நீ இருக்கும்போதிலும்
இன்னொருவரைக் கட்டிபிடித்து
கழுத்தில் முத்தம் வைத்தேன்
முதல்முதலாக எனது அறைக்குள்
கறையான் வந்தது அப்படித்தான்
உன் கண்கள் ஒரு கறையான் கூட்டம்
அதன் அசைவு ஈரப்பதம் நிறைந்தது
நீ இல்லாத இடங்களிலும்
உன் கண்களை உணரத் துவங்கினேன்
அல்லது ஒரு கறையான் கூட்டத்தை
என் கள்ளத்தனத்தின்
ரகசியச் சுவரின் மூலையிலிருந்து
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
இந்தப் பிரச்சனை
உன்னால் துவங்கியது
உண்ணாமலையாய் நீ இருந்தாய்
இம்மைக்கும் மறுமைக்கும்
காத்திருந்து அலுத்துப்போய்
நீ விளிக்கும்
பன்மைக்கும் ஒருமைக்கும்
காத்திருக்கத் தொடங்கினேன்
பேறு காலத்தின் பேய்ப் பசியுடன்
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
கன்னத்தை முலையென நம்பிக்
கவ்வும் குழந்தையைப்போல
நான் உன்னை நம்பினேன்
நீ என்னையும்
புற்றின் மண் குவியல்
அங்குதான் முதன்முதலாய் குவிக்கப்பட்டது
புற்றில் குடியேற
புற்றையே தின்றுவாழ
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
அழைத்திருந்தாயா?
ஆம்.
ஏன் அழைத்தாய்?
நானே தான் தெரியாமல் அழைத்துவிட்டேன்.
சரி அது தவறாக நிகழ்ந்துவிட்டது
நீ ஏன் திரும்ப அழைத்தாய்?
நீ செய்வதற்கோ
நான் சொல்வதற்கோ ஒன்றுமில்லை
புரிகிறது
எது குறித்துப்பேசவும் நேரமில்லை
விருப்பமும்
தூக்கி வீசப்பட்ட செல்போனின்
எமோஜி கூட்டத்திலிருந்து
கறையான்கள் வந்துகொண்டிருக்கின்றன
நீ துயருற்று இருக்கும்போது மட்டுமே
உன்னை நெருங்க என்னை அனுமதிக்கிறாய்
உனது துயர்கள் ஒருபோதும் தீர்வதில்லை
உன்னிடம் என் நிலை குறித்து
ஒருபோதும் வாதாட முடியாது
இதோ இறங்கவேண்டிய இடம்
வந்தாயிற்று மேலும்
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
நீ
பின்னிய கைக்கூடையின்
விளிம்பிலிருந்து தப்பித்து தொங்கும் ஒரு மணி மாலை
பிடித்த பறவையென
கையிலேந்திக்கொள்ளும்போது
உதிர்ந்து தப்பிக்கும்
ஒற்றைச் சிறகு
அடித்துக்கொல்லவேண்டுமென
மருந்தடிக்கும்போது
புதைந்துகொள்ளும் ஒற்றைப் பூச்சி
படிமங்களாக காட்சிகளாக
அடுக்குவது உனக்குப் பிடித்திருக்கிறதா
தெரியவில்லை
இனியொருமுறை என்னால்
சொல்ல முடியாது
உன்னால் கேட்க முடியாது
கூடுமானமட்டும் சொல்லிவிடுகிறேன்
பற்களின் சொத்தையில்
நீந்திக் களிக்க
கறையான்கள் வந்துகொண்டிருக்கின்றன
நீ பேசிய போது
கோடை காலத்து நள்ளிரவில்
மழை பெய்தது
நான் இருந்தபோது
உனது உறைதலுக்கும்
சற்றே கதகதப்பு கிடைத்தது
இருவரில் ஒருவருக்கு
பிடித்தது கிடைக்கும்
இருவருக்குமே கிடைக்காமலும் போகலாம்
எதிர்காலத்தின்
பகடைக் காய்களை உருட்டியபடி
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
உனக்குத் தெரியுமா
பக்கத்தில் இருந்ததாலேயே
உன்னை இழந்தேன்
ஒரு படலத்தை பறிகொடுத்தபிறகும்
உன்னை விலக்கி வைக்காதது
என் தவறு
மற்றொன்றையும் அதன்பொருட்டே
பறிகொடுத்தேன்
நீ எதிரில் இருந்திருந்தால்
இப்படி நடந்திருக்காது
கண்ணாடியின் பாதரசத்தில்
தன்னை ரசித்தபடி
கறையான்கள் வந்துகொண்டிருக்கின்றன
ஒரு துளிக்கோடு
உடையும் ஓவியத்தில்
நிரம்பி வழியும் வண்ணமென
உன் நினைவு வரம்பைமீறி
பீறிட்டு அடிக்கிறது
எனது எல்லா எண்ணங்களும்
உன் நினைவால் மொழுகப்பட்டுவிட்டன
துடைத்து எடுக்க அவசியமில்லை
மக்கிய தூரிகையின்
இழைகளை செரித்தபடி
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
உனது அசல் வீச்சத்தை
நகலெடுத்து அப்படியே
உன்னைப் போலவே
இன்னொரு பிம்பத்தை உருவாக்கினேன்
அது நீயா நீயில்லையா
என யோசித்தே காலம் கழிகிறது
உன்னை அல்லது அந்த பிம்பத்தை
சந்திக்கும் ஒவ்வொருமுறையும்
தலை அப்படி வலிக்கிறது
புகார்கூற நேரமில்லை
இடது காதிலிருந்து
வலது காது நோக்கி
கறையான்கள் வந்துகொண்டிருக்கின்றன
எல்லாம் தலைகீழாகும் காலம் வரும்
சிரிக்கும் முகம் சாசுவதமாகும்
உறக்கம் வேண்டாமலேயே கிடைக்கும்
வலி தீர லவி அனுமதிக்கும்
என்னை அடையவோ இழக்கவோ
எந்த பிரயத்தனமுமற்று
இந்தக் காலம் தேமேவென நகரும்
உன் புன்னகையில்
ஏதோ ஒரு கன்னக்கீற்று நான்
உன் கண்ணீரின்
ஏதோ ஒரு உஷ்ணத் துளி நான்
மற்றவற்றவற்றைப் பற்றி
முடிந்தால் பிறகு சொல்கிறேன்
குரூரத்தின் ஊர்வலத்தில்
சிறு ஓசையின்றி
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
உன் துயர்களை
தின்று தீர்க்கும் சாத்தான்
கனவில் வரட்டும்
உன் சந்தோச தருணங்களிலும்
உன்னோடு இருக்க
எந்தப் பாவிக்காவது
நனவில் வாய்க்கட்டும்
உன்பொருட்டு
ஒரு துரோகத்தைச் செய்வேன்
நான் சாத்தானா பாவியா என்பதை
நீதான் முடிவு செய்ய வேண்டும்
என் டைரிக் குறிப்புகளை
மொழியற்று கலைத்துவிட்டு
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
பதியம் செய்ப்பட்ட
இரண்டு கடற்குதிரைகளை
எனது பீரோவில்
பாதுகாத்து வைத்திருக்கிறேன்
இழந்தவற்றின் நினைவாக ஒன்று
அடையாதவற்றின்
ஏக்கத்திற்காக ஒன்று
எதை இழந்தேன்
எதை அடைவேன்
உன்னை எவ்வளவோ இழந்திருக்கிறேன்
உன்னை எவ்வளவோ
இன்னமும் அடையவேண்டும்
உன்னை இழந்தது என்பது
எதை இழந்தது
உன்னை அடையாததென்பது
எதை அடைவது
அறுதியிட்டுக்கூற மனம் நிதானமாயில்லை
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
கூட்டத்தில் லட்சம் தலைகள்
சில நூறு பரிட்சையமான முகங்கள்
இங்குதானிருக்கிறேனென
உயர்த்தப்படும் கைகள்
பதாகைகள்
எதிலுமே நீ இல்லை
நான் எப்படியும் வந்துவிடுவேன்
என்றுதானே நிற்காமல் போய்க்கொண்டிருக்கிறாய்
சீக்கிரம் நீயாக வந்துவிடு
பைத்திய முகாமிலிருந்த
அடையாள அட்டையின் துணையுடன்
என்னைத் தேடி
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
அவ்வளவு உயரத்திலிருந்து வீழ்கிறேன்
அவ்வளவு தூரத்திலிருந்து தொடர்கிறேன்
நான் இலை இல்லை
நீ நீரில்லை
நான் இருந்ததற்கான
சிறு சலனம்கூட உன்னிடம் இல்லை
நம் உதடுகள் பரிமாறிக்கொள்ள
அச்சமயம் முத்தங்கள் இல்லை
கைவசம் இருந்தவை
கோப்பையும் சிகரெட்டும்
எப்போதும் தூரத்திலேயே இருக்கிறாய்
நான் புகைக்கிறேன்
புகைத்துக்கொண்டே இருக்கிறேன்
புகைச் சுருள்களை
வான வேடிக்கையாக்கி
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு
உடனே நீக்கியிருந்தாய்
நீ அனுப்பியதன் அறிவிப்பு இருக்கிறது
நீ எதை அனுப்பியிருப்பாயென்ற
யூகமும்
நான் வாழ அந்த
ஒற்றைச்சொல் போதும்
நான் சாக அந்த சொல்
இருந்தது என்பதே போதும்
பத்தியின் இறுதி வார்த்தைகளில்
வேகமாக ஊர்ந்தபடி
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
உடைந்த பட்டனை பிறையென
உனைபோல் யாரும் சொன்னதில்லை
பிதற்றல்களை தொகுத்து
கவிதைகளென உனைத்தவிர
யாரும் தந்ததில்லை
உன் பொருட்டு நான் அழிவது
உனக்குப் பெருமையென
நானுமேகூட ஆமோதித்ததில்லை
பிரியத்தின் பிறழ்வினை
கேடயமாய் சுமந்தபடி
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
என் கவிதையாய் இரு என்பது
எவ்வளவு கனம் மிக்க வார்த்தை
யாருமற்ற வெளியில்
இப்படி நிலை மறந்து அமர்ந்துள்ளேன்
இயல்பைத் தாண்டி
மூச்சிரைக்க சுழல்கிறது
கூடலில் நம் தலைக்கு மேல்
சுழலும் அந்தரங்க மின்விசிறி
அரைத்தூக்கத்திலிருந்து எழுந்தவனின்
அறை மின்விசிறி பொத்தானில்
ராணியை பாதுகாக்க
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
முன்பொரு சமயம்
யாருடனோ நிகழ்ந்த
உரையாடலை அனுப்பியிருந்தாய்.
ஏனோ உரையாடல் கவனிக்காது
பின்னால் இருந்த அட்டைப்படத்தையே
உற்று நோக்கிக்கொண்டிருந்தேன்
அகால மரணங்களின்
வெள்ளை நிற ஓவியத்தில்
என்னை பொருத்திப் பார்த்து மகிழ்கிறேன்
தப்பிக்க இருக்கும்
ஒரே ஒரு கதவின் தாழ்ப்பாளும்
எப்போதோ சிதைந்துவிட்டது
நேரெதிராய்
சந்தித்தே ஆகவேண்டுமெனும் தீர்மானத்தோடு
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
உடைந்து நம்பிக்கையற்று
சென்ற பயணம் ஒன்றில்
இறுக அணைத்துக்கொண்ட
சுகத்தை நிமிடங்களில் அளித்தாய்
எனக்கே எனக்கென நம்பியது
எனக்குமே என்பது
சவமாய் நடமாடும் வலியினை தருவதுதானே
ஆளற்று தனித்து நிற்கும்
கரங்களை அணைத்துக்கொள்ள
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
ஒவ்வொருநாளும்
அந்தி கவிழும்போது
உன்னிடமோ என்னிடமோ
தோற்றுப்போன பிறகு
தோல்விகளின் கடவுளிடம்
உபதேச உண்மையை
கண்ணீர் மல்கி கூறுவேன்
நாள்தவறாது கடவுள்
என் காதோரம் இதைத்தான் கூறினார்
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
ஒரு மணி நேரம் கூடுதலாய்
காவல் காத்ததிற்காய்
தனது சக காவலாளியிடம்
பதினைந்து ரூபாய் வாங்கி
விடிகாலைதோறும்
தேநீர் அருந்தச் செல்கிறார்
அந்தக் காவலாளி
என் காத்திருப்பிற்கு
எவ்வளவு தொகை வசூலிப்பது?
யாரிடம் வசூலிப்பது? என
யோசித்துக்கொண்டிருந்தேன்
தவணைகளின் தகரங்களில்
சீரான வரிசையில்
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
பாலைவனத்தைப்போல தகிக்கும்
கடற்கரை மணலில்
ஏன் சிலர் தனியே நடக்கிறார்கள்
கிலேசத்தின் தருணங்களில்
சிகரெட்டில் கங்கு எரியும் சப்தம்
ஏன் அத்தனைப் பெரிதாய் கேட்கிறது
தனிமையின் ஆழ்ந்த மௌனத்தை
எந்த ஓசைகொண்டு நிரப்ப முடியும்
தனிமையின் இரைச்சலை
எதைக்கொண்டு அடைக்க முடியும்
மரணிக்கும் தருணத்தில் கண்கள்
ஏன் இல்லாதவரையே
தேடித் தவிக்கின்றன
யாருடைய உள்ளங்கையை
இறுதியாய் பார்ப்பதற்காக
கண்கள் திறந்தே கிடக்கின்றன
மரணத்தின்பொருட்டு மட்டும்
ஏன் சில மன்னிப்புகள் வழங்கப்படுகின்றன
பிணங்களை எரிக்கும்போது
அவன் கண்கள் எதைப்
பார்த்துகொண்டிருக்கும்?
பிணத்தை ரொம்ப நேரம்
வைத்திருக்க முடியாது
அழிவின் ஒற்றைக் கருணையை சுமந்தபடி
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
எங்கு சென்றாலும் என் பிள்ளை
என்னுடன் வருகிறான்
என்னால் ஏதும் செய்ய முடியவில்லை
அவனை அடித்துக்கொள்வதோடு
என்னையும் அடித்துத் தள்ளுகிறான்
எனக்கு ஏன் இவனைப் பெற்றோமென இருக்கிறது
கொல்லவும் மனம் வரவில்லை
வலியின்றி சாக விஷமிருந்தால் சொல்
அவனுக்கொரு வாய்
எனக்கொரு வாய்
அழிந்த உடல் பயனற்று போகட்டும்
ஏமாற்றத்தின் ருசியை அறிய
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
எனது கணினி மேசை
தூசி படிந்து கிடக்கிறது
எனது தட்டச்சுப்பலகை
இறுகிக் கிடக்கிறது
எதையாவது செய்தாகவேண்டுமென்றே
எதையுமே செய்வதில்லை
ஒன்று தட்டச்சை தகர்க்க வேண்டும்
அல்லது இன்றைக்குள்
செய்ய வேண்டிய வேலைகளை
இன்றைக்கே முடித்தாக வேண்டும்
எதற்கும் பொறுப்பேற்க பலமில்லை
குற்றவுணர்ச்சியின்
மணல் துகள்களை
உருட்டி நகர்த்தியபடி
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
என் வீட்டில் பூனைகள்
பொம்மைக் காதிதத்தோடு
சண்டை போடுகின்றன
என் நாய்க்குட்டி
பொம்மை எலும்போடு
நான் பொம்மை வாழ்வோடு
காகித்தை பூனை எப்போதும் வெல்கிறது
நாய் எப்போதும் எலும்பை
என் சரித்திரம்
ஒவ்வொரு எழுத்தாக
லட்சம் கால்களில் எழுதப்பட்டிருக்கின்றன
ஒருசேர வாசிக்க காலமிருக்கிறது
சரித்திரத்தை சிறுகச் சிறுக அரித்தபடி
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
எனது சாலையின் ஓரத்தில்
நாள்தோறும்
எதையோ யோசித்தபடி
எதையோ வெறித்தபடி
அனாயசமாக பூவைத் தொடுக்கிறாள்
அந்த பூக்கடைக்காரி
மாலை அழகாகவே இருக்கிறது
இப்படியே வாழ்க்கையை நகர்த்த
முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்
நன்றாக இருக்கும்தான்
யோசிக்க நேரமில்லை
பூக்கடையின் மரப்பலகையில்
பாதை அமைத்தபடி
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
எனது தோட்டத்தின் மரங்களில்
எண்ணற்ற பட்சிகள் உண்டு
தானியமேந்தி நின்றால்
பட்சிகள் பயமின்றி கையில் வந்தமரும்
மாயத்தருணங்கள் உண்டு
அணில்கள் பிடிவாதம் மிக்கவை
அவை சட்டென பழகாது
எவ்வளவு உயரத்திலிருந்து
குதித்தபோதும் சாகாது
கூட்டமாய் சேர்ந்த எவற்றினாலும்
மரணத்தை நிகழ்த்த முடியும்
அணிலென்பது எதன் குறியீடென
உனக்குத் தெரியும்தானே
கொடுக்கவோ கொரிக்கவோ
சபிக்கப்பட்ட ஒரே பழம்தான் இருக்கிறது
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
சாலையில் நடக்கும்போது
பன்னீர்ப்பூக்களைக் கண்டு
மனம் மகிழ்பவன் நான்
வாகனப் புகைகளுக்கிடையே
வேப்பம்பூ வாசத்தினை
இனங்கண்டு சிரிக்கும் ஒருவருடன்
பயணமும் செய்ததுண்டு
என் கிடங்கிருக்கும் சாலையில்
பன்னீர் பூக்களுண்டு
என் கிடங்கின் வெளியே
வேப்ப மரமுமுண்டு
கண்களைமூடி ஆழமாய் சுவாசிக்கிறேன்
மருந்துநெடி
வயிற்றைப் பிரட்டுகிறது
என் வசந்தத்தின்
கடைசி தினத்திலிருந்து
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
இந்தப் பாதங்கள்
எங்கெங்கோ செல்கிறது தினமும்
போகக்கூடாத இடங்களுக்கும்
தினமும் கழுவுகிறேன்
தினமும் அழுக்கு படிகிறது
வளர வளர மரத்துப்போகிறது
அதனை ஏந்திக்கொள்ளும் எதுவும்
மாறிக்கொண்டே இருக்கின்றன
ஒருநாள் என் கோவனத்தை அவிழ்த்து
கட்டி வைப்பார்கள் கட்டை விரலை
அழிவு என்பது மரணத்திற்கு
முன்பாக நடக்கும் ஒரு சடங்கு
ஓட்டைப் பானையில் முட்டை பொரிக்க
கறையான்கள் வந்துகொண்டிருக்கின்றன
என்றுமே எனக்கே எனக்காக
காணக்கிடைக்கும் பறவை
எப்போதும் கனவில் வரும் பறவை
அன்று சாலையில் இறந்து கிடந்தது
நான் பாதுகாத்து வைக்கும்
அதன் ஒற்றை இறகிற்காகவா
அந்த மரணம் என அப்படித் தவித்தேன்
அந்த இறகு எதனாலும்
அரிக்கப்படாதென நம்பியே
இதுவரை பாதுகாக்கிறேன்
காலத்தின் கோரப்பற்களை உரசியபடி
கறையான்கள் வந்துகொண்டிருக்கின்றன
என்ன கனவென தெரியாத
ஒரு கனவை நான் இழந்திருந்தேன்
முழித்தபோது முகத்தில் இருந்த
சுவடுகள் அதை பறைசாற்றின
ஆருடம் பார்க்க
என்னிடம் சோழிகள் இல்லை
போரிட துப்பாக்கித் தோட்டாக்கள் இல்லை
பாதித் தூக்கத்தில் எரித்து அணைத்த
மூன்று சிகரெட்டு துண்டுகள் இருந்தன
நீ ராதாவைப்போலோ
மீராவைப்போலோ இருப்பதாக
எப்போதும் தோன்றும்
இழந்த கனவில் நிச்சயம் நீயிருப்பாய்
உடல் முழுக்க
கிருஷ்ண எண்ணெயை தடவிக்கொண்டேன்
கந்தகச் சாந்தை பூசிக்கொண்டு
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
அன்றாடத்தில் அரைமணிநேரம்
கழிப்பறையிலேயே கழிக்கிறேன்
வாய்ப்பிருந்தால்
இன்னும் சில மணிநேரங்களும்
காமத்தையும்
கனவுகளையும் கழிக்க
கழிப்பறை தவிர
போக்கிடம் இல்லை
முடி அடைத்த வடிகால் வழியே
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
வீட்டு விட்டு ஊரை விட்டு
ரொம்ப தூரத்தில்
வெளியூரில் பிழைப்பு
எவ்வளவு தூரம்
அடி பட்டால்
உடனே வந்து விட
முடியாத தூரம்
உடல் அழுகும் முன்னே வந்து
அழுதுவிடும் தூரம்
ஊருக்குச் செல்லும்போது
வண்டி நின்றுவிட்டால்
காத்திருக்க இயலாது
மூளையின் புற்றிலிருந்து
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
வீட்டிற்கான பிள்ளையென
எதையுமே செய்ய முடிந்ததில்லை
செய்ய முடியாத ஒரு செயலுக்கு
வாக்கு தர சொன்னார்கள்
அந்த நேரப் பிடுங்கலுக்காய்
வாக்கு தந்தேன்
நிறைவேற்றமுடியவில்லை
நீசெய்வது தவறென
குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார்கள்
எனக்கெதிரான சாட்சியங்களை
சற்றே பத்திரப்படுத்தி வையுங்கள்
என் பால்யத்தின்
சின்னஞ்சிறு பொய்களை
உண்டு செரித்துவிட்டு
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
இறங்குவதற்கு
ஒரு துண்டு நிலமில்லாத
நீர்ப்பரப்பின்மேலே
ஆடிக்கொண்டிருக்கிறது என் ஊஞ்சல்
உறிஞ்சுவதற்கு
சிறு மணற்திட்டைத் தேடி
ஆர்ப்பரிக்கிறது உன் அலைகள்
காலதீதம் ஏற்கனவே
எழுதப்பட்டாகிவிட்டது
ஊஞ்சல் கம்பியின்
நுனியினை நோக்கி
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
எல்லாவற்றையும் கைவிட்டாயிற்று
எல்லாவற்றாலும் கைவிடப்பட்டாயிற்று
உதிரம் எலும்பு மஞ்ஞை சதை முடி
முழி மூக்கு முகவாய் என
எல்லாம் இருக்கிறது
ஈரப்பதத்தினால் விரல்களில்
பூஞ்சைகள் பூத்திருக்கின்றன
என் காதலுக்காய்
என்னிலிருந்து முதலும் கடைசியுமாய் பூத்தவை
இன்னமும் காத்திருப்பு முடியவில்லை
நின்றுபோன அலாரத்தின் மணியிலிருந்து
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன
சில வாக்கியங்கள்
அதன் சொற்களைக் கொண்டே
முற்று பெறுகின்றன
அவற்றிற்கு முற்றுப்புள்ளி
தேவையில்லை
அழிவின் இறுதி நொடி பற்றி
யாருக்குத்தான் என்ன தெரியும்
நானோ
வெள்ளைக் கறையான் கூட்டத்தில்
தவறி விழுந்த ஒரு சிற்றெறும்பு
கறையான்கள்
வந்துகொண்டிருக்கின்றன