழில் அவர் செய்யவிரும்பிய அந்தச் சீர்திருத்தங்கள் யாவை? “கடினச் சந்திகளை எப்பொழுதும் பிரித்தெழுதுக. பொருள்மயக்கமாவது,பொருள்வேறுபாடாவது உண்டாக்கவல்ல சந்திகளைச் சேராமற் பிரித்தே எழுதுக. சந்தி சேராமையாற் பொருள் கெடுவதாயிருந்தால், அவ்விடத்தில் சந்தி சேர்த்தெழுதுக. எளிய சந்திகளைச் சேர்க்கினும் சேராவிடினும் ஒன்றுதான்…” எனப் பண்டிதத்தமிழைப் பாமரரிடமும் கொண்டுசேர்க்கும் வழிமுறைகளையே புதிய சீர்திருத்தங்களாகப் பரிதியார் முன்மொழிந்தார்.

 1. 1916ஆம் ஆண்டே, மறைமலையாரின் எழுத்துகளில் முற்றிலுமாக வடசொற்கள் நீங்கி விடவில்லை. தனித்தமிழ்க் கொள்கை, படிப்படியாகவே ஆழமும் வேகமும் பெற்றது. வலிந்து பிறமொழிச் சொற்களைப் புகுத்தக்கூடாது என்ற உணர்வே மறைமலையாரிடம் வெளிப்பட்டுள்ளது.“இன்றியமையா இடங்களில் வடசொற்கள்சிலவற்றை எடுத்தாளுதல் வழுவென்று யாங் கூறவில்லை. பொருள்களைக் குறிப்பிடுதற்கு ஏராளமான தமிழ்ச் சொற்கள் இருக்கையில், அவற்றை விடுத்துப் பிறவற்றைப் புகுத்தலையே பெரியதொரு குற்றமாக நினைக்கின்றோம்” என்றே அவரும் எழுதியுள்ளார்.இவ்வாறாகப் பேரறிஞர்கள் கருத்துரைக்கும்போது, அவ்வாறாக அவர்கள் ஏன் பேசுகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். “இனிப் பதிப்பிடும் எம்முடைய நூல்கள் எல்லாவற்றிலும் வடமொழிச் சொற்கள்இல்லாவாறு அவற்றை முற்றுங் களைந்துவிட உறுதி செய்திருக்கின்றேம். ஆனாலும் சிறப்புப் பெயர்களாயும் குறியீடுகளாயும் வழங்கும் ஒரு சில வடசொற்களை மட்டும் இன்றியமையாது வேண்டிய இடங்களில் ஏற்றுக்கோடல் இழுக்கு ஆகாதென்பதும் உணரல் வேண்டும்” என்கிறார் மறைமலையார். (பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை: மறு பதிப்பு:1919). இவ்வாறு தம் தனித்தமிழ்க் கொள்கையில் ஒரு பொது விதியையும் ஒரு சிறப்பு விதியையும் அவர் ஏற்படுத்திக்கொள்கிறார். இவையில்லாமலும், அவர் நூல்களில் வடசொற்கள் விரவியுள்ளதற்குக் ‘கோகிலாம்பாள் கடிதங்கள் (1921) என்னும் புதுக்கதை’ புதினத்தில் இடம்பெறும் பின்வரும் சொற்களைச் சான்று காட்டலாம்.  “அன்புள்ள தெய்வ நாயகம், நீர் இரண்டு வருஷத்துக்கு முன் வித்தியார்த்தி பரீட்சையில் தேறி, அதற்கு அடையாளமாகச் சர்வகலா சங்கத்தார் கொடுத்த நிலையங்கியை இந்தக் கலசமாலிலே தான் பெற்றுக்கொண்டீர் என்பது அப்போது என் நினைவில் எழுந்தது. வித்யார்த்திகள் கலைமகளின் திருவருளைப் பெறுதற்குரிய சிறந்த திருவிழா கொண்டாடப்படும் இம்மகா மண்டபத்தினை அப்பெருந்தேவி எழுந்தருளியிருக்கும் பரிசுத்த ஆலயமாகவே நினைந்து மனத்தாற்றொழுதேன்” (‘கோகிலாம்பாள் கடிதங்கள்’) (1921: ப.31). இக்கடிதத்தில் வருஷம், வித்யார்த்தி, பரீட்சை, சர்வகலா சங்கத்தார், கலசமால், மகாமண்டபம், பரிசுத்த ஆலயம், தேவி ஆகிய வடசொற்களின் பயன்பாட்டைக் காணலாம். (University என்பதைச் ‘சர்வகலா சாலை’ எனப் பரிதியார் தமிழ்ப்படுத்திய அவ்வழியிலேயே, இங்கு மறைமலையாரும் ’சர்வகலா சங்கத்தார்’ எனப் பயன்கொண்டுள்ளார்!). இவற்றுடன் இப்புதுக்கதையின் ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்ததில், ‘சந்திரன், சந்தேகம், அசாக்கிரதை, பயம்…’ முதலிய சிலபல வடசொற்களும் இதில் எடுத்தாளப்பட்டுள்ளதைக் கண்டேன். இவற்றுள் சில, ‘வருஷம் – ஆண்டு, பரீட்சை – தேர்வு, ஆலயம் – கோயில், சந்திரன் – நிலா, சந்தேகம் – ஐயம், பயம் – அச்சம்’ என்பவைபோல் எளிதாகத் தனித்தமிழ்ச் சொற்களாக உருமாற்றிக் கொள்ளக்கூடியவையாகும். 1903இல் மறைந்துபோன பரிதியார், இயன்றவரையில் தமிழ்ச் சொற்களில் எழுதவும் பேசவும் முயன்றவரே தவிரத் தனித்தமிழியக்கம் கண்டவரில்லை. ஆனால்,1916முதல் தனித்தமிழில் எழுதுவதையும் பேசுவதையும் தம்வாழ்வாக வரித்துக் கொண்டவரும் தனித்தமிழியக்கத் தந்தையுமான மறைமலையடிகளாரின் மொழியிலும் இத்தகைய வடசொற்கள் விரவியதை எப்படிப் புரிந்துகொள்வது? இவற்றையெல்லாம் பெரிதாகத் தோண்டித் துருவிக் கொண்டிருக்கத் தேவையில்லை. பகுதியுண்மைகளையே முழுவுண்மைகளாக்கி முதன்மைப்படுத்திவிடாமல் நகர்ந்து மேற்செல்வதும், மிகைநாடி மிக்கதை ஏற்றுக்கொள்ளலுமே செய்யவேண்டியவையாகும்.

 1. சி.வை.தா.வையும் உ.வே.சா.வையும் எதிரெதிராக நிறுத்தும் திருப்பணியின் அடுத்த கட்டமாகப் பரிதியாரையும் மறைமலையாரையும் ‘பிராமணர் – சைவ வேளாளர்’ என்ற சாதிப்புலத்தில் நின்று மதிப்பிடும் ஓர் இருமை (binary) நோக்கு, மேற்கிளம்புவதையும் அவதானிக்க முடிகிறது. இது சமகாலச் சாதியச் சிக்கல்களைத் தமிழ் மொழி வரலாற்றில் கொண்டுபோய்த் திணிப்பதாகும். மூளையில் புகுந்த ஓணானை எடுத்துப் பொதுவெளியில் விடுவதாகும். தம் நூல்களுக்கு ஆங்கிலத்தில் மறைமலையடிகள் முன்னுரை எழுதினார் என்பதற்காக, மகளுக்குக்கூட ஆங்கிலத்தில்தான் அவர் கடிதமெழுதினார் என்பதற்காக மறைமலையாரின் தனித்தமிழ்ப்பற்றை விமர்சிப்பது எப்படிக் குணங்கருதாக் குற்றமோ, அப்படித்தான் தம் புனைபெயருக்குப் பரிதிமாற்கலைஞர் கூறும் காரணத்தை எடுத்துக் காட்டித் ‘தனித்தமிழ்ப் பற்றுக்கும் அவருடைய மறைபெயருக்கும் தொடர்பில்லை’ என ஒரேயடியாகப் பரிதிமாற்கலைஞரின் சாரத்தை மறுப்பதுமாகும். இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமாகத் தரவுகளைப் புரிந்துகொள்வதில் செயல்படும் கூரிய நுண்ணரசியல் ஒரு பொதுநிலை விவாதத்திற்குரியதாகும். பாரதியாரைப் பற்றியே, அவர் சமஸ்கிருதச் சார்பாளரா இல்லை தமிழ்ப் பற்றாளரா என்ற பெரியதோர் ஆய்வுச்சிக்கல் (!) இழுத்துக் கொண்டிருக்கும்போது, தனித்தமிழ்ப் பற்றாளரான பாரதிதாசன் தம் பெயரை ஏன் தனித் தமிழில் தம் இறுதிவரை மாற்றிக்கொள்ளவில்லை என்ற கேள்வி இன்றும் நீடித்துக் கொண்டிருக்கும்போது, பாவம் பரிதிமாற்கலைஞர்! அவர் மட்டும் எப்படி இந்தப் பொது புத்திப் புரிதலுக்கு விதிவிலக்காகிவிட முடியும்?
 2. நத்தானியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லியைப் (1763-1831) பெருந்தன்மையுடன் ஃப்ரான்சிஸ் வொயிட் எல்லீசும் (1777-1819), எல்லீசைப் பெருந்தன்மையுடன் ராபர்ட் கால்டுவெல்லும் (1814-1891) தம் நூல்களில் சுட்டிக்காட்ட மறந்ததற்காகக் கவலைப்பட்டுப் பரிவுறுகிறோம். ஆனால், அவ்வாறின்றிப் பரிதிமாற்கலைஞரைத் தம் முன்னோடியாக மறைமலையடிகள் பெருந்தன்மையுடன் தம் மகனிடம் கூறியுள்ளதைப் படித்தபிறகும், அதை ஏற்க மறுத்து வீம்புடன் சிணுங்குகிறோம். ஏன்? இதற்குப் பரிதிமாற்கலைஞர் பார்ப்பனர் என்பது தவிர வேறு பதிலிருப்பதாகத் தெரியவில்லை. பரிதிமாற்கலைஞர் பார்ப்பனரல்லாதவராகவும் மறைமலையடிகள் பார்ப்பனராகவும் இருந்திருந்தால்? அவரவர் உளச்சான்றின்படியே இதற்குப் பதில் கூறிக்கொள்ளலாம். பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக வைத்துப் பாசுரமியற்றியதற்குக் ‘குழவி மருங்கினும் கிழவதாகும்’ என்ற தொல்காப்பியத் தொடரே முன்னோடி என்கிறோம். சைவ – வைணவப் பொதுமை பேசும் கம்பனுக்குச் சரணாகதியை வலியுறுத்தும் வைணவ ஆழ்வார்களையும், சமண நிலையாமையுரைக்கும் திருத்தக்க தேவரையும் முன்னோடிகளாகக் காட்டுகிறோம். பிரமச்சரியம் பேணிய பெருந்துறவி வள்ளலாரைக் ‘கலவியினால் மானுடருக்குக் கவலை தீரும்’ என்ற பாரதியாருக்கு முன்னோடியாக்குகிறோம். உ.வே.சா.வுக்குச் சி.வை.தா.வே முன்னோடி என்கிறோம். இங்கெல்லாம் எப்படிச் சிற்சில வேற்றுமைகளைவிடப் பற்பல ஒற்றுமைகளையே நாம் மிகுதியாகக் கண்டுகொள்கிறோமோ, அப்படியேதான் 1890களின் தமிழ்ச் சூழலைக் கூர்ந்து நோக்கிப் பரிதிமாற்கலைஞரையும், அடிகளாரே ஏற்றுக்கொண்டபடி, மறைமலையாருக்கு முன்னோடி என்கிறோம்.தனித்தமிழியக்கத்தின் முன்னோடியாகப் பரிதிமாற்கலைஞரைச் சுட்டுவதால், நம் தமிழ்மலை மறைமலையடிகளாருக்குப் பெருமையே கூடும்.
 3. “அன்றியும் தமிழ்நூற்கு அளவிலை, அவற்றுள் ஒன்றேயாயினும், தனித்தமிழ் உண்டோ?” எனக் கேட்ட இலக்கணக்கொத்து நூலாசிரியரும் உரையாசிரியருமாகிய சாமி நாத தேசிகரை எதிரியாக அம்பலப்படுத்தி, ‘எதிரி’யின் எள்ளற் பெயரில் எழுந்து தழைத்த இயக்கமாகத் தனித்தமிழியக்கத்தை அடையாளமிடுகிறார் பேராசிரியர் பா.மதிவாணன். (தனித்தமிழுக்கு எதிரியாகிய சாமிநாத தேசிகருக்குப் பின் தனித்தமிழுக்கு நண்பரான பரிதிமாற்கலைஞரே, நவீனக் காலத்தில் ‘தனித்தமிழ்’ என்ற சொல்லாட்சியைத் ‘தனிப் பாசுரத்தொகை, (உயர்) தனிச் செம்மொழி, தனித்தமிழ் நூலாகிய திருக்குறள்’ என்ற தம் சில சொற்கள்வழிப் பழக்கியும் புதுக்கியும் புழங்கிய முதலறிஞராய்த் தெரிய வருகிறார்). பேராசிரியர் சுட்டும் அப்பாடலைத் தம் ‘தமிழ்மொழியின் வரலாறு’ நூலில் 1903-லேயே எடுத்துக்காட்டிப் பரிதியாரும் கண்டித்துள்ளார் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கதாகும். பரிதியாரின் அக்கண்டனம்தான் என்ன? “‘பாஷை நூல்’ என்னும் அரிய சாஸ்திரத்தின் பயிற்சியும் சரித்திரக் கண்ணுமில்லாத குறைவினாலெழுந்த பொருந்தாக் கூற்றுக்களாம் என்பது திண்ணம். இவை கேட்டுப் பேரறிவாளராயினார் நகைத்து விடுப்பரென்பது நிச்சயம்” எனக் குத்தலாகத் தம் மறுப்பைப் பரிதியார் பதிவுசெய்துள்ளார். “தனித்தமிழ் என்ற தொடரைத் தந்தவர் தனித்தமிழ்ப் பற்றாளரல்லர் என்பது மட்டுமன்று. தனித் தமிழுக்கு எதிரானவருமாவார் என்பது வரலாற்று முரண் நகைகளுள் ஒன்று” என்பார் பேராசிரியர் பா.மதிவாணன். அது போன்ற முரண் நகையே இதுவும். தம் வடமொழிப் பெயரைத் தனித்தமிழில் மாற்றிக்கொண்டு வரலாற்றில் முதன்முதலாகப் தனித்தமிழ்ப் பெயர் சூட்டிக்கொண்ட ஒருவரைப் புனைபெயராக மறைபெயர் சூடியவராக விமர்சித்துத் தனித்தமிழின் முன்னோடிகளுள் ஒருவராக ஏற்கத் தயங்குவதும் மறுப்பதும்கூட ஒரு வகை முரண் நகையே. இந்த முரண் நகை, இங்குப் பகை முரணாகக் கூர்தீட்டப்படுகிறது. தனித்தமிழ்ச் சிந்தனையை ஒரு மாபெரும் இயக்கமாக்கிச் செயல்படுத்தும் முனைப்பு மறைமலையடிகள்போல் பரிதிமாற்கலைஞரிடம் வளர்ச்சியுறவில்லை, இளம்பிள்ளைக் கனவாகவே அரும்பியிருந்தது அது என விமர்சிக்கலாம். அதுவே நட்பு முரணாகும். அது இயல்பானதே. ஆனால், அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பரிதிமாற்கலைஞரின் சிலபல சொற்களை உருவியெடுத்துப் பகுதியுண்மையையே பிரதானப்படுத்தி அவரின் முழுமை நோக்கைக் கண்டும் காணாமல் கழற்றிவிட்டுவிட்டுத் தனித்தமிழ்ச் செயல்பாடுகளுக்கும் அவருக்கும் தொடர்பேயில்லாததுபோல் பரிதியாரைப் பார்ப்பனராக மட்டுமே கருதிக் கைகழுவிவிடுவது அறமன்று. தனித்தமிழில் எழுதவும் பேசவும் நினையாதவராகப் பரிதியாரைப் புறமொதுக்குவதில் கறாரான ஓர் அரசியல் நோக்குண்டு. தமிழர்களோடு தாமும் ஒரு தமிழரே எனச் சேர்ந்துகொள்ளப் பரிதிமாற்கலைஞராகி முன்வருகிற ஒருவரைச் சூரியநாராயண சாஸ்திரியாகவே காண்பதும் காட்டுவதும்தான் உண்மையில் கால வழுவாகும்.

 1. இது ஏன் இவ்வாறு நிகழ்கிறது? “பரிதிமாற் கலைஞர் என்னும் புனைபெயர் கொண்ட வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியாரின் (1870 – 1903) ‘தமிழ் மொழி (யின்) வரலாறு’ வடமொழியின் வேறானது தமிழ் என்பதை வலியுறுத்துகிறது. பரிதிமாற்கலைஞர் ஒரு தேவை கருதி – தூய தமிழிற் புனைபெயர் கொண்டாராயினும் வடமொழியினும் தமிழின் மேல் பற்றுக்கொண்டவராயினும் தனித்தமிழை இயக்கநிலைக்குக் கொண்டு சென்றார் அல்லர்” என்கிறார் பேராசிரியர் பா.மதிவாணன். சரி. தனித்தமிழை இயக்கநிலைக்குக் கொண்டு சென்ற முழுப்பெருமையும் மறைமலையடிகளுக்குரியது என்பதில் யாருக்கும் எம்மறுப்பும் இருக்கவியலாது. ஆனால், 1916இல் இது நிகழ்வதற்கு முன்பு, 1897இல் தம் வடமொழிப் பெயரைத் தனித்தமிழில் வி.கோ.சூ. மாற்றிக்கொண்டதும், இதற்கு ஒரு மிக வலுவான முன் உந்துதல் ஆகும். இதைச் சிறிதும் பொருட்படுத்தாமல், “திராவிடமொழிக் குடும்பக் கண்டுபிடிப்பும் பழந்தமிழ்நூற் பரவலும் தனித்தமிழ் இயக்கத்திற்குத் தூண்டலும் துணையும் ஆயின” என்பதை மட்டும் பேராசிரியர் ஏற்றுக் கருத்துரைக்கிறார். இதில் பரிதிமாற்கலைஞரின் பெயரையும் உட்படுத்தி, நான் இப்படிப் பின்மொழிகிறேன். ‘திராவிட மொழிக் குடும்பக் கண்டுபிடிப்பும்பழந்தமிழ்நூற் பரவலும் பரிதிமாற்கலைஞரின் தனித் தமிழ்ப் பெயர் மாற்றமும் தனித்தமிழியக்கத்திற்குத் தூண்டலும் துணையும் ஆயின’ என்கிறேன். அதாவது, தனித்தமிழை ஓர் இயக்கநிலைக்குப் பரிதிமாற்கலைஞர் கொண்டு செல்லாதவர் ஆயினும், தனித்தமிழியக்கத்தின் பிற்காலத் தோற்றத்திற்கு ஒரு மிக வலுவான முன் உந்துதல் தந்த முன்னோடியாகப் பரிதிமாற்கலைஞரை ஏற்பது சம காலத்தின் தவிர்க்கவியலாத கட்டாயமாகிறது என்கிறேன். இதற்கு மாறாக, “சூரிய நாராயண சாஸ்திரியார் தனித்தமிழ்ப்பற்றின் காரணமாகத் தம் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை என்பதுடன், தனித்தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும் என்கிற நிலைப்பாட்டையும் அவர் எழுத்துக்களில் காணமுடிவதில்லை” என்கிறார் பேராசிரியர் ஜெ.சுடர்விழி. இதன் தொனி என்ன என்பதே, இங்குக் கேள்வி. நேரடியாகவே கேட்கிறேன். ‘பரிதியார் என்ன செய்தார்?’ என்ற விவாதத்தைக்கூடப் பிறகு வைத்துக்கொள்ளலாம். ‘தனித்தமிழ்ப் பற்றின் காரணமாகப் பெயர்களை மாற்றிக்கொள்வதற்கும், தனித்தமிழில் பேசவும் எழுதவும் வேண்டும் என்பதற்கும் பரிதிமாற்கலைஞர் நண்பரா எதிரியா?’ இந்தக் கேள்விக்குச் சுற்றி வளைக்காது எவரும் பதில் கூறலாம். பொதுவில் இவ்வினாவை முன் வைக்கிறேன். இக்கட்டுரையைப் படிக்கும் எவரும் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம். நான் இதில் எந்த ஓர் இடத்திலும், தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளின் மாபெரும் அர்ப்பணிப்பால், 1916இல் பெருவெடிப்பாகப் பிறந்த தனித்தமிழியக்கத்தின் தளபதியாகப் பரிதிமாற்கலைஞரை இட்டுக் கட்டவில்லை. தனித்தமிழியக்கத்தின் முழுப்பெருமையும் அடிகளாருக்குரியதாகும். நான் வலியுறுத்துவதெல்லாம், மிகஎளிய ஓர் உண்மையையே. அவ்வுண்மைதான் யாது? மறைமலையடிகளுக்குத் தனித்தமிழ்ப் பெயர் மாற்றத்தில் முன்னோடியாகப் பரிதிமாற்கலைஞர் இருந்தார் என்பதுதான் அது. வேறு எதுவுமில்லை.

 1. கம்பன், கிண்டர்ஸ்லி, எல்லீஸ், கால்டுவெல், மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை, சி.வை.தா., வி.கனகசபைப் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், பாரதியார், 1911இல் கரந்தைத் தமிழ்ச் சங்கம் கண்ட தமிழவேள் உமாமகேசுவரனார் எனப் பல்வேறு ஆளுமைகளின் பல்வேறு காலத் தமிழ்ப் பங்களிப்புகளின் ஒரு பெருவிளைச்சலாகத் தனித்தமிழ் இயக்கத்தைப் பார்ப்பதும் புரிந்துகொள்வதும்தான் இயங்கியலாகும். தமக்கு முந்தைய அறிஞரின் குறையையும் நிறையையும் பல காலம் சிந்தித்துத் தெளிந்த பிறகே, தாம் செய்யவேண்டியது இதுவே எனத்துணிவாகவும் உறுதியாகவும் ஒரு முடிவெடுத்துத்தான் சுவாமி வேதாசலம்மறைமலையடிகளாகிறார்; தனித்தமிழியக்கத்தைக் கட்டியெழுப்பித் தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றுகிறார். அதனாலேயே அவர், தனித்தமிழியக்கத்தின் தந்தையாகவும் காணப்படுகிறார். இதில் எந்தச் சதியுமில்லை. தனித்தமிழியக்கத்தின் தளகர்த்தராகப் பரிதிமாற்கலைஞரை யாரும் முன்வைக்கவில்லை. தனித்தமிழியக்கம் தோன்றுவதற்குப் பத்தொன்பதாண்டுகளுக்கு முன்பே ‘தனித்தமிழ்ப் பெயர் மாற்றம்’ என்ற முதலடியைப் பரிதியார் எடுத்துவைத்துவிட்டார். தனித்தமிழியக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளுள் ஒன்று, வடமொழிப் பெயர்களைத் தனித்தமிழில் மாற்றிக்கொள்வது என்னும்போது, அவ்வாறு வரலாற்றில் முதன்முதலில் தம் பெயரைத் தனித்தமிழில் மாற்றிக்கொண்டு ஓர் உந்துதல் தந்தவரைத் தனித்தமிழியக்கத்தின் முன்னோடியாகக் காண்பதில் என்ன பிழையுள்ளது என்றுதான் எனக்கு விளங்கவில்லை. அவர் மீதான கடுமையான விமர்சனங்களுக்கு முட்டுக்கொடுத்துத் தாங்கிப்பிடித்தெல்லாம் அவரைக் காப்பாற்ற வேண்டியதில்லை. ஈடு தந்து நிற்கும் ஆற்றல் அவர் எழுத்திலிருந்தால், அவர் நிலைக்கட்டும். இல்லாவிட்டால் காலம் அவரைக் கொன்று புதைக்கட்டும்.

 1. பரிதிமாற்கலைஞரைப் பற்றிப் பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்ன சொல்கிறார்?  “தமிழர்க்குச் சார்பாகவும் வெளிப்படையாகவும் பார்ப்பனரின் ஏமாற்றுத்தனங்களை அவிழ்த்துக் காட்டிய இவரே, தமிழர்களுக்கு மாறாகவும் பல நச்சான கருத்துகளை அந்நூல் (தமிழ் மொழியின் வரலாறு) முழுவதும் தெளித்துவிட்டிருப்பது ஆரியர்தம் திரு விளையாடல்களில் ஒன்று…. திரு.வி.கோ.சூ. அவர்கள், தமிழ் மொழிக்கு ஏற்றந் தருமாறு வடமொழிக் கலப்பைத் தவிர்த்தவர். தனித்தமிழ்க் கொள்கையை வலியுறுத்தியவர். அவ்வாறு தாம் செய்வதை உண்மையென்று பிறர் நம்புமாறு தம் பெயரையே தூய தமிழ் மொழிபெயர்ப்பாகப் பரிதிமாற்கலைஞர் என்று வைத்துக்கொண்டவர். அதற்காகத் தமிழ் மக்கள் என்றென்றும் அவருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டவர்கள்தாம்” எனக் கடுமையாக விமர்சிக்கும்போதும், தனித்தமிழ்க்கொள்கையை வலியுறுத்தியமைக்காகப் பரிதிமாற்கலைஞருக்குப் பெருஞ்சித்திரனார் நன்றியுரைத்துள்ளார். பரிதியாரின் நச்சுக் கருத்துக்களுக்குப் பாவலரேறு சுட்டும் சில சான்றுகளில் ஒன்றே, ‘இந்து தமிழ் திசை’ (10.07.2020) நாளிதழிலும் காட்டப்பட்டுள்ளது. பிற பிராமண நூலாசிரியர் போலின்றி, “இவர் தமிழ் மொழி பற்றிய உண்மையான கருத்துக்களைச் சொன்னது பாராட்டுக்குரியதே. ஆனாலும், அவர் அவற்றைச் சொல்லுமுகத்தான், தம் உள்நோக்கத்தை மறைத்துவிட முடியவில்லை” எனக் கூறிவிட்டு, “அவர் ஒருவேளை அக்கருத்துகளை மறைமுகமாகச் சொல்வதற்குத்தானோ, அவ்வாறு நடுநிலையாளர் என்று பிறர் கருதுமாறு நடந்து கொண்டார்?” என்று அவருக்கே உரிய தனிமுறையில் வினாவையும் எழுப்பியுள்ளார் பெருஞ்சித்திரனார். இருக்கட்டும். இதற்கும்கூடப் பரிதியார் பதிலளித்திருக்கிறார். “யாம் எமது ஆங்கிலக் கல்வியின் பயனாகப் பழைய தமிழ் நூற் கருத்துக்கள் சிலவற்றோடு முரணிப் புதுக்கருத்துக்கள் சில ஆங்காங்குக் காட்டியிருத்தல் பற்றிப் பேரறிவாளர் எம்மை இகழாது நூன் முழுவதும் உற்று நோக்கி இஃது அமையும் அமையாதென இறுதியிற் கூறுக” (தமிழ் மொழியின் வரலாறு) என்கிறார். இந்நூலில் பரிதியார் கூறியுள்ள சில விடயங்கள் பற்றிய பெருஞ்சித்திரனாரின் கடுமையான மறுப்புகளை இந்நோக்குடன்தான் அணுகவேண்டும். அதற்கு இக்கட்டுரையில் இடமில்லை. இங்குச் சிறப்பாகக் கவனம் கொள்ளவேண்டியது வேறு. எவ்வளவு வேகமாகப் பரிதியாரைப் பாவலரேறு விமர்சித்து எழுதினாலும், ‘தனித்தமிழ்க் கொள்கையை வலியுறுத்தியவர்; தம் பெயரையே தூய தமிழ் மொழிபெயர்ப்பாகப் பரிதிமாற்கலைஞர் என்று வைத்துக்கொண்டவர்” எனப் பரிதியாரின் தனித்தமிழ்ப் பங்களிப்பை அவர் ஏற்றுக்கொள்வதுதான் கவனிப்புக்குரியதாகும். மேலும், திட்டவட்டமாகப் பரிதியாரைத் தீர்த்துக்கட்டிவிடாமல், ‘ஒருவேளை’ என்ற ஒரு நுண்ணிய சொல்லைப் பெருஞ்சித்திரனார் கையாண்டிருப்பதும் எண்ணுதற்குரியது. தமிழ்நாட்டுச் சூழலில் நெடுங்காலமாகச் செயல்பட்டு வரும் ‘பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார்’ அரசியல் நோக்குச் சார்ந்தே, (நாடகங்களில் பயின்று வரும் இழிசினர் வழக்குப் பற்றிய ‘கிராம்ய பிரயோக நிபந்தனம்’ என்ற வேதம் வேங்கடராய சாஸ்திரிகளின் வடமொழி நூலைப் பரிதியார் ‘இழிசினர் வழக்கு வரையறை’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், இந்நூல் கிடைக்கவில்லை). பரிதியார் மீதான பெருஞ்சித்திரனாரின் இந்த இன நலன் சார்ந்த விமர்சனங்களைக் கவனமாக ஆராய வேண்டும். மொழியியல் மற்றும் சமூகவியல் அறிஞர்கள் செய்ய வேண்டிய பணி அது. ‘ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்’ (2005: பக்.22, 38, 40) என்ற தம் நூலில், “எங்கோ ஒரு பாரதியார், பரிதிமாற்கலைஞர் இருந்தார் என்பதற்காகப் பார்ப்பனர்கள் தமிழர்களாகிவிட அவர்களே அணியமாக இல்லை” என்கிறார் பெருஞ்சித்திரனார். இங்குப் பரிதிமாற்கலைஞரின் தனித்தமிழ்ப் பங்களிப்பைப் பாவலரேறு உளங்கொண்டுள்ளார் என்பதுதான் அறியப்பட வேண்டியதாகும்.

 1. ஊதியக்குறைவு, நிகழ்காலத் தாழ்வு, எதிர்கால இருள், எதிர்மறைப்புகழ், ‘பெருமல்’  ஆகிய இருமல் இவற்றோடு இடையறாது போராடுபவராக வி.கோ.சூ. இருந்தார்.தமது       ‘மானவிஜயம்’ நூலைத் “தமது நண்பர் எனப் பெறாதார்” யாவருக்கும் செம்மையுற உரிமை செய்த இவர், தம் சம காலத்தவரால் விநோதமானவராகவே பார்க்கப்பட்டார். செந்தமிழைக் காசுக்கு விற்காத புலமைப் பெருமிதம் நிறைந்த இவர், “நீண்ட காலம் உலகில் வாழ்ந்திருந்தால் தமிழ் அன்னை இழந்த அரியாசனத்தில் இவர்ந்திருப்பாள். முத்தமிழும் ஆக்கம் பெற்றிருக்கும்” என்பார் தி.ரு.வி.க. இது ஒரு சரியான மதிப்பீடு.  தம் ஓய்வின் பின், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் (கோதீர்த்தபுரிச் சர்வகலாசாலை!) பேராசிரியர் பணிக்கு, போப்பால் பரிந்துரைக்கப்பட்ட பரிதிமாற்கலைஞர், ஒருவேளை இன்னும் பத்தாண்டுகள் வாழ்ந்திருந்தால், யார் கண்டார், இவரும் தனித்தமிழியக்கம் கண்டிருக்கக்கூடும். இத்தகையவரின் நவீனக் கால உணர்வு பற்றிய க.கைலாசபதியின் கருத்துகள் முக்கியமானவை. “தமிழிலக்கியத்திலே நவீனக் காலத்துக்குரியவரான பரிதி மாற்கலைஞர், தனது முக்கியத்துக்கேற்ற மதிப்பீட்டையும் சிறப்பையும் பெற்றிருக்கிறார் என்று கூறவியலாது. வரலாற்றுப் பார்வையிலே ஒருவரை நாம் முக்கியமானவர் என்று குறிக்குமிடத்து, அவர் சாதித்தவற்றை மட்டுமன்றிச் சாதிக்க எத்தனித்தவற்றையும் சேர்த்தே மதிப்பீடு செய்கின்றோம். அந்த வகையில், பரிதிமாற்கலைஞர் சிறப்புறச் செய்து முடித்தவையும், செய்ய முயன்று தோல்வியடைந்தவையும், அவரது குறை நிறைகளை மாத்திரமல்லாது, அவரை அவ்வாறு ஆக்கிய காலச் சூழ்நிலையையும் தெளிவுற அறிந்து கொள்வதற்கு உதவுவனவாகையால், இலக்கிய வரலாற்றில் அவர் பெறவேண்டிய மதிப்பு மிக உயர்ந்ததாகும்….. அவர் பொதுவாகத் தமிழ் மொழியைப் பற்றிக் கொண்டிருந்த கருத்துக்கள் அக்காலத்தவர் பலர் கொண்டிருந்த கருத்துக்களினின்றும் வேறுபட்டன. மூன்று அம்சங்கள் இங்குக் கவனிக்கத்தக்கவை: செந்தமிழைத் தனது பேச்சிலும் எழுத்திலும் பெருமளவு பயன்படுத்தியமை; தனித்தமிழ் என்ற கோட்பாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தமை; தாய்மொழி மூலம் கல்வி என்ற கொள்கையை வற்புறுத்தியமை இம்மூன்றும் இன்றுவரை வெவ்வேறு வடிவத்திலும் வகையிலும் தொல்லை தரும் பிரச்சினைகளாக இருந்துவருவது கண்கூடு. எனவே இவை பற்றிப் பரிதிமாற்கலைஞர் கூறியிருப்பவை கூர்ந்து நோக்கத்தக்கவை” என்கிறார் க.கைலாசபதி. இங்குத் தனித்தமிழ் என்ற கோட்பாட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தவராகப் பரிதிமாற்கலைஞரைக் க.கைலாசபதி மீள்மதிப்பிட்டுள்ளதைச் சிந்திக்கவேண்டும்.

 1. சென்னைக் கிறித்தவக் கல்லூரி முதல்வராகவும், பின்னாளில் சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் பணியாற்றியவர் டாக்டர் வில்லியம் மில்லர் (1838 – 1923). இவர் பரிதிமாற்கலைஞரின் ஆங்கிலப் பேராசிரியராவார். ஒருநாள் கல்லூரி வகுப்பில் வருகைப் பதிவு எடுக்கும்போது, ‘சூரிய நாராயணன்’ என்ற பெயரை உச்சரிக்க முடியாமல் மில்லர், “நாளை உன் பெயரை நீ மாற்றிக்கொண்டு வா” என்று கூறினாராம். மறுநாள் வகுப்பில், “என்ன, பெயரை மாற்றிவிட்டாயா?” எனக் கேட்டாராம். அதற்கு இவர் மாற்றி விட்டதாகச் சொல்ல, “இப்போது உன் பெயர் என்ன?” என மில்லர் வினவ, “சூரிய நாராயண சாஸ்திரி” என்றாராம் இவர். “இத்தனை நீளமா! இதுவா நீ பெயரை மாற்றி வரும் அழகு!” எனக் கடிந்துகொண்டாராம். “நீங்கள் என் பெயரை மாற்றத்தானே சொன்னீர்கள்? சுருக்கச் சொல்லவில்லையே!” என வி.கோ.சூ. கூற, வியந்து மில்லர் இவரைப் பாராட்டினாராம். டாக்டர் மில்லரை, “மெல்லியலார்தம் வலையில்வீழாக் குருமணி” (‘பாவலர் விருந்து’) எனப் பரிதியாரும் புகழ்ந்துள்ளார்.(1903இல் அற்பாயுளில் தம் 33ஆம் வயதில் பரிதியார் இறந்தபோது, “என் புருவம் சுருக்கமேறிக் கண் மறைக்கும் முதுமையில் வாடுகிறேன் நான், ஆனால் நடுவயது வருவதற்கு முன்னரே நற்றமிழ்ப் பரிதி அகன்றானே!” எனப் பெரியவர் மில்லர் புலம்பியதாகக் குறிப்புண்டு). சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் நான் தமிழ் படித்தபோது, என் பேராசிரியர் தி.இராசகோபாலன், இவ்வாறு சொல்லிக் கேட்டிருக்கிறேன். கல்லூரி முதல்வர் கேட்டும் இயற்பெயரை மாற்ற விரும்பாதவர், தாம் கொண்டிருந்த தனித்தமிழ்ப்பற்றால் அகந்தூண்டப்பட்டுப் ‘பரிதிமாற்கலைஞர்’  எனத் தம் பெயரைத் தனித்தமிழ்ப்படுத்திக் கொண்டார் என்ற வரலாறு, மறுவாசிப்பு என்ற பெயரில் நிகழும் ‘ஆளுமை மறுப்பு’ வாசிப்புகளைக் கடந்து என்றும் வாழும் என்பது திண்ணம்.
 2. தாமும் தம் மாணவர்களும் சில நண்பர்களும் இயற்றிய நூல்களையும் பண்டைய நூலாசிரியர்களின் நூல்களையும் நாமகள் சிலம்பு (நாடக நூல்கள்), தமிழ் மகள் மேகலை (செய்யுள் நூல்கள்), இன்பவல்லி (உரைநடை நூல்கள்), ஞானதரங்கிணி (தத்துவ நூல்கள்), கலாநிதி (மேற்சுட்டியவற்றில் அடங்காத பிற நூல்கள்) என்ற இந்த ஐந்து நூற்தொகை வகைகளுக்கும் தாமே பதிப்பாசிரியராயிருந்து தம்முடைய சொந்தச் செலவிலேயே சுமார் 67 நூல்களைப் பரிதியார் பதிப்பித்துள்ளதாக வி.சு. கோவிந்தன் குறிப்பிட்டுள்ளார். இதில்,  ‘நாமகளை’ மட்டுமல்லாது, ‘தமிழ் மகள்’ மேகலை எனத் தெளிவாகப் பிக்குணியாகிய மணிமேகலையும் உட்படுத்திப் பரிதியார் நூற்தொகுத்துள்ளதும் அறியத்தக்கதாகும். விசாகதத்தனின் முத்ராராக்ஷசத்தை மொழிபெயர்ப்பார்; பின் தாண்டவராய முதலியார் தமிழாக்கிய பஞ்சதந்திரத்தைப் பதிப்பிப்பார்; குமரகுருபரரின் நீதிநெறி விளக்கத்திற்கு உரை வரைவார். ஆங்கிலக்கவி டென்னிசனுக்கு இரங்கற்பா பாடிவிட்டுச் சித்ரகவிக்கும் விளக்கமளிப்பார். தனிப்பாசுரத்தொகையும் செய்வார்; முடி சூட்டிரட்டை மணிமாலையும் இயற்றுவார். தமிழ் இலக்கண நூல்களில் கண்ட பகாபதங்களில் பெரும்பாலானவையும் பகுபதங்களே என்பதை ‘அறு’ என்ற வேர்ச்சொல் ஆய்வுவழி நிறுவுவார்; தீயிறுதி (Tragedy) நாடகங்களும் புனைவார். புறநானூற்றின் 57ஆம் செய்யுளின் ஐந்தாம் அடியில் “பிறர் நாடு கொள்ளும் காலை” என்ற (1894: புறநானூறு) உ.வே.சா. பதிப்பில் ‘நீயே’ என்பதைச் சேர்த்துப் புதுப்பாடத்தைப் பின் உ.வே.சா. ஏற்கும்படி செய்வார்; புறநானூற்றின் 29 ஆம் செய்யுளில் இடம்பெறும் “ஊழிற்று ஆக நின் செய்கை! விழவின், கோடியர் நீர்மைபோல முறை முறை, ஆடுநர் கழியும் இவ்வுலகத்து” என்ற தொடர், ஷேக்ஸ்பியரின் ‘As you like it’ நாடகத்தின் புகழ்பெற்ற “All the World is a Stage” தொடருக்கு அடிநாதமாவதையும் அறிவிப்பார். மும்மொழிப் புலமையாளராயினும் தனித்தமிழ் அவர் தனித்தகுதியாகும்.
 3. மௌனியைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்கிறார் புதுமைப்பித்தன். அப்படி அவர் கூறிய காலத்தில், திருமூலரின் ஒரு பாடலையேனும் மௌனி படித்திருப்பாரா என்பதே சந்தேகம்தான். ஆனாலும், அப்படிப் புதுமைப்பித்தன் கூறியதில், அவரளவில் ஓர் அர்த்தம் உண்டு. “கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபட மறுக்கும் கருத்துக்களை மடக்கிக்கொண்டு வரக்கூடியவர் அவர் ஒருவரே” என்கிறார் புதுமைப்பித்தன். மௌனியை முன்னுதாரணமற்றவராகச் சிலர் சித்திரிக்க முனைந்ததன் எதிர்வினையாகவும் புதுமைப்பித்தன் இப்படிச் சொல்லியிருக்கலாம். அவர் எப்படிச் சொல்லியிருந்தாலும், மௌனியின் முன்னோடி திருமூலர் என்பதிலும் ஓர் உண்மை இருக்கத்தானே செய்கிறது? ஒவ்வொரு கொள்கைக்குள்ளும் பற்பல கிளைகள் உண்டு. ஒவ்வோர் இயக்கத்திற்குள்ளும் பொதுத்தன்மைகளுக்கிடையில் சில தனித்தன்மைகளும் ஏன் முரண்பாடுகளும்கூடச் சேர்ந்தியங்கிக்கொண்டே தானிருக்கும். இன்றும் கலைச் சொல்லாக்கத்தில் எத்தனையோ கொள்கைகள் ஊடாடி வரத்தான் செய்கின்றன. எனவே, எதையும் ஒற்றைப்படையாக அணுகும் தன்மையிலிருந்தே, ஒரே நேரத்தில் இரண்டு பெயர்களைப் பயன்படுத்தியவர், ஆங்கிலம் தமிழில் கலப்பதை ஏற்றவர் என்றெல்லாம் கூறிப் பரிதிமாற்கலைஞரைத் உயர்தனித்தமிழ்ச் சிந்தனையிலிருந்து விலக்கித் தள்ளி வெளிநிறுத்தும் முயற்சி இப்போது தொடங்கியிருக்கிறது. இப்படி மறைமலையடிகளோ திரு.வி.க.வோ பாரதிதாசனோ பெருஞ்சித்திரனாரோ தேவநேயப்பாவாணரோ பகைமுரண் கொண்டு சிந்திக்கவில்லை என்பதும், தனித்தமிழில் தம் வடமொழிப் பெயரை மாற்றிக் கொண்ட ஒரு முன்னோடியாகவே இவர்கள் பரிதிமாற்கலைஞரை இனங்கண்டார்கள் என்பதும் வரலாற்றுண்மை. இது பற்றி, “தமிழின் தொன்மையை உலகிற்கறிவித்தவர் கால்டுவெல் பெருமகனார்; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர்; செடியாகத் தழையச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகளார்! நான் மரமாக வளர்த்து வருகிறேன்” என்கிறார் தேவநேயப் பாவாணர். இன்னொன்றையும் இங்கே சுட்டலாம். “கடந்த நான்கு நாட்களாக இரவும் பகலும் நன்றாக உறங்க இயலவில்லை. அத்துடன் என் கனவில்கூட நாத்தீக சுயமரியாதை இயக்கம் என் சிந்தனையில் இடம் பெறுகிறது. இதன் சித்தாந்தங்களையும், எப்படி மறுப்பது, இதன் பரவுதலை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது குறித்து நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டுள்ளேன்” (1928:ஜுலை31:நாட்குறிப்பு) என்கிறார் மறைமலையார். இதைப் பகை முரணாக்காமல், பெரியாருடனான ஒரு நட்பு முரணாகவே கருதவேண்டும்.

    ஆளுமைகளை அவரவர் பங்களிப்பறிந்து மதிப்பிடுவதுதான் பொருத்தமானதாகும். “ஆனால், இந்தச் சூரிய நாராயணருக்கு மட்டும் ஏன் இவ்வளவு தமிழ்ப் பற்று? அதிலுந் தனித்தமிழ்ப் பற்று? நான் தனித்தமிழ் இயக்கங் காண்பதற்கு முன்பே அவர் தனித்தமிழ் உணர்ச்சி கொண்டு தம் வடமொழிப் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டாரே!” எனத் தந்தையார் கூறியதாக, அடிகளாரின் மகன் மறை.திருநாவுக்கரசு, தாம் எழுதிய ‘மறைமலையடிகள் வரலாறு’ (ப.23) நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மறைமலையடிகளே பரிதிமாற்கலைஞரைத் தம் முன்னோடியாக ஏற்றுக் கொண்டாலும்கூட, ஒருபோதும் நாங்கள் ஒரு பார்ப்பனரைத் (பிறப்பால் மட்டுமே பரிதி மாற்கலைஞர் பார்ப்பனர்!) தனித்தமிழியக்க முன்னோடியாக ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனப் பிடிவாதம் பிடிப்போரைப் பார்த்துப் பல நூறாண்டுகள் கடந்த பின்னும் தான் முன் எழுதிய அந்த வர்ணாசிரமக்கொள்கையே பழுதின்றி வெற்றி ஈட்டுவதாகக் கண்சிமிட்டிச் சிரித்துக்கொள்கிறான் புதுமையினாலும் சாகாத மனு!

Sirisharam73@gmail.com

ஆதாரங்கள்

வி.சு.கோவிந்தன், இந்திய இலக்கியச் சிற்பிகள்: பரிதிமாற்கலைஞர் (வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார்), முதற்பதிப்பு:2007, புது தில்லி.  (ISBN 81- 260 – 2463 – 1). (PDF).

ந.சுப்ரமண்யன் (பதிப்பாசிரியர்), பரிதிமாற்கலைஞர் நூற்றாண்டுவிழா மலர், வி.சூ.சுவாமிநாதன் (பதிப்பாளர்), முதற்பதிப்பு:1970, மதுரை. (PDF).

வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி, தனிப்பாசுரத்தொகை, இரண்டாம் பதிப்பு:1901 (இணையத்தில் கிடைக்கிறது)

வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி, தமிழ் மொழியின் வரலாறு, முதற்பதிப்பு:1901 (இணையம்)

இந்து தமிழ் திசை நாளிதழ், 19.07.2020. (மறை.தி.தாயுமானவன், ஜெ.சுடர்விழி கட்டுரைகள்)

பேராசிரியர் பா.மதிவாணன்: முகநூல் பதிவு (20.07.2020)

மறைமலையடிகள் என்னும் ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம், கோகிலாம்பாள் கடிதங்கள் என்னும் இப்புதுக்கதை, முதற்பதிப்பு:June 1921 (இணையம்)

ஸ்ரீலஸ்ரீ சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள், தமிழர் நாகரிகம் அல்லது வேளாளர் யாவர்?, முதற்பதிப்பு: November 1923 (இணையம்)

மறைத்திருவாளர் சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள், அறிவுரைக்கொத்து, Instructive Essays, மூன்றாம் பதிப்பு: May 1935 (இணையம்)

பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள், முதற்பதிப்பு:2005, தென்மொழி பதிப்பகம், சென்னை. (PDF). (இணையம்)