சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – 31& 32

31 ) அந்தி மயங்குதடி

அந்த ஓட்டலை அடைந்துவிட்டேன். நான் ஒரு முக நூல் அழகியைச் சந்திக்கச் சென்றுகொண்டிருக்கிறேன். முக நூலில் அவர் படம் அழகாக இருந்தது. அவர் என்னுடைய அலைபேசி எண்ணில்  நான் இருக்கும் நகரத்தில் உள்ள ஓட்டலில் தங்கி  உள்ளதாகவும் ,வந்து பார்க்கமுடியுமா என்றும் கேட்டார். நான் இளித்துக்கொண்டே ‘ சரி ‘ என்று சொல்லிவிட்டேன். உண்மையில் அவள் வயதானவளாக  இருந்து முக நூலில் உள்ள கவர் , ப்ரொபைல் படத்தில் வேறு ஒரு அழகி படத்தை வைத்திருக்கிறாளோ என்று தோன்றியது. அவ்வாறு என்றால் வேறென்ன செய்ய முடியும்; ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு வயதானவளைப் பார்த்துவிட்டு வர வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டேன். ரூம் கதவருகே சென்றபோது திரும்பிவிடலாமா என்று கூடத் தோன்றியது. அழைப்பு மணியை அழுத்தினேன். கதவு திறக்கப்பட்டது. முக நூல் படத்தில் இருந்த பெண் அல்ல. என்னை வரவேற்று அமரச் சொன்னாள். பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டோம்

அவள் ஹிந்துஸ்தானி சங்கீதம் லைவ் ஆக மடிக் கணினியில் கேட்டுக் கொண்டிருந்த நேரம். ஆன் பண்ணி என்னையும் கேட்கச் சொன்னாள் . பிறகு அவள் பேசினாள் – இந்த ராகம் பெயர் பசந்த் பஹாரி. சங்கீதத்தின் சக்தியைப் பாருங்கள். இந்த ராகத்தை கேட்டுக் கொண்டிருந்தபோது தொடர்பில்லாமல்  ‘ அந்தி மயங்கும் நேரம் ‘ என்று குறிப்பிடுவது போலியான கவிச் சொல் என்று மனதில் தோன்றியது. எவன் இந்த வாக்கியத்தை அமைத்தான் என்று தெரியவில்லை. லட்சக்கணக்கான தடவைகள் இந்த வாக்கியம் பயன்படுத்தப்பட்டு அர்த்தமிழந்துவிட்டது. தமிழ் படத்தில் எம் எல் வசந்தகுமாரி ‘ அந்தி  மயங்குதடி ‘ என்று ஒரு பாடல் பாடியிருக்கிறார்.- நான் சொல்வது சரிதானே என்றார். நான் சங்கீதத்தின் சக்தியை வியந்து கொஞ்ச நேரம் பேசினேன். சற்று நேரத்தில் நான் விடை பெற்றுக் கொண்டேன்.

நான் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது  ‘ அந்தி மயங்குதடி ‘ என்ற பாட்டை முணு முணுத்துக்  கொண்டே  சென்றேன்.

32) பூர்வீக வீடு 

எங்கள் மூதாதையர் மதுரையிலிருந்து மலேசியா வந்தவர்கள். அதாவது என் தாத்தாவின்  காலத்திலேயே இங்கு வந்திருக்கிறோம். பழைய பெட்டி ஒன்றை ஆராய்ந்து கொண்டிருந்தபோது பூர்வீக வீடு பற்றி சில தகவல்கள் கிடைத்தன. வடக்கு மாசி வீதியில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு மேற்கே கோவிலில் இருந்து மூன்றாவது வீடு ; கதவு எண் 21 என்று தகவல் கிடைத்தது. எதிர் வீட்டில் இருந்த விஜயா என்ற பெண்ணைப்  பற்றிய கவிதை ஒன்று கிடைத்தது. இந்தியாவிற்கே சென்று இராத நான் மதுரைக்குச் சென்று அந்த வீடு இருந்த தெருவையும் , இப்போது மாற்றம் பெற்று இருக்கக்கூடிய அந்தவீட்டையும் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி நான் மதுரை சென்றேன்.

கிருஷ்ணன் கோவிலைக் கண்டுபிடித்து விட்டேன். மேற்கு எது என்று தெரியவில்லை. ஒருவரிடம் கேட்டு அறிந்து கொண்டேன் .அங்கு ஒரு பெரிய வீடு இருந்தது. நான் அந்த வீட்டின் முன்னே தயங்கி நின்றேன். பிறகு கதவைத் தட்டினேன். ஒரு பெரியவர் வந்தார். நான் மலேசியாவில் இருந்து இந்த வீட்டை பார்க்க வந்திருப்பதாகக் கூறினேன் அவர் உள்ளே வரச் சொல்லி உட்காரச் சொல்லி தண்ணீர் கொடுத்தார். என் தாத்தாவை ‘ பால்கார ராமசாமி ‘ என்று சொல்வார்கள் என்றேன். அவர் சற்று யோசித்து விட்டுச் சொன்னார். ராமசாமி இந்த வீட்டை ஒரு டீச்சருக்கு விற்றுவிட்டார். அவரிடமிருந்து நாங்கள் வாங்கி இடித்துவிட்டு பெரிய வீடாக கட்டியிருக்கிறோம் என்றார். இந்தவீட்டை வாங்கவேண்டும் என்று எங்க அம்மா   பிடிவாதமாக இருந்து வாங்கியிருச்சு என்பார்கள் , என்றார். அதனால்தான் இந்த வீட்டிற்கு ” விஜயா நிலையம் ” என்று பெயர் வைத்திருக்கிறார்கள் என்றார்.