நாமாகியிருத்தல்

என்னைவிடவும் அதிகமாக

உன்னிடம்தான் பேசுவதாய்

சொல்கிறேன் நான்!

 

அதெப்படி முடியுமென

வியந்து கேட்கிறாய்!

 

நான்

நீ

என்ற

இருத்தலின் நிலைகளை

பிரித்துணர ஏதுமற்று

நாமாகியிருக்கிறது

பேரன்பு

 

***

 

அப்பிக்கொள்கிறேன்

நீண்ட இடைவெளிக்குப்பின்

நான்

நகரத்திற்குள் நுழைகிறேன்

 

திறந்துவிடப்பட்ட

இந்த

நகரத்தின் கதவுகள்

என்னை

ஆசுவாசமாகத் தழுவிக்கொள்கின்றன

 

அவற்றில்

இத்தனைகாலம்

பூட்டிவைக்கப்பட்டிருந்த

இந்த

பேரொலியை

என் காதில் முணுமுணுக்கின்றன

 

எனக்கு அது பழகிப்போனதல்ல

புதியதுமல்ல

என்னையறியாமலேயே

என்னுடன் இணைந்துகொண்ட

அதன் பேரொலியை

நான்

கவனிக்கத்தொடங்குகிறேன்

என்னை அறியாமலேயே

என்னுடன் இணைந்துகொண்ட

உன் அன்பை

உடல்முழுதும்

அப்பிக்கொள்கிறேன்

 

***

 

போர்த்திக்கொள்கிறேன்

எவ்வளவு நேர்த்தியாய்க்

கட்டமைக்கப்பட்டிருக்கிறது

இந்தப் பிரபஞ்சம்

 

ஏதோ ஓர் தொலைவிலிருந்து

எனக்கென ஒரு துளி விழுகிறது

 

ஆயிரம் மேகங்கள்

ஆயிரமாயிரம் கிலோமீட்டர்

பயணக்கலைப்பில்

என்னிடம் தஞ்சமடைகின்றன

 

கருப்பு

வெள்ளை

சாம்பல் என

அள்ளி என்மீது

போர்த்திக்கொள்கிறேன்!

 

போர்த்திக்கொள்ளாமல் தூங்க

நான் இன்னும்

பழகவில்லை.

 

***

 

பெருநகர வெளிச்சம்

இறுகப் போர்த்திய

கம்பளி இருட்டில்

முடங்கிக்கிடக்கிறது

பெருநகரம்

 

மேம்பால கூரை

கதவுகளற்ற

அந்த வீடு

குளிர் நடுக்க

நடனமாடும் அந்தச் சிறுவன்

அதை ரசிக்கும்

அவன் பெற்றோர்

 

ஒரு ஓரமாய்

கருத்த உருவமாய்

வேடிக்கை பார்க்கும் எனைப்பார்த்து

லேசாகத்தான் சிரித்தான்

பிரகாசிக்கிறது பெருநகரம்

 

எனக்கு ஒன்றுதான் புரியவில்லை

அதை

எத்தனைபேர் பார்த்தீர்கள்?

 

***

 

விரல் மரம்

தன்

இரண்டு விரல்களுக்கு இடையில்

ஒரு மரம் இருப்பதைப்போல வரைகிறான்

ஓவியன் ஒருவன்

 

உயிர்ப்பெற்று

நரம்பிழைகளில் கிளைவெடித்து

முடி நுனியில்

இலை கொழிக்கிறது

மரம்

 

வயிற்றுக்குள் சென்ற

நெல்லி விதை

எப்போது முளைக்குமென

கை பிசைகிறது

ஒரு குழந்தை

 

***

 

பிரபஞ்ச பிழை

பேரமைதி கொண்ட

இந்தப் பெருநகரத்தில்

எல்லாமும் தலைகீழாய்க் கிடக்கிறது

 

ஊர்ந்துகொண்டே இருக்கும்

உலோக எறும்புகள்

ஓய்வெடுக்கின்றன

 

ஓய்வெடுத்த பேன்கள்

மெல்ல எட்டிப்பார்க்கின்றன

 

குளிர் கனக்கும்

இந்த நள்ளிரவில்

வெப்பமூட்டிக்கொண்டிருக்கிறது

சிவப்புவிளக்கு

அதன்

மங்கிய ஒளியில்

மதுக்கோப்பை ஒன்றில்

சிறுநீர் நிரப்பிக்கொண்டிருக்கிறான்

ஒரு சிறுவன்

 

***

 

அன்புள்ள எஸ்.பி.பி

முன்பொருநாள்

இதே நள்ளிரவு

யாருமற்ற சாலை

என்னுடனிருந்தது

நீங்கள் மட்டும்தான்

 

எத்தனை எத்தனை இரவுகள்

எத்தனை எத்தனை பாடல்கள்

எத்தனை எத்தனை மனிதர்கள்

இத்தனை இடங்களிலும்

இத்தனை நபர்களுக்கும்

ஒரே நேரத்தில் துணைநிற்க

உங்களால் மட்டுமே முடிந்திருக்கிறது.

 

நினைவு தெரிந்த நாள்முதல்

பாட்டென்றாலே எஸ்.பி.பி தான்

ஊர்த்திருவிழா ஆர்கஸ்ட்ராக்களில்

நீங்கள் பாடிய பாடலை

யார் பாடக்கேட்டாலும்

உங்களிடம் ஓடிவந்துவிடும்

என் காதுகள்

 

தொடர் ஒலிபெருக்கி எஃக்கோவில்

உங்கள் குரல்

அதே துள்ளளுடன்

இப்போதும் கேட்கிறது

 

உங்கள் குரல்தான்

எங்கள் வீட்டின் வண்ணப்பூச்சு

உங்கள் குரலடங்கிய

ஒலிநாடாக்கள்

வீட்டை

அலங்கரித்திருந்தன

 

இப்போது

அதே நள்ளிரவில்

ஆயிரமாயிரம் மைல்கள் கடந்து

உங்களைக்காண

ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறேன்

நீங்களோ

அதே துள்ளளுடன்

அதே புன்னகையுடன்

என் தோளில் கை வைத்து

தட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்

 

vasanthanmpk@gmail.com