“Give us an organization of revolutionaries and we will overturn Russia!” என்றார் தலைவர் லெனின். “அமைப்பாய்த் திரள்வோம்” என்கிறார் தலைவர் தொல்.திருமாவளவன். 1900இன் ருஷ்யாவிற்கும் இன்றைய இந்திய ஒன்றியத்துக்குட்பட்ட தமிழ்நாட்டுக்கும் பெரிய வேறுபாடுகளில்லை என்றே தோன்றுகிறது. இமயமலை வீழ்ந்ததுபோல் ஜார் அரசன் விழுந்ததற்குத் தலைவர் லெனின் கட்டிய ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியே காரணமாகும். இங்கேயும் புரட்சி வரவேண்டுமானால், எழுச்சித் தமிழர் கட்டும் கட்சியும் அதன் கூட்டணியும் ஆட்சிப் பொறுப்பேற்றாக வேண்டும். ‘ஐந்தில் ஒரு பங்கு’ மக்கள் ஆட்சி அதிகார வளையத்திற்கு வெளியே ஆண்டாண்டாய் நிறுத்திவைக்கப் பட்டிருக்கும்போது, சமூகம் முழுமையும் பயன்பெறும் ஒரு புரட்சி, இங்கே எப்படி மலர முடியும்? இக்கேள்விக்கான பதிலாகப் பிறந்திருக்கும் பனுவல்தான் ‘அமைப்பாய்த் திரள்வோம்”.  இந்நூலில், தலைவர் தொல்.திருமாவளவன் விவாதித்திருக்கும் பல கருத்துகளின் பிழிவை, என் பார்வையில் தொகுத்தளிக்க முனைவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இந்நூலில் ஐம்பத்தெட்டுக் கட்டுரைகள் உள்ளன. இவை, ‘நமது தமிழ்மண்’ மாத இதழில், ஜூன் 2010 முதல் ஜனவரி 2016 வரையிலான 58 வாரங்களுக்குத் (இடையில் சில மாதங்கள் கட்டுரைகள் எழுதப்படவில்லை) தொடர்க்கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. இந்நூலின் முதற்பதிப்பை, 2018ஆம் ஆண்டில், ‘நக்கீரன் பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. இது சமூக இயக்கம் கட்ட எண்ணும் அனைவருக்கும், ஓர்  அரசியல் கையேடாகப் பயன்படக்கூடிய சிறப்புக்குரிய நூலாகும். இந்நூலில் வெற்று முழக்கங்கள் இல்லை; தீவிரமான சிந்தனைத் தளத்தில் வைத்துத் தொடர்ந்து விவாதிக்கப்பட  வேண்டிய கருத்துகளின் பெருவெளியாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ‘சமூக மாற்றம்’ பற்றிய கவனமான மற்றும் ஒருங்கிணைந்த சிந்தனைகளின் தொகுதியாக, இந்நூற்கட்டுரைகளை மதிப்பிடலாம். ஒரு முக்கியமான கட்சியின் தலைவராகத் திகழும் தொல்.திருமாவளவன், தமது அன்றாட அரசியல் நடவடிக்கைகளுக்கிடையே,  எவ்வாறு உரிய நேரம் ஒதுக்கி இக்கட்டுரைகளை எழுதினார் என்ற கேள்வி வருகிறது. “உரிய நேரத்தில் ஒருமுறைகூட எழுதும் சூழல் எட்டவே இல்லை. பெரும்பாலும் இதழ் வெளியாவதற்குரிய இறுதிநாட்களில், அதுவும் இரவின் பின்பாதிப் பொழுதுகளில் தொடங்கி – இருள் மெல்ல விலகி எழுகதிர் மண்ணை எட்டிப் பார்க்கும் வரையில், ‘நமது தமிழ்மண்’ இதழின் அலுவலகத்திலோ அல்லது நெடுந்தூரம் பயணிக்கும் வண்டிகளிலோ அல்லது வெளியூர்களில் எங்கோ தங்குமிடங்களிலோ எழுதவேண்டிய நிலை” எனத் தலைவர் திருமாவே குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலின் முக்கியமான நோக்கம் என்ன? உழைக்கும் மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்திப் பொது எதிரியை அடையாளப்படுத்திக் கூர்மையான ‘சமுதாயவிழிப்புணர்வூட்டுவது’ என்பதாகப் புரிந்துகொள்கிறேன். ஜனவரி 2010இல், ‘தாய்மண்’ வெளியீடாக, முதற்பதிப்புப் பெற்ற ‘தொல். திருமாவளவன் கவிதைகள்’ நூலில் இடம்பெற்ற ஒருகவிதையைக் கவனப்படுத்த விரும்புகிறேன். “மூளை கெட்டு, நீயும் நானும் முட்டிமோதிக் கொள்வதா, அட நாளைப் பொழுது, நமக்கென விடியும், நம்மிடம், ஒற்றுமை தேவையடா” என்கிறார் தலைவர் திருமா. இந்த ஒற்றுமை எப்படி வரும்? நாம் இருக்கும் நிலை என்ன என்பது நமக்குத்தெரிந்தால்தானே, ஒற்றுமை வரும்! அதைத் தெளிவுபடுத்துவதற்காகவே இந்நூலைத் தலைவர் திருமா யாத்துள்ளார் எனலாம்.

கட்சியைக் கட்டுவது என்பது, சாதாரணமான ஒரு வேலையே இல்லை. ஆட்சியைக்கூடப் பிடித்துவிடலாம்; ஆனால், கட்சியைத் திறம்படக் கட்டாவிட்டால், ஆட்சியைப் பிடித்தாலும் அது பயனின்றிப் போய்விடக்கூடும். இதை நன்குணர்ந்தமையாலேயே, ஆட்சியைவிடவும் கட்சியைக் கட்டுவதே இன்றியமையாத அரசியல் பணி என்று வாதிட்டார் லெனின். லெனின் அவர்களின் அடிச்சுவட்டில் தலைவர் திருமாவும் கட்சியைக் கட்டுவதற்கே முதன்மையளிப்பதைத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது. ஏன் கட்சியைக் கட்டவேண்டும்? “ஆளும் வர்க்கம் – உழைக்கும் வர்க்கம் என்னும் இந்த அமைப்பு, குடும்பம், சாதி, மதம், இனம் போன்ற பல்வேறு அமைப்புகளை உள்வாங்கியும் புறந்தள்ளியும் வடிவாக்கம் பெற்று இயங்கிவருகிற ஒன்றாகும். ஆளும் வர்க்கத்திற்கு உள்ளேயே நிலவும் போட்டி அடிப்படையிலான பகைமுரண்பாடுகள் இருந்தாலும், உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக அணிதிரள்வது மிகவும் எளிதாக நிகழ்ந்துவிடக்கூடியதாகும். உழைக்கும் வர்க்கம், சாதி, மதம், இனம் என்கிற முரண்பாடுகளால் சிதறிக்கிடக்கும் மிகப்பெரும் திரள் என்பதனால், இணைந்து – பிணைந்து செயல்படுவதில் மிகவும் சிக்கல் நிறைந்ததாக அமைந்து விடுகிறது” என்கிறார் தலைவர் திருமா. இச்சிக்கலைத் தவிர்க்கவும், உழைக்கும் வர்க்கத்துக்கு எதிரான அணிதிரட்டலைத் தடுக்கவும் கட்சி அவசியமாகிறது. ஆட்சி இல்லாவிட்டாலும் கட்சி உண்டு;  ஆனால்கொள்கை சார்ந்த வலுவான கட்சி அமைப்பில்லாவிட்டால் ஆட்சிக்கு வந்தாலும் பயனில்லைதானே!

இதை மிக நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டுள்ள ஒரு வெகுமக்கள் திரளை அரசியல்மயப்படுத்தாமல், வெறும் தேர்தல் செயல்பாடுகளுக்காக மட்டும் கட்சியைக் குறுக்கிவிடும் அபத்தத்தைக் கடந்துசெல்லவே, ஒரு வலுவான அமைப்பாய்த் திரள்வோம் என்கிறார் தலைவர் திருமா. “சனநாயகமும் சமத்துவமும் பரவலாக்கப்பட வேண்டும் என்கிற தேவையின் அடிப்படையில், மனிதன் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது. சனநாயகம் பரவலாக்கப்பட்டாலொழியச் சமத்துவம் என்பதை இச்சமூகக் கட்டமைப்பில் உருவாக்கவே இயலாது. ஏற்கனவே, நடைமுறையிலுள்ள அமைப்புகளால், சனநாயகத்தையும் சமத்துவத்தையும் வென்றெடுக்க இயலாத நிலையுள்ளது. சமூகக் கட்டமைப்பில் ஏற்கனவே உள்ள ஒவ்வோர் அமைப்பும், தமக்குள்ளாக வர்க்க அமைப்புகளை உள்வாங்கி இருக்கின்றன” என்கிறார் தலைவர் திருமா. எவ்வளவு பெரிய உண்மை! இவ்வுண்மை இன்று அம்பலமாகிவிட்டது. சரி. இப்போது நாம் என்னதான் செய்ய வேண்டும்? “யார் யாரெல்லாம், சனநாயகம் மறுக்கப்பட்டவர்களோ, சமத்துவம் மறுக்கப்பட்டவர்களோ, தொடர்ந்து நசுக்கப்பட்டு வரும், சுரண்டப்பட்டு வரும் பிரிவினரோ, அவர்கள் அனைவரையும் ஒரு கட்டமைப்புக்குள் அணிதிரட்ட வேண்டியுள்ளது. அத்தகைய வஞ்சிக்கப்பட்ட தரப்பார் அனைவருக்கும் பொதுவான தேவைகளின் அடிப்படையில், பொதுவான கொள்கை – கோட்பாடுகளை வரையறுத்து, அவற்றைப் பின்பற்றுவதற்கேற்ற பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வரையறுத்து அவற்றின் அடிப்படையில், அத்தகைய அனைத்துத் தரப்பினரையும் அமைப்பாக்க வேண்டும். அமைப்பாக அணிதிரள்வதுதான், கொண்ட கொள்கை வழியில், குறிக்கோளை – இலக்கைச் சென்றடைவதற்கு ஒரே வழி!” என்கிறார் தலைவர் திருமா. அவரின் அவ்வழியில், இங்கு வாழும் மனிதாபிமானிகளில் யாருக்குத்தான் மறுப்பிருக்க இயலும்?

வலியோர், இங்குத் தம் ஏகபோக லாப நலன்களுக்காக, எளிதாக அணிதிரண்டுவிடுகின்றனர். ஆனால், அடக்குமுறைக்கும் ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்கும் எதிராகப் போராடவேண்டியது, உழைக்கும் பெரும்பான்மை மக்களின் தேவையாயிருந்தபோதிலும்கூட, “எளியோரை அவ்வளவு எளிதாக அமைப்புவழியில் வலிமைபெற வலியோர் அனுமதிப்பதில்லை” என்கிறார் தலைவர் திருமா. மேலும் அவர், “உழைக்கும் வர்க்கத்தினர் அமைப்பாவதைத் தடுப்பதற்கான முயற்சிகளிலிருந்துதான் ஆதிக்கம் மற்றும் அடக்குமுறை என்னும் வெறித்தனம் மேலோங்குகிறது. அத்தகைய வெறித்தனமே ‘ஃபாசிசம்’ என்பதாகும். ‘உழைப்பவன் உயிர்வாழ மட்டுமே தகுதி உடையவன்; ஏனென்றால், உயிர் வாழ்ந்தால்தான் அவன் தொடர்ந்து உழைக்க முடியும்’ – என்கிற கருத்தை உள்ளடக்கியதுதான் ஃபாசிசத்தின் அடிப்படையாகும். உழைப்பதைத் தவிர வேறெந்த உரிமையும் உழைப்பவனுக்கில்லை என்ற வெறித்தனத்தின் வெளிப்பாடாகவே, சனநாயகம் மறுதலிக்கப்படுகிறது. அதாவது, தனது கருத்தைச் சொல்லவோ, தனது உணர்வை வெளிப்படுத்தவோ ஒருவனுக்கு உரிமையில்லை என்று மறுப்பதும் தடுப்பதும்தான் சனநாயக மறுதலிப்பாகும். அத்தகைய சனநாயக மறுதலிப்பை எதிர்த்துப் போராடவும் உரிமைகளை வென்றெடுக்கவும் அந்தந்தத் தளங்களில் உழைப்பவர்கள் அமைப்பாக அணிதிரண்டாக வேண்டும்” என்கிறார். இந்த அணிதிரட்டல், என்றைக்கு ஓர்அரசியல் வெற்றியாக உருமாற்றமடைகிறதோ, அன்றைக்குத்தான் இந்தியாவிலும் தமிழகத்திலும் சமத்துவமும் சனநாயகமும் நடைமுறையில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாகச் சொல்லமுடியும். அதற்கான ஆழமான ஒரு முன்னெடுப்பாகவே, இந்நூலைப் பார்க்கிறேன்.

இந்நூலின் தனிச்சிறப்பென்ன? அதிதீவிரமான கருத்துகளைக்கூடக் குழப்பிக்கொள்ளாத ஓர் ஆக எளிய மொழிநடையில் வாசகர்களிடம் மனம்விட்டுப் பகிர்ந்துகொள்வதேயாகும். “வீடு, நிலம், ஆடு, மாடு, தானியம், பணம் போன்ற சொத்துக்களைப்போல அதிகாரமும் ஒருவகைச் சொத்தே ஆகும். சொத்துக்கள் அனைத்திலும் பங்கு வேண்டும் என்பதைப்போல அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்பதே சனநாயகத்தின் வெற்றியாக அமையும்!” என்கிறார் தலைவர் திருமா. தலித் மக்களுக்கான அதிகாரப் பங்கேற்பை இன்னும் எத்தனை காலத்திற்கு மறுக்க முடியும்? இனி யாரும் மறுப்பது என்ற பேச்சிற்கேகூட இடமில்லை. ஆனால், அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே வருகிறார்கள். அதையும்கூட இனி நெடுங்காலம் செய்துவிட முடியாது என்ற இடத்திற்கு இன்று வரலாறு நகர்ந்து வந்துவிட்டது. இந்த வரலாற்றைக் கூர்மையாகப் பார்க்கும் கண்கள் தலைவர் திருமாவுக்கு வாய்த்திருக்கின்றன. ஒரு முக்கியமான காலகட்டத்தின் வெகுமக்கள் மனசாட்சியாய்த் தலைவர் திருமா இன்று தம் படையினருடன் சமத்துவக் களவெளியின் முன்னணியில் அணிவகுத்து நிற்கிறார். “வெகுமக்களின் பேராதரவை ஏதோ ஒரு வடிவத்தில் வென்றெடுக்கும் அமைப்புகள் ‘அரசியலதிகாரத்தை’ மீட்கிற வலிமையைப் பெறுகின்றன. மக்களுக்கான மாற்று அரசைக் கட்டமைக்கின்றன.  அத்தகைய நடவடிக்கைகள்தாம், மாற்றங்கள்தாம் வெகுமக்களின் புரட்சியாக வரலாற்றில் பதிவாகின்றன. மக்கள் அமைப்பாகாமல், மக்கள் ஆதரிக்காமல், மக்களுக்கான ஒரு அமைப்பாகாமல் நாடாளுமன்றச் சனநாயக முறையிலும்கூட அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ள இயலாது” என்று மிக நேர்மையாகத் தலைவர் திருமா அறிவிக்கிறார். எனவே, ஓர் அமைப்பாய்த் திரளாமல், எளிய உரிமைகளைக்கூட விளிம்புநிலை மக்கள் வென்றெடுத்துவிட முடியாது என்பதே இன்றைய சமூக யதார்த்தமாகும். இதனை வேறெவரையும்விடத் தெளிவாக உள்வாங்கிக் கொண்டாக வேண்டிய வரலாற்றுத் தேவையுள்ள மக்கள்திரளின் தலைவர் என்ற முறையில்தான் தலைவர் திருமா, “கருத்தியல் வலிமையும் கட்டமைப்பு வலிமையும்தான், அதிகார வலிமையை வென்றெடுப்பதற்குரிய அனைத்து வலிமைகளையும் அளிக்கும் ஆற்றலைக் கொண்டவையாகும்” என்கிறார். இத்தகைய ஆற்றலுள்ள ஆளுமையாளர்களாகத் தலித் மக்களை வளர்த்தெடுக்கும் வரலாற்றுத் தேவையைக் கருத்திற்கொண்டு எழுதப்பட்டுள்ள அரசியல் புரிதலூட்டும் ஆவணமாக இந்நூலை வரவேற்கலாம்.

நட்பு முரண்களைப் பற்றியும் பகை முரண்களைப் பற்றியும் தெளிவாகத் தலைவர் திருமா இந்நூலில் பேசியுள்ளார். தலைமைத்துவமும் தனிநபர்ப் பாத்திரமும் குறித்துச் செறிவாக விளக்கியுள்ளார். ‘பெரும்பான்மையின் ஆளுமையே சனநாயகம்’ எனப் புரிந்துகொள்ளப்படும் நிலையைக் களைந்து, ‘சனங்களை அல்லது மக்களை முதன்மைப்படுத்துதல் மற்றும் அதிகாரமயப்படுத்துதல்’ என்பதைச் சனநாயகமாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்ற ஒரு குரலைத் திருமா இந்நூலில் ஒலிக்கிறார். ‘கூட்டமைப்பாதலும் பொதுநீரோட்டத்தோடு இணைதலும்’ குறித்த முக்கியமான பல சிந்தனைகள், இந்நூலில் மிகவிரிவாக விவாதிக்கப்பட்டுள்ளன. “சிதறிக் கிடப்போரால் எந்த ஒரு பொது நீரோட்டத்திலும் கலந்து இயங்கிட இயலாது. இதனால் தனிமைப்பட்டு விலகி நிற்கும் நிலையே உருவாகும். அதாவது, பொதுநீரோட்டம் அல்லது மைய நீரோட்டம் என்பதிலிருந்து ஒதுக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படும் நிலையானது, ஒருங்கிணைந்த வளர்ச்சியுடன் சேர்ந்து வளர இயலாத நிலையை ஏற்படுத்தும். தனித்துவத்தைப் பாதுகாப்பது என்பது ஒவ்வொருவருக்கும் தவிர்க்க இயலாத ஒரு தேவையாக இருந்தாலும், அதன் பெயரால் அக்குழு அல்லது குழுக்கள் தனிமைப்பட்டுவிடாத வகையில் மைய நீரோட்டத்தோடு இணைந்து இயங்குவதிலும் ஈடுபாடு கொள்வது இன்றியமையாததாகும்” என்கிறார் தலைவர் திருமா. எவ்வளவு தெளிவாகச் சிந்திக்கிறார்! நம் காலத்தின் நாடித் துடிப்பைத் துல்லியமாகக் கைப்பிடித்துப் பார்த்துவிடுகிறார். இப்பார்வைத் தெளிவின் விளைவாகவே, “எத்தகைய அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்வது; எத்தகைய அடையாளங்களை இழக்க உடன்படுவது; எத்தகைய அடையாளங்கள் இயங்கியல் போக்கிற்கு உடன்பாடானவை அல்லது மாறானவை – போன்ற கருத்தியல் தெரிவுகொண்ட அமைப்புகளால் மட்டுமே, அவ்வாறான உடன்பாடுள்ள பிற அமைப்புகளையும் அடையாளங்கண்டு கூட்டமைப்பாக இணைந்திட இயலும்” என்கிறார் தலைவர் திருமா.

உட்பகையையும் வெளிப்பகையையும் ‘முன்னுணர்தல்’ என்பதைத் திருமா மகத்தான தலைமைப் பண்பாகக் காண்கிறார். கருத்தியல் அல்லது கொள்கை – கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் புறநிலையிலான பகைமைக்கூறுகளை உருவாக்கும் முரண்பாடுகளைப்  ‘புறப்பகை முரண்கள்’ என்றும், தமது அறிவும் தமது ஆற்றலும் தம்முடைய நலன்களுக்கு மட்டுமே உரியது என்று அணுகும் அகந்தைப் போக்கிலான போட்டி, பொறாமை, மோதல் போன்றவற்றால் அமைப்புக்குள்ளேயே விளையும் முரண்பாடுகளை ‘உட்பகை முரண்கள்’ என்றும் திருமா வரையறுக்கிறார். உட்பகையையும் புறப்பகையையும் முன்னுணர்ந்து விலக்குவதன் வழியாகவே எந்த ஓர் அமைப்பையும் பாதுகாத்துக்கொள்ள இயலும் என்று திருமா கூறுவது, ஒரு மறுக்கவியலா உண்மையாகும். இதேபோல் ‘அந்நியமாதல் மற்றும் அய்க்கியமாதல்’ பற்றிய அவரின் கருத்துகளும் முக்கியமானவையே. இது பற்றிச் சுருக்கமாக ஆனால் மிகச் செறிவாக, “அமைப்பிலிருந்து அந்நியப்பட்டுத் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளும் தனிநபர் எவராலும் அமைப்பின் பாதுகாப்பையும் அமைப்பின் பிற நலன்களையும் முதன்மைப்படுத்தவே இயலாது. அமைப்போடு அய்க்கியமாகி அமைப்பின் அனைத்துவகை நலன்களையும் முன்னிறுத்துவோரால் மட்டுமே அமைப்பையும் தன்னையும் ஒருங்கிணைத்துப் பாதுகாத்திட இயலும்” என்கிறார். ஒதுங்குவதும் கூடாது; யாரையும் ஒதுக்குவதும் கூடாது என்பதுதான் தலைவர் திருமாவின் அடிப்படையான கருத்தாகும்.  “உரிய அளவில் தனி அடையாளங்களை விட்டுக்கொடுத்துப் பொது அடையாளத்தை உள்வாங்கி ஒருமித்த    இலக்கை நோக்கி ஒரே அலகாகப் பொதுநீரோட்டத்தில் அய்க்கியமாதல் தான்” உடனடியாகச் செய்ய வேண்டியது என்பதில் தெளிவாயிருக்கிறார் தலைவர் திருமா.

அமைப்பாய்த் திரள விரும்புவோர் செய்ய வேண்டியவைகளாகத் திட்டமிடுதல், உந்துதல், செயல் திட்டம், செயல் தந்திரம், வெளிப்படைத்தன்மை, கமுக்கம், தகவல் தொடர்பு, மக்கள் தொடர்பு, ஊடக உறவு, கருத்துப் புரிதல், களப்பணி, மக்களோடு வாழ்தல், பன்மைத்துவம் வளர்த்தல், தொடர்ச்சியாக இயங்குதல், மேலாதிக்கம் மறுத்தல், மனச் சமநிலையைப் பேணல், சுயவிமர்சனம் செய்துகொள்ளுதல், பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடுமிருத்தல், மறத்தல், மன்னித்தல், தலைமைக்குக் கீழ்ப்படிதல், வீண்பேச்சைத் தவிர்த்துத் துடிப்புடன் செயல்களில் ஈடுபடுதல் எனப் பலவற்றைத் தலைவர் திருமா வலியுறுத்துகிறார். எதிர்மறை எண்ணங்களை விடுத்து, நேர்நிலைச் சிந்தனைகளுடன் தோழர்கள் செயல்பட வேண்டும் என்றும் கூடக் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அவர், “தன்னைவிட வலியவர்களை வலியவர்கள் என ஏற்றுக்கொள்வதும், அவர்தம் ஆற்றலைப் போற்றி ஊக்கப்படுத்துவதும்தான் நேர்மறையான ஒப்பீட்டு அணுகுமுறையாகும். மாறாக, அவர்களைப் போட்டியாளர்களாகக் கருதிப் பொறாமை கொள்வதும் அவர்தம் ஆற்றலைக் கண்டு அச்சப்பட்டு அவர்களை வெறுப்பதும் எதிர்ப்பதும் எதிர்மறையான அணுகுமுறையேயாகும்…… அமைப்பாக்க நடவடிக்கையில், தன்னோடு ஒப்பிடப்படுவோர் வலியவர்களானாலும் எளியவர்களானாலும் அவர்களோடு எதிர்மறையான அணுகுமுறைகளைக் கையாளுவது அமைப்பாதலைப் பாழ்ப்படுத்தும்” என்கிறார். அதாவது, எத்தனையோ வேறுபாடுகளுக்கு நடுவிலும், தன்னைப்போல் பிறரும் மனிதர்களே என்கிற ஏற்பும் உரிய மதிப்பும்தான் சமத்துவத்திற்கான அடிப்படையாகும் என்கிறார். “சமத்துவம் என்பது அனைவருக்கும் சமமான சொத்து, சமமான பதவி, சமமான ஆற்றல், சமமான ஆயுள் என்று பொருளாகாது. வலியோர், எளியோர் என்றில்லாமல் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் கருத்துகளையும் மதிப்பதில் சமமான அணுகுமுறையைக் கையாளுவதே” சமத்துவமாகும் என்கிறார். வயது வேறுபாட்டினால்கூடக் கீழ் – மேல் என்கிற நிலைமை வந்துவிடலாம் எனச் சுட்டுபவர், “இவ்வாறான வேறுபாடுகளுக்கும் இடம்கொடுக்காத உறவுமுறை விளிப்பு ஒன்று, இன்றைய பொதுவாழ்வுக் களத்தில் கையாளப்படுகிறது. அதுதான் ‘தோழர்’ என்னும் உறவுமுறையாகும். இது வயது வேறுபாடுகளையும் துடைத்து ஒரு சமத்துவ உறவை வெளிப்படுத்துகிறது. அமைப்பாக்க நடவடிக்கையில், இவ்வாறு சகோதரத்துவ, சமத்துவ உறவுமுறைகளை வளர்ப்பதும் அவற்றைச் செழுமைப்படுத்துவதும் இன்றியமையாத தேவையாகும்” என்கிறார். இது அடிபடும் மக்களைப் போராடத் தூண்டும் ஒரு முழுமையான நூல். ‘எழுச்சித் தமிழர்’, ‘தோழரான நம்தலைவர்’ தொல்.திருமாவளவனின் கருத்தியலும் – நடைமுறைச் சாத்தியமுள்ள வழிகாட்டலும், எவ்வளவு ஆழமும் செழுமையும் கூடியவை என்பதை, ‘அமைப்பாய்த் திரள்வோம்’ நூல்வழித் தெரிந்துகொள்கிறோம். இது ஒரு சமத்துவ இயக்கக் கையேடு மட்டுமன்று; வாழ்வியல் விளக்கப் பனுவலுமாகும்.

ஒரே ஒரு குறைதான் எனக்கு. அமைப்பாய்த் திரளும் இயக்கச் செயல்பாட்டில், பெண்களின் பங்களிப்புப் பற்றியும் விரிவாகத் தலைவர் தொல்.திருமாவளவன் எழுதவேண்டும் என்ற எளிய ஒரு வேண்டுகோளோடு, இக்கட்டுரையை முடித்துக்கொள்கிறேன். இவ்வாய்ப்பை எனக்கு வழங்கிய அன்புத் தோழர்கள் மு.ரமேஷ்க்கும் எங்கள் கும்பகோணத்துக்காரர் அமுதனுக்கும் நன்றி.