2019ஆம் ஆண்டு, ‘ஜூன்’ மாதம், ‘விகடன் தடம்’ இதழில் வெளிவந்த என் கட்டுரையைப் படித்துவிட்டுக் கு.அழகிரிசாமியின் இளைய மகன் சாரங்கன் என் வீடு தேடிவந்து தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். ஓரிரு இலக்கியக் கூட்டங்களில், அவரை இதற்கு முன்பே நான் பார்த்திருக்கிறேன் என்றாலும், ரொம்ப நெருக்கமாகப் பேசியதில்லை. அவர் பாராட்டு, எனக்குப் பெரும் உற்சாகத்தைத் தந்தது. ’அன்பளிப்பு’ சிறுகதையின் நாயகனான சாரங்கராஜன் என்ற பதின்மூன்று வயதுக் குழந்தை, இப்போது ஐம்பத்தொன்பது வயது மூத்த அண்ணனாகி என் முன்னமர்ந்து வெகு சகஜமாகப் பேசுவதை வியப்புடன் என் உள்மனம் கவனித்துக்கொண்டிருந்தது. என் தகப்பன் ஸ்தானத்தில் வைத்து நான் போற்றும் மகத்தான எழுத்தாளரின் வாரிசுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்! கு.அ.வின் மூத்த மகன் இராமச்சந்திரனுடன், எனக்குச் சிறு பரிச்சயம் உண்டு. இந்த அறுபதைத் தாண்டிய வயதில் கு.அ.வின் முழுச் சாயலும் அவரிடம் ஏறி இருப்பதை நான் அவதானித்திருக்கிறேன். அவர் பரம சாது. இவர் சாரங்கன், கேமராமேன். அப்பாவைப் பற்றி ஒரு பெரிய டாக்குமென்டரியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதன் நிமித்தமாகவே அவர் என்னைச் சந்திக்கவும் வந்திருந்தார். நான் அவரைப் பேசவிட்டுக் கேட்டுக்கொண்டிருந்தேன். எழுத்தாளரான அப்பா மீது இத்தனை அபிமானம் கொண்ட வேறொரு மகனை, இதுவரை நான் என் வாழ்வில் சந்தித்ததில்லை. 23.09.1923இல் இடைசெவலில் பிறந்த கு.அழகிரிசாமி, 19.01.1955இல் மலேயாவில் சீதாலக்ஷ்மியை மணந்து, இராமச்சந்திரன் – ராதா – சாரங்கராஜன் – பாரதி என்ற நால்வருக்குத் தந்தையாகி, 05.07.1970இல் மறைந்தார். “இதே 05.07.1970இல்தான், அப்பாவின் பாஸ்போர்ட்டும் எக்ஸ்பயரியாச்சு’’ என்றபோது, சாரங்கனின் குரல் கம்மித் தழுதழுத்தது. (பாஸ்போர்ட்டை எடுத்துக்காட்டினார்). இக்குறுகிய அவசர  அவசரமான நாற்பத்தேழு வயதுகூட முடியாத வாழ்விற்குள்ளேயே கு.அ., நிறைய எழுதியுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் நான்கு நாவல்களையும் எட்டுக் கட்டுரைத் தொகுதிகளையும் சில சிறுவர் நூல்களையும் குறிப்பிடத்தக்க சில நாடகங்களையும் பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளையும் தந்துள்ளதுடன், கம்பராமாயணத்தில் ஐந்து காண்டங்களையும், அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தையும் சிறப்பாகப் பதிப்பித்துள்ளார். மரணத்தை முன்னுணர்ந்து அசுர வேகத்துடன் செயல்பட்டாரோ என வியக்குமளவிற்குப் படைப்புத்துறைகள் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் கு.அ. முத்திரை பதித்துள்ளார். இந்த மகத்தான கலைஞன், தமிழின் மாபெரும் சொத்து. தன்னேரிலாத உயர்தனிச் செம்மொழியாக இருபதாம் நூற்றாண்டின் பின்பாதியில் தமிழ் ஜீவித்து உய்ந்ததற்கு உழைத்தவர்களில் கு.அ.வுக்கு முதன்மை இடமுண்டு. வெறும் மொழிப் பெருமையை மட்டும் பேசிவிட்டு, அதற்குக் காரணமான பெருங்கலைஞர்களை வறுமையிலும் அங்கீகாரமின்மையிலும் தவிக்கவிடும் தமிழ்ச் சமூகத்தின் வழமையான நோய்க்குக் கு.அ.வும் விதிவிலக்கில்லை. 1970ஆம் ஆண்டு, ஜூலை மாதம், ஐந்தாம் தேதி, இதயக்கோளாறால் திடீரெனக் கு.அ. இறந்தபோது, நாற்பது வயதுகூட நிரம்பியிராத அவரது மனைவி சீதாலக்ஷ்மி, மகாகவி பாரதியின் கண்ணம்மாவான செல்லம்மாவும் புதுமைப்பித்தனின் கண்மணியான கமலாவும் எப்படி நிர்க்கதியாய்த் தனிமைப்பட்டு நின்றார்களோ, அப்படித்தான் எல்லையற்ற வெறுமைக்குள்ளானார். கு.அ. மறைந்தபோது ஆறாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த சீதாலக்ஷ்மி, அரும்பாடுபட்டுப் பின் எஸ்.எஸ்.எல்.சி. தேறினார். அவர் மகள் ராதாதான் அவருக்கு ஆசிரியர்! ஒருசேர மகளும் தாயும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வெழுதிய கொடுமையை, நீங்கள் வேறு எங்கேனும் பார்த்ததுண்டா? கேட்டதுண்டா?  “முதலில் அக்கா பாஸாகிவிட்டார்; அம்மா ஃபெயில். அதற்காகச் சோர்ந்து போகாமல், மறு வருஷம் தேர்வெழுதி அம்மா வென்றார்’’ எனச் சாரங்கன் என்னிடம் விவரித்தபோது, உண்மையாகவே என் கண்ணில் ஒரு துளி நீர் வந்துவிட்டது. பிறகு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலை கிடைத்துத் தன் உழைப்பால் நான்கு பிள்ளைகளையும் பெரிய படிப்புகள் படிக்க வைத்துக் கரையேற்றிவிட்டார் சீதாலக்ஷ்மி எனச் சாரங்கன் சொல்லிக் கேட்க நேர்ந்தபோது, இன்று தொண்ணூறைக் கடந்து கொண்டிருக்கும் அவர் பாதங்களில் ஒருமுறை என் மனத்திற்குள்ளேயே விழுந்தெழுந்து கொண்டேன்.

சிறுவயதில் கழற்றி வீட்டில் வைக்கப்பட்டிருந்த வண்டிச்சக்கரத்தின் மேலேறி விளையாடி,இரண்டுமுறை கு.அ. பலத்த காயமடைந்தார். முதல்முறை, நாட்டுவைத்தியர் உதவியால், எளிதாக மீண்டுவந்துவிட்டார். இரண்டாம்முறை விழுந்து அடிபட்டபோது, அவரது இடது கையின் இரண்டு விரல்களை மடக்க முடியாத ஓர் ஊனம் ஏற்பட்டுவிட்டது. இயல்பில் நளினமானவரான கு.அ., தம் வாழ்க்கை முழுக்கப் பிறருக்கு இது தெரியாத வண்ணம் மிக விழிப்பாக நடந்துகொண்டதாகச் சாரங்கன் குறிப்பிட்டார். நகையும் விவசாயமும் செய்யும் கம்மாளர் குலத்தில் பிறந்த கு.அ., குலத்தொழிலை உதறிவிட்டுப் பெரும் படிப்பாளியாகவும் மாபெரும் தமிழ்ப் புனைகதை எழுத்தாளராகவும் மடைமாற நேர்ந்ததற்கு இந்தச் சிறுவயது விபத்தே காரணமாகும். தமிழ்நாட்டிலிருந்து மலேயாவில் குடியேறிப் பாரம்பரிய இசைப் பின்னணியுடன் வாழ்ந்துகொண்டிருந்த பிராமணப் பெண் சீதாலக்ஷ்மியைக் கு.அ. காதலித்து மணந்தது ஒரு சினிமாவுக்கான சுவாரஸ்யமான கதை. இயல்பில் சங்கோஜமும் பெண்களுடன் பேசிச் சிரித்துப் பழகாதவருமான கு.அ., மலேயா  ‘தமிழ்நேசன்’ பத்திரிகையின் ஆசிரியர் (1953-1957) என்ற ஹோதாவுடன், சீதாலக்ஷ்மிக்கு அறிமுகமாகி, அவர் மனங்கவர்ந்தார். சீதாலக்ஷ்மி குடும்பத்தார் சேர்ந்து அரங்கேற்றக் கருதிய எட்டயபுரம் கடிகை நமசிவாயப் புலவர் இயற்றிய ‘வல்லீ பரதம்’ நாடகத்திற்குப் பாடல்கள் மற்றும் வசனத்தில் உதவப்போய்க் காதலில் கு.அ. விழுந்தார். அந்த 1950கள் காலத்திலேயே சொந்தமாகக் ’கார்’ வைத்திருந்த, உயர் மத்தியதரப் பின்னணியுள்ள சீதாலக்ஷ்மியின் குடும்பத்தில் மொத்தம் எட்டுப்பேர் இருந்தனர். இவர்களில் எழுவர் பெண்கள். சீதாலக்ஷ்மியின் வீட்டாரை எதிர்த்துத்தான், பென்டாங் சிவ சுப்பிரமணியர் கோவிலில் வைத்துச் சீதாலக்ஷ்மியைக் கு.அ. மணந்துகொண்டார். அந்தத் திருமணம் சட்டப்படி பதிவும் செய்யப்பட்டது, திருமணத்திற்குப் பின்னர், வேறு வழியின்றி அந்தத் திருமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. “மலேயாவில் சீதாலக்ஷ்மி கார் ஓட்டுவார்’’ என்றார் சாரங்கன். “சென்னை வந்த பிறகு?’’ என்று கேட்டேன். “பேருந்தும் கால்நடையும்தான்” என்றார். செல்வச் செழிப்பான தம் வாழ்விலிருந்து, திடீரென வறுமைக்குள் சீதாலக்ஷ்மி தள்ளப்பட்டதன் பின்னணியில்,‘அறனில் கூற்றம்’ இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு ஆறுதலுறலாம். ஆனால், நம்  சமூகம், அப்பாவி எழுத்தாளனை வஞ்சிக்கிறது என்பதே யதார்த்தமாகும். தம் கடும் உழைப்பின் வழியாகத் தம் குடும்பத்தை மேலேற்றிவிடும் ஏணியாகியிருக்கிறார் சீதாலக்ஷ்மி! கு.அ.வின் மனைவி என்ற ஒரே ஒரு காரணமே போதும், தமிழ்ச் சமூகம் அவரைக் கொண்டாடுவதற்கு. அதைவிட மேலாக, தொடர்ந்து நம் ஆணாதிக்கச் சமூகத்தோடு ஓசையின்றிப் போராடி, அவரது துயரங்களைச் சாதாரண உப்புப்புளி மிளகாய் வாழ்வு வழியே கடந்து வென்று, ஒரு தாயாக இமயமலைபோல் ஓங்கிநிற்கிறார் சீதாலக்ஷ்மி. மகாகவி பாரதியின் செல்லம்மாவுக்கும் புதுமைப்பித்தனின் கமலாவுக்கும்தான் ஏதும் செய்யவில்லை; தொண்ணூறைத் தொட்டுள்ள இந்தத் தாய் சீதாலக்ஷ்மிக்காவது உரிய காலத்தில் ஏதாவது உயரிய கௌரவங்களைச் செய்யக் கூடாதா இந்த அரசும், அதிகார அமைப்புகளும், இலக்கிய நிறுவனங்களும்? என்று எழுதிவிட்டு, அடுத்த வேலை பார்க்கப் போவதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?

1950இல் தொடங்கித் தம் கடைசி மூச்சுவரை, இருபது வருஷமாகத் தொடர்ந்து கு.அ. டைரி எழுதிவந்ததாகக் கூறும் சாரங்கன், அந்த டைரிகளைத் தாம் ஸ்கேன் செய்து வைத்திருப்பதாகவும், இனிதான் அவை வெளியிடப்பட வேண்டுமென்றும், அதற்காக ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாகவும் கூறினார். “இடைசெவலில்தான் இருக்கிறேன். பஞ்சத்தினால் ஜனங்கள் எலும்புக்கூடாகி விட்டார்கள். ஏதேனும் ஒரு மாறுதல் இரண்டு மூன்று வாரங்களுக்குள் ஏற்படாவிட்டால், அனேக உயிர்கள் செத்துப் போய்விடும். மனித உயிர் இவ்வளவு அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில் அனாதையாக விடப்பட்டிருக்கிறது’’ (29.03.1951,வியாழக்கிழமை). “யாதொரு தவறும் தப்பிதமும் செய்யாமல் வேலை செய்து பிழைக்க விரும்பும் மக்கள்….. இவர்கள்தான் அனாதைகள். இவர்கள்தான் இன்று சாகிறார்கள்’’ (30.03.1951,வெள்ளிக்கிழமை). கு.அ. எழுதியுள்ள இந்த டைரிக் குறிப்புகளை வாசிக்கையில், உங்கள் நெஞ்சம் பதறவில்லையா? இந்தப் பஞ்சத்தின் தொடக்கம்தான், 1949 ஜனவரி மாதம், ‘காண்டீபம்’ இதழில் கு.அ. எழுதிய ‘திரிபுரம்’ சிறுகதையிலும் விவரிக்கப்பட்டுள்ளது. ‘திரிபுரம்’ சிறுகதை விவரித்ததை விடவும் பஞ்சம் பெரிதான அவலத்தைத் தம் 1951ஆம் ஆண்டின் டைரிக் குறிப்புவழிக் கு.அ. காட்டுகிறார். இந்த வகையில் இக்குறிப்பு, தவிர்க்கவியலாத ஒரு சமூகப்பதிவாகிறது. இந்த டைரி விரைவில் வெளிவரவேண்டும்; இது அன்றாடத்திற்குள்ளும் மனப்பிரபஞ்சத்திலும் ஊடாடும் ஓர் எழுத்தாளனின் அரிய ஆவணமாயிருக்கும். தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சில சுவாரஸ்யமான சம்பவங்களைச் சாரங்கன் சொன்னார். இவை இதற்கு முன்பாகப் பகிரப்படாதவை என்பதால், இவற்றை இங்குப் பதிவது என்பது, மிகவும் அவசியமாகிறது. ’’அம்மாவைக் காதலித்துக் கொண்டிருந்தபோது, அப்பாவின் இடது கை ஊனம், முதலில் அம்மாவின் கண்ணில் படவேயில்லை. அம்மாவின் தோழி, அதைக் கண்டு காட்டிய பின்தான், அம்மாவுக்கு அது தெரிந்தது’’ என்றார் சாரங்கன். ஊனம், தம் கல்யாணத்திற்குத் தடையாகிவிடுமோ எனக் கு.அ. பயந்திருக்க வேண்டும். ஆனால், சீதாலக்ஷ்மி என்ன சொன்னார் தெரியுமா?  “ஒருவேளை கல்யாணமான பின், ஏதேனும் ஒரு விபத்தில் சிக்கி இதுபோல் அவருக்கு நேர்ந்திருந்தால், நாம் என்ன செய்திருக்கப் போகிறோம்? அப்படி நடந்ததாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். இதனால் எல்லாம், என் காதலை, நீங்கள் மழுங்கடித்துவிட முடியாது’’ எனத் தம் தாய் எதிர்வாதிட்டதாகச் சாரங்கன் என்னிடம் பகிர்ந்துகொண்டார். இந்தக் காதலின் பெருவிளைச்சலைக் குடும்ப வாழ்க்கை குறித்தும், குழந்தைகளைப் பற்றியும், இளையோர்களின் அகம் சார்ந்தும் கு.அ. எழுதியுள்ள பல சிறுகதைகளிலும் கண்டுணர்கிறோம்.

கு.அ. இறக்கும்போது சாரங்கனுக்குப் பத்து வயதுதான். ஆனால், நாற்பது ஐம்பது வருடங்கள் தந்தையோடு வாழ்ந்து நிறைந்தது போன்ற ஒரு பூரணத்துவம், சாரங்கனின் பேச்சில் ஒளிர்கிறது. “ஒருமாலை, அப்பாவுடன் தியாசபிகல் சொசைட்டிக்குப் போய்விட்டு வெளிவந்தபோது, சிறிது இருட்டத் தொடங்கியிருந்தது. எங்கள் முகத்தில் சில மின்மினிப் பூச்சிகள் வந்து மோதிச்சென்றன. அப்போது அப்பா, தம் குழந்தைப்பருவக் காட்சி ஒன்றைப் பற்றிப் பேசினார். காடு கழனிகளில் வேலை செய்துவிட்டுப் பொழுது இருட்டியபின் இடைசெவல் கிராமப் பெண்கள் வீடு திரும்பும்போது, தம் கண்முன் பறக்கும் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்துத் தம் நெற்றியில் ஒளிப்பொட்டாக ஒட்டிக்கொண்டு மகிழ்வார்களாம். இதை அப்பா விவரித்த அந்தத் தருணம், இப்போதும் என் கண்முன் நிற்கிறது” என்றார் சாரங்கன். மலேயாவுக்குப் போனால் என்ன, மீண்டும் சென்னைக்கு வந்தால் என்ன, அட! விவசாயமே செய்யாவிட்டால்தான் என்ன, கு.அ. என்ற எளிய மனிதரின் அடிமனத்தில் எப்போதும் இடைசெவலே வாழ்ந்திருந்தது என்பதற்கு, இதை விடவும் நமக்கு வேறென்ன சான்று வேண்டும்? இன்னொன்றையும் சாரங்கன் சொன்னார். மிக மிக அழகாகக் கோலம் போடுவாராம் கு.அ.! தமிழ்ச் சமூகத்தில் எத்தனை ஆண்களுக்குக் கோலம் போடத் தெரியும்? அட, அதுகூட வேண்டாம்! அதை விட்டுத் தள்ளுங்கள். எத்தனை எழுத்தாளர்கள் கோலப்பொடியைக் கையால் தொட்டுப் பார்த்திருப்பார்கள்? கோலம் போடும் பெண்களைப் பார்த்து ரசிக்கும் தோரணையில், “இன்னும் கொஞ்சம் பெரிய கோலமாய்ப் போடப் பழகேன்’’ என்று வேண்டுமானால், ‘அசடு’ வழிந்திருப்பார்கள்! “அப்பாவுக்குச் சமையலிலும் பயிற்சியும் ருசியும் உண்டு’’ என்றார் சாரங்கன். திருவனந்தபுரத்திற்கு எழுத்தாளர் ஆ.மாதவனின் வீட்டுக்குக் கு.அ. போனபோது, ஆ.மாதவனின் மனைவியிடம் சில சமையல் சேர்மானங்களை விசாரித்துக் கு.அ. தெரிந்துகொண்டதாகச் சாரங்கன் சொன்னார்.

கு.அ.வின் எழுத்தில் கூடிவந்திருக்கும் பலவகை அபூர்வங்களுக்கும், அவருடைய தனிவாழ்வின் சில பிரத்யேகங்களுக்கும் ஆழமான ஓர் இணைப்பிருக்கிறது. பிரதியே முக்கியம்; ஆசிரியன் இறந்துவிட்டான் என்ற பின்நவீனக் கோட்பாட்டை இன்று நாம் யாரும் மறுக்க முடியாது; அது இலக்கிய விமர்சனத்தின் ஒரு மையப் பகுதியாகவே இன்று நிலைபெற்றுவிட்டது. ஆனால், ஆகப்பெரும் படைப்புகளுக்குள், எவ்வளவோ வகை வகையான அழகுகள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொணர்வதற்கு எத்தனையெத்தனை வகையிலும் முயன்று பார்த்தலே தகும்! அப்படித்தான் நாமும், இங்குக் கு.அ.வின் சொந்த வாழ்வின் சித்திரங்களை, அவர் புனைவுகளோடு பொருத்திப் பார்ப்பதையும் எடுத்துக்கொள்ளவேண்டும். இவற்றையெல்லாம் முற்றிலுமாக விலக்கி வெளியே நிறுத்திவிட்டுப் பிரதிக்குள் பயணிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், கிடைக்கும் சிறு சிறு தகவல்களைப் பயன்படுத்திப் பிரதிக்குள் மேலும் பல வெளிச்சங்களை அனுமதிப்பதும் என்று நினைக்கிறேன். உதாரணமாகச் சாரங்கன் ஒரு தகவல் சொன்னார். இடைசெவல் கிராமத்துப் பள்ளியில் ஆறாவதுவரை படித்த கு.அ., அப்பள்ளியில் ஏழாம் வகுப்பில்லாததால் இரு வருடங்களைத் தவறவிட்டுவிட்டதாகவும், அதன்பின் கோவில்பட்டிப் பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பில் நேரடியாகச் சேர்ந்து கு.அ. படித்ததாகவும் கூறினார். அமரத்துவம் பெற்ற ‘குமாரபுரம் ஸ்டேஷன்’ சிறுகதையில், அப்படியே இது பதிவாகியிருக்கிறது.

“எந்தக் கிளாஸில் சேரப் போறாங்க?’’

“நம்ம ஊரிலே ஆறு பாஸ் பண்ணியிருக்கிறாக’’

“அங்கே ஏழிலே கொண்டுபோய்ச் சேர்க்கணும்’’

“எந்த ஊர்ப் பையன்கள்?’’

“இடைசெவல் பக்கம்’’

“இடைசெவலா? அங்கே ஏழாம் வகுப்பு இல்லையோ?’’

“இல்லை; ’சர்க்கார் சாங்ஸ’னுக்கு எழுதிப் போட்டிருக்காக’’

“பாஸ் பண்ணினதுக்குச் சர்டிபிகேட் இருக்கா?’’

“இருக்கு’’

“இருந்தாலும் பரீஷை வெச்சுத்தான் சேர்ப்பாங்க’’

இப்படியே பிரதியில் இடம்பெறும் ஒவ்வொரு சொல்லுக்கும், நாம் எழுத்தாளனின் சொந்த வாழ்க்கைக்குள்ளிருந்து ஆதாரங்களைத் தேடித் தொகுத்துக் கொண்டிருக்கத் தேவையில்லை; அது ஒரு வீண் வேலை என்ற கோட்பாட்டு விமர்சனத்திலும் நியாயம் உண்டுதான். ஆனால், ‘குமாரபுரம் ஸ்டேஷன்’ போன்ற கு.அ.வின் சாகாவரம் பெற்ற சில சிறுகதைகளை விளங்கிக்கொள்ளக் கிடைக்கும் சிறு துரும்பையும் பயன்கொண்டாக வேண்டும் என்ற வாசக எதிர்பார்ப்பிலும் வேறொரு நியாயம் உண்டுதானே. இதுவும்கூடப் பிரதியைப் பெருமைப்படுத்துவதுதான். இது பற்றிப் பிறகு நாம் விரிவாக விவாதிக்கலாம். இப்போது இந்தக் கட்டுரையை நான் முடிக்க வேண்டும். கு.அ.வின் எழுத்தைப் பற்றிக் கதைப்பதற்கு நிறைய இருக்கின்றன. பாரதிதாசன், ஆதவன்போல் செத்ததற்குப் பின்னர் ’சாகித்திய அகாதெமி’ விருது கொடுக்கப்பட்ட கு.அ.வுக்கு இன்னும் மூன்று ஆண்டுகளில் நூற்றாண்டு விழா வரப்போகிறது. அதற்கு முன்னர், கு.அ.வின் வெளிவராத எழுத்துகள் அனைத்தும்  பிரசுரம் கண்டுவிட வேண்டும் என்ற முனைப்போடு சாரங்கன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த நல்முயற்சிக்கு, தமிழ் வாசகர்களின் ஒத்துழைப்பும் உற்சாகமும் அவருக்குக் கிடைக்குமானால், கு.அ.வின் இதுவரை வெளிவராத ‘1950 – 1970’ என்ற காலப் பகுதிக்குரிய டைரிக் குறிப்புகள், இனியேனும் அச்சேறிவிடக் கூடும்! வாழும் போது தம் எழுத்துகளுக்காகப் பெரிய அங்கீகாரம் எதையும் பெற்றிராத கு.அ.வுக்கு, இந்த நூற்றாண்டு விழாக் காலத்திலேனும், ஏதேனும் ஒரு நல்லது நடக்கட்டுமே!

‘இரண்டு கணக்குகள்’ எனக் கு.அ., ஓர் அருமையான சிறுகதை எழுதியிருக்கிறார். ஒரு செவ்விலக்கியப் பிரதி, எத்தகைய ஒரு விரிந்த பார்வையை உட்கொண்டிருக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணம் இக்கதை. ஓர் எளிய விவசாயி, தன் நாலு ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து வாங்கிய ஐந்நூறு ரூபாய் கடனுக்கு வட்டிகூடக் கட்ட முடியாமல் திணறும்போது, கடன் கொடுத்தவரிடமே சென்று, வாங்கிய கடனுக்குப் பதிலாகத் தான் அடமானம் வைத்த தன் சொந்த நிலத்தை  எடுத்துக்கொள்ளச் சொல்லி, அவரை அவன் வற்புறுத்துகிறான். ஆனால், கையெழுத்துக்கூடப் போடத் தெரியாத அந்தப் பாமரனின் கணக்கைப் படித்த நிலக்கிழாரான நம்மாழ்வார் நாயுடு ஏற்றுக்கொள்தில்லை. அவர் வேறு கணக்குப் போடுகிறார்.தனக்குப் போதுமான தீவனமிருந்தும், தன் பக்கத்துப் பசுவுக்குமுன் கிடக்கும் புல்லுக்குத் சும்மாவே தலைநீட்டும் சுயநலம் பிடித்த வெள்ளைப் பசு இல்லை தாம் என்பதைப் ’புரோ நோட்’டைக் கிழித்து ஷண்முகத்தின் கையில் கொடுப்பதன்வழி நுட்பமாக நாயுடு புரியவைத்துவிடுகிறார். தம் பேத்தியை விளித்து, ஷண்முகத்திற்கு மோர் கொண்டுவரச் சொல்கிறார். தெரியாமல் பெரிய சொம்பில் பால் கொண்டுவந்து விடுகிறாள் பேத்தி!நிலமானியச் சமூகத்தில் வழக்கிலிருந்த மனிதாபிமானத்தின் வழிவழி எச்சமே அந்தப் பால்! “தம்பி, நம்ம பேத்தி எப்படி?’’ எனக் கதைசொல்லியிடம் கேட்கிறார் நாயுடு. “உங்கள் கணக்கை உங்கள் பேத்தியும் படித்துக்கொண்டாள்’’ என்கிறார் கதை சொல்லி. இத்தகைய மெய்சிலிர்க்க வைக்கும் மனிதாபிமானப் பெருமிதம், கு.அ.வின் சிறுகதைகள் தோறும் விரிந்துகிடக்கிறது. இந்தக் கதையின் தொடக்கப் பத்தியின் இறுதி வரிகளை மேற்கோள் காட்டி, என்  கட்டுரையை நிறைவுசெய்கிறேன். “அவர் மறைந்தது ஏதோ ஒரு பூத உடல் மறைந்து புகழுடம்பு நிலைப்பது போன்ற உணர்ச்சியை உண்டு பண்ணவில்லை. அவரோடு ஏதோ ஒரு காலமும் ஏதோ ஓர் உலகமுமே மறைந்து விட்டதுபோல் இருந்தது” (‘இரண்டு கணக்குகள்’).

இக்கூற்று, இக்கதையில் வரும் நம்மாழ்வார் நாயுடுவுக்கு மட்டும் சொல்லப்பட்டதா, என்ன? இல்லை; இதைக் கு.அழகிரிசாமிக்கும் பொருத்தியே நான் புரிந்துகொள்கிறேன்.

Sirisharam08@gmail.com