“I am very concerned with the bleeding soldiers at the front. I must go to the front as long as I have the surviving strength” -Norman Bethune
வழக்கமாக நான் கடைகளில் புத்தகம் வாங்கச் செல்லும் போதும், நூலகம் செல்லும் போதும் என்னை அதிகம் ஈர்ப்பவை பெரும்பாலும் புதினங்களே. இந்த நிலை நான் என் முதல் புதினம் எழுதும் வரை தான் நீடித்தது.
காரணம், என்னைப் பெரும்பாலும் மேம்படுத்திய நூல்கள், சமூக அரசியல் குறித்து கண்ணோட்டத்தை வழங்கிய நூல்கள் எல்லாமே வாழ்க்கை வரலாறு புத்தகங்களும், அரசியல் கட்டுரைகளும்தான் . அவையே என் சேகரிப்பில் கனிசமான பகுதியாக இருக்கிறது. பிறகு அது மாதிரியான புத்தகங்கள் வாங்க நான் தீவிரம் காட்டினேன். அந்த புத்தகங்களில் என்னை வியக்க வைத்த புத்தகம் ’டாக்டர் நார்மன் பெத்யூனின்கதை’ என்கிற இது கதையல்ல ஒரு மனிதனின் வாழ்வு, ஒரு போராளியின் உயிர்ப்பும் அர்பணிப்பு, உலகில் உள்ள ஒவ்வொரு மருத்துவனும் ஒவ்வொரு நோயாளியும் ..ஏன் ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த நூலின் மிகக் குறுகிய வடிவத்தை எழுதியுள்ளேன்.
சமூக அரசியல் பு,ரட்சியாளர்களின் தேவதை எர்எர்னஸ்டோ குவேரா தோழன் சே என்பது போல மக்களுக்கான மருத்துவத்தில் மிகப்பெரிய வழிகாட்டுதல்களை செய்தவர். மருத்துவர்களே மக்களிடம் போங்கள் என்று சொன்னதுடன் தன் வாழ்வையே அதற்கு ஒப்படைத்த மாமனிதர் நம் டாக்டர் பெத்யூன் அவர்கள் அவரை பற்றிய ஒவ்வொரு செய்தியுமே இந்த புத்தகத்தில் உள்ளது உள்ளபடி புனைவை ஒரு துளியும் கலக்காமல் சிட்னி கார்டன், மற்றும் டெட் ஆலன் இருவரும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். உலகம் முழுக்க பல மொழிகளில் வந்துள்ள இப்புத்தகம் உலகில் பல மில்லியன் மக்கள் வாசித்தறிந்துள்ளனர்.
சவுத் விஷன் இந்த அருமையான நூலை பதிப்பித்திருக்கிறார்கள்.
கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள நமக்கு அரசு மருத்துவர்களின் சேவையும் ,அரசு மருத்துவமனைகள் குறித்த அவசியமும் மக்களின் சுகாதாரம் அரசின் கட்டுபாட்டில் இருக்க வேண்டிய அவசியமும் இப்போது பரவலாக புரிய தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பயங்கரம் பற்றியுள்ள இந்த நாட்களில் டாக்டர் நார்மன் பெத்யூன் பற்றி நாம் பேசுவது பொருத்தமாக இருக்கும்.
இந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் நாம் சொல்லுவோம் பெத்யூன் அவர்கள் சர்வதேசிய மனிதர் என்று அடிப்படையில் அவர் கனடாவில் பிறந்து, பிரிட்டனில் அறுவை சிகிசைசை நுட்பம் கற்று பாசிசத்துக்கு எதிராக போராடும் ஸ்பெயினில் சேவை செய்து, அங்கு மருத்துவத்தில் நிலையான வழிமுறைகளை ஏற்படுத்திவிட்டு சீனாவில் ஊப்பானிய ஆக்கரிமிப்பாளர்களுக்கு எதிராக போராடி ஆயிரக்கணக்கில் உயிர்பலியாகும் மக்களை காக்க சீனா சென்று ஓய்வற்று தொடர் அறுவை சிகிச்சை செய்ததன் விளைவாக நோய் தொற்றுக்கு ஆளாகி சீனாவிலேயே மரணித்தவர் …..இது நடந்தது 1930 களின் இறுதியில் என்றாலும் துங்ட்ஷ்மென் பாய் சூ என்று அவரை இன்றும் சீனர்கள் அன்போடு நினைவில் வைத்திருக்கிறார்கள்.
அந்த மண்ணில் மருத்துவ கல்வி மற்று மருத்துவ நுட்பம் என அவர் மிகப்பெரிய மரபை உருவாக்கிவிட்டு மறைந்திருக்கிறார் டாக்டர் நார்மன் பெத்யூன்
அடிப்படையில் பாரம்பரியமான மத போதகர் குடும்பத்தில் பிறக்கிறார் பெத்யூன். மிக மகிழ்ச்சியான சுறுசுறுப்பான மனிதராகவும் வழக்கமற்றும் இருக்கிறார் சிறு வயதிலேயே ஈக்களை பிடித்து அறுத்து அதன் உடற்கூறுகளை ஆராய்வது என்று தொடங்கியிருக்கிறார். பிறகு ஒரு நாள் அம்மா அவரை ஒரு அறையில் மாட்டின் கால் எலும்பை அறுத்து ஆய்ந்துக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார்.
“இங்கு என்னடா செய்துக்கொண்டிருக்கிறாய்” என்று அம்மா கேட்க
“ நான் இதன் சதைகளை நீக்கி இந்த எலும்பின் அமைப்பை பார்க்கிறேன்” என்றாராம் அம்மா தன் மகன் போக்கிலே அவன் போகட்டும் என்று விட்டுவிட
ஒரு நாள் அம்மாவுடன் கடைக்கு போகிறார். அப்போது அங்கிருந்த பெருங்கூட்டத்தில் காணாமல் போகிறார் அம்மா காவல் நிலையத்தில் புகார் தர அவர்கள் பெத்யூனை கண்டுபிடித்து கூட்டி வர அம்மா கேட்கிறார் “ உனக்கு என்ன ஆச்சு எங்க போன?” என்று கேட்க “ இல்லை நான் உன் பார்வையிலிருந்து காணாமல் போனால் என்ன ஆகும் என்று யோசித்தேன், சிறிது நேரம் கழித்து நானே போய் போலிஸிடம் வழி தவறிவிட்டதாக சொல்லிவிட்டேன் “ என்று கைதட்டி சிரித்தாராம்.
அவருக்கு 24 வயதாகும் போது அவர் மருத்துவம் முதுகலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்த காலக்கட்டம். முதல் உலகப் போர் ஆரம்பிக்கிறது. அப்போது கனடாவும் போரில் ஈடுபட்டதாக அறிவிப்பு வந்த அன்றே அவர் கனட ராணுவ டிவிசனின் பத்தாவது ஆளாக ராணுவத்தில் சேர்ந்துக்கொண்டார்.
அவரது டிவிசன் ஐரோப்பாவில் பிரான்சுக்கு போக அங்கே காயமுற்றவர்களை ஸ்ட்ரெச்சர் தூக்கும் வேலை செய்கிறார். குண்டு வெடிப்பில் சிக்கி தொடை காயத்துக்காக ஆறு மாதம் படுக்கையில் கிடக்கிறார். குணமானதும் வீட்டுக்கு அனுப்பி விட மருத்துவ படிப்பை முடிக்கிறார்.
1918ல் H.MS.பிகாசஸ் என்கிற போர் கப்பலில் லெப்டினண்ட் சர்ஜனாக சேருகிறார்.
முதல் உலகப்போரில் ஜெர்மனி சரணடைந்த போது அவர் பிரான்சில் இருக்கிறார். அந்த நாட்களில் பிரான்சிலும், ஸ்பெயினிலும் அவ்வளவாக கண்டுக்கொள்ளபடாத தூசிபடிந்த கலை பொருட்களை மலிவான விலைக்கு வாங்கி அதை லண்டனில் பெருந்தொகைக்கு விற்று அந்த லாபத்தில் சொகுசாக வாழ்கிறார். அப்போது அவருக்கு கலைகள் மீதான நாட்டம் அதிகமாகிறது. ஓவியங்கள், இலக்கியம் சிற்பங்கள் என வாங்கிக் குவிக்கிறார். பெரும்பாலும் மனித மூளை, குடல் ,ஈரல் என அவர் அறை முழுக்க வரிசை படுத்தப்பட்டிருக்குமாம்.
இரண்டு பெண்கள் அவரது வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள் என்று அவரே சொல்கிறார். முதலாமவர் டாக்டர் எலினர்டெல். அறுவை சிகிச்சையில் மேலும் நுட்பம் பெற ராயல் மருத்துவ கல்லூரியில் பயில்வது பெத்யூனின் நோக்கம், அதற்கு அவருக்கு பண உதவி செய்தவரே இந்த டெல் இரண்டாவது பெண் F.R.C.S.தேர்வு எழுத எடின்பெர்க் செல்ல, அங்கு பிரான்சிஸ் கேம்பெல் பென்னி என்கிற அழகிய பெண்ணை சந்திக்கிறார். சந்தித்த முதல் நிமிடங்களிலேயே காதல்தான். பரிட்சை முடிந்த சில மாதங்களிலேயே திருமணம் நடந்துவிட்டது. இப்போது அவரிடம் எந்தப் பணமும் இல்லை உடனே எங்காவது மருத்துவராக பணியாற்ற தயாராக பிரான்சிஸ் தடுக்கிறார் “ எனக்கு வாரிசு உரிமைப்படி கொஞ்சம் பணம் வரப்போகிறது. அதை வைத்து நாம் வாழமுடியும். நீ மேல்படிப்பு படிக்க வேண்டுமென்றிருதாய். அதற்க்கு பணம் கட்டலாம்’’ என்று சொல்ல இளம் மனையியுடன் படிப்பும் தேனிலவுமாக ஸ்விட்சர்லாந்தில் நாட்கள் நகர பெத்யூன் கடுமையாக படிப்பதற்கு இணையாக குடிக்கிறார். அறுவை நிபுனர்களுடன் சேர்ந்து பயில்கிறார். எல்லாம் முடிந்த போது அவர்களிடம் பணம் தீர்ந்துவிட்டது. ஓரளவு காதலும் வற்றிய நிலையில் அவரது தீவிர செயல்பாட்டில் பிரான்சிஸ் வெறுப்படைந்திருந்தாள் .
கடைசியாக அவர்களிடம் மிஞ்சிய 200 பவுண்டுகளுடன் அவர்கள் கனடா புறப்பட்டுப் போகிறார்கள் அங்கே டெட்ராய்டு நகரில் பெத்யூன் தன் மருத்துவ அலுவலகத்தை திறக்கிறார்.
இவ்வளவு காலம் ஊதாரியாக செலவழிப்பதில் நாட்டம் கொண்ட பெத்யூனுக்கு பல விடயங்கள் பிடிபட்டது இந்த சின்ன மருத்து அலுவலகத்தில் தான்.
தன்னை தேடி வருகிறவர்கள் அத்தனை பேரும் பணம் படைத்தவர்கள் மட்டுமே. பணமிருந்தால் நோயை தீர்த்துக்கொள்ளலாம், பணம் இல்லையேல் சாக வேண்டியது தான் என்கிற நிலை மீது அவருக்கு கடுமையான சிந்தனை எழ ஏற்பட்டு அதற்கு விடையும் கண்டு பிடிக்கிறார். அதற்கு செயல் வடிவமும் கொடுக்கிறார். முதல் நிகழ்வாக, மளிகை கடைக்கார் ஒருவர் வந்து கதவை தட்டுகிறான் “ என் மனைவியின் காலை மருத்துவர்கள் வெட்டியெடுக்க வேண்டும் என்கிறார்கள் .அவளுக்கு நீங்கள் உதவ வேண்டும்’’ என்று கதறுகிறான்.பெத்யூன் நுட்பமான அறுவை மூலம் அழுகிய அப்பெண்ணின் காலை அகற்றாமலே காப்பாற்ற அவளது கணவனான மளிகை கடைக்காரன் “கொடுப்பதற்க்கு என்னிடம் தர பணம் எதுவும் இல்லை. ஆனால் நீங்கள் எவ்வளவு காலத்துக்கு விரும்பினாலும் என் மளிகை கடையில் பணம் எதுவும் தராமல் மளிகை சாமான்கள் வாங்கிக் கொள்ளலாம்” என்கிறான்.
அதே போல கசாப்புகடைகாரர் தன் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்தால் வேண்டிய மட்டும் இறைச்சி தருவதாகச் சொல்கிறார். இப்படியாக அவரிடம் நோயாளிகள் வந்து குவிந்தார்கள். கொடுமை என்னவென்றால் வசதியானவர்கள் நோய் சின்னதாக இருக்கும் போதே வந்து குணபடுத்திக்கொண்டு நிறைய பணத்தை தந்துவிட்டுப் போகிறார்கள். ஏழைகளோ நோய் முற்றி மருத்துவரிடம் வர தயங்கி சாகும் நிலையில் வருகிறார்கள். அவர்களிடம் மருத்துவருக்கு தர பணம் இல்லாததால் இந்த நிலை இது மாற வேண்டும் என்கிற எண்ணம் பெத்யூனுக்கு வலுவாகிறது.
ஒரு நாள் இரவு ஒரு ஏழை அவர் வீட்டு கதவை தட்டுகாறார். தன் மனைவி பிரசவ வலியில் துடிக்கிறாள் எந்த மருத்துவரும் வர மறுக்கிறார்கள். அவள் உயிரை காப்பாற்றுங்கள் என்று அழுகிறார். அந்தக் குடும்பம் பாக்ஸ் கார் என்கிற கைவிடப்பட்டதொரு வண்டியில் குடியிருக்கிறது. பெத்யூன் அந்த பெண்ணுக்கு பலவீனமானதொரு குழந்தைப் பிறக்கிறது. அந்த பலவீனமான குழந்தை இறந்துவிடும் என்று அவருக்கு தெரிகிறது. மறுநாள் அதே வீட்டுக்கு பழங்கள் ஊட்டசத்துமிக்க பொருட்கள் கொஞ்சம் உடைகளை வாங்கிக்கொண்டு போய் தருகிறார்.
இந்த சூழலில் ஒரு நாள் அவர் இருமும்போது ரத்தம் கக்குகிறார். அந்த நாட்களில் உலகை அச்சுறுத்திய பயங்கர காசநோய் அவரைப் பற்றியிருந்தது. அந்த நாட்களில் அது பயங்கர உயிர்கொல்லி நோய். இந்த நோய் தன் அன்பு மனைவிக்கும் பற்றி விட கூடாது என்று பிரான்சிசை விவாக ரத்து செய்து வேறொரு மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ள வற்புறுத்துகிறார். பிரான்சிஸ் அதற்க்கு மறுக்க, விவாக ரத்துக்கு சம்மதிக்கவில்லையென்றால் நான் மேல் சிகிச்சைக்கு போகமாட்டேன் என்று பயமுறுத்த பிரான்சிஸ் அவரை விட்டு விலகி ஐரோப்பா போகிறார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் மிகச்சிறந்த சானிடேரியமான நியுயார்க்கில் இருக்கும் டூருடியு சானிடேரியம் ஒன்றில் தங்கி சிகிச்சை பெறப்போகிறார். அங்கும் அவர் நோய் முற்றிவிட்டதென கூறி மருத்துவர்கள் கைவிடுகிறார்கள் இருக்கும் நாள் வரை எப்படி மகிழ்ச்சியாக இருப்பது என்கிற வழி முறைகளுடன் ஏற்கனவே கைவிடப்பட்ட நான்கு மருத்துவர் இருக்கும் குடிலில் அவருக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. அங்கு பெத்தயூன் நிறைய மருத்துவப் புத்தகங்கள் படிக்கிறார். ஜான் அலெக்சாண்டர் எழுதிய நுறையீரல் காச நோய்க்கான அறுவை சிகிச்சை பற்றிய நூலை படிக்க அதில் நிமோதொரக்ஸ் முறை சிகிச்சை அதிரடியாகவும் மாற்றத்தை உண்டாக்க கூடிய சிகிச்சையாகவும் இருக்க (பாதிக்கப்பட்ட நுரையீரல் மேல் உள்ள எலுப்புகளை அகற்றி விட்டு பாதிக்கப்பட்ட நுரையீரலை செயலிழக்க செய்வது) துணிந்து அந்த அறுவைக்கு தன்னையே உட்படுத்திக்கொள்கிறார் என்றலும் அவர் அதன் பிறகு தப்பிப்பிழைக்கிறார். அவர் காச நோயிலிருந்து விடுபட்டு மீண்டும் புதிய உத்வேகத்துடன் மருத்துவ தொழிலுக்கு போகிறார். அவர் இப்போது நெஞ்சு கூட்டு அறுவை சிகிச்சையில் பெரிய நிபுனர்களில் ஒருவர் என்பதால் புதழ்பெற்ற மருத்துவமனைகள் அவரை தலைமை மருத்துவராக அழைக்கிறார்கள். பணமும், புகழும் குவிய தனது மணமுறிவு பெற்ற மனைவிக்கு கடிதம் எழுதி, திரும்பச் சேர்ந்து வாழ அழைக்கிறார் பிரான்சிசிஸும் சம்மதித்து வர இருவரும் மீண்டும் மணம் செய்துக்கொள்கிறார்கள்.
பெத்யூன் தன் மனைவிக்கு பெருஞ்செலவு செய்கிறார். வீடு நிறைய கலை பொருட்கள் விலை உயர்ந்த திறை சீலைகள், விலை உயர்ந்த ஓவியங்கள் என வாங்கிக் குவிக்கிறார். நண்பர்களுக்கு தாரளமாகச் செலவு செய்யும் அவர் கலைகள் மீதான ஆர்வத்தில் சிறுவர்களுக்கான ஓவியப்பள்ளி ஒன்றை தன் வீட்டிலேயே துவக்குகிறார். அவரே மிகச்சிறந்த ஓவியராகவும் இருந்தார். அறுவைக்கு வேண்டிய கருவிகள் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைபடங்களை வரைந்து அதை மருத்து மெக்கானிக்களிடம் தந்து புதிய ஒன்றை வடிவமைக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது.
காலணி தைப்பவரிடம் அவர் ஒரு வேலையாகப் போக அப்போது காலணி தைப்பவர் தோலை பிடித்திழுக்க பயன்படுத்திய கருவி அவருக்கு விலா எலும்புகளை வெட்டும் போது பயன்படும் குறடை நினைவுபடுத்த அதைவிடவும் இது கூடுதல் பலனளிக்கும் என்று அதை வாங்கி வந்து சில மாற்றங்களுடன் வடிவமைத்து அதைப் பயன்படுத்துகிறார். இப்படியாக பல வடிவமைப்புகளை செய்ய உலகின் மிகப்பெரிய அறுவை கருவிகள் உற்பத்தியாளர் அவரது உரிமம் பெற்று அறுவை கருவிகளை உற்பத்தி செய்கிறார்கள்.
நுரையிரல் அழுகிப்போன பெரிய மருத்துவர்களால் கைவிடப்பட்ட 10 வயது சிறுமியை அவரிடம் அழைத்து வருகிறார்கள். பெத்யூன் அவளது அழுகிய நுரையீரலை வெட்டி எடுத்து ஒரு பக்க நுரையீரலுடன் அவளைக் காப்பாற்ற முயற்சிக்கலாம் என்று அதுவரை உவகில் செய்துப்பார்க்கப்படாத முறையை செய்துப்பார்கிறார். அந்தப்ப்பெண் பிழைத்துக்கொள்கிறாள்.
அவரது புகழ் கனடா அமெரிக்க மருத்துவர்களிடையே பரவ, அந்தஅ சம்பவம் நடக்கிறது. அவர் காரில் வந்துக்கொண்டிருக்க ஆணும் பெண்ணுமாய் சாலையில் பசிக்கு ரொட்டியும், குழந்தைகளுக்கு பாலும் கேட்டு குரலெழுப்பியபடியே போகிறார்கள். அப்போது வரும் குதிரை படையாட்கள் அவர்களை அடித்து நொருக்க முகம் சிதைந்த போரட்டக்காரர் ஒருவர் பெத்யூன் காரில் வந்து விழுகிறார். அவரை தாங்கிபிடிக்க அந்தாள் அச்சத்தில் அலறுகிறான்
“பயப்படாதீங்க.. நான் மருத்துவர் உங்க காயத்தை சரிசெய்துவிடுவேன்’’ என்று அவனை காரில் ஏற்றிப்போகிறார், காயமடைந்தவர்கள் நிறைய பேர் என்பதால் பெத்யூன் நண்பர்கள் ஒரு கூட்டாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக சிகிச்சை தருகிறார்கள். ஏராளமான ஏழை மக்களுக்கு அவர்கள் சிகிச்சை தர, அவரது அரசியல் மருத்துவ நண்பர்கள் அவரை விடவும் தீவிரமாக மக்களுக்கு அக்கறையோடு உதவுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு நுட்பம் போதவில்லையென்பதால் அவர்களுக்கும் பயிற்சி தருகிறார். அந்த குழு ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை தருகிறார்கள்.
’’ நாம் மக்களிடம் போவோம் இனி மருத்துவர்கள் நோயுற்றவரின் ஒவ்வொரு வீட்டுக்கும் போக வேண்டும், நகரத்திலிருந்து கிராமத்துக்கு, ஒரு கதவிலிருந்து இன்னொரு கதவுக்கு.’’ என்ற தனது திட்டத்தை அவர் மனைவியிடம் சொல்ல பிரான்சிஸ் அவருக்கு எதோ ஆகி விட்டது போல் பார்க்கிறாள் . தலைமை மருத்துவர் பதவி ஆண்டுக்கு 1200 பவுண்டு சம்பளம் எல்லாத்தையும் உதறிவிட்டு மக்களுக்கு இலவச சிகிச்சை கனவு காண்கிற இந்த மனிதருக்கு மூளை பிசகிவிட்டதா என்பது போல் பார்கிறாள்.
அவரது செயல்களை பார்த்த நண்பர்கள் ’நீங்கள் கம்யூனிஸ்டா?’ என்று கேட்க ’அப்படினா என்ன என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை.. ஆனால் என்னை சிகப்பின் சிகப்பு என்று எண்ணிக்கொள்ளுங்கள். பணக்காரர்கள் பணத்தின் மூலம் தங்களை தாங்களே பார்த்துக்கொள்வார்கள் ஏழைகளை யார் பார்ப்பது? அது அரசாங்கத்தின் கடமையில்லையா? என்னிடம் பயன் பெற்ற ஏழைகள் என்னை தோழர் பெத் என்று அழைக்கிறார்கள். மாளிகைகளில் புகுந்து வேலை செய்வதைவிட நான் தெருவில் இறங்கி வேலை செய்யப்போகிறேன்.’’ என்றார்
1935ல் மருத்துவ கூட்டமைப்பு சார்பாக சோவியத் யூனியனுக்கு போகிறார். அவர் உள்ளத்தில் என்ன இருந்ததோ அது தான் சோவியத் யூனியனில் நடைமுறையாய் இருந்தது. ஐரோப்பாவில் இருக்குமளவை விட ரஷ்யாவில் பாதியளவு தான் காச நோயாளிகள் இருக்கிறார்கள். அந்த நாட்டில் ஓய்வு விடுதிகள் , உடல் நலம் பேணும் விடுதிகள்,சானடேரியம் என அவ்வளவு வசதியுடனும் ஆடம்பரத்துடனும் இருந்தன. அவற்றில் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை. அவ்வளவும் கட்டணமின்றி அதைவிட காச நோய் இருக்கிறதா என்று இளம் வயதினர் கட்டாய பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். ’அட நான் நான் நினைப்பது போலவே இங்கிருக்கிறதே அதனால் தான் அவர்கள் என்னை கம்யூனிஸ்ட் என்று சொல்கிறார்களா ..அப்படியானால் நான் கம்யூனிஸ்ட்தான்’ என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தனக்கு தானே சொல்லிக்கொண்டாராம். ரஷ்யாவில் உள்ள சானடேரியங்கள் உலக தரம் வாய்ந்தவை என அறிவித்தார்.
இவ்வளவு அறிவுள்ள ஆள் தன் திறமையை இலவசமாக மக்களுக்கு தர வேண்டும் என்கிறான் முட்டாள் , பிழைக்க தெரியாதவன் என்று அவரை சுற்றியுள்ளவர்கள் குறை சொல்கிறார்கள்.
ஸ்பெயினில் அந்நாட்டு சனநாயக வாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவத்தலைவன் இட்லர், முசோலினியுடன் சேர்ந்துக்கொண்டு நாட்டை சூறையாட ராணுவத்தைக் கட்டவிழ்த்துவிட கடுமையான உள் நாட்டுப்போர் நடக்கிறது. தாக்குதலில் மருத்துவமின்றி நிறையப்பேர் இறக்கிறார்கள் அவர்களுக்கு உதவ அழைப்பு வருகிறது, கனடிய தோழர்கள். ஸ்பானிய சனநாகவாதிகளுக்கு உதவ ஒரு குழுவை அனுப்ப அந்த குழுவின் மருத்துவ பிரிவுக்கு தலைமையேற்று பெத்யூன் போகிறார்.
அங்கு காயமுற்றோரின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது. போர்களத்திலிருந்து மருத்துவ முகாமுக்கு வரும் வழியிலே நிறைய உயிரிழப்புகள் ஏற்பட, அதை முதலில் குறைக்க போர்களத்துக்க்கே மருத்துவர்கள் போவது ரத்த இழப்பை சரி கட்ட ரத்த வங்கி ஒன்றையும் உடன் அழைத்து செல்வது 1930களில் அந்த முறை நடைமுறைக்கு வராத காலம் குறிப்பாக ரத்தகொடை ரத்த ஏற்பு பிரிவுகள், பதபடுத்தும் நடைமுறை சிக்கல்கள் தீர்க்கப்படாத காலம் போராட்டத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவது.
அப்போது ரஷ்யாவில் ஏற்கனவே ரத்த வங்கிகள் செயல்பட தொடங்கிவிட்டன ஸ்பெயின் டாக்டர் ஒருவர் தன் அனுபவத்துடன் ரஷ்ய நுட்பத்தையும் சேர்த்து ஒரு ரத்த வங்கியை துவங்கியிருந்தார்…அதை பெத்தயூன் தனது நடமாடும் ரத்த வங்கிக்கு பயன்படுத்திக்கொண்டார். இப்போது தேவை ரத்தம் ஸ்பெயின் மக்களிடம் அறிவிப்பு செய்ததும் சனநாயகம் வெல்ல மக்கள் தங்கள் ரத்தத்தை தர முன் வருகிறார்கள். முடங்கி கிடந்த மருத்துவ குழுவை நடமாடும் ரத்தவங்கியுடன் கூடிய போர்கள அதி வேக மருத்துவ அமைப்பாக பெத்யூன் மாற்றினார். புதிய குழுக்கள் ஸ்பெயின் போராளிகளுக்கு உதவ வர இருப்பதால் அவற்றையும் ஒருங்கிணைத்து காயமுற்றவர்களின் மரணவிகிதம் குறைகிறது.பெத்யூன் இல்லாமலே சிறப்பாகச் செயல்பட முடியும். என்கிற நிலையில் பாஸிசத்துக்கு எதிரான அரசியல் குழுவின் ஆலோசனையின் பேரில் ஜப்பானிய பாஸிஸ்டுக்களுக்கு எதிராக போராடும் சீனர்கள் மருத்துவ உதவியற்று பெருந்தொகையினர் மடிவதால் அங்கு உதவ போகுமாறு பெத்யூனை கேட்க, பெத்யூனும் மருத்துவ உபகரணங்களுடன் சீனாவுக்கு போகிறார்.
அதற்கு முன்பாக தன் மனைவிக்கு இப்படியான கடிதமொன்றை எழுதுகிறார்.
’ கொலையையும், ஊழலையும் பல்கி பெருக வைக்கும் இந்த உலகத்திற்க்கு எதிராக என் கைகளை உயர்த்தாமல் வாழ்ந்துவிட்டு போக எனக்கு விருப்பமில்லை. பேராசை பிடித்த மக்கள் மற்றவர்கள் மேல் திணிக்கும் யுத்தத்தை, அப்படியே போகட்டுமென்றோ அல்லது செயலற்று அதை தொடர அனுமதித்தோ அதை பொறுத்துக்கொள்வதற்க்கோ நான் உடன்படவில்லை. ஸ்பெயினிலும் சரி, சீனாவிலும் சரி அவை இரண்டும் ஒரே யுத்தத்தின் இரண்டு பகுதிகள்தான். நான் இப்போது சீனாவுக்கு போகிறேன். ஏனெனில் அங்கேதான் எனது தேவை அதிகமாக இருக்கிறது. அங்கு நான் மிகவும் பன்படுவேன்’ என எழுதுகிறார்.
சக்ரவர்த்தினி என்கிற ஜப்பானிய கப்பலில் அவர் சீனாவுக்கு கிளம்புகிறார். அங்குதான் தன் இறுதி ஆட்டத்தையும் நிகழ்த்தும் முன் மாவோவை சந்திக்கிறார்.
தொடரும். உலகின் மிகச்சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் மிகச்சிறந்த கலாரசிகர், மிகச்சிறந்த ஓவியர், தன்னலமற்ற சமூகப் போராளி, அவர் மிக கண்டிப்பானர். மருத்துவ பணி என்பது யாருக்கு தேவையோ அவருக்கு எந்த எதிர்பார்ப்புமற்று செய்வது. என்கிற சித்தாந்தத்தில் உறுதியாக வாழ்ந்தவர். இன்றைய நவீன அறுவை சிகிச்சை முறைகள் ,மற்றும் நடமாடும் ரத்த வங்கிங்கு காரணமானவர், பல புதிய அறுவை கருவிகளை வடிவமைத்தவர், சோவியத் ரஷ்யாவுக்கு வெளியே மருத்துவம் பெறுவது என்பது ஒவ்வொரு மனிதனின் உரிமை என்கிற சிந்தனைக்கு சொந்தக்காரர் பிறகு தான் கம்யூனிசம் என்பது அந்த லட்சியங்களை ஆதாரமாக கொண்டது என்று சோவியத் ரஷ்யா போன பின் அதைக் கண்கூடாக பார்த்திருந்தார்.
1938ல் சனவரி 20ல் ஹாங்காங் சீன கடற்கரையில் தங்கி 3வது நாள் கான்கவ் என்ற ஊருக்கு போக, அங்கே செல்வத்தில் திளைக்கும் சிலர் கந்தலாடையில் பலர் என விசித்திரமான பகுதியைப் பார்க்க அதிர்ச்சியடைகிறார். ஐரோப்பா காட்டுமிராண்டிகளாய் இருந்த போதே நாரீகம் அடைந்த நாடு சீனா. ஆனால் அங்குள்ள இந்த ஏற்றத்தாழ்வுள்ள பொருளியல் அவரை நடுங்க வைக்கிறது. சியாங் கை சேக் அப்போது ஆட்சியாளராக இருக்கிறார். அந்த நேரம் ஜப்பானியர்கள் சீனாவை ஆக்ரமிப்பு செய்கிறார்கள். சீனாவில் கம்யூனிசம் வளர்வதை விரும்பாத சியாங்கை கோமிங்டாங் இராணுவத்தை ஏவி அவர்களை அழிக்கும் காலத்தில் கம்யூனிச சித்தாந்த்ததில் ஈடுபாடுள்ள மாசே துங் மற்றும் சூடே இருவரின் தலைமையில் ஆக்ரமிப்பு ஜப்பானையும் , சியாங்கின் கோமிங்டாங் படை இரண்டையும் எதிர் கொண்டு சீன மக்களை விடுவிக்க போரடுகிறாரார்கள். அந்த படைக்கு மருத்துவ உதவி செய்யவே பெத்யூன் போகிறார்.
அவர் ஹாங்காங்கிலே கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் பரப்பப்படுகிறது அவருக்காக காத்திருந்தவர்களுக்கும் அந்தச் செய்தி கிடைத்து அவர்களை கலங்கடிக்கிறது. எல்லாவற்றையும் மீறி படை தலைவர் மாசே துங்கை பெத்யூன் சந்திக்கிறார், சமூகத்தின் மீதான அக்கறை கொண்ட சமூக அரசியல் மருத்துவ நிபுணரும் , உடலியல் மருத்துவ நிபுனரும் சந்தித்துக்கொள்கிறார்கள்.
பல பேச்சுகளுக்கு பின் பெத்யூன் நடமாடும் அறுவை சிகிச்சை கூடம் பற்றி சொன்னதும், அட எவ்வளவு அற்புதமான யோசனை போரிடும் வீரர்களுக்கு இது தெரிந்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைவார்கள் மேலும் ஊக்கம் கொள்வார்கள். அதுவும் போர்களத்திலேயே போர் கடுமையாக நடக்கும் எட்டாவது வழிதட ராணுவத்தில் அப்படியான அமைப்பு இதுவரையில் இல்லை அதனால் பல வீரர்கள் இறக்கிறார்கள் இனி அவர்களில் 75% வீரர்களை காப்பாற்றிவிடலாம் என்ற பெத்யூனின் வார்தையை கேட்ட மாசே துங் அப்படி மட்டும் நடந்துவிட்டால் நாம் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது உடனே நீங்கள் பணியை துவக்குங்கள் என்கிறார்.
தன் கடிதத்தில் பெத்யூன் இப்படி குறிப்பிடுகிறார்,
“தற்போது நான் யுத்தத்தின் மையப் பகுதியில் உள்ளேன் பெருமை சேர்க்கவல்ல சுவையை நான் தற்போது சுவைக்க முடிந்துள்ளது”
பெத்யூன் 18 மணி நேரம் உழைக்கிறார். முகத்தை மழித்துக்கொள்ள கூட அவருக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. ஏற்கனவே அங்கு செயல்பட்டு வந்த ஆதார மருத்துவமனைகளை முறைபடுத்துவது அவர்களுக்கு பயிற்சியளிப்பது ஒவ்வொரு நாளும் அவர்களை போய் பார்த்து ஆலோசனை தருவது ஸ்ட்ரெச்ச்சர் தூக்க கூட அவர் வழிகாட்ட வேண்டயிருந்தது. அவற்றை தொகுத்து தலைமையகத்துக்கு அறிக்கை தருவது. அது மட்டுமில்லாமல் அமெரிக்கா , கனடா, ஐரோப்பா என நண்பர்களுக்கு ஏகாதிபத்தியத்துக்கும் சுரண்டல் அரசாங்கத்துக்கும் எதிரான சீன மக்களின் போருக்கு உதவ கடிதமெழுதுகிறார். பெரும்பாலும் மருத்துவ உதவிகள்தான். இவற்றுடன் மருத்துவ பயிற்சி நூலும் எழுதுகிறார், இது 18 மணி நேர உழைப்பில் சேராது. இவ்வளவு இருந்தும் அவரை முன்கோபி என்று மற்றவர்கள் விமர்சிக்கும் படி அவர் முன் கோபியாக தானிருந்தார். இதை தன் குழுவினர் விரும்பவில்லையென அறிந்து இனி உங்களிடம் கனிவாக நடந்துக்கொள்கிறேன் என்று வாக்கு தருகிறார்.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் குண்டு காயமடைந்த வீர்ரின் காலில் முரட்டுதனமாக கட்டு போடுவதை பார்க்கிறார். அந்த முறை காயமுற்றவருக்கு துன்பத்தை தரகூடியது தன் கோபத்தை அடக்கிக்கொண்டு “ இந்த செயலுக்காக நான் உங்களை மன்னிக்க எதுவுமில்லை அந்த காயமுற்ற வீரர் தான் உங்களை மன்னிக்க வேண்டும்” என்று போய்விட அந்த காயமடைந்துள்ள வீரர் நர்சை பார்த்து நான் உங்களை மன்னிக்கிறேன் என்று சொல்ல, அந்த நர்ஸ் கதறி அழுகிறார். அப்போது பெத்யூன் ’’ நான் முன் கோபியாக இருக்க விரும்பவில்லை ஆனால் அந்த வீரனின் உயிர் ஊசலாடி கொண்டிருக்க நாம் முறையாக அவனுக்கு உதவால் போனால் விளைவு விபரீதமாகிவிடும் இல்லையா” என்று கேட்கிறார்.
பெரும் ரத்த இழப்பு ஏற்பட்ட வீரனுக்கு உடனே ரத்தம் வேண்டும் அதே ரத்த வகையுள்ள மருத்துவ ஊழியர் ஒருவரை ரத்தம் தர சொல்லி கேட்க அந்த ஊழியர் பின் வாங்குகிறார். அந்த நேரம் பெத்தயூனின் நண்பர் துங் தன் உடலிலிருத்து ரத்தம் வடித்து தருகிறார். அவர் ஓ வகை ரத்தமுள்ளவர்.
இன்னொரு வீர்ருக்கு பலத்த காயத்துடன் வர அவருக்கும் உடனே ரத்தம் தேவைப்பட அவருக்கு தானே தன் உடம்பிலிருந்து ரத்தம் எடுக்க முயல, அதைப் பார்த்த நர்ஸ் தோழர் நீங்கள் இருங்கள் என் ரத்தத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று முன் வருகிறாள், பெத்தயூன் முதலில் நான் நீங்கள் அதற்குள் எந்த வகை ரத்தம் உள்ளவர் என்று பரிசோதனை செய்துக்கொண்டு வாருங்கள் என்று அனுப்பிவிட்டு தன்னுடம்பிலிருந்து ரத்தம் எடுக்க, இதெல்லாம் கிராம மக்கள் முன்னிலையில் நடக்க ஒரு வயதான பெண் என் ரத்தத்தை எடுத்து மற்றவர்களை காப்பாற்றுங்கள் என்று சொல்ல அந்த கிராமமே முன் வருகிறது… நீங்கள் ரத்தம் தருவதை விட ரத்தம் கொடையாக பெறுவதற்கான ஒரு படையாக மாறுங்கள் மற்ற கிராமம், நகரம் என எல்லா இடங்களிலும் ரத்த தானம் செய்பவர்களின் குழுக்கள் ஏற்படுத்த வேண்டும் என அவர்களை பயிற்றுவிக்கிறார். போராளிகள் பெத்யூனுக்கு 100 டாலர் ஊதியம் தர முன்வருகிறார்கள் அதை அவரது சீன மொழிபெயர்பாளரும் உதவியாளருமான துங் சொல்ல பெத்யூன் கடுமையாக கோபம் கொள்கிறார் அப்படியெல்லாம் எந்த ஊதியமும் எனக்கு வேண்டாம், உணவும் மற்றதும் நீங்கள் எனக்கு நிறைவாக செய்கிறீர்கள் அது போதும் எனக்கு”என்கிறார்.
“இல்லை எனக்கு வந்த உத்தரவை நான் நிறை வேற்றியே ஆக வேண்டும் நீங்கள் வாங்கிக்கொள்வதை தவிர வேறு வழியில்லை”
“ஓ..அப்படியா சரி அந்த பணத்தில் மருத்துவமனை நோயாளிகளுக்கு புகையிலையும் ,சிகரெட்டும் வாங்கிக் கொடுங்கள்” என்கிறார்
அவர் சீனா வருவதற்க்கு முன் முறைபடுத்தப்பட்ட நவீன மருத்துவம் என்பது அங்கு இல்லவேயில்லை, ரத்த கொடை, ரத்த ஏற்பு என்கிற எந்த நடைமுறையும் இல்லை அதை பெத்யூன் முதலிலிருந்து தொடங்குவதுடன் பயிற்றுவிக்கவும் செய்ததால் இப்போது அங்கே ரத்த வங்கி, முதலுதவி மையம், மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை அதில் நல்ல கருவிகளுடன் அறுவையரங்கம். பெத்யூனால் பயிற்சிபெற்ற மருத்துவர்கள் என இயங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் பெத்யூன் மீது புதிய குற்றசாட்டுகள் எழுந்தன
ஜெனரல் ஒருவர் இப்படி அவர்மீது குற்ற சாட்டுகளை அடுக்குகிறார்.
“பெத்யூன் நீங்கள் போன அத்தனை கிராமங்களில் இருந்தும் , நீங்கள் போன அத்தனை போர்முனைகளில் இருந்தும் எங்களுக்கு வந்த அறிக்கைபடி நீங்கள் போதுமான அளவு தூங்குவதில்லை, போதுமான அளவு உணவு எடுத்துக்கொள்வதில்லை, ஜப்பானியரின் குண்டுகளை பற்றிய எந்த பாதுகாப்புணர்ச்சியும் இல்லாமல் இருக்கிறீர்கள்…”
“இல்லை என் மீதுள்ள அன்பில் தோழர்கள் சொல்வது எனக்கு போதுமானதை நான் எடுத்துக்கொள்கிறேன்” என்கிறார்.
“ஆமாம் நீங்கள் சொல்வது சரியே போதுமானளவு தூங்குவதில்லை பத்து ஆட்களின் வேலையை அவர் ஒருவரே செய்கிறார். துங் மேலும் ஒரு குற்றசாட்டை வைக்கிறார். பெத்யூன் சிகிச்சையளிப்பதுடன் மருத்துவ முறைகளை பயிற்றுவிக்கும் மருத்துவ ஆசிரியராகவும் இருந்தார். அடிக்கடி ஒரு பழமொழியை பயன்படுத்துவார்
“ஒரு மருத்துவருக்கு சிங்கத்தின் இதயமும், பெண்களுக்கான கைகளும் இருக்கவேண்டும்”
பெத்யூன் வழிகாட்டுதலுடன் புதிய ஆதார மருத்துவமனைகள் உருவாகின்றன அப்படி ஒரு மருத்துவமனை திறப்பின் போது தோழர் பெத்யூன் எங்கள் மருத்துவர், தோழர் பெத்யூன் எங்கள் ஆசிரியர் தோழர் பெத்யூன் எங்கள் நண்பர் என கிராம மக்கள் என்று ஆரவரிக்கிறார்கள்.
அந்த பகுதியில் இனி உள்ளூர் மருத்துவர்களே நிலைமையை சரிசெய்து கொள்வார்கள் என்பதால் பொத்யூன் 175 மைல் தள்ளி வேறொரு `யுத்த களத்தை நோக்கி வீசும் பனி சூறாவளியை கடந்துப்போகிறார்கள். சேர வேண்டிய இடம் போனதும் உதவியாளர் துங் அவரை உணவு தயாராகும் வரை கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க சொல்கிறார்.
“உணவு தயாராக எவ்வளவு நேரமாகும்”
“இருபது நிமிடமாகும்”
“அதற்குள் என்னை மருத்துவமனைக்கு கூட்டிப்போங்கள்…’’ என்கிறார். போரில் காயம்பட்டவர்களை உடனே பார்க்க வேண்டும். சிறிய புத்த மடாலயம்தான் மருத்துவமனை அவர் உடனே காயம்பட்டவர்களின் நோய் தன்மையை ஆய்ந்து அப்போதே சிலருக்கு கட்டு போடுகிறார். அறுவை சிகிச்சை செய்யவேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்துவிட்டு, காலில் காயமுற்ற நோயாளியை காட்டி இந்த நோயாளிக்கு “யார் பொறுப்பாளி” என கேட்க அங்கிருந்த டாக்டர் போங்க்
“நான்தான்” என முன் வர
“உங்களிடம் பேச என்னிடம் சில விசயங்கள் இருக்கிறது முதலில் இவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யுங்கள்” என்று சொல்கிறார்.
“இப்படி மோசமான சிகிச்சை தந்ததற்காக உங்களை தண்டிக்க வேண்டும்..ஒழுங்கான ஒரு பட்டை வைத்து காலை பாதுகாக்காததால் அழுகிப்போன காலை வெட்டியெடுக்கவேண்டும்”
“நம்மிடம் பட்டைகள் இல்லை எல்லாம் தீர்ந்தவிட்டது”
“அப்படியானால் நீங்களே ஒரு பட்டையை தயாரித்திருக்க வேண்டும்”
பாவம் வாங்க் தலை கவிழ்ந்து அமைதியாக நிற்கிறார்
“அந்த காலை எப்படி வெட்டுவது ,முதலில் எதை துண்டிப்து எப்படி தைப்பது என்று சுற்றியுள்ளவர்களுக்கு சொல்லித் தருகிறார்.
அது முடிந்ததும் “இன்னொரு மருத்துவமனையும் இங்கே இருக்கிறதே அங்கே அழைத்துப் போங்கள்” என்று துங்கிடம் சொல்ல.
அங்குள்ளவர்கள் சீனத்தில் துங்கிடம் “டாக்டர் பெத்யூன் உணவும் உறக்கமும் எடுக்காமல் இங்கிருந்து போவது நல்லதல்ல மேலிடத்திலிருந்து நம்மை கடிந்துக்கொள்வார்கள்” என்று சொல்ல
பெத்யூன் மொழி புரியாவிட்டாலும் அவர்களை மிரட்டும் தொனியில் ’என்ன..என்ன..’ என்று கத்துகிறார்
“டாக்டர் அந்த இடம் வெகு தூரம் அதுவுமில்லாமல் இரவாகிவிட்டது உபகரணங்களை குதிரையில் கட்ட நேரமாகும் அதற்க்குள் நீங்கள் உணவு சாப்பிட்டு கொஞ்சம் ஓய் எடுத்துக்கொள்ள வேண்டும் பிறகு போகலாம்” என்கிறார்.
சரி பெத்யூன் தன் கடிகாரத்தை பார்க்கிறார். இரவு ஒரு மணி. ‘ சரி காலை 4.30 மணிக்கெல்லாம் நாம் கிளம்பிவிட வேண்டும் ; என்கிறார்.
தோழர்கள் இவருக்கு தூங்க 2 மணி நேரம் தான் இருக்கிறது. அவருக்கு அந்த நேரம் மட்டும் போதுமா என்று வியக்கிறார்கள். பிறகு அங்கிருந்து கிளம்பிப் போகும் போது துங்கிடம் ‘’ எப்படி வாங்க் இப்படி ஒரு திறமையற்ற சிகிச்சையை தந்தார் பாவம் அந்த பையனின் காலை இப்போது அகற்ற வேண்டி வந்தது இது பெரிய குற்றமல்லவா”என்கிறார்.
துங்க் பெத்யூன் தோளை தட்டி ’’வாங்க் மருத்துவர் இல்லை அவர் போர் வீரர் மட்டுமே அவர் படையில் சேர்ந்த பிறகு தான் படிக்கவே கற்றுக்கொண்டார். தோழர்கள்தான் அவருக்கு கற்றுக்கொடுத்தார்கள். பிறகு அவராகவே காயம்பட்டவர்களுக்கு அறுவைசிகிச்சையும் மருத்துவமும் செய்கிறார். அதனால் அவரை நாம் குற்றம் சொல்ல முடியாது அவருக்கு தெரிந்த வகையில் உதவுகிறார் எங்களுக்கு வேறு வழியும் இல்லை”என்கிறார்.
பெத்யூன் துங்கை ஆச்சரியமாக பார்த்து அட உண்மையாகவே ஆச்சரியம் தான் “நாம் திரும்பி போகும் போது வாங்கை சந்திக்க வேண்டும்” என்கிறார்.
அவர்கள் வேலை முடிந்து திரும்பும் போது போங்கை சந்திக்கிறார்கள், வங்க் அஞ்சி நடுங்க பெத்யூன் அவர் தோள்களில் கையை போட்டு “அறுவை சிகிச்சை நுட்பங்களை கற்றுக்கொள்ளும் போது எனக்கு உன்னை விட சின்ன வயது இனி நீ என்னுடன் இருந்து முறையாக கற்றுக்கொள்ளலாம்” என்று சொல்ல வங்குக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
பிறகு வாங்க் மிக சிறந்த அறுவை நிபுணராக மாறுகிறார்.
பெத்தயூன் மருத்துவ அணிக்கு ஜெனரலிடமிருந்து உடனே புறப்பட்டு குறிப்பிட்ட இடம் போகச்சொல்லி அவர செய்தி வருகிறது இப்போது இரவு 11 மணி இப்போது பெத்யூனுக்கு சொன்னால் உடனே புறப்பட்டுவிடுவார் அவர் கொஞ்சம் தூங்கவைப்பது நல்லது. எதாவது தந்திரம் செய்து அவரை தூங்க வைக்க வேண்டும் என யோசிக்கிறார்கள்
செய்தி மிக அவசரமானது, நாம் பெத்யூனிடம் சொல்லிவிடுவோம். பிறகு எப்படியாவது பேசி கொஞ்சம் தூங்க வைக்கலாம் என்று அவரிடம் தயங்கி தயங்கி பேசுகிறார்கள்
“நம் ஆட்கள் விலங்குகள் மேல் சாமான்கள் கட்டவும் உறங்கவும் கொஞ்சம் நேரம் தேவை, இப்போது இரவு 11 மணி காலை ஆறுமணிக்கு கிளம்புவோம் என்று சொல்ல மறு பேச்சின்றி ஒத்துக்கொள்கிறார். அவருக்கும் மிக களைப்பாக இருக்கிறது. புதிய போர்களத்தில் ஜப்பானியரின் தாக்குதல் மிக மோசமாக இருக்கிறது. இரவும் பகலும் அங்கே பெரும் விமான தாக்குதல்கள் நடக்கிறது. காயம் பட்ட வீர்களை 15 நிமிடத்தில் அறுவை மேடைக்கு கொண்டு வரும் தூரத்தில் மருத்துவ கூடம் அமைக்கிறார்கள். இரவு பகல் என பெத்யூன் 20 பெரிய அறுவை சிகிச்சைகளை செய்திருந்தார். அவருடைய உதவியாளர்களும் தொடர்ந்து சிறுசிறு அறுவை சிகிச்சைகளை செய்தபடியிருந்தார்கள். சிகிச்சை முடிந்து ஆதர மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்வார்கள் அது இங்கிருந்து 10 மைல் தூரத்தில் இருந்தது.
ஓய்வே இல்லாமல் வேலை செய்யும் பெத்யூனை போர்கள ஜெனரல் இன்னும் சில காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை தரமுடியுமாவென்று கேட்க
“காயம்பட்டவர்கள் வந்துகொண்டிருக்கும் வரை நான் அறுவை மேசையை விட்டு நகரமாட்டேன் நாங்கள் தொடர்ந்து அறுவை சிகிச்சையை தொடர்ந்து செய்துக்கொண்டே இருப்போம்” என்கிறார்.
அவர் 50வது அறுவையை நிகழ்த்தும் போது கடந்த 24 மணிநேரமும் மயக்க மருந்து கொடுத்துக்கொண்டிருந்த துங் உறக்கமற்ற நிலை காரணமாக உடல் தளர்ந்து தரையில் உட்கார்ந்துக்கொள்கிறார். அவரை பரிசோதித்த பெத்யூனுக்கு அதிர்ச்சி. உள் நாக்கு அழற்சி காரணமாக கடும் காய்ச்சலை மறைத்து பெத்யூனுக்கு உதவியிருக்கிறார். அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து படுக்கைக்கு அனுப்புகிறார்
டாக்டர் வாங்க் பெத்யூனுக்கு உதவ தொடர்ந்து அறுவைகள் நடந்தபடியே இருக்கிறது. நிறைய ரத்த இழப்புகளுடன் வரும் நோயாளிகளுக்கு ரத்தம் டாக்டர்களே தங்கள் குருதியை தந்து தொடர்ந்து வேலை செய்கிறார்கள்.
குகைகள் உருமறைப்பு செய்து நடமாடும் அறுவை அரங்கை அமைத்திருக்கிறார்கள். அறுவை அரங்கை சுற்றி யுத்தம் நடந்துக்கொண்டிருக்கிறது.
போர்களத்தில் சீன ராணுவ லெப்டினன்ட் கத்தினான் “தாக்குங்கள் நமது காயம்பட்ட வீரர்களை பராமரிக்க பெத்யூன் நம்முடன் இருக்கிறார்.”
40 மணி நேரம் தொடர்ந்து 71 அறுவை சிகிச்சைகளை செய்து முடித்திருந்தார் பெத்யூன். இப்போது இங்கே ஆபத்தான அறுவைகள் அத்தனையும் முடிந்துவிட்டது. அறுவைக்கு பின்பான சேவைக்காக நோயாளிகளை பரிசோதிக்க ஆதார மருத்துவமனைக்கு போக வேண்டும். அதற்க்கிடையில் சில மணிநேரம் தூங்க பெத்யூனுக்கு நேரம் ஒதுக்குகிறார்கள். ஆனால் அவர் சில மணி நேரங்களிலேயே விழித்துக்கொண்டு யூனிட்டை உடனே கிளம்ப சொல்கிறார். அவர்கள் நடமாடும் யூனிட் கிளம்பிவிட்டது . அவர்களை வழியனுப்ப படை தளபதியே வந்துவிடுகிறார்.
“டாக்டர் பெத்யூன் இப்போது நாங்கள் புதியதொரு போர் முழக்கத்தை கண்டுபிடித்திருக்கிறோம், தாக்குங்கள் பெத்யூன் நம்முடன் இருக்கிறார்.” என்கிறார். ஜப்பானியர்களிடமிருந்து கைபற்றப்பட்டு பெத்தயூனுக்கு பரிசாக தரப்பட்ட வெள்ளை குதிரையில் ஏறி சக தோழர்கள் பாட ஆதார மருத்துவ மனை நோக்கி போகிறார் பெத்யூன். அறுவைசிகிச்சை செய்யப்பட்ட71 பேரில் ஒருவர் மட்டும் இறந்துவிடுகிறார் இதில் எதிரிகளான ஜப்பானியரும் அடக்கம் அவர்கள் குணமானதும் அவர்களை அவர்கள் படையிருக்கும் பகுதிக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆதர மருத்துவமனை நோயாளிகளை பரிசோதித்து அங்குள்ள பயிற்சி பெற்ற மருத்துவர்களிடம் பொறுப்பை ஒப்டைத்துவிட்டு அடுத்த முகாமுக்கு போகிறார்கள். மலைகளில் பனி வீசியடிக்கிறது.
சீனாவுக்கு மதம் மாற்ற வந்த மெசினரி பெண்ணான கத்லீன் என்கிற சமயபோதகரை தனது நேர்மையான பேச்சு திறத்தால் தனது மருத்துவ பணிக்கு தேவையான உபகரணங்களை வாங்கி தரும் சேவகியாக மாற்றிவிடுமளவு அவரது உழைப்பு இருந்தது. அவள் அவருக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்க பீகிங் போகிறாள்.
பெத்தயூன் குழு எந்த ஊருக்கும் போய் சேருவதற்க்கும் முன் அவரை பற்றி அங்குள்ள மக்களுக்கு செய்தி போய்விடுகிறது. அவர்கள் சியன் என்கிற ஊருக்கு போய் சேருகிறார்கள். அங்கே பெத்யூன் தன் அரைகுறை சீன மொழியில் மக்கள் மத்தியில் பேசுகிறார். மாசேதுங் போன்றவர்களுக்கு வழங்கப்படும் வாழ்த்துகள் அவருக்கு வழங்கப்படுகிறது.
அங்கே யுத்தம் கொஞ்சம் ஓய்ந்திருக்கும் காரணமாக தங்களை பலபடுத்திக்கொள்கிறார்கள். பிறகு ஆரம்பித்த யுத்தம் மிகக் கடுமையாக இருக்கிறது, ஜப்பானியர்கள் முழு படைபலத்துடன் தாக்குகிறார்கள் கடுமையான சேதம், பழையபடி ஓயாத உழைப்பு களைத்து விழும் வரை அவர் அறுவைசிகிட்சைகளை செய்துக்கொண்டிருந்தார். அவர்களுக்கு போதிய தையல் நரம்புகள், பாண்டேஜ்கள், மருந்துகள், குளோரோபாம் எல்லாமே தீர்ந்துக்கொண்டு வருகிறது, ஆனால் காயம்பட்டவர்களோ அதிகமாக வந்துக்கொண்டே இருக்கிறார்கள். இரவும் பகலும் ஓய்வேயில்லை, மருத்துவ பொருட்கள் இருப்பு தீர்ந்துக்கொண்டே வருகிறது. பாண்டேஜும், ஆன்டிசெப்படிக்கும் தீர்ந்துவிட்டது என்று நர்ஸ் சொல்லுகிறாள். ஆன்டிசெப்டிக் இல்லாமலே பெத்யூன் அறுவை செய்ய நர்ஸ்கள் பழைய பாண்டேஜ்களை துவைத்து இஸ்திரி போட்டு பயன்படுத்துகிறார்கள். பெத்யூன் களைத்து தள்ளாடும் நிலைக்கு வந்துவிட்டார், ஆனாலும் வேலை செய்கிறார் இருக்கும். குளோரொபாம் தீர்ந்துவிடுகிறது. அந்த நேரம் காத்லீன் வாங்கியனுப்பிய மருத்துவ பொருட்கள் வந்து சேருகிறது. என்றாலும் இந்த யுத்தம் அவ்வளவு சீக்கிரத்தில் முடியவே முடியாது. அதனால் இந்த மருத்துவ பொருட்கள் போதாது என்கிற நிலை வருகிறது. பாண்டேஜ்கள், மருந்துகள் அறுவை உபகரணங்கள் தயாரிக்கும் ஆலையை நிறுவ வேண்டும், நிரந்தர மருத்துவ பயிற்சி பள்ளிக்கு திட்டமிடுகிறார். இதற்க்கெல்லாம் நிறைய பணம் வேண்டும் ஒரு இரண்டு மாதம் அமெரிக்கா ,கனடா போக வாய்த்தால் போதுமான பணத்தை என்னால் திரட்டிக்கொண்டு வர முடியும் என்று நண்பர்களிடம் சொல்கிறார் அரை மனதுடன் ஆனால் அவசியம் என்பதால் அவரை அமெரிக்கா போக அனுமதிக்கிறார்கள். பயணத்துக்கான தயாரிப்புகள் நடந்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் அவர் போவதற்கு முன்பான வேலைகளை முடிக்க திட்டமிட்டார். ஆயிரம் நோயாளிகளை கவனிக்க வேண்டும், சில ஊழியர்களுக்கு மருத்துவ பயிற்சி, அந்துடன் தான் இல்லாத போது செயல்படவேண்டிய நடமாடும் மருத்துவமனை, என ஓயாத உழைப்பு காரணமாக சில சிக்கலான உடல் பிரச்சனைகள் எழுகிறது. அவரது காதுகள் செவிட்டு தன்மைஅடைவது போலிருக்கிறது . இத்தனைக்கும் அவருக்கு 49 வயதுதான்.
பயணத்துக்கு முன்பாக அவர் ஏற்படுத்திய 20 ஆதார மருத்துவமனைகளை முறையாக செயல்படுகிறதா என்று ஆய்வு செய்யாமல் நான் அமெரிக்கா போக முடியாது அதற்காக சில காலம் அமெரிக்கப் பயணத்தை நிறுத்தி வைப்பதாக சீன ராணுவ ஜெனரலுக்கு கடிதம் எழுதுகிறார்.
சின்ஷாசியில் சண்டை ஆரம்பித்துவிட்டால் உங்கள் பயணத் திட்டம் இன்னும் தள்ளிப் போகும், அதனால் இப்போதே போய்வருவது நல்லது என்று தகவல் வர அவர் வரைபடத்தை வைத்து ஆராய்கிறார். இந்தச் சண்டை எதிரிக்கு மிக முக்கியமானது. இந்த பகுதியில் சீனர்கள் வெற்றி பெறுவது மிக அவசியம். இந்த பகுதியில் வெற்றிக்காக நான் இங்கிருப்பது அவசியம் என்று பயண திட்டத்தைத் தள்ளிப்போடுகிறார்.
உடனடியாக கவனிக்க வேண்டிய ஆயிரம் பேரில் ஒரு தொகுதியினருக்கு அறுவை செய்ய ஆரம்பிக்கிறார். துணைவர்கள் அவருக்கு உதவ வேகமாக அறுவை சிகிச்சை நடந்தபடியே இருக்குறது. இரவு பகலாக ஓய்வேயில்லை அப்போது ஒரு குரல் கேட்கிறது
“உடனே நாம் இங்கிருந்து போக வேண்டும் எதிரிகள் தந்திரமாக சத்தமில்லாமல் ஜப்பானியர்கள் நம்மை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் 45 நிமிடங்களில் நம்மை நெருக்கிவிடுவார்கள்”
“அவர்கள் வருவதற்குள் நாம் கணிசமான கயங்களை அறுத்து தைத்துவிட முடியும்.
“எங்களுக்கு எதுவென்றாலும் பரவாயில்லை. ஆனால் உங்களுக்கு எதுவும் நேரவிடமுடியாது. நீங்கள் உடனே புறப்படுங்கள் நாங்கள் நோயாளிகளுடன் வந்து சேருகிறோம்.” வாங்க் சொல்லுகிறார்.
“முடியாது எல்லாமே ஆபத்தான காயங்கள். ஒரே நேரத்தில் மூவரை அறுவை மேடைக்கு கொண்டு வாருங்கள். வேகமாக செய்து முடிப்போம்’’ என்று பெத்யூன் பிடிவாதமாக பம்பரமாக சுழல்கிறார். துப்பாக்கி குண்டுகள் அவர்களை தொடும் தூரத்தில் எதிரிகள் நெருங்கிக்கொண்டிருக்க
“நீங்கள் கிளம்பிப் போங்கள் …இதோ முடித்துவிட்டேன்.’’ என்று கடைசியாக ஒரு பையனை மேசையில் கிடத்த அவரை பாதுகாக்கும் பொறுப்புள்ள அதிகாரி அவர் கைகளை பிடித்து கெஞ்சுகிறார்
“எதிரிகள் மிக நெருக்கத்தில் வந்துவிட்டார்கள். நீங்கள் உடனே கிளம்ப வேண்டும்” என்று கெஞ்சுகிறார்.
அதை பார்த்த காயம்பட்ட பையன் “டாக்டர் நான் தாங்கிக் கொள்வேன்… நீங்கள் கிளம்புங்கள் நாம் பாதுகாப்பான இடம் போய் சேர்ந்த்தும் எனக்கு சிகிச்சை செய்யுங்கள்” என்று சொல்கிறான்..ம் கேட்கிறவரா அவர்.
“இப்படியே விட்டால் உன் காலை எடுக்க வேண்டி வந்து விடும்… சில நிமிடங்களில் உன் காலை சரிசெய்துவிடுவேன் “ என்றவர் அதை சிறப்பாக முடிக்க அவர் பின்னால் குண்டு அவர் மீது படாமல் காக்க தோழர்கள் நிற்பதை பார்க்கிறார் . அவர்கள் வேக வேகமாக குன்றுகளில் இறங்கி ஓடுகிறார்கள். மயக்கத்திலிருக்கும் காயம்பட்டவர்களை தூக்கிக்கொண்டு ஓடுகிறவர்களின் தூக்கு படுக்கைகளில் மயக்கம் தெளியாத உடல்கள் குலுங்கியாடுகிறது.
“இந்த தாக்குதல் முடிவுக்கு வந்தவுடன் அடுத்த தாக்குதலுக்குள் நான் அமெரிக்கா போய் அம்மாவுடன் சில காலம் இருந்துவிட்டு வருவேன்’’ என்று பெருமூச்சுடன் சொல்கிறார். அப்போது தான் அவர் கையை பார்த்த உதவியாளர் துங் என்ன உங்கள் கை இப்படி வீங்கியிருக்கிறது என்று கேட்க
“அவசரமாய் வேலை செய்யும் போது கையை வெட்டிக்கொண்டேன்.
அவர் அப்படி சொன்ன இரண்டொரு நாளில் கை மேலும் அதிகமாக வீங்கிக்கொண்டே போகிறது அதை குணப்படுத்தும் மருந்து அங்கே சுத்தமாக இல்லை ஒரே வாய்ப்பு உப்பு கரைசலில் கையை மூழ்கடிப்பது இந்த முறையில் கையை உப்பு கரைசலில் மூழ்கடித்துக்கொண்டு அவர் தொடர்ந்து காயம்பட்டவர்களுக்கு அறுவை செய்கிறார். கை மேலும் மோசமாக வீங்க
“ நீங்கள் காயம்ஆறும் வரை ஓய்வெடுங்கள்” உதவியாளர்கள்
“ பரவாயில்லை அது சரியாகிவிடும் “
ஆனால் நாளுக்கு நாள் வீக்கமும் வலியும் அதிகமாகிறது. நண்பர்கள் அவருக்கு அறுவை செய்ய அவரிடம் அனுமதி கேட்க அவர் சம்மதிக்கிறார். காயத்தை வெட்டி சிகிச்சை செய்ய அது மேலும் சீழ்பிடித்துக்கொள்கிறது. அதற்கு தேவையான மருந்துகள் அவர்களிடம் இல்லை.
அந்த நேரம் கடுமையான யுத்தம் பிடித்துக்கொள்கிறது. நண்பர்கள் அவருக்கு அதை தெரிவிக்கவில்லை நிலைமையை அவர்களே சமாளிக்கிறார்கள் அவரிடம் பயின்று நிபுனர்களாகிவிட்டார்கள் வெளியே பனிப்புயல் வீசிக்கொண்டிருக்கிறது. கனப்பிற்க்கு அருகில் படுக்கையில் அவர் காய்சலில் கிடக்கிறார். ஆனால் அவருக்கு மிக நெருக்கத்தில் வெடிச்சத்தம் கேட்க தொடங்குகிறது. உற்று கேட்கிறார் ஆமாம் அது வெடி சத்தம்தான் என்று புரிந்து கொள்கிறார். இவர்கள் எனக்கு ஓய்வு தருவதற்காக யுத்தம் துவங்கியுள்ளதை மறைத்திருக்கிறார்கள்.
“என்ன முட்டாள்களா எனக்கு ஒன்றும் உயிர் போகிற காயம் இல்லை வெறுமனே கை காயம் தான் நடமாடும் மருத்துவ மனையை யுத்த களத்துக்கு கொண்டு செல்லுங்கள் நான் கிளம்புவிட்டேன்….”
யார் பேச்சையும் கேட்காமல் கிளம்பியவரை பீல்டு கமாண்டர் வந்து கண்டிப்பான உத்தரவு போட்டு அவரை அங்கிருந்து நகர்த்த வேண்டி வந்தது.
“நாமே சமாளிக்கலாம் அவர் போதுமானளவு நமக்கு செய்துவிட்டார் அவரை காப்பாற்ற வேண்டும்,, அவருக்கு சண்டையின் தீவிரம் பற்றி யாரும் சொல்ல வேண்டாம்” அவர் அமைதியாக ஓய்வெடுக்கட்டும் என்று உத்தரவு வருகிறது. அவரை பாதுகாக்கிறார்கள்.
பக்கத்தில் போர் சத்தம் கேட்காத ஆபத்தற்ற ஒரு கிராமத்தில் ஓரளவு வசதியான ஒரு வீட்டில் அவரை தங்க வைக்கிறார்கள். வெளியே பனிப்புயல் வீசுகிறது.
பெத்யூனுக்கு 40 டிகிரிக்கு மேல் காய்சல் அடிக்கிறது. காய்ச்சல் பிதற்றும் அளவுக்கு அவரை தாக்க அவர் வாங்கை பக்கத்தில் அழைத்து “கால், கை காயங்களுக்கு நீங்கள் அறுவை செய்யுங்கள் தலை, வயிறுக்கு என்னை கூப்பிடுங்கள் நான் வந்துவிடுவேன் போங்க் “என்று சொல்லிவிட்டு சுருண்டு படுத்துக்கொள்கிறார். வாங்க் அழுகிறார் பெத்யூனின் நிலைமை மேலும் மேலும் மோசமாகிக்கொண்டே போனது.
டாக்டர் பெத்யூனின் கைமிக மோசமாக நிறம் மாறிக்கொண்டிருக்க
போங்க் அவரிடம் “தோழர் உங்களுக்கு தொல்லையாக இருக்கிற கையை வெட்டி எடுத்துவிடட்டுமா” என்று கேட்கிறார்.
“போங்க் நீங்கள் நான் நினைத்ததைவிட சிறந்த அறுவை நிபுணராகிவிட்டீர்கள் ஆனால் என் கையை அகற்றுவதால் என்னை காப்பாற்றிவிட முடியாது இது ஆபத்தான *ஸபெட்டிசிமியா தோற்று பிரச்சனை ரத்தத்தில் இருக்கிறது”
“இருந்தாலும் நான் முயற்சித்துப் பார்க்கிறேன்”
“என் இரண்டு கைகளும் என் உடலிலேயே இருக்கட்டும்’’ என்றவர் எழுத காகிதமும் பேனாவும் கேட்கிறார்.
கடைசியான உயிலை எழுதுகிறார். அவருக்கு தெரிந்துவிட்டது.
“நான் கடுமையாக நோயுற்று இருக்கிறேன் சாகப்போகிறேன்.” என்பதாக தொடங்கும் அந்த உயில் தனது உடைமைகளை தன் நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கும் பட்டியலோடு முடிகிறது. நான்கு பக்கங்களுக்கு எழுதப்பட்ட அந்த காகிதங்கள் நழுவி தரையில் விழுவதை அவரால் தடுக்க முடியவில்லை.
1939 நவம்பர் 13 காலை 5.20 அவர் மரணித்தார்.
’’ நார்மன் பெத்யூனை பெருமையாக ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்வார்கள். நான் சொல்கிறேன் அவர் கடவுள்களின் மகாமுனி.’’என்கிறார் டாக்டர் ரிச்சர்ட் பிரௌன்
415 பக்கமுள்ள இந்த புத்தகம் வாழ்க்கை வரலாறு இலக்கியத்திலே மிக வித்தியாசமானது ஒரு வார்த்தையும் புனைவு இல்லாமல் மிக கறார் தன்மையில் எழுத்தப்பட்டது என்றாலும் வாசிக்கும் போது நீங்கள் கண்கலங்குவதை தவிர்க்க முடியாது ஒரு அசலான மனிதனை மிக அப்பட்டமான ஒரு போராளியை ஒளிமிக்க மருத்துவ தேவதையை நீங்கள் கண்டடைந்துவிடுவீர்கள்.
வாய்க்குமென்றால் இந்த நூலை நீங்கள் வாசிக்க வேண்டும்.
தோழர் நார்மென் பெத்யூன் கரன் கார்க்கி உங்களுக்கு சல்யூட் செய்கிறான்
ரெட் சல்யூட் டாக்டர் நார்மன் பெத்யூன்.
தொடரின் முந்தைய கட்டுரைகள்:
- சகோதரிகள் : கரன் கார்க்கி
- சிங்கிஸ் ஐத்மாத்வ் : ஜமீலாவின் ‘’கிச்சினே பாலே ’’ -கரன் கார்க்கி
- அலெக்சாந்தர் புஷ்கினின் ’கேப்டன் மகள்’- கரன் கார்க்கி
- உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி
- ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து நாட்கள்’ - கரன் கார்க்கி
- சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன்: இரண்டு பாப்ளர் மரங்கள் - கரன் கார்க்கி
- லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.
- நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல, வாசிப்பது எனக்கு மண்ணில் நடப்பதுபோல - கரன்கார்க்கி
- லெனினுக்கு மரணமில்லை - கரன்கார்க்கி
- 1. புத்தகங்களைத் திருடுகிறவன்