அர்த்தத்தைத் தேடுதல்

அர்த்தம் காண்பதில் பலவிதப் பின்னமைப்பிய, தகர்ப்பமைப்பு, பின்நவீனத் துவ நிலைப்பாடுகளை விலக்கிவிடலாம், ஏனெனில் அவை அர்த்தம் காண்பது இயலாது என்று சொல்பவை. அவை சொல்வது போல அர்த்தத்தை எல்லையற்று ஒத்திப்போட முடியும். ஆனால் அதனால் அர்த்தம் காணும் முயற்சியையே விட்டுவிடலாம் என்பதாகாது.

மொழி எப்போதும் இயங்குகிறது. நாம் தினசரி வாழ்க்கையில் அதைச் சிறப்பாகத் தான் பயன்படுத்துகிறோம். எழுத்தாளர்கள் தங்கள் கருத்துகளை விளக்கத் தான் செய்கிறார்கள். சிலர் கடினமான கருத்துகளைக் கூற முயன்றாலும் ஒவ்வொரு தனித்த விஷயத்தையும் புரிந்துகொள்ளா விட்டாலும் பொதுவான என்ன சொல்லவருகிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளவே செய்கிறோம். தினசரி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் உரையாடுகிறோம். புரியாவிட்டாலும் தெளிவு படுத்து, உதாரணம்கொடு என்று கேட்கிறோம்.

ஆனால் இலக்கியப் படைப்பு வேறு தளத்தில் இயங்குகிறது. எல்லோரும் ஒரே மாதிரியாகவா வாசிக்கிறோம்? சமகாலப் படைப்பொன்றைப் படிக்கும் போதும் அது கூறுவதை ஒருபகுதிதான் நாம் ஏற்கிறோம். அப்படிப் புரிந்து கொள்ளும்போதும், மொழிசார்ந்த பயன்பாட்டின் வழியாக அதை உறுதிப் படுத்திக் கொள்கிறோம், தேவைப்பட்டால் மற்றவர்களிடம் உரையாடி, அகராதி போன்றவற்றைப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.

பழங்கால இலக்கியம் ஒன்றை வாசிப்பது அளவில் வேறுபடுவதே ஒழிய பண்பில் வேறுபடுவதல்ல. எல்லாத் தீர்ப்புகளும் சார்புநிலையின என்பதை ஏற்பது தவறல்ல. அது எல்லா அறிவுகளினதும் அடிப்படைப் பண்பாகும்.

ஓர் இலக்கியப் படைப்பு உருவாக்கப்பட்டு வெளியாகும்போது அது ஒரு எல்லையற்ற இலக்கிய ஓட்டத்தில் வீழ்கிறது. ஒருவேளை அந்தச் சமயத்தில் இருக்கும் எழுத்தாளருக்கும் வாசகருக்கும் நிலையான அர்த்தம் கொண்டது என்று தோன்றலாம். ஆனால், மொழி, சிந்தனை, சமூக யதார்த்தம் ஆகியவை மாறிக்கொண்டே இருக்கின்றன.

ஆனால் காலப்போக்கில் நமக்குள்ளாகவே அடுத்தடுத்த வாசிப்புகளில் அர்த்தம் மாறக்கூடும். கிரேக்கத் தத்துவஞானி ஹெராக்ளிடஸ் நான் ஒரே நதியில் இரண்டுமுறை இறங்குவதில்லை என்று சொன்னார் என்பார்கள். (புத்தரும் இ்வ்விதமே சொன்னதாகக் கதை இருக்கிறது.)

அப்படியானால் நாம் உரைகளைக் கொண்டுதான் எப்படி வாசிக்கமுடியும்?

ஆனால் நாம் ஒரு பிரதியின் மூல ஆசிரியர் ஏற்றுக் கொண்ட அர்த்தங் களை அல்லது சமகாலத்தின் முதல் வாசகர்கள் குழு ஏற்றுக்கொண்ட அர்த்தங்களைப் பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதால் இந்த ஈரடி நிலை தவிர்க்கப்படுகிறது.

சங்க இலக்கியமாக இருந்தாலும், தற்காலஇலக்கியமாக இருந்தாலும் அதனால்தான் நான் மாணவர்களுக்கு உரைகளைப் படிக்காதீர்கள், உங்களுக்குத் தோன்றும் விதமாக நீங்களே அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறுவது வழக்கம். அப்போதுதான் புதிய புதிய வாசிப்புகள் தோன்றும்.

ஆசிரியனின் மறுபிறப்பு

1949இல் இரண்டு புதிய விமரிசகர்கள்–டபிள்யூ. கே. விம்சட், மன்றோ சி. பியர்ட்ஸ்லி வெளியிட்ட கருத்து அக்காலத்தில் மிகப் பிரபலம். இதைப் பற்றிக் கவிதை நயம் என்ற நூலில் கைலாசபதியும் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் உள்நோக்கப் போலிநியாயம் (Intentional Fallacy), உணர்ச்சிவிளைவுப் போலிநியாயம் (Affective Fallacy) என்பதைப் பற்றிப் பேசினார்கள். ஆசிரியன் நோக்கத்தைக் கண்டறிவதுதான் வாசிப்பு என்பது உள்நோக்கப் போலிநியா யம். பனுவல் ஏற்படுத்தும் உணர்ச்சிவிளைவுதான் அதன் சிறப்பைத் தீர்மானிப்பது என்பது உணர்ச்சிவிளைவுப் போலிநியாயம். பார்த்தின் கட்டுரை ஆசிரியனின் மரணம் என்பது வரும்வரை இவை வரவேற்புக் குரியவையாகவே இருந்தன.

ஆயினும் இன்றும் நூல்களிலும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களிலும் இந்த ஆசிரியரின் நோக்கம் என்ன என்று குறிப்பிட்டுத்தான் பேசுகிறார்கள்.

ஓர் ஆசிரியரின் நோக்கம் என்ன என்பது பற்றி சில மெய்யான கருத்துக ளை நாம் நூலிலிருந்து அடைய முடியும். நூலிலிருந்து மட்டுமே. வேறு வகைகளில் அல்ல. பொருள் தேர்வு, உருவகம், சினையாகுநிலை (மெடானிமி) அங்கதம் போன்றவற்றை ஆசிரியர் கையாளுவதிலிருந்து உள்நோக்கத்தை ஒருவாறு காணமுடியும்.

எழுதுவதைவிடப் பேசும்போதுதான் ஒருவன் தன் சுயத்துடன் ஒன்ற முடிகிறது என்று டெரிடா கூறினார். எழுத்தாளர்களைப் பொறுத்தவரை இது எதிர்மாறு. அவர்களுக்குப் பேசுவதைவிட எழுதும்போதுதான் தங்கள் சுயத்துடன் ஒன்றியிருக்க முடிகிறது. இதேபோல ஃபூக்கோவும் எழுதும் போது ஆசிரியன் தன் பிரசன்னத்தை மறுக்கிறான் என்றார். இதுவும் தவறான ஒன்றாகவே தெரிகிறது. இவற்றை நான் இங்குச் சொல்வதற்குக் காரணம், நம் தமிழிலக்கியம் பற்றி மரபுவழி ஆசிரியர்கள் வைத்திருக்கும் கருத்துகளை இன்றும் நியாயப்படுத்த முடியும் என்பதற்காகத்தான். ஆகவே எப்போதும் இல்லையேனும், சில சமயங்களிலாவது உண்மையான எழுத்தாளனுக்கும் எழுத்தாளன் குரலுக்கும் இடையே ஒற்றுமைப் புள்ளிகளை உருவாக்க முடியும் என்றே நினைக்கிறேன்.

மதிப்பீடு பற்றி

ஓர் இலக்கியம் சிறந்ததா இல்லையா, அல்லது நல்லதா, கெட்டதா என்ற கேள்விக்கு அவ்வளவு எளிதில் விடை கூறிவிட முடியாது. அதேபோல ஏறத்தாழ இலக்கியத்துக்கு அருகில்வரும் இலக்கியமல்லாத பிரதிகள், இலக்கியப் பிரதிகள் இவற்றின் வேறுபாடுகளைக் காண்பதும் எளிதல்ல. யூரி லாட்மன் என்ற ரஷ்ய விமரிசகர், இலக்கியப் படைப்புகள் நமது கவனத்தை வேண்டுவதற்கு முக்கியக் காரணம் அவற்றில் அதிகத்தகவல் சுமை (high information load) இருப்பதாகக் கூறினார். ஒரு நல்ல கவிதை என்றால் அது உயர் பூரிதமாக (highly saturated) இருக்கும், மோசமான கவிதையில் போதிய தகவல் இருக்காது என்றும் கூறினார். இது ஒரு நல்ல அளவுகோலாக இருக்காது என்று நினைக்கிறேன். நமது குறுந்தொகைக் கவிதைகள் போல, மிகச் சிறிய சிறந்த கவிதைகளும் உண்டு. இடைக்காலத்தில் எழுதப்பட்டவை போல நீண்ட சிறப்பற்ற கவி தைகளும் உண்டு. உண்மையில் கவிதைகளோ இலக்கியப் படைப்புகளோ நம்மை நாம் வாழும் உலகத்தோடு எப்படித் தொடர்பு படுத்துகின்றன என்பதே அவற்றுக்கான அளவுகோல். நல்ல படைப்பு மோசமான படைப்பு என்ற சொற்களை ஆங்கில விமரிசனப் புத்தகங்களில் கண்டிருக்கிறேன். என் கருத்துப்படி, இலக்கியம்-இலக்கியமல்லாதது என்ற பிரிவுகள்தான் உண்டு.

எண்பதுகளில் மேற்குநாடுகளில் இலக்கியக் கொள்கைகள் உச்சத்தில் இருந்தன. இப்போது கொள்கைகள் மீது அவ்வளவாக ஆர்வம் இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் எப்படியும் விமரிசகர்கள் இலக்கியங்களை யும் அவற்றை ஆராயும் முறைகளையும் கொள்கைப்படுத்தியே தீர்வார்கள். சந்தேகமின்றி குறித்த ஆர்வக்குழுக்கள் இலக்கியப் படிப்புக்குப் புதிய கோணங்களை–அவை பகுதியளவு நோக்குகளை அளிப்பதாக இருந்தாலும் முன்மொழிவார்கள். இப்போது மார்க்சிய, உளப்பகுப்பாய்வு, பிற்காலனிய, சூழலியல் சார்ந்த பார்வைகள், இவை போன்ற பிற, உள்ளன. மேலும் ஏன் புதிய அணுகுமுறைகள் தோன்றக்கூடாது என்பதற்கும் காரணம் இல்லை.

———

poornachandrang1@gmail.com