மலையாளம் மூலம்: கே. ஆர் மீரா, ஆங்கிலம் வழி தமிழில்: விலாசினி

அவளுக்கு மஞ்சள் காமாலை. நிஜமாகவே. அதனால் அனைத்துமே அவளுக்கு மஞ்சளாகத்தான் தெரிந்தன. அவனது நரைத்த மயிற்கற்றை, அறிவார்ந்த கண்கள், நன்றாக வெட்டப்பட்ட சுத்தமான நகங்கள், அனைத்தும்.

ஆனால் அவனுக்கு – அவனுக்கோ ஒரு புதுவகை நுண்ணோயின் திணறல். அதனால் அவளது சுருண்ட கேசம், வெளுத்த கன்னங்கள், முன்னெற்றியின் சிறிய கருப்பு நிறப்பொட்டு என்று அனைத்தும் அவனுக்கு  சாம்பல் நிறத்தில் தெரிந்தன. காந்தி நகரின் இந்த குறிப்பிட்ட விடுதியின் அறையில் அமர்ந்திருக்கும் அவள் அவனை மஞ்சளாகவும் அவன் அவளை சாம்பல் நிறமாகவும் நினைத்துக்கொண்டார்கள். பாவப்பட்ட ஜீவன்கள். ஒரு பெண்ணாகவும் ஓர் ஆணாகவும்தான் அந்த நொடி அவர்களிருந்தார்கள். அவளுக்கு சற்றேழத்தாழ முப்பத்தைந்து வயது. அவனுக்கு சற்றேழத்தாழ நாற்பத்தைந்து வயது. அவள் விவாகரத்து பெற்ற, இரண்டு குழந்தைகளின் தாய். அவன் திருமணமான இரண்டு குழந்தைகளின் தந்தை.

ஒப்புகொண்டாலும் இல்லையென்றாலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான பாலியல் ஈர்ப்புதான் அவர்களையும் கோட்டயத்தின் அந்தப் புறநகர் மத்தியதர விடுதியின் அறைவரை கொண்டுவந்திருக்கிறது. கோட்டயம் மருத்துவக் கல்லூரியில்தான் இருவருக்கும் மற்றவரால் நோய்த் தொற்று ஏற்பட்டது. மருத்துவமனைகளில் காமத்தால் தொற்று ஏற்படாதவர்கள் யார்? ஆயிரக்கணக்கான இறந்தவர்களின் உடலிலிருந்து விடுதலையடையும் ஏக்கங்கள் அங்கு காற்றில் அலைந்துகொண்டிருக்கவில்லையா? ஊசிப்போன ரொட்டித் துண்டங்களில்  மகிழ்ச்சியாகப் பரவும் பூஞ்சையைப்போல, மழைக்காலங்களில் உதிர்ந்த இலைகளின் மீது குறியை நீட்டி விறைத்து வளரும் வெள்ளைக் காளாண்களைப்போல, மெல்லிய சாதகமான பொழுதுகளில் ஆசைகள் கிளர்ந்தெழும். போதுமானளவு காதலிக்கப்படாதவர்கள் இவர்கள். தவிர, வியாதியால் பீடிக்கப்பட்டவர்களும். பல்வேறு விதமான கலைக்கப்பட்ட ஆசைகளால் தாக்கப்பட்டவர்களின் உடல்கள் ரத்தச் சூடாகி, பின்பு காற்றில் ஆவியாகக் கரைந்துவிடுபவை. காதலின் மாயாஜாலத்தை அறிந்து வைத்திருப்பவர்கள் யாராவது மந்திரம் கூறி கரைந்த ஆவிகளை மீண்டும் சதையும் எலும்புகளும் உள்ள கூட்டிற்குள் அடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? யார்தான் அதை விரும்ப மாட்டார்கள். அந்த நேரம் யாரும் தன் உதடுகளில் இருக்கும் புகையிலைக் கரை குறித்தோ வாயிலிருந்து வரும் துர்நாற்றம் குறித்தோ கவலைக் கொள்ளப் போவதில்லை. மனிதர்கள் என்பது இவ்வளவுதான்.

அவர்கள் சந்தித்துக்கொண்ட ‘தொற்று நோய்கள் வார்டு’ அந்த மருத்துவக் கல்லூரியின் இருபத்தி நான்காவது வார்டாக எண்ணிடப்பட்டிருந்தது. மற்ற வார்டுகளைப் போலல்லாமல் கண்ணாடிக் கதவுகளைக் கொண்ட அந்த வார்டில் அக்கதவுகளின் மீது சிகப்பு நிற வட்டத்தில் ‘இருபத்தி நான்கு’ என்று எழுதப்பட்டிருந்தது. அதேபோல், மற்ற வார்டுகளைப் போலல்லாமல் பார்வையாளர்களுக்கான பகுதி அதனுடனேயே இணைக்கப்பட்டிருந்தது. ‘டாக்டர். சுஜித் குமார்’ என்ற கரும்பலகையின் கீழ் வரிசையாக இணைக்கப்பட்ட சிகப்புநிற ஞெகிழி நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. இந்த வார்டு கேட்டிற்கு அருகில் இருந்தது மிகவும் வசதியாகப் போயிற்று. பிணவறையும் அருகில்தான் என்பதும் தேவையென்றால் வசதிதான். தொட்டதற்கெல்லாம் நாம் தொற்று வியாதிகளைக் கொண்டிருக்கும் நோயாளிகளாக ஆவதில் எந்த ஆச்சரியமுமில்லை.

அன்று அவள்தான் முதலில் வந்தது. வெளியே மழை பலவீனமாகத் தூறிக்கொண்டிருந்தது. அவன் மழையிலிருந்து தப்பித்து உள்ளே நுழைந்தான். சட்டையின் தோள்களிலிருந்தும், லேசாக நரைக்கத் தொடங்கியிருந்த தலைமுடிகளிலிருந்தும் நீரை உதறிக்கொண்டவன் அவளெதிரே போடப்பட்டிருந்த ஞெகிழி நாற்காலியில் அமர்ந்தான். தன் தலையைத் தூக்கி வேறெதற்கும் முன்பு நேராக அவள் கண்களைப் பார்த்தான். ஒருவரை அப்பொழுதுதான் முதன் முதலில் பார்த்தாலும் காதலில் விழுவதைப் போல அவளைப் பார்த்தான். இருவரும் ஒருவரையொருவர் ஏற்கெனவே எங்கோ பார்த்திருந்ததுபோல் உணர்ந்தார்கள். எதிரெதிரில் அமர்ந்திருந்ததனால் காரணமே இல்லாமல் இருவரது பார்வைகளும் அடிக்கடி சந்தித்துக்கொண்டு, அங்கீகரித்து மீண்டும் விடைபெற்றன. ஒருமுறை அவன் பார்வை அவளது பார்வையைச் சந்திக்கவும், மன்னிப்புக் கோரிவிட்டு மீண்டும் மேலே உயர்ந்து விடைபெற்றன. மற்றொருமுறை அவளது பார்வை அவனைச் சந்திக்க அவனது கண்ணிமைகள் அவள் பார்வை விழுவதற்கு முன் அவற்றைத் தாங்கின. இடையில் மற்றொரு நோயாளி உதவியாளரிடம் தொணதொணத்துப் பேசியபடி நகைச்சுவை ஒன்றைக்கூறி தன் அருகில் இருந்தவருடன் புன்னகையைப் பகிர்ந்தார். அந்தப் புன்னகையின் ஒரு துண்டை ஏனோ அவன் அவளிடம் கொடுத்தான். சிறிது நேரம் கழித்து அவளருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண்மணி வெளி நோயாளிகளுக்காக வழங்கப்பட்ட தன்னுடைய அட்டையைப் பார்த்து எதையோ கூற, பதிலுக்கு இவள் நாகரீகம் கருதி ஒரு புன்னகையை உதிர்த்தாள். அந்த நொடி அவனிடமிருந்து முன்பு கடன் வாங்கியிருந்தப் புன்னகையை அதே அளவு திரும்பிச் செலுத்தினாள். இடையில் மற்றொருவர் அவள் நினைவிற்கு வந்தார். அந்த நினைவு முடிந்ததும் தன் வழக்கமான பெருமூச்சை விட்டபடி கண்களை உயர்த்த அவன் அவளருகில் அமர்ந்திருந்தான். அவனும் ஏதோ சிந்தனையில் இருந்தது தெரிந்தது. அவன் மனதில் என்ன இருக்கும் என்று ஆச்சரியப்பட்டாள். நோயைக் குறித்து நினைக்கிறானா? அல்லது மரணமா? அல்லது தான் இறந்தால் அநாதையாகப்போகும் தன் மனைவி குழந்தைகள் குறித்தா? காலையில் குழந்தைகளை அவசரமாகக் கிளப்பிப் பள்ளிக்கு அனுப்பியதில் தான் தேநீர் குடிக்க மறந்தது அவளுக்கு திடீரென்று நினைவிற்கு வந்தது. சரியாக அதே நொடி அவன் தன் தலையைத் திருப்பி அவளிடம் முதன்முறை பேசினான், ‘ஒரு டீ குடிக்கலாமா?’

அவள் தொடங்கினாலும் பதில் சற்றுத் தாமதமாகத்தான் வந்தது. கொஞ்சம் சிவந்திருந்தாள்.

‘நம்ம நம்பர்ஸ அவ்ளோ சீக்கிரம் கூப்பிட மாட்டாங்க…’ அவனே தொடர்ந்தான்.

அவளுக்கு ஏதோ கூச்சமாக இருந்தது. டீ குடிக்க வேண்டும் என்ற ஆசை அவ்வளவு அப்பட்டமாகவா அவள் முகத்தில் தெரிந்தது? அந்த நினைப்பே அவளை இன்னும் சிவக்கச் செய்தது. சரி, என்னவாகவேனும் இருந்துவிட்டுப் போகட்டும், அவள் அந்த மனிதனை நீண்ட நேரத்திற்குப் பிறகு சம்மதத்துடன் பார்த்து ஓர் இதமான புன்னகையை வழங்கினாள்.

‘போகலாம்.’

ஈர நடைபாதையில் அவனுடன் இணைந்து நடந்துபொழுது அப்பொழுதிற்கு சம்பந்தமில்லையென்றாலும் தன் கணவனிடமிருந்து பிரிந்த பிறகு முதன் முறையாக வேறொரு ஆணுடன் நடப்பதை கவனித்தாள். அவன் இத்தகைய கொடுப்பினைக்குத் தகுந்தவன்தானா என்று வியந்தாள். அவன் உயரமாக இருந்தான். ஆனால் அடி மனதில் அவன் மிகவும் சோர்ந்து போயிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. பெண்களுக்கு அவர்களது மனக்குறைகள் கண்களுக்குக் கீழ் தெரியும். ஆண்களுக்கு அவர்கள் நடையில் தெரியும். அவளுக்கு அவள் கண்களின் கீழே கருவட்டங்கள் இருந்தன. அனைத்துவித சிகிச்சைக்குப் பிறகும் விட்டுவிட்டு மீண்டும் வந்துகொண்டிருந்த நோய்மை அவளைச் சோர்வாக்கியிருந்தது. மருந்துகளை உட்கொள்வதும், ரத்தம் சிறுநீர் சோதிப்பதும் போதும் போதுமென்றாகிருந்தது. இன்றுகூட மருத்துவமனைக்குச் செல்ல புடவைக் கொசுவத்தை வைத்துகொண்டிருந்தபோது இந்த மருத்துவரும் தன்னுடைய வியாதி என்னவென்று சரியாகக் கூறவில்லையென்றால் ஒட்டுமொத்தமாக அனைத்து சிகிச்சைகளையும் நிறுத்திவிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள். அப்பொழுதுதான் அவளது பெரிய பையன் அறைக்குள் நுழைந்து தன்னுடைய மூச்சிழுப்புக் குப்பியைத் தேடிக்கொண்டிருந்தான். அவனது சிறிய மார்பு மூச்சுவிட சிரமப்படுவதைப் பார்த்துத் தன் முடிவை மாற்றிக்கொண்டாள். அவன் முதுகெலும்புப் புடைக்க மூச்சுத் திணறி தூக்கமில்லாமல் தவிக்கும் இரவுகளில் அவன் முதுகை நீவிவிட அவள் உயிருடன் இல்லையென்றால் அதை வேறு யார் செய்வார்கள்? அவளுக்கு இருந்ததெல்லாம் குழந்தைகள் மட்டும்தான். அவர்கள் சண்டையிட்டுக்கொண்ட பொழுது அவர்களுக்கிடையில் சமாதானம் செய்துவைக்க அவள் மட்டுமே இருந்தாள், அவர்களது பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகள் அனைத்திலும் கலந்துகொள்ள அவள் மட்டுமே இருந்தாள், அவர்களுக்கு ஓணத்திற்கு புத்தாடை வாங்கித்தர அவள் மட்டுமே இருந்தாள், அவர்களது பிறந்தநாளை நினைவு வைத்து பள்ளிக்கு எடுத்துச் செல்ல இனிப்புப் பொட்டலங்கள் தயார் செய்து கொடுக்க அவள் மட்டுமே இருந்தாள். அவர்களது சின்னஞ்சிறு முகத்தில் புன்னகைப் பூக்க வைக்க அவள் மட்டுமே இருந்தாள்.

அவன் மீண்டும் பேசினான், ‘உங்க வீடு எங்க?’

‘பண்டளம்.’

அவளைக் குறும்பாகப் பார்த்தபடி, ‘அங்க இருந்த ட்ரூப்ல இருந்து ஓடி வந்துட்டீங்களா?’*

‘இல்ல, அங்க டார்ச் ஒளி ஏத்த ஓடினேன்,’ அவள் ஏனோ தன் பையனையே நினைத்தவாறு சோகமாக பதிலளித்தாள். அவன் அவளை அதிர்ச்சியாக உற்று நோக்கவும்தான் தான் யாரிடம் என்ன பதிலளித்திருக்கிறோம் என்று உணர்ந்தாள். அவள் யார்? அல்லது அவள் என்பது என்ன? முப்பத்தைந்து வயது கடந்த ஒரு பெண். சுத்தமாகத் துடைக்கப்பட்ட முன்முற்றம் போன்ற இடுப்பில் விளக்குமாற்றின் குச்சிகளால் வாரும்பொழுது ஏற்படும் அச்சைப்போன்ற கோடுகள். அவள் தனங்களோ எந்த நம்பிக்கையும் அற்று தளர்ந்துபோயிருந்தன. அவள் பிட்டம் வாளிப்பாக இல்லை. ஒவ்வொரு பனிக்காலத்தில் வீசும் மெல்லிய காற்றிலும் உதிரும் சவுக்கு இலைகளாக கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்தபடியே இருக்கும் தலைமயிர். இதைப்போன்ற ஒரு பெண்மணி நகைச்சுவையாகப் பேசுவது எந்த ஆணுகுத்தான் விருப்பமாக இருக்கும்? சுருங்கச் சொன்னால், இப்பொழுதெல்லாம் குறிப்பிட்ட வயதைக் கடந்தவிட்டாலே பெண்களுக்குக் கொடுமையாகத்தான் இருக்கிறது.

அவர்கள் அதற்குள் அந்த காபி கடையின் உள்ளே நுழைந்திருந்தனர். ஜெனரேட்டர் போடும் இரைச்சல் ஓரளவாவது குறைந்திருந்த ஓர் இடத்தை அவன் கண்டுபிடித்தான்.

‘நான் உங்கள எங்கயோ பாத்திருக்கேன்.’

‘நான் எல்.ஐ.சியில் தான் வேலை பாக்கறேன்.’

‘ஹான்… நல்லது!’ அவன் புன்னகைத்தான்.

‘நீங்க என்ன பண்றீங்க?’

‘நான் ஓர் ஆசிரியர். உங்களுக்கு என்ன பிரச்சன?’

‘தெரியல…’ அவள் குரல் சோர்வாக இருந்தது.

அவன் புன்னகைத்தான். ‘அதிர்ஷ்டக்காரப் பெண்…’

‘உங்களுக்கு என்ன பிரச்சன?’ அவள் வினவினாள்.

‘ஏதோ ஒரு வைரல் ஜுரம். கிட்டத்தட்ட குணமாகிடுச்சு. ஆனாலும் தொடர்ந்து செக்-அப் செஞ்சுக்கனுமாம்.’

வெயிடர் இரண்டு கோப்பைகள் தேநீருடன் வந்தார். இருவரும் அமைதியாகப் பருகினர். அவன்தான் பணம் கொடுத்தான். மீண்டும் வார்டுக்குத் திரும்பும் வரையிலும் இருவரும் அமைதியாக இருந்தனர். அவள் எண் முதலில் அழைக்கப்பட்டது. அவள் அவசரமாக உள்ளே சென்று டாக்டரிடம் தன்னுடைய நோய்க்கான அறிகுறிகளைச் சொன்னாள். அவரும் அவளது ரத்தம் மற்றும் சிறுநீர் சோதனை அறிக்கைகள் வேண்டும் என்றார். அவள் வெளியில் வரவும் அவன் உள்ளே சென்றான். விடைபெற அவள் அவனைப் பார்க்க, அவனிடமிருந்த ஏதோ குழப்பம் அவளிடமும் தொற்றிக்கொண்டதாகத் தோன்றியது. எத்தனை எத்தனை வகை நோய்கள் இந்த உலகத்தில் இருக்கின்றன. தொடுவதால் சிலவும், பார்வையால் சிலவும் பரவுகின்றன. காற்றில் சிலவும், செய்திகளிலும், கடிதங்களிலும் கூட பரவுகின்றன. டாக்டர். சுஜித் குமாரிடம் இவையனைத்திற்கும் மருந்து இருந்தால் நலம்.

சோதனைக் கூடம் கூட்டமாக இருந்தது. நீண்ட வரிசையின் கடைசியில் அவள் இணைந்துகொள்ள தவறவிட்ட யாரையோ அவசரமாகத் தேடுவதுபோல் அவன் வேகமாக உள்ளே நுழைந்தான். அவனது விசித்திரமான நடத்தையைப் பார்க்க அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. நரைத்து வழுக்கை விழத் தொடங்கி, வாழ்க்கை தரும் கவலைகளால் சுருக்கம் விழுந்த முகத்தைக்கொண்ட நடுத்தர வயது ஆணொருவன் கண்களில் யவ்வனம் ததும்ப சுற்றிப்பார்த்தால் யாருக்குத்தான் வியப்பாக இருக்காது? அவன் யவ்வனம் அவளைத்தான் தேடுகிறது என்று உணர்ந்தவுடன் அவள் முகம் வெளுத்து பின்பு சிவக்கத் தொடங்கியது; அவனுக்கு அவன் கண்கள் அவளைக் கண்டடைந்ததில் மகிழ்ச்சி. அவள் இதயம் விம்மியது. பெரும்பாலான பெண்களுக்கு இப்படித்தான். பல வருடங்களுக்குப் பிறகு ஒரு பெண்ணை ஆணின் கண்கள் தேடும்பொழுது, அதுவும் அவை அவளை மட்டும்தான் தேடுகின்றன என்று உறுதியாகும்பொழுது அவளுக்கு இதயம் விம்மத்தான் செய்யும். நிச்சயமாக பெண்களிடம் இது ஒரு நல்ல விஷயம்தான்.

அவன் அவளிடம் மெதுவாக வந்தான். அவனிடமும் டாக்டர் பல சோதனை அறிக்கைகளைக் கேட்டிருப்பதை அவன் அவளிடம் கூறினான். ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. அதன் முடிவு மதியம் இரண்டு மணிக்குத்தான் கிடைக்கும். அதைப் பெற்றுக்கொண்டு மாலை மீண்டும் டாக்டரை சந்திக்க நினைத்தான். அல்லது அவன் மீண்டும் புதன்கிழமை வர வேண்டியதிருக்கும். மீண்டும் டாக்டரை சந்திக்க தான் மற்றொரு நாள் வரவிருப்பதாக அவள் அவனிடம் கூறினாள். அதைக் கேட்டவுடன் அவன் முகம் வாடியது.

‘எதுக்காக இன்னொரு தடவை அலையனும்?’ அவன் கூறினான். ‘இன்னிக்கே டாக்டர பாக்குறது பெட்டர்தான?’

நாற்பத்தைந்து வயதின் சுருங்கிய முகம் ஒருபோல் வெளுத்து பின்பு சிவந்தது. அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தான். ஒருவேளை அவன் கண்கள் அவள் உடல்மீது சிக்கிக்கொண்டால் அவள் அவனை பொறுக்கி என்று நினைக்கக்கூடும் என்று பயந்தான். ஆண்களிடம் இதுதான் பிரச்சனை. ஆண்களுக்கு பெண்களை வெறும் உடல்களாகத்தான் பார்க்கத் தெரியும். படுக்கையில் நம்மைப் பற்றி இந்தப் பெண் என்ன நினைப்பாள் என்றே கவலைப்பட்டுக்கொண்டிருப்பார்கள். சுருங்கச் சொன்னால், ஆண்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்துவிட்டால் கொடுமையாகத்தான் இருக்கிறது.

சோதனை முடிந்தவுடன் மாலையில் டாக்டரை சந்திப்பதற்கு இன்னும் பொழுது நிறைய இருந்தது. பிறகு, தைரியத்தை வரவழைத்துக்கொண்டவனாக ஒரு நகைச்சுவையக் கூறுவதுபோல் அவன் கூறினான், ‘நாம் இளமையாக இருந்திருந்தால் ஏதாவது திரைப்படத்திற்காவது சென்றிருக்கலாம்.’

அவள் புன்னகைத்தாள். ஒரு நொடி அமைதிக்குப் பின் தைரியமாக அவனிடம் கேட்டாள், ‘இந்த மதியானத்திற்கு எந்த தியேட்டர் திறந்திருக்கும்?’

அவள் முடிப்பதற்கு முன் அவர்கள் முன்பு இருந்த ஒரு திரைப்பட சுவரொட்டியைக் கண்டார்கள். காதல் கொண்டேன். மதிய காட்சி. இந்தப் படத்திற்கு ஏன் போக்கக்கூடாது என்று அவன் கேட்டான். அவள் சம்மதித்தாள். தியேட்டரைக் கண்டுபிடித்து, டிக்கெட்டுகளை வாங்கி, அரங்கிற்குள் நுழைந்து இருவரும் அருகருகே இருக்கையில் அமர்ந்துகொண்டார்கள். படம் ஆரம்பித்திருந்தது. ஆனாலும் அவர்களால் கதையைத் தொடர முடிந்தது. அது ஒரு தமிழ்ப்படம். ஆனாலும் அவர்களால் உரையாடல்களைப் பின்பற்ற முடிந்தது. திரையரங்கில் அத்தனைக் கூட்டம் இல்லை. இடைவேளைக்குப் பிறகு அவன் அவள் தோள் மீது மெதுவாகக் கையைப் போட்டான். அவள் அதைக் கவனிக்காததுபோல் இருந்தாள். சிறிது நேரத்திற்குப் பிறகு அவள் அவன் தோள்மீது தன் தலையை மெதுவாக சாய்த்தாள். அவனும் அதைக் கவனிக்காததுபோல் இருந்தான்.

திரைப்படம் இரண்டரை மணிக்கு முடிந்தது. அருகிலிருந்த உணவகத்தில் இருவரும் மதிய உணவு உண்டார்கள். இன்னும் செலவழிக்க நிறைய நேரம் இருந்தது. திடீரென்று அவளுக்குத் தலைச் சுற்றி, வியர்வைப் பெருக்கெடுக்க, கண்கள் பின்சொருகியது. சுற்றிலிருந்த அனைத்தும் மஞ்சளாகத் தெரிந்தன. அவன் சுதாரித்தான். அவளுக்கு ஜுரம் இருக்கிறதா? அவள் முன்னெற்றியிலும் கழுத்திலும் தன் பின்னங்கையை வைத்துப் பரிசோதித்தான். இந்த நேரத்தில் எங்காவது ஓய்வு எடுப்பதுதான் குணம் தரும் என்று அவன்தான் முடிவெடுத்தான். அவளுக்கும் அது சரி என்று பட்டது. அதனால்தான் அவர்கள் அருகிலிருந்த விடுதிக்கு வந்திருந்ததுபோல் தெரிகிறது.

அவள் வெள்ளைப் படுக்கை விரிப்புகளில் கிடந்தாள். அவன் அவளருகில் அமர்ந்தவாறு அவள் உள்ளங்கையை வருடிக்கொடுத்தான். அவர்களுக்கு எதிரில் இருந்த கண்ணாடியில் இருவரும் தங்களைப் பார்த்துக்கொள்ள முடிந்தது. இரண்டு பாவப்பட்ட உயிர்கள். காதலுக்கென்று நேரம் ஒதுக்க முடியாத மனிதர்கள். காதல் கொள்ள வெட்கப்படும் மனிதர்கள். இருந்தும் காதலைக் கைவிட தைரியமற்ற மனிதர்கள். அவளால் அவன் கைகள் மீதிருந்த கண்களை விலக்க முடியவில்லை. வெளிறிய மஞ்சள் நிறத்தில் இதுவரை ஒருமுறைகூட அழுக்கைத் தொட்டிராத கைகள் போலிருந்தன. அவள் இதற்கு முன்பு பார்த்திருந்த கைகளில் இருந்ததைப்போல் நகங்கள் நசுங்கி இருக்கவில்லை. சிகிரெட்டின் மஞ்சள் கறைகூட இல்லை. அவற்றின் உள்ளங்கைகள் முரடாக இல்லை. அவள் தன் கைகளைப் பார்த்துக்கொண்டாள். துணி துவைத்து பாத்திரம் தேய்த்து மென்மையற்று இருந்தன. நகங்களின் அழுக்கு கருப்பு நிறக்கோடாகத் தெரிந்தன. அவன் மனைவியின் நகங்கள் எவ்வாறு இருக்கும்? இவளுடையதைப் போன்றா? அவன் அவளுடைய முந்நாள் கணவன் குறித்து சிந்தித்துக்கொண்டிருந்தான். யார் யாரை விட்டுச் சென்றது? அவன் அவளையா அல்லது அவள் அவனையா? அவன் அழகானவன் இல்லையா? அவளைச் சரியாக முத்தமிடவும் கொஞ்சவும் அவனுக்குத் தெரியவில்லையா? பெண்களைப் பற்றி யாருக்குத் தெரியும்? சில பெண்களுக்கு முத்தமிட்டால் பிடிக்காது. சிலருக்கு எத்தனை முத்தமிட்டாலும் போதாது.

அவன் தன் விரல்களை மெதுவாக அவள் கன்னங்களில் கொண்டுசென்றான். அவள் அவனது கைகளை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்

‘அந்த மஞ்சள், அது போயிடுச்சா?’

அவன் குரல் தடுமாறியது. ‘இல்லை…’

அவள் சிரித்தாள். ‘பின்ன நீங்க?’

‘எனக்கு இன்னும் ஜுரமிருக்கு இல்லையா? என் கண்ணுல ஒரு மூலையில் சிவப்பாவும் மறுமூலையில் கருப்பாவும் இருக்கு. இன்னும் அதேபோல எல்லாம் சாம்பல் நிறத்துலதான் இருக்கு.’

அவனும் சிரித்தான். ஓர் ஆணும் பெண்ணும் அவர்களே அவர்களுக்கான ஓர் அறையில் இணைந்து சிரிக்கத் தொடங்கினால் என்னவெல்லாம் நடக்கக்கூடும் என்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். அவர்களால் அழமுடிவது வரை சிரித்தார்கள். சிரிப்பு என்பது ஒருவகை மந்திரம். அவள் சிரித்தபோது அவன் அவளை மிகவும் அழகானவள் என்றும் அவன் சிரித்தபோது அவள் அவனை மிகவும் அழகானவும் என்று நினைத்துக்கொண்டார்கள். அவனுக்கு அவளை முத்தமிட வேண்டும் போல இருந்தது; அவளுக்கு அவனை முத்தமிடத் தோன்றியது. மேற்கொண்டு சொல்லத் தேவையில்லாமல், அன்று காலையில்தான் சந்தித்துக்கொண்ட தொற்று நோய்களைக்கொண்ட இந்த இரு நோயாளிகளும் அவர்களின் வீடுகளையும், அவர்களைத் துரத்தும் வேதனைகளையும், சமுதாயத்தையும், அதன் விதிகளையும் மறந்தார்கள். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவர்கள் இணைந்தார்கள், காதல் புரிந்தார்கள். பிற்பாடு விழித்துகொண்டபோது அவன் அவளை ஏக்கத்துடன் முத்தமிட அவள் அதை முழுமையாகப் பெற்றுக்கொண்டாள்.

அவர்கள் விடுதியைவிட்டு வந்த நேரம் ஆஸ்பத்திரியில் வெளி நோயாளிகளுக்கான பார்வையாளர் நேரம் முடிந்திருந்தது. மேலே நட்சத்திரங்களுக்கான அரங்கம் திறந்திருந்தது. வீட்டிற்கு வந்ததும் அவள் நிலைமை இன்னும் மோசமாகியது.

மிகவும் சோர்வுடன், முந்நெற்றியில் கைவைத்து அழுத்தியபடி அவள் கட்டிலில் கிடப்பதைப் பார்த்துவிட்டு அவளது இளைய மகன் கவலையுடன் கேட்டான், ‘என்னாச்சும்மா? உடம்புக்கு ரொம்ப முடியலையா?’

‘ஒன்னும் இல்லப்பா,’ திணறலுடன் மெதுவாகக் கூறினாள். ‘எல்லாமே பாக்க கொஞ்சம் மஞ்சளா இருக்கு. அவளோதான்.’

அன்று இரவு அவள் உடல்நிலை இன்னும் மோசமானது. குழந்தைகள் பயந்து போனார்கள். பக்கத்து வீட்டுக்காரர்களை எழுப்பவும் அவர்கள் அவளை உடனடியாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றார்கள். அவளுக்கு மஞ்சள் காமாலைதான் என்பது உறுதியானது. ஏறத்தாழ இரண்டு வாரங்கள் அவளுக்கு சிகிச்சையளித்தார்கள். உட்கொண்ட மருந்துகளாலும் பத்திய உணவாலும் உண்டான குழப்பத்தில் அவள் அவனை மீண்டும் மீண்டும் பார்த்தாள். பிரக்ஞை இழந்த நிலையில்கூட அவள் அவனை மஞ்சளாகப் பார்த்தது அவளுக்குச் சிரிப்பைத் தந்தது. மஞ்சள் கண்கள், மஞ்சள் முடி, மஞ்சள் காதுகள், மஞ்சள் உதடுகள்…

ஒருவாரம்போல் ஆகியிருந்தது. நோய் குணமடைந்து அவள் வீட்டைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தபோது செடிகளுக்கு இடையில் கிடந்த துண்டு செய்தித்தாளில் அவள் அவனை மீண்டும் பார்த்தாள். இன்னொரு ஆசிரியர் மஞ்சள் காமாலையில் இறந்துவிட்டார் என்றோ எதுவோ எழுதியிருந்தது, அனைத்தும் மஞ்சள், மஞ்சள், மஞ்சள்…

*****

கே.ஆர்.மீரா பல விருதுகள் வாங்கிய மலையாள எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். இவர் எழுதிய சிறுகதைகளும், நாவல்களும், கட்டுரைகளும் உயரிய இலக்கிய விருதுகளான கேரள சாஹித்ய அகாடெமி விருது, வயலார் விருது மற்றும் ஓடக்குழல் விருதுகளை இவருக்குப் பெற்றுத் தந்திருகின்றன. சமகால கிளாசிக் இலக்கியம் என்று கொண்டாடப்படும் ‘ஆராச்சார்’ என்ற மலையாள நாவலுக்காக கேந்திர சாஹித்ய அகாடெமி விருது பெற்றிருக்கிறார். கோட்டயத்தில் தன் கணவர் திலீப் மற்றும் மகள் ஸ்ருதியுடன் வசித்து வருகிறார்.

*****

பின் பத்தொன்பதாம் மற்றும் முன் இருபதாம் நூற்றாண்டு மலையாள பெண் எழுத்தாளர்களையும் சமகால பெண் எழுத்தாளர்களான  சாரா ஜோசஃப், நளினி ஜமீலா, அனிதா தம்பி, வி.எம். கிரிஜா, மற்றும் கே.ஆர். மீரா போன்றவர்களையும் மலையாளத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் பெண்ணிய அறிஞரான ஜே.தேவிகா. இக்கதையின் ஆங்கில மொழிபெயர்ப்பாளரான ஜே.தேவிகா அவர்களுக்கும் இச்சிறுகதை இடம்பெற்றிருக்கும் தொகுப்பை வெளியிட்ட Penguin Books (India) -விற்கும் இதன் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தன் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறார்.