‘நெஞ்சையள்ளும் மணிமேகலை’ கட்டுரையின் இணைப்பிரதி

மனையுறை வாழ்விலிருந்து பெண்ணை வெளியேற்றிப் பொதுவெளிக்குள் நிறுத்திப் பெண்ணின் அகப்புறப் போராட்டங்களுக்கும் எதிர்ப்புணர்வுகளுக்கும் முகங்கொடுத்த முதல் தமிழ்க் காப்பியம் மணிமேகலைதான். சிலப்பதிகாரத்துக் கண்ணகியும், மாதவியும் ‘கோவலன் என்ற ஆணை’ மையமிட்டுத் தம் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களேயல்லாமல், மணிமேகலைபோல் சுதந்திரமாகச் சிந்தித்துக் குடும்பச் சார்பின்றிச் செயல்பட்டவர்கள் இல்லை. கொண்ட கணவனைக் கொன்றமைக்காக நீதிகேட்டுக் கொடுங்கோல் மன்னனாகப் பாண்டியனைக் குற்றஞ்சாட்டித் தலைநகரைத் தீக்கிரையாக்கிப் பத்தினித் தெய்வமாகிப் பொதுமக்கள் தொழுது வணங்கக்கூடியவளாகக் கண்ணகி உயர்ந்திருக்கலாம்; இறந்துபட்ட கோவலனுக்காக மனம் பொங்கித் துடித்துக் கணிகையர் வாழ்வைவிட்டு நீங்கிப் பௌத்தத் துறவியாகித் தியாக வாழ்வுக்குத் தன்னை மாதவி அர்ப்பணித்திருக்கலாம்; ஆனால் இவ்விருவரும் கணவனுக்காக இப்படியெல்லாம் தங்களை மடைமாற்றிக் கொண்டவர்களே தவிரப் பொது நியாயங்களுக்காகப் போராட முனைந்த பெண்களில்லை என்பதை நாம் மனங்கொள்ளவேண்டும்.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தன், தமிழிலக்கிய வரலாற்றில், சில மகத்தான பெருமைகளுக்கு முதலுரிமையுடைய பெருங்கவிஞராவார். ஒரு பெண்ணின் பெயரைக் காப்பியத்துக்குத் தலைப்பாகச் சூட்டிப் பெண்மைக்குப் பெரும்வலிமை சேர்த்த முதல் தமிழ்ப் படைப்பாளி சீத்தலைச் சாத்தனார் என்பதைத் தமிழர் மறந்துவிடக்கூடாது. இன்றைக்குப் பின்நவீனத்துவக் கோட்பாட்டில், ‘பன்மை (Plurality)’ என்பதும், ‘மற்றமை (other)’ என்பதும் மிகப்பெரிதாகப் பேசப்படுகின்றன. இவற்றைப் பழந்தமிழிலக்கியப் பரப்பில், தமது மணிமேகலைக் காப்பியம் மூலமாகப் பரவலாகச் சாத்தனார் பேசியுள்ளார் என்பது, அறியவும் ஆராயவும் வேண்டியதாகும். இதுவரைக்கும் ‘ஒரு பௌத்தக் காப்பியம்’ என்ற மிக மேலோட்டமான சற்று  அசிரத்தையான வாசிப்புத்தான், மணிமேகலைக்கு வாய்த்திருக்கிறது. பெண்ணின் நோக்கிலிருந்தும், விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் விழிப்புகளிலிருந்தும் மணிமேகலையை உள்வாங்கி அதனுள் செயல்படும் பல்வேறு நுண்தளங்களைக் கூர்ந்தாழ்ந்து அணுகிப் பொதுமைக் கருத்தியலுக்குச் சாத்தனாரின் பங்களிப்பைக் கண்டறியும் ஆய்வுத் தேவை இங்குள்ளது. இதன் பகுதியாக,  ‘உயிர்மை’ மின்னிதழில் முன்பு வெளியான ‘நெஞ்சையள்ளும் மணிமேகலை’யின் இணைப்பிரதியாக, ‘மணிமேகலை காட்டும் பெண்கள்’ குறித்து ஆராய்வதாக, இக்கட்டுரை அமைகிறது.

சீத்தலைச்சாத்தனாரின் மணிமேகலை, கோவலன்-மாதவியின் மகளான வெறும் ஒரு மணிமேகலையின் கதை மட்டுமன்று. சித்திராபதி, வயந்தமாலை, மாதவி, சுதமதி, கோதமை, மணிமேகலா தெய்வம், தீவதிலகை, ஆதிரை, காயசண்டிகை, சம்பாவதி, கந்தில்பாவை, விந்தாகடிகை, மருதி, விசாகை, வாசந்தவை, இராசமாதேவி, தாரை, வீரை, அமரசுந்தரி, அமுதபதி, இலக்குமி, நீலபதி, சாலி, சிந்தாதேவி, நீலி, வாசமயிலை, பீலிவளை, கண்ணகி, குமரி, மதுராபதி, மணிமேகலை என்று முப்பதுக்கும் மேற்பட்ட பெண்களின் கண்ணீர்க்கதையே, மணிமேகலைக் காப்பியமாகியுள்ளது. கணவனைத் தொழுதெழும் நாணுடைப் பெண்ணைப் பெருமை பெற்றவளாகவும், பெண்ணேவல் செய்தொழுகும் நாணற்ற ஆணைச் சிறுமையுடையவனாகவும், தற்காத்துத் தற்கொண்டானைப் பேணுவதே பெண்வாழ்வின் பயனென்றும், மனைவிக்கு அஞ்சி வாழ்பவனுக்கு மேலுலகப் பயனில்லையென்றும் ஆணுக்குச் சார்பாகப் பேசும் வள்ளுவச் சிந்தனைக்கு எதிர்மாறாகப் பொருமலும் கசப்பும் ஏக்கமும் கோபமும் கேலியும் சிரிப்பும் அழுகையும் அறச்சீற்றமுமான பெண்குரல்களின் கூட்டுணர்வுத் தொகுப்பே சாத்தனாரின் மணிமேகலையாகும். கணிகையர் வாழ்வை வெறுத்துக் குடும்ப வாழ்விற்குள்ளும் சிறைப்பட்டுவிடக் கருதாமல் பிக்குணியாகிப் பொதுவாழ்வில் ஈடுபடத் துணியும் மணிமேகலையின் மனம், அச்சமும் மடமும் நாணமும் பயிர்ப்பும் பேணும் பழந்தமிழ் மரபின் மையப்போக்கிலிருந்து விலகி விளிம்பு நோக்கி விரியும் மிகப்புரட்சிகரமான ஓர் எதிர்ப்பாளுமையின் காலத்தை மீறும் கலக (Rebel) மனமாகும்.

ஆண்களுக்காகப் பெண்கள் படைக்கப்படவில்லை; மகளாகவும் மனைவியாகவும் தாயாகவும் ஏன் காதலியாகவும் தோழியாகவும் வாழ்வதைத் தாண்டிப் பொதுவெளியில் தலைவியாகவும் துறவியாகவும் தொண்டூழியக்காரியாகவும் புரட்சிக்காரியாகவும் செயல்படுவதற்கும் முழுத்தகுதியுடையவள் பெண் என்ற புதுமைச்சிந்தனையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சாத்தனார் வலியுறுத்தியுள்ள புலமைத்திறம் வியந்து போற்றத்தக்கதாகும். பெண்ணுக்கு வீடுபேறு மறுக்கப்பட்ட, ‘பழைமைவாதச் சிந்தனைகள் கோலோச்சும்’ இந்தியத் தமிழ்ச் சமூக ஆணாதிக்கச் சமய மரபுகளிலிருந்து வெகுதொலைவு முன்னேறிவந்து, பல்வேறு சமயக் கணக்கர்களோடும் திட்பநுட்பமாக வாதிட்டுத்  தன் பௌத்த மெய்ம்மையை நிலைநாட்டும் பேரறிவு படைத்த பிக்குணியாகச் சாத்தனார் மணிமேகலையைப் புனைந்துள்ளார். ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெண்ணைத் துறவியாகக் காட்டுவதும், அந்தப் பெண் தர்க்கவாதத்தால் பிறரை வெல்லும் அறிவுக் கூர்மையுடையவள் என்று புரட்சிகரமாகப் படைப்பதும் எவ்வளவு உன்னதமானவை என்பதைத் தற்போதுகூடப் புனைவுலகில் அத்தகைய ஆற்றல்சார் பெண்மாதர்கள் படைக்கப்படாமையிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

பசிதான் பெருந்துன்பம் என்பதைப் புரிந்துகொண்டு, அள்ள அள்ளச் சோறு குறையாத அமுதசுரபியைக் கையில் ஏந்திக் காண்போர் பசிப்பிணி தீர்க்கப் பாடுபடுகிறாள் மணிமேகலை. தன்னைத் துரத்தும் அரசிளங்குமரன் உதயகுமரனுக்குச் சிறிதளவு இடமளித்திருந்தால்கூடக் கோவலனால் மாதவி சுகதுக்கப்பட்டதைப் போல் மணிமேகலையும் இல்வாழ்வின் இன்பதுன்பங்களை ருசித்தறிந்திருக்கலாம். ஆனால், மாதவியை விடவும் மணிமேகலை அறிவுக்கூர்மையுள்ளவள் என்பதால், நல்வாழ்வுக்கு நம்பிக்கையளிக்காத உதயகுமரனுடன் ஒன்றி விடுவதற்கு அவள் மனம் உடன்படுவதில்லை. கோவலனிடம் மாதவி பட்ட பாட்டைக் கேட்டறிந்த கொடிய நினைவு, அவளைக் கட்டிப்போட்டுச் சற்று நிதானப்படச் செய்கிறதெனலாம். பிழைமணம், புரிந்து அவதிப்படும் மாதவியின் தோழியான சுதமதியின் அவலநிலையும்,  மணிமேகலைக்கு வழிகாட்டும் ஒளிப்புள்ளியாகிறது. இவை யாவும் இருந்துமென்ன? எவ்வளவு பிணங்கித் திசைமாறிச் செல்லத் துடித்தாலும்கூட, மானுட இயற்கைக்கு மணிமேகலையும் இணங்கித்தானே ஆகவேண்டியுள்ளது!

பளிக்கறை திறந்து பனிமதி முகத்துக்

களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகிக்

கற்புத் தானிலள் நற்றவ உணர்விலள்

வருணக் காப்பிலள் பொருள்விலையாட்டி என்று

இகழ்ந்தனனாகி நயந்தோன் என்னாது

புதுவோன் பின்றைப் போனதுஎன் நெஞ்சம்

இதுவோ அன்னாய்! காமத்து இயற்கை?

இதுவே ஆயின் கெடுக அதன் திறம்! என-

மதுமலர்க் குழலாள் மணிமேகலைதான்

சுதமதி தன்னொடும் நின்ற எல்லையுள்-  (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை: 5:84-93)

‘புதுவோன் பின்றைப் போனதோ என் நெஞ்சம்?’ என மணிமேகலை ஐயுறுவதில்லை. புதுவோனிடம் தன் மனம் போய்விட்டது என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துவிடுகிறாள். ஆனால், முன்பின் பார்த்தறியாத ஒருவனைக் கண்டவுடன் அவன்பால் மனம் செல்வதுதான் காமத்தின் இயல்பு என்றால், அத்தகைய அறிவுக்குப் பொருந்தாத காமம் கெடுக என்கிறாள் மணிமேகலை. இதைச் சொல்வதற்கு முன், அவள் ஆழ்ந்து சிந்திக்கிறாள். தன் மனம் யாரை நோக்கிப் போகிறது என்று தன்னைத் தானே திரும்பத் திரும்ப அவள் கேட்டுக்கொள்கிறாள். அரசிளங் குமரனாக உதயகுமரன் ஆட்சியதிகாரத்தில் இருக்கலாம்; பின்னர் தெரியவருவது போலப் பழம்பிறவியில் அவன் மணிமேகலைக்குக் கணவனாய் இருந்திருக்கலாம்; பாட்டியான சித்திராபதியால் தூண்டப்பட்டுக் கணிகையைக் கைப்பற்றிக்கொள்ளும் அரசுரிமையோடு மணிமேகலையை அவன் நெருங்கத் துணிந்திருக்கலாம்; கன்னிப்பருவ உணர்வுகள் மணிமேகலைக்குள்ளும் பொங்கிப் பெருகியிருக்கலாம். இவ்வளவையும் தாண்டி மணிமேகலை சிந்திக்கிறாள். இவன் யார்? கற்பற்றவள் என்றும், பொருள்விலையாட்டி என்றும் தன்னை முன்பு இகழ்ந்து பழித்தவன்தானே இந்த உதயகுமரன்! இதற்குப் பின்னும், இங்கு வந்து என்னை நயந்து நிற்கும் இவனிடம் என் மனம், முன்பு இவன் இகழ்ந்தமையையும் கருதாது ஓடிச்செல்லத் துடிக்கிறதென்றால், இத்தகைய இயற்கை இயல்புடைய காமத்தை எவ்வாறு நம்புவது? இதுதான் – இந்தப் பொங்கிப் பிரவாகமெடுக்கும் உணர்வோட்டமே காமம் என்றால், எக்கட்டுக்கும் அடங்கி ஒடுங்காத இவ்வுணர்ச்சி வெள்ளம் அழிக என்கிறாள் மணிமேகலை.

இது ஒரு கடுமையான சிக்கல். இதைத்தான் ‘வெண்ணிற இரவுகள்’ என்ற தன் நெடுங்கதையில், ருஷ்யப் படைப்பிலக்கிய மேதையான தஸ்தயேவ்ஸ்கியும் எதிர்கொண்டார். காதல் என்பது மெய்யா? இல்லை பொய்யா? மெய்போலத் தோன்றும் பொய்யா? இல்லை பொய்போலத் தோன்றும் மெய்யா? இவை எல்லாமும்தான், அதே வேளையில் இவற்றில் எந்த ஒன்று மட்டுமே இல்லையும்தான்!  இந்தப் புரிதலைத்தான், இறுதியாக,‘வெண்ணிற இரவுகளில்’ அடைகிறோம். இக்கருத்தியலில், தஸ்தயேவ்ஸ்கிக்குச் சாத்தனாரைத் (தமிழ்க்காதலைப் பொதுவெளி நோக்கி விரிவுசெய்த) முன்னோடியாகத் துணியலாம். காமத்தின் தோற்றுவாயைத் தோண்டிக்காட்டும்  புதிருக்குப் பௌத்தமரபில் நின்று விடைகாணும் பொருட்டுப் பழம்பிறவியைக் கற்பிக்கும் சாத்தனார், சென்ற பிறவியில் உதயகுமரனும் மணிமேகலையும் கணவனும் மனைவியுமாய் இருந்ததைக் கூறிச் சிக்கலைத் தளர்த்துகிறார். ‘நின் செவ்வி முகந்து தன் கண்ணால் பருகாள்’ என்றும், ‘ஊழ்தரு தவத்தள்’ என்றும், ‘சாப சரத்தி’ என்றும், ‘காமம் கடந்த வாய்மையள்’ என்றும் பலபட விதந்துரைத்துப் பிறவித்துறவியாக மணிமேகலையைச் சுதமதி காட்ட முனைந்தாலும், உதயகுமரனை நோக்கி மணிமேகலையின் மனம் விரைந்து தாவுவதைத் தவிர்க்கச் சுதமதியால் முடிவதில்லை. இதற்குப் ‘பூர்வ ஜென்ம பந்தம்’ என்ற ஊழ்வினையைச் சாத்தனார் கருவியாக்குகிறார்.

என்னமர் காதலன் இராகுலன் ஈங்கிவன்

தன்னடி தொழுதலும் தக என வணங்கி

அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்

இறைவளை முன்கை ஈங்கிவன் பற்றினும்

தொன்று காதலன் சொல்லெதிர் மறுத்தல்

நன்றியன்று என நடுங்கினள் மயங்கி  (மணிபல்லவத்துத் துயருற்றகாதை:8:128-133)

எனக் கணவனின் அடிதொழுது வணங்குவதுடன், தன்கையை அவன் பற்றிக்கொள்ளவும் இடமளித்துவிட்டுத் தொன்று காதலன் சொல்லெதிர் மறுத்தல் நன்றியன்று என்றுமுரைத்துக் காதலாகிக் கசிந்துருகி கல்நெஞ்சு கரைந்து கண் மயங்குகிறாள் மணிமேகலை. இதுதான் அவளுடைய உண்மையான உள்ளம்! எனினும், ‘மாதவி-கோவலன்; சுதமதி-மாருதவேகன்’ எனத் தன்முன் திரண்டுகிடக்கும் பல கசப்புகளைக் கருதித் தன் மனத்துக்குக் கடிவாளமிட அவள் முனைகிறாள். அதற்குச் சாத்தனாரின்  பௌத்தமும் பெருந்துணையாகிறது. முழுவதுமாகத் தன்னைத் தவிக்கவிட்டுவிட்டுக் கட்டுப்பாடிழந்து உதயகுமரனிடம் சென்றுவிட்ட தன்நெஞ்சத்தைப் பிடித்திழுத்துத் தன்பால் திருப்பிக்கொள்ளப் பௌத்த நிலையாமைக் கொள்கையைப் பின்வருமாறு மணிமேகலை பயன்படுத்திக் கொள்கிறாள்.

பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்

இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்

மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து 

மிக்க நல்லறம் விரும்புதல் புரிந்தேன்

மண்டமர் முருக்கும் களிறு அனையார்க்குப்

பெண்டிர் கூறும் பேரறிவு உண்டோ?”  (உதயகுமரன் அம்பலம்புக்க காதை:18:136-141)

எனக் கேலியாகக் கேட்டுத் தன்னைக் காதலிக்கும் உதயகுமரனிடம் ‘மிக்க நல்லறம் விரும்பி’ மணிமேகலை உரையாடுகிறாள். இப்படி இங்கு மணிமேகலை, இடும்பைக் கொள்கலமாக யாக்கையை இழித்துப் பேசினாலும், பெண்டிர் கூறும் பேரறிவுக்கு ஆண்முதன்மைச் சமூகத்தில் உரிய மதிப்பில்லாத நிலைமையால்தான், இவ்வாறு அவள் கேலி பேசுகிறாள் என்பது வெளிப்படையாகும். இதன்பின் உதயகுமரன், காஞ்சனனின் கைவாளுக்கு இரையாகிறபோது, பிறந்தோர் இறத்தலும் இறந்தோர் பிறத்தலும் இயல்பென நன்கறிந்திருந்தும், வெய்துயிர்த்துப் புலம்பி அயாவுயிர்த்து அழுது ஏங்காமலிருக்க மணிமேகலையால் முடிவதில்லை! இதை இவ்வாறும் கூறலாம். உதயகுமரன்மீது மணிமேகலை கொண்டது மெய்க்காதல்தான். ஆனால், தான் பிறந்த கணிகையர் குலம் காரணமாகப் பொருள்விலையாட்டியாகத் தன்னை உதயகுமரன் காணும் இழிநிலைக்கு அஞ்சியே, அவன் காதலை மணிமேகலை ஏற்கத் தயங்குவதாகத் துணியலாம். எனினும், காஞ்சனனின் கைவாளுக்கு உதயகுமரன் இரையாகாமலிருந்திருந்தால், ஒருவேளை உதயகுமரனும் மணிமேகலையும் இணைந்திருக்கவும் கூடும்!

நால்வருணத்திலும் ‘கணிகையர்குலம்’ சேராமையைத் தனக்குச் சாதகமாக, அதாவது தன்னைத் தட்டிக் கேட்கும் குலவலிமையற்ற பெண்ணாக மணிமேகலையைக் கருதித் தன் காமப்பாவையாக அவளை ஆக்கிக் கொள்ளச் சித்திராபதி வழிப்பட்டுத் திட்டமிடுகிறான் உதயகுமரன். முன்பே காட்டியது போல், ‘வருணக் காப்பிலள்’ என்று தன்னை உதயகுமரன் இழித்துரைத்ததைச் சுதமதியிடம் மணிமேகலை பகிர்ந்துகொள்வதிலிருந்து, அவளது ‘பாதுகாப்பற்ற வாழ்நிலையின்’ பேரவலத்தைத் தெளியலாம். (வருணக்காப்புள்ள பெண்களிடம், கைவரிசையைக் காட்ட அரசிளங்குமரன் தயங்குவான் போலும்!) மாதவியேகூடத் தன் மகளெனக் கூறாமல், ‘மாபெரும் பத்தினி மகள்’ எனக் கண்ணகியைப் பெரிதும் சார்ந்து பற்றியபடிதான், மணிமேகலையின் மாசற்ற பெண்மையைத் தாங்கிப் பிடிக்க வேண்டியிருக்கிறது! எது எப்படியாயினும், ஏன் உதயகுமரனே மணிமேகலையை மணந்து கொண்டிருந்தால்கூட, வாழ்வின் ஏதோ ஒரு நெருக்கடியான தருணத்தில், ‘மாயப்பொய் பல கூட்டும் மாயத்தாள்’ ‘ஆடல் மகள்’ என்றும், ‘சலம்புணர் கொள்கைச் சலதி’ என்றும் மாதவியைக் கோவலன் திட்டியதுபோல்தான், உதயகுமரனும் மணிமேகலையை ஏசியிருந்திருப்பான். கோவலனுக்குப் பதிலாக உதயகுமரன்; மாதவிக்குப் பதிலாக மணிமேகலை என்பதைத் தவிர வேறென்ன வேறுபாடு? நல்லவேளை, ‘கணிகையர் குலத்தள்’, ‘கற்பிலள்’, ‘நற்றவ உணரவிலள்’, ‘வருணக்காப்பிலள்’, ‘பொருள்விலையாட்டி’ எனப் பின்னரும் பழிக்கப்படுவதிலிருந்து மணிமேகலை தப்பிவிட்டாள்! இதுதான் சாத்தனார் காட்டும் ஆணுயர்வும் பெண்ணிழிவும் பேணும் புகார் நகரத்து யதார்த்தமாகும். புகார் மட்டுமா இப்படி? அன்றைய சீர்காழியின் நிலைமை, இதைவிட மோசம் என்கிறார் சாத்தனார். இந்திரவிழாக் காலத்துத் தனித்து உபவனத்துப் பூக்கொய்து கொண்டிருந்தபோது, வருணக்காப்புடைய அந்தணர்குலப் பெண் சுதமதிக்கு நடந்தது யாது? வருணக்காப்பற்ற மணிமேகலையாவது உதயகுமரனிடமிருந்து தப்பிக்க முடிந்தது. ஆனால் சுதமதி?

            ஈங்கு இந்நதரத்து யான் வரும் காரணம்       

பாரா வாரப் பல்வளம் பழுநிய

காராளர் சண்பையின் கௌசிகன் என்போன்

இரு பிறப்பாளன் ஒருமகள் உள்ளேன்

ஒருதனி அஞ்சேன் ஓரா நெஞ்சமொடு

ஆராமத்து இடை அலர் கொய்வேன்தனை

மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்

திருவிழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த

பெருவிழாக் காணும் பெற்றியின் வருவோன்

தாரன் மாலையன் தமனியப் பூணினன்

பாரோர் காணாப் பலர்தொழு படிமையன்-

எடுத்தனன் எற்கொண்டு எழுந்தனன் விசும்பிற்

படுத்தனன் ஆங்குஅவன் பான்மையேன் ஆயினேன்

ஆங்குஅவன் ஈங்குஎனை அகன்று கண்மாறி

நீங்கினன் தன்பதி நெட்டிடை ஆயினும்

மணிப்பூங் கொம்பர் மணிமேகலை தான்

தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்………”    (மலர்வனம் புக்க காதை;3;27-43)

இவ்வளவு நீண்ட கதையைச் சுதமதி சொல்வது எதற்காக? தான் தனித்துப் பூக்கொய்யச் சென்று, விஞ்சையனான மாருதவேகனிடம் தன் கற்பையிழந்து, நெடுந்தொலைவிலுள்ள தன்னூருக்குத் திரும்பும் வழியற்றுப் புகார் நகரில் சிக்கிக்கொண்டதைக் கூறித் தன்னைப் போல் மணிமேகலைக்கும் தீங்கு நேர்ந்துவிடக்கூடாது என்று  எச்சரித்து விழிப்பூட்டுவதற்காகத்தான், தான் வஞ்சிக்கப்பட்ட கொடிய சூழலைத் துல்லியமாகச் சுதமதி விவரிக்கிறாள். ”காராளர் – பூவைசியர்; சண்பை – ஒரு நகரம்; சீர்காழியுமாம்; அங்கநாட்டிற் கங்கைக்கரையிலுள்ளதாகிய சம்பை என்னும் நகரமுமாம்…….ஆராமம் – உபவனம்; விஞ்சையன் – வித்தியாதரன்; மூதூர் – காவிரிப் பூம்பட்டினம்” (உ.வே.சா. (பதிப்பாசிரியர்), மணிமேகலை, ஒன்பதாம் பதிப்பு – 2013, ப.29) என, இதற்கு உ.வே.சா. அரும் பதவுரை தருகிறார். ‘நெட்டிடை’ என்ற சொல்லாட்சி, கங்கைக்கரை ஊராய்ச் சண்பையைக் கொள்வதற்கும் இடமளிக்கிறது. எனினும், ‘மூதூர் பெருவிழா’ என்பதால், புகார் நகரத்து இந்திரவிழாவைக் காணவரும் மாருதவேகன், சீர்காழி உப வனத்திலிருந்து சுதமதியைத் தூக்கிச் சென்றிருக்கலாம் என்று யூகிப்பதே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. அன்றைய ‘சீர்காழி’ சுதமதிக்கும், இன்றைய ‘டெல்லி’ நிர்பயாவுக்கும் ஒன்றுதான் வேறுபாடு. சுதமதியைச் சிதைத்தவன் புகாரில் அவளைப் போட்டுவிட்டுப் போய்விட்டான்; நிர்பயாவைப் பாழ்படுத்தியோர் அவளைப் பிணமாக்கிவிட்டனர்!

 “பொதியறைப்பட்டோர் போன்று உளம் வருந்தி,

மதுமலர்க் கூந்தல் சுதமதி உரைக்கும்

             இளமை நாணி, முதுமை எய்தி,

உரைமுடிவு காட்டிய உரவோன் மருகற்கு

அறிவும் சால்பும் அரசியல் வழக்கும்

செறிவளை மகளிர் செப்பலும் உண்டோ? ”   (பளிக்கறை புக்க காதை: 4:105-110)

பிழைமணம் புரிந்த சுதமதி, அத்தகைய பிழைமண வாழ்வு, மணிமேகலைக்கும் உதயகுமரனுக்கும் தன்னைப் போல் வாய்த்துவிடக்கூடாதே என்ற அறவுணர்வால் உந்தப்பட்டுத்தான், முற்கூறியவாறு உதயகுமரனிடம் பேசி உரையாடி, மணிமேகலைக்குக் காவலாகிறாள். நன்மணத்தைச் சுதமதியோ சாத்தனோ எதிர்ப்பதில்லை; பிழை மணமே அவர்களுக்கு ஒவ்வாமையாகிறது. இந்த ஒவ்வாமையின் விளைவாகத்தான், காற்றுவராத அறைக்குள் அடைப்பட்டுக் கிடப்பவளைப் போல் உள்ளம் வருந்தி, ‘கரிகாலன் மரபில் வரும் உதயகுமரனுக்கு, அறிவும் சால்பும் அரசியல் வழக்கும், செறிவளைப் பெண்ணான தானா செப்ப முடியும்?’ எனச் சுதமதி கேட்கிறாள். இக்கேள்வியில், பெண்குலத்தின் ஆற்றாமையும் பரிதவிப்பும் மட்டுமா வெளிப்படுகிறது?  யாராலும் அடக்க முடியாத அரசகுலத்தின் அட்டூழியங்களும் சேர்ந்தே புலப்படவில்லையா? மணிமேகலையைப் போகப் பொருளாகக் கருதித் துய்க்க உதயகுமரன் பரபரப்பதைக் கண்டு, மறுபடியும் மாருதவேகன்,  இவன் உருவில் நேரில் வந்துவிட்டானோ என ஒருகணம் சுதமதி மனம் குழம்பியிருக்கக்கூடும்! இம்மனக்குழப்பம்தான், அதிலிருந்து பிறக்கும் ஒருவகைக் கூரிய விழிப்புணர்வுதான், குத்தலான மொழியில், மேற்கண்டவாறு அவளது இயலாமையைப் புலம்பவைத்துக் கேள்வியும் கேட்கவைக்கிறது. இக்கேள்விக்குப் பின்னும் அமைதியுறமுடியாத சுதமதி, மலர்கொய்ய வந்த மணிமேகலைக்குப் பாதுகாப்பாக வந்துள்ள தன் பொறுப்பைக் கருதிப் ‘பௌத்த நிலையாமை’ சார்ந்து, ‘குற்றக் கொள்கலமாய்’’ யாக்கையைக் கண்டு, உதயகுமரனை நல்லாற்றுப்படுத்தப் பின்வருமாறு முனைகிறாள்.

அனையது  ஆயினும் யான் ஒன்று கிளப்பல்!

வினைவிளங்கு தடக்கை விறலோய்! கேட்டி

             வினையின் வந்தது, வினைக்கு விளைவாயது,

புனைவன நீங்கின் புலால் புறத்திடுவது

மூப்பு விளிவுடையது, தீப்பிணி இருக்கை,

பற்றின் பற்றிடம், குற்றக் கொள்கலம்,

புற்று அடங்கு அரவின் செற்றச் சேக்கை,

             அவலக் கவலை கையாறு அழுங்கல்

தவலா உள்ளம் தன்பால் உடையது,

மக்கள் யாக்கை இது என உணர்ந்து

மிக்கோய்! இதனைப் புறமறிப் பாராய்!

             என்றவள் உரைத்த இசைபடு தீஞ்சொல்

சென்றவன் உள்ளம் சேரா முன்னர்ப்

பளிங்குபுறத்து அறிந்த பவளப் பாவையின்,

இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்என்  (பளிக்கறை புக்க காதை :4:111-125)

இங்கு மானுட உடலைப் பழிப்பது மட்டும் சுதமதிக்கு நோக்கமன்று. உடலின் நிலையாமையைப் பற்றி விதந்தோதுவதன் வழியாக, மணிமேகலையை விழுங்கத் துடிக்கும் உதயகுமரனின் மனநெருப்பின் வேகத்துக்குத் தடுப்பணை போட்டுச் சாந்தப்படுத்தவே, சொற்களை அவள் விரைந்து வீசுகிறாள். இவ்வாறு பொருள் கொள்வது சற்று மிகையானது எனச் சிலர் நினைக்கலாம். ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்பார்க்கு, இப்படியும் பொருள் கொள்வதற்குக் கவிதை இடமளிக்கும் என்பது வியப்பாகாது. மேலும், “தீநெறிப் படரா நெஞ்சினை ஆகுமதி” (5:29) எனப் “பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய” (5:35) சுதமதி, உதயகுமரனிடம் கெஞ்சி இறைஞ்சுவதும் குறிப்பிடத்தக்கதாகும். சுதமதியின் சொற்கள், உதயகுமரனின் செவிகளில் சென்று சேர்வதற்கு முன்னால், அவன் விழிகளுக்கு மணிமேகலையின் உருவம் புலப்பட்டுவிடுவதாகச் சாத்தனார் குறிப்பிடுகிறார். ஆசைத்தீ கொழுந்து விட்டெரியும் மனத்தை அறிவுரைகள் தணிப்பதில்லை. இது ஒரு போராட்டம். இப்போராட்டத்தை, இதற்குமுன் சுதமதியும் அனுபவித்தவள்தான். அன்று சுதமதியும் மாருதவேகனும் என்றால், இன்று மணிமேகலையும் உதயகுமரனும்! இப்போராட்டம் முளைவிடத் தொடங்குவதுடன், ‘பளிக்கறை புக்க காதை’யைச் சாத்தனார் முடித்து விடுகிறார். வீணாக ஒரு சொல்லைக்கூடச் சாத்தனார் விரயம் செய்வதில்லை என்பதற்கு, இது ஒரு சிறந்த சான்றாகும். உதயகுமரனிடம் பெரிதாக வளராமல் உடனுக்குடன் காமாக்னியாகிச் சாவுடன் முற்றுப்பெற்றுவிடும். இப்போராட்டம்,  மணிமேகலையிடம் சிக்கலும் சிடுக்குமாகிச் சூழ்ந்து சிதறிப் பௌத்தத் துறவில் மடைமாறிச் சென்று, தன் முடிவான உச்சத்தை அடைகிறது.

தமிழிலக்கிய வெளியில் இதுகாறும் சொல்லப்படாத கதையொன்றை மணிமேகலை சொல்ல முனைவதுதான், மணிமேகலையின் தனிப்பெருமையாகும். ஆண்களால் வஞ்சிக்கப்படும் பெண்களைக் காட்டி, அப்படிப்பட்ட பெண்களுக்காகப் பரிவுடன் குரலெழுப்புகிறார் சீத்தலைச் சாத்தனார். இக்குரலைப் ‘பெருமையும் உரனும் ஆடூஉமேன’ எனக் கருதிய தமிழ் மரபில் நிகழ்ந்த புதிய பாய்ச்சலாகத் துணியலாம். ஆண்கள் பெண்களிடம் வேண்டுவது இன்பம் ஒன்றைத்தான் என்பதைச் சிறிதும் ஐயமின்றிப் புரிந்துகொண்டவளாகச் சித்திராபதியைச் சாத்தனார் சித்திரித்துள்ளார். இப்படிப்பட்ட கடைந்தெடுத்த ஆணாதிக்க இன்பவாதிகளுக்கு எதிராகத்தான், கணிகை வாழ்வின் கொண்டாட்டங்களுக்காகச் சித்திராபதி வாதிடுகிறாள். இந்த முற்றுமுழுதான எதிர்நிலையை ஏற்க மறுத்துக் குலமாதராகியும் ஆண்களிடமிருந்து தப்பிக்க முடியாத அவலச்சூழலில்தான், வேறு வழியின்றிப் பெண் துறவியாகிறாள் மாதவி. சித்திராபதியையும் மாதவியையும் உற்றுநோக்கும் வாய்ப்புப் பெற்ற மணிமேகலை, அவர்களுடைய ஏதோ ஒன்று குறையும் வாழ்வைப் பிறர்நலம் பேணும் பொதுமை மூலம் நிறைவாக்கக் கருதியே,  அமுதசுரபி ஏந்திய பௌத்தப் பிக்குணியாகிறாள். இம்மூன்று பெண்கள் மட்டுமல்லர், மணிமேகலையில் வரும் ஒவ்வொரு பெண்ணும்கூட, ஏதோ ஒருவகையில் எதிர்ப்பாளுமைகளாகவே புனையப்பட்டுள்ளனர். எனினும், அவலமே இவர்களுடைய வாழ்வாயுள்ளதும் கருதத்தக்கதாகும்.

காமுகனால் வஞ்சிக்கப்பட்ட பெண்மைக்குச் சாட்சியமாகிறாள் சுதமதி. மருதிக்கும் விசாகைக்கும்கூடக் காப்பியத்தில் இதே காமத்தொல்லைதான் நேர்கிறது. மணஉறவுக்கு வெளியே பிறனோடு கூடும் மீறலுறவின் விளைவாகச் சாலிக்குச் சுதமதியினும் துன்பமயமாகிறது உயிர்வாழ்வு. மாதவிக்காகவும் மணிமேகலைக்காகவும் கண்ணீர் பெருக்குகிறாள் வயந்தமாலை.  இராகுலனை இழந்த இலக்குமி தீப்பாய்கிறாள்.  மகன் உதயகுமரனைப் பறிகொடுத்த துக்கத்தை ஆற்றியிருக்க இயலாமல் அழுதுபுலம்பித் தவிக்கிறாள் இராசமாதேவி. துக்கத்தால் வாடியிருப்போருக்குத் தேறுதல் சொல்வதே வாசந்தவைக்கு வாழ்வாகிறது. மகன் சார்ங்கலன் உயிரை மீட்டுத் தருமாறு சம்பாவதித் தெய்வத்துடன் சண்டையிட்டுப் பலன் பெறாமல் இறந்துபடுகிறாள் கோதமை. கணவன் காஞ்சனனுடன் சேரமுடியாமல் விந்தாகடிகையால் விழுங்கப்பட்டுக் காயசண்டிகை ஊழ்வினைப்படுகிறாள். தீயும் கொல்லாத் தீவினையாட்டியாகிறாள் ஆதிரை. தருமதத்தனையும்  விசாகையையும் முறைமை மீறியவர்களாகப் பழிக்கும் ஊரார் திருந்தக் கந்தில்பாவையே வந்து அறிவுறுத்த வேண்டியுள்ளது. கணவன் சங்கமன் வஞ்சனையால் கொல்லப்பட்டதைத் தாங்கமுடியாமல் மலைமீதேறிக் கீழே விழுந்து உயிர் துறக்கிறாள் நீலி. நெடுமுடிக்கிள்ளியுடன் ஒருமாதம் உறவாடிவிட்டுத் திடீரெனக் காணாமல்போகிறாள் நாகக்கன்னி பீலிவளை. இப்பெண்மக்களின் இன்னல்களைப் பொறுக்கமுடியாமல்தான், அணிநகர் தன்னை அலைகடல் கொள்க எனக் காவிரிப்பூம்பட்டினத்தைக் கடல் விழுங்குமாறு சாபமிடுகிறாள் மணிமேகலாதெய்வம். இந்திரவிழா கொண்டாடப் படாததற்காகத் தெய்வம் விட்ட சாபமாகப் பிரதியில் இது கூறப்பட்டிருந்தாலும், பெண்களின் கண்ணீரைப் பொறுக்காத அறச்சீற்றமாகவும், இச்சாபத்தை மறுவாசிப்புச் செய்யவியலும்!

கன்னிக்காவல், கணவன்காவல், பிள்ளைகள்காவல், பிறர் நெஞ்சு புகாமை, பிற ஆடவரைப் பாராமை, தம் நிறையைத் தாமே காக்கும் நிறைக்காவல், பரத்தமைத் திரிபை வெறுத்துப் பத்தினிக்காவலை விரும்பி ஏற்றல், கொண்ட கணவனையல்லாமல் தெய்வமும் பேணாமை, தாய்மையில் திளைத்தல், இல்லறம் சிறக்க உழைத்தல் …… இப்படித்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கருத்துச் சங்கிலிகளால் பெண்கள் இறுக்கிக் கட்டப்பட்டுள்ளனர். இந்த இறுக்கத்தைச் சாத்தனார், ‘முற்பிறவி – மறுபிறவி – பாவம் – புண்ணியம் – பற்று – வினைத்தொகுதி – வினைப்பயன் – துக்கம் – தவத்திறம் – தருமம் – பிறப்பறுத்தல்’ எனப் பல பௌத்தச் சொல்லாடல்களுடன் பொருத்தித் தளர்த்தி, ‘உலக வாழ்வில் உள்ளன யாவும் வெளிப்படுமாறு’ காப்பியமாகப் புனைந்துள்ளார். ஆபுத்திரனுக்குச் சிந்தாதேவி அருளிய அமுதசுரபியைக்கூடப் பயன்படாதவிடத்துக் ‘குமரியாகவே மூப்பெய்திவிடுகிற பெண்ணாகத்தான்’ (14;77), ஆபுத்திரன்வழிச் சாத்தனார் காண்கிறார். மணிமேகலையின் துறவைப் பாடியிருந்தாலும், பெண்ணுக்கு நன்மணம் நடப்பதைச் சாத்தனார் எதிர்க்கவில்லை. அமுதசுரபிக்குப் பயனில்லாதபோது ஆபுத்திரன் மனம் வருந்துகின்றான்; ஆனால் இவ்வகைப்பட்ட வருத்தம் மணிமேகலைக்கு வருவதில்லை. மன்னுயிர்க்கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் கிடைத்தால் போதும், அதைவிட மேலான அறம் வேறில்லை என்பதுதான், அவளுடைய நிலைப்பாடாகும். ‘மணிமேகலை துறவு’ என்று இக்காப்பியத்திற்குச் சாத்தனார் அளித்திருக்கும் வேறு பெயர், துக்க நிவர்த்திக்குத் துறவைப் பரிந்துரைக்கும் அவர்தம் பௌத்த சமயப் பிடிப்பால் விளைந்த பெயரன்று. தன்னொத்த பெண்களின் துயரைக் காணச் சகியாமல், ‘பாதுகாப்பரணாகப் பிக்குணி வாழ்வைப் பற்றிவிட்ட’ மணிமேகலையின்  துறவு முடிவால் பிறந்த பெயரே அது.

கண்ணீர் + வெறுமை = பெண் வாழ்வு. இதுதான் சாத்தனார் காட்டும் சமன்பாடு. சாத்தனாரின் உலகத்தில் வாழும் எந்தப் பெண்ணுக்கும் அமைதியில்லை. அது ஆண்களின் உலகம். அங்குப் பெண்களுக்குத் துக்கமே இயல்பானது. புலன்வழிப்பட்டு அலைபாயும் மானுட வாழ்வைத் துன்பப்பெருக்காகக் காணும் பௌத்த தருமத்தைப் பின்பற்றித்தான் சாத்தனார் இவ்வாறு புனைந்துள்ளார் என்பது பகுதி உண்மைதான்; ஆண்களின் துக்கத்துக்கும் பெண்களின் துக்கத்துக்குமான அடிப்படை வேறுபாட்டைச்  சாத்தனார் அறிந்துள்ளார் என்பதுதான் முழுமையான மெய்ம்மையாகும். இன்பத்தை இழப்பதை ஆண் துக்கமாகக் காணும்போது, அன்பை இழப்பதைப் பெண் துக்கமாகக் கொள்கிறாள். இதுதான் உதயகுமரனும் மணிமேகலையும் வேறுபடும் இடமாகும். தன்னாளுமையை விரிவுசெய்வதில் ஆண் கவனம் செலுத்தும்போது, தன்னுணர்வைத் தகர்ப்பதில் பெண் திசைகாட்டியாகிறாள். இதுதான் ஆபுத்திரனும் மணிமேகலையும் வேறுபடும் இடமாகும். மரணத்தின்முன் மானுடர் அனைவரும் மண்டியிடவேண்டும் என்றாலும், அதற்குமுன் ஆண்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுச் சுதந்திர உயிரிகளாகப் பிழைத்திருக்கப் பலவகைகளிலும் பெண்கள் போராடுவதுதான் யதார்த்தமாயுள்ளது. இரண்டாம் பாலினமாகப் பெண்கள் முடக்கப்படும் இந்த யதார்த்தத்தைத்தான்,  சாத்தனாரும் ‘காப்பிய விசாரமாக’ப் பதிவு செய்துள்ளார்.