சிலப்பதிகாரமும் மணிகேலையும் இரட்டைக் காப்பியங்களாகக் கருதப்படுகின்றன. இக்கருத்தை ஏற்காதவர் மிகச்சிலர்தான். குறைந்தபட்சம் முப்பதுவருட இடைவெளிக்குள்ளாகச் சிலம்பும் மணிமேகலையும் எழுதப்பட்டிருக்கலாம். தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் என்பது அறிஞர்களின் முடிவாகும். இவ்விரட்டைக் காப்பியங்களின் காலத்தைத் துல்லியமாக வரையறுப்பதில், பல சிக்கல்கள் நிலவுகின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், தொல்பொருள்கள், பட்டயங்கள், வெளிநாட்டவரின் குறிப்புகள் எனப்புறச்சான்றுகளின் வாயிலாகச் சிலம்பு மற்றும் மணிமேகலையின் காலத்தை முடிவு செய்வதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எடுத்துக்காட்டாகச் சேரன் செங்குட்டுவனின் வடநாட்டுப் படையெடுப்புப் பற்றிய சான்றாதாரங்கள் எதையும் இன்றுவரை திரட்டவியலாத ‘வரலாற்று இருட்டுணர்வு’ சூழ்ந்துள்ள இலக்கியவெளியிலேயே நாம்நின்றுகொண்டுள்ளோம். காவிரிபுகும்பட்டினமாகிய புகாரைக் கடல்கொண்டதாகச் சிலப்பதிகாரத்தில் காணப்படாத அவலக்குறிப்புமணிமேகலையிலுள்ளது. மதுரையைச் சிலப்பதிகாரம்விவரிக்குமளவுக்குச் சாத்தனாரின்மணிமேகலை விவரிப்பதில்லை. மதுரை பற்றிய எளிய குறிப்புகளே,மணிமேகலையில் உள்ளன. மதுரை எரியுண்ட நிகழ்ச்சி, சிலப்பதிகாரத்தைத் தவிரப் பிற தமிழிலக்கியங்களில் பரவலாகப் பேசப்படவில்லை. மணிமேகலையில்காஞ்சிநகரைச் சோழமன்னன் இளங்கிள்ளி ஆண்டதாகக் கூறப்பட்டுள்ளமையால், காஞ்சிப் பல்லவர்கள்பற்றிய குறிப்பு மணிமேகலையில் ஏனில்லை என்ற கேள்வியும் எழுகிறது.இதனால் சிலம்பும் மேகலையும் எழுதப்பட்டமை பிற்காலமாகவும் இருக்கலாமென்பர். இந்தக்கருத்தையும், அவ்வளவுஎளிதாகப் புறந்தள்ளிவிடுவதற்கில்லை. எனவே, சிலம்பு மற்றும் மேகலையின் காலத்தைத் துல்லியமாக வரையறுப்பதில், பல இடர்ப்பாடுகளை நாம்எதிர்கொள்ளவேண்டியுள்ளது.சிலம்பிலும் மேகலையிலும் கூறப்படும் ஐம்பெருங்குழு, எண்பேராயம் ஆகியோர்சங்க இலக்கியத்திலும்அதற்குப்பிந்தைய தமிழிலக்கியங்களிலும் ஏன் இடம்பெறவில்லை என்பதும்முக்கியமானஒருகேள்வியே!புறச்சான்றுகளினும் அகச்சான்றுகளையேமணிமேகலையின் காலத்தைக் கணிப்பதற்குப் பெரிதும் நாம்சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இரட்டைக்காப்பியங்கள் என்ற அக்கருத்தைப் பெரும்பாலான அறிஞர்கள் ஏற்றுக்கொண்டுள்ளமையாலும், இக்கருத்துடன் முரணுவோரும் சிலம்பை முற்காலத்ததாகவும் மேகலையைப் பிற்காலத்ததாகவுமே காண்பதாலும், சிலம்பிலும் மணிமேகலையிலும் வரும்முக்கியமானஅகச்சான்றுகள்வழிச் சாத்தனாரின் காலத்தை ஓரளவுக்குக்கணித்துவிடமுடியுமெனலாம்.இதுதொடர்பானபலகாலச்சிக்கல்களைத் தொட்டுக்காட்டுவதும், அதன்வழிச் சிலம்பு மற்றும் மணிமேகலையின் காலத்தைத்துல்லியமாகக் கணிப்பது எவ்வளவு கடினமானது என்பதைக் குறிப்புணர்த்துவதுமே, இந்தக்கட்டுரையின் நோக்கமாகும்.

பழந்தமிழிலக்கியங்களின் காலத்தைத் துல்லியமாகக் கணிக்க முனையும் ஆய்வுகள், தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆனாலும், அனைவரும் ஒப்புக்கொள்ளும்படியிலான ஆய்வுமுடிவுகள், இதுவரையில் எந்த அறிஞராலும் அடையப்படவில்லை.ஓரளவுக்குப் பொருந்துமளவிலான முடிவுகளை வைத்தே, மிக முக்கிய நூல்கள்பலவற்றின்காலத்தையும் நாம்கணித்துக்கொண்டிருக்கிறோம். காலத்தைப் பெரிதும் முன்வைத்தும், பெரிதும் பின்தள்ளியும் கணிக்கும் அறிஞர்கள் தமிழில் உள்ளனர். இவ்விரு போக்குகளுக்கும் இடைப்பட்ட நிலையெடுப்பது, நடுநிலையாளரின்பார்வையாயுள்ளது. இவர்களின் நடுநிலைப்போக்கைத் தாராளவாதப் பார்வையின் குறைநிறைகளுடன் சேர்த்துவைத்தே மதிப்பிடவேண்டும். பொதுவாகச் சங்க இலக்கியத்தைக் கி.மு.3 -கி.பி.3 வரையான காலப்பகுதியாகவும், (இவற்றுள் பரிபாடல், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை ஆகியவை பிற்காலத்தவை!) திருக்குறளைக் கி.பி.5-கி.பி.6ஆம் நூற்றாண்டுக்குரியதாகவும், சிலம்பையும் மேகலையையும் கி.பி.6-கி.பி.8இல் தோன்றியிருக்கக்கூடியவையாகவும், பக்தி இலக்கியங்களைக் கி.பி.7-கி.பி.9க்குரியதாகவும் துணியலாம்.எஸ்.வையாபுரிப்பிள்ளை,சாமி.சிதம்பரனார்ஆகியோர் இந்தக்காலவரையறையின் மேலெல்லையையே வலியுறுத்தியுள்ளனர். மணிமேகலையைப் பொறுத்தவரை, உ.வே.சா., எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார், மயிலை.சீனி.வேங்கடசாமி, மா.இராசமாணிக்கனார்போன்றோர்கி.பி.2ஆம் நூற்றாண்டை அதன் காலமாக வரையறுக்கத் துணிந்துள்ளனர். இதனைப் பலரும் ஐயுற்றுள்ளனர்.

மணிமேகலையின் ஆசிரியப்பாவாலான எளிய இனிய மொழிநடை, நூலில்பயின்றுவரும் மிகுதியான வடசொற்கலப்பு, திருக்குறள் தொடர்களை எடுத்தாண்டுள்ளமை, வடமொழிப் பாத்திரப்பெயர்களைப் புனைந்துள்ளமை, பிற்காலப் பௌத்தத் தத்துவவியல் சொற்களைப் பயன்படுத்தியுள்ளமை, சிலம்பில் வரும் மதுரை எரியுண்டது பற்றிய வானியல்குறிப்பு, புத்தரின் பிறப்பைப் பற்றி மணிமேகலையில் வரும் விளக்கம், சிலம்பிலும் மேகலையிலும் வரும் கதைப்பொருள் தொடர்ச்சி, மேகலை சுட்டும்  புகாரைக் கடல்கொண்டது பற்றிய குறிப்பு, ‘கயவாகு’வின் பெயர் தொடர்பான சிக்கல், மன்னர்களைப் பற்றிய விவரங்கள், பல்லவர் பற்றிய குறிப்பின்மை, ஊழ்வினைக் கொள்கையின் செல்வாக்கு, குச்சரக்குடிகை எனும் கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோவில் பற்றிய பதிவு, பெருங்கதை உதயணன் வரலாறு, சிலம்பில் வரும் பஞ்சதந்திரக் கதையின் குறிப்பு, மணிமேகலையில் வரும் காவிரி குறித்த புராணக்கதை, மணிமேகலையில் காணப்படும் தின்னாகரின் நியாயப்பிரவேசத்தின் செல்வாக்கு, புத்த பீடிகையைவணங்கும் தேரவாத வழிபாட்டு மரபு, பிற்காலச் சோழர் காலத்திற்குரிய ‘தலைக்கோல் பட்டம்’ சிலம்பில் காணப்படுவது, மாமுது பார்ப்பான் மறைவழிகாட்டக் கோவலன்-கண்ணகியின் திருமணம் நடைபெறுவது போன்ற பலவற்றையும் கொண்டு மணிமேகலையின் காலத்தைக் கி.பி.2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.11ஆம் நூற்றாண்டுவரையில்கொண்டுசெல்லும் கருத்துவேற்றுமையுள்ள ஆய்வறிஞர்கள்தமிழிலுள்ளனர். இவ்வாறு ஒருவருக்கொருவர்முற்றிலும் வேறுபட்டுக்காலக்கணக்குரைப்பதன் விளக்கங்களை, ‘1. கி.பி. 2 – கி.பி. 4ஆம் நூற்றாண்டு, 2. கி.பி. 4 – கி.பி. 6ஆம் நூற்றாண்டு, 3. கி.பி. 6 – கி.பி. 8ஆம் நூற்றாண்டு, 4. கி.பி. 8 – கி.பி. 11ஆம் நூற்றாண்டு’என்றநான்கு பெரும்பிரிவுகளின்கீழ்த் தொகுத்துக்கொள்ளவியலும்.

1.கி.பி. 2 – கி.பி. 4ஆம் நூற்றாண்டு

மயிலை.சீனி.வேங்கடசாமி, மணிமேகலையின் காலத்தைக் கி.பி.1-கி.பி.2ஆம் நூற்றாண்டாக இருக்க வேண்டுமெனத் துணிகிறார்(பௌத்தமும் தமிழும்). இதற்கு மணிமேகலையின் ‘சமயக் கணக்கர்தம் திறம் கேட்ட காதை’யில் வரும் ‘கிருதகோடி’ பற்றிய குறிப்பை விளக்கிக்காட்டும் எஸ்.கிருஷ்ணசாமிஅய்யங்காரின் (Manimekhalai in its Historical Settings; 1928)கருத்தைச் சீனியாரும்பின்பற்றுகிறார். இங்குச் சுட்டப்படுகின்ற‘கிருதகோடி’என்பது, தனியொருவரின் பெயரன்று. இது மீமாம்சை சாத்திரமாகிய வேதாந்த சூத்திரத்திற்குப்போதாயனர் இயற்றிய உரையான கிருதகோடியின் பெயராகும்.மணிமேகலையில் வேத வியாதனும் கிருத கோடியும்,ஏதமில் சைமினி எனும் இவ்வாசிரியர், பத்தும் எட்டும் மாறும் பண்புறத்,தத்தம் வகையால் தாம் பகர்ந்திட்டனர்” (27 : 1-4) என்றுஇடம்பெற்றிருக்கும்தொடர்கொண்டு, போதாயனாரின்காலமான கி.பி.1-கி.பி.2 என்றகாலத்தில் மணிமேகலையும் எழுதப்பட்டிருக்கலாம் என்றுஅய்யங்காரைப் பின்பற்றி மயிலை.சீனியாரும் கருத்துரைக்கின்றார். எனினும், இது போதாயனாரின் காலத்துக்குப் பிற்பட்டது மணிமேகலை என்பதற்கு வலிமையானசான்றாவதேயல்லாது, போதாயனாரின் சமகாலத்தவர் சாத்தனார் என்பதற்குப் பொருத்தமான சான்றாகத் தோன்றவில்லை.மணிமேகலையில் ஹீனயானமே உள்ளதென்றும், மகாயானத்தாக்கமில்லையென்றும், இப்பிரிவுகளுக்கு முற்பட்ட புத்தரின் வழியையே சாத்தனார் பேசுகின்றார் என்றும் அய்யங்காரும் அவரைப் பின்பற்றி மயிலை.சீனியாரும் வாதிடுகின்றனர். (“There is no reference to Mahayana in the exposition of Buddhism in the Manimekhalai, and the conclusion cannot be that Sattan did not know the Mahayana either to accept it as an orthodox system, or to condemn it as a heretical system. That may be due to Sattan being anterior to Nagarjuna and therefore of Sunyavada or of his not knowing it, the teaching not having had sufficient time to have become well known, and reach the Tamil country”).(“The Buddhism that he (Sattan) teaches is, ‘the path of the Pitakas, of the Great (Buddha)one.’ He is expounding the fundamental teachings of the Buddha and not the teachings of schools of Buddhism which are elaborations and modifications of systems-builders of later times”).((S.Krishnaswami Aiyanga, Manimekhalai in its Historical Setting,ps.101,104).மகாயானத்தைத் தோற்றுவித்த நாகார்ச்சுனரின் காலம் கி.பி.200-கி.பி.250 என்பதால், இவரின்காலத்துக்கு முன்பே மணிமேகலை இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்றும், இதனாலேயே மணிமேகலையில் தேரவாதபௌத்தமேமிகுந்துள்ளது என்றும்இவர்கள் கருதுகின்றனர்.இக்கருத்துடன் மார்க்கபந்துசர்மாவும்கூட உடன்படுகின்றார்(சிலம்பும் மேகலையும்).

சிலப்பதிகாரத்தின் காலத்தைக் கணிப்பதில் மிகுந்த செல்வாக்குச் செலுத்தும் அகச்சான்று, ‘கயவாகு’ பற்றிய குறிப்பாகும்.சிலம்பிலுள்ள வஞ்சிக்காண்டத்தின் வரந்தருகாதையில் 160ஆம் அடியாக இடம்பெறும் “கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்” என்ற தொடர் கொண்டு, கயவாகுவின் காலமாக இலங்கை வரலாற்றுநூலான மகாவம்சம் கூறும் கி.பி.171 – கி.பி.193 என்னும் காலப்பகுதிக்குரியதாகச் சிலம்பையும் கொள்வர். இது உ.வே.சா., மயிலை.சீனி.வேங்கடசாமி, மா.இராசமாணிக்கனார் ஆகிய பலருக்கும் உடன்பாடாகும். இரட்டைக்காப்பியங்களின் காலத்தைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியாகக் கொள்வதில், மேற்கூறப்பட்ட அறிஞர்களுடன் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்காரும் ஒத்துப்போகிறார். எனினும், இலங்கை மகாவம்சம் கயவாகு மன்னனைப் பற்றிக் குறிப்பிடுகிறதேயன்றித் தன் தாயார் நினைவாக அவன் எழுப்பிய விகாரையும் ஸ்தூபியும் குறித்து விவரிக்கிறதேயன்றிப் பிற ஏதும் கயவாகு பற்றிக் கூறுவதில்லை என்கிறார் அய்யங்கார். (“Mahavamsa itself has very little to say of him (Gayavahu I: A.D.171-193), except that he built Vihara in honour of his mother and a stupa”).(S.Krishnaswami Aiyangar, Some Contribution of South India to Indian Culture, P.87).இதன் தொடர்ச்சியாகச் சேரன் செங்குட்டுவனின் பத்தினிக்கோட்ட விழாவிற்குக் கயவாகு வந்ததற்கோ, இலங்கையில் அவன்கண்ணகிக்குக் கோவில் கட்டிப் பத்தினி வழிபாட்டைத் தொடங்கிவைத்ததற்கோ, மகாவம்சத்தில் எவ்விதக் குறிப்புமில்லாததைச்சுட்டிக்காட்டிக் கயவாகுவைச் சான்றாக்கிச் சிலம்பின் காலத்தை வரையறுப்பதைத் திட்டவட்டமாக மறுத்துரைக்கிறார் எஸ்.வையாபுரிப்பிள்ளை.(“The Mahavamsa of the sixth century whose author is Mahavaman doesnot say anything either about the King’s attendence during the Consecrating ceremony at the Cera Capital or about his introducing Kannagi Worship in his own country.  It is only Rajavali a later chronicle of the sixteenth century connects Kannagi Worship with Gayabhahu and so this is not of any historicalvalue and cannot be relied on”).(S.Vaiyapuripillai, History of Tamil Language and Literature, P.144).தம் இரண்டாம் பதிப்பில், ‘கயவாகு வேந்தனும்’ என்பதற்குக் ‘காவல் வேந்தனும்’ என உ.வே.சா.‘பாடபேதம்’ காட்டியிருப்பதும்கருதத்தக்கதாகும்.இவற்றைஇன்னும்கொஞ்சம்விரிவாகஅலசிஆராய,இனிமுனைவோம்.

கி.பி. 2ஆம் நூற்றாண்டில்பத்தினித் தெய்வ வணக்கத்தை இலங்கையில் ஏற்படுத்தியவனாகக் கூறப்படும் கஜபாகு (கஜபாகு காமினி என்னும் பெயரும் இவனுக்குண்டு) வேந்தன், கி.பி.171-கி.பி.193 வரையில் இலங்கையை அரசாண்டான் என்பதாலும், இக்கஜபாகு ‘கயவாகு’ எனச் சிலம்பில்கூறப்பட்டுள்ளதாலும், சிலம்பை இயற்றிய இளங்கோவும் மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சீத்தலைச்சாத்தனும் சமகாலத்தவர் என்று இவ்விரு நூல்களின் பதிகங்களின்வழி உறுதிப்படுவதாலும், மணிமேகலையைச் சீத்தலைச்சாத்தனார் சிலம்பிற்குப் பின் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றியிருக்க வேண்டுமென்பார் மயிலை.சீனியார். எனினும், மணிமேலையைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு நூலாகக் குறிப்பிடும் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார், மகாவம்சம் காட்டும் கஜபாகு தன் தாயின் நினைவாக எழுப்பிய விகாரமும் ஸ்தூபியும் தவிரப் பிற குறிப்பேதும்மகாவம்சத்தில்இல்லையெனத் தெளிவுபடுத்தியுள்ளதைச் சீனியார் கணக்கிலெடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. இக்கஜபாகு என்ற ‘கயவாகு’ பற்றிய குறிப்பு, “கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்” (வரந்தருகாதை: 160) எனச் சிலம்பில் இடம்பெற்றிருப்பது கொண்டே, உ.வே.சா.வும், சிலம்பு மற்றும் மேகலையின் காலத்தைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாகத் துணிகிறார். இக்கருதுகோள், பின்வந்த ஆய்வாளர்களால்,குறிப்பாக எஸ்.வையாபுரிப்பிள்ளை, சாமி.சிதம்பரனார், செல்லன் கோவிந்தன் ஆகியோரால் மறுத்துரைக்கப்பட்டுள்ளது. எனினும், ‘கயவாகு வேந்தனும்’ என்பதற்கு உ.வே.சா. காட்டும் ‘காவல் வேந்தனும்’ என்னும் பாடபேதத்தால், கயவாகுவைச் சிலம்பு குறிப்பிடவில்லை என்ற கருத்தும் ஆய்வுலகில் நிலவுகிறது. மேலும், இதைப் பாடபேதமாகக் கொள்ளாவிட்டால், கி.பி.2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதல் கயவாகுவை அல்லாமல், கி.பி.11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் கயவாகுவையே இது குறிப்பதாகத்தான் கொள்ளவேண்டும் எனச் செல்லன் கோவிந்தன் வாதிடுகிறார். இது எப்படியிருப்பினும், மகாவம்சம் கூறும் முதல் கயவாகு, வஞ்சியில் நடைபெற்ற பத்தினிக்கோட்ட விழாவில் கலந்துகொண்டது குறித்தோ, கண்ணகி வழிபாட்டை இலங்கையில் அவன்தொடங்கிவைத்தது பற்றியோ எவ்விதக் குறிப்பும் மகாவம்சத்தில் இடம்பெறாததைச் சுட்டிக்காட்டிப் பதினாறாம் நூற்றாண்டு ‘இராஜாவழி’ என்ற பிற்கால இலங்கை வரலாற்று நூலே கண்ணகி வழிபாட்டுடன் கயவாகுவைக் தொடர்புபடுத்துவதாகக் கூறிக் ‘கயவாகு’வைப் பற்றிய கதைக்குக் கண்ணகியோடு எவ்வித வரலாற்றுத் தொடர்புமில்லை எனத் திட்டவட்டமாக முடிவுரைக்கிறார்எஸ்.வையாபுரிப்பிள்ளை.

சிலம்பிலும் மேகலையிலும் பல்லவர்கள்பற்றியேதும் இடம்பெறாததாலும், மணிமேகலையில் வரும் ‘கச்சி மாநகர்புக்க காதையில்’ ‘இளங்கிள்ளி’ என்ற சோழனே காஞ்சியை ஆண்டதாய்க் கூறப்பட்டுள்ளதாலும், பல்லவர்கள்தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்னரே மணிமேகலை இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்மயிலை.சீனியார். எனவே, காஞ்சியைச் சோழரிடமிருந்து முதன்முதலில் பல்லவர் கைப்பற்றிய காலமாக ஹீராஸ் பாதிரியார் சுட்டிக்காட்டும் கி.பி.325ஆம் (Rev.H.Hearas, Studies in Pallava History)ஆண்டுக்கு முற்பட்டதே மணிமேகலை என்றும்அறுதியிடுகின்றார். இதற்குச் சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையின் ‘கதை நிகழ்ச்சிகள்’ நடைபெற்ற காலம் மிகப்பழைமையானதாய் இருக்கலாம்;ஆனால் அவை எழுதப்பட்டமை மிகவும் பிற்காலமாகத்தான் இருக்கவேண்டும் என்ற எஸ்.வையாபுரிப்பிள்ளையின் கூற்று எதிர்வாதமாகிறது.சிலம்பையும் மேகலையையும் கி.பி.இரண்டாம் நூற்றாண்டாகக் காண்போருள் மிகவும் முக்கியமான மற்றொருவர் மா.இராசமாணிக்கனார். இவர், கங்கைவரையில் சென்று வென்று மீண்ட சங்கச்சோழன் கரிகாலன் ஒருவனே என்றும், இவனே கோவலன்-கண்ணகி திருமணம் நடைபெற்றபோது புகாரிலிருந்த அரசன் என்றும், இமயத்தில் புலிக்கொடி பொறித்தவனாக உரையாசிரியர்அடியார்க்குநல்லார் குறிப்பிடும் இந்தக்கரிகாலன் சிலப்பதிகார வரலாற்றுத் தொடக்கத்தில் வாழ்ந்திருந்தான் என்றும்கருதிச்சிலம்பின் காலத்தைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டாக வரையறுக்கின்றார். மேலும் இவர், இலங்கையில் பத்தினி வழிபாட்டைக் கயவாகு ஏற்படுத்தியதாக நாட்டுப்புறப்பாடல்களும் இலங்கைக் கதைநூல்களும் கூறுவது பற்றியும், கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனைச் சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ளது கொண்டும், ஆந்திர நாட்டுச் சாதவாகனர்கள்(இவர்களுள் புகழ்பெற்ற சாதவாகன மன்னன்–கௌதமபுத்திர சதகர்ணி- கி.பி.106– கி.பி.130) எனப்படும் சதகர்ணிகளே இளங்கோவடிகளால் ‘நூற்றுவர்க்கன்னர்’ என்ற பெயரால் சுட்டப்படுவதாலும் சிலம்பின் காலத்தைக் கி.பி.2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாக முடிவுரைக்கிறார்.

சகர முதற்சொற்கள் சிலம்பிலும் மணிமேகலையிலும் மிகுதியாகப் பயின்று வருகின்றன. இதேபோல், ‘கின்று’ என்ற நிகழ்கால இடைநிலையும், ‘உண்ணாத’ என்ற ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சமும்; ‘நான்’ என்ற பெயர்வழக்கும்; ‘அந்த’, ‘இந்த’, ‘அது’, ‘இது’ என்ற சுட்டுகளும், தான்–தன்-தம் என்றபல சொல்லாட்சிகளும் சிலம்பிலும்மணிமேகலையிலும் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை கொண்டு, இவ்விரட்டைக் காப்பியங்களின் காலத்தைக் கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கமாக வ.சுப.மாணிக்கம் கருதுகிறார். மணிமேகலையில் வடமொழிச் சொற்களும், வடமொழிப் பெயர்களும் மிகுதியாகக் கலந்துள்ளன. வடநாட்டுக் காசியும், தென்னாட்டுக் குமரியும் இடம்பெற்றுள்ளன. சம்பாபதி, சம்பாதி, சண்பை, சமந்தம், சந்திரதத்தன், சரவணம், சனமித்திரன், சங்க தருமன், சங்கமன், சக்கரவாளக் கோட்டம், சந்திரன், சமயக் கணக்கர், சடை, சம்பு, சரண், சங்கு, சங்கம், சலம், சதுக்கம், சமம், சலாகை, சக்கரக்கை, சந்தி, சமண், சண்பகம், சரணாகதி போன்ற சங்க காலத்தல்லாத சகர முதற்சொற்களைப் பெருவழக்காகச்சாத்தனார்பயன்படுத்திஉள்ளதாகக்காட்டுகின்றார்  வ.சுப.மா. (சிலப்பதிகாரச் சிந்தனைகள், முதற்பதிப்பு:1976, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, சிதம்பரம்).மேலும் வ.சுப.மா., வடமொழிப்பெயர்களையும் வடசொற்களையும்மிகப்பரவலாகச் சாத்தனார் எடுத்தாண்டிருந்தாலும், பல வடசொற்களுக்குச் சிறப்பான தமிழாக்கமும்அவர் செய்துள்ளது கொண்டு (சத்தியம்-வாய்மை; துவாதசநிதானங்கள்-பன்னிரு சார்புகள்; தருமம்-அருளறம்; தருமச் சக்கரம்–அறக்கதிராழி; சயித்தியம்-புலவோன் பள்ளி; நிருவாணம்–பெரும்பேறு; பிரமாணம்-அளவை; பாரிசேடம்-மீட்சி; பிரத்தியக்கப் பிரமாணம்-கண்கூடு அல்லது காட்சி; அனுமானப்பிரமாணம்-கருத்தளவை), மணிமேகலையின் காலத்தைக் கி.பி.3ஆம் நூற்றாண்டிற்குப் பின்னிருக்கவியலாது எனத் தீர்ப்பளிக்கிறார்.ஆனால், இக்கருத்தைவையாபுரியார்ஏற்றுக்கொள்வதில்லை. மணிமேகலை, மதுராபதி, வசு, குமரன், மாதவி, சுதமதி, விசாகை, துச்சயன், காயசண்டிகை, அத்திபதி, வயந்தமாலை, காகந்தி, சாலி, சித்திராபதி, தீவதிலகை, நீலபதி, அபஞ்சிகன் எனப்பலவடமொழிப்பெயர்களையும் பரவலாகச்சாத்தனார்கையாண்டுள்ளமை பற்றி, இவை வடமொழி நாடகங்களையும் காவியங்களையும் ஜாதகக்கதைகளையும் கற்றதால் கிடைத்த பெயர்களாயிருக்கலாமெனக் குறிப்பிட்டுச் சாத்தனாரின் காலத்தைப் பிற்காலத்துக்குத் தள்ளுவார் எஸ்.வையாபுரிப்பிள்ளை(அ.கா.பெருமாள், தமிழிலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு, ப.34).

  1. கி.பி. 4 – கி.பி. 6ஆம் நூற்றாண்டு

மணிமேகலையின் காலத்தைக் கி.பி.4ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கும் பிறகான காலமாகக் காணச் சில வலுவான காரணங்கள் கூறப்பட்டுள்ளன.பௌத்தநெறியின் பொற்காலத்தில் மலர்ந்த காப்பியமாக மணிமேகலையைக் கருதும் சோ.ந.கந்தசாமி, பௌத்தப் பேரறிஞர்கள் கி.பி.400-கி.பி.600 என்ற காலப்பகுதியைப் பௌத்தத்தின் பொற்காலமாகக் கணித்துள்ளதைச் சுட்டிக்காட்டிச் சாத்தனாரின் காலத்தையும் அதனுடன் தொடர்புபடுத்துகிறார். திருமணத்தின்போது மாமுது பார்ப்பான் மறைவழி காட்டலும் – தீவலம் செய்தலும், சங்க இலக்கியங்களில் இல்லாததையும் சிலம்பிலுள்ளதையும் குறிப்பிடும் ஔவை. துரைசாமிப்பிள்ளை, மணிமேகலையில் கூறப்படும் தருக்கமுடிவுகள் கி.பி.4 – கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குரியவையாய் இருக்கலாமெனக் கருதுகின்றார். இவற்றின் அடிப்படையில், இளங்கோவையும் சாத்தனாரையும் கி.பி.5 அல்லது கி.பி.6ஆம் நூற்றாண்டுக்குரியவர்களாகவேஒளவை.சு.துரைசாமிப்பிள்ளையும் துணிகின்றார்.மணிமேகலையில் கி.பி.5ஆம் நூற்றாண்டுக்குரியவரான தின்னாகரின் கருத்துகள் எடுத்தாளப்பட்டுள்ளன என்பதால், அது கி.பி.5க்கும் பிற்பட்டதே என்கிறார் நா.வானமாமலை. இது தேவ.பேரின்பனும் உடன்படும்கருத்தேயாகும். தேரவாதத்தில் காணப்படாதஅப்பாலைத் தத்துவங்களும், தருக்கவியல் நுண்கருத்துகளும் மணிமேகலையில் உள்ளன. இவை கொண்டு, தின்னாகருக்குப் பிற்பட்ட காலமே சாத்தனார்காலமாதல் வேண்டுமென்று அறுதியிடுகின்றார் நா.வானமாமலை.

வடநாட்டில் கி.பி.326இல் ஆட்சி செய்த சமுத்திரகுப்தனால் வெல்லப்பட்ட ‘கேரளநாட்டு மாந்தராஜா’ என்னும் ‘மாந்தரஞ்சேரல் இரும்பொறை’, கி.பி.4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்பதால், அவனைப் பாடிய பரணர்செங்குட்டுவனையும் பாடியிருப்பதால், அந்த ‘மாந்தரஞ்சேரல்இரும்பொறை’க்குச் சிறிது பிற்பட்டவன் செங்குட்டுவன்அதாவது கி.பி.4இன் இறுதி அல்லது கி.பி.5இன் தொடக்கமாகச் சிலம்பின் காலத்தை மு.இராகவையங்கார் கணிக்கிறார். ஆனால், சமுத்திரகுப்தனின் அலகாபாத் சாசனத்தில் காணும் ‘கைராளிக் மாந்தராஜா’ என்ற தொடர், உண்மையில் ‘குணல மாந்தராஜா’வையே குறிக்கும் எனக் கருதி, அய்யங்காரின்கருத்தை மறுக்கிறார் மயிலை. சீனி. எனினும், புத்த ஜாதகக்கதைகளைத் தழுவியும், அந்தக்கதைகளில் சமுத்திர தேவதையாகக் கூறப்படும் மணிமேகலா தெய்வத்தின் செயல்களைப் பின்பற்றியுமே மணிமேகலைக் காவியம் யாக்கப்பட்டுள்ளது என்றும், இலங்கை மகாவம்ச வரலாறும் (கி.பி.6) புத்த ஜாதகக் கதைகளுள் ஒன்றே என்றும் அய்யங்கார் கூறுவனவும் கருதத்தக்கனவாகும்.அகத்தியர், மனுநீதிச்சோழன், சிபிச்சக்கரவர்த்தி, அவுணர்(ஹூணர் -கி.பி.5ஆம் நூற்றாண்டினர்), ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்றோர்சிலம்புக்குமுன்னர் தமிழிலக்கியங்களில் குறிக்கப்படவில்லை.கி.பி.6ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட பல்லவ, சோழ, பாண்டியரின் கல்வெட்டுகளிலும் இப்பெயர்கள் இல்லை. எனவே, சிலம்பும் மேகலையும் கி.பி.6ஆம் நூற்றாண்டுக்குரியவையாகவே இருக்கவேண்டும் என்கிறார்மு.கோவிந்தசாமி. மேலும் அவர், பௌத்த ஞானியருள் சிறந்தவரான தர்மபாலரே மேகலையில் இடம்பெறும் அறவணர்என்ற குப்புசாமி சாஸ்திரியின் கருத்தையும்எடுத்துக்காட்டித்தர்மபாலரின் காலமான கி.பி.6ஆம் நூற்றாண்டே சாத்தனாரின் காலமும் என்கின்றார். ‘தர்மபாலரே அறவணர்’ என்ற இக்கருத்துடன், சோ.ந.கந்தசாமியும் உடன்படுகின்றார்.

மனுநீதிச் சோழனின் கதையையும் (இக்கதை, முதன்முதலாகக் கி.பி.6ஆம் நூற்றாண்டு மகாவம்சத்தில்தான் வருகிறது என்கிறார் வையாபுரியார்), பஞ்சதந்திரத்தில் வரும்கீரியைப்பார்ப்பனி கொன்ற கதையையும் சிலம்பு எடுத்தாள்வதாலும், மணிமேகலையில் பெருங்கதையில் வரும் உதயணன் கதையுள்ளதாலும், சில திருக்குறள் தொடர்களும் பழமொழிச் செய்திகளும் அப்படியே மணிமேகலையில் இடம்பெற்றுள்ளதாலும், சீத்தலைச்சாத்தனார்கி.பி. 6ஆம் நூற்றாண்டு அல்லது அதற்குப் பிற்பட்டவரேயாதல் வேண்டும் என்கிறார் எஸ்.வையாபுரிப்பிள்ளை.சிலப்பதிகாரத்தின் அடைக்கலக்காதையில், கீரிப் பிள்ளையைப் பிராமணப் பெண் கொன்ற ஒருகதை வருகிறது. இக்கதையில் வரும் பிராமணப் பெண்ணுக்குக் கோவலன் பொருள் கொடுத்துஉதவியதாக, இளங்கோவடிகள் குறித்துள்ளார் (1 : 54-74). இக்கதையின் மூலமான வடமொழி பஞ்சதந்திரம் தென்னாட்டிற்கு வந்த காலம் கி.பி. 500க்கு முற்பட்டதன்று எனப் பெரிடேல் கீத் என்பாரைச் சான்று காட்டி எஸ்.வையாபுரிப்பிள்ளை வாதிடுகின்றார் (மு.சு.நூ., ப.30). இக்ருத்தை ஏற்றுக்கொள்ளும் சாமி.சிதம்பரனார், “மணிமேகலைக் கதையின் அமைப்பு பஞ்சதந்திரக் கதைபோல அமைந்திருக்கின்றது. பல சிறுகதைகளும் கதைக்குறிப்புகளும் ஒன்றற்கொன்று தொடர்புடன் அமைந்திருப்பதே, இதற்குச் சான்றாகும்” எனக் கூறி, மணிமேகலையின் காலத்தைக் கி.பி. 6ஆம் நூற்றாண்டாகவோ அல்லதுகி.பி. 8ஆம் நூற்றாண்டாகவோ இருக்கலாம்எனத் துணிகின்றார். (மணிமேகலை காட்டும் மனித வாழ்வு, பக்.209-218).

மணிமேகலையின் 15ஆம் காதையாக அமைந்துள்ள ‘பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை’யில் இடம்பெறும் பின்வரும் தொடர்கள், ‘பெருங்கதை’யின் கதைநிகழ்ச்சிகளுடன் தொடர்புடையவையாயுள்ளன.கொடிக் கோசம்பிக் கோமகன் ஆகிய,வடித்தேர்த் தானை வத்தவன் தன்னை,வஞ்சம் செய்துழி வான்தளை விடீஇய,உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன்,உருவுக்கு ஒவ்வா உறுநோய் கண்டு,பரிவுறு மாக்களின் தாம் பரிவெய்தி”(15: 61-66)என்றஇப்பாடலடிகளுக்கு, “கொடிகள் விளங்கும் கோசம்பி நகரத்து மன்னன், திருத்தமுடைய தேர்ப்படைப் பெருக்கம் கொண்ட உதயணனாகிய வத்ஸதேசத்து அரசனாவான். அவனைப் பிரச்சோதனன் என்னும் அரசன், தனக்குத் திறை செலுத்தாதது பற்றிச் சினந்து, சாலங்காயனன் என்னும் தன் மந்திரியின் உதவியுடன் யந்திரயானையைக் காட்டி வஞ்சகமாகச் சிறைப்படுத்திச் சென்றான். அப்போது அவனைச் சிறையிலிருந்து மீட்பதற்காகப் பிரச்சோதனனின் தலைநகரமாகிய உச்சயினியிலேவந்துதோன்றினான் உதயணனின் மந்திரிகள் நால்வருள் ஒருவனான ‘யூகி’ என்னும் அந்தணன். இந்த யூகி, அவனின் இயல்பான உருவத்திற்குப் பொருத்தமற்றுப்பெருநோயுற்றவன்போல் நலிந்துபோய்த்தோன்றிய மாற்றுருவத்தைக் கண்டு அவன்மீது பரிவுற்றுச் சூழ்ந்த உச்சயினி நகரத்து மக்களைப்போல, புகார்நகரப் பெருந்தெருவில், கையில் அமுதசுரபியுடன்பிக்குணிக்கோலத்தில் தோன்றிய மணிமேகலையைச் சூழ்ந்துகொண்டு புகார்நகர மக்களும் பரிவு காட்டினர்” எனப் பொருளுரைக்கலாம். இது, தமிழ்ப் பெருங்கதைக் காவியத்திலிருந்தோ, அதன் வடமொழி மூலத்திலிருந்தோ எடுக்கப்பட்டுத்தான் மணிமேலையில் இடம்பெற்றிருக்கவேண்டும். எனவே, பெருங்கதைக்குப் பிறகே மணிமேகலை எழுதப்பட்டிருக்க முடியும். தமிழ்ப் பெருங்கதையின் காலம் கி.பி.6ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டுத்தான் என்பதால், மணிமேகலையின் காலமும் கி.பி.6ஆம் நூற்றாண்டிற்கு முன்னிருக்கவியலாது எனலாம்.

  1. கி.பி. 6 – கி.பி. 8ஆம் நூற்றாண்டு

எஸ்.வையாபுரிப்பிள்ளை, சாமி.சிதம்பரனார், செல்லன் கோவிந்தன், தேவ.பேரின்பன் போன்றஅறிஞர்கள்மணிமேகலையின் காலத்தைக் கி.பி.6-கி.பி.8 என்பதாகத் துணிந்துள்ளனர். தமிழின் முதல் தருக்கநூலான மணிமேகலை, மகாயான பௌத்தத்தின் யோககாரப் பிரிவைச் சார்ந்த அளவையியலை அடிப்படையாகக் கொண்ட நூல் என்பதால், இப்பிரிவின் அளவையியல் செல்வாக்குப்பெற்றிருந்த கி.பி.400-700 என்ற அக்காலத்துக்குரியதாக மணிமேகலையைத் தேவ.பேரின்பன் காண்கிறார். தின்னாகருக்கும் தர்மபாலருக்கும் பின், கி.பி.7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தியின் (கி.பி.630-680) ‘நியாயபிந்து’விலுள்ள சில புதிய கருத்துகளையும் பின்பற்றியே மணிமேகலை இயற்றப்பட்டிருக்கலாம் என்கின்றார்செல்லன் கோவிந்தன்.மேலும், மணிமேகலையின் 22ஆம் காதையான ‘சிறைசெய் காதை’யில் இடம்பெறும் பின்வரும் ‘திருக்குறள் தொடர்’ கொண்டு, திருவள்ளுவருக்குப் பிற்பட்டவரே சாத்தனார் என்ற ஒருமுடிவிற்கேநாம் வரவியலும்.தெய்வம் தொழாஅள் கொழுநற் தொழுதெழுவாள்,பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றஅப்,பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்!”(22:59-61)எனத் திருவள்ளுவரைச் சாத்தனார் போற்றிக்கொண்டாடுவதால், திருவள்ளுவரின் காலமான கி.பி.6ஆம் நூற்றாண்டிற்கும் பிற்பட்டதே மணிமேகலையின்காலம் என்கிறார் எஸ்.வையாபுரிப்பிள்ளை(மு.சு.நூ., ப.33).

மணிமேகலைக்குப் பௌத்த சமயப்பேரறம் போதிக்கும் ஆசானாகச் சாத்தனாரால் ‘அறவணர்’ எனப்படும் ‘அறவண அடிகள்’ புனையப்பட்டுள்ளார். பல்வேறு சமயக்கணக்கர்களின் வாதப்பிரதிவாதங்களைக் கேட்டுப் பொய் எது, மெய் எது என அறியவியலாமல் குழம்பிநிற்கும் மணிமேகலைக்குப் பௌத்தத்தின் பேருண்மைகளை விளக்கிக்காட்டிக் குழப்பம் தெளிவிக்கும்அறப்பேராசானாகச் சாத்தனாரால் அறவணர்  காட்டப்பட்டுள்ளார். ‘அறவணர்த் தொழுத காதை’ என்ற பெயரில், மணிமேகலையின் 12ஆம் காதையை, அறவணரின் பெருமையைப் போற்றும் வகையில் சாத்தனார் புனைந்துள்ளார். மேலும், 29ஆம் காதையான ‘தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை’யிலும், பிறர் மதமும் பௌத்த மதமும் பற்றி மணிமேகலைக்கு எடுத்துரைத்துப் புத்தரின் தருமநெறியைப் பின்பற்றிப் பவத்திறம் அறுப்பதற்காகவே நோன்பியற்றுவதில் மணிமேகலை மனவுறுதியுடன் ஈடுபடுவதற்கும் அறவணரே காரணமாகிறார். இவர், சாத்தனாரின் கற்பனை மாந்தரா, உண்மையில் வாழ்ந்த பௌத்தப் புனிதரா என ஆராய்ந்துள்ளனர். இவர்களுள் முக்கியமானவரான குப்புசாமி சாஸ்திரி, புகழ்பெற்ற பௌத்தத் தத்துவ ஞானியான ‘ஆச்சார்ய தர்மபாலர் (கி.பி.528 – 560)’ என்பவரின் பெயரைத்தான் தமிழில் மொழிபெயர்த்து ‘அறவண அடிகள்’ என்ற பாத்திரத்தைச் சாத்தனார்  படைத்துள்ளதாகக் கருதுகின்றார்.(Kuppuswamy Sastry, Journal of Oriental Researh, P.197, First Edition : 1927).இக்கருத்தை ஏற்றுக்கொண்டால், தர்மபாலரின் காலமான கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கும் பிற்பட்ட ஒன்றாகவே மணிமேகலையின் காலத்தைக் கருதவேண்டும்.இக்கருத்தைச் செல்லன்கோவிந்தனும்கூட வலியுறுத்துகின்றார். (மணிமேகலையின் காலமும் கருத்தும், ப.54).இந்த யூகம் சுவையானதெனினும், இது தொடர்பான உறுதியான சான்றாதாரங்கள் வேறேதும் கிடைக்காத இன்றைய நிலையில், இதன் வரலாற்று நம்பகத்தன்மை மேலும் ஆராயத்தக்கதாகும்.

மணிமேகலையில், இரண்டிடங்களில் இடம்பெறும் ‘குச்சரக் குடிகை’ (18:145,152) என்ற சொல்லுக்குக் ‘குர்ச்சரர் -கூர்ஜரர்; குச்சரக் குடிகை-கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோவில்’ எனப் பொருள் கொண்டு, கூர்ஜரர் சிற்பமுறை கி.பி.7ஆம் நூற்றாண்டளவில் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கலாம் எனக் கருதிச் சாத்தனாரின் காலத்தை அதற்கும் பிற்பட்ட கி.பி. எட்டாம் நூற்றாண்டினதாக எஸ்.வையாபுரிப்பிள்ளை காண்கிறார். மணிமேகலையின் 18ஆம் காதையாக அமைந்துள்ள ‘உதயகுமரன் அம்பலம் புக்க காதை’யில் இடம்பெற்றுள்ள 145ஆம் மற்றும் 152ஆம் அடிகளில், ‘குச்சரக்குடிகை’ என்ற சொல் பயின்றுவந்துள்ளது. இந்தக் ‘குச்சர’ என்ற சொல்லால் குறிக்கப்படுபவர்  குர்ச்சரர்  அதாவது கூர்ஜரர்  என்றும், ‘குச்சரக் குடிகை’ என்பதற்குக் கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோவில் என்றும், இக்கோவிலில் அனைவருக்கும் முற்பட்ட முதல்வியும் முதியோளுமாகிய சம்பாபதித் தெய்வமிருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக, “குச்சரக் குடிகை – கூர்ச்சரக்குடிகா – கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோயில். கூர்ச்சரதேசம் சிற்பத்திற் பெயர் பெற்றதென்பர்; ‘குச்சரக் குடிகைக் குமரியை மரீஇ’ (152) என்று இக்காதையிலேயே பின்னும் வரும்; கூர்ச்சரமென்பது குஜ்ஜரமென்று கன்னட பாஷையில் வழங்கப்படுகின்றது” என உ.வே.சா. அரும்பதவுரை வரைந்துள்ளார். (மணிமேகலை மூலமும் அரும்பதவுரையும், ஏழாம் பதிப்பு:1981, ப.199).இங்குக் ‘குமரி’ என்பது, ‘சம்பாவதியை’க் குறிக்கும் சொல்லாகும். இந்தச்சம்பாவதிக் கோவிலாகிய ‘குச்சரக் குடிகைக்குள்’ புகுந்த மணிமேகலை, பிறகு காயசண்டிகையின் உருவெடுத்து வெளிப்பட்டதாகச் சாத்தனார்  கூறுகிறார்.  இந்தக்குச்சரக் குடிகைக்குக் ‘குஞ்சக் குண்டிகை’ எனப் பாடபேதமும் உ.வே.சா. காட்டுகின்றார். இவ்வாறு காட்டுவதன் வாயிலாக, ‘ஓலை வேய்ந்த சிறிய குடிசை’ எனப் பொருள் கொள்வாருமுள்ளனர். (S.Krishnasamy Aiyangar, Manimekala in its Historical Setting). மயிலை. சீனியாரும் இக்கருத்துடையவரே. (பௌத்தமும் தமிழும், ப.209).எனினும், அறிஞர்கள் பலர், இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை. ‘குச்சரக் குடிகை’ என்னும் பெயருள்ள சம்பாவதி கோவிலினுள் உள்ள ஒரு தூணில், கந்திற்பாவை என்ற தெய்வத்தின் இரு உருவங்கள் (துவதிகன், ஓவியச்சேனன் என்ற இரட்டைத்தெய்வங்கள்) அமைக்கப்பட்டிருந்ததாகவும் மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, ‘ஓலை வேய்ந்த சிறிய குடிசை’ எனக் குச்சரக் குடிகைக்குப் பொருள் கொள்வதைவிடவும், ‘கூர்ச்சர தேசத்துப் பணியமைந்த சிறிய கோவில்’ எனப் பொருள் கொள்வதே ஏற்புடையதாகலாம். இக்கூர்ச்சரர் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பாக இந்தியாவுக்கு வரவில்லை என்பதால், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே மணிமேகலையும் இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்பது சிலரின் கருத்தாகும்.(V.A.Smith,The Early History of India). இக்கருத்தை ஏற்கும் எஸ்.வையாபுரிப்பிள்ளை, கூர்ச்சரர் சிற்ப முறை, கி.பி. 7ஆம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டுக்கு வந்திருக்கவேண்டுமெனக் கருதிச் சாத்தனாரின் காலத்தையும் அதற்குப் பிற்பட்டதாகத் துணிகிறார். (அ.கா.பெருமாள், தமிழிலக்கியங்களின் காலம் பற்றி வையாபுரியாரின் கணிப்பு, ப.34, முதற்பதிப்பு: 1983).மேலும், சிலம்பு கூறும் தொண்டி சேரர் தலைநகரமன்றுஎன்றும், இது கி.பி.8இல் சுமத்திரா அல்லது ஜாவாவில் இருந்திருக்கலாமெனவும் அவர் துணிகிறார். பஞ்சதந்திரக்கதையின்அமைப்பை மணிமேகலை பின்பற்றியுள்ளது என்றும், நாற்பொருளில் அறத்தையும் வீட்டையுமே சாத்தனார் போற்றுகிறார்என்றும், சீத்தலைச்சாத்தனும் கூலவாணிகன் சாத்தனும் ஒருவரல்லர் என்றும், மணிமேகலையும் சிலம்பைப்போலப் பழங்கதையொன்றை ஆதாரமாகக் கொண்டே எழுதப்பட்டிருக்கவேண்டும் என்றும் கூறி எளியமொழிநடை, வடசொற்கலப்புபோன்றவற்றைக் காட்டிச் சாத்தனாரின் காலத்தைக் கி.பி.6ஆம் நூற்றாண்டு அல்லது கி.பி. எட்டாம் நூற்றாண்டாதல் வேண்டும் என்கிறார் சாமி.சிதம்பரனார்.

  1. கி.பி. 8 – கி.பி.11ஆம் நூற்றாண்டு

மணிமேகலையின் காலத்தைக் கி.பி.8க்குப் பிற்பட்டதாகவும் இருக்கலாமெனச் சில சான்றாதாரங்களின் அடிப்படையில் எஸ்.வையாபுரிப்பிள்ளை துணிகிறார். வடமொழிநூல்களான பரத சாஸ்திரம், பஞ்சதந்திரம் போன்றவற்றுக்குப் பிற்பட்டதாக மணிமேகலையைக் காணும் எஸ்.வையாபுரிப்பிள்ளை, கி.பி.800 அளவில் தோன்றிக் கி.பி.1060இல் சோழர்சாசனத்தில் இடம்பெற்ற ‘தலைக்கோல் பட்டம்’ மாதவிக்கு அளிக்கப்பட்டஅந்நிகழ்வைக் கொண்டும், கி.பி.10ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய பரகேசரி ராஜேந்திரசோழனின் சாசனத்தில் குறிக்கப்படும் ‘சாக்கையன் கூத்து’ செங்குட்டுவன் அவையில் ஆடப்பட்டுள்ளதைக் கருதியும், தேவாரகாலத்துக்குப் பின் பெரிதும் வலியுறுத்தப்பட்ட சமணரின் கர்மவினைக்கொள்கை சிலம்பிலும் மேகலையிலும் செல்வாக்குப் பெற்றுள்ளதை வைத்தும் இக்காப்பியங்களின் காலத்தைக் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டதாகக் காண்கிறார். சிலம்பில் வரும் செய்யுள் விகற்பங்களும், கானல்வரி-வேட்டுவவரி-ஆய்ச்சியர் குரவை–கந்துகவரி–வள்ளைப்பாட்டு முதலிய வரிப்பாடல்களும், தேவாரத் திருவாசக மற்றும்ஆழ்வார்காலச் செய்யுள் வகைகளோடு ஒப்பிடத்தக்கன என்பதால், சிலம்பு கி.பி.800க்குப் பிந்தையதே என அறுதியிடுகிறார் வையாபுரியார். இம்முடிவுக்கு அவர் வருவதற்கு, மதுரை எரியுண்ட வானநூற்குறிப்பைக் கூர்ந்தாராய்ந்து அதன் காலத்தைக் கி.பி.756 எனத் துல்லியமாகஎல்.டி. சாமிக்கண்ணுப்பிள்ளை கணித்ததே காரணமாகும்.

மணிமேலையில் பௌத்த சமய உண்மைகள் பலவும், பௌத்த அளவையியல் கோட்பாடுகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. தேரவாதம், மத்யமிகா, மகாயானம், சௌந்திராந்திரிகம், வைபாஷனம், யோகசாரம் போன்ற பௌத்தத் தத்துவ முறைமைகள் பலவும் மணிமேகலையில் இடம்பெற்றுள்ளன. மேலும், கி.பி. 5ஆம் நூற்றாண்டிற்குரியவரான தின்னாகரின் ‘நியாயப் பிரவேசம்’ என்ற நூலின் கருத்துகளும், கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்குரியவரான தர்மகீர்த்தியின் ‘நியாய பிந்து’ என்ற நூலின் கருத்துகளும் உட்கலந்துள்ளன. இக்கருத்துகளைச் சாத்தனாரிடமிருந்து தின்னாகரும் தர்மகீர்த்தியும் பெற்றிருக்கலாகாதா என்ற ஐயத்தை, ‘நா.வானமாமலை – தேவ.பேரின்பன் – செல்லன் கோவிந்தன்’ போன்ற அறிஞர்கள் பலரும் ஏற்பதில்லை. “அளவை நூல் வல்லுநரான தின்னாகருக்குக் காவியப் புலவரான சாத்தனார் அளவை நூல் கருத்துகளைக் கற்பித்தார் எனக் கூறுவது, மீன்குஞ்சுக்கு மனிதன் நீந்தக் கற்றுக் கொடுத்த கதையாகவே தோன்றுகிறது” என்று நுட்பமாகக்கருத்துரைக்கின்றார் நா.வானமாமலை. (தமிழர்  பண்பாடும் தத்துவமும், ப.99, அலைகள் வெளியீடு, மறுபதிப்பு : 2008). மகாயான பௌத்தத்தின் யோகசாரப் பிரிவைச் சார்ந்த அளவையியலையே மணிமேகலை விளக்குவதாகவும், இந்த யோகசாரப் பிரிவின் அளவையியலானது கி.பி. 400 – கி.பி. 700இல் செல்வாக்குப் பெற்றிருந்ததாகவும் கூறி, ஆகவே மணிமேகலையும் இக்காலப் பகுதிக்குரியதே என்கின்றார் தேவ.பேரின்பன்.(தமிழர் தத்துவம்,ப.32, NCBH, முதற்பதிப்பு : 2006). மணிமேகலையின் 29ஆம் காதையான ‘தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை’யில் விளக்கப்படும் பௌத்தத் தருக்கவியல் கருத்துகள் பலதின்னாகருக்கும் தர்மகீர்த்திக்கும் முந்தையதாக இருக்கவேவியலாது என்றும், சாத்தனார்  தொகுத்துக் கூறும் பத்து அளவைகள் மிகப்பிற்பட்ட காலத்திலேயே வழக்கிற்கு வந்தன என்றும் கருதும் செல்லன் கோவிந்தன், இவற்றின் அடிப்படையில் கி.பி. 8ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட நூலாகவே மணிமேகலை இருக்கவியலும் என்கிறார். (மணிமேகலையின் காலமும் கருத்தும்).

வையாபுரியாரின் முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஆனால் காலத்தை மட்டும் மேலும் பின்தள்ளி முடிவுரைத்தவர் செல்லன் கோவிந்தன். கி.பி.2ஆம் நூற்றாண்டில் இல்லாததும் சீவகசிந்தாமணி காலத்துக்குஉரியதுமாகிய ‘கழஞ்சு’ என்ற ஒருநிறுத்தல் அளவை சிலம்பில் காணப்படுவதைக் கொண்டு, கி.பி.9ஆம் நூற்றாண்டுக்கும் பிற்பட்டதாகச் சிலம்பின் காலத்தை இவர் துணிகிறார். சிலம்பிலும் மேகலையிலும் இருது, திங்கள், நாள்மீன், பக்கம், திதி, வாரம், இடபம், மீனம், அட்டமி போன்ற மிகப்பல வானநூல் மற்றும் சோதிடக் குறிப்புகள் வருவது கருதியும் செல்லன் கோவிந்தன்இக்காப்பியங்களின் காலத்தை மிகவும் பிற்பட்டதாகத் துணிகிறார். வருணாஸ்ரம தருமம் வலியுறுத்தப்பட்ட பிற்காலச் சோழர்களின்காலத்தில்தான் சிலம்பும் மேகலையும் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான், இவர்தம்முடிவாகும். மதுரை எரியுண்ட காலத்தைக் கி.பி.999 என்றும், மணிமேகலையில் புத்தர் மீண்டும் 1616 ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கப்போவதாகக் கூறப்படுவதை வைத்துச் சாத்தனாரின் காலத்தைப் புத்தர் பிறந்தகாலத்துடன் கூட்டிவைத்துக் (கி.மு.571+1616 = கி.பி.1045) கி.பி.1045 என்றும் செல்லன் கோவிந்தன் யூகிக்கிறார். இந்த யூகத்துக்குப் போதுமான வேறு சான்றாதாரங்களைஅவர் காட்டாததால், இது ஏற்றுக்கொள்ளத்தக்கதன்று எனலாம்.மணிமேகலையின் 12ஆம் காதையாக அமைந்துள்ள ‘அறவணர்த் தொழுத காதை’யில், இற்றைக்கு 1616ஆம் ஆண்டிலே, புத்தனாகிய பேரறிவாளன் இவ்வுலகில் தோன்றுவான் என்ற ஒருகுறிப்பு,இருள்பரந்து கிடந்த மலர்தலை உலகத்து,விரிகதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன,ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டாண்டில்,பேரறிவாளன் தோன்றும்” (12:75-78) எனக் காணப்படுகின்றது.இப்பாடலடிகளுக்கு, “எங்கும் இருள் பரவிக் கிடக்கும் அகன்ற இடத்தையுடைய இந்த உலகத்தில், விரிந்த கதிர்களையுடைய ஞாயிற்றுச் செல்வன் தோன்றியதும் ஒளிநிறைவதைப்போல, இற்றைக்கு 1616ஆம் ஆண்டிலே, பேரறிவாளனாகிய புத்தர் பெருமான் தோன்றுவான்” என்பது பொருள். மணிமேகலைக்கு அரும்பதவுரை வரைந்த உ.வே.சா, “இங்கே கூறப்பட்டுள்ள ஆண்டு இன்ன சகாப்தத்தைச் சார்ந்ததென்று புலப்படவில்லை” (மணிமேகலை மூலமும் அரும்பதவுரையும், ஏழாம் பதிப்பு : 1981, ப.49) என்பார். இந்த1616ஆம் ஆண்டு என்பதை, மணிமேகலை எழுதப்பட்ட காலத்திலிருந்து 1616 ஆண்டுகளுக்கு முன்பாக என்றும், 1616 ஆண்டுகளுக்குப் பின்பாக என்றும், புத்தர்  பிறப்பிலிருந்து 1616 ஆண்டுகள் கழிந்து என்றும் பலவாறு பொருள் கொள்ளலாம். இவற்றுள் புத்தர் பிறந்த காலமாகக் கருதப்படும் கி.மு. 571ஆம் ஆண்டுடன் 1616 ஆண்டுகளைக் கூட்டிக் கி.பி. 1045ஆம் ஆண்டை மணிமேகலை எழுதப்பட்ட காலமாகச் செல்லன் கோவிந்தன் அவர்நோக்கிலிருந்துகணக்கிடக்கண்டோம். (மணிமேகலையின் காலமும் கருத்தும், ப.115, முதற்பதிப்பு: 2001, பாலக்காடு.) இந்தயூகத்தை நம்பகத்தன்மை கொண்டதாகக் கருத முடியவில்லை. வேறு சான்றாதாரங்கள் ஏதுமில்லாத நிலையில், இது மிகைக்கூற்றாகவும் ஒருசார்பாகவுமே தோன்றுகின்றது.இதேபோல், டாக்டர் ஹூக்கோஸாகா என்ற ஒருஜப்பானிய அறிஞர், மணிமேகலையில் காணப்படும் பௌத்தத் தருக்கம் சார்ந்து, மணிமேகலை கி.பி.10ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்டிருக்கலாம் என்கிறார். Dr.Shu Hikosaka, Buddhism in Tamilnadu -A New Prespective, p.92). (Institute of Asian studies, 1989)).இக்கருத்துக்கு மேலும் உறுதியானஆதாரங்கள் ஏதும்காட்டப்படாததால், இக்கருத்தும் ஆய்வாளர் அனைவரும் ஒப்ப முடிவதன்று.

தொகுத்துக்கூறுமிடத்துக் கி.பி.2-கி.பி.4 என்ற காலப்பகுதியும், கி.பி.8-கி.பி. 11 என்ற காலப்பகுதியும், அனைவரும் நம்பத்தகுந்த சான்றாதாரங்கள் இல்லாத காரணத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பது வெளிப்படையாகும். எஞ்சியுள்ளகி.பி.4-கி.பி.6 மற்றும் கி.பி.6-கி.பி.8 என்ற காலப் பகுதிகளில், முந்தையதைவிடவும் பிந்தையதில் மணிமேகலை தோன்றியிருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதியாயுள்ளன எனத் துணியலாம். தின்னாகருக்குப் பிந்தைய பௌத்தத் தத்துவங்களையும், பக்தி இயக்க காலத்துக்குச் சற்று முந்தைய மொழிநடையையும், பெருங்கதை, திருக்குறள் மற்றும் பழமொழிநூல்களிலிருந்து சில கருத்துகளை அப்படியே சாத்தனார்பின்பற்றியுள்ளமையையும், பஞ்சதந்திரக்கதையமைப்பைப்போன்றே ‘கதைக்குள் கதைகளான’ காவியக் கட்டுமானத்தைக் கொண்டுள்ளமையைக் கருதியும் மணிமேகலையின் காலத்தைக் கி.பி.6-கி.பி.8 எனக் கிடைத்துள்ள சான்றாதாரங்களின் அடிப்படையில் குறிப்பிடலாம்.இக்கட்டுரையில் கயவாகு, கிருதகோடி, வடமொழிச் செல்வாக்கு, குச்சரக் குடிகை, பஞ்சதந்திரம், நியாயப் பிரவேசம், நியாயப் பிந்து, புத்தர் பிறப்பு, திருக்குறள், பெருங்கதை, அறவணர் தொடர்புடைய அகச்சான்றுகளை அடிப்படையாக வைத்துச் சாத்தனாரின் காலம்ஆராயப்பட்டுள்ளது. இங்குச் சுட்டப்பட்ட பல அறிஞர்களின் கருத்துகளைக்கூர்ந்தாராயுமிடத்துக் கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக மணிமேகலை இருக்கவியலாது என்றும், கி.பி.6 – கி.பி.8 என்ற காலப் பகுதிக்குரியதாகலாம் மணிமேகலைஎன்றும் துணிந்துரைக்கலாம்.