நிலவை வரைவதான ஒப்பந்தம்
எப்படி வரைவது எதில் வரைவது
என்பதில் ஆரம்பித்தது குழப்பம்
ஒரு வட்டம் போட்டால் நிலவாகிவிடும்
வடை சுடும் பாட்டியை கேட்டால் என்ன செய்வது
முன்னிரவிலா?
பின்னிரவிலா?
முழுநிலவா? பிறைநிலவா?
வெள்ளையா? மஞ்சளா? ஆரஞ்சா?
வண்ணத்தை தேர்தெடுப்பதிலும் அது தொடர்ந்தது…
“நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது”
தூரத்தில் எங்கோ பாடும் பாடல் சன்னமாய் கேட்க
விரல்களுக்கிடையே தூரிகை சுழன்றபடியிருகிறது
நிலாஆஆ…
அதட்டலுக்கு விக்கித்து
மகிழ்ச்சியைத் தொலைத்து திரும்பும் குழந்தையின் முகம்
மீண்டும் மீண்டும்…
நிலைவை வரைவது என்பது
நிலவை மட்டும் வரைவதாய் இல்லை
******
கத்தி என்பது சொல்லும் போதே
குத்துவது போன்று இருக்கலாம்
கிழித்தல், அறுத்தலென அச்சமூட்டுவதாக இருக்கலாம்
அதன் கூர்முனையில் கொலைவெறி இருப்பதாக நினைக்கலாம்
அதன் பளபளப்பு முதுகுத்தண்டை சில்லிட வைக்கலாம்
ரத்தத் துளிகள் சொட்டியபடி இருக்கும்
கத்தி நினைவுக்கு வரலாம்
கத்தியால் தான்
ஒருமுறை கழட்டமுடியாத திருகு ஆணியை கழட்டினேன்
உன்னதமாய் நினைத்த
பரிசுப்பெட்டியைக்கூட
அதே கத்தியால் தான் பிரித்தேன்
ஈறின் ரத்தம் ஒட்டிய
கடித்த ஆப்பிளைக் காட்டிலும்
வெட்டி வைத்த ஆப்பிளின் வடிவ நேர்த்தி
இத்தருணத்தில்
இதமாய் இருக்கிறது