“உங்க சொந்த விவகாரங்களை இந்தப் பொது வெளியில் வைக்கிறது தப்பு மேடம்…” – ராமமூர்த்தி அழுத்தமாய்ச் சொன்னார். எடுத்த எடுப்பில் அவர் அப்படிப் பேசியது எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதல்லயே சொல்லி கட் பண்ணினாத்தான் ஆச்சு….என்று துவக்கியது போலிருந்தது.

கூட்டம் ஆரம்பித்தவுடன் முதல் பொருளே இதுவாக இருக்க வேண்டுமா என்கிற நோக்கில்….சார்…சார்….மத்த சப்ஜெக்ட்லாம் முடிச்சிருவோம்…கடைசியா இத வச்சிக்கிடலாம்…என்றார்  வேம்புநாதன்.

அவர்தான் முதன் முதலாக அந்த அடுக்ககத்திற்குக் குடி வந்தவர். பல வேலைகளை எடுத்துச் செய்திருக்கிறார். மோட்டார் ரிப்பேர் ஆன போதெல்லாம்  ஓடி ஓடிப் போய் ப்ளம்பரை அழைத்து வந்து சரி  செய்திருக்கிறார். தெருக் கம்பத்தில் பட்டாசு வெடித்தாற்போல் சத்தம் வந்து கொஞ்ச நேரத்தில் கரன்ட் இல்லாமல் போவது சர்வ சகஜமாய் இருந்தது.. காலி மனைகளில் இஷ்டத்துக்கு வளர்ந்து கிடக்கும் கருவேல மரங்கள் மின்சார வொயர்களை அமிழ்த்திக் கொண்டு அழுத்த, மழை பெய்யும் நேரங்களில் அது ஆபத்தாய் முடிந்தது. மழையோடு மழையாய் E.B. ஆபீசுக்குப் போய் கையோடு ஆளைக் கூட்டி வந்து மரத்தை வெட்டச் செய்து வொயரை விடுவித்து, கம்பத்தில் ஏறி லைனைச் சரி செய்து… அடேயப்பா…அவரின் சேவைகள் சொல்லி மாளாது. ஆகும் சில ரிப்பேர் செலவுகளுக்குக் கூட  கணக்குச் சொல்லி அவர் காசு வாங்கிக் கொண்டதில்லை.அதுதான் ஆச்சரியம். இல்லாதவா்…ஆனால் அவர் மனசு அப்படி…. விடுங்க…இருக்கட்டும்…!.

ராமமூர்த்தியிடமிருந்து இப்படியொரு துவக்கம் வரும் என்று மிருணாளினி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதைச் சொல்வதற்காகத்தான் கூட்டத்திற்கு வந்தாரா?. வழக்கமா கூட்டத்துல கலந்துக்காத மனுஷன் இன்னைக்குன்னு வந்து இப்டி வம்புக்கு இழுக்கிறாரே…? – மற்ற அனைவரும் அவளையே கூர்மையாகப் பார்த்தார்கள். பதில் என்னவாக இருக்கும்  என்ற எதிர்பார்ப்பு தெரிந்தது.

மேடம்….அப்புறம்…அப்புறம்…லாஸ்ட்ல உங்க சப்ஜெக்டுக்கு வரலாம். இப்ப இந்த சில்லரை விவகாரங்களை முடிச்சிடலாம்…. – அந்தப் பெண்மணியிடமும் வற்புறுத்தினார் வேம்புநாதன்.

அவர்ட்டச் சொல்லுங்க சார்…….வந்ததும் முந்திக்கிட்டு அவர்தானே ஆரம்பிச்சாரு…..எது சொந்த விவகாரம்? எதை சார் சொந்த விவகாரம்ங்கிறீங்க…வாடகைக்கிருந்தவங்க….காலி செய்யும் போது வீட்டை அசிங்கப்படுத்திட்டுப் போறாங்க…அதைக் கேட்கக் கூடாதா? கேட்டா அது சொந்த விவகாரமா? உங்களுக்கு அப்டி நடந்தா சும்மாயிருப்பீங்களா…? – மூக்கு விடைக்க அந்த அம்மாள் பேசியது பார்ப்போரை சற்றே பயம் கொள்ள வைத்தது.

இனி இதை நிறுத்த முடியாது என்று உணர்ந்து விட்டாற்போல் வேம்புநாதன் முகத்தைத் திருப்பிக் கொள்ள…மற்றவர்கள் அமைதியாக இருந்தார்கள்.

ஆமா…சொந்த விவகாரம்தான். இந்தக் கேள்வியை இத்தனை நாள் உங்ககிட்டே இவங்க கேட்காம இருந்ததே தப்பு…அதனால இப்ப கேட்க வேண்டிய நிலைமை .இதையும் நான் கேட்கப் பிரியப்படலை. இந்த மீட்டிங்ல இது சப்ஜெக்ட்டா ஆயிட்டதுனால கேட்க வேண்டி வந்திடுச்சு. நீங்க வாடகைக்கு விட்டவங்களுக்கும், உங்களுக்கும் மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்னை….இதுல மத்தவங்க யாரும் தலையிடுறது சரியில்லைங்கிறதுதான் சரி. அதுனாலதான் இந்தப் பொது மீட்டிங்ல இது பேசக் கூடியதல்லன்னு நான் சொல்றேன்….அஜென்டாவாச் சேர்த்ததே தப்பு…..

என்ன அபத்தமாப் பேசுறீங்க…? இந்த ஃப்ளாட்டுல ஒரு பிரச்னைன்னா நான் யார்ட்டப் போய் சொல்றது? அசோசியேஷன்ட்டத்தானே சொல்ல முடியும்…யாரு தீர்த்து வைக்கிறது? நலச் சங்கம்தானே தீர்த்து வைக்கணும்…?

சங்கம் தீர்த்து வைக்கிறதுங்கிறது….பொதுவான பிரச்னைகளுக்கு…அதாவது குழாய் ரிப்பேர், தண்ணி வரலை, எலக்ட்ரிசிட்டி வரலை, ஒழுகுது….உடைஞ்சிருக்கு லிஃப்ட் ஒர்க் ஆகலை….…இப்படியான விஷயங்களுக்கு. இது உங்களோட தனிப்பட்ட பிரச்னை மேடம்…வாடகைக்கு விடுற போது சங்கமா ஆளை செலக்ட் பண்ணிச்சு?….உங்க வீடு….அதுனால நீங்கதானே தேர்வு செய்து விட்டுக்கிறீங்க…. எவ்வளவுக்கு வாடகைக்கு விடுறீங்கன்னோ என்ன அட்வான்ஸ் வாங்கறீங்கன்னோ, ஒத்திக்கா…மூணு வருஷத்துக்கா அல்லது அஞ்சு வருஷத்துக்கான்னோ எதுவுமே யாருமே கேட்டுக்கிறதில்லயே….எல்லாமும் உங்க இஷ்டம்தானே…அப்போ யாராவது தலையிட்டா…உங்களுக்குக் கோபம் வருமா வராதா? அது போலத்தானே இதுவும்….! – சொந்த விஷயத்தைப் பொது விஷயமா எடுத்து டிஸ்கஸ் பண்ண முடியாது மேடம் .அது சரியில்லை……

சொல்லி விட்டு உத்திரத்தைப் பார்த்தார் ராமமூர்த்தி. நேரடியாக முகத்துக்கு முகம் பார்த்து எதற்குப் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்.  சொல்லப் போனால் இதில் பகைக்கு என்ன இருக்கிறது? இன்னின்ன விஷயம் இப்படியிப்படி இருக்க வேண்டும் என்று நமக்கு நாமே ஒழுங்கு படுத்திக் கொள்வதுதானே! ஒரே ஃப்ளாட்டில் குடியிருப்பவர்கள் சண்டை போட்டுக் கொள்ள முடியுமா? இருப்பது பத்து வீடுகள். அவைகளுக்குள்ளேயே சதா சண்டை, கருத்து வேறுபாடுகள், பிரச்னைகள், பூசல்கள்  என்று இருந்தால் எப்படி? மனுஷங்க சேர்ந்திருக்கும் இடமெல்லாம் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும்ங்கிறது எத்தனை சரியாயிருக்கு…?

அமைதி நீடிப்பதைக் கண்ணுற்றார் ராமமூர்த்தி. அப்படியானால் மற்றவர்களுக்கும் ஒப்புதல் இருக்கிறது என்றுதானே பொருள்…ஆனால் ஒன்று எதிர்த் தரப்பு என்ன நினைக்கிறது என்று தெரிய வேண்டுமல்லவா? இந்த அம்மாளைப் போல் அவர்களும் சங்கம்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்தால்? அதுவும் அபத்தம்தானே?

என்ன ஃபிரான்சிஸ்….நீங்க என்ன சொல்றீங்க…? என்று அமைதியை உடைத்தார் ராமமூர்த்தி. ஃபிரான்சிஸ் சமீபத்தில்தான் குடி வந்தவர். இன்னும் யாருடனும் அத்தனை பழக்கம் கூட இல்லை. ஆனால் அசோசியேஷன் உண்டுதானே என்று ஆர்வமாய்க் கேட்டு சேர்ந்து கொண்டவர்.

நானென்ன சொல்றது சார்…இதான் எனக்கு முதல் கூட்டம்…நீங்க பேசுங்க…நான் கவனிக்கிறேன்…..- மனுஷன் ஜாக்கிரதையாகத்தான் இருக்கிறார் என்று தெரிந்தது.

.சார்…நீங்க இப்டி சொல்வீங்கன்னு எதிர்பார்க்கலை….நாங்க பர்ஸனலா எல்லாம் பேசி முடிச்சிட்டுத்தான் எதுவும் நடக்காமப் போக….…மீட்டிங்ல பேசித் தீர்த்துக்கிடுவோம்னு வந்து உட்கார்ந்திருக்கோம்…- பாதிக்கப்பட்ட பி4 வீட்டு ப்ரதீப்சேட்டன் மனைவி பிருந்தாவோடு சேர்ந்து கோரஸ் பாடினான்..

அவர்களுக்கும் அன்றைய கூட்டத்திற்கான தேவையிருப்பது புரிந்தது. சாதாரணமாய் மாதக் கூட்டங்களின்போது இருப்பதில்லை.

சேச்சீ…என்ன உண்டோ…டிவைட் பண்ணிச் சொல்லுங்க…கொடுத்திடுறேன்…என்றுவிட்டு வெளியில் சென்று விடுவார்கள். வாரம் ஒரு நாள் லீவு….அதையும் இந்தக் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு நச நசவென்று….யாருக்குத்தான் பிடிக்கும்….யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை….பிரச்னையில்லாமல் ஓடினால் சரி…என்பதுதானே எல்லோருக்கும்….ஆனால் இப்போது….? பொதுப் பிரச்னை என்றில்லாமல் அவர்களுக்குள் உள்ளதை இங்கே கொண்டு வந்து திணிக்கிறார்களே…! ரெண்டு தரப்பும் சேர்ந்து கொண்ட இடத்தில் அல்லது வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் இடத்தில் எந்த அமைப்புதான் அதை விட்டு நழுவி ஓட முடியும்…?

அன்றைய கூட்டத்தில் அந்த ஒரு விஷயம் மட்டும்தான் பேசப்படப் போகிறது என்று நிச்சயமாய் உறுதி செய்து கொண்டவராய், மீண்டும் ஆரம்பித்தார் ராமமூர்த்தி.

வீடு அசிங்கமாச்சுன்னா அதை வெள்ளையடிச்சுக் கொடுங்கன்னு சொல்லுங்க…என்ன கலர் பெயின்ட் அடிச்சிருந்தீங்களோ அதையே திரும்ப அடிச்சுக் கொடுக்கச் சொல்லி செலவுக் காசை அட்வான்சுல கழிச்சிட்டு மீதியைக் கொடுங்க….பிரச்னை முடிஞ்சு போச்சு….அத விட்டிட்டு….இப்டி இழுத்தடிச்சீங்கன்னா…? இது ஒரு பிரச்னையா பொதுவா உட்கார்ந்து பேசுற அளவுக்கு?

திடுதிப்னு காலி பண்ணினா எப்டி சார் அட்வான்சைத் திருப்பிக் கொடுக்க முடியும்? திடீர்னு வந்து…நாங்க இந்த மாசத்தோட வீட்டைக் காலி பண்ணிக்கிறோம்னாங்க…என் கையில பணம் ரெடியாவா வச்சிருக்கேன்….கொஞ்சம் பொறுத்து மெதுவாத்தான் கொடுப்பேன்…அது என் இஷ்டம்….இப்பத்தானே ரெண்டு மாசம் ஆவப் போகுது….

என் இஷ்டம்னு சொல்ற பதிலே சரியாயில்லியே….இப்டிப் பேசுறது உங்களுக்கே நல்லாயிருக்கான்னு முதல்ல நினைச்சுப் பாருங்க…..அவுங்க இப்ப குடி போயிருக்கிற பி4 வீட்டுக்கு கொடுத்திருக்கிற அட்வான்ஸ் எக்ஸ்ட்ரா செலவு தானே அவுங்களுக்கு…அவுங்க ஏற்கனவே குடியிருந்த ஏ2 வீட்டுக்கான அட்வான்சைத் திருப்பிக் கொடுத்திருந்தீங்கன்னா உதவியா இருந்திருக்குமில்ல…இப்போ அவங்க அட்வான்ஸ் திரும்ப வருமோ வராதோன்னு பயப்படுறாங்க….உங்க ரெண்டு பேருக்குள்ள தீர்த்துக்க வேண்டிய பிரச்னையை சங்கத்துல வந்து சொன்னா எப்டி? நீங்க வந்திட்டீங்களேன்னு இப்போ அவங்களும் வந்து நிக்கிறாங்க….மொத்த வீட்டுக்கும் பெயின்ட் பண்ணுறதுக்கு என்ன செலவாகுமோ அதை எடுத்திட்டுத்தான் தருவேன்கிறீங்களாம்… இது நியாயமா? அக்ரிமென்ட்ல ஒண்ணு….நடப்புல வேறொண்ணுன்னா அப்போ ஒப்பந்தம்ங்கிறது எதுக்கு அநாவசியமா? வேண்டவே வேண்டாமே? பதினஞ்சாயிரம் வாடகை பேசி ஃபைவ் டைம்ஸ்  அட்வான்ஸ் வாங்கியிருக்கீங்க…அந்த எழுபத்தஞ்சுல எவ்வளவுதான் திரும்பக் கொடுக்கிறதா இருக்கீங்க…? முதல்ல அதச் சொல்லுங்க…!- பிரச்னை சந்திக்கு வந்தாச்சு…பேசிப்புடுவோம்… ராமமூர்த்தி தயாராகி விட்டாற் போலிருந்தது.

அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது சார்….என் தங்கை மாப்பிள்ளை வீடு அது. அவருதான் பணம் போட்டு வாங்கியிருக்காரு…இவங்களுக்கும் தெரியும்…அவர் எவ்வளவு தர்றாரோ, எப்பத் தர்றாரோ அப்பத்தான்…இதைப் பொதுவுல சொல்லி அவங்க வாயை அடைக்கணும்னுதான் இன்னைக்கு மீட்டிங்குக்கே நான் வந்தேன். இல்லன்னா நா வெளியூர் போறவ…. உங்க எல்லாருக்கும் தெரியுற மாதிரி சொல்லியாச்சு…இனிமே என்னை அவுங்க அனத்தக் கூடாது…அவராப் பார்த்து என்ன கொடுக்கிறாரோ அதை வாங்கிக்கிடணும்…ஏன்னா வீட்டை அவ்வளவு நாசம் பண்ணியிருக்காங்க….பார்க்கப் பார்க்க வயித்தெறிச்சலாயிருக்கு…..ஆசை ஆசையா நான்தான் பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுத்தேன். முதன் முதலா இவங்களுக்கு வாடகைக்கு விடப் போக எனக்கு இப்போ கெட்ட பேரு….தேவையா எனக்கு?

அந்த அம்மாளின் தீர்மானமான பேச்சைக் கேட்டு ப்ரதீப் சேட்டன் பக்கம் திரும்பினார் ராமமூர்த்தி. நீங்க இதுக்கு என்ன சொல்றீங்க? என்ற கேள்வி அதில் தொக்கி நின்றது. கதை ஸ்வாரஸ்யமாய்ப் போகிறதே என்று மற்றவர்கள் அமைதியாய் அனுபவித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது சார்…இந்நேரம் அட்வான்ஸ் எங்க கைக்கு வந்திருக்கணும்…பத்தோ, பதினஞ்சோ எடுத்திட்டு மீதி அறுபது எங்க கைக்கு வந்தாகணும்…காலி பண்ணி மாசம் ரெண்டாச்சு. இன்னும் அட்வான்ஸ் திரும்ப கைக்கு வந்தபாடில்ல. நாங்க போலீஸ் போக வேண்டியிருக்கும்…அப்புறம் வருத்தப்படக்கூடாது…..

வருத்தப்படுறதும், வருத்தப்படாததும் உங்க ரெண்டு பேருக்குள்ள சார்…எங்களுக்கென்ன வந்தது? எல்லாருமா இதுக்கு வருத்தப்பட்டுட்டு இருக்க முடியும்? எங்களுக்கு வருத்தப்படுறதுக்கு ஏற்கனவே நிறைய இருக்கு… அதான் சொல்லிட்டாங்கல்ல….தர்றபோது வாங்கிக்குங்க…தரமாட்டேன்னு சொல்லலியே….?அத்தோடு விஷயத்தை முடிக்க யத்தனித்தார் ராமமூர்த்தி. கூட அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து…அடுத்த சக்ஜெக்ட்டுக்குப் போகலாமா என்றார். ம்ம்ம் என்று ஒட்டுமொத்தமாய் தலையாட்டினார்கள். படம் பாதியிலேயே முடிந்து போன ஏக்கம் அவர்கள் முகத்தில்.

சேட்டனின் மனைவி பிருந்தாவின் குரல் ஆக்ரோஷமாய் எழுந்தது.

. இவர் சொல்றாப்பிடி பத்துல்லாம் ஒத்துக்க முடியாது….பாடுபட்டுச் சேர்த்த காசை தூத்திவிட்டுப் போறதுக்கா? எதுக்காக அவ்வளவு கொடுக்கிறது?  ஐயாயிரம் வேணும்னா எடுத்துக்கட்டும்….அதுவே அதிகம்…ஏதோ குழந்தை சுவத்துல கிறுக்கிச்சின்னா…அதுக்குப் போயி இம்புட்டுக் காசா பிடுங்குவாங்க…நாங்க என்ன இளிச்சவாயன்களா..ஏமாளிகன்னு நினைச்சிட்டாங்களா….உறால்ல மட்டும்தான் கிறுக்கல் இருக்கு. மத்த எடமெல்லாம் சுத்தமாத்தான் இருக்கு….சும்மாவாச்சும் அவுங்க சொல்றதுக்கெல்லாம் ஒத்துக்கிட முடியாது…என்ன…பயமுறுத்துறாங்களா….? நாங்களும் பார்க்கிறோம்…என்ன செய்திடுவாங்கன்னு…போலீசுக்கு போயி அந்தக் காசை எண்ணிக் கீழ வைக்க விடல….எம்பேரு பிருந்தா சாரதியில்லே……..அந்த குருவாயூரப்பன்தான் இவங்க அக்கிரமத்தக் கேட்கணும்….எங்க காசை இவங்க ஏமாத்தினாங்கன்னா….அழிஞ்சி போயிடுவாங்க…வயிறெறிஞ்சு சொல்றேன்…பேசும்போது படபடப்பில் அழுகை பொத்துக் கொண்டு வந்தது.

சொல்லிவிட்டு எழுந்து நடந்தாள் பிருந்தா. கூடவே ப்ரதீப்சேட்டனும் பின்தொடர….கொஞ்ச நேரம் அங்கே மயான அமைதி நிலவியது.

அவங்க சொல்றதுலயும் நியாயம் இருக்கத்தானம்மா செய்யுது…இத்தனை நாள் அவுங்களோட குலாவிக் கொஞ்சிக்கிட்டிருந்தீங்க…அந்தக் குழந்தை உங்க வீட்லயேதான் கெடந்தது. பாட்டி…பாட்டின்னுட்டு…உங்க மடிலதான் தூங்கிச்சு…ஆஸ்பத்திரி, எக்ஸிபிஷன்னு போறபோதெல்லாம் அவுங்க கார்லதான் போனீங்க…வந்தீங்க….நீங்க ஃபாரின் போனப்போ கூட ஏர்போர்ட்டுக்கு ராத்திரி ரெண்டு மணிக்கு உங்களைக் கொண்டுவிட்டு, டாடா…பை…பை சொல்லிட்டு வந்தாங்க…அப்போ அந்தக் குழந்தை உங்க இடுப்புலர்ந்து இறங்கவே இல்லாம அழுதிச்சுன்னு சொல்லிச் சொல்லி அழுதாங்க… …இவ்வளவெல்லாம் இருந்திட்டு…பாழாப்போன இந்தக் காசுக் கணக்குல இப்டி முறிச்சிக்கிறீங்களே…கேட்கவே அசிங்கமாயில்லே…..பணம் அன்பை முறிக்கும்ங்கிறது எவ்வளவு சரியாயிருக்கு…? கொஞ்சம் விட்டுக் கொடுங்கம்மா…நீங்கதான் பெரியவங்க…நல்லதை எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்குத்தான் இருக்கு, நீங்கதான் நியாயத்தைப் பேசணும்….

பி5 சந்திரசூடன் இப்டிச் சொன்னபோது….மிருணாளினியின் குரல் உயர்ந்து எழுந்தது.

நீங்க சும்மா இருங்க சார்….இது எல்லாத்துக்கும் காரணமே நீங்கதான்….நான் உங்களைத்தான் சொல்லுவேன்…அவுங்கபாட்டுக்குத்தானே எங்க வீட்டுல இருந்திட்டிருந்தாங்க…அவுங்களை வீடு மாத்த வச்சதே நீங்கதான்….ரெண்டாயிரம் குறைச்சுக் கொடுத்தாப் போதும்னு அவுங்க மனசை மாத்தி வீட்டைக் காலி பண்ண வச்சிட்டீங்க….இப்டி ஆளாளுக்கு ஒரு அபார்ட்மென்ட்ல ஒவ்வொரு வாடகைக்கு விட்டா….மத்தவங்க எப்டி ஃபிக்ஸ் பண்றது….முதல்ல இதுக்கு ஒரு முடிவு கட்டணும்….சங்கத்துல….எந்த வீடு காலியானாலும்….ஒரே வாடகைதான்னு நிர்ணயம் பண்ணனும்….அப்பத்தான் இந்த மாதிரிப் பிரச்னைகளெல்லாம் வராது.

அதெப்படிம்மா நாம சொல்ல முடியும்…? ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு மாதிரி….ராமமூர்த்தி சார் வீடு ஃபால்ஸ் சீலிங் போட்டு அழகு படுத்தியிருக்காரு….நீங்க நிறைய ஷெல்ப் வச்சு….எந்தச் சாமான்களும் கீழே பரத்தாம உள்ளே அடங்குறாப்ல வசதி பண்ணியிருக்கீங்க….எங்க வீடெல்லாம் பில்டர் எப்டிக் கட்டிக் கொடுத்தாரோ அந்த அளவு வசதியோட மட்டும்தான்… இவ்வளவு ஏன்….அளவுகளே மாறுபடுமே…சிலது நானூறு ஐநூறு ஸ்கொயர் ஃபீட் அதிகமாகும்….சிலது குறையும்…இப்டியிருக்கைல ஒரே வாடகையை எப்படி நிர்ணயம் செய்ய முடியும்? அந்தந்த வீட்டு ஓனர்ங்க இஷ்டம்தான் அது…அதிலெல்லாம் யாரும் தலையிட முடியாது…நல்ல ஆளுங்களா இருந்தாப் போதும்னு நினைக்கிறதில்லயா…? ஆயிரம் ரெண்டாயிரம் குறைஞ்சாலும் பரவால்ல…பிரச்னை பண்ணாத ஆட்களா வேணும்னு தேடுறதில்லயா? சொந்தக் காரங்களுக்குக் கூட விடுவீங்க….தர்றதைத் தரட்டும்னு….அதெல்லாம் அவுங்கவுங்க இஷ்டம்….என் நண்பர் நல்ல ஆளா செலக்ட் பண்ணுங்க…ரெண்டாயிரம் குறைச்சுக்கூடப் போதும்னு சொன்னாரு….அந்த சமயம் பார்த்து இவுங்க கேட்டாங்க….முடிஞ்சு போச்சு…அவுங்க வருமானத்துக்கும், செலவுக்கும் தகுந்தமாதிரி வீடு தேடிக்கிறாங்க….அது அவுங்க இஷ்டம்ல….நான் கொடுக்காட்டாலும் அவுங்க அப்டித்தான் போயிருப்பாங்க…அதுதான் உண்மை….

உண்மையோ பொய்யோ….சமயம் பார்த்து நீங்க சதிவேல பண்ணிட்டீங்க…அதுதான் நிஜம்…..-முகத்தை நொடித்துக் கொண்டு அந்த மேடம் பேசியது சந்திரசூடனை மட்டுமல்ல…எல்லோரையும்தான் கலவரப்படுத்தியது. இன்ன வார்த்தைகள்தான் பயன்படுத்துவது என்பதில்லையா? சினிமா வசனம் போல் பேசுகிறார்களே….?

அது நீங்க என்னவோ சொல்லிட்டுப் போங்க…பேசுறவங்கள நிறுத்தவா முடியும்….அவுங்க நினைக்கிறதைப் பேசி முடிச்சாத்தான் மனசு ஆறும்…. – என்று விட்டு அமைதியானார் சந்திரசூடன். மேலும் வளர்ந்து சண்டையாகிவிடக் கூடாதே என்கிற ஜாக்கிரதை உணர்வு தென்பட்டது.

அவருக்கு ஏற்கனவே ஊரில் ஒரு அனுபவம் இருந்தது.  ஆனால் அது எதிர்வீட்டுக்காரர் மாடியை வாடகைக்கு விட்டு பட்ட பாடு. காலி பண்ணவைக்கப் பட்ட பாடு. இது காலி பண்ணியபிறகும் உள்ள பாடு. அந்தப் பிரச்னையில் இவர் அழுத்தமாய்ப் பேசியிருந்தது இப்போது நினைவுக்கு வந்தது.

பேசாம ஒரு வக்கீலைப் புடிச்சி கோர்ட்ல கேசைப் போட்டுட்டு கம்முனு உட்கார்ந்துக்கணும்….அது எப்படியும் ஒரு வருஷம் ஆயிப் போகும்…. இது ஒரு வழி…இன்னொண்ணு….குடியிருக்கிற அந்த ஆளையே புடிச்சி, உட்கார்த்தி வச்சுப் பேசி….சமாதானம் பண்ணியோ..கெஞ்சியோ…எதோஒண்ணு செஞ்சு, அவனுக்கு ஒரு தொகையைக் கொடுத்து குடும்பத்தையும், சாமான்களையும் வெளியேத்தி, வீட்டைப் பூட்டி சாவியைக் கைப்பத்தணும்….

என்ன சொல்றீங்க…நீங்க…? அவனே ரெண்டு மாச வாடகை தர்லயாமே…? அட்வான்சுல கழிச்சாச்சுங்கிறாங்க….?

என்ன ஆதாரம்? அட்வான்சு வாங்கினதுக்கு எழுதிக் கொடுத்திருக்காங்களா? வெறுமே எழுதிக் கொடுத்திருக்காங்கன்னே வச்சிக்குவோம்….மாதா மாதம் வாடகைக்கு ரசீது கொடுத்திருப்பாங்களா? யார்தான் செய்றாங்க?….அதுதானே அங்க வீக்னஸே…? நல்லபடியா ஓடுற மட்டும் ஒண்ணுமில்லே…பிரச்னைன்னு வந்திட்டா…சிக்கல்தான்….!! இந்த மாச வாடகைவரை கொடுத்துட்டேம்பான்…துணிஞ்சு சொல்லுவான்..எனக்கு அட்வான்சைத் திருப்பித்தாங்கன்னு டிமான்ட் பண்ணுவான்…கோர்ட் கேசுல இதெல்லாம் அவனுக்குத்தான் சாதகம்… இந்த டாக்குமென்ட்டெல்லாம் சரியா இருந்தாத்தான் வீட்டுச் சொந்தக்காரனே ஜெயிக்க முடியுமாக்கும்….இத்தனை வில்லங்கம் இருக்கு இதுல….நீ என்னடான்னா ஏன் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூடப் போகல….தேடப் போகலைங்கிற……நான் ஒண்ணு கேட்கிறேன்…தப்பா நினைக்கப் படாது…..சொல்லட்டுமா….?

சொல்லுங்க…?

வீட்டை வாடகைக்கு விடுற போது நம்மளக் கேட்டுட்டா விட்டாங்க….? இப்டியும் ஒரு கேள்வி வருதில்ல? என்னமோ பேசுறீயே….?

இது ரொம்ப அநியாயங்க? நீங்களா இருந்தா அப்டி செய்வீங்களா? நம்ப வீட்டை வாடகைக்கு விட நாம யார்ட்டக் கேட்கணும்? நல்லாயிருக்கு கதை?

நான் கேட்கலைடி…எனக்கு இதுக்கெல்லாம் வாய் வராது. சவரணையாப் பேசத் தெரியணும்…அதுக்கு ஒரு சாமர்த்தியம் வேணும் மனுஷனுக்கு. அதனாலதான் வாடகைக்கே வேண்டாம்னுட்டு, சைடு போர்ஷன்ல கதவை எடுத்துட்டு சுவர் எழுப்பி அடைச்சிட்டேன்….நம்ப சக்தி அவ்வளவுதான்…ரொம்ப நெருக்கினா போலீசே இதத்தான் கேட்பான்…போய்ச் சோலியப்பாரும்பான்….

ஏங்க, என்னங்க சொல்றீங்க…? போலீஸ் ஸ்டேஷன்லயும் இதத்தான் கேட்டானாம்ங்க…..? –

….விஷயம் பொதுவாகணும்னா அவன் ஏதாச்சும் கலாட்டா கிலாட்டா பண்ணனும்…தெருவுல இறங்கிக் கண்டமேனிக்குக் கத்தறது, கெட்ட வார்த்தை பேசுறது, கல்லை விட்டு எறியறது, க்ளாஸ் உடைக்கிறது…..இப்டி…பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தணும்..அதுக்கு, தெரு சாட்சியா நிக்கணும்… குடியிருப்புப் பகுதில நியூசன்ஸ்னு சொல்லி புக் பண்ணிப்புடலாம். அவன்தான் பூனை மாதிரி வர்றான், போறானே…? சகலமும் அறிஞ்சவன் போலிருக்கு…பெரிய ஞானிதான்….நல்ல பொழப்பு….

எதிர் வீட்டில், மாடியில் குடி வந்திருந்த அந்த ஆள் படு சமத்தாகப் படியிறங்கி, நல்ல பிள்ளையாய், பதவாகமாய் ரோட்டுக்கு வந்து, வெளியே நிறுத்தியிருந்த தன் டூ வீலரை எடுத்துக் கொண்டு சாவகாசமாய்க் கிளம்புவதும், வருவதும். அவனுக்கும் நிறைய வேலையிருக்குதான்….!!! உலகம் எல்லோருக்குமாய்த்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது.

இன்றுவரை அவன்  வீடு காலி பண்ணவில்லை. வாடகையும் தரவில்லை. தகவல் தெரியும் இவருக்கு.  அதை நினைக்கும்போது இது வெறும் பிசாத்து….சந்திரசூடன் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டார்.

மிருணாளினி எழுவது தெரிந்தது.

என்ன மேடம் புறப்டுட்டீங்க…? இன்னும் எதுவும் பேசவேயில்லையே….?

அவ்வளவுதான் சார்….வேறென்ன? மத்ததுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை…..

என்ன பேசுறீங்க…நீங்க? இப்டிப் பேசினா எப்படி? ரெண்டு மாசமா நீங்க மெயின்டனென்ஸ் சார்ஜே தரல்லியே….? மத்த எல்லாரும்ல உங்க பங்குக் காசைப் பங்கு போட்டுக்கிட்டிருக்கோம்…அதையாவது கொடுத்துட்டுப் போங்க….- தீர்மானமாய்க் கேட்டார் ராமமூர்த்தி. அவர்கள் பிரச்னையைத் தீர்த்தாலே அன்றைய கூட்டம் வெற்றிதான் என்றிருந்தது அவருக்கு.

நான் செடிகளுக்குத்  தினசரி தண்ணி ஊத்துறேன்…அதுக்கும் அந்த மெயின்டனென்ஸ் சார்ஜூக்கும் சரியாப் போச்சு….தனியா நான் ஏதும் காசு தர வேண்டியதில்லை….

எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இதென்ன புதுச் சரடாய் இருக்கிறது? இந்தம்மாவுக்கு எதற்குமே வெட்கமேயில்லையோ…? படு பீத்தலா இருப்பாங்க போலிருக்கு…?

மேடம்…அது நீங்களா விரும்பிச் செய்யுறது….நாங்கள்லாம் இந்த ஃப்ளாட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியிருந்தே செய்திட்டிருக்கீங்க…உங்க விருப்பத்துக்குப் பூச்செடிகளை வாங்கி வச்சிருக்கீங்க…பிரியமா வளர்க்குறீங்க… நாங்க எதாச்சும் சொன்னமா? அதுக்குப் போயி விலை பேசினா எப்டி மேடம்….?

அது வேலையில்லயா? அத்தனை செடிகளுக்கும் பிடிச்சுப் பிடிச்சு தண்ணி ஊத்துறனே இந்த அறுபது தாண்டின  வயசுல… இந்த அபார்ட்மென்ட்டை அந்தப் பூச்செடிகள் அழகு படுத்தலையா? ஒரு மெஜஸ்டிக் லுக் எதுனால கிடைக்குது…? அதுகளை அப்படி அழகுபட வளர்த்திருக்கிறதுனாலதானே…? ஒரு இடத்தைக் கௌரவப்படுத்தறதுங்கிறது எப்படி? இப்படித் தன்னிச்சையான, விருப்பமான  செயல்கள்னாலதானே? ஒருத்தரோட தனிப்பட்ட இன்ட்ரஸ்ட்னாலதானே..! எங்கயுமே தனியொருவரோட இடைவிடாத முயற்சியினாலதானே நல்லதுகள் எல்லாமும் நடந்திருக்கு….அதை மறந்திடாதீங்க….

அதான் மேடம் நாங்களும் சொல்றோம்…அப்படியான விலையில்லா சேவைக்கு விலை பேசறீங்களேன்னு….

அவசியம்னு வந்தா அதுவும் விலையாகத்தான் செய்யும்…எல்லாரும் கணக்காவும், கருத்தாவும் இருக்க முயற்சிக்கிற போது நானும் அப்டித்தானே இருந்தாக வேண்டியிருக்கு….நா ஒண்ணும் ஏமாளியில்லே….!

இந்த பதிலைக் கேட்டு ராமமூர்த்தி கடகடவென்று சிரித்தார்.

நிறுத்துங்க சார்….என்ன சொல்லிட்டேன்னு இப்ப இப்டிப் பெரிசா சிரிக்கிறீங்க…? நா சொன்னதுல என்ன தப்பு….?

அப்டி ஒரேயடியா நீங்களும் சொல்லிட முடியாது மேடம்…நீங்க மட்டும் இந்த ஃப்ளாட்டுக்கு வந்தபோது இந்தச் செடியையெல்லாம் வச்சீங்க…வளர்த்தீங்க….ஆனா பத்து வீட்டுக்கும் பத்து விதமான விருப்பம் இருக்கும்னு நீங்க யோசிச்சீங்களா…? அப்டிப் பார்த்தா இன்னைக்குத் தேதிக்கு  இந்தச் செடி வைக்கிற பாத்தியிட்ட பகுதிகளை சமமா பத்தாப் பிரிக்கணும்…அததுல அவுங்கவுங்க விருப்பப்பட்ட செடிகளை வைக்கணும்…மருந்துச் செடிகளைக் கூட வச்சுப்பாங்க….துளசி வைக்கலாம்….தொட்டிச் செடியா வச்சு வளர்க்கலாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கலாம்தானே….அதையும் நாம குற்றம் சொல்ல முடியாதே….அதுனாலதான் சொன்னேன்…பொது நலம் கருதி, சேவையா செய்ற காரியங்களுக்கு விலை பேசக் கூடாதுன்னு….

செய்து பார்க்கட்டும்….அதையும்தான் பார்த்திருவோம்….

சரி…அதை விடுங்க…ஒரு பேச்சுக்குச் சொன்னேன்…அவ்வளவுதான்…யார் இதுல போய் உங்களோட போட்டிக்கு வரப்போறாங்க….எல்லாருக்கும் கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு வேலை…வேலைன்னு ஓடுறதுக்கே நேரம் சரியாயிருக்கு….சீனியர் சிட்டிசன் ஆனாலும் நாங்களும் இன்னும் சின்னச் சின்ன வேலைகள்ல இருந்திட்டுத்தானே இருக்கோம்….பத்தாயிரம்…பதினஞ்சாயிரம் வருதுன்னா வேண்டாம்னா இருக்கு…சரி விஷயத்துக்கு வருவோம்… நீங்க தர வேண்டிய ரெண்டு மாச மெயின்டனன்ஸ் சார்ஜூக்கு என்ன சொல்றீங்க…?

அதான் சொல்லிட்டனே….நான் செடிகளுக்குத் தண்ணி ஊத்தறேன்னு….

அப்போ அதுக்குக் கூலியா கழிச்சிக்கச் சொல்றீங்களா….?

மிருணாளினியின் முறைப்பு அவர்களைச் சற்றே கதி கலங்கத்தான் வைத்தது.

பின்னே…? அதானே அர்த்தம்…..நீங்க இப்டி சொல்றீங்க…ஏ4 ல இருக்கிற ரெண்டு காலேஜ் பிள்ளைங்க என்ன சொல்லுது தெரியுமா? ஐநூறில்ல…ஆயிரம் கூட மெயின்டனென்ஸ் சார்ஜ் தர நாங்க தயாராயிருக்கோம்…ஆனா இன்னொருத்தங்க தர வேண்டிய பங்கை நாங்க ஏன் பகிர்ந்துக்கணும்ங்கிறாங்க….ஆகையினால ஒவ்வொருத்தரும் அவங்கவுங்களுக்குன்னு பிரிச்ச தொகையை மட்டும்தான் கொடுக்க முடியும்னுட்டாங்க….ஏற்கனவே ரெண்டு மாசம் நாங்க எல்லாரும் உங்க மெயின்டனென்ஸ் சார்ஜை பிரிச்சிக் கொடுத்திருக்கோம்…அதுவும்…சேர்த்து இந்த மாசத் தொகையோட கணக்கிட்டு நீங்க கொடுத்தாகணும்….இதுதான் சங்கத்தோட முடிவு…..

கூட்டம் மொத்தமும் அஜென்டாவை ஆமோதித்தது. ரெசல்யூஷன் நகல்  அந்தந்த ஃப்ளாட்டுக்கு நாளைக்கு வரும்…இல்லன்னா வாட்ஸ்அப்ல அனுப்பி வைக்கிறேன். நல்லா படிச்சிக்குங்க….இனிமே யாரும் இந்த ஃப்ளாட்ல பிரச்னை பண்ணக் கூடாது… நாம பத்துப் பேரும் பத்துக் குடும்பமா இல்லாம ஒரே குடும்பமா இருக்கப் பழகுங்க…ஒருத்தருக்கொருத்தர் சுமுகமா பழகவும், பேசவும், உதவி செய்யவும்….மனித நேயத்தோட இருக்கவும் ஆரம்பிங்க…இதுவரை எப்படியோ…இனிமே இப்படித்தான்…..இந்தப் பகுதில இருக்கிற மற்ற எல்லா அபார்ட்மென்ட்களுக்கும் நாம ஒரு முன்னுதாரணமாயிருக்கணும்….அத மனசுல வச்சிக்குங்க….நம்மள மாதிரி மூத்த குடிமக்கள் அதிகமா இருக்கிற இடத்துல அதுதான் அழகு…. – சொல்லி முடித்து தலையை நிமிர்ந்தார் ராமமூர்த்தி. எல்லோரும் அவரையே தீர்க்கமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அத்தனை பேர் முகங்களிலும் புன்னகை நிலவியது.

அப்போது மிருணாளினி  அங்கே இல்லை.. திடுக்கென்றது ராமமூர்த்திக்கு.

என்னாச்சு….? எங்கே….?  – அதிர்ச்சியில் வார்த்தைகள் வராமல் சைகையால் வினவினார்.

போயே போச்சு…போயிந்தே…இட்ஸ் கான்….. – சந்திரசூடன் அமுத்தலான புன்னகையோடு சொன்னார். எல்லோரும் பலமாய்ச் சிரித்தவாறே எழுந்தார்கள்.