இருபத்தைந்து வருடங்களாகக் கவிதைகளையும் (எட்டுக் கவிதைத் தொகுப்புகள்) கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிவரும் பெருந்தேவி, முதல்முறையாகக் குறுங்கதைகளையும் எழுதியிருக்கிறார். அமெரிக்காவின் சியனா கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றும் அவர் எழுதிய ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ என்ற தலைப்பிலான குறுங்கதைத் தொகுதியைச் (மொத்தம் 51 குறுங்கதைகள்) சென்னை பெசன்ட் நகரிலுள்ள சஹானா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆல்பனியிலும் சென்னையிலும் ஒரே நேரத்தில் வசிப்பவரான பெருந்தேவி, அந்த விநோத மனோநிலையில் வாழ்ந்து பெற்ற அபூர்வத் தருணங்களின் காரணமாகவே, வகைபிரித்து எளிதாக விளக்கிவிட முடியாத பலவித எண்ண அலைவுகளையும்

இக்குறுங்கதைகளுக்குள் இழுத்துக்கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். 

மே 2020 முதல் ஜூலை 2020 வரையிலான மூன்று மாதங்களில் எழுதி முடிக்கப்பட்ட கதைகள் இவை. அரேபிய ‘ஆயிரத்தொரு இரவுகள்’ கதைகளின் வழியாகச் சாவைத் தள்ளிவைக்க முடியுமென்ற ஷரசாத்தின் நம்பிக்கையிலிருந்து உத்வேகம் பெற்று இக்கதைகளைக் கொரோனா காலத் தனிமையில் தாம் எழுதியதாகப் பெருந்தேவி குறிப்பிட்டுள்ளார். குறுங்கதை என்ற பதத்தை நுண்கதை (micro fiction) மற்றும்

ஒளித்தெறிப்புக் கதை (flash fiction) என்ற இரண்டு வகைகளிலும் பெருந்தேவி பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகின்றது. இத்தகைய தமது குறுங்கதை முயற்சிகளுக்கு முன்னோடிகளாகக் காஃப்கா, போர்ஹெஸ், எர்னஸ்ட் ஹெமிங்வே, யாசுனாரி கவாபட்டா, ஜூலியோ கொத்தஸார், லிடியா டேவிஸ், எட்கர் கெரெட், ஸ்டூவர்ட் டைபெக், டேவிட் காஃப்னி  போன்ற பலரைப் பெருந்தேவி சுட்டிக்காட்டுகின்றார். சமகாலத் தமிழிலும் பா.ராகவன், சுரேஷ்குமார் இந்திரஜித், எஸ்.ராமகிருஷ்ணன், பேயோன் ஆகியோரைக் குறிப்பிடுகின்றார்.

இக்குறுங்கதைத் தொகுப்பைத் தம் ஆசானும் காதலனுமாகிய புதுமைப்பித்தனுக்குப் பெருந்தேவி சமர்ப்பித்திருக்கிறார். அவர் அதைக் கூறாவிட்டாலும்கூட, நவீனத் தமிழ்ச் சிறுகதையின் பிதாமகரான புதுமைப்பித்தனின் ‘இது மிஷின் யுகம்’ என்ற ஆகச்சிறந்த படைப்பிலிருந்தே,

நவீனத் தமிழ்க் குறுங்கதையும் தொடங்குவதாகக் கருதுகிறேன். அதற்குமுன் வெளிவந்த பாரதியாரின் ‘ஆனைக்கால் உதை’ போன்ற கதைகளையும், மாதவையாவின் ‘குசிகர் குட்டிக் கதைகள்’ போன்ற கதைகளையும் ‘வழிகாட்டும் முயற்சி’களாக எடுத்துக்கொள்ளலாம்.  தி.ஜானகிராமனின் ‘அபூர்வ மனிதர்கள்’ தொகுப்பிலும், ஆகச்சிறந்த குறுங்கதைகள் சில உண்டு. நகுலன் மற்றும் கோபிகிருஷ்ணனின் மிகப்பல கதைகளும்கூட இக்குறுங்கதை வரையறைக்குள் வருபவையே. தீவிர இலக்கியத்தளத்தில் அவ்வளவாகப் பொருட்படுத்தப்படாத காசி ஆனந்தனின் சில முயற்சிகளும் என்னளவில் குறிப்பிடத்தக்கவையே. அண்மையில் வெளியான பெருமாள்முருகனின் ‘மாயம்’ சிறுகதைத் தொகுப்பிலும் இவ்வகைக் கதைகள் சில உண்டு. எனினும், நவீனத் தமிழில் இதன் சிகரம், அசோகமித்திரனின் ‘ரிக் ஷா’தான்.

இருநூறு, முந்நூறு வார்த்தைகளில் அமையும் ஒரு குறுங்கதையை எழுத, திருத்தச் சில மணி நேரங்கள் ஆகின்றன என்கிறார் பெருந்தேவி. அவரின் அந்தக் கடின உழைப்பின் பயன், இக்குறுங்கதைகளின் வடிவச் செறிவில் நன்கு புலப்படுகின்றது. நாவலைக் கற்தச்சரின் ஆக்கத்தோடும் குறுங்கதையைப் பொற்கொல்லரின் ஆக்கத்தோடும் ஒப்பிடுகிறார் பெருந்தேவி. சரிதான். ஒரு காதுக்கு ஒரு தோடு போடுவதே

அழகு என்பார் தி.ஜானகிராமன். அப்படியான ஒருதோடுடைய செவியன்கள் என்று இவற்றை நாம் மதிப்பிடலாம். இப்போது இக்தைகளுக்குள் (அதாவது முதல் ஏழு கதைகளுக்குள் மட்டும்), ஓர் உலாப் போய்வரலாம்.

‘தவறைச் சரி செய்தல்’ என்ற முதல் கதையே அருமையாக உருப்பெற்றிருக்கிறது. கதையைப் புரிந்துகொள்ளத் தலைப்பும் முடிவும் சிறப்பாகக் கைக்கொடுக்கின்றன. “நீங்கள் நாலுகால் பிராணிக்கு ஏதோ துன்பம் தந்திருக்கிறீர்கள். அதுதான் மனக்கஷ்டப்படும்படி இப்படியெல்லாம் நடக்கிறது. அதைச் சரி செய்யப் பாருங்கள்” என்கிறார் குடும்ப ஜோசியர். “இந்த ஜோசியர்கள் என்றைக்கு எதைச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்?” என்பதுதான் கதையின் கடைசி வரி. குற்றவுணர்வைப் போக்கிக்கொள்ளச் செலுத்தப்படுவது அன்பாய் இருக்க முடியுமா என்ற கேள்வியைக் கதை உசுப்பிவிடுவதாக அவதானிக்கிறேன். இரண்டு சொறி நாய்களின் அருகே குனிந்தபடி, ஒவ்வொன்றிடமும் ‘மன்னித்துக்கொள், மன்னித்துக்கொள்’ என்றிறைஞ்சும் ஒரு நவீன யுவதியைக் கண்முன் கொண்டு நிறுத்துவதில் பெருந்தேவிக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவே தோன்றுகிறது. 

அடுத்த கதை, இத்தொகுப்பின் தலைப்புக் கதையான ‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’. இதைக் ‘கட்டடத்தில்’ என்று போடுவதுதானே சரி என்று சிந்திக்கும் என் தமிழாசிரிய மூளையைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டுக் கதையை மட்டும் ஆராய விரும்புகிறேன். மிக நவீனமான ஒரு மொழிக் குசும்பு பெருந்தேவிக்கு வசப்பட்டிருப்பதை, இக்கதையில் வரும் “எல்லாப் பாதிரியாரும் சிங்கிள்தான் என்று ஒரு மாணவன் பல்பு கொடுத்ததைக் கேட்டேன்” என்ற தொடரால் அறிகின்றோம்.

சிங்கிள் பாதிரிப் பேயைக் கண்டு எல்லாரும் பயப்படுகிறார்கள்; அடிக்காவிட்டால்கூட ஆசிரியரின் குரலைக் கேட்டே பயந்தோடுகிறது பேய். நவீனக் கல்வியின் இலட்சணத்தைக் கதை பகடி செய்வதாக வாசிக்க விரும்புகிறேன். தவறான வாசிப்பும்கூட ஒருவகையான பின்நவீன வாசிப்புதானே!

மூன்றாவது கதையான ‘சுப்புணி’, ஏறக்குறைய ஓர் எதிர்ச் செவ்வியல் கதைதான். பாட்டிகள் சாகக் கிடக்கும்போது பகவானை நினைப்பதுதான் மரபு. யாரோ ஒரு சுப்புணியை நினைக்கிறாள் இந்தப் பாட்டி. “சுப்புணி என்ற பெயர் குடும்பத்தில் யாருக்குமில்லையே என்று சந்தேகத்தைக் கிளப்பினாள் ஒரு சித்தி. பிள்ளைகளுக்கோ பேரப் பிள்ளைகளுக்கோ உறவினர்களுக்கோ ஏன் தூரத்து உறவினர்களுக்கோகூட அந்தப் பெயர் இல்லையென்று சொன்னாள் பெரியம்மா. மற்றவர்கள் ஆமோதித்தனர். சுப்புணி யாராக இருக்குமென்ற கேள்வி எங்கள் மனதில் எழுந்தது”. இவள் பாட்டியாக இருப்பதால்தான், அதாவது ஒரு பெண் என்பதால்தான், இது பிரச்சனையாகிறது. இதையே தாத்தா சொல்லியிருந்தால், குடும்பத்தாருக்கு அதில் பெரிய சுவாரஸ்யம் இருந்திருக்காது என்ற தொனியைக் கதையில் பெருந்தேவி மீட்டியிருக்கிறார். “சுப்புணின்னு ஒருத்தர நாம கேள்விப்பட்டதே இல்லியே” என்பதுதான், குடும்ப உறுப்பினர்களுக்குத் தொந்தரவாக இருக்கிறது. பாட்டியின் கதை முடிந்தாலும், கற்பனையோ நிஜமோ சுப்புணி  அவ்வளவு எளிதாக உறவினர் மற்றும் வாசகர் நினைவிலிருந்து  மறையப்போவதில்லை! இத்தொகுப்பின் ஆகச்சிறந்த குறுங்தையாக, இதையே முன்வைப்பேன். உள்ளடுக்குகள் பல நிரம்பிய ஒரு கதை இது.

‘குழந்தையின் இருமல்’ என்ற நான்காவது கதையும், மறக்க முடியாத ஒன்றே. “முழு ஆளுக்கான எந்தச் சுகத்தையும் சோகத்தையும் குழந்தை அனுபவித்திராதபோதும் முழு ஆளைப்போல அதுவும் எதையோ வெளியே தள்ளப் பார்க்கிறது. சின்ன நெஞ்சிலிருந்து இருமித் தள்ளி அதனோடு போராடுகிறது. வாழ்க்கையையே தொடங்காத ஒரு குழந்தை ஒரு முழு ஆளுக்கான இருமலை இருமுவது அநீதி என்று அவளுக்குப் பட்டது. ஆனால், இந்த அநீதிக்காக, யாரிடம் போய் முறையிட முடியும்?” என்ற வலிமையான ஒரு கேள்வியைக் கதை எழுப்பிவிட்டுவிடுகிறது. குறைவான சொற்களில் பெரும்

அனுபவங்களைக் கிளறிவிடும் மொழித்திறன் இதிலிருக்கிறது.

‘ஜானுவும் ராமும்’ என்ற ஐந்தாம் கதை, வயதேறிய தம்பதியினரின் நேசம் மறக்காத நெஞ்சத்தையும் ஆசை முகம் மறந்துபோன கொடுமையையும் பதிவுசெய்கிறது. இங்கே ஜானு, ராம் என்ற பெயர்கள் வகைமாதிரிகளே. முதுமையில் உலகம் முழுவதும் வாழ்க்கை இப்படிச் சிக்கலாகத்தானே இருக்கிறது? இத்தொகுப்பின் முதன்மையான சிறப்பாகத் தனிமனிதத் துயரங்களைப் பொதுவான சமூக வாழ்வின் பிரிக்க முடியாத பகுதிகளாகக் காணும் ஒரு கலை நோக்கைக் குறிப்பிடலாம்.

‘வாதிடப் பழகுதல்’ என்ற ஆறாவது கதை, ஒரு கருத்தியல் கதை. இவ்வுலகில் இன்றுவரை நிலவும் ‘ஆண் – பெண் பேதமே’, இக்கதையின் பேசுபொருள். 

“போடி, எங்கப்பா நெனச்சாருன்னா டயனோசரையே வேட்டையாடுவாரு” என்கிற சிறுவனுக்கு, “என்னோட அப்பா டயனோசரைவிடப் பெரீய டயனோசரை அடிச்சி இழுத்துட்டு வருவாரு. அதோட பல்லுங்கள நான் பூக்கட்டி வச்சிப்பேன்” எனப் பதில் சொல்லச் சிறுமிக்கு ஏன் தோன்றுவதில்லை? இந்தக் கேள்விதான், இக்கதையின் மையம் அல்லது விளிம்பு. “அப்படித் தனக்குச் சொல்லத் தோன்றாததை எண்ணி அவளுக்கு அழுகையாய் வந்தது” என்றெழுதிக் கதையைத் திருப்பிவிடுகிறார் பெருந்தேவி. ஆணைக் காயப்படுத்த விரும்பாதவள் பெண் என்ற மரபான விளக்கத்தைவிடப் போர்க்கலை நுட்பம் இன்னும் பழக வேண்டியவள் சிறுமி என்ற நவீன நோக்கையே, இங்குப் பெருந்தேவி கருதுவதாகப் புரிந்துகொள்கிறேன்.

மண்ணிலிருந்து தொற்றுநோயாக விண்ணுக்குப் பரவும் அழுகையைப் பேசுகிறது, ‘அழுமூஞ்சிகளின் ஊர்’ என்ற ஏழாவது கதை. “அந்த ஊரில் எல்லாத் தெருக்களும் கண்ணீரால் நிரம்பி வழிந்தன. அதனால் ஒரு தெருவிலிருந்து இன்னொன்றுக்குப் போய்வரப் படகுப் போக்குவரத்து மட்டுமே அங்கே இருந்தது” எனக் கேலி செய்கிறார் பெருந்தேவி. நமது உள்ளீடற்ற வாழ்க்கையின் வெளிப்பகட்டு ஆரவாரங்களை இரக்கமற்று விமர்சிக்கின்றார். ஒரு பெண்ணியத் தன்னிலையின் வலுவான குரலாகப் பல கதைகளில் ஒலிக்கின்றார். ஒரு புனைவில் அரசியல் சரித்தன்மை இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது பற்றிய விவாதங்களுக்குள்ளும் இக்கதைகள் நுழைகின்றன. மொழி நடையிலும் பாத்திரச் சித்திரிப்பிலும் சம்பவங்களின் அடுக்குகளிலும் தொடக்கம் முடிவிலும் ஒரு  கூர்ப்பு இருக்கிறது. அப்பாவித்தன்மை இல்லாததைக் குறையாகப் பலர் உணரலாம். நிறையாகவே அது எனக்கு அர்த்தப்படுகிறது. இப்படியே நான் ஐம்பத்தொரு கதைகள் குறித்தும் விரிவாக எழுதிக்கொண்டே போகமுடியும். இத்தொகுப்புக் கதைகளின் நிறைகுறைகளைப் பேசும் அதிகார விமர்சனத்தைத் தவிர்த்துச் சில புரிதல்களை மட்டுமே முன்வைத்துத் தீவிர வாசகர்களின் வாசிப்புச் சுதந்திரத்திற்கு வழிவைத்து ஒதுங்கிக்கொள்வதே நான் இங்குச் செய்ய வேண்டியது என்று உறுதியாக நான் நம்புவதால், முதல் ஏழு கதைகளுடன் விளக்கங்களை நிறுத்திக்கொண்டு, ஒருசில முக்கியப் பார்வைகளை மட்டும் கவனப்படுத்துகின்றேன். 

மரபானவர்களைக் கொஞ்சம் ஆட்டிப் பார்க்கும் கதைகள் (பொழுது விடிஞ்சா பிச்சைக்காரனுக்கு, படுக்கையறைகளின் கதை), ஒரேயடியாய்க் காலிசெய்துவிடும் கதைகள் (போகாதே, யதார்த்தம்), மதிப்பளித்துப் பேணிக்கொள்ளும் கதைகள் (இப்படித்தான் சமயத்தில், பயணம்: அறிவுரை), பெண் முதன்மைக் கதைகள் (ஆப்பிள், துச்சலை), மனவெளிக் கதைகள் (மேடைகள், மனம் எடுக்கும் முடிவு),  ஆன்மீகக் கதைகள் (பாட்டிலான், சித்த புருஷர்) எனப் பல வகைக் கதைகளைப் புனைந்திருக்கிறார் பெருந்தேவி. இவற்றின் அடிப்படைப் பண்புகளாக ஊசலாடும் மானுட மனம், பொதுபுத்தியுடன் சார்ந்தொழுக முடியாமை, காதலின் அல்லது காதலின்மையின் வலிகள், தனிமையின் துயரங்கள், அங்கீகாரத்துக்கு ஏங்கும் புலம்பல்கள், பாலின பேதங்களின் சிடுக்குகள், வெறுமையின் ரணங்கள் முதலியவற்றைக் குறிப்பிடலாம். உணர்வுகளுக்குள்ளும் விழித்துக் கொண்டிருக்கும் அறிவின் ஆட்சியைப் பரவலாக இக்கதைகளில் காண்கிறோம். ‘ஒரு மெஸேஜை வாசிப்பது எப்படி?, நகர்ந்து செல், உண்மையில் உண்மை ஒரு அசெளகரியம்’ (ஓர் அசெளகரியம் எனப் போட்டிருக்கலாமே!) எனச் சில கதைகளின் தலைப்பிலேயே நவீன மனத்தின் இயக்கத்தைப் பெருந்தேவி புனைந்துவிடுகிறார். இந்த நவீன மனம்தான், இக்கதைகளுக்கு ஓர் ஆழத்தையும் அழுத்தத்தையும் கொடுக்கின்றன என்று தோன்றுகின்றது. இதன் நீள அகலமறிய, ‘இது நடந்த கதை’யைக் கவனமாக  வாசித்துப் பாருங்கள். 2021இல் எழுதப்படும் கதைகள் இவை என்ற புரிதலுடன் இவற்றைப் பெருந்தேவி புனைந்துள்ளமையே, இவற்றின் சிறப்பென்பேன்.

இவை துணுக்கு ஜாலமில்லை; மொழி விளையாட்டில்லை; விடுகதைப் புதிர்களில்லை; விதண்டாவாதங்களுமில்லை. தீவிரச் சிந்தனையைக் கோரி நிற்கும் கலைநயம் மிளிரும் குறுங்கதைகள் இவை. இந்த நினைப்புடன் இவற்றை அணுகி வாசிப்போருக்கு, ஒருபோதும் இவை ஏமாற்றமளிப்பதில்லை எனக் குறிப்பிடத் துணிகிறேன். “தூராதி தூரத்தில் இன்னும் இருக்கிறவனுக்காக இங்கே இவள் இருக்கிறாள். ஆனால் காத்திருக்கவில்லை” என்று மிகச் சில சொற்களில் ஒரு முழுக் கதையையே வரைந்துவிடும் படைப்பாற்றல் பெருந்தேவியிடம் இருக்கிறது. அவருக்குச் சொல்வதற்கு ஒன்றுதான் எனக்குண்டு. புனைவு மொழி வசப்பட்டுள்ள அவர், குறுங்கதைகளிலிருந்து சிறுகதைகளுக்கும் சிறுகதைகளிலிருந்து நாவல்களுக்கும் இனிமேல் பயணிக்க வேண்டும். எல்லாவற்றையும் குறுங்கதைகளாகவே எழுதித் தீர்க்கப் பார்க்கும் தணியாத ஆவலைக் கொஞ்சம் அவர் மடைமாற்றிக்கொண்டால், அவரால் நவீனத் தமிழுக்கு மேலும் பல புது வரவுகள் சாத்தியப்படலாம்.

ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்
சிறுகதைகள்
சஹான பதிப்பகம்
140